அவள் வெளியே செல்வதைப் பார்த்த சுகந்தியோ,

“இந்த  பொண்ணு என்னத்தை நம்ம கார்த்தி ரூம்ல இருந்து போகுது?” என்றார் சந்தான லட்சுமியிடம்.

“நான் தான் கார்த்திக்கு லஞ்ச் எடுத்துட்டு போய் குடுக்க சொன்னேன். அதுல உனக்கு எதுவும் பிரச்சனையா சுகந்தி?” என்றார் நேர்பார்வையாய்.

“அவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம். இப்போ இப்படி வயசுப் பொண்ணை அவன் ரூம்க்கு அனுப்புறது நல்லாவா இருக்குத்தை.பார்க்குறவங்க ஏதாவது சொல்லிட்டா?” என்றார் சுகந்தி.

“என் பேரன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா சுகந்தி? என் பேரனும் அப்படிப்பட்ட பையன் இல்லை. தாராவும் அப்படி பட்ட பொண்ணில்லை” என்று அவர் பட்டென்று சொன்ன விதத்தில் சுகந்திக்குத் தான் ஒரு மாதிரியானது.

“நான் கார்த்தியை தப்பா சொல்லலை அத்தை” என்றார் தன்னிலை விளக்கமாய்.

“ஹோ, அப்ப தாராவை அப்படி சொல்லலாமா? நம்ம வீட்டுப் பையன் தங்கம், அடுத்த வீட்டுப் பொண்ணு தகரமா? அப்படியும் தாரா ஒன்னும் அடுத்த வீட்டுப் பொண்ணு இல்லை. அவளும் எனக்கு பேத்தி தான். இனி ஒரு தடவை யோசனைக்குக் கூட இப்படி பேசாத சுகந்தி” என்றார் சந்தான லட்சுமி பேச்சில் உறுதியுடன்.

“சரிங்கத்தை” என்ற சுகந்திக்கு உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது.

அங்கே வசந்தியோ தன் அக்காவின் குடும்பத்தை பேசித் தீர்த்துக் கொண்டிருந்தார்.

“படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா? எதுக்கு என் மாமியார் கேட்ட உடனே சரின்னு சொன்ன? கார்த்திகாவுக்கு இவனை விட்டா வேற மாப்பிள்ளையே கிடைக்காதா? எனக்கு இது சுத்தமா பிடிக்கலைக்கா. ஏற்கனவே பேரனுக்கு ஒண்ணுன்னா என் மாமியார் காரம்மா எல்லாத்தையும் தூக்கிக் குடுத்துடும். இப்போ கல்யாணத்துக்குக் கூட காசை தண்ணியா செலவு பண்ணிட்டு இருக்கு. யார் வீட்டுக் காசை எடுத்து யாருக்கு செலவு பண்றது? இதைக் கேட்டா நான் பொல்லாதவ ஆகிடுவேன் இந்த் வீட்ல?” என்று பொருமித் தள்ளினார்.

“உன் மூத்த மச்சான் சேதுராமனுக்குத் தான் குழந்தை இல்லையில்ல. பேசாம அக்கா பசங்களை தத்தெடுத்திருக்க வேண்டியது தான?” என்றார் வசந்தியின் அக்கா.

“அதுக்கும் ரெடியா தான் இருந்தாங்க. ஆனா இந்த கார்த்திப் பையன் தான் மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டான். நகுலனைக் கூட சரி கட்டிடலாம். ஆனா இவனுக்கு அழுத்தமும் பிடிவாதமும் அதிகம். தாமரை அக்காவுக்கும் கார்த்தியை தன் பையனா தத்தெடுக்க ஆசை இருந்துச்சு. எங்க இவன்தான் சரி குடுக்கவே இல்லையே?” என்றார் வசந்தி.

“அப்படி தத்தெடுத்து இருந்தா, அவங்க பங்கு சொத்து முழுசும் கார்த்திக்கு வந்திருக்கும். பிழைக்கத் தெரியதவனா இல்ல இருக்கான்” என்று வசந்தியின் அக்கா நொடித்துக் கொள்ள, வசந்திக்கு மூலையில் அபாய மணி அடித்தது. கூடப் பிறந்த அக்காவாகவே இருந்தாலும் பண விஷயத்தில் வசந்தி எப்போதும் கறார் தான்.

“நான் விட்ருவேனா? ஏன் எங்களுக்குப் பிள்ளை இல்ல? அதான் மொத்த சொத்துக்கும் ஒத்த வாரிசா என் பிள்ளை ஹரீஷ் இருக்கானே? அதனால அந்த பேச்சுக்கே இங்க இடமில்லை” என்று வசந்தி உறுதியாய் சொல்ல, அவரின் அக்காவோ அவரை சிறு பயம் கலந்த யோசனையுடன் பார்த்திருந்தார்.

அன்று மாலை ஹாலில் சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் தீவிரமாய் வேலை செய்து கொண்டிருந்தான் அகன் கார்த்திகேயன். அவனிடம் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் கார்த்திகா அவன் முன் வர, அவனோ அவளை நிமிர்ந்தும் பார்த்தானில்லை.

அவளுக்கோ எப்படி அவனைத் தன்னைப் பார்க்க வைப்பது என்ற பெரும் யோசனை.

அவளும் கையை ஆட்டி ஆட்டி தனக்குத் தெரிந்த குறளி வித்தையை எல்லாம் காட்டிக் கொண்டிருந்தாள். அகனின் கவனம் முழுவதும் லேப்டாப்பில் தான் இருந்தது.

“கார்த்திகா” என்ற வசந்தியின் அழைப்பில் ஒரு ஏமாற்றத்துடன் சித்தியிடம் சென்றாள் கார்த்திகா.

“சொல்லுங்க சித்தி” என்றாள் உள்ளே போன குரலில்.

“அக்கா, இதுக்குத்தான் சொன்னேன் வேண்டாம்னு. இப்படி காது கேட்காத ஒருத்தனை கல்யாணம் பண்ணனும்னு நம்ம கார்த்திகாவுக்கு என்ன தலையெழுத்தா? இப்படியே இவ காலம் பூராம் சைகையிலையே பேசிட்டு இருப்பாளா? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. பேசாம இந்த கல்யாணத்தை நிறுத்திடு. காது கேட்காதவனுக்கு கல்யாணம் ஒன்னு தான் கேடு” என்று வசந்தி பேசி முடிக்கும் முன்,

“சித்தி” என்று அதட்டியிருந்தாள். கார்த்திகாவா என்றால் அது தான் இல்லை. வசந்தி திரும்பிப் பார்க்க, அங்கே கோபத்துடன் நின்றிருந்தாள் யுகந்தாரா.

அகனுக்கான க்ரீன் டீயை எடுத்து வந்தவள், அவர்களின் பேச்சில் திகைத்து தான் அப்படி கத்தியிருந்தாள்.

“என்ன? இப்ப எதுக்கு கத்துற?” என்றார் வசந்தி கோபமாய்.

யுகந்தாரா சட்டென்று அகனைத் திரும்பிப் பார்க்க, அவனோ அங்கு நடப்பது எதுவும் தெரியாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அங்க என்ன பார்க்குற? ஸ்பீக்கர் வச்சு கத்துனாலும் அவனுக்கு ஒன்னும் கேட்காது” என்றார் வசந்தி இளக்காரத்துடன்.

“ஒருத்தரோட குறையை இப்படி நக்கல் பண்ணி பேசுறது தப்புன்னு தெரியாதா உங்களுக்கு? அதுவும் உங்க வீட்டுப் பையனை நீங்களே இப்படி பேசுறிங்க?” என்றாள் காட்டமாய்.

“அவனைப் பேசுனா உனக்கென்ன? அதான் சொன்னியே எங்க வீட்டுப் பையன்னு. அவனை நான் என்னமும் பேசுவேன். எங்க வீட்டுப் பையன் மேல அப்படி என்னம்மா உனக்கு அக்கறை?” என்றார் வசந்தி.

“அகன்னு இல்லை, இந்த இடத்துல நீங்க யாரைப் பேசியிருந்தாலும் நான் கேட்ருப்பேன். அதே நிலைமை உங்களுக்கு வர கொஞ்ச நேரம் ஆகாது. காது கேட்காதது எல்லாம் ஒரு வரம். இப்படி கண்ட வார்த்தை எல்லாம் காதுல விழாது பாருங்க” என்றாள் முறைத்துக் கொண்டு.

“ஏய்..! என்ன வேலைக்கு வந்தியோ அதை மட்டும் பாரு. எங்க சித்தியவே இப்படி எதிர்த்து பேசிட்டு இருக்க?” என்ற கார்த்திகா,

“இவங்களை எல்லாம் யாரு சித்தி வீட்டுக்குள்ள விட்டது?” என்றாள் வசந்தியிடம் திரும்பி.

“வேற யாரு? எல்லாம் என் மாமியார்கார அம்மா தான். அவங்களுக்கு யாரை எங்க வைக்கணும்னு கொஞ்ச கூட விவஸ்தையே இல்லை. இதுங்களும் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம, திறந்த வீட்ல ஏதோ நுழைஞ்ச மாதிரி நுழைஞ்சுட்டு பேச்சு வேற பேசிக்குதுங்க” என்ற வசந்தியை உக்கிரமாய் முறைத்திருந்தாள் யுகந்தாரா.

கையில் வைத்திருந்த கிரீன் டீ ஆறிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள், வேகமாய் அகனின் அருகில் சென்றாள். அவன் அவள் வந்ததையும் உணராமல் இருக்க,

“அகன்” என்று அவனின் தோளைத் தொட்டு அழைக்க, அவனின் அழைப்பில் நிமிர்ந்தவன்,

“என்ன?” என்பதைப் போல் நெற்றியை சுருக்கினான்.

அவனிடம் க்ரீன் டீயை நீட்ட,

“தேங்க்ஸ்” என்பதை போல் இமைகளை மூடித் திறந்தவன், அதை வாங்கிக் கொண்டான்.

அவர்களின் மௌன பாஷைகளை “ஆ” வென்று பார்த்திருந்தனர் வசந்தி குடும்பத்தினர்.

அவன் குடித்து முடிக்கும் வரை அவனின் அருகிலேயே இருந்தவள்,  அவனிடம் கப்பை பெற கையை நீட்ட,

“வேண்டாம்” என்பதைப் போல் தலையை ஆட்டியவன், அங்கிருந்த பணியாளைப் பார்க்க, அவனின் பார்வைக்கே அவர் வேகமாய் அவன் அருகில் வந்திருந்தார். கப்பை அவரிடம் தான் கொடுத்தான் அகன். அவனின் சிறு செயல் அவளின் மனதிற்குள் சமரமாய் வீச, மனமோ நெகிழ்ந்திருந்தது.

‘நீ இந்த வீட்டில் வேலையாள் இல்லை’ என்று அழுத்தமாய் சொல்லியதைப் போன்று இருந்தது அவனின் செயல். அவன் மீண்டும் லேப்டாப்பிற்குள் தலையைப் புகுத்திக் கொள்ள, திரும்பி செல்ல முற்பட்டவள், கார்த்திகாவையும், வசந்தியையும்  நக்கலாய் ஒரு பார்வை பார்த்தாள்.

“பார்த்தியா கார்த்திகா, அவனைக் கட்டிக்கப் போற நீ அவனை எப்படி கூப்பிடுறதுன்னு தெரியாம கையைப் பிசைஞ்சுகிட்டு நின்ன? இவ என்னடான்னா? என்னமோ கட்டிகிட்டவ மாதிரி உரிமையா தோளைத் தொட்டு கூப்பிட்டு பேசுறா?” என்றார் வசந்தி. அமைதியாய் சென்று விட எண்ணிய தாராவிற்கு அதற்கு மேல் அமைதியாய் செல்ல முடியவில்லை.

“அகன் முன்னாடி கையைக் காலை ஆட்டி குறளி வித்தையெல்லாம் காட்டி அவர் குறையை அவருக்கே ஞாபகப் படுத்துற மாதிரி நடந்துக்கிறதுக்கு பதிலா, சிம்பிளா தோளைத் தொட்டு கூப்பிட்டது ஒன்னும் எனக்குத் தப்பா தெரியலை. நான் அப்படி கூப்பிட்டதால என்னோட கற்போ, அவரோட கற்போ போன மாதிரியும் எனக்குத் தெரியலை” என்று நிறுத்தி நிதானமாய் அவர்களைப் பார்த்தவள்,

“அதனால என்ன சொல்ல வர்றேன்னா? ஆதாம் ஏவாள் காலத்துலயே இருக்காதிங்க. கொஞ்சம் அப்டேட் ஆகுற வழியைப் பாருங்க” என்றாள் கிண்டலுடன்.

“என்னாச்சு?” என்றபடி வந்த சந்தான லட்சுமிக்கு, யுகந்தாராவின் முகம் கோபத்தில் இருப்பதைப் போன்று தெரிந்தது.

“தாரா என்னடா ஆச்சு?” என்றார்.

“ஒண்ணுமில்லை பாட்டி, அகனுக்கு க்ரீன் டீ குடுக்க வந்தேன்” என்றாள் கோபத்தை மறைத்து.

“நீ ஏதோ கோபமா இருக்க மாதிரி இருக்கே?” என்றார் லட்சுமி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி, என்னோட ரூம் எதுன்னு நீங்க சொல்லவே இல்லை. எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என்றாள் வேண்டுமென்றே.

“வசந்தி நான் என்ன சொன்னேன் உன்கிட்ட?” என்று மருமகளை முறைத்தவர்,

“நீ வாடா தாரா நான் காட்றேன்” என்று அவளை அழைத்துக் கொண்டு செல்ல, வசந்திக்கு சக்தியிருந்தால் அந்த இடத்திலேயே அவளை எறித்திருப்பார். அப்படி ஒரு ஆத்திரம் அவருக்கு.