அத்தியாயம் 11 :

அறைக்குள் பதட்டத்துடன் அமர்ந்திருந்தவளின் முகம் கண்டு வேணியும் பூமிநாதனும் யோசனையுடன் பார்க்க,

“அப்பா” என்றாள் பாவமாய்.

“என்னடா?” என்றார் பரிவுடன்.

“இல்ல, நான் எடுத்த முடிவு சரிதான? ஏதோ அகன் பீல் பண்ணுவானேன்னு சட்டுன்னு டிசைட் பண்ணிட்டேன். இப்போ ஒரு மாதிரி எம்பேரிசிங்கா இருக்கு” என்றாள் பாவமாய்.

“அப்பாகிட்ட பேசும் போது அவ்வளவு தெளிவா பேசுனியே தாரா” என்றார் வேணி.

“இப்போவும் தெளிவா தான் இருக்கேன்ம்மா. ஆனா என்னன்னு சொல்லத் தெரியலை. மனசுக்குள்ள ஏதோ ஒன்னு அழுத்துது” என்றாள் பாவமாய்.

“அது திடீர்ன்னு கல்யாணம்னு சொன்னா அப்படித்தான்டா இருக்கும். அதான் அப்பாவும் அம்மாவும் கூடவே இருக்கோமே? அப்பறம் என்ன பயம் தாராவுக்கு?” என்றார் பூமிநாதன்.

“தெரியலைப்பா! பட், நிறுத்தி நிதானமா அலையன்ஸ் பார்த்து பேசி முடிச்சிருந்தா எனக்கு இப்படி தோணி இருக்காதோ என்னவோ? இப்போ திடீர்ன்னு எல்லாம் நடக்குற மாதிரி இருக்கா? அதான் கொஞ்சம் பயம்” என்றாள்.

“இது உன்னோட முடிவு தானடா” என்றார் பூமி.

“என்னோட முடிவுதான். ஆனா உடனே நடக்கணுமா? என் மேரேஜ்ல எனக்கே எனக்குன்னு சில மூமென்ட்ஸ் எல்லாம் இருக்கணும். என்னோட பிரண்ட்ஸ், நம்ம ரிலேட்டிவ்ஸ் இப்படி யாருமே இல்லாம, என்னமோ நான் ஓடிப் போய் லவ் மேரேஜ்  பண்ற மாதிரி இருக்குப்பா” என்றாள் பாவமாய்.

மகளின் மனநிலை இருவருக்கும் புரிந்தது. தனது திருமணம் அப்படி நடக்க வேண்டும் இப்படி நடக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டவள் ஆயிற்றே. பெற்றவர்களுக்கும் ஒரே மகளின் திருமணத்தை இப்படி நடத்துவதில் மட்டும் விருப்பம் இருந்துவிடவா போகிறது?

“நாம வேணும்னா மேரேஜ் முடிச்சுட்டு கிராண்டா ஒரு ரிஷப்ஷன் வச்சுக்கலாம் தாரா. நீ ஆசைப்பட்ட மாதிரி அதுல எல்லாமே பண்ணிக்கலாம்” என்றார் பூமிநாதன்.

“அப்படியா சொல்றிங்க? இருந்தாலும் எனக்கு ஒரு மாதிரி இருக்குப்பா. நாளைக்கு மேரேஜ்க்கு கட்டிக்க என்கிட்ட புடவை கூட இல்லை. இந்த நைட் நேரத்துல எங்க போய் வாங்குறது? அந்த கார்த்திகாவுக்கு எடுத்த எதையும் நான் தொட மாட்டேன்” என்றாள்.

“கல்யாணத்துக்கு நீ புடவை தான் கட்டணும்னு நான் உனக்கு ஒரு பட்டுப் புடவை எடுத்துட்டு வந்திருக்கேன்டா. அதனால ஒரு பிரச்சனையும் இல்லை. அதையே கட்டிக்கோ” என்றார் வேணி.

“ஜ்வெல்ஸ் கூட எதுவும் எடுத்து வைக்கலையே” என்றாள் பாவமாய்.

“இப்ப உனக்கு என்ன பிரச்சனை தாராம்மா. புடவை நகையைப் பத்தி கவலைப் படுற ஆள் நீ இல்லையே? அப்பறம் ஏன் இப்படி பதட்டப்படுற? உனக்கு என்ன தேவைன்னாலும் இப்பவே வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வந்துடலாம். அரைமணி நேரத்துல போற வீட்டுக்கு இந்த அக்கப் போர் தேவையா?” என்றார் வேணி.

“ஆமாம்ல! நம்ம வீட்டுக்குப் போக அவ்வளவு நேரம் தான ஆகும்? நான் ஒருத்தி எனக்கு இதெல்லாம் தோணவே இல்லை பாருங்கம்மா. சரி வாங்க வீட்டுக்கு போயிட்டு வருவோம்” என்றாள்.

“இந்த நேரத்துலையா?” என்று யோசித்த வேணி,

“சரி இரு தாரா. நான் போய் பெரியத்தைகிட்ட கேட்டுட்டு வர்றேன்” என்றவர் லட்சுமியைத் தேடி சென்றார்.

“மனசுக்குள்ள என்ன குழப்பம் தாராம்மா?” என்றார் பூமி.

“தெரியலை டாடி. இத்தனை நாள் பிரண்ட்ன்னு சொல்லிட்டு இப்போ நானே போய் அகன் கிட்ட இப்படி கேட்டது சரியான்னு தெரியலை டாடி. எங்க என்னை வேற மாதிரி நினைச்சிருவானோன்னு உள்ளுக்குள்ள அடிச்சுக்குது. அதான் இப்படி வார்த்தையா வருது போல” என்றாள்.

“உன்னை அப்படி நினைக்க வாய்ப்பே இல்லைடா. நீ என்னதான் கார்த்தி தம்பியை பிரண்ட்ன்னு சொன்னாலும் அவரை உனக்கும் பிடிச்சிருக்கப் போய் தான் அவருக்கு ஒரு பிரச்சனைன்னா முன்னாடி போய் நிக்கனும்னு நினைக்கிற. தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பாம இருடா” என்றார்.

அவனிடம் பேசிவிட்டு வந்ததில் இருந்து இப்படித்தான் இருக்கிறாள் யுகந்தாரா. அவனின் மனக் குறையை நீக்கி விட்டு வந்தவளின் மனக் குறையைத் தான் கேட்பாரில்லை என்பதைப் போன்ற எண்ணம் அவளுக்கு. அகனுக்கு  தைரியம் சொன்னவளுக்கு, அவனும் தனக்கு சொல்லியிருக்க வேண்டும் என்று மனம் எதிர்பார்த்ததை அவள் அறியவில்லை.

“நான் இருக்கேன், விடு தாரா பார்த்துக்கலாம்” என்று அகன் ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தால் அவளுக்கு இந்த அளவுக்கு பதட்டம் வந்திருக்காதோ என்னவோ? எவ்வளவு தெளிவும் தைரியமும் இருந்தாலும் சில நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கே உரித்தானது அல்லவா? அந்த உணர்வுகளின் பிடியில் இருந்தாள் யுகந்தாரா.

தனது அறையின் பால்கனியில் நின்று தந்தை மகளின் இந்த பிணைப்பைத் தான் பார்த்திருந்தான் அகன் கார்த்திகேயன். இன்று நடந்த அனைத்தும் அவன் கண் முன் வலம் வர, தாராவைப் பார்த்திருந்தவனின் கண்களில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. இன்று அவள் கண்களில் தெரிந்த தனக்கான தவிப்பும் துடிப்புமே அவள் மனதை அப்படியே சொல்லியிருந்தது அவனுக்கு. ஆனால் அதை அவளே உணரவில்லை என்பதையும் உணர்ந்திருந்தான்.

நிறுத்தப்பட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, திருமண வீட்டில் யாருக்கு உறக்கம் வரும்?

அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, வேணி லட்சுமி பாட்டியுடன் வருவதும் அவர்கள் ஏதோ பேசுவதும் என்று தெரிந்தது அவனுக்கு.

“என்னாச்சு? அப்படி என்ன டிஸ்கஷன் போயிட்டு இருக்கு?” என்று எண்ணியவனுக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.

“இந்த நேரத்துல எதுக்கு தாராம்மா. என்கிட்ட இருக்குற நகைகள் போதாதா?” என்றார்.

“நகைன்னு இல்ல பாட்டி. சில திங்க்ஸ் எல்லாம் எடுக்கணும். நானே என் கல்யாணத்துக்கு வருவேன்னு தெரியாதுல்ல, அதான்” என்றவளைப் பார்த்து அந்த நேரத்திலும் சிரித்திருந்தார்.

“சிரிக்காதிங்க பாட்டி” என்றவளின் பார்வை அவருக்கு பின்னே செல்ல, அங்கே அவளைப் பார்த்தபடி வந்திருந்தான் அகன்.

“சரி நான் டிரைவரை வரச் சொல்றேன். நீ போயிட்டு வந்திடுடா” என்றார்.

“டிரைவர் எல்லாம் வேண்டாம் பாட்டி. நானே டிரைவ் பண்ணுவேன். நானும் மம்மியும் போய்ட்டு வர்றோம்” என்றாள்.

“இந்த நேரத்துல எப்படி உங்களைத் தனியா அனுப்புறது? அதெல்லாம் சரி வராது” என்றார்.

“நான் என்ன ஆஸ்திரேலியாவுக்கா போயிட்டு வரேன்னு சொன்னேன். இந்தா இருக்கு மடத்துக்குளம். போன உடனே வந்துடுவேன் பாட்டி” என்றாள்.

“அப்போ நம்ம ஹரீஷை கூடக் கூட்டிட்டு போங்க” என்றார் லட்சுமி.

“என்ன என் பேச்சு அடிபடுது?” என்றபடி வந்த ஹரீஷைப் பார்த்தவள்,

“தங்கள் வீட்டுப் பல்லக்கில் நகர்வலம் செல்ல வேண்டும் அரசே. சகோதரிக்காக உடன் வருகிறீர்களா?” என்றாள் நக்கலுடன்.

“அரசனுக்கு இன்னும் அரைமணி நேரத்தில் உறங்கும் நேரமென்பதால் சற்று யோசிக்கக் வேண்டிய விஷயம் தான்” என்றவனை முறைத்தவள்,

“டேய் வாடா விளக்கெண்ணெய்” என்றாள் கடுப்புடன்.

“முதல்லயே இப்படி மரியாதையாக் கூப்பிட்டிருந்தா வந்திருக்கப் போறேன்” என்றவனைப் பார்த்து நீண்ட நேரத்திற்குப் பிறகு சிரித்திருந்தாள்.

“நானும் வரட்டுமா?” என்றான் அகன் கண் ஜாடையில்.

“இருக்கட்டும் அகன். நோ இஷ்யூஸ், நாங்க போன உடனே வந்துடுவோம்” என்றவள் வேணியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட, அவளை யோசனையுடன் பார்த்திருந்தான் அகன்.

அகன் லட்சுமியைக் கேள்வியாய் பார்க்க,

“அது நாளைக்கு கல்யாணத்துக்கு வாங்கினது எல்லாமே கார்த்திகாவுக்குன்னு வாங்குனதாம். அதெல்லாம் அவளுக்கு வேண்டாமாம். அதான் தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுக்க வீட்டுக்கு போறாங்கப்பா” என்றார் லட்சுமி.

‘அப்படி பார்த்தா நானே கார்த்திகாவுக்கு பார்த்த மாப்பிள்ளை தானே? அதுல ஒன்னும் பிரச்சனை இல்லையாம்மா அவளுக்கு?’ என்று மனதில் நினைத்துக் கொண்டவனின் முகம் இறுகி மீண்டது.

அவள் வீடு சென்று திரும்பி வரும் வரை தோட்டத்தில் பனியில் தான் அமர்ந்திருந்தான் அகன். அவனுக்கு அவன் நினைத்த கேள்விக்கு பதில் தெரிந்தே ஆக வேண்டிய காட்டாயம்.

திரும்பி வந்தவள் கண்டது என்னவோ இறுகிப் போய் அமர்ந்திருந்த அகனைத்தான்.