“ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்களா டாடி” என்றாள் களைப்புடன்.

“நாங்களும் கேப் புக் பண்ணி இப்போ தான் வந்தோம்டா. நீ வீட்டுக்கு வந்து பிரஷ் ஆகிட்டு வந்திருக்கலாம். பாரு முகமே டல்லா இருக்கு” என்றார் பூமிநாதன்.

“லேட் ஆகிடும் டாடி. இப்போ என்ன? பியூஸ் போன பல்பு மாதிரி இருக்குற என் முகம் பளிச்சுன்னு தௌசண்ட் வாட்ஸ் பல்ப் மாதிரி மின்னனுமா? அப்போ ஸ்டோன் ஐஸ் க்ரீம் வாங்கிக் குடுங்க” என்றவளை முறைத்தார் வேணி.

“உனக்கில்லாததா தாராம்மா. உனக்கு என்ன வேணும்னு சொல்லுடா அப்பா வாங்கித் தரேன்” என்றார் பூமி.

“ஏன் அடுத்த ரெண்டு நாளைக்கு காய்ச்சல் வந்து படுக்கவா? டாக்டர் நீயே இப்படி ஐஸ் க்ரீம் சாப்பிடலாமா தாரா?” என்றார் வேணி.

“இதைக் கேட்டு கேட்டு என் காதுல ரத்தம் ஒன்னு தான்ம்மா வரலை. விட்டா டாக்டர்னா இலை தழை மட்டும் தான் சாப்பிடனும்னு சொல்லுவிங்க போல” என்றவர்கள் பேசிக் கொண்டே உள்ளே செல்ல, சட்டென்று திரும்பிப் பார்த்தாள் தாரா.

“என்னாச்சு தாராம்மா?”

“இல்ல டாடி யாரோ என்னை பார்த்துட்டே இருக்குற மாதிரி பீல் ஆகுது” என்றாள்.

“யாரும் இல்லையேடா” என்றார்.

“அதான் எனக்கும் புரியலை” என்றவள் அதற்கடுத்து ஷாப்பிங் செய்வதில் பிசியாகிவிட்டாள். ஷாப்பிங் முடித்து அங்கேயே இரவு உணவையும் முடித்து அவர்கள் வீடு திரும்ப இரவு பத்து  மணியைக் கடந்திருந்தது.

வீடு வந்து குளித்து முடித்து இரவு உடைக்கு மாறியவள் படுக்கையில் விழுந்த உடன் உறங்கிப் போனாள். தூக்கம் தொலைத்த இரவுகள் நிறைய இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது அவளின் வேலைப் பளுவின் காரணமாக அவளே நினைத்தாலும் உறங்காமல் இருக்க முடியாது.

நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் காதருகில் ‘யுகா’ என்ற அகனின் அழைப்பு  விழ, அவளோ அசையாமல் கிடந்தாள்.மீண்டும் அவள் காதருகில் ‘ஹேப்பி பர்த்டே யுகா’ என்றவனின் அழைப்பு ஆழ்ந்து ஒலிக்க சட்டென்று எழுந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அறைக்குள் சுற்றும் முற்றும் பார்க்க யாரும் அங்கில்லை.

‘அகன் கூப்பிட்ட மாதிரி இருந்ததே’ என்று அவள் யோசிக்க,

“எல்லாம் உன் மனப்பிராந்தி” என்றது மனம்.

‘தூக்கத்துல கூட என்னை நிம்மதியா இருக்க விடக் கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரிவான் போல’ என்று புலம்பியபடி படுத்தவளுக்கு, விட்டு போனத் தூக்கத்தைத் தொடர வெகு நேரம் பிடித்தது.

அவள் தூங்கிய பிறகு வெளியே வந்த அகனுக்கோ அப்போது தான் மூச்சே வந்தது.

‘நல்ல வேளை தப்பிச்சேன். மவனே அவ மட்டும் இப்போ உன்னை பார்த்திருக்கணும் கும்மிருப்பா கும்மி’ என்று நினைத்துக் கொண்டவனுக்கு தன்னை நினைத்தே சிரிப்பாய் வந்தது. ஒரு காலத்துல இவ என்னைக் கண்டு பயந்தது என்ன? இன்னைக்கு நான் இவளைக் கண்டு பயப்படுறது என்ன? எல்லாம் நேரம்டா கார்த்தி’ என்று நினைத்தவனுக்கு ஏனோ அங்கிருந்து செல்லும் எண்ணம் மட்டும் வரவேயில்லை.

அவள் அறையை விட்டு வெளியே வந்தவனை கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்திருந்தனர் பூமியும் வேணியும்.

“தேங்க்ஸ் அங்கிள். அப்போ நான் கிளம்புறேன்” என்றவனை தடுத்திருந்தார் பூமிநாதன்.

“கார்த்தி தம்பி” என்றவர் தயங்கி நிற்க,

“உங்ககிட்ட நிறைய கேள்விகள் இருக்குற மாதிரி என்கிட்ட நிறைய பதில்கள் இருக்கு அங்கிள். ஆனா ஒன்னு என் வாழ்க்கையில முதலும் கடைசியுமா உங்க பொண்ணு மட்டும் தான். நிதானமா பேசிப்போம். இப்போ ரெஸ்ட் எடுங்க” என்றவனை,

“இந்த நேரத்துல கிளம்பாட்டி என்ன மாப்பிள்ளை. இருந்துட்டு காலையில போங்களேன்” என்றார் வேணி. பூமிநாதன் மனைவியை முறைக்க,

“என்னை மட்டும் உங்க பொண்ணு இங்க பார்த்தா அப்பறம் ருத்ர தாண்டவம் தான் ஆடுவா. அவளை எப்படி மலை இறக்குறதுன்னு தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்” என்றான் அகன்.

“என் பொண்ணோட கோபத்துல எந்த தப்பும் இல்லையே தம்பி” என்றார் பூமி.

“உங்க ஆதங்கம் சரி தான் அங்கிள். நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே உங்ககிட்ட கேள்விகள் இருக்க மாதிரி என்கிட்ட பதில்களும் இருக்கு. ஆனா அதே பதிலை என் வொய்ப்க்கு நான் சொல்ல முடியாது பாருங்க” என்றவன்,

“எனக்கும் ஆன்ட்டி சொன்னது தான் சரின்னு படுது. அன் டைம்ல போகாட்டி என்ன? மார்னிங்கே போய்க்கிறேன்” என்றவன் தாராவின் அறைக்குள் செல்ல, இருவரும் திகைத்தபடி பார்த்திருந்தனர்.

“இப்ப என்னங்க பண்றது?” என்றார் வேணி.

“என்னைக் கேட்டா, கிளம்பிப் போனவரை நீதான நிறுத்துன. காலையில உன் பொண்ணு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்பா. வாங்கிக் கட்டிக்கோ” என்றார் கடுப்புடன்.

“என்ன இருந்தாலும் அவர் நம்ம மாப்பிள்ளைங்க” என்றார் வேணி பாவமாய்.

“அந்த ஒரு காரணத்துக்காகத் தான் பல்லைக் கடிச்சுகிட்டு பொறுமையா இருக்கேன். ஆனா தாரா என்ன முடிவு எடுக்குறாளோ அது தான் என் முடிவு” என்றார் பூமி உறுதியாக.

“எங்கிட்டோ பேசி முடிச்சு ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்தா சரித்தான்” என்ற வேணியின் வேண்டுதலும் அதுவாகத் தான் இருந்தது.

அறைக்குள் சென்றவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மனையாளின் அருகில் படுத்துக் கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ரொம்ப அழகா இருக்க யுகா” என்று அவள் கன்னத்தில் புரண்டு விளையாடிக் கொண்டிருந்த முடியை விலக்கியவன், அதே கன்னத்தில் முத்தமிட, பஞ்சு பொதியாய் இருந்தவளின் கன்னத்தை விட்டு அவனால் இதழ்களை எடுக்கவே முடியவில்லை.

மெல்ல அவள் இடையில் கையிட்டு அணைத்தவன் அவள் அருகிலேயே உறங்கிப் போனான். நீண்ட வருடங்களுக்குப் பிறகான நிம்மதியான உறக்கம் அவனுக்கு.

காலையில் அவள் வைத்திருந்த அலார சத்தத்தில் அவளுக்கு முன்பாகவே விழித்தவன், நிதர்சனம் உரைக்கவும் சட்டென்று எழுந்து வெளியே வந்து வந்து விட்டான். யுகாவிற்கோ கண்களைத் திறக்கவே முடியவில்லை. ஏதோ கனவு உலகத்தில் இருந்து எழுபவளை போல் எழுந்தவள் அலாரத்தை நிறுத்திய பிறகு தான் ஏதோ வித்யாசத்தை உணர்ந்தாள். பக்கத்து தலையணையில் இருந்து வந்த பெர்ப்யூம் ஸ்மெல் அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருக்க, குழம்பிப் போனாள். அதே குழப்பத்துடனேயே எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தவளை வரவேற்றது என்னவோ நெய் வாசனை தான். நெய் வாசனையில் பெர்பியூம் வாசனை பின்னால் சென்றது.

“என்ன சொல்லுங்க டாடி, உங்க பைனாப்பிள் கேசரிக்கு நான் அடிமை”  என்றபடி கேசரியை சாப்பிட்டுக் கொண்டிருக்க, வேணியும் பூமிநாதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னாச்சு? ஏன் ரெண்டு பேரும் இப்படி முழிக்கிறிங்க?” என்றாள்.

“அது ஒண்ணுமில்லடா..! நல்லா தூங்குனியா தாரா” என்றார் வேணி.

“ஆமாம்மா! அடிச்சு போட்ட மாதிரி அப்படி ஒரு தூக்கம்” என்றவளைப் பார்த்து பல்லைக் கடித்தார் வேணி.

“இப்ப மட்டுமா அப்படி தூங்குற? எப்பவும் அப்படித்தான. தூக்கத்துல இருக்கும் போது இடி விழுந்தாக் கூட தெரியாதே உனக்கு” என்றார் வேணி.

“இன்னைக்கு என்னாச்சு உங்களுக்கு? டென்ஷனா இருக்குற மாதிரி இருக்கீங்க?” என்றாள்.

“இருபத்தி எட்டு வயசு முடிஞ்சு போச்சு. இன்னும் சின்னப் புள்ளைன்னு நினைப்பா உனக்கு. என்ன தான் முடிவு பண்ணியிருக்க தாரா உன் வாழ்க்கையைப் பத்தி” என்றார் வேணி.

சாப்பிட்டுக் கொண்டிருந்த கேசரியை அப்படியே வைத்தவள்,

“என்னைய காலைலையே மூட் ஆப் பண்ணாதிங்க. என் வாழ்க்கையை பத்தி முடிவு பண்றதுக்கு ஒண்ணுமில்லை” என்று கோபமாய் சொன்னவள் அறைக்குள் செல்ல,

“தாரா சாப்பிட்டு போடா” என்றார் பூமி.

“அம்மாக்கு குடுங்கப்பா. எனக்கு நிறைஞ்சு போய்டுச்சு” என்றபடி சென்றவளை ஆதங்கத்துடன் பார்த்திருந்தார் வேணி.

“என்ன வேணி இதெல்லாம்?” என்றார்.

“ஆமா எதுக்கெடுத்தாலும் என்னையவே சொல்லுங்க. என்னோட கவலை எனக்குத் தான தெரியும். நம்ம ரெண்டு பேருக்கும் வயசு திரும்புதா இப்போ. நாளைக்கே நமக்கு  ஏதாவது ஆகிட்டா அவளோட நிலைமையை யோசிச்சு பார்த்திங்களா? அவ இப்படி தனி மரமா நிக்கிறதைப் பார்க்கத் தான் வரம் இருந்து தவம் இருந்து பெத்தோமா?” என்ற தாயின் குரல் அறைக்குள் இருந்த தாராவிற்கும் கேட்டுக் கொண்டு தான் இருந்தது.

தாய் எடுத்து வைத்திருந்த மெரூன் கலர் லினன் காட்டன் புடவையை அணிந்து, ஹாஸ்பிட்டல் செல்ல தயாராகி வந்த மகளைக் கண்டு வாயை மூடிக் கொண்டார்.

“இந்த சேரி எப்போ எடுத்திங்கம்மா. சூப்பரா இருக்கு. எனக்கு எடுத்த ஞாபகமே இல்லையே?” என்றவளை பதட்டத்துடன் பார்த்தவர்,

“ஆங்..அது நானும் அப்பாவும் போனப்போ எடுத்தது தாரா” என்றார்.

“அழகா இருக்கும்மா” என்றவள்,

“ஓவரா கவலைப் பட்டு உடம்பைக் கெடுத்துக்காம சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு டைம் ஆச்சு” என்றபடி கிளம்பிவிட்டாள்.

ஹாஸ்பிட்டல் வந்தவளுக்கு அடுத்தடுத்து வேலைகள் இருக்க, அதில் பிசியாகிப் போனாள். காலையில் சரியாக சாப்பிடாமல் வந்ததால் தலைவலி வேறு ஒரு பக்கம் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது. கேண்டீனில் சென்று ஒரு காபி குடித்தால் தேவலாம் போல் இருக்க, வெளியே வந்தவளின் கண்ணில் பட்டார் சந்தான லட்சுமி. ஓய்ந்து போய் அமர்ந்திருந்தவரை கண்டும் காணாமல் போக முடியவில்லை அவளால்.

சற்று தயக்கத்துடன் அவர் அருகில் சென்றவள்,

“நீங்க எப்படி பாட்டி இங்க? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்றாள்.

தாராவைப் பார்த்தவர் சந்தோஷத்தில் எழுந்து விட்டார்.

“தாரா நீ எப்படிமா இருக்க? எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பார்த்து” என்றவரின் குரல் நலிந்து ஒலித்தது.

“என்னாச்சு உங்களுக்கு? முன்ன பார்த்ததுக்கு இப்போ ஆளே மாறிப் போய்ட்டிங்க” என்றாள்.

“வயசாகுதுல்ல தாரா. உடம்பும் படுத்தி எடுக்குது” என்றவர்,

“ஆமா நீ எங்க இங்க?” என்றார்.

“நான் இங்கதான் வொர்க் பண்றேன் பாட்டி. இங்க ஜாயின் பண்ணி ரெண்டு நாள் தான் ஆகுது” என்றாள்.

சந்தான லட்சுமி கண்ணை விரித்துப் பார்க்க,

“என்னாச்சு ஏன் அப்படி பாக்குறிங்க?” என்றாள் புரியாமல்.

“அது..ஒண்ணுமில்லடா” என்றவரை அமர வைத்தவள்,

“யார் கூட வந்திருக்கிங்க பாட்டி?” என்றாள்.

“என் கூடத்தான் வந்திருக்காங்க டாக்டர்” என்ற அகனின் கணீர் குரல் பின்னால் கேட்க, அந்த குரலில் அதிர்ந்து திகைத்து நின்றாள்.