பழனியில் அந்த புகழ் பெற்ற மருத்துவமனையின்,மனநல மருத்துவரின் முன் அமர்ந்திருந்தாள் தாரா. அகனை விட அவளுக்குத் தான் ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டது. அகனின் பிரச்சனைகளை முழுமையாக கூறியவள், மருத்துவரின் முகம் பார்க்க..
“பேஷன்ட் உங்க கூட வரலையா?” என்றார்.
“நோ டாக்டர்,இன்பேக்ட் நான் வந்ததே தெரியாது” என்றாள்.
“பேஷன்ட்க்கு தனக்கு என்ன பிரச்சனை இருக்குன்னு தெளிவா தெரியுதுன்னு சொல்றிங்க. தான் எப்படி ரியாக்ட் பண்றோம்ன்றதும் பேஷன்ட்டுக்கு தெரியுதுன்னா, கண்டிப்பா நார்மல் பீப்பிள் இப்படி இருக்க வாய்ப்பில்லை. ஸ்ட்ராங் மைன்ட் செட் அன்ட் மென்டாலிட்டி இருக்குறவங்களால மட்டும் தான் இதை ஹேண்டில் பண்ண முடியும். அவங்க நினைச்சா ஈசியா ஓவர் கம் பண்ணி வந்துட முடியும். அதுக்கு பிராப்பரான ட்ரீட்மென்ட் எடுக்கணும்” என்றார் மருத்துவர்.
“ட்ரீட்மென்ட் எடுக்க பேஷன்ட் சம்மதிக்கலை டாக்டர். நான் உங்ககிட்ட சொன்ன மாதிரி தான்,தனக்கு சரியாகிட்டா தன் அம்மாவையே இழக்குற மாதிரின்னு பீல் பண்றாங்க. பட் அவங்க பாதிக்கப்பட்டதே அவங்க மதர் டெத்ல இருந்து தான்” என்றாள்.
“இது இன்னும் டேஞ்சர். அவங்க அதுக்கு அடிக்ட் ஆகிட்டாங்கன்னு அர்த்தம். ஸ்டார்டிங் ஸ்டேஜ்லையே இதை குணப்படுத்தியிருக்கணும். இப்போ கொஞ்சம் ரிஸ்க் தான். ரிஸ்க் என்னன்னு பேஷன்ட்க்கும் தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கு” என்றார் மருத்துவர்.
“ ஐ நீட் அ சொல்யூஷன் டாக்டர். பேஷன்ட்டுக்கு தெரியாம அவரை கியூர் பண்ண முடியாதா? இன்பேக்ட் எப்போ எப்படி ரியாக்ட் பண்றாருன்னு புரியவே மாட்டேங்குது. கோபமா பேசிட்டு இருக்கார், சடனா கூல் பெர்சனா மாறிடுறார். எல்லாமே சடனா மாறுது. எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியலை டாக்டர்” என்றாள் தாரா.
“லிசன் தாரா..! பைபோலார் டிசார்டர் இருக்குறவங்களுக்கு தீவிர மனச்சோர்வும் இருக்கும். அதீத உற்சாகமும் இருக்கும். இந்த ரெண்டு மனநிலையும் சடனா மாறி மாறி இருக்கும். சந்தோஷமா இருப்பாங்க. அப்படியே நொடிப் பொழுதுல சோகம் இல்லைன்னா கோபத்துக்கு மாறிடுவாங்க. அவங்களோட பீலிங்க்ஸ் எல்லாம் திடீர்னு மாறும். அவங்களுக்கு ஏற்படுற கடுமையான அதிர்ச்சி இல்லைன்னா கவலை தான் இதுக்கெல்லாம் காரணம்” என்றார் மருத்துவர்.
“இவங்களை எப்படி ஹேண்டில் பண்றது டாக்டர்” என்றாள் அவர் கூறிய அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு.
“அவங்ககிட்ட எதைப் பத்தியும் விவாதம் செய்யவே கூடாது. அவங்களோட உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்காதுன்றதை நீங்க முதல்ல புரிஞ்சுக்கனும். அவங்க எதைப் பத்தி பேசினாலும் அதை தனிப்பட்ட முறையில எடுத்துக்க கூடாது. அன்பு ஒன்னு தான் அவங்களை மெதுவா குணப்படுத்தும். மன அழுத்தம் தர்ற மாதிரியான விஷயங்களைத் தவிர்க்கணும். அமைதி, ஆரோக்கியம், ஹெல்தி லைப் ஸ்டைல் அப்பறம் தேவையான மெடிசன். இதை சரியா பாலோ பண்ணாலே ஈசியா குணப்படுத்திடலாம்” என்றார் மருத்துவர்.
“கோபத்துல தன்னைத் தானே காயப்படுத்திக்கிற அளவுக்கு நடந்துக்கிறாங்க. இதனால உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லையே?” என்றாள்.
“எஸ், அப்படித்தான் நடந்துப்பாங்க. அவங்க எந்த ஸ்டேஜ்ல இருக்காங்கன்னு பேஷன்ட்கிட்ட நான் பேசினாதான் என்னால் சொல்ல முடியும்” என்றார்.
“ஓகே டாக்டர், முடிஞ்ச அளவு இங்க கூட்டிட்டு வர ட்ரை பண்றேன் டாக்டர், தேங்க் யு” என்றவள் கிளம்ப முயற்சிக்க,
“பேஷன்ட்டுக்கு நீங்க என்ன உறவு?” என்றார் மருத்துவர்.
“ஹீ இஸ் மை ஹஸ்பண்ட் டாக்டர்” என்றாள்.
“இது இன்னும் சிம்பிள்..! உங்க லவ் அண்ட் கேர் ஒன்னு போதும். ஹீ வில் ஈசிலி ரெக்கவர் பிரம் தட் ப்ராப்ளம்” என்றார் புன்னகையுடன்.
“ஷ்யர் டாக்டர்” என்றவளின் முகத்தில் இப்போது தான் தெளிவு பிறந்திருந்தது.
வெளியே வந்த மகளைப் பார்த்த பூமிநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னாச்சுடா தாரா? எதுக்காக என்னை இன்னைக்கு செக் அப் வரணும்னு சொல்லி கூட்டிட்டு வந்த?” என்றார் புரியாமல்.
“அகனோட ப்ராப்ளம் பத்தி டாக்டர்கிட்ட கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருந்தது டாடி. அதான் இதை சாக்கா வச்சு வந்தேன்” என்றவளை கவலையாக பார்த்திருந்தார் பூமிநாதன்.
“என்னாச்சு டாடி? ஏன் அப்படி பாக்குறிங்க?” என்றாள்.
“கல்யாணம் ஆன கலையே இல்லையேடா உன் முகத்துல. அகனுக்கு உன்னை முதல்ல கேட்டப்போ ஏன் மாட்டேன்னு சொன்னேன்னு கேட்டியே இதனாலத்தான் தாரா” என்றார் கவலையாய்.
“டாடி பிளீஸ்..! இப்படி பீல் பண்ணி பேசாதிங்க. அகனுக்கு ஜஸ்ட் சின்ன பிரச்சனை தான். இன்பேக்ட் நான்தான் அதை பெருசா நினைச்சு பீல் பண்ணி அவரையும் சேர்த்து டென்ஷன் படுத்திட்டேன். நான் ஹேண்டில் பண்ணிப்பேன் டாடி” என்றாள் பொறுமையாய்.
“என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதாடா? இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு பதைபதைப்பு இருக்கத்தானே செய்யும். அதே சமயம் கார்த்தியும் தங்கமான பையன் தான். ஏதோ கால நேரம் இப்படி இப்படி ஆயிடுச்சு. இனி எல்லாம் உன் கையில தான்டா இருக்கு” என்று பூமிநாதன் பேசிக் கொண்டே வர, காரை ஓட்டிக் கொண்டிருந்தவளின் மனதில் சட்டென்று தோன்றியது விஷயம்.
“அகல்யா ஆன்ட்டி எப்படி இறந்தாங்க டாடி? கண்டிப்பா உங்களுக்குத் தெரியாம இருக்காது’ என்றாள்.
“அதை எப்படிடா மறக்க முடியும்? இருந்தாலும் அகல்யா இப்படி பண்ணியிருக்க வேண்டாம். சின்ன வயசுல கார்த்தின்னா அகல்யாவுக்கு உசுரு. மாடியில இருந்து தவறி விழுந்ததால தான் கார்த்திக்கு இந்த பிரச்சனையே வந்தது. அதைத் தாங்கிக்க முடியாம கார்த்தியை அட்மிட் பண்ணியிருந்த ஹாஸ்பிட்டல் ரூம்லயே தூக்குப் போட்டு அகல்யா இறந்துடுச்சுமா. அதைப் பார்த்த நேர்ல பார்த்த பையனுக்கு எப்படி இருந்திருக்கும். அப்ப இருந்து தான் கார்த்திக்கு இந்த பிரச்சனை இருக்குறதா லட்சுமி பெரியம்மா ஒரு தடவை சொல்லிக் கேட்டதா ஞாபகம்” என்றார் பூமிநாதன்.
அவர் சொல்ல சொல்ல கேட்ட அவளுக்குத் தான் உள்ளுக்குள் பகீரென்று இருந்தது.
“தயாளன் அங்கிள் அவர் எப்படி டாடி?” என்றாள் யோசனையுடன்.
“நான் பார்த்து கேள்விப் பட்ட வரைக்கும் நல்ல மனுஷன் தான். என்ன கொஞ்சம் கோபக்காரர்னு சொல்லுவாங்க. மத்தபடி அவங்க வீட்டு பங்க்ஷன்ல பார்த்ததோட சரிம்மா. பெருசா அவரோட எனக்கு பழக்கம் இருந்ததில்லை” என்றார் பூமிநாதன்.
தந்தை சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டவள் அமைதியாய் வர,
“என்னடா தாரா திடீர்ன்னு? அகல்யா பத்தியெல்லாம் கேட்குற?” என்றார்.
“சும்மா தான் டாடி. அகன் பத்தி எதுவுமே தெரியாதே. அதான் தெரிஞ்சுக்கலாம்னு” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
“ஆங்..! அதுவா பாட்டி, எப்பவும் சொல்றது தான் பாட்டி. ஒன்னும் பிரச்சனையில்லை. ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க” என்று பதில் சொல்லி மழுப்பியவள் ஆசுவாசமாய் அமர, அதுவரை அவளையே பார்த்திருந்த அகன்,
“அங்கிளுக்கு என்ன பிராப்ளம்?” என்றான்.
“அவர் ஒரு ஹார்ட் பேஷன்ட் அகன்” என்றாள் பட்டும் படாமல்.
“ஓகே! எந்த ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் எடுத்திங்க? செக்கப்புக்கு எத்தனை நாளைக்கு ஒரு முறை வர சொல்லியிருக்காங்க?” என்றான்.
“இங்க பழனியில இருக்குற ஹாஸ்பிட்டல் தான் அகன். மன்திலி ஒன்ஸ் தான் செக்கப். நீங்க ஏன் இதையெல்லாம் கேட்குறிங்க?” என்றாள்.
“ஏன் நான் கேட்கக் கூடாதா?” என்றான் கேள்வியாய்.
“அதைக் கேட்டு நீங்க என்ன செய்ய போறீங்க?” என்றாள்.
“என்ன தாரா இப்படி கேட்டுட்ட? நம்ம கார்த்தி” என்று லட்சுமி பாட்டி பேச வர, அகன் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டார்.
“ஏதோ சொல்ல வந்திங்க பாட்டி?” என்றாள் தாரா கேள்வியாய்.
“அது ஒண்ணுமில்லைடா. வேணி போன் பண்ணியிருந்தா. மறுவீட்டு அழைப்பு சம்பிரதாயம் எல்லாம் செய்யணுமாம். நான் கார்த்திகிட்ட கேட்டேன். உன்னை கேட்டுக்க சொன்னான். அதை முடிச்சுட்டு அப்படியே குலதெய்வக் கோவில்ல பொங்கல் வைக்கனும்னு பரமேஸ்வரியும், சுகந்தியும் சொல்றாங்க. என்ன இருந்தாலும் அதை நம்ம செய்றது தான முறை தாராம்மா” என்றார் லட்சுமி.