“அகனுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் பாட்டி. குலதெய்வ கோவிலுக்கு போறதைப் பத்தி பிரச்சனை இல்லை. அங்க சிலர் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கணுமே” என்றாள்.

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுடா” என்றார் லட்சுமி.

அவள் அகனைப் பார்க்க,

“தாரா வீடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களை மட்டும் செய்யுங்க பாட்டி. வேற எங்கயும் என்னால வர முடியாது” என்றான் அகன்.

“பொள்ளாச்சி வீட்டுக்கு எல்லாம் போக வேண்டாம் கார்த்தி. கோவிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடலாம். நகுலனுக்கும் லீவ் முடியப் போகுதுன்னு சொன்னான். அதுக்குள்ள இதையெல்லாம் முடிச்சுட்டா நல்லா இருக்குமேன்னு பார்த்தேன்” என்றார் லட்சுமி.

அவர் பேசும் போதே கோபமாய் எழுந்தவன்,

“இப்பவும் சொல்றேன் பாட்டி, அந்த வீடு சம்பந்தப்பட்ட எந்த விஷயத்துலையும் என்னை சம்பந்தப் படுத்தாதிங்க. அது எனக்கு சுத்தமா பிடிக்கலை” என்றான் கோபத்துடன்.

“அத்தை அதான் கார்த்திக்கு அதைப் பத்தி பேசுனாலே கோபம் வருதுன்னா அதையே ஏன் திரும்ப திரும்ப நாம பேசணும். கார்த்தி எனக்கும் புள்ளை தான். நம்ம வீட்டு குலதெய்வ கோவிலுக்கு போனா ஆகாதா?” என்றார் தாமரை முதன் முறையாக கோபமாய்.

“புள்ளை மாதிரி தானக்கா, புள்ளை இல்லையே. என்ன இருந்தாலும் இது மாமன் மச்சினன் வீடு” என்றார் வசந்தி.

“இதுக்குத்தான் பாட்டி நான் சொன்னேன். இன்னும் கோவிலுக்கே போகலை. இங்கயே பஞ்சாயத்தை ஆரம்பிச்சுட்டாங்க. வசந்தி சித்திக்கு வாங்கினது இன்னும் பத்தலை போல” என்றாள் நக்கலுடன்.

“நான் சொல்றது ஒன்னும் தப்பில்லையே. சொன்னாலும் சொல்லாட்டியும் கார்த்திக்கு இது மாமன் மச்சினன் வீடு தான். சில விஷயத்தை ஏத்துக்கிறதுக்கு கஷ்ட்டமா இருந்தாலும் அது தான் உண்மை” என்றார் வசந்தி.

“யார் இல்லைன்னு சொன்னா?” என்றவள் அகனிடம் திரும்பி,

“உங்களுக்கு என் கூட வந்து எங்க வீட்ல இருக்குறதுல எந்த பிரச்சனையும் இல்லையே அகன். ஐ மீன்  ஆஸ்திரேலியா கிளம்புற வரைக்கும்” என்றாள் தெளிவாய்.

“தாரா என்ன பேசிட்டு இருக்க நீ? கார்த்தி ஏன் அங்க வந்து இருக்கணும்? அவன் என் பேரன். அவனுக்கு அங்க வசதி பத்தாது” என்ற லட்சுமி சட்டென்று வாயை மூடிக் கொள்ள,

“அகனுக்கு தேவையானதை செஞ்சு குடுக்குற அளவுக்கு தான் இருக்குறோம் பாட்டி. அந்த அளவுக்கு மோசமா இல்லை. பேரனுக்காக இவ்வளவு யோசிக்கிற நீங்க, உங்க மருமகளை இத்தனை நாள் பேச விட்டு வேடிக்கை பார்த்திருக்க பாட்டிங்க. மகன் மாதிரின்னு சொல்ற தாமரை சித்தியும் இப்படி அமைதியா இருக்க மாட்டாங்க. உங்களுக்கெல்லாம் புரியுதா புரியலையா? அகன் மேல பாசம் இருக்குற மாதிரி நீங்க எல்லாருமே நடிக்கிறிங்க. யாருக்குமே அவர் மேல உண்மையான பாசமோ அக்கறையோ இல்லை” என்றாள்.

“அப்படி சொல்லாத தாரா. என் பேரன் தான் எனக்கு எல்லாமே” என்றார் லட்சுமி கண் கலங்க.

“அப்பட்டமான பொய்..! உங்களுக்கு செத்துப் போன உங்க மகளோட இடத்தை நிரப்ப ஒரு ஆள் வேணும். அது உங்க மக மாதிரியே இருக்குற அகனை வச்சு உங்க துக்கத்தை துடைச்சுகிட்டிங்க. இதோ தாமரை சித்திக்கு பெறாத ஒரு பிள்ளையா அவர் வேணும். ஆனா அகனுக்கு என்ன வேணும்னு உங்க யாருக்குமே கவலையில்லை” என்றவள் மீண்டும் அவனிடம் திரும்பியிருந்தாள்.

“உங்களுக்கு என்கூட வர இஷ்ட்டமா இல்லையா அகன். இல்லை அது உங்களுக்கு கௌரவ குறைச்சலா நீங்க நினைச்சா நாம வேற வீடு பார்த்துக்கலாம்” என்றவளைப் பார்த்தவனின் கண்களில் கூர்மை ஏறியிருந்தது.

அகன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

“தாராம்மா நான் மனசுல எதையும் வச்சுகிட்டு அப்படி பேசலமா” என்றார் லட்சுமி.

“பரவாயில்லை பாட்டி” என்றவள் வசந்தியை முறைத்து விட்டு சென்றாள்.

அறைக்குள் வந்தவளை பிடித்துக் கொண்டவன்,

“என்னாச்சு தாரா? ஏன் இவ்வளவு கோபம்? ஆர் யு ஓகே? அங்கிளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்றான் நிதானமாய்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அகன். கொஞ்சம் ஹெட் ஏக்கா இருக்கு அவ்வளவு தான்” என்றாள்.

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு தாரா. நான் ஒரு முக்கியமான கால் பேசணும். பேசிட்டு வரேன்” என்று நகரப் போனவனை தடுத்தது தாராவின் குரல்.

“அகன்” என்றவள் அவனைப் போலவே கைகளை நீட்ட, அவனின் பார்வையோ அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தது.

‘இவன் என்ன லேசர் பார்வை பார்க்குறான்’ என்று எண்ணியவள் அவனை முறைக்க,

“நீதான உன்னைக் கட்டிப் பிடிக்கக் கூடாதுன்னு சொன்ன. அதான் இங்கயே இருக்கேன்” என்றான் நிதானமாய்.

“யப்பா சாமி தெரியாம சொல்லிட்டேன். நீ கட்டியும் பிடிக்க வேணாம், கழுத்தையும் பிடிக்க வேணாம்” என்றவள் கடுப்புடன் கையை இழுத்துக் கொள்ள, அவள் அருகில் வந்து மென்மையாய் அணைத்துக் கொண்டான் அகன்.

“ஆர் யு ஓகே யுகா. ஐ திங்க் நீ ரெஸ்ட்லெசா பீல் பண்றேன்னு நினைக்கிறேன்” என்றான் அகன். அணைப்பு மட்டுமல்ல, அவன் வார்த்தைகளிலும் அத்தனை மென்மை. அந்த மென்மையின் இதம் அவளுக்குள் சுகந்தமாய் பரவியது.

“அகன் நல்லா இருக்கு” என்றாள் தாரா.

“எது நான் ஹக் பண்ணியிருக்கிறதா?” என்றான் சிரிப்புடன்.

“இல்ல, நீ போட்ருக்க பெர்ப்யூம்  ஸ்மெல் மைல்டா நல்லா இருக்கு. என்ன பிராண்ட்?”  என்றாள் தலையை நிமிர்த்தி. அவன் அவளை முறைக்க,

“நிஜமாவே நல்லா இருக்கு பாஸ்” என்றாள்.

“மேடம்க்கு தலைவலி எல்லாம் போயிடுச்சுன்னா, கொஞ்சம் நகரலாம். எனக்கு முக்கியமான கால் பேசணும்” என்றான்.

கடுப்புடன் அவனை விட்டு விலகியவள்,

“போங்க சார், ரொம்ப முக்கியமான கால்னு வேற சொல்றிங்க. அப்பாயின்மென்ட் கேன்சல் ஆகிடப் போகுது” என்று நக்கலாய் உரைக்க, சிறு சிரிப்புடன் நகர்ந்து விட்டான் அகன்.

“மங்கூஸ் மண்டையன்? ஆஸ்திரேலிய அம்பானி மாதிரி பில்டப் குடுக்குறான். ஆட்டுப் பண்ணைக்கு எத்தனை ஆடு வாங்கனும்னு பேசுவானா இருக்கும்” என்று புலம்பிக் கொண்டிருக்க, திடிரென்று அவளைப் பின்னிருந்து அணைத்தவன்,

“இல்லையா பின்ன..? முன்னாடி நான் மட்டும் தான் மேய்ச்சேன். அதான் ஆடு கொஞ்சமா வாங்கியிருந்தேன். இப்போத்தான் என் வொயிப்பும் இருக்காளே? அப்போ இன்னும் ஆடு சேர்த்து வாங்க வேண்டாமா? எப்படியும் நீயும் என் கூட ஆடு தான மேய்க்கப் போற? அதனால பேசிட்டு வந்திடுறேன்” என்றவள் அவள் கன்னத்தில் முத்தமிட்டு செல்ல,

“இப்ப இவன் என்ன பண்ணிட்டு போனான்? என் ஹார்மோன்ஸ கந்தரகோலம் பண்ணாம விட மாட்டான் போலயே?” என்று எண்ணியவளுக்கு அந்த உணர்விலிருந்து வெளி வரவே நிமிடம் பிடித்தது.

வெளியே தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தவனை பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் தாரா. மருத்துவர் கூறிய அனைத்தையும் மீண்டும் ஒரு முறை அவள்  யோசித்துப் பார்க்க, எங்கோ எதுவுவோ அவளுக்கு புரிபடாததைப் போன்ற எண்ணம்.

“என்னமோ ஒன்னு மிஸ் ஆகுதே?” என்று தலையை தட்டியபடி பூமிநாதன் சொன்னதையும் சேர்த்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘அகன் மேல ரொம்ப பாசமா இருந்திருக்காங்க. அப்போ அகன் அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது எப்படி அவங்க இப்படி பண்ணியிருக்க முடியும்? ஒருவேளை அகன் உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா அந்த வேதனை தாங்காம அவங்க சூசைட் பண்ணியிருக்கிறதுல ஞாயம் இருக்கு. ஆனா, பெத்த பையன் குத்துயிரும் குல உயிருமா இருக்குறப்போ, பையனை எப்படியாவது மீட்டுக் கொண்டு வந்திடனும்னு தான போராடியிருப்பாங்க. ஆனா அகல்யா ஆன்ட்டி ஏன் அப்படி பண்ணனும்? எப்படி பார்த்தாலும் லாஜிக் இடிக்குதே?

கண்டிப்பா அவங்க இந்த பிரச்சனைக்காக சூசைட் பண்ணியிருக்க வாய்ப்பில்லை. வேற ஏதோ பிரச்சனை இருந்திருக்கு. தயாளன் அங்கிளுக்கும் அதுல ஏதோ தொடர்பு இருக்கணும். இல்லைன்னா, அவரை அகன் இந்த அளவுக்கு வெறுக்க வேண்டிய காரணம் இல்லையே? பிரச்சனை இல்லாம இருந்தா அம்மா இறப்புக்கு அப்பறம் அப்பா கூடத்தான் அதிகமா அட்டாச்  ஆகியிருக்கணும். ஒன்னும் புரியலை. ஆனா ஏதோ ஒன்னு சரியா இல்லை. அகன் வாயைத் திறந்து சொல்றதுக்கு வாய்ப்பில்லை. எப்படி கண்டு பிடிக்கிறது?’ என்று தனக்குத் தானே யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘ஊசி மருந்து மாத்திரைன்னு யோசிச்ச என்னை, இப்படி சிஐடி சகுந்தலா ரேஞ்சுக்கு யோசிக்க விட்டுட்டிங்களேடா’ என்று நினைத்துக் கொண்டாள்.

அங்கே பரமேஸ்வரியோ தயாளனிடம் கத்திக் கொண்டிருந்தார்.

“அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே. நாம கிளம்பலாம் தயாளா? கார்த்தி பய அவன் பொண்டாட்டியை கூட்டிகிட்டு நம்ம வீட்டுக்கு வர்ற மாதிரித் தெரியலை. இனி இங்க நமக்கென்ன வேலை?” என்றார்.

“புரியாம பேசாதிங்கம்மா. நாளைக்கு மறுவீட்டு அழைப்பு இருக்கு. குலதெய்வ கோவில் பொங்கல் இருக்கு. இதெல்லாம் முடிக்காம எப்படி கிளம்ப முடியும். பார்க்கப் போனா நம்ம வீட்ல இருந்து தான் எல்லாம் பண்ணியிருக்கணும். கார்த்தி தான் பிடிவாதமா வர மாட்டேங்குறானே? என்ன  பண்ண முடியும்? அவனுக்கு இருக்குற பிரச்சனைக்கு இந்த மட்டும் சம்மதிச்சானேன்னு சந்தோஷப் பட வேண்டியது தான்” என்றார் சுகந்தி.

“நல்லா சொல்லு சுகந்தி. நாங்க என்னமோ கார்த்தியை வீம்புக்கு உங்க வீட்டுக்கு அனுப்பாத மாதிரி பேசிட்டு இருக்காங்க உங்க அம்மா” என்றார் லட்சுமி.

“நீங்க பார்த்து சொன்னா அவன் கண்டிப்பா கேட்பான். ஆனா நீங்கதான் அவனை உங்க கைப்பிடில வச்சிருக்கிங்களே?” என்றார் பரமேஸ்வரி.

“என்னம்மா புரியாம பேசுறிங்க? நாங்க அப்படி நினைப்போமா? கார்த்தி வந்தா தாராளமா கூட்டிட்டு போங்க” என்றார் தாமரை.

“போன மகராசி போய் சேர்ந்துட்டா. எதுக்கு அப்படி சாகனும்? அவளுக்கு என்ன குறை இருந்தது? என் பேரனையும் இப்படி ஆக்கிவிட்டுட்டு போய்ட்டா. அவன் என்னமோ எங்களை விரோதி மாதிரி பார்க்குறான். அப்ப இருந்து உங்க மகளுக்கு என்னை ஆகாது. அதான் அதை சொல்லியே புள்ளை வளர்த்திருப்பா போல. என்கிட்ட ஒட்டவே மாட்டேங்குறான். நகுலனை நாங்க பார்த்து வளர்த்ததால நல்ல விதமா வளர்ந்திருக்கான். உங்க மக பையனை  வளர்த்த லட்சணம் தான் இது. இப்படி வளர்ந்து நிக்கிறான். யாரையும் மதிக்கிறது இல்லை. அப்படி என்ன நாங்க பண்ணிட்டோம்” என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்தார் பரமேஸ்வரி.

“வார்த்தையை பார்த்து பேசுங்க பரமேஸ்வரி. உயிரோட இல்லாத என் பொண்ணைப் பத்தி பேசுற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க” என்றார் லட்சுமி.

“நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். உள்ளதைத் தான சொன்னேன்.நீங்க என்ன செய்விங்களோ தெரியாது, கார்த்தி அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு எங்க குல தெய்வ கோயிலுக்கு வந்தாகணும்” என்றார் பரமேஸ்வரி.

“அம்மா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. யார்கிட்ட என்ன பேசுறிங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறிங்களா?” என்று அதட்டினார் தயாளன்.

“எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன் தயாளா. காசு பணம் இருந்தா இவங்க சொல்றதையே கேட்கனும்னு என்ன அவசியம் இருக்கு? என் பேரனோட இந்த நிலைமைக்கு காரணமே இவங்க மகளும் இவங்களும் தான்” என்றார் கோபமாய்.

“அத்தை சும்மா எங்க அக்காவைப் பத்தி பேசுற வேலை வச்சுக்காதிங்க” என்ற சேதுவிற்கும் கோபம் வந்திருந்தது.

“அத்தை கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்று ரேவதி சொல்ல,

“உனக்கு விட்ட வேலை என்னமோ அதை மட்டும் பார் ரேவதி. வசதி இருக்குன்னு இவங்க பொண்ணைக் கட்டி என்னை மதிக்காததால தான், அவ போனதுக்கு அப்பறம் வசதி வாய்ப்பு இல்லைன்னாலும் குடும்பத்துக்கு அடங்கி இருப்பன்னு உன்னை கட்டி வச்சேன் என் மகனுக்கு. வர வர உனக்கும் வாய் நீளுது” என்றார் பரமேஸ்வரி.

“ஏன் ஒண்ணா இருக்கும் போது , நீங்க எங்க அக்காவைப் பண்ண கொடுமையெல்லாம் தெரியாதா எங்களுக்கு? எங்க அக்காவுக்காக மட்டும் தான் அமைதியா இருந்தோம். அக்கா போனதுக்கு அப்பறம் அவளோட ரெண்டு பசங்களுக்காகக் தான் இப்போ வரைக்கும் அமைதியா இருக்கோம்” என்றார் சேது.

“போனதெல்லாம் எதுக்கு மாமா? இப்ப ஏன் தேவையில்லாததைப் பேசி பிரச்சனையை இழுக்கணும், அமைதியா இருங்க” என்று நகுலன் அனைவரையும் சமாதானம் செய்திருந்தான்.

பேச்சு சத்தத்தில் வெளியே வந்து நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த தாராவின் பயமெல்லாம் தோட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் அகன் இப்போது வந்துவிடக் கூடாது என்பது தான்.