அங்கிருந்த யாருடனும் ஒட்டாமல் அகன் கார்த்திகேயன் விலகி இருப்பதைப் போன்றே இருந்தது தாராவிற்கு.
“நான் தான் தேவையில்லாம யோசிக்கிறேனா?” என்றவளுக்கு அவனைப் பற்றி யோசித்தாலே குழப்பமும் தலை வலியும் தான் மிஞ்சியது.
அன்று முழுவதும் தனித்தே இருந்தவனிடம் செல்ல முற்பட்ட கால்களை அடக்கிக் கொண்டு அறைக்குள் அடைந்திருந்தாள். நகுலனின் சத்தம் அதிகமாக கேட்பதைப் போல் தோன்ற அறைக்கதவைத் திறந்தவள் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாள்.
நகுலனும் அகனும் ஒருவருக்கொருவர் சட்டையைப் பிடித்திருக்க, தயாளனோ அவர்களை விலக்கி விட முயற்சி செய்து கொண்டிருந்தார்.
“நகுலா விடுன்னு சொல்றேன்ல, விடுடா” என்ற அவரின் வார்த்தைகள் எல்லாம் நகுலனின் காதில் விழுந்ததைப் போலவே தெரியவில்லை.
“இவன் என்னப்பா நினைச்சுட்டு இருக்கான்? மனசுல பெரிய இவன்னு நினைப்பா? எவ்வளவு தைரியம் இருந்தா உங்ககிட்டவே அப்படி நடந்துட்டு இருந்திருப்பான்?” என்று ஆரம்பித்த நகுலனுக்கு ஆத்திரமே அடங்கவில்லை.
அகனின் கையில் இருந்த கட்டிற்கான காரணத்தை வசந்தியின் மூலமாக அறிந்த மகிமா அதை அப்படியே கணவனிடம் ஒப்பித்திருந்தாள்.
தயாளன் மேல் அதீத பாசத்தில் இருந்த நகுலனுக்கோ நடந்ததைக் கேட்டவுடன் கோபம் வர, அதை கார்த்தியிடம் வந்து கேட்டு இருவருக்கும் பிரச்சனையாகியிருந்தது.
“நீங்க இவனுக்கு ஓவரா இடம் குடுத்துட்டிங்கப்பா. அதான் உங்களை மதிக்கவே மாட்டேங்குறான். இத்தனை வருஷத்துல இவன் திருந்தியிருப்பான்னு நினைச்சேன்ப்பா. ஆனா இவன் இன்னும் மோசமா தான் ஆகியிருக்கான். இப்படி யாருமே கேட்காம விட்டா, இவன் இன்னும் மோசமா பிகேவ் பண்ணுவான்” என்றான் நகுலன் ஆத்திரத்துடன்.
அவன் பேசப் பேச அகனின் கோபம் அதிகமாகிக் கொண்டே செல்ல, அவனின் முக மாற்றத்தை வைத்தே உணர்ந்து கொண்டாள் தாரா. இன்னும் சிறிது நேரம் சென்றால், மன அழுத்தத்தில் அவன் மீண்டும் தன்னிலை மறப்பான் என்று உறுதியாக தெரிந்தது அவளுக்கு.
‘இவங்க என்ன லூசா? அவனுக்குத் தான் பைப்போலார் டிசார்டர் இருக்கே. அது இவங்களுக்குத் தெரியாமையா இருக்கும். இப்போ இன்னும் நிலைமையை மோசமாக்கிட்டு இருக்காங்க” என்றவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. லட்சுமியைத் தேடிப் பார்த்தாள். அவரையும் காணவில்லை.
“அங்கிள் பிளீஸ்! உங்க பெரிய பையனை கொஞ்ச நேரம் பேசாம இருக்க சொல்லுங்க” என்றாள் தவிப்பாய்.
“நகுலா சொன்னா கேளுப்பா, நான் தான் சொல்றேனே ஒரு பிரச்சனையும் இல்லைன்னு. தப்பெல்லாம் என்மேல தான்” என்று தயாளன் சொல்ல,
“இன்னைக்கு இவன் எனக்கு பதில் சொல்லியே ஆகணும்ப்பா” என்றான் நகுலன்.
வேகமாய் சென்று பூமிநாதனை அழைத்து வந்தவள்,
“தயவு செஞ்சு இரண்டு பேரையும் சமாதானப் படுத்துங்க டாடி. நான் பேசப் போனா மம்மிக்குப் பிடிக்காது” என்றாள் பாவமாய்.
மகளை ஆழ்ந்து பார்த்தவர்,
“இது அவங்க குடும்ப விஷயம் தாரா. நாம பேச என்ன இருக்கு? அவங்க என்னமும் பண்ணிட்டு போறாங்க. நீ ரூம்குள்ள போமா” என்றார்.
“டாடி, அகன் நிலைமை சரியில்லை. அவன் பேஸ் மாறிகிட்டே இருக்கு. அவனோட கண்டிஷன் அவங்க யாருக்கும் புரியலை” என்றாள் பரிதவிப்பாய்.
“தாராம்மா” என்றவருக்கு மகளின் தவிப்பு புரிந்தது.
அவளோ அவரை கோபமாய் முறைத்தவள் சட்டென்று அறைக்குள் சென்று விட்டாள்.
‘அண்ணன் தம்பி சண்டை போட்டா இவளுக்கு ஏன் துடிக்குது?’ என்று எண்ணிய மகிமா தாராவை ஆராய்ச்சி பார்வை பார்த்திருந்தாள். அதனால் தான் பூமிநாதன் அவளை உள்ளே செல்லக் கூறினார். ஆனால் மகளின் கோபத்தைப் பார்த்தவருக்கு மனசு தாங்கவில்லை.
உள்ளே சென்றவளுக்கோ ஒரு நிமிடத்திற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை.
வெளியே வந்தவள், அகனின் அருகில் சென்றிருந்தாள்.
“மிஸ்டர். நகுலன் ப்ளீஸ் லீவ் ஹிம். ஹி இஸ் அப்நார்மல். இப்போ நீங்க என்ன பண்ணாலும் அகனுக்கு அன்டர்ஸ்டேன்ட் பண்ணிக்க முடியாது” என்றாள் நகுலனைப் பார்த்து.
“இவன் நடிக்கிறான். எவ்வளவு தைரியம் இருந்தா என் அப்பாவையே இப்படி அவமானப் படுத்தியிருப்பான்” என்றான் கோபம் குறையாத குரலில்.
“நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா இல்லையா? நீங்க அவனைப் பிடிச்சு வச்சிருக்கிறதா நினைப்பா உங்களுக்கு? அவன் தான் உங்களை விடாம பிடிச்சிருக்கான். அவன் மைன்ட் ஸ்டேபிளா இல்லை. பிரச்சனை உங்களுக்குத்தான், சொல்றதைக் கேளுங்க” என்றாள் பொறுமையாய்.
“ஆமா நகுலா, விடுப்பா அவனை” என்றார் தயாளனும்.
“நீங்க சொல்றதுக்காக விடுறேன்” என்றவன் கையை எடுக்க, அப்போது தான் தாரா சொன்னதே புரிந்தது நகுலனுக்கு. அகனின் பிடி உடும்புப் பிடியாய் அவனைப் பிடித்திருக்க, நகுலனால் நகரக் கூட முடியவில்லை.
அகனின் புறம் திரும்பியவள்,
“அகன் பிளீஸ், விடுங்க உங்க அண்ணாவை” என்றாள். அவனோ அவளைத் திரும்பி கூட பார்க்கவில்லை.
அகனின் முக மாற்றம் மகிமாவுக்கும் தெரிய வர,
“என்ன நகுல், உங்க தம்பி ஒரு பைத்தியக்காரன்னு சொல்லவே இல்லை. இப்படின்னு சொல்லியிருந்தா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன்” என்றாள் மகிமா.
தயாளன் வேதனையுடன் அவள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்க,
“மைன்ட் யுவர் வோர்ட்ஸ்” என்று கத்திய தாரா, முழுமூச்சாய் அகனின் கையை விலக்கியிருந்தாள்.
“நீங்க இவரோட அண்ணன் தான? ஏன் இப்படி நடந்துக்கிறிங்க? அதனால தான் உங்க வொய்ப் இப்போ இப்படி பேசுறாங்க” என்றாள் கோபமாய்.
“அவன் என் அப்பாகிட்ட நடந்துகிட்டது மட்டும் சரியா?” என்றான் நகுலன்.
“அங்கிள் அவனுக்கும் தான் அப்பா. என்னமோ வார்த்தைக்கு வார்த்தை உங்களோட அப்பான்னு சொல்றிங்க? அவனோட எக்ஸ்ட்ரீம் லெவல்ல கூட அவரை எங்கயும் காயப்படுத்தலை. அவனைத்தான் காயப் படுத்திகிட்டான். அறை குறையா எதையாவது கேட்டுட்டு வந்து, இப்படி சின்னப் பசங்க மாதிரி சண்டை போடுறிங்க? யோசிக்க மாட்டிங்களா?” என்றாள் கோபமாய்.
“வாய் பேசாதவனுக்கு நீ என்ன வாயா?” என்றாள் மகிமா.
“வார்த்தையை அளந்து பேசுங்க மகிமா. ஹி இஸ் மை பிரண்ட். அவனோட மெண்டல் ஹெல்த் பத்தி நான் பேசிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா அவனை மென்டல்னு கமான்ட் பாஸ் பண்றிங்க. படிச்சவங்க தானே நீங்க?” என்றாள்.
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? இத்தனை வருஷம் கழிச்சு பார்க்குற அண்ணன் மேல கொஞ்சம் கூட பாசமில்லை. யாரையோ பார்த்த மாதிரி பார்க்குறார். வீட்ல யார் கூடவும் மிங்கிள் ஆகுறதில்லை. இதுல அடிக்கடி இப்படியும் நடந்துகிட்டா மென்டல்னு தான் சொல்லுவாங்க” என்றாள் மகிமா கோபமாய்.
“இன்னொரு தடவை என் பையனை அப்படி சொல்லாதம்மா” என்றார் தயாளன் கோபமாய்.
“பார்த்திங்களா, உங்கப்பாவுக்கு ஒன்னுன்னா நீங்க துடிக்கிறிங்க? ஆனா அவர் உங்க தம்பிக்கு ஒன்னுன்னாத்தான் துடிக்கிறார். இத்தனை வருஷம் கூடவே இருந்த மகனை விட, வேண்டாம்னு ஓடிப் போன மகன் பெருசா போய்ட்டார் போல” என்றாள் மகிமா ஆத்திரத்தை அடக்க முடியாமல்.
“ஆத்தி, இதென்ன இவ இப்படி ட்விஸ்ட் பண்ணி விடுறா? பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு பாதகத்தியை பார்த்ததில்லை” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட தாராவோ திரும்பி அகனைப் பார்க்க, அவனோ முகம் இறுக நின்றிருந்தான்.
“எல்லாரும் அங்க தோட்டத்துல இருக்காங்கடா” என்றார் பூமி நாதன்.
“சாரி டாடி” என்றாள்.
“விடுடா, பார்த்துக்கலாம்” என்றவர் சென்றுவிட, முதன் முறையாக அவர் சொல்லை மீறியது அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது.
இதோ அனைவரும் சென்று விட, அகன் மட்டும் தான் தனியாக இருந்தான். ஏனோ அவனை விட்டு செல்ல மனம் வரவில்லை அவளுக்கு.
“அகன் ஆர் யு ஓகே” என்றாள் மெதுவாய் அவன் கை பற்றி. அவள் கை பற்றியது தான் தாமதம், அடுத்து என்ன நடந்தது என்று அவள் கிரகிக்கும் முன் அவளை இழுத்து தன் அணைப்பிற்குள் அடக்கியிருந்தான். அன்று மென்மையாய் அணைத்திருந்தவனின் மென்மை எல்லாம் இன்று வன்மையாய் மாறியிருந்தது.
அவளுக்கோ அவன் நடந்து கொள்ளும் விதத்தில் சர்வாங்கமும் அதிர, அவனால் அவளுக்குள் ஏற்படும் உணர்வுகளின் கொந்தளிப்பில் இருந்தவளுக்கு, அவன் இதயத் துடிப்பின் ஓசை தெளிவாகக் கேட்டது.
“தாரா என்ன பண்ணிட்டு இருக்க? இப்படி நடுவீட்ல இவன் கூட இப்படி இருக்குறதை மட்டும் யாராவது பார்த்தா என்ன ஆகும்?” என்று உள்ளுணர்வு உணர்த்த அவனிடமிருந்து திமிரி விலகினாள்.
அவனோ அவளை மீண்டும் இழுத்த இழுவையில் அவன் மேல் மோதியவளின் இதழ்கள் அவன் நெஞ்சத்தில் பதிந்திருக்க, அதிர்ச்சியாகிப் போனாள் தாரா.
‘அய்யோ நான் இவனுக்கு இப்போ முத்தம் குடுத்துட்டேனா?’ என்று நினைத்தவளுக்கு உள்ளம் ஆட்டம் காணத் தொடங்கியது. வேகமாய் அவனிடமிருந்து விலகியவள் அவனைத் தீயாய் முறைக்க,
“என்ன பண்றிங்க அகன்? இப்படி பண்றது தப்புன்னு உங்களுக்குத் தெரியாது” என்றாள் கோபமாய். அவளை நிதானமாய் பார்த்தவன்,
“ஜஸ்ட் பிரண்ட்லி ஹக்” என்று டைப் செய்து காட்டினான்.
“எதே? பிரண்ட்லியா ஹக் பண்ணிங்களா? இழுத்துப் பிடிச்சு எலும்பை உடைச்சு விட்டதுக்கு பேரு உங்க ஊர்ல பிரண்ட்லி ஹக். இதை நான் நம்பனும்? இதென்ன ஆஸ்திரேலியான்னு நினைச்சிங்களா? அங்க தான் இதெல்லாம் சகஜம். இங்க இல்லை. இன்னொரு தடவை இப்படி பண்ணா உங்க முகத்துலையே முழிக்க மாட்டேன். ஐ டின்டின்ட் எஸ்பெக்ட்ஸ் திஸ் பிரம் யு “என்றாள் நேர் பார்வையாய்.
அவனோ அவளை சட்டை செய்யாமல் அவன் அறைக்குள் சென்று விட,
“திமிர் பிடிச்சவன், பண்றதையும் பண்ணிட்டு எப்படி போறான் பாரு? இருக்குடா உனக்கு?” என்றவள்,
“அய்யோ! போச்சே…போச்சே..! என் கற்போட ஒரு பிரான்ச் ஒடிஞ்சு போச்சே. நான் இதை யார்கிட்ட சொல்லிப் புலம்புவேன். எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆஸ்திரேலியா பார்ட்டி தான். இவனுக்கு பாவம் பார்க்க போய் இப்போ நான் பாவப்பட்டு நிக்கிறேனே?கட்டிப் பிடிச்சே என் கட்டுக்கோப்பை எல்லாம் கலைச்சு விட்டுட்டானே. ஒரு கன்னிப் பொண்ணு மனசை கலைச்ச பாவம் உன்னை சும்மா விடாதுடா பம்பரக்கட்டை மண்டையா?” என்று புலம்பிக் கொண்டே பார்க்க, அவளைத் தான் முறைத்திருந்தான் அகன்.
“சொல்லிட்டு போற மாதிரி சொல்லிட்டு வாயேன்டா. நிம்மதியா புலம்பக் கூட முடியலை” என்று எண்ணியவள்,
“இதோ வந்துட்டேன் டாடி” என்று அழைக்காத தந்தையின் குரலுக்கு ஓடியிருந்தாள்.