அத்தியாயம் 01
“வாணி… கலைவாணி, இங்க கொஞ்சம் வா நீ” என்று, ராகமாக அழைத்த குரலுக்கு சொந்தக்காரி, சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வசிக்கும் ஷக்தி என்ற ஷக்தி ப்ரியா. அழைத்தது வேறு யாரையும் அல்ல, தனது அம்மாவைத் தான்.
“அதானே, என்னைக் கூப்பிடாமல் ஒரு நாளாவது குளிச்சி முடிச்சிருக்கியா நீ?”
மகள் குளிப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்த நேரத்திலிருந்து இப்படி ஒரு அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தாலும், ஏதோ அலுத்துக் கொண்டது போல குரல் கொடுத்துக்கொண்டே பாத்ரூமை நோக்கி சென்ற கலைவாணி,
“எதுக்கு கூப்பிட்ட ஷக்தி? சீக்கிரம் சொல்லு, அம்மாவுக்கு கிச்சன்ல வேலையிருக்கு” என்றார்.
அன்னையின் சத்தத்தில், பாத்ரூம் கதவை லேசாக திறந்து நீர்சொட்டும் தன் தலையை வெளியே நீட்டிய ஷக்தி, “ம்மா… என்னோட ஷாம்பு தீர்ந்திடுச்சு. புதுசு எடுத்து குடேன், ப்ளீஸ்…”
சாதாரணமாக கேட்டாலே மகளுக்கு தலையால் பணிசெய்ய காத்துக்கிடக்கும் அந்த அன்னையிடம், லேசாக கண்களைச் சுருக்கி கெஞ்சலாக கேட்டாள் ஷக்தி.
“இன்ஜினியரிங் ஃபைனல் இயர் படிக்கிறன்னு தான் பேரு, உன் வேலையைக் கூட உனக்கு ஒழுங்கா செய்யத் தெரியலையே ஷக்தி.”
கண்டிப்பது போல முணுமுணுத்துக் கொண்டே, தான் கேட்டதை எடுத்து நீட்டிய தாயின் கைகளைப் பிடித்து பாத்ரூமிற்குள் இழுத்த ஷக்தி,
“இது வரைக்கும் வந்தாச்சு, அப்படியே கொஞ்சம் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க வச்சிட்டு தான் போயிடேன் ம்மா” என்றபடி, இடுப்போடு அன்னையை அணைக்க முயன்றாள்.
“ஹேய்… என்னை நனைக்காதடி. நான் ஏற்கனவே குளிச்சிட்டேன்.” அவசரமாகச் சொல்லிய கலைவாணி,
“உனக்கு இதே வேலையாப் போச்சு ஷக்தி ம்மா” என்றபடியே, அங்கிருந்த குட்டி முக்காலியில் மகளை அமரவைத்து, அவளுக்கு ஷாம்பு குளியல் நடத்த ஆரம்பித்தார்.
இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டு, அதே வீட்டில் பக்கத்து அறையில் உட்கார்ந்திருந்த கலைவாணியின் ஒன்பதாவது படிக்கும் மகன் சஞ்சீவ்,
“இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு அப்பத்தா” என்று, அங்கேயிருந்த தன் தந்தையின் அம்மா பஞ்சவர்ணத்திடம் முகம் சுருக்கினான்.
“அவ பொண்ணுக்கு அவ செய்யிறா, இதுல உனக்கென்னடா வந்தது?” என்றார் பஞ்சவர்ணம்.
“ஹாங்… ஷக்தி எப்படி அவங்க மகளோ, அப்படித்தானே நானும் அவங்க மகன்?” கண்களை உருட்டியபடி கேட்டான் சஞ்சீவ்.
“ஆமா…”
“இதோ, நாலஞ்சு நாளைக்கு முன்னாடி நான் என்னோட சோப்பை எடுத்து கேட்டதுக்கு, ஆளு வளந்தா மட்டும் போதாது, கூடவே சேர்ந்து கொஞ்சம் அறிவும் வளரணும்னு, உங்க மருமக என்ன பேச்சு பேசுனாங்க தெரியுமா?”
“அது என்னடா, என்னோட மருமக? அம்மான்னு வாய் நிறைய சொல்லவேண்டியது தானே?”
“அதானே… எனக்கு நியாயம் கிடைக்கும்ன்னு நினைச்சு உங்ககிட்ட சொன்னா, உங்க மருமகளை நான் அம்மான்னு சொல்லாதது தான், உங்களுக்கு இப்போ தப்பா தெரியுதுல்ல அப்பத்தா?” எகிறியது அந்த இளங்கன்று.
“அடேய்… இன்னும் ஒரு வருஷமோ, இரண்டு வருஷமோ, உன் அக்காவை கல்யாணம் செய்து குடுத்திருவோம். அப்புறம், உன் அம்மா நெனச்சாக் கூட மகளுக்கு இப்போ செய்யுற மாதிரி பணிவிடை எல்லாம் செய்யமுடியாது. ஐயோ பாவம், இப்பவே மகளுக்கு ஆசைதீர செய்துட்டு போகட்டுமே டா.” பேரனை சமாதானம் செய்தபடியே அறையை விட்டு வெளியே செல்லத் தொடங்கினார் பஞ்சவர்ணம்.
“அது சரி… நீங்க இப்போ எங்க போறீங்க?” ஒரு மாதிரிக் குரலில் சஞ்சீவ் இழுத்தான்.
“அது… ம்ம்… தாகமா இருக்கு, தண்ணி குடிச்சிட்டு வரேன்.” அவசரமாக சொன்னார் பஞ்சவர்ணம்.
“எதுக்கு அப்பத்தா என்னை ஏமாத்துறீங்க? மகாராணி குளிச்சு முடிச்சு வந்ததும், அவ ஹேருக்கு சாம்பிராணி போட்டு விட, ரெடி பண்ணத்தானே போறீங்க?”
பாட்டியின் நினைப்பையே கேள்வியாக்கி, அவரை நோக்கி பேரன் வீச, பிடிபட்டுக்கொண்ட விதத்தில் திருதிருவென முழித்தார் பஞ்சவர்ணம்.
“ம்ஹும்… இதெல்லாம் பாக்கும் போது, நானும் இந்த வீட்டுல பொண்ணாவே பிறந்திருக்கலாம்னு தோணுது அப்பத்தா” என்ற சஞ்சீவ், இப்போது ஹாலின் சோஃபாவில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
சிறிது நேரம் கழித்து மகளின் அறையிலிருந்து, நனைந்து போன தன்னை, சேலை முந்தானையால் துடைத்தபடியே வெளியே வந்தார் கலைவாணி.
“ஆனாலும், நீ உன்மகளுக்கு ரொம்ப தான் செல்லம் குடுக்கிற வாணி.”
கையில் இருக்கும் புகைபோடும் கரண்டியில், கேஸ் அடுப்பில் வைத்து எரித்த தேங்காய் ஓட்டின் தணலோடு, பேத்திக்கு சாம்பிராணி போடுவதற்கு தயாராக நின்றிருந்த பஞ்சவர்ணம், மருமகளைப் பார்த்து சொன்னார்.
“அதை நீங்க சொல்லுறீங்களா அப்பத்தா?” நக்கலாகக் கேட்டான் சஞ்சீவ்.
மகனின் கேள்வில், களுக்கென்று வாய் மூடி கலைவாணி சிரிக்க, “ம்மா… சிரிக்கிறீங்களா? எனக்கு உங்ககிட்டயும் ஒரு கேள்வி இருக்கு…” இழுத்தான் சஞ்சீவ்.
“எங்கிட்ட என்னடா கேக்கணும்?” மகனின் அருகில் வந்து அவன் தலையைப் பரிவாகத் தடவிய கலைவாணியின் தோற்றம், தன் இருபிள்ளைகளுக்கும் மூத்த அக்கா போன்றே இருந்தது.
“உண்மையிலேயே என்னை நீங்க தான் பெத்தீங்களா? இல்ல, ஆம்பிள்ளை பையன் வேணும்ங்கிற ஆசையில தத்தெடுத்தீங்களா?” அசராமல் கேட்ட மகனின் கேள்வியில் அசந்து போய் நின்றார் கலைவாணி.
“இல்ல… உங்க செல்லமகளை விட, எட்டு வயசு சின்னவன் நான். நியாயமா பாத்தா, நீங்க எனக்குத் தான் தொட்டில் கட்டி தாலாட்டணும். ஆனா இங்க எல்லாம் தலைகீழா நடக்குதா, அதான் கேட்டேன்.” விளக்கம் வேறு கொடுத்தான்.
“பொல்லாத ஆம்பிள்ளைப்பையன்… ஒட்டடைக் குச்சிக்கு கையும் காலும் முளைச்சமாதிரி இருந்துட்டு, எதுக்குடா இவ்வளவு பேச்சு?”
தம்பியின் ஒல்லியான உடல்வாகைக் கிண்டல் செய்தபடியே, அன்றலர்ந்த மலர்போல அறையை விட்டு ஷக்தி வெளியே வர, பெண்கள் இருவரின் கண்களும் புன்னகையில் விரிந்தது.
“ஹாங்… எம்பங்கையும் சேர்த்து, ஆளாளுக்கு உனக்கே ஊட்டி, ஊட்டி வளத்தா, நீ வளருற, நான் தேயுறேன்.” கைகளை விரித்து காட்டியபடி சொன்னான் சஞ்சீவ்.
மகன் கைகளை விரித்து காட்டிய பாவனையில் கலைவாணியின் முகம் சுருங்கியது.
“ம்மா… நீங்க எனக்கு செய்யுறதையெல்லாம் பாத்து, அவன் வயிறு பர்ன் ஆகுது. அதுதான் அப்படி பேசுறான், அதுக்கு போய் நீங்க வருத்தப்படுவீங்களா?” என்று தாயை சமாதானப்படுத்திய ஷக்தி,
“அரே சோட்டு பையா, காலையில எழுந்தமா, அப்பா வாக்கிங்குக்காக வெளியே போகும் போது, கூடவே போய் கொஞ்ச தூரம் காலார நடந்துட்டு வந்தோமான்னு இல்லாம, வீட்டுக்குள்ள உட்கார்ந்து ஏன்டா கலவரத்தை உண்டாக்குற?” என்று, தம்பியின் தலையைப் பற்றி செல்லமாக ஆட்டியபடியே, சாம்பிராணி போடுவதற்கு ஏதுவாக அங்கிருந்த பிரம்பு மோடாவில் அமர்ந்தாள்.
“வேணும்னா, நீயும் போய் ஷாம்பு போட்டு குளிச்சிட்டு வா பேராண்டி. அப்படியே உன் தலைக்கும் புகை காட்டிடுறேன். இல்லைன்னா அதுக்கும் நீ என்னை குறை சொன்னாலும் சொல்லுவ.”
சிரிக்காமல் சொன்ன பஞ்சவர்ணத்தைப் பார்த்து, “கிழவிக்கு குசும்பு” என்று சஞ்சீவ் முறைத்தான்.
கோபப்படாமல், “ம்ம்…” என்று ஒத்துக் கொண்ட பஞ்சவர்ணம், நடுமுதுகு வரைக்கும் வளர்ந்திருந்த பேத்தியின் அடர்ந்த கூந்தலுக்கு சாம்பிராணி புகை காட்டிக்கொண்டே,
“அம்மாடி ஷக்தி, அதான், நாம மும்பைல இருந்து சென்னைக்கு வந்துட்டோம்ல. இப்பவாவது இந்த ஆம்பளை பசங்க ட்ரெஸ்ஸை விட்டுட்டு, பாவாடை, தாவணி, சுடிதார்னு போட்டுக்கலாம். இன்னும் கொஞ்சம் நீளமா முடிவளர்த்து பூவெல்லாம் வச்சிக்கலாம்ல கண்ணு” என்று தன் நீண்டநாள் அபிலாஷையை பேத்தியிடம் சொன்னார்.
“அப்டியே, அந்த கண்ணுக்கு ஓவரா மஸ்காரா, லிப்ஸ்ஸுக்கு லிப்பாம் அள்ளிப் போடுறதையும் குறைச்சுக்க சொல்லுங்க அப்பத்தா.” கிடைத்தது சான்ஸ் என்று அப்பத்தாவோடு சேர்ந்து சஞ்சீவும் ராகம் பாடினான்.
ஆம், அந்த வீட்டின் தலைவர் தமிழரசு நாட்டுடைமையாக்கப்பட்ட தேசிய வங்கியில் உயர்பதவியில் இருக்கிறார்.
அவரின் பணியின் நிமித்தம், அவர்கள் இத்தனை நாட்களும் இந்தியாவின் பல வடமாநிலங்களை சுற்றி வந்திருக்கிறார்கள். கடைசியாக மும்பையில் பணியாற்றியவர், இப்போது ஆறு மாதத்திற்கு முன்பு தான் சென்னைக்கு ட்ரான்ஸ்பராகி வந்திருக்கிறார்.
வேலை இடமாற்றம்… அதுவும், மகளின் கணிணி பொறியியல் படிப்பின் நான்காவது வருட தொடக்கத்தில் வர, அவளை மட்டும் அங்கே விடுதியில் விட்டுவர மனமின்றி படுபிரயத்தனம் செய்து, இங்கே சென்னையில் உள்ள கல்லூரியில் நான்காவது வருடத்தில் சேர்த்து விட்டார் மனிதர்.
இல்லையென்றால், தான் மட்டும் தான் சென்னை வரவேண்டியிருந்திருக்கும் என்பது அவருக்கு தெரியாமலில்லை. மகள் மீது கலைவாணிக்கு அவ்வளவு பாசம்.
எல்லோரும் அங்கிருந்து வரவும், மும்பை செம்பூரில் அவர்களுக்கு சொந்தமாக இருந்த ஃப்ளாட்டை விற்று, இதோ இவர்கள் இப்போது குடியிருக்கும், சகலவசதிகள் கொண்ட மூன்று படுக்கையறை ஃப்ளாட்டை சொந்தமாகவே வாங்கியிருந்தார் தமிழரசு.
“என்னது? பாவாடை, தாவணியா?” பாட்டியின் வார்த்தையில் சத்தம்போட்டு ஷக்தி சிரித்துவிட, “ஏய்… ஆடாதடி, தணல் மேல விழுந்திடப்போகுது.” பதறிப்போய் அருகில் வந்தார் கலைவாணி.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது, நீ பயப்படாதம்மா.” அன்னையை சமாதானம் செய்த ஷக்தி,
“உங்க காலம் போலவே இன்னும் இருக்கும்னு நினைக்காதீங்க அப்பத்தா. ஒருநாள் எங்கூட வெளியே வந்து பாருங்க. அப்பத்தான் இங்கயும் பொண்ணுங்க எப்படி மாறியிருக்காங்கன்னு உங்களுக்கு தெரியும்.”
கிண்டலாகச் சொல்லியவளின் உடை, பெரும்பாலும் ஜீன்ஸ்ஸும், முழநீளக்கை சர்ட்டும் தான். கலைவாணி ஆசையாக மகளுக்கு பார்த்துப் பார்த்து அவ்வப்போது சுடிதார் எடுத்து வைப்பார். அவற்றையெல்லாம் ஆடிக்கொருதரம், அமாவாசைக்கொருதரம் மகள் அணிந்தாலே பெரிய விஷயம் தான்.
சந்தனத்தில் கடைந்தெடுத்தாற் போன்ற தோற்றத்தில், நெடுநெடுவென்ற வளத்தியோடு சற்றே பூசினாற்போல இருக்கும் ஷக்திக்கு, ஜீன்ஸூம், சர்ட்டும் பக்காவாக பொருந்திப் போக, பெற்றோரும் பெரிதாக உடை விஷயத்தில் மகளிடம் தங்களின் ஆசையை திணித்ததில்லை.
அதேபோல பள்ளிப் படிப்பின் ஆரம்ப காலத்திலிருந்தே வட இந்தியாவை சுற்றி வருவதால், அம்மணிக்கு ஹிந்தி அத்துப்படி.
ஆனால், வீட்டில் கண்டிப்பாக தமிழ் தான் பேசவேண்டும் என்ற தகப்பனின் கட்டுப்பாடால், பிள்ளைகள் இருவரும் தமிழில் சரளமாகவே பேசுவர். அப்படியும் கொஞ்சம் ஹிந்தி வார்த்தைகள் ஒருசில நேரங்களில் பேச்சில் கலந்து விடத்தான் செய்யும்.
“ம்மா… நேற்று நான் சொன்ன விஷயத்தை அப்பாட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டியா ம்மா?” ஆவலாக கேட்டாள் ஷக்தி.
“அதெல்லாம் நான் சொல்லியாச்சு. ஆனா, அப்பா என்ன முடிவு செய்துருக்காங்கன்னு எனக்கு தெரியாது ஷக்தி” என்றார் கலைவாணி.
“கலை கண்ணசைச்சா தான், அரசு விரலையே அசைப்பாங்கன்னு எங்களுக்கு தெரியாது பாரு? இதுல்ல அப்பா முடிவு உனக்கு தெரியாதுன்னு கப்சால்லாம் விடாத மம்மிஜி.” கிண்டலாகச் சொன்னாள் ஷக்தி.
“என் தலையெல்லாம் பயங்கரமா உருளுதே, என்ன விஷயம்?” என்றபடியே, நடைபயிற்சியை முடித்து வந்த தமிழரசு மகனுக்கு பக்கத்தில் உட்கார்ந்தார்.
நல்ல ஆறடிக்கு மேலாக வளர்ந்த தோற்றம். கட்டுமஸ்தான உடம்பு. மகளின் கைங்கரியத்தால் கறுப்பாக மின்னும் அடர்ந்த கேசம். இவையெல்லாம் ஐம்பதுகளின் தொடக்கத்தில் மனிதர் இருக்கிறாரென்று சூடமணைத்து சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாத தோற்றப் பொலிவை தந்தது தமிழரசுவுக்கு. கூடவே, பணியில் நிமித்தம் உண்டான கம்பீரம் அந்த கண்களில் பளிச்சிட்டது.
“அப்பா… இந்த பொங்கல் ஹாலிடேக்கு அஸ்வினி, அவங்க வீட்டுக்கு என்னையும், ஊர்மியையும் கூப்பிடுறாப்பா. போய்ட்டு வரட்டுமா?” கண்களில் ஆசை மின்ன கேட்டாள் ஷக்தி.
அஸ்வினியும், ஊர்மிளாவும் ஷக்தியின் வகுப்புத்தோழிகள். கடந்த ஆறுமாத காலமாக மூவருக்குள்ளும், ஒரு நல்ல நட்பு உருவாகியுள்ளது.
அஷ்வினிக்கு மதுரையும், ஊர்மிளாவுக்கு திருச்சியும் சொந்த ஊர். இருவரும் இங்கே சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள்.
சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள் ஷக்தி. அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கும் அவர்கள் நன்கு அறிமுகமே.
ஒருநாளும் இல்லாத திருநாளாக மகள் கேட்க, “உனக்கு செட்டிநாடு வீடு தானே பார்க்கணும், நான் கூட்டிட்டு போறேன் டா” என்றார் அரசு.
தன் குடும்பத்தை விட்டு தனியே எங்குமே போகாத ஷக்தியும், அஷ்வினியின் வீடு செட்டிநாடு வீட்டு அமைப்பில், மிகப்பெரியதாக இருப்பதாலேயே, அங்கு செல்ல அத்தனை ஆர்வம் காட்டுகிறாள். மனைவி மூலம் அதைத் தெரிந்து கொண்ட அரசு, தானே கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்ல,
“ம்ஹூம்… போங்கப்பா. நாம போனா, சும்மா மேலோட்டமாத்தான் பார்க்கமுடியும். அதே, அந்த வீட்டுக்காரங்க நமக்கு தெரிஞ்சவங்களா இருந்தா எல்லா இடத்தையும் நல்லா பார்க்கலாம். கூடவே நாலஞ்சு நாள் அங்கயே தங்கலாம்.” கண்கள் கனவில் விரிய தந்தையிடம் சொன்னாள் ஷக்தி.
மகளின் செட்டிநாடு வீடு குறித்த ஆசை, அவர் அறியாததா என்ன? இருந்தும் எதுவும் சொல்ல இயலாதவராக மனைவியைப் பார்த்தார் அரசு. இது எதையும் கவனிக்காமல் மகள் தொடர்ந்தாள்.
“அஸ்வி இருக்கால்ல ப்பா, அவளோட தாத்தாவோட அப்பா காலத்துல சொத்தை பிரிக்கும் போது, அவர் தொழிலுக்காக அவ்ளோ பெரிய செட்டிநாடு வீட்டை தன்னோட தம்பிக்கு கொடுத்துட்டு மதுரைக்கு வந்துட்டாராம்.”
“மதுரைக்கு வந்து, அவர் பிறந்து வளர்ந்த வீடு மாதிரியே ஒன்னைக் கட்டவும் செய்துட்டாராம். அதுலதான் இப்பவும் அஸ்வியோட குடும்பம் இருக்காங்களாம். கூடவே காரைக்குடி பக்கத்துல இருக்கிற அவங்க சின்ன தாத்தா வீட்டுக்கும், எங்களை கூட்டிட்டு போறேன்னு அஸ்வி சொல்லியிருக்கா. சோ, எனக்கு அங்க போக பெர்மிஷன் குடுங்கப்பா, பிளீஸ்…”
மகளின் கெஞ்சலில் அனுப்பி வைத்துவிடலாம் என்று அரசுக்கு தோன்றினாலும், ‘மதுரை’ என்ற ஒற்றை வார்த்தையில் கசங்கும் மனைவியின் முகத்தை கண்டவர் பதிலேதும் சொல்லமுடியாமல் தவித்தார்.
“எங்க அப்பாவை மட்டும் ஒரே பையனா, ஏன் அப்பத்தா, பெத்தீங்க? கூட ஒரு பையனையோ, பொண்ணையோ பெத்திருந்தா, இந்த மாதிரி லீவ் சமயத்துல வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்காம, எங்க சித்தப்பா வீடு, பெரியப்பா வீடு, அத்தை வீடுன்னு நாங்களும் ரௌண்ட் அடிச்சிருப்போம்ல.”
“இப்போ, அதுக்கும் வழியில்லாம, ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்னு ஷக்தி சொன்னா, பெர்மிஷனும் குடுக்காம, உங்க பையன் ரொம்ப படுத்துறார் பாருங்க.”
கர்மசிரத்தையோடு சஞ்சீவ், ஷக்திக்கு பரிந்து கொண்டு வர, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட பெரியவர்களின் கண்களில் இன்னதென்று விளங்கிக்கொள்ள முடியாத பாவனை ஒன்று வந்து போனது.
கடைசியில், பஞ்சவர்ணம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “பிள்ளை ஆசப்படுறால்ல, அனுப்பி வை அரசு” என்று முடிவாகச் சொல்ல, ஏதோ சொல்ல வந்த மருமகளை தன் பார்வையாலே சமாதானப்படுத்தினார் பஞ்சவர்ணம்.
“எங்கம்மாவே சொல்லியாச்சு, இனிமே நான் என்ன சொல்ல? போய்ட்டு வா ஷக்தி” என்றார் தமிழரசு.
தந்தையின் வாய்மொழியாக சம்மதம் கிடைக்கவும், “ஹேய்…” என்று ஆர்ப்பரித்தபடி பஞ்சவர்ணத்தை கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்த ஷக்தி, தம்பியைப் பார்த்து,
“ஆமா… அப்பத்தா எனக்கு சப்போர்ட் பண்ணுனாங்க, ஓகே. ஆனா, நீ எனக்கு சப்போர்ட் பண்ணுனதைத் தான் என்னால நம்பவே முடியலை! என்ன விஷயம்? சும்மா சொல்லு ப்ரோ…” என்று சந்தேகமாக இழுத்தாள்.
“அது… ஒரு நாலஞ்சு நாளாவது உன் தொந்தரவு இல்லாமல் அந்த கம்ப்யூட்டர் எனக்கே எனக்குன்னு இருக்கும்ல. அதுக்கு தான் உன்னை பேக் பண்ணி அனுப்ப நினைச்சேன்.” சொல்லிவிட்டு, சட்டென்று அந்த இடத்திலிருந்து சஞ்சீவ் எழும்பி ஓடினான்.
“கொய்யால, இப்படித்தான் ஏதாவது வில்லங்கமா இருக்கும்னு நினைச்சேன்டா, உன்ன…”
சிரித்தபடியே தம்பியின் பின்னோடு ஓடிய பெண்ணை, புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த வீட்டின் பெரியவர்கள்…