அவள் அவனைத் திகைத்தபடி பார்க்க, அவனோ அவள் மொபைலைப் பார்க்கும் படி புருவத்தை உயர்த்தினான்.

“ஹேப்பி பெர்த்டே பெஸ்ட்டி” என்று வாட்சப்பில் வந்த செய்தியைப் பார்த்து அவள் முட்டக் கண்ணை விரிக்க,

“பெஸ்ட்டியா?” என்றாள் வாயைத் திறந்து.

“ம்ம்.. கேர்ள் பெஸ்ட்டி” என்று அனுப்பியிருந்தான்.

“கேர்ள் பெஸ்ட்டினா பிரண்டுக்கு மேல, லவ்வருக்கு கீழ” என்று என்றோ தோழிகள் சொன்னது ஞாபகத்திற்கு வந்து சென்றது அவளுக்கு.

“ஹி..ஹி..தேங்க்யு பிரண்ட்” என்றாள் ஒட்ட வைத்த புன்னகையுடன்.

“வாங்களேன் ஸ்வீட் சாப்பிடலாம்” என்றாள்.

‘எப்படியும் வர மாட்டான் இந்த சுத்தத்துக்கு பிறந்தவன்’ என்று அவள் மனதிற்குள் கவுன்ட்டர் கொடுக்க,

“ஓ எஸ்” என்பதைப் போல் அவன் தோளைக் குலுக்கவும்.

“ஆத்தாடி ஆத்தா, என்ன இவன் இன்னைக்கு இவ்வளவு ஷாக் குடுக்குறான். அடேய் பம்பரக்கட்ட மண்டையா, நீ கல்யாண மாப்பிள்ளைடா. அது ஞாபகம் இருக்கா இல்லையா? கட்டிக்க போற பொண்ணு உள்ள இருக்கு. இவன் என்னடான்னா என் கூட கடலை வறுத்துட்டு இருக்கான்” என்று நொந்து கொண்டவள், அவனையும் அழைத்துக் கொண்டு பூமிநாதனிடம் சென்றாள்.

பூமிநாதனோ மகளுக்குப் பிடித்த பைனாப்பிள் கேசரியை அதிக நெய் விட்டு பக்குவமாய் செய்து வைத்திருந்தார்.

“வேற லெவல் டாடி. இந்த டேஸ்ட்ல உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. ம்ம்..என்னா சுவை. வாய்ல வச்ச உடனே அல்வா மாதிரி உள்ள போகுது டாடி” என்று ரசித்து ருசித்த விதத்தைப் பார்த்தால், சாப்பிட பிடிக்காதவர்களுக்குக் கூட பிடித்து விடும்.

“அகன் தம்பி நீங்களும் கொஞ்சம் டேஸ்ட் பார்க்குறிங்களா?” என்றார் அவனிடம்.

நெய் வாசனையில் வேண்டாமென்று வேகமாய் தலையை ஆட்டியிருந்தான் அகன்.

“ஒரு டாக்டர்  நீயே இவ்வளவு நெய்ல செஞ்ச இனிப்பை சாப்பிடலாமா?” என்றார் வேணி.

“பிள்ள என்னைக்கோ ஒரு நாள் சாப்பிடுது. அதைப் போய் குத்தம் சொல்லிட்டு இருக்க வேணி?” என்று பூமிநாதன் மனைவியைக் கடிந்து கொண்டார்.

“அவளே திருந்துனாலும் நீங்க விடுற மாதிரி தெரியலை” என்று வேணியால் புலம்பத்தான் முடிந்தது.

பழனி மலையின் அடிவாரத்தில் நின்றிருந்தனர் ஐவரும். கடைசி நேரத்தில் தாமரையும் உடன் வருவதாய் சொல்ல அவரையும் சேர்த்து அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.

அடிவாரத்திலேயே மக்கள் கூட்டத்தைப் பார்த்து அரண்டு விட்டான் அகன்.

“மை காட்..! இதென்ன இப்பவே இவ்வளவு கூட்டம்” என்று மனதிற்குள் நினைத்தவன், அதை முகத்திலும் காட்ட,

“டோன்ட் வொர்ரி அகன். பாட்டி விஐபி பாஸ் வச்சிருக்காங்க. சோ மேல போன உடனே சாமி பார்த்துடலாம். உங்க பேமிலி கோவில்ல ஒன் ஆப் த ட்ரஸ்ட்டின்னு பாட்டி சொன்னாங்க” என்றாள் அவனுக்கு விளக்கும் பொருட்டு.

“நீயும் எங்களோட ரோப் கார்லயே வாடா தாரா” என்றார் பாட்டி.

“நோ நோ..! நான் எப்பவும் ஸ்டெப்ஸ்ல தான் ஏறுவேன் பாட்டி. நீங்க மேல போய் வெயிட் பண்ணுங்க. அரைமணி நேரத்துக்குள்ள வந்துடுவேன். இன்பேக்ட் நான் தான் முதல்ல போவேன்னு நினைக்கிறேன்” என்றாள்.

“நானும் ஸ்டெப்ஸ்ல வர்றேன்” என்று அகன் அவளிடம் பாவனை காட்ட,

“பாஸ் இது ஆஸ்திரேலியா கிடையாது, பழனி. வெப்ப பூமி. ஸ்டெப்ஸ்ல ஏறுனா வியர்வை ஆறா ஓடும். நீங்க வேற சுத்தம் சோறு போடும்னு சொல்ற ஆளு. ஆனா இங்க சுத்தம் நம்மளை கூறு போட்ரும். என்ன பண்றிங்க, நீங்க பாட்டியோட ரோப் கார்ல வாங்க. நான் ஸ்டெப்ஸ்ல வரும் போது உங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வர்றேன், ஓகே வா” என்று அவள் கூறிய விதத்தில் பெண்கள் மூவரும் சிரித்திருக்க, அகனோ அவளை முறைத்தான்.

“இதுக்கு எதுக்கு முறைக்கணும். ஸ்டெப்ஸ் தான் ஏறனும்னா ஏறிட்டு போங்க. யார் வேணாம்னு சொன்னது? சின்னப் பிள்ளைத் தனமா பிகேவ் பண்ணாம வாங்க பாஸ்” என்றவள் அவனையும் அழைத்துக் கொண்டே  சென்றாள்.

“தாரா கூட இருந்தா நேரம் போறதே தெரியலை வேணியக்கா..” என்றார் தாமரை.

“அவ ஒரு அறுந்த வாலு தாமரை. வாங்க நாம போகலாம்” என்று அவர்கள் ரோப் கார் வரிசைக்குள் சென்றிருந்தனர்.

“பாஸ் இவர் தான் பாத விநாயகர். மேல படியேறும் போது என் பாதம் நோகக் கூடாதுப்பா பாத விநாயகா அப்படின்னு வேண்டிக்கிங்க. இவர் ஆசியை வாங்கிட்டு தான் நாம மேல போகணும்” என்றவள் கண்களை மூடி வேண்டிக் கொள்ள, அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கண்களைத் திறக்க, அவனோ பார்வையை மாற்றிக்  கொண்டான்.

‘நான் என்ன சொன்னாலும் நம்புறான். அவ்வளவு நல்லவனாடா நீ’ என்று முனுமுனுத்தவள்,

“லெட்ஸ் ஸ்டார்ட்”  என்று அவனையும் அழைத்துக் கொண்டு படியேற ஆரம்பிக்க, கால்வாசி படி ஏறி முடிக்கும் முன்னரே மூச்சு வாங்கியிருந்தாள் யுகந்தாரா.

‘நாம வராதா இந்த இடைப்பட்ட காலத்துல படியை எக்டேர்ன் பண்ணிட்டாங்களா? ரொம்ப தூரமா தெரியுதே?’ என்று பேசிக் கொண்டே ஏற, அவனோ நமட்டுச் சிரிப்புடன் ஏறிக் கொண்டிருந்தான்.

“உங்களுக்கு மூச்சு வாங்கினா, கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமா?” என்று அவள் மூச்சு வாங்கிக் கொண்டே கேட்க, அகனோ சிரிப்பை அடக்க முடியாமல் கண்கள் கலங்கும் வரை வாய் விட்டு சிரித்திருந்தான்.

அருகில் சென்றவர்கள் நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் விட்டு செல்ல, அவளோ அவன் சிரிப்பதை முட்டக் கண்ணை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சரி சரி, எனக்கும் மூச்சு வாங்குது தான். அதுக்கு எதுக்கு சிரிக்கணும்?” என்றவளின் முக பாவனையை ரசித்தவன், கையை நீட்டினான்.

“இல்ல அகன், நானே வர்றேன்” என்றாள் அவனைத் தவிர்க்கும் பொருட்டு.

“ம்ம்” என்றான் மீண்டும். அவள் தயக்கத்துடன் கையை நீட்ட, அவளை கை பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான்.

எழுதிய என்ட்ரன்ஸ் எக்சாமில் நல்ல ரிசல்ட் வர வேண்டும் என்று எண்ணிய படியே ஏறிக் கொண்டிருந்தவள், படி ஏற ஏற பூமிநாதனுடன் வரும் போது அவரின் கையைத் பிடித்து தொங்கியபடியே ஏறிய பழக்கத்தில் அகனின் கையைப் பிடித்து தொங்கியபடி ஏறிக் கொண்டிருந்தாள். இவை அனைத்தும் அகனின் கண்ணில் பட்டாலும் அவன் பெரிதாய் ரியாக்ட் செய்யாமல் ஏறிக் கொண்டிருந்தான்.

“வரவர கோவிலுக்குக் கூட ஒட்டி உரசிகிட்டே தான் வராங்க. இதையெல்லாம் வீட்ல வச்சுக்கக் கூடாது, கலி காலம்” என்று தங்களை  கடந்து சென்றவர் புலம்பிக் கொண்டு போக, அதை கேட்டவளுக்கு அப்போது தான் நிதர்சனம் உரைத்தது.

அவன் கைகளுக்குள் கை கோர்த்தபடி படியேறிக் கொண்டிருக்கிறோம் என்பதையே அப்போது தான் உணர்ந்திருந்தாள். திகைப்புடன் சட்டென்று அவனை விட்டு விலகியிருந்தாள் யுகந்தாரா.

“என்னாச்சு?” என்பதைப் போல அவன் அவள் முகம் பார்க்க,

“சாரி அகன், நான் ஏதோ யோசனையில டாடி கூட வந்த மாதிரி, ஐ யாம் சாரி” என்றவளுக்கு கண்கள் கலங்கி விட்டிருந்தது.

“சில், இதையேன் இப்படி காம்ப்ளிகேட் பண்ற?” என்று அவனது அலைபேசியியில் டைப் செய்து காட்டினான்.

“மொபைல் எடுத்துட்டு வரக் கூடாது. அது தான் ரூல். ஏன் எடுத்துட்டு வந்திங்க?” என்றாள்.

“அங்க பாரு” என்று அவன் ஜாடை காட்ட, பாதிபேர் கையில் மொபைல் இருந்தது.

“இது தான் உங்க ரூலோட லட்சணம்” என்பதைப் போல் இருந்தது அவனின் பார்வை.

“சரி சரி மொபைலை பாக்கெட்ல வைங்க”  என்றவள் அவனை விட்டு சற்று விலகியே படியேறினாள்.

எரிச்சலுடன் அவளை முறைத்தவன், தானும் சட்டை செய்யாமல் வேகமாய் அவளுக்கு முன்னமே ஏறிச் சென்றிருந்தான்.

‘என்ன இவ்வளவு ஸ்பீடா ஏறிட்டான். கொஞ்சம் கூட மூச்சு வாங்கவே இல்லையே இந்த சிலுக்கு ஜிப்பாவுக்கு. அடியே தாரா நீ தான் என்னமோ ஆஸ்திரேலியாவுல இருந்து வந்த மாதிரி ஏற முடியாம ஏறிகிட்டு இருக்க. அவன் என்னமோ காலங்காலமா முருகன் காலடியில கிடந்தவன் மாதிரி அசால்ட்டா ஏறி அசால்ட் பண்ணிட்டு இருக்கான். இதுல இம்புட்டு வாய் உனக்கு ஆகாது’ என்று நொந்து கொண்டவள் ஒருவழியாய் மலையேறியிருந்தாள்.

அவளுக்கு முன் ஏறி அவளை முறைத்து கொண்டு நின்ற அகனைப் பார்த்தவள்,

“இப்போதான் நான் மலை ஏறுனேன். இப்போ இவனை மலை இறக்கனுமே? அப்பனே முருகா, பொறந்த நாள் அதுவுமா என்னை இப்படி பொலம்ப விட்டுட்டியேப்பா” என்று பேசிக் கொண்டே அவனிடம் வந்தவள்,

“என்ன அவசரம்? எதுக்கு இவ்வளவு வேகமா மேல வந்திங்க அகன்?” என்று கேட்க, அவனோ பதிலே பேசாமல் முன்னால் நடந்தான்.

“போடாங்.. கோபத்துக்கு பிறந்த கொரில்லா” என்று சிலுப்பிக் கொண்டவள், அவன் பின்னே ஓடினாள் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.

கார்த்திகேயன், தன்னிடம் வந்த அகன் கார்த்திகேயனின் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்துவாரா?