“அது அகன்…! இல்ல, அதை மட்டும் தான் கேட்டிங்களா? இல்லை நான் புலம்புனது எல்லாத்தையுமே கேட்டிங்களா?” என்றவளுக்கு ‘அய்யோ’ என்றிருந்தது. அவனுக்கு கேட்காது என்ற தைரியத்தில் என்னென்னவோ பேசி வைத்திருக்கிறாளே?

“கேட்டுச்சு கேட்டுச்சு” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“என்னவெல்லாம் கேட்டுச்சு?” என்றாள் பரிதாபமாய்.

“நான் இங்க வந்த நாள்ல இருந்து இதோ இப்போ ஹார்மோன்ஸ் கதக்களி ஆடும்ங்கிற வரைக்கும் எல்லாமே” என்றவனுக்கு, அவளின் முக பாவனைகளைப் பார்த்து அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“சிரிக்காதிங்க அகன். என் மானம் போச்சு,மரியாதை போச்சு” என்றவள் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள். சட்டென்று நிமிர்ந்தவள்,

“யு சீட்டர்..! அப்போ நான் புலம்புனது எல்லாம் கேட்டுட்டு வேணும்னே தான் வந்து கையைப் பிடிக்கிறேன், பிரண்ட்லியா கட்டிப் பிடிக்கிறேன்னு என்னை உசுப்பேத்தியிருக்க?” என்றாள் கோபமாய்.

“இல்லைன்னு சொல்ல மாட்டேன், ஆமாம்னும் சொல்ல மாட்டேன்” என்றான் சிரிப்புடன்.

“என்னோட ரெபுடேஷன் எல்லாம் டோட்டல் காலியா அப்போ?” என்றாள் பாவமாய்.

“ஹேய்.! ரிலாக்ஸ்..! சொல்லப் போனா நீ அப்படி இயல்பா இருந்தது தான் அழகு. ஆனா என்னைத்தான் வச்சு செஞ்சுட்ட” என்றான்.

“ஹலோ பாஸ்..! ஏதோ பார்க்க கொஞ்சம் அழகா இருக்கிங்களே, நல்ல பையனாவும் இருக்கிங்களேன்னு கொஞ்சமே கொஞ்சம் சைட் அடிச்சுட்டேன். அதுக்காக நீங்க அவ்வளவு பெரிய அப்பாட்டக்கர் எல்லாம் இல்லை” என்றாள் போகிற போக்கில்.

“ஏதே கொஞ்சமே கொஞ்சம் சைட் அடிச்ச? இதை நான் நம்பினாலும் பாக்குறவங்க நம்ப மாட்டாங்க. சந்தேகமா இருந்தா ஹரீஷை கூப்பிட்டு கேட்போமா?” என்றான் சிரிப்புடன்.

“அகன்” என்றவளால் அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்க்கத் தெவிட்ட வில்லை அவனுக்கு.

“யுகா” என்றான் மென்மையான குரலில்.

“யுகா”என்றவனின் குரலின் வித்தியாசம் இப்போது தான் அவளுக்குப் புரிந்தது. அவனை விழி விரித்துப் பார்த்து அந்த பார்வைக்குள் அவனை இழுத்துக் கொண்டாள்.

அப்போது தான் அவளும் ஒரு விஷயத்தை கவனிக்க செய்தாள். பிரச்சனையின் போதும் கோபத்தின் போதும் அவன் தாரா என்று தான் அழைத்திருந்தான். காலையில் அவளை இப்படி அழைத்ததற்கு பிறகு இப்போது தான் யுகா என்று அழைக்கிறான்.

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்?” என்றான் அவள் முகத்தை கையில் தாங்கியபடி.

“எ..என்ன அகன்?” என்றாள் திணறலுடன்.

“இந்த காஸ்டியூம்ல யு லுக்கிங் சோ ப்ரிட்டி” என்றான் ஆழ்ந்த குரலில்.

‘இப்ப எதுக்கு இவன் ஹஸ்கி வாயிஸ்ல பேசுறான்?’ என்றவளுக்கு இதயம் எக்குத் தப்பாய் துடிக்க,

“அதனால” என்று அவன் நிறுத்த,

“அதனால?” என்று எடுத்துக் கொடுத்தாள் அவள்.

“நீ டெய்லி இப்படி சேரியே வியர் பண்றியா?” என்று கேட்டானே பார்க்கலாம்? அடித்துப் பிடித்து எழுந்தாள் அவள்.

“ஏதே..! டெய்லியும் புடவை கட்டனுமா? போடா டேய்..! புடவை கட்டு, பூ கட்டுன்னு சொல்லிட்டு பக்கத்துல வந்த மவனே மண்டைய உடைச்சு மாவிளக்கு எடுத்துடுவேன், ஜாக்கிரதை. ஒரு நாள் பொம்பளை வேஷம் போட்டதுக்கே உசிர் போய் உசிரு வந்திருச்சு. இது டெய்லி கட்டனுமாமே?” என்று நெஞ்சில் கை வைத்து நின்றவளைப் பார்த்து வந்த சிரிப்பை கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

“இங்க பாருங்க அகன்! நான் புடவை கட்டி பார்க்கனுமா இன்னைக்கு மட்டும் நல்லா பார்த்துக்கோங்க. இந்த அதிசய நிகழ்வெல்லாம் எப்போவாவது தான் நடக்கும்” என்றாள் முகத்தில் அபிநயத்துடன்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பனும்? பேசிட்டே தான் இருக்கப் போறியா யுகா?” என்றான்.

“அச்சோ ஆமால்ல..!” என்று வேகமாய் சென்றவள் குளித்து முடித்து வர, அடுத்த சோதனை அவளுக்குத் தயாராய் இருந்தது.

டிப் டாப்பாய் கிளம்பி முன் சிகையை சரி செய்து கொண்டிருந்தவன், தன் பின்னால் வந்து நின்றவளின் கோலத்தைக் கண்டு திகைத்து விட்டான்.

“யுகா? என்னதிது?” என்றான் ரசனையுடன்.

“சேரி பெர்பெக்ட்டா கட்டத் தெரியாது அகன். எனக்கு தெரிஞ்ச அளவுக்கு கட்டியிருக்கேன். கீழ போய் வேணிகிட்ட சரி பண்ணிக்கிறேன்” என்று புடவையை ஆராய்ந்து கொண்டிருந்தவள் அகனின் பார்வையை கவனிக்க மறந்து விட்டாள்.

“சொன்ன சொல்லு மாறக் கூடாது யுகா” என்றான்.

“நான் என்ன சொன்னேன்? என்ன மாறுனேன்?” என்றாள் புரியாமல்.

“அன்னைக்கு ஆன்ட்டிகிட்ட என்ன சொன்ன? கல்யாணத்துக்கு அப்பறம் என் புருஷனே புடவை கட்டி விடுவான். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்னு சொன்னியா இல்லையா?” என்றான் அவளையே பார்த்தபடி.

“அடேய் சிலுக்கு ஜிப்பா எல்லாத்தையும் இப்படி கேட்டு வச்சுகிட்டு சமயம் பார்த்து சிக்ஸரா அடிக்கிறியே எப்படிடா?” என்றாள் மனதிற்குள் நினைத்தவள்,

“அதுக்கு?”

“நானே ஹெல்ப் பண்றேன்” என்றான்.

“இல்ல அகன், வேண்டாம்” என்றவளின் பேச்சை எல்லாம் அவன் காதில் வாங்கியதைப் போலவே தெரியவில்லை.

“அகன் எனக்கு ஷையா பீல் ஆகுது” என்றாள் உள்ளே போன குரலில்.

“எந்த காலத்துல இருக்க யுகா? இப்போல்லாம் சேரி ட்ரேப்பிஸ்ட் மேச்சிமம் ஜென்ட்ஸ் தான். அவங்க கிட்ட வியர் பண்ணிக்கிறதுக்கே இங்க யாரும் ஷையா பீல் பண்றது இல்லை. நமக்குள்ள என்ன?” என்றான் புரியாமல்.

“அடேய் மாங்கா மண்டை? ஆஸ்திரேலியால இருந்த உனக்கு எல்லாமே ஈசி தான். என் நிலைமை அப்படியா?” என்று புலம்பிக் கொண்டாள்.

“சேரி எல்லாம் உனக்கு எப்படி கட்டத் தெரியும்? எத்தனை வீடியோ பார்த்தாலும் எனக்கே இன்னும் சரியா வராது” என்றாள் சந்தேகமாய்.

“ஒரு வேலையை கண் பார்த்தா கை செய்யணும். இதெல்லாம் பெரிய விஷயமா?” என்றவன், அவளுக்கு நேர்த்தியாய் புடவையை கட்டி முடித்திருந்தான். அதற்குள் அவன் அருகாமையில் அவள் தான் ஒரு வழியாகி விட்டாள். அவனுக்கோ அப்படி எந்த உணர்வும் இல்லை என்பதைப் போல் முகத்தை வைத்திருந்தான்.

“நீ ஒரு டாக்டர் யுகா. உன்னோட ப்ரொபஷன்ல இனி இதெல்லாம் தவிர்க்க முடியாது. எந்த டிரஸ்ஸா இருந்தாலும் அதை நம்ம கம்போர்ட்க்கு கொண்டு வந்துடனும்” என்றான் அவள் முன் கொசுவ மடிப்பை சரி செய்தபடி.

“ம்ம்” என்றவளுக்கு காத்து தான் வந்தது.

“என்னாச்சு? ஏன் வாய்ஸ் உள்ள போகுது” என்று நிமிர்ந்தவன் அப்போது தான் சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தான்.

“ஆர் யு ஓகே” என்றான்.

“ஐ திங்க் ஐ ஆம் நாட் ஓகே அகன்” என்றாள் அவனைப் பார்க்காமல்.

“என்னாச்சு?” என்றவனுக்கு அவள் தவிப்பிற்கான காரணம் புரிய,

அவளைத் தன் கையணைப்பில் கொண்டு வந்தவன்,

“தாரா இப்படி பேசாம இருக்குறது நல்லா இல்லையே? சம்திங் ராங். தாராவுக்கு இப்படி வெட்கப்படக் கூடத் தெரியுமா?” என்றான் அவளையே ஆழ்ந்து பார்த்தபடி.

“நீதான் வெட்கப்பட வைக்கிற அகன். நான் இப்படி எல்லாம் இல்லை. உன்கிட்ட மட்டும் தான் இப்படி ஆகுது” என்றாள்.

“என்கிட்ட மட்டும் தான் இப்படி ஆகணும்” என்றான் குறுகுறுப்புடன்.

“அகன் நீங்க இப்படியெல்லாம் பேசுவிங்களா? முதல்ல நான் உங்களை திமிர் பிடிச்சவன்னு நினைச்சேன்” என்றாள்.

“நீ கூட இருக்கும் போது ஒருத்தர் பேசாம இருந்தாத்தான் ஆச்சர்யம் யுகா” என்றான். அவள் அவனை முறைக்க,

“ஒரு விஷயம் தெரியுமா உனக்கு? என் அம்மாவுக்கு அப்பறம் என்னை அகன்னு சொன்னதே நீ மட்டும் தான். எல்லாருக்கும் நான் கார்த்தி மட்டும் தான். அதனால தானோ என்னவோ நான் உன் பிரண்ட்ஷிப்பை அக்சப்ட் பண்ணிகிட்டேன். நீ அகன்னு கூப்பிடும் போது ஐ பீல் லைக் சம்திங் டிப்ரன்ட். லவ் பீலிங் எல்லாம் இல்லை. ஆனா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் லோன்லியா பீல் பண்ணும் போதெல்லாம் எனக்கு அடுத்த நிமிஷம் மைண்ட்ல உன் முகம் தான் வரும். அந்த அளவுக்கு உன்னோட பாதிப்பு எனக்குள்ள இருந்திருக்கு” என்றான் அகன்.

அவன் பேச்சைக் கேட்டு கரைந்து நின்றவளுக்கு,“லவ் பீலிங் எல்லாம் இல்லை” என்றவனின் குரல் மட்டும் ஏனோ தனக்குள் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைப் போல் இருந்தது.

சட்டென்று அவன் அணைப்பில் இருந்து விலகியவளுக்கு ஏனோ கண்கள் கரித்துக் கொண்டு வர, அவனறியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“என்னாச்சு யுகா?” என்றான். அவன் பார்வை என்னவோ அவள் முகத்தை விட்டு அகலவேயில்லை.

“டைம் ஆச்சு, கிளம்பலாமா?” என்றாள்.

“என்னாச்சு? ஏன் டல்லாகிட்ட?” என்றான் புரியாமல்.

“நத்திங்..! டயர்டா இருக்கு அவ்வளவுதான்” என்றவளுக்கு அந்த அறையிலிருந்து வெளியே வரவும் தான் மூச்சே வந்தது.

தாரா வருவதைப் பார்த்த வேணி,

“பார்த்திங்களா பெரியத்தை?கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே என் பொண்ணு எவ்வளவு அழகா புடவை கட்ட கத்துக்கிட்டான்னு?” என்றார் சந்தான லட்சுமியிடம்.

“நான் எங்க கட்டுனேன். அகன் தான் கட்டி விட்டார்” என்றவள் எதார்த்தமாய் சொல்லி வைக்க, அப்போது தான் அங்கிருந்த அனைவரையும் கவனித்து வாயை மூடிக் கொண்டாள்.

“பார்த்திங்களா சித்தி, இன்னைக்கே புடவை கட்டிவிட்டிருக்கான். இங்க அவன் பண்ண அராஜகம் என்ன? ரூம்குள்ள போய் அவன் பண்ணியிருக்கிற வேலை என்னன்னு பாருங்க? இதை சொன்னா நம்ம பொல்லாதவங்க” என்றாள் மகி வசந்தியிடம். அவள் என்னவோ மெதுவான குரலில் தான் சொன்னாள். ஆனால் தாராவின் காதில் தப்பாமல் அது விழுந்து வைத்தது.

“ராஜ குரு எங்க கிளம்பிட்டிங்க?” என்றான் ஹரீஷ்.

“எங்க வீட்டுக்குத்தான் ஹரீஷ்” என்றாள் அமைதியாய்.

“தங்களின் அரண்மனைக்கு எனக்கு அழைப்பு இல்லையா ராஜ குருவே” என்றான்.

“தாங்களை அழைப்பதில் எனக்கொன்றும் இல்லை அரசே. ஆனால்  ஏழையின் குடிலுக்கு வருகை தர தங்களின் தாயாரின் அனுமதி கிட்டுமா என்ற ஐயப்பாடு தான் காரணம் அரசே” என்றாள் சிரிக்காமல்.

“குருவே..! இவ்வளவு லென்தி டயலாக்ஸ் எல்லாம் நமக்கு வராது. சோ சரண்டர்” என்றான் ஹரீஷ்.

“நீயும் வா ஹரீஷ்” என்றாள் உண்மையாகவே.

“நாளைக்கு ஹாஸ்ட்டல் கிளம்பனும் ராஜகுரு. அதனால நீங்க போயிட்டு வாங்க. இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றான்.

அகனும் கீழே வர, இப்போது அவன் முகத்தில் இருந்த அமைதி கண்டு அங்கிருந்தவர்களின் மனதில் நிம்மதி பிறந்திருந்தது.

வேணியும் பூமிநாதனும் கிளம்பியிருக்க, இவர்கள் சற்று நேரம் கழித்தே கிளம்பியிருந்தனர். அமைதியாய் வந்தவளை யோசனையுடன் பார்த்திருந்தான் அகன்.

‘என்னாச்சு? இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்தா’ என்று யோசித்தவன்,

“எப்படி போகணும்?” என்றான்.

அவள் ஏதோ சிந்தனையில் இருக்க,

“தாரா”என்றவனின் குரலில்,

“ங்கான்..!” என்றாள்.

“உங்க வீட்டுக்கு எப்படி போகணும். லொக்கேஷன் சொல்லு” என்றான்.

“இதுக்கு எதுக்கு லொக்கேஷன். அதான் நான் வரேனே” என்றாள்.

“நீ வர்றதான். ஆனா மென்டலி ஆப்சென்ட்ல இருக்கியே? அதனால லொக்கேஷன் சொல்லிட்டு ஆப்சென்ட் மோடுக்கு போ” என்றான் அகன்.

லொக்கேஷனை போட்டுக் குடுத்தவள், அமைதியாய் சீட்டில் தலை சாய்த்து கண்களை மூடிக் கொள்ள, அவனுக்குத்தான் எரிச்சலாய் வந்தது. தாரா அமைதியாய் இருந்தாலே அவனுக்குப் பிடிப்பதில்லை. அவள் எப்போதும் போல் இருக்க வேண்டும் என்று அவன் மனம் எதிர்பார்க்க அவளுக்கோ  என்னென்னவோ எண்ணங்கள். வீடு வரும் வரை அப்படித்தான் இருந்தாள்.

அக்கம் பக்கத்தினர், சொந்த பந்தம் என்று குறிப்பிட்ட ஆட்கள் அவள் வீட்டிலும் கூடியிருக்க, அகனுக்குத் தான் மலைப்பாய் இருந்தது. காரை நிறுத்தியவன் அவளைப் பாவமாய் பார்த்து வைத்திருந்தான்.

“என்ன தாரா இது? பொண்ணுக் கோலத்துல தான் வரணும். இப்படி வந்தா எப்படிம்மா?” என்றனர் உறவுக்கார பெண்கள்.

“எப்படி வந்தாலும் நான் தான ஆன்ட்டி. ஒரே ஸ்டைல்ல இருந்து போரடிக்குது. அதான் டிப்ரன்ட் ஸ்டைல், தாரா ஸ்டைல்” என்றாள் சிரிப்புடன்.

“இது நம்ம தாராவே தான் வேணி அத்தாச்சி. அமைதியா வரவும் நானே பயந்துட்டேன்” என்றார் அவரும்.

“கொஞ்ச நேரம் வாயை வாடகைக்கு விட்டிருந்தேன் ஆன்ட்டி. அதான் அமைதியா இருந்தேன்” என்றவள், ஆரத்தி எடுக்கும் வரை மட்டுமே அகனை ஒட்டி நின்றிருந்தாள். பின் அவளின் ஒதுக்கம் தெரியாத அளவுக்கு ஒதுங்கிக் கொள்ள, முதலில் கவனிக்காமல் இருந்தவனுக்கு பிறகு தான் அவளின் ஒதுக்கம் புரிந்தது.

“பரவாயில்லை வேணி! நம்ம தாராவுக்கு அவசரமா நடந்திருந்தாலும் மாப்பிள்ளை ராஜா கணக்கா இருக்காரு” என்றார் ஒரு பெண்மணி. அதில் வேணிக்குத் தான் அவ்வளவு பெருமை.

“வெறும் ராஜா இல்லை ஆன்ட்டி. எனக்காவே படையெடுத்து வந்த  ஆஸ்திரேலிய ராஜா” என்றாள் தாரா சிரிப்புடன்.

“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” என்றது ஒரு இளவட்டம்.

“நம்பலைன்னாலும் நம்பின மாதிரியாவது ஆக்சன் குடுங்களேன்டா” என்றாள் தாராவும். சொந்த பந்தத்தில் இருந்த இளவட்டங்களும் தாராவும் இணைந்து கொள்ள, கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது அவ்விடத்தில்.