சற்று யோசித்த வசந்தியின் அக்கா, அரைமனதாக தலையை ஆட்டியிருந்தார்.

“அப்போ கார்த்தி பேர்ல மாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க வக்கீல் சார்” என்றான் நகுலன்.

“அவர் பேருக்குன்னா, பேப்பர் ரெடி பண்ணிட்டு நாளைக்கு வர்றேன் லட்சுமி மேடம்” என்ற வக்கீல் அங்கிருந்து கிளம்பி செல்ல, வசந்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மகிமாவின் நிலைமையோ அதற்கு மேல்.

“நகுலா என்ன இருந்தாலும் உன் பங்கும் இருக்கேப்பா” என்றனர் பரமேஸ்வரியும், சுகந்தியும்.

“எனக்கும் புரியுது பாட்டி. நான் ஏன் அப்படி சொன்னேன்னா? அவன் அப்பா மேல ஏன் கோபமா இருக்கான்னு இப்ப வரைக்கும் எனக்குத் தெரியலை. எப்படியும் அப்பாவோட பிராப்பர்ட்டி எதையும் அவன் வாங்கிக்க மாட்டான். அதான் இதை அவன் முழுசா எடுத்துக்கட்டும்” என்றான் நகுலன்.

“அதான பார்த்தேன்” எனும் அர்த்தத்தில் வசந்தி அவனைப் பார்த்து வைக்க,

“நீங்க ஏன் இப்படி பார்க்குறிங்கன்னு எனக்கு புரியுது அத்தை? பண விஷயத்துல சரியா இருந்துட்டா எப்பவும் பிரச்சனை வராது. நானும் என் தம்பியும் அப்படின்றப்ப ஒத்துப் போய்டுவோம். ஆனா வர்ற மருமகளுங்க ஒத்துப் போவாங்களா? ஏன் உங்களையே எடுத்துக்கோங்க, பண விஷயத்துல எவ்வளவு கறாரா இருக்குறிங்க. அதனால் எதையும் யோசிச்சு பண்ணிடுறது நல்லது பாருங்க” என்றான் தெளிவாய்.

இங்கு நடந்து கொண்டிருக்கும் கூத்து எதையும் அறியாத அகனோ, அங்கு லேப்டாப்பில் தீவிரமாய் வேலை செய்து கொண்டிருந்தான். ஏனோ வெளியே செல்லவும் பிடிக்கவில்லை. யாரையும் பார்க்கவும் பிடிக்கவில்லை. சந்தான லட்சுமியின் வார்த்தைக்காக இங்கு வந்தது தப்போ? என்று இது வரை பலமுறை நினைத்து விட்டான்.

தலைவேறு பாரமாய் இருக்க, எதற்கெடுத்தாலும் கோபமாய் வந்தது அவனுக்கு. அதற்கான காரணத்தை யோசித்துப் பார்த்தவனுக்கு விடையாய் விளங்கியது எல்லாம் யுகந்தாரா மட்டும் தான். முதல் நாள் அவனிடம் கோபமாய் பேசிவிட்டு சென்றதுக்கு பிறகு அவள் அவன் கண்ணில் படவேயில்லை. அவன் இருக்கும் திசை பக்கம் கூட வரவில்லை. அதனாலயே மீண்டும் அறைக்குள் அடைந்து விட்டான். மீண்டும் அதே தனிமை அவனை வாட்டியது. தனிமை சிலருக்கு இனிமை, பலருக்கு கொடுமை. அதில் அகன் இரண்டாவது ரகம்.

இந்த வீட்டிற்கு வந்தது முதல் இப்போது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளும் அவன் மனக்கண்ணில் காட்சிகளாய் வந்து போக, அனைத்திலும் நிறைந்திருந்தவள் யுகந்தாரா மட்டுமே. அவளின் சிரிப்பு,கிண்டல், கேலி, அக்கறை, பாசம், நட்பு, தைரியம் என்று அவளின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்த்துவிட்டான். அவளின் முகமே மாறி மாறி வந்து போக, ஒரு கட்டத்திற்கு மேல் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் லேப்டாப்பை பட்டென்று மூடி விட்டான்.

அவனின் யோசனைக்கு சொந்தக்காரியோ அங்கு சோகமாய் அமர்ந்திருக்க,

“என்ன ராஜ குருவே இவ்வளவு சோகம்?” என்றபடி வந்தமர்ந்த ஹரிஷை முறைத்தாள் தாரா.

“அக்கா இப்போ என்னை இப்படி அன்பா முறைக்கிற அளவுக்கு நான் என்ன கேட்டுட்டேன்?” என்றான் பாவமாய்.

“டேய்..! பேசாம போய்டு. நானே செம்ம கடுப்புல இருக்கேன்” என்றாள்.

“என்னாச்சு பெரியப்பா?” என்றான் பூமிநாதனிடம்.

“அது தான் எனக்கும் தெரியலைப்பா. நேத்து இருந்து இப்படித்தான் இருக்கா. கேட்டாலும் முறைப்பு மட்டும் தான் வருது” என்றார்.

“அப்ப அது தான்” என்றான் சிரிப்புடன்.

“எது தான்” என்றாள் கடுப்பாக.

“காரணமே இல்லாம இப்படி நீங்க கடுப்பானா கண்டிப்பா அது காதல் விவகாரமாத்தான் இருக்கணும்” என்றான் ஹரிஷ்.

“நான் நல்ல மூட்ல இருக்கேன், அதனால உன்னை சும்மா விடுறேன். ஒழுங்கா ஓடிடு. காதல் கத்தரிக்காய் எல்லாம் ஒண்ணுமில்லை” என்றாள் எரிச்சலுடன்.

அகனைப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தது அவள் தான். ஆனால் அது இவ்வளவு  பெரிய தவிப்பாக இருக்குமென்று அவள் நினைக்கவில்லை.

‘நான் அவனை சைட் மட்டும் தான் அடிச்சேன். அவன் எனக்கு பிரண்ட் மட்டும் தான்’ என்று ஒரு நூறு முறையாவது தனக்குத் தானே சொல்லியிருப்பாள். அவளின் எந்த சமாதானமும் அவள் மனதிடம் எடுபடவில்லை.

ஹரீஷ் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,

“இப்ப எதுக்குடா என்னையவே பார்த்துட்டு இருக்க?” என்றவள்,

“ஆமா எங்க யாரையும் காணோம்?” என்றாள் கேள்வியாய்.

“எனக்கென்ன தெரியும்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவசரமா அமைச்சரவை கூடியது. பல திட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அவை கலைக்கப்பட்டது. எங்கம்மா எப்பவும் போல வெளிநடப்பு பண்ணியிருப்பாங்க. இனி தனியா அவங்க சதித் திட்ட ஆலோசனைகள் நடைபெறும்” என்றான் சிரிக்காமல்.

ஆனால் அவன் சொன்ன விதத்தில் அவள் தான் பக்கென்று சிரித்திருந்தாள்.

“டேய் ஹரிஷ், என்ன இருந்தாலும் அவங்க உன் அம்மா. உண்மையை இப்படி ஓப்பனா சொல்லக் கூடாது சரியா?” என்றாள்.

“அட நீங்க வேறக்கா, ஒத்தப் புள்ளை ஒத்தப் புள்ளைன்னு மொத்தத்தையும் எனக்கே லவட்ட பார்க்குறாங்க என் மம்மி. இந்த சமஸ்தானத்தோட அரியணை இருக்கையை யாரும் கேட்கப் போறதில்லை. இருந்தாலும் அதை யாரோ பிடுங்கிக்க போற மாதிரி எங்கம்மாவுக்கு அப்படி ஒரு பயம். அப்பா தான், அப்பப்போ இடுக்குன மாட்டின எலி மாதிரி அவஸ்தை படுறார்” என்றவனின் பேச்சில் அவள் அடக்கமாட்டாமல் சிரிக்க, அங்கு வந்த அகன் அவளைத்தான் கோபமாய் பார்த்திருந்தான்.

“ஹாஸ் மாம்ஸ்..! என்ன இந்த பக்கம்?” என்றான் ஹரீஷ் ஹாயாக.

“நத்திங்” என்பதைப் போல் தலையாட்டியவன், பூமிநாதனிடம் பேப்பரை நீட்ட,

அதில் “ எனக்கு லஞ்ச் குடுப்பிங்களா? மாட்டிங்களா அங்கிள்” என்று எழுதியிருந்தான்.

“அச்சோ கார்த்தி தம்பி, நான் அப்பவே எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டேனே? எம்மா தாரா எடுத்துட்டு போய் குடுக்கலையாடா?” என்றார் சற்று ஆதங்கத்துடன்.

“நேத்து இருந்து நீங்க தான குடுக்குறிங்க டாடி. இப்பவும் நீங்களே கொண்டு போய் குடுங்க. உங்களால முடியலைன்னா இந்த வீட்டு ஆட்கள் யாரையாவது வரச் சொல்லி குடுத்து அனுப்புங்க. ஐ ஆம் நாட் அ சர்வன்ட்” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“நோ நீட். எனக்கு வேண்டாம்” என்று டைப் செய்து காட்டியவன் அந்த இடத்தை விட்டு அகன்றான். அவன் நடையில் அவன் கோபம் முழுவதும் தெரிய, அவனைப் பார்க்கவே கூடாது என்று எண்ணியவள் முகத்தைத் திருப்பவே இல்லை. ஏனோ கண்கள் கலங்கும் போல் இருந்தது அவளுக்கு.

“என்னாச்சு தாரா உனக்கு? நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கலம்மா” என்றார் பூமி நாதன்.

“போதும் டாடி..!” என்று எதையோ கோபமாய் சொல்ல வந்தவள், ஹரிஷ் இருக்கும் பொருட்டு வாயை மூடிக் கொண்டாள்.

“இது என்னோட வேலைமா. நான் இங்க சும்மா வேலை செய்யலை. மொத்தமா இத்தனை லட்சம்னு பேசியிருக்கோம். வாங்குற காசுக்கு நம்ம வேலையும் சரியா இருக்கனும். ஒவ்வொருத்தருக்கும் என்ன தேவைன்னு கேட்டு செய்றது தான் என் வேலை. முக்கியமா கார்த்தி தம்பிக்கு. லட்சுமி பெரியம்மாவோட ஒரே கோரிக்கை அது மட்டும் தான். என்னால படியேற முடியலைன்னு தான் உன்கிட்ட சொன்னேன்டா. நீ இவ்வளவு அசால்ட்டா பதில் சொல்ற? விடுடா, நானே பார்த்துக்கிறேன்” என்றவரின் குரலில் கோபம் இருந்ததைப் போல் தோன்றியது அவளுக்கு.

“என்னாச்சு ராஜ குரு? எதுக்கு பெரியப்பா இப்படி டென்ஷன் ஆகுறார்?” என்றான் ஹரீஷ்.

“அதுவா, உன் அத்தை பெத்த ரத்தினத்துக்கு ஒசிடி பிராப்ளம் இருக்கு. அதனால புட் எல்லாம் அவர் ரூம்க்கே கொண்டு போய் குடுக்கணும். ஐ மீன் ரூம் சர்வீஸ். அதுக்கு நான் மாட்டேன்னு சொன்னேன். அதான் இப்படி” என்றாள் எரிச்சலுடன்.

“சிம்பிள்! நான் போய் குடுத்துட்டு வர்றேன்” என்றான் ஹரீஷ்.

“வேற வினையே வேண்டாம். இதை மட்டும் உன்னோட அம்மா பார்த்தா அவ்வளவு தான். ஏற்கனவே அகனைக் கண்டா உங்கம்மாவுக்கு சுத்தமா ஆகலை. இதுல நீ இப்படி அவனுக்கு புட் எடுத்துட்டுப் போனா, இந்த சமஸ்தானத்தோட அரசனை வேலைக்காரன் ஆக்கிட்டோம்னு எங்களை வந்து தாளிக்கவா? நாங்களே பார்த்துக்கிறோம் அரசே” என்றாள் நக்கலுடன்.

“பழைய பார்ம்க்கு வந்துட்டிங்க போல? இப்படி இருந்தாத்தான் நல்லா இருக்கு. அதை விட்டுட்டு இந்த உம்முன்னு இருக்குறது எல்லாம் உங்களுக்கு செட் ஆகலை ராஜ குருவே” என்றான் சிரிப்புடன்.