அத்தியாயம் 26:

“டிவேர்ஸ்” என்ற அவனின் வார்த்தையைக் கேட்ட தாராவிற்கு கொலைவெறியானது.

“என்னது டிவேர்ஸ் வேணுமா உனக்கு?” என்று வேகமாய் வந்தவள், அவனை அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேட, எதுவும் கிடைக்காமல் கடைசியில் டேபிளில் இருந்த கத்தியை எடுத்திருந்தாள்.

“தாரா என்ன பண்ற?” என்றார் வேணி வேகமாய்.

“சாருக்கு டிவேர்ஸ் வேணுமாமே? எப்படி எப்படி நாலு வருஷம் இருக்கேனா செத்தேனான்னு எட்டிக் கூட பார்க்காம இப்ப வந்து அன்பே ஆருயிறேன்னு உருகுவ. உடனே போன மச்சான் திரும்பி வந்தான்னு உன்னை வரவேற்கனுமா? இதுல சண்டை போட்டா டிவேர்ஸ் தருவியா நீ? உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும். இப்படியே குத்தி குடலை உருவி மாலையா போட்ருவேன்டா” என்றாள் ஆத்திரத்துடன்.

“தாரா கொஞ்ச நேரம் அமைதியா இரும்மா” என்றவர் பூமிநாதன்,

“டைவேர்ஸ் அது இதுன்னு என்ன பேச்சு இதெல்லாம் கார்த்தி தம்பி?” என்றார்  கோபமாய்.

“என்னைய வேற என்ன பண்ண சொல்றிங்க அங்கிள்? ஏன் அப்படி பண்ணேன்னு தெளிவா சொல்லிட்டேன். அதுக்கு அப்பறமும் இப்படி வீம்பு பிடிச்சா என்ன அர்த்தம்?” என்றான்.

“நீங்க பேசுறதே தப்பு தம்பி. என் பொண்ணுக்கு முதல்ல பிடிவாதம்னா என்னன்னே தெரியாது. அவளுக்கு கொஞ்சம் கூட நேரம் குடுக்காம, நீங்க பேசுன உடனே அவ மனசும் உடனே மாறணும்னு எதிர்பார்த்தா எப்படி தம்பி?” என்றார் பூமிநாதன்.

“அப்பா நான் டிவேர்ஸ் தர்றேன்” என்றவளை அதிர்ந்து பார்த்தான் அகன்.

“என்ன பாக்குற? டிவேர்ஸ் தான வேணும் உனக்கு. கண்டிப்பா தர்றேன். ஆனா ஒரு கண்டிஷன்” என்றாள்.

“என்ன?”

“இந்த நாலு வருஷத்தையும் எனக்குத் திருப்பிக் குடு. அப்பறம் உன் பாட்டி வீட்டுக்கு வரும் போது எப்படி பிரஷ் தாராவா இருந்தேனோ அதே தாராவை திருப்பிக் குடு” என்றாள்.

‘இதென்ன புது விதமா இருக்கு? பிரஷ் தாராவா?’ என்றவன் குழம்பிப் போய் நிற்க,

“என்ன புரியலையா? ஆம்பளைங்க பாஷைல சொல்லனும்னா கைப்படாத ரோசாவா வந்தேன். அதே ரோசாவா என்னை எனக்குத் திருப்பிக் குடு” என்றாள் முறைப்புடன்.

அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு சிரிப்பு வர, அந்த நேரத்தில் சிரித்தால் அதற்கும் தர்ம அடி கொடுப்பாள் என்று எண்ணியவன் சிரிப்பை அடக்கியபடி நிற்க, வேணியோ தலையில் அடித்துக் கொண்டார்.

“நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா?” என்றான் அகன்.

“அதெல்லாம் நல்லா புரியுது. இதையெல்லாம் உன்னால பண்ண முடியும்னா டிவேர்ஸ் தர்றதுல எனக்கொண்ணும் பிரச்சனையில்லை” என்று சிலுப்பியபடி நின்றவளை அப்போதும் ரசிக்கத் தோன்றியது அவனுக்கு.

‘பொண்ணுங்களை கரெக்ட் பண்றது எப்படின்னு தெரியலையே? இப்ப இவளை வேற எப்படி தான் சமாதானப் படுத்துறது? நான் என்ன பேசுனாலும் அது ராங்காவே போய் முடியுது. டேய் கார்த்தி இது வரைக்கும் நீ பார்த்தது இல்லைடா சோதனை. இனிமேல் தான் காத்திருக்கு உனக்கு சத்திய சோதனை. முன்னல்லாம் அவ தான் மைன்ட் வாய்ஸ்ல புலம்புவா. இப்போ உன்னை இப்படி புலம்ப விட்டுட்டாளேடா’ என்று முணுமுணுக்க,

“என்ன டீலுக்கு ஓகே வா?” என்றாள்.

“எனக்கு யோசிக்க டைம் வேணும். எதையுமே யோசிச்சு தான் சொல்லுவேன்” என்றான் சிரிப்பை அடக்கி.

“நல்லா யோசிங்க சார். ஒன்னும் அவசரமில்லை. ஆற அமர யோசிச்சுட்டு இனியொரு ஆறு வருஷம் கழிச்சு வாங்க. உங்களுக்கு இதென்ன புதுசா?” என்றாள் நக்கலாய்.

“தாரா பிளீஸ்..! அதையே சொல்லிக் காட்டாத. நான் பர்ப்பசாத்தான் பண்ணேன். இல்லைன்னு சொல்லலை. அதுக்கான ரீசனும் சொல்லிட்டேன். இதே மாதிரி இன்னும் நிறைய ரீசன்ஸ் இருக்கு. கேட்கத்தான் உனக்கு பொறுமையில்லை. உனக்கு என்ன தோணுதோ அதையே பண்ணு. இனி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், வரேன்” என்றபடி கிளம்பிவிட்டான்.

“தாரா மாப்பிள்ளையை போக வேண்டாம்னு சொல்லுடி” என்றார் வேணி.

“ம்மா அவன் எனக்கு புருஷனே இல்லைங்குறேன். நீங்க என்ன மாப்பிள்ளை கீப்பிள்ளைன்னுகிட்டு” என்று எறிந்து விழுந்தாள்.

“புருஷனே இல்லைன்னா பேசாம விவாகரத்து பண்ணிடு. இனி உன்னை இப்படியே வீட்ல வச்சிருக்க முடியாது. உங்கப்பாவை நல்ல வரனா பார்க்க சொல்றேன்” என்றார் வேணி.

“அம்மா என்ன பேசுறிங்க?” என்றாள் கோபமாய்.

“அப்பறம் எங்களை என்ன செய்ய சொல்ற தாரா? காலாகாலத்துல உனக்கு ஒரு நல்லதைப் பண்ணி பார்க்க வேண்டாமா? எதுவா இருந்தாலும் யோசிச்சு சொல்லு” என்றார் வேணி.

அந்த வார்த்தைகளில் காண்டானது தாராவிற்கு.

‘இனி யாராவது யோசிச்சு சொல்லுன்ற வார்த்தையை சொல்லுவிங்களா?’ என்று அவர்கள் தலையிலேயே போட வேண்டும் போல் தோன்றியது.

மறுநாள் வழக்கம் போல் ஹாஸ்பிட்டல் கிளம்பி சென்றாள் தாரா. போக வேண்டுமா என்று பல முறை யோசித்த பிறகு தான் கிளம்பியிருந்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்ததைப் போல் அகன் அவள் கண்ணில் படவே இல்லை.அதற்கடுத்து வந்த நாட்களும் அதே அமைதியில் கழிய அகன் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை.

‘இந்த மங்கூஸ் மண்டையன் ஹாஸ்பிட்டலுக்கு வர்றானா இல்லையா? கண்ல தட்டுப் படவே மாட்டேங்குறானே?’ என்று நினைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவள், காரிடர் வளைவில் எதிரே வந்தவன் மீது மோதப் போய் பின் சுதாரித்து நின்றாள்.

“சாரி” என்றபடி நிமிர்ந்தவள் அங்கே அகன் நிற்பதைப் பார்த்தவுடன் கண்களை விரித்தாள்.

“ஆர் யு ஓகே ” என்றான்.

“ஐ ஆம் ஓகே டாக்டர்” என்றவள் நிற்காமல் சென்று விட்டாள். செல்லும் அவளைத் திரும்பிப் பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன் திரும்பி சென்றான்.

அவன் சென்ற பிறகு திரும்பியவள் அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

‘இன்னும் இவன் பக்கத்துல வந்தா நமக்குத் தான் பக்குன்னு இருக்கு. அவன் எப்பவும் போல சாதரணமாத் தான் இருக்கான்’ என்று புலம்பிக் கொண்டாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, தாரா அந்த ஹாஸ்பிட்டலில் சேர்ந்து முழுதாய் இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. இந்த இரண்டு மாதங்களில் மொத்தமே ஒரு பத்து முறை தான் அகனுடன் சேர்ந்து வேலை செய்திருப்பாள். அதுவும் ஆப்ரேஷன் தியேட்டர் என்பதால் பேசிக் கொள்வதற்கு வாய்ப்பில்லை. பார்த்துக் கொள்ள வாய்ப்பிருந்தாலும் தவிர்த்து விடுவாள் தாரா.

என்னதான் அவன் மேல் கோபம் இருந்தாலும் ஏனோ வெறுப்பு மட்டும் வரவே இல்லை அவளுக்கு. அகன் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்யாததே அவளின் கோபத்தை இன்னமும் அதிகப் படுத்தியிருந்தது.

அன்று அவள் ஹாஸ்பிட்டலுக்கு வந்து வருகையை பதிவு செய்து விட்டு நகரும் போது தான் நர்ஸ் சரிகா டாக்டர் புருஷோத்தமனிடம் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

மதியத்திற்கு மேல் சரிகாவை அழைத்தவள்,

“இன்னைக்கு ஏகே சார் ஹேண்டில் பண்ண வேண்டிய கேஸை எல்லாம் ஏன் புருஷோத்தமன் சார் ஹேண்டில் பண்றார்?” என்றாள் பொதுவாய் கேட்பது போல்.

“ஏகே சார்க்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்யூவாம் டாக்டர்.  டூ டேய்ஸ்க்கு சார் வரமாட்டார்னு மார்னிங்கே இன்பார்ம் பண்ணிட்டார் டாக்டர். எமர்ஜென்சின்னா இன்பார்ம் பண்ண சொன்னார்” என்றாள்.

“என்ன இஷ்யூ?” என்றாள்.

“அதைப் பத்தி தெரியலை டாக்டர்” என்றாள் சரிகா.

“ஓகே..! நீங்க போய் உங்க வொர்க்கை பாருங்க” என்றவளுக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. இந்த இரண்டு மாதங்களில் அதிகம் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அவ்வப்போது பார்த்துக் கொள்வாள். நான்கு வருட கோபம் குறைந்து, அவளை சமாதானப் படுத்தாத கோபமே அவளுக்கு பிரதானமாய் இருந்தது.