அத்தியாயம் 22 :

அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே வேகமாய் கீழே இறங்கி வந்தவள், அகனை வரவிடாமல் தடுப்பதற்காக தோட்டத்திற்கு சென்றிருந்தாள். அவள் வருவதற்கும் அகன் போன் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.

“பேசி முடிச்சாச்சா அகன்?” என்றாள்.

“ஜஸ்ட் நவ்..” என்றவன்,

“உன்னோட என்ட்ரன்ஸ் ரிசல்ட்ஸ் எப்போ?” என்றான்.

“எதுக்காக கேட்குறிங்க? ஒன் ஆர் டூ டேய்ஸ்ல வந்துடும்” என்றாள்.

“மெல்போர்ன் யுனிவர்சிட்டில நீ எம்டி பண்ணலாமே தாரா. ஒரு ஆன்லைன் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதணும். உன்னோட பாஸ்போர்ட் காப்பி, யூஜி செர்டிபிகேட்ஸ் காப்பி வேணும். சில பார்மாலிட்டிஸ் இருக்கு.தென் அங்க போய் ஒரு எக்ஸாம் எழுதணும்” என்றான் மொபைலைப் பார்த்தபடி.

“நான் எப்போ ஆஸ்திரேலியா வரேன்னு சொன்னேன் அகன்?நானெல்லாம் மெரிட்ல எம்பிபிஎஸ் படிச்ச ஆளு. மெல்போர்ன் யுனிவர்சிட்டில படிக்கிற அளவுக்கு அப்பாட்டக்கர் இல்லை.செலவு பண்ண என் டாடியாலையும் முடியாது. ஆடு மேய்க்கிற உன்னாலயும் முடியாது. நான் எதுவா இருந்தாலும் இங்கயே பார்த்துக்கிறேன்” என்றாள்.

“நான் ஆடு தான் மேய்க்கிறேன்னு கன்பார்மே பண்ணிட்ட போல?” என்றான்.

“அது சும்மா ஒரு புளோக்கு சொல்றது தான். எப்படியும் நீ ஒரு நல்ல ஐடி ஜாப்ல இருப்பன்னு தான் நினைக்கிறேன். நீதான் எப்ப பார்த்தாலும் அந்த லேப்டாப் பொட்டியவே தட்டிட்டு இருக்கியே?” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.

“லுக் தாரா. எம்டி அங்க பண்ணா நல்லா இருக்கும். ஜஸ்ட் இது என்னோட சஜஷன் தான். அதுக்குமேல உன்னோட விருப்பம்” என்றவன் நகரப் போக,

“எங்க போறீங்க அகன்?” என்றவள் சட்டென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“ஏன் என்னாச்சு?” என்றவனுக்கு வீட்டினுள் இருந்து வரும் சத்தம் துல்லியமாய் கேட்டது.

“கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே?” என்றாள்.

“என்ன பிராப்ளம் அங்க?” என்றான் எடுத்த எடுப்பில்.

“பெருசா ஒண்ணுமில்லை, ஜஸ்ட் கோவிலுக்கு போறதைப் பத்தி தான் பேசிட்டு இருக்காங்க” என்றவளின் முகத்தைப் பார்த்தவன்,

“அதான் நீயே சொல்லிட்டியே ஒன்னும் பெரிய பிராப்ளம் இல்லைன்னு. அப்பறம் ஏன் இங்க இருந்து பேசணும். எது பேசுறதா இருந்தாலும் ரூம்க்கு போயே பேசலாம், வா” என்றபடி அவளையும் இழுத்துக் கொண்டு செல்ல, அவளுக்குத்தான் பதட்டமாக இருந்தது.

“அம்மா கொஞ்ச நேரம் அமைதியா தான் இருங்களேன்” என்ற தயாளனுக்கு பேச்சு வளர வளர பதட்டம் தான் அதிகரித்தது.

“அகல்யா அக்கா இறந்து இத்தனை வருஷம் கழிச்சும் உங்க அம்மா இந்த பேச்சு பேசுறாங்கன்னா, அக்கா உயிரோட இருக்கும் போது என்ன பேச்சு பேசியிருக்க மாட்டாங்க?” என்றார் புவியரசு.

“இப்போ இந்த பேச்செல்லாம் தேவையா புவியரசு. முடிஞ்சதைப் பத்தி பேசி என்னாகப் போகுது. கார்த்தி அங்க வரலைன்னா என்ன? எங்க இருந்தாலும் நிம்மதியா இருந்தா அதுவே போதும் எனக்கு” என்றார் தயாளன்.

“நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு தயாளா” என்ற பரமேஸ்வரி,

“அக்கா அக்கான்னு உருகுனது எல்லாம் போதும் தம்பி. அவ நல்ல பொண்டாட்டியும் இல்ல,என் பேரனுகளுக்கு நல்ல அம்மாவும் இல்ல. தயாளனா இருக்கப் போய் நடந்த எதையும் வெளிய சொல்லாம, அவ பேர் கெட்டுப் போய்டக் கூடாதுன்னு எல்லாத்தையும் மூடி மறைச்சுட்டான்” என்ற பரமேஸ்வரியை கண்டு மற்றவர்கள் அதிர்ந்தார்களோ இல்லையோ தயாளன் தான் ஏகத்திற்கும் அதிர்ந்தார்.

அகல்யா உயிருடன் இருக்கும் போதே என்றோ ஒரு நாள் குடிபோதையில் தாயிடம் உளறியது எல்லாம் கண் முன் வந்து போனது.

“பரமேஸ்வரி” என்ற சந்தான லட்சுமிக்கு அப்படி ஒரு கோபம். தன் மகளை பற்றி அதுவும் உயிருடன் இல்லாத ஒரு ஆத்மாவை இப்படி பேசுவதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“எதுக்கு கத்துறிங்க சம்மந்தி? உண்மையைத் தானே சொன்னேன். என் பையன் கண்ணீர் விட்டு அழுததை என்னால மறக்க முடியுமா என்ன? அவ  புருஷன் புள்ளையை சரியா கவனிச்சு வீட்டுக்கு அடங்கி இருந்திருந்தா, அன்னைக்கே என் பேரனுக்கு அந்த நிலைமை வந்திருக்காது. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பெத்த மகன் மாடியில இருந்து விழுகுற வரைக்கும் கவனிக்காம இருந்திருப்பாளா? இல்ல, பெத்த புள்ள சாகப் பொழைக்க கிடைக்கும் போது தூக்கு மாட்டித் தான் தொங்குவாளா? சித்த பிரம்மை பிடிச்சவன் மாதிரி அன்னைக்கு பார்த்தவன் தான் என் பேரன், அதுக்கப்பறம் ஏதோ எங்களைப் பார்த்தா பேயைப் பார்த்த மாதிரி விலகிப் போறான். இதுக்கெல்லாம் காரணம் உங்க மக தான?

இன்னைக்கு வந்து எம்பேரன் எம்பேரன்னு நீங்க உரிமை கொண்டாடினா சரியா போய்டுமா? அங்க எங்க சொந்த பந்தத்துக்கு எல்லாம் யார் பதில் சொல்றது? கார்த்தி என் பேரன். அவன் எங்க வீட்டு வாரிசு. அவனும் அவன் பொண்டாட்டியும் அங்க வந்தாகனும்” என்றார் மூச்சு விடாமல்.

தாயின் பேச்சில் அதிர்ந்திருந்த சுகந்தி, “அகல்யா அத்தாச்சியைப் பத்தி தப்பா பேசாதிங்கம்மா. அவங்க பத்திரமாத்து தங்கம். தேடுனாலும் அப்படி ஒரு பொண்டாட்டி எல்லாம் அண்ணனுக்கு கிடைச்சிருக்க வாய்ப்பே இல்லை. இத்தனை நாள் விட்டுட்டு இப்போ என்ன திடீர்ன்னு என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க?” என்று சத்தம் போட்டார்.

“அவ உயிரோட இருக்கும் போதே அவ நடந்துக்குற லட்சணம் தாங்க முடியாம ஒரு நாள் உங்கண்ணன் குடிச்சுட்டு வந்து அந்த அழு அழுதான்டி” என்றார் பரமேஸ்வரி.

அங்கு நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அகனுக்கு கோபம் எல்லை மீறத் துடித்துக் கொண்டிருந்தது. தாரவோ பயத்துடன் அவன் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு நிற்க, தன்னை அடக்க வெகுவாய் சிரமப் பட்டான் அகன்.

“உங்க அம்மா என்ன சொல்றாங்க தயாளா?” என்றார் லட்சுமி கோபமாக.

“அவங்க ஏதோ கோபத்துல பேசுறாங்க அத்தை. நீங்க டென்ஷன் ஆகாதிங்க” என்றவர்,

“அம்மா பழசைப் பேசி என்னாகப் போகுது. இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத பேச்செல்லாம்?” என்று  தாயை அடக்கிக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்த அலங்கார ஜாடியை எடுத்து தந்தையை நோக்கி எறிந்திருந்தான் அகன்.

அகனின் செயலை நொடியில் சுதாரித்த நகுலன் தந்தையை வேகமாய் இழுத்து விட, அப்படியும் அவர் நெற்றியை ஒரு புறமாய் பதம் பார்த்திருந்தது.

“கார்த்தி என்னடா பண்ற?” என்றான் நகுலன் கோபமாய். தயாளன் நெற்றியில் இருந்து ரத்தம் வழியத் தொடங்க, அகனை அங்கே பார்த்த தயாளனின் இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது.

“நகுலா விடு, அவன் பிரச்சனையைப் பத்தி தான் நமக்குத் தெரியுமே” என்று அப்போதும் தயாளன் பிரச்சனையை மூடி மறைக்கப் பார்க்க, அகனுக்கு அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் எல்லையைக் கடந்திருந்தது.

“அகன்” என்று அவனை இறுக்கிப் பிடித்த தாராவை ஒரு நொடியில் உதறியிருந்தான். அவனின் வேகமும் கோபமும் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது.

“கார்த்தி பைத்தியம் மாதிரி நடந்துக்காத” என்றான் நகுலன்.

“நான் பைத்தியம் தான் யார் இல்லைன்னு சொன்னது? நான் சொன்னேனா  நகுலா நான் பைத்தியம் இல்லைன்னு” என்று அவன் கத்திய கத்தலில் அனைவரும் மிரண்டு போய் நிற்க, பாய்ந்து தயாளனின் சட்டையைப் பிடித்தவன் அவரை ஓங்கி அறைந்திருந்தான். அவனின் வேகத்தில் தயாளன் தூரப் போய் விழுந்திருந்தார்.