“என்ன சித்தி நடக்குது இங்க? கார்த்தியும் அந்த தாராவும் இருக்குறதைப் பார்த்தா, நேத்து முடிவாகி இன்னைக்கு கல்யாணம் பண்ணவங்க மாதிரி தெரியலையே? என்னமோ ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ண மாதிரி இருக்கு. லவ் மேரேஜ் பண்ண நாங்க கூட இப்படி இல்லை” என்றாள் மகிமா, வசந்தியிடம்.
“எனக்கும் அது தான் புரியலை மகி? பாரேன் எப்படி சிரிச்சுட்டு இருக்கான்னு. இதுல நான் புள்ளைன்னு ஒருத்தனை பெத்து வச்சுருக்கேன் பாரு. அதுவும் அவ பின்னாடி தான் சுத்திட்டு இருக்கு. அவங்க அப்பனை மாதிரியே இவனும் தத்தியா இருக்கான்” என்றார் வசந்தி.
“தயாளன் அங்கிளை வச்சு ஒரு பிரச்சனை வெடிக்கும்னு பார்த்தேன். ஆனா, இப்படி புஸ்சுன்னு போச்சு. பார்க்கணுமே நீங்க, அவ கையைப் பிடிக்கிறதும், கார்த்தி கண்ட்ரோல் ஆகுறதும் அப்பப்பா? எனக்கென்னமோ சந்தேகமாவே இருக்கு. கல்யாணம் தானா நின்னுச்சா இல்லை இவன் நிறுத்துனான்னு” என்றாள் மகி.
“அட நீ வேற மகி? நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன். இவனைப் பத்தி மட்டும் எதுவும் தெரிய மாட்டேங்குது. இவனைப் பத்தி கேட்டா என் மாமியார்கார அம்மா வாயைத் திறக்கறது இல்லை” என்றார் வசந்தி.
“என்ன வசந்தி இங்க நின்னுட்டு இருக்க? அங்க அத்தை உன்னை வர சொல்றாங்க” என்று தாமரை வந்து சொல்லவும் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் வசந்தி.
“மகிமா, சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதம்மா. இது நீ வாழ வந்த வீடு. கார்த்தி உன்னோட கொழுந்தன். அவன் மேல அப்படி என்ன வன்மம் உனக்கு? நானும் பார்த்துட்டே இருக்கேன், நீ பேசுறது நடந்துக்கிறது எதுவும் சரியில்லை. இனியாவது மாத்திக்கப் பாரும்மா” என்றார் தாமரை தன்மையான குரலில்.
“இங்க பாருங்க பெரியம்மா? என்னமோ நான் குடும்பத்தை கெடுக்க வந்த மாதிரியே பேசாதிங்க? நான் என்ன தப்பா பேசினதை நீங்க பார்த்திங்க? இல்ல என்னோட நடத்தையில என்ன குறை கண்டிங்க?” என்றாள் கோபமாய்.
“இது நான் வாழ வந்த வீடாம். எல்லார் மேலயும் வன்மத்தை கொட்டுறேனாம். முக்கியமா உங்க தம்பி மேல. இனி இப்படி எல்லாம் நடந்துக்கக் கூடாதாம். சொல்றாங்க உங்க பெரியத்தை. இல்ல, நான் அப்படி என்ன பண்ணிட்டேன்? உங்க தம்பிக்கும் எனக்கும் என்ன இருக்கு? அவரை இதுக்கு முன்ன நான் பார்த்திருக்கேனா? இதுல என் நடத்தை வேற சரியில்லைன்னு சொல்றாங்க” என்றாள் வராத கண்ணீரைத் துடைத்தபடி.
“என்ன அத்தை இதெல்லாம்?” என்றான் நகுலன் கோபமாக.
“நகுலா நான் தப்பா எதுவும் சொல்லலைப்பா. அதுலயும் நடத்தை சரியில்லைன்னு நான் சொல்லவே இல்லப்பா. நடந்துக்கிறது சரியில்லைன்னு தான் சொன்னேன்” என்றார் தாமரை.
“அப்போ நான் இல்லாததை சொல்றேன்னு சொல்றிங்களா? ரெண்டுக்கும் பெருசா வித்தியாசம் ஒண்ணுமில்லை” என்று அதற்கும் பேசி வைத்தாள் மகிமா.
“மகி,வாயை மூடப் போறியா இல்லையா? அவங்க தான் பெரியவங்க ஏதோ சொல்றாங்கன்னா, அதையேன் நீ பெரிசு படுத்துற?” என்று மனைவியை அதட்டியிருந்தான் நகுலன்.
“என்னை எதுக்கு வாயை மூட சொல்றிங்க? உங்க அத்தை என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க, நான் கேட்டுகிட்டு பேசாம இருக்கனுமா? உங்களுக்காக நம்மளை மதிக்காத உங்க தம்பி கல்யாணத்துக்கு வந்தேன் பாருங்க, எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். இனி ஒரு நிமிஷம் கூட நான் இங்க இருக்க மாட்டேன், கிளம்புறேன்” என்றவள் கோபமாய் செல்ல,
“மகி! அப்படியெல்லாம் கிளம்ப முடியாது. நான் சொல்றதைக் கேளு” என்று நகுலன் அவளைத் தடுக்க முற்பட்டான்.
“நான் பேசுறது எல்லாம் இப்போ கத்துற மாதிரி தான் இருக்கும் உங்களுக்கு. இப்போ உங்க எல்லாருக்கும் தான் நான் வேண்டாதவ ஆகிட்டேனே? அதனால இப்படி பேசத் தான் செய்விங்க” என்றாள் வெடுக்கென்று.
“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி பேசுற மகிமா?” என்றார் சுகந்தி.
“என்னத்த சொல்ல சொல்றிங்க சித்தி? தாமரை அம்மா என் நடத்தை சரியில்லைன்னு சொல்றாங்க. அதை கேட்டுட்டு என்னை இங்க இருக்க சொல்றிங்களா?” என்றாள்.
“என்ன சொல்ற?” என்று அதிர்ந்த சுகந்தி,
“தாமரை அக்கா என்ன இதெல்லாம்?” என்றார் சுகந்தி.
“நான் அந்த மாதிரி சொல்லவே இல்லம்மா” என்றார் அவர் பாவமாய்.
அதற்குள் பிரச்சனையைக் கண்டு மொத்தக் குடும்பமும் கூடி விட, தாமரை சேதுராமனை பாவமாய் பார்த்திருந்தார். தான் சாதாரணமாய் கூறியதை மகிமா இந்த அளவிற்கு திரித்துப் பிரச்சனையாக்குவாள் என்று அவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
பிரச்சனையை அறிந்த தாரா, அவர்களின் அருகில் வந்திருந்தாள். அகனோ சற்று தூரத்தில் இருந்தே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மகிமாவைப் பற்றி அவனுக்கு பெரிதாய் எதுவும் தெரியாது என்றாலும், இந்த இரண்டு நாட்களில் அவளை நன்றாக கணித்து வைத்திருந்தான். அனைத்திலும் தான் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும், அனைவரும் தன்னை மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற குணம் உடையவள் என்று நினைத்திருந்தான்.
“மகி அமைதியா இருக்கப் போறியா இல்லையா?” என்றார் லட்சுமி சற்று அதட்டலுடன்.
“நீங்க முன்ன மாதிரி இல்ல பாட்டி. என்கிட்ட என்னைக்காவது கோபப்பட்டிருக்கிங்களா? இப்போ நீங்களும் தாமரை அம்மா சொல்றது சரிதான்ற மாதிரி பேசுறிங்க?” என்றாள் வராத கண்ணீருடன்.
“தாமரை சித்தி அப்படி பேசுறவங்க கிடையாது. நீங்களா இட்டுக் கட்டி எதையாவது சொல்லிட்டு இருக்காதிங்க” என்றாள் தாரா தெளிவான குரலில்.
“ஆமா நான் தான் தப்பு, நான் தான் இல்லாததை சொல்றேன். நான் இங்க இருக்குறது உங்க எல்லாருக்கும் பிடிக்கலை. அதான் இஷ்ட்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க. நான் கிளம்புறேன்” என்றவள் அவ்விடத்தை விட்டு நகர,
“என்னோட மனைவி அப்படி பேசி இருக்க மாட்டாம்மா. அப்படி பேசியிருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றார் சேதுராமன்.
“மாமா என்ன மாமா நீங்க? அவதான் ஏதோ புரியாம பேசுறான்னா நீங்களும்” என்ற நகுலனுக்கு சேதுராமன் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.
“தேவையில்லாத விஷயத்துல உன்னைத் தலையிட வேண்டாம்னு சொல்லியிருக்கேன்ல தாமரை. இதெல்லாம் நமக்குத் தேவையா? யார் எப்படி போனா நமக்கென்ன?” என்றார் மனைவியிடம் கோபமாய்.
“மாமா பிளீஸ்! எங்களை கண்டிக்கிற உரிமை உங்களைத் தவிர யாருக்கு இருக்கு? எங்களை உங்க பிள்ளைங்க மாதிரின்னு சொன்னது பொய்யா? எதுக்கு அத்தையை திட்டுறிங்க?” என்றான் நகுலன்.
“பிள்ளைங்கன்னு நாங்க மட்டும் நினைச்சா பத்தாது நகுலா. வேண்டாம் விட்ருங்க. அவ பேசுனது தப்புத்தான் மன்னிச்சுக்கங்க” என்றவர் தாமரையை அழைத்துக் கொண்டு செல்ல முற்பட,
“எதுக்கு சித்தப்பா இப்படியெல்லாம் பேசுறிங்க? ஏன் என்னைய, அகனைப் பார்த்தா உங்களுக்கு பிள்ளைங்க மாதிரி தெரியலையா?” என்றாள் தாரா.