“பாட்டி என்ன பண்ணேன் கார்த்தி” என்றவரிடம் அவனால் முகத்தைத் திருப்ப முடியவில்லை.
“எனக்கு யார்மேலையும் கோபம் இல்லை பாட்டி. ஆனா, நான் இப்போ தான் நிம்மதியா இருக்கேன். அதைக் கெடுத்துக்க விரும்பலை. நீங்க இப்போ கிளம்புங்க. வெளிய டிரைவர் ரெடியா இருக்கார். கண்டிப்பா ஒரு நாள் உங்களை வந்து பார்க்குறேன்” என்றான்.
“கார்த்தி… தாரா” என்று அவர் இழுக்க,
“என் வொய்ப எப்படி பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும். அப்படியெல்லாம் அவளை விட்டுட மாட்டேன்” என்றான். அந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது அவருக்கு.
தன் அறைக்குள் வந்து தலையை கைகளை தாங்கியபடி அமர்ந்த தாராவிற்கு தலைவலி கூடிப் போனது. கண்கள் எல்லாம் கலங்கிப் போக, இத்தனை நாட்களாய் அழுத்தி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் அழுத்தத்தை மீறி வெளியே வந்திருந்தது.
ஒரு நிமிடம் ஆழ்ந்து சுவாசித்து தன்னை நிலைப்படுத்தியவள்,
‘யாரைக் கண்டும் நான் ஏன் ஓடி ஒளியனும். ஓடிப் போன அவனுக்கே இவ்வளவு தைரியம் இருக்கும் போது நான் ஏன் இப்படி வந்து அழனும்’ என்று எண்ணியவள், மீண்டும் பழைய தாராவாக மாறி வெளியே சென்றாள். அங்கே லட்சுமியைக் காணவில்லை.
“இங்க இருந்த பெரியவங்களைப் பார்த்திங்களா?” என்றாள் ரிஷப்ஷனில்.
“நீங்க பேசிட்டு இருந்த பாட்டியா டாக்டர். அவங்க அப்பவே கிளம்பி போய்ட்டாங்க” என்றாள் ரிஷப்ஷனிஸ்ட்.
‘அவங்க கிளம்பிட்டாங்கன்னா அப்போ அவனும் போயிருப்பான் தானே. இத்தனை வருஷம் கழிச்சு வந்தும் என்னை வந்து பார்க்கனும்னு தோணலை. அவன் எப்போ என்னைப் பத்தியெல்லாம் கவலைப் பட்டான்’ என்று விரக்தியாய் நினைத்தவளுக்கு ஏனோ எவ்வளவு முயன்றாலும் அதிலிருந்து வெளி வர முடியவில்லை. கண்கள் கலங்கி கண்ணீர் வெளி வரத் துடித்துக் கொண்டிருந்தது.
அவளின் ஒவ்வொரு அசைவையும், தவிப்பையும் தன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏனோ அதற்கு மேல் அவளைத் தவிக்க வைக்கத் தோணவில்லை.
‘நானும் பாட்டி கூடவே கிளம்பிப் போயிருப்பேன்னு நினைச்சிருப்பா. என்னைப் பத்தி எப்போ நல்ல விதமா நினைச்சா இப்போ நினைக்கிறதுக்கு’ என்று புலம்பிக் கொண்டான்.
“டாக்டர்” என்று வந்து நின்ற சரிகாவைப் பார்த்தவள்,
“எஸ்”
“சீப் டாக்டர் உங்களை வர சொன்னார்” என்றாள்.
“இப்பவா?” என்ற தாராவிற்கு யாரையும் பார்க்கும் மனநிலை இல்லை.
“எஸ் டாக்டர். இப்போதான் வர சொன்னார்” என்றாள் சரிகா.
“ஓகே” என்றவள் மனதில் உழன்ற சிந்தனைகளுடன் சரிகாவின் பின்னால் சென்றாள்.
“இந்த ரூம் தான் டாக்டர்” என்றாள் சரிகா.
“ஓகே, நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க” என்று சரிகாவை அனுப்பியவள்,
“மே ஐ கம்மிங் டாக்டர்”
“எஸ்” என்றவனின் குரலில் அதிர்ந்தவள், நகர மறுத்த கால்களுடன் போராடி உள்ளே சென்றாள்.
அங்கே எப்போதும் போல் அவனது ஸ்டைலில் அமர்ந்திருந்த அகன் கார்த்திகேயனை அந்த இடத்தில் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் அதிர்ந்த முகத்தில் இருந்து தெரிந்தது. இருக்கையைப் பிடித்து நின்றபடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், அப்போது தான் மேஜை மீதிருந்த நேம் போர்டை கவனித்தாள்.
நேம் போர்டை வெறித்துக் கொண்டிருந்தவளின் மனநிலை அவனுக்குத் தெளிவாக புரிந்தது.
“ஹெலோ டாக்டர், நிக்கனும்னு அவசியமில்லை. உட்காரலாமே” என்றவனை முறைத்தவள், இப்போது தான் நேருக்கு நேர் பார்த்திருந்தாள். அவனைப் பார்த்து நான்கு வருடங்கள் முற்றும் முதலாய் முடிந்திருந்தது. முன்பை விட அழகும் கம்பீரமும் கூடித் தெரிந்தான். மனதிற்குள் நிமிடத்தில் தோன்றிய நூறு சிந்தனைகளும் கேள்விகளும் அவள் மனதை உழற்ற, அது எதையும் வெளியே காட்டாமல் இருக்க வெகு பிரயத்தனப்பட்டாள் யுகந்தாரா.