“என்னாச்சு? என்ன பிரச்சனையா இருக்கும்?” என்று யோசித்தே மாய்ந்து போனாள். அவன் மேல் கொண்ட கோபத்தில் இறுகிப் போன ஒரு மனமும், அவன் மேல் உள்ள அக்கறையில் இளகிப் போன ஒரு மனமும் ஆக இரண்டு மனங்களும் சேர்ந்து அவளை பாடாய் படுத்தியிருந்தது.
‘என் வாழ்க்கையில பஞ்சாயத்தை கூட்றதுக்குன்னே பிறப்பெடுத்திருப்பான் போல. இவனுக்கு அய்யோ பாவம் பார்த்தா என் நிலைமை அய்யயோ பாவம் ஆகிடுது’ என்று நினைத்துக் கொண்டே அந்த நாளைக் கடத்த முயன்றவளுக்கு ஒரு நிலைக்கு மேல் முடியவில்லை.
‘வர்றது வரட்டும் நேர்ல போயே பார்த்துட்டு வந்துடலாம்’ என்று எண்ணியவளுக்கு அப்போது தான் புத்திக்கு உரைத்தது, அவன் எங்கே தங்கியிருக்கிறான் என்பதைக் கூட அவள் தெரிந்து வைத்திருக்கவில்லை.
‘முன்னாடி ரிஷப்ஷன்ல கேட்போமா?’ என்று எண்ணியவள் அடுத்த நிமிடம் அந்த யோசனையை கைவிட்டாள்.
“நான் ஏன் யார்கிட்டையோ கேட்கணும்? அந்த பம்பரக்கட்டை மண்டையன்கிட்டயே கேட்குறேன்” என்றவள் ஒரு தயக்கத்துடன் அவனுக்கு அழைத்தாள். முதல் இரண்டு மூன்று முறை முழுதாய் ரிங் போய் கட்டாக, நான்காவது முறை எடுத்திருந்தான். நல்ல தூக்கத்தில் இருந்திருப்பான் போலும். குரல் ஓய்ந்து ஒலித்தது.
“யுகா” என்று போனில் கேட்ட குரலே அவளுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்த,
‘திடீர்ன்னு போன் பண்ணி லொக்கேஷனை எதுக்கு அனுப்ப சொல்றா?’ என்று யோசித்தபடி அனுப்பியிருந்தான்.
ஹாஸ்பிட்டலில் இருந்து இருபது நிமிட பயணத்தில் இருந்த அந்த லக்சூரி அப்பார்ட்மென்ட் முன்பு காரை நிறுத்தியிருந்தாள்.
“ஆஸ்திரேலியா பார்ட்டி அவனுக்கு ஏத்த மாதிரியே அப்பார்ட்மென்ட் பார்த்திருக்கான் பாரு. அது சரி பல்லு இருக்கவன் பக்கோடா சாப்புடுறான்” என்று அதன் சுற்றுப் புறச் சூழலை ரசித்தவாறே சென்றவள், அவனது பிளாட்டின் முன் சென்று ஒரு தயக்கத்துடன் தான் அழைப்பு மணியை அழுத்தியிருந்தாள்.
சில நிமிடங்களுக்குப் பிறகே கதவைத் திறந்திருந்தான் அகன். நல்ல தூக்கத்தில் இருந்திருப்பான் போலும். முகமெல்லாம் சிவந்து மிகவும் சோர்வாய் தெரிந்தான்.
திடீரென்று வந்து நிற்பவளைக் கண்டு அவனுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை.
“ஹேய் சாரி யுகா, உள்ள வா” என்றவன் அவளுக்கு வழி விட்டு நிற்க, இயல்பு போல வலது காலை எடுத்து வைத்தே உள்ளே சென்றிருந்தாள்.
“என்னாச்சு யுகா? எனி பிராப்ளம்?” என்றான்.
“என் லைப்ல இருக்க ஒரே ப்ராப்ளம் நீங்க மட்டும் தான் அகன். தனியா எனக்கென்ன பிராப்ளம் வரப் போகுது?” என்றாள் அவன் முகம் போன போக்கைக் கண்டு வாயை மூடிக் கொண்டாள்.
“திடீர்ன்னு தேடி வரவும் தான் கேட்டேன். அதுக்கு இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கலை” என்றவன்,
“டீ, காபி” என்றான் கேள்வியாய்.
“உங்களுக்கு என்ன பிராப்ளம்? ஏன் ஹாஸ்பிட்டல் வரலை?” என்றாள்.
“டூ டேய்ஸா லைட் பீவர் தான். அதோட தான் ஹாஸ்பிட்டல் வந்தேன். இன்னைக்கு ரொம்ப முடியலை, சோ ரெஸ்ட் எடுக்க வேண்டியதா போய்டுச்சு” என்றவனின் குரலில் அத்தனை சோர்வு.
“ரெண்டு நாளா பீவரை வச்சுகிட்டு அதோட ஹாஸ்பிட்டல் வந்திருக்கிங்க. ஒரு டாக்டர் இப்படி பண்ணலாமா? இன்பெக்ஷன் ஆகும்னு தெரியாது?” என்றாள் கோபமாய்.
“ஹாஸ்பிட்டல் தான் வந்தேன். எந்த கேஸும் ஹேண்டில் பண்ணலை” என்றான்.
“பீவர்ன்னு ஏன் சொல்லலை?” என்று ஒரு வேகத்தில் கேட்டுவிட்டாள்.
“ஏன் சொல்லலைன்னா, சொல்ல யாருமில்லைன்னு அர்த்தம். இத்தனை வருஷம் இப்படித்தான் இருக்கேன். இப்ப என்ன புதுசா. ஜஸ்ட் பீவர் தான். ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும். இன்ஜெக்ஷன் போட்டுட்டேன். டேப்லட் போட்ருக்கேன். வேற என்ன பண்ணனும்?” என்றான் எதார்த்தம் போல். அவன் ஈசியாக சொல்லிவிட்டான். ஏனோ அவளுக்குத் தான் மனதிற்குள் பாரம் ஏறியதைப் போன்று இருந்தது.
“ஏதாவது சாப்பிட்டிங்களா?” என்றாள் சற்று தளைந்த குரலில்.
“யுகா பிளீஸ்..! இப்படி என் மேல இரக்கப்படுற மாதிரி பேச வேண்டாம். ஐ கேன் ஹேண்டில் மை செல்ப். எனக்கு நீதான் தேவை. உன்னோட இரக்கம் தேவையில்லை” என்றான் அந்த சோர்விலும்.
அவன் இப்படி பட்டென்று பேசவும் அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
‘என்ன ஆச்சோன்னு வந்தேன்ல, எனக்கு இது தேவை தான்’ என்று பல்லைக் கடித்தவள்,
“உங்களுக்குத் தான் உங்களைப் பார்த்துக்கத் தெரியுமே? என்ன ஆச்சோன்னு வந்தா ஓவர் ஆட்டிட்யூட் காட்டுறிங்க. இந்த அலட்டலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இங்க வந்த என்னைச் சொல்லனும்?” என்றபடி சரியாக வீட்டிற்குள் கூட வராமல் கிளம்ப முற்பட்டவளை தடுத்து நிறுத்தியவன்,
“இப்பவும் நீ தப்பாவே புரிஞ்சுக்குற யுகா. எனக்கு இப்படித்தான் பேச வருது. உன்னோட இரக்கம் வேண்டாம் நீதான் வேணும்னு சொல்றேன். அதையும் நீ தப்பாவே மீன் பண்ணிக்கிற? நான் என்னதான் பண்ணட்டும். ட்ரஸ்ட் மீ எனக்கு உன்னை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியலை. எப்படி சமாதானப் படுத்துறதுன்னு தெரியலை. குளோஸ் பிரண்ட்ஸ்ன்னு யாருமில்லை. இருந்திருந்தா ஏதாவது சொல்லி இருப்பாங்களா இருக்கும். நான் எது பேசுனாலும் தப்பாகிடுதுன்னு தான் நான் பேசுறதே இல்லை” என்றவனை கண்டு சிறிதும் அசராமல் நின்றாள் தாரா.
சோபாவில் தலையைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவனைப் பார்த்து ஒரு பக்கம் பாவமாய் இருந்தது தாராவிற்கு. அவனின் குணாதியசங்கள் ஓரளவிற்கு அவளுக்கும் தெரியும் தானே.
ஆனால் கடந்து போன நான்கு வருடங்களில் அவள் அனுபவித்த வலியும் வேதனையும் இல்லையென்று ஆகிவிடாதே. அதைக் கூட உணராமல் இருக்கிறானே என்ற ஆதங்கம் தான் அவளுக்கு.
“நீங்க சொல்றது எப்படி இருக்குன்னு தெரியுமா அகன்? நாலு வருஷம் எனக்கு தீராத காயத்தை குடுத்தது நீங்க தான்.ஆனா,அதுக்கு மருந்தே போடாம மனக்காயத்தையும் நானே ஆத்திட்டு உங்களைத் தேடி வரணும்னு சொல்ற மாதிரி இருக்கு” என்றவளின் வார்த்தைகள் அவனுக்கு மனதிற்குள் சுருக்கென்று தைத்தது.
உடல் வேறு ஒரு பக்கம் அவனைப் படுத்தி எடுக்க, சில நிமிடங்கள் நிதானித்தவன்,
“தப்பெல்லாம் என் மேல தான். உன்னோட கெரியரை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு நினைச்சு நான் பண்ணது எனக்கே ஆப்பா திரும்பிடுச்சு. நீ கோபப்படுவன்னு தெரியும். ஆனா இப்படி என்னை வெறுக்குற அளவுக்கு கோபப்படுவன்னு தெரியா போய்டுச்சு யுகா. என்னை உனக்குப் புரியும்னு இறுமாப்பா இருந்துட்டேன். நான் செஞ்சது எல்லாம் தப்புத்தான். உன்னோட எல்லா கஷ்ட்டதுக்கும் நான் மட்டும் தான் காரணம். ஐயாம் சாரி” என்றவன் அவள் காலில் ஷாஷ்ட்டாங்கமாய் விழுந்து விட்டான்.
“அகன் என்ன பண்றிங்க?” என்றவள் பதறி விலக, அவனோ நிதானமாய் எழுந்தவன்,
“எனக்கு உன்கிட்ட எந்த ஈகோவும் இல்லைன்னு வேற எப்படி புரிய வைக்கிறது எனக்குத் தெரியலை யுகா. இல்ல நான் என்ன பண்ணா நீ சமாதானம் ஆவ? அதையாவது சொல்லேன்” என்றான் அகன்.
அவளோ எதுவும் பேசாமல் அமைதியாய் நிற்க, எடுத்துக்கொண்ட மாத்திரைக்கு அவனுக்குத் தூக்கம் சொக்கியது. இத்தனை நாள் கழித்து தன்னைத் தேடி வந்திருப்பவளை அப்படியே விடவும் மனமில்லை. நேரம் ஆக ஆக தலையெல்லாம் பாரமாகிக் கொண்டே போனது அவனுக்கு.
“யுகா” என்று அவளின் கையைப் பிடித்தவனின் கை நெருப்பாய் சுட்டது. அவனின் உடல் சூட்டில் தான் அவள் நிஜத்திற்கே திரும்பினாள்.