“பாட்டி, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அகனை எனக்கே குடுத்துடுங்களேன், நான் அவனை நல்லா பார்த்துப்பேன்” என்றாள் லட்சுமியிடம்.அவள் கூறிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ளவே அவருக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
“தாரா” என்றவர் சின்னக் குழந்தை போல அழ ஆரம்பித்து விட்டார்.
“எங்க பொண்ணு சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் பெரியம்மா. நீங்க முதல்ல கேட்டு நான் மறுத்தது கூட அதுக்காகத் தான். உங்களுக்கே தெரியும்” என்றார்.
“தாராம்மா..!” என்ற லட்சுமிக்கு வார்த்தைகள் வராமல் அவள் முகம் முழுவதும் முத்தமிட,
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைடா. இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்” என்றவரை கோபமாய் இடை நிறுத்தினாள் தாரா.
“தயவு செஞ்சு இனி இப்படி பேசாதிங்க பாட்டி. இந்த தப்பத் திரும்ப திரும்ப செய்றிங்க நீங்க. நான் பெரிய மனசு பண்ணி வாழ்க்கை குடுக்குற அளவுக்கு அகன் ஒன்னும் இல்லை. சொல்லப் போனா, அப்படி நீங்க கார்த்திகா பேமிலி கிட்ட பேசினது தான் அவங்களோட எல்லா எதிர்பார்ப்புக்கும் காரணம். இது நீங்களே அகனை கீழ இறக்கி பேசுற மாதிரி ஆகாதா. அவனுக்கு குறை இருக்குன்னு சொல்றதை முதல்ல நீங்க விடுங்க” என்றாள் கோபமாய்.
அவள் பேசும் போதே வந்திருந்த தயாளனுக்கும் நகுலனுக்கும் கூட அப்படி ஒரு சந்தோசம்.
“நீ நிஜமா தான் சொல்றியாம்மா?” என்றார் தயாளன்.
“ஆமா அங்கிள்,.! இந்த சமையல்காரர் பொண்ணை மருமகளா ஏத்துக்கிறதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?” என்றாள்.
அடுத்த சில நிமிடங்களில் விஷயம் வீட்டினர் அனைவருக்கும் தெரிய வர, அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. வசந்தியையும், மகிமாவையும் தவிர.
“சமையல்காரன் பொண்ணு இனி இங்க வந்து அதிகாரம் பண்ணுவாளா?” என்று வசந்தியும்,
“ஏற்கனவே மதிக்க மாட்டா. இதுல இந்த கார்த்தியை கட்டிகிட்டா சுத்தம். இதுல டாக்டர் வேற, இந்த வீட்ல இனி என் பேச்சு எடுபடாம போய்டுமே” என்று மகிமாவுக்கும் கவலைப் பிடித்து ஆட்டியது.
“நான் போய் அகன் கிட்ட பேசிட்டு வர்றேன்” என்றவளை யாரும் தடுக்கவில்லை.
இத்தனை நாள் சகஜமாய் சென்ற அறைக்கு இப்போது செல்ல அவளுக்குத் தயக்கமாய் இருந்தது. இருந்தாலும் பேசித்தானே ஆக வேண்டும்.
அவள் கதவைத் தட்டியும் அவன் திறக்கவேயில்லை. அவனுக்கு போன் செய்ய, வைப்ரேஷனில் அதிர்ந்த போனைப் பார்த்தவன்,
“என்ன?” என்று அனுப்பினான்.
“கதவைத் திறங்க”என்று அனுப்ப,
“தேவையில்லை, உன் வேலையைப் பாரு. போய் வடை எதுவும் சூடா இருந்தா சாப்பிடு” என்று அனுப்பியிருந்தான்.
“அகன் பிளீஸ்” என்று அனுப்ப, கதவைத் திறந்தவன் “என்ன?” என்பதைப் போல் பார்த்து நின்றான்.
“உள்ள விடுவியா மாட்டியா?” என்று அவள் அவனைப் பார்த்து நிற்க, அவனோ அசையாமல் நின்றான்.
“போடாங்” என்றவள் திரும்பி செல்ல முயற்சி செய்ய, கையைப் பிடித்து உள்ளே இழுத்திருந்தான்.
அவன் கண்களோ கன்றிச் சிவந்திருக்க,”அகன் அழுதானா?” என்று எண்ணியவளுக்கு பார்த்த விஷயத்தை நம்பவே முடியவில்லை.
“என்ன?” என்றான் புருவத்தை உயர்த்தி.
“எதுக்கு எனக்கு ஸ்டெதஸ்கோப்பை கிப்ட்டா குடுத்த?” என்றாள்.
“நீ என்ன லூசா?” என்பதைப் போல் பார்த்து வைத்தவன்,
“நீ நிஜமாவே டாக்டர் தான?” என்றான் டைப் செய்து.
“கேட்டதுக்கு பதில் சொல்லு அகன்” என்றாள்.
“எதுக்கு குடுப்பாங்க? ஹார்ட் பீட்டை செக் பண்ணத்தான்” என்றான்.
“ஸ்டேத்ஸ்கோப் இங்க இருக்கு? ஹார்ட் எங்க இருக்கு?” என்றாள்.
அவனோ புரியாமல் பார்க்க,
“அடேய் மரமண்டை ஹார்ட் பீட்டை செக் பண்ண காலம் பூராம் உன்னோட ஹார்ட்டு வேணும். கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றாள் நிறுத்தி நிதானமாய் அவன் கண் பார்த்து.
அவள் கேட்ட விதத்தில் அவன் தான் விழிகளை விரித்திருந்தான்.
“என்ன?” என்று அவனைப் போலவே புருவத்தை உயர்த்திக் கேட்க,
“என்ன அனுதாபமா?” என்றான் அகன்.
“ஒரு தாபமுமில்லை. சரி பையன் ரொம்ப பீல் பண்றானே? வாழ்க்கை குடுப்போம்னு நினைச்சேன். வேணாம்னா போடா” என்றாள் முகத்தை சிலுப்பியபடி.
அவளை நிதானமாய் பார்த்தவன்,
“என்கிட்ட எதுவுமில்லை. மாச சம்பளம் தான் வாங்குறேன். என் பேர்ல எந்த சொத்துமில்லை. என் அப்பாவோட சொத்தையும் வாங்கிக்க மாட்டேன். இப்படி ஒண்ணுமே இல்லாதவன் தான் உனக்கு வேணுமா?” என்று வேகமாய் டைப் செய்ய,
“உனக்கு எதுவுமே இல்லைன்னாலும் பரவாயில்லை. பட் ஹார்ட் மட்டும் பியூரா இருக்கணும். எனக்கு அது மட்டும் தான் வேணும். காலம் பூராம் உன்னை நான் கண் கலங்காம வச்சுக் காப்பாத்துறேன்” என்றாள்.
“நல்லா யோசிச்சுக்கோ” என்றான்.
“அகன் பிளீஸ்..! பீ சீரியஸ்” என்றாள்.
“உன்னை நான் எப்படி நம்புறது?” என்றான்.
“ம்ம்..! எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது. ஐ மீன் இது வரைக்கும் ஒரு லவ் கூட இருந்தது இல்லை. இங்க பார் என் மனசு மாறினாலும் மாறிடும். உடனே ஓகே சொல்லிடு. லிமிடெட் டைம் ஆபர் மட்டும் தான். அதை லைப் டைம் ஆபரா மாத்திக்கிற திறமை எல்லாம் உன்னைச் சேர்ந்தது” என்றாள்.
“ஐ பீல் லோன்லி. எனக்கு ஒரு பிரண்ட்லி ஹக் கிடைக்குமா?” என்றான்.
“நான் என்ன பேசிட்டு இருக்கேன்? இவன் என்ன கேட்டுட்டு இருக்கான்?” என்று அவள் பல்லைக் கடிக்க, அவளைத் தன் அணைப்புக்குள் இழுத்துக் கொண்டான்.
“அகன்” என்று தடுமாறி நின்றவளுக்கு இப்போது எந்த தயக்கமும் இருக்கவில்லை. அவள் கைகளும் அவனை அணைத்துக் கொள்ள, அத்தனை வேதனைகளையும் தான்டி அவன் முகம் புன்னகைத்திருந்தது. அவளாக அணைக்கும் முதல் அணைப்பு அல்லவா.
அவளைத் தன்னிலிருந்து விலக்கியவன்,
“எல்லாரும் என்னை பைத்தியக்காரன்னு சொல்றாங்க?” என்றான் டைப் செய்து.
“பரவாயில்லை” என்றாள்.
“எனக்கு கோபம் பயங்கரமா வரும்” என்றான்.
“பரவாயில்லை” என்றாள்.
மெல்ல புன்னகைத்தவன்,
“இந்த பைத்தியக்காரனே தான் வேணுமா?” என்றான் மீண்டும்.
“இந்த பைத்தியத்துக்கு ஏத்த வைத்தியம் நான் தான். பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்து நானே பத்திரமா வச்சுக்கிறேன்” என்றாள் கண் சிமிட்டி.
அவளை இழுத்து நெற்றியோடு முட்டியவன்,
“எனக்கும் வைத்தியம் பார்க்க ஓகே தான்” என்றான்.
ஏற்கனவே குறித்த முகூர்த்தத்தில் யுகந்தாரா, அகன் கார்த்திகேயனின் சரி பாதியாகியிருந்தாள்.