“அச்சோ போதும் விடுங்க” என்று அவள் வாய்விட்டு சொல்லிவிட “இப்போ உன்னை யாரும்மா பிடிச்சு வைச்சிருக்கா விடச்சொல்றே” என்றான் சைலேஷ்.
அவள் கண்திறந்து பார்க்க சைலேஷ் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். “என்னம்மா??”
“இல்லைண்ணா ஒண்ணுமில்லைண்ணா சாரிண்ணா” என்று அவள் பாட்டுக்கு உளறிக்கொட்டினாள்.
“ஹ்ம்ம்” என்று ஒரு பெருமூச்சுடன் அவன் திரும்பிக் கொண்டான். விதுரனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதழினியோ ‘அய்யோ இப்படி சொதப்பிட்டனே, ஆனாலும் இவரு நம்ம கற்பனையில ஓவரா தான் போயிட்டாரு. ரொமான்ஸ்ல பின்னி பெடல் எடுக்கறாரு மனுஷன், பேட் பாய்…’
‘இதுக்கு தான் சொல்வாங்களோ கற்பனைக்கு எல்லை கிடையாதுன்னு… ரொம்ப ஓவர் கற்பனை தான்…’ என்று தன்னையே திட்டியும் கொண்டாள்.
அதற்குள் வீடு வந்துவிட கெஸ்ட் அவுஸ் சாவி வாங்கி கதவை திறந்துவிட்டு அவனை பார்க்க “என்னை எதுக்கு பார்க்கறீங்க, சீக்கிரம் போய் எடுத்திட்டு வாங்க…” என்றவன் வெளியேவே நின்றுக் கொண்டான்.
‘ச்சே உள்ள கூட வரக்கூடாதா, ரொம்ப தான் ஸ்டிரிக்ட் ஆபிசரா இருக்காரு இவரு’ என்று மனதிற்குள்ளேயே அவனை திட்டிக்கொண்டு அவள் அறைக்கு சென்று அந்த கவரை எடுத்து வந்தாள்.
“இந்தாங்க” என்று அவனிடம் நீட்ட அதை வாங்கி முதலில் ஆன் செய்தான்.
கதவை பூட்டி சாவியை ஒப்படைத்துவிட்டு அவள் வர விதுரன் வண்டியை ஸ்டார்ட் செய்து வைத்திருந்தான். “ஏறுங்க” என்று சொல்ல முகம் வாட ஏறி அமர்ந்திருந்தாள்.
‘ஒரு தேங்க்ஸ் சொன்னா என்னவாம், அந்தளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்’ என்ற எண்ணம் ஓடி அவள் முகத்தை இன்னமும் வாடச் செய்தது.
“தேங்க்ஸ்மா” என்று அவள் முகம் பார்த்து சைலேஷ் சொல்ல வாயை இழுத்து பிடித்து புன்னகைக்க முயன்றாள்.
பின் திரும்பி அவன் நண்பனைத் தான் நோட்டம் விட்டான் சைலேஷ். ‘இவனுக்கு என்னாச்சு இவனும் சரியில்லையே…’ என்று ஆராய்ச்சியாய் பார்த்திருந்தான்.
விதுரன் அவளை ஹோட்டலில் இறக்கிவிட்டு வண்டியை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டான் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்.
‘போய்யா ரொம்ப தான் பண்ணுறே. கல்யாணத்துக்கு அப்புறம் வைச்சுக்கறேன் உனக்கு கச்சேரி’ என்று முணுமுணுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் அவள்.
மறுநாள் காலையிலேயே அவர்கள் மூணாரில் இருந்து கிளம்பிவிட அன்று இரவே வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
மகளுக்காய் வாசலிலேயே காத்திருந்தார் வேணி. அவள் அலுவலக நண்பர்கள் அவளின் வீட்டு வாசலிலேயே இறக்கிவிட கேட்டை திறந்து உள்ளே நுழைந்தாள்.
“இங்கேயே நில்லு இதழ்” என்ற வேணி “மகிழ் அக்கா வந்திட்டா அதை எடுத்திட்டு வா” என்று குரல் கொடுக்கவும் மகிழ் கையில் ஒரு தட்டுடன் வந்தாள்.
“என்னம்மா இதெல்லாம்??”
“திருஷ்டி கழிக்கணும் இதழ் உனக்கு… அன்னைக்கு நாங்க எவ்வளவு பதறிப்போய்டோம் தெரியுமா…” என்றவர் இளைய மகளை உள்ளே செல்லுமாறு பணித்துவிட்டு உப்பு மிளகு மிளகாய் அனைத்தும் கையில் எடுத்து அவளுக்கு சுற்றிபோட்டார் அங்கேயே.
“இப்போ உள்ள போகலாமாம்மா”
“போ…” என்று அவர் சொல்லவும் தான் உள்ளே சென்றாள்.
“என்ன இதழ் அட்வென்ச்சர் எல்லாம் பண்ணியிருக்க போல…” என்று ஆரம்பித்தாள் மகிழ்.
“ஏன்டி நீ வேற, நான் போய் குளிச்சுட்டு வர்றேன் முதல்ல…” என்றவள் இரவு உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள்.
———–
ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர் விதுரனும் சைலேஷும். “ஏன்டா ஒரு மாதிரி இருக்கே??” என்றான் சைலேஷ்.
“ஒண்ணுமில்லை”
“இல்லை நேத்துல இருந்தே நீ இப்படித்தான் இருக்கே?? வாக்கிடாக்கியை அங்க விட்டுட்டு வந்திருக்க, அதை அந்த பொண்ணு ஞாபகப்படுத்தி எடுத்துக்கொடுத்தா ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை நீ”
“என்னடா சொல்றே?? இந்த பொண்ணுப் பார்க்கற சம்பவம் எல்லாம் எப்போ நடந்துச்சு”
“அதெல்லாம் எப்பவோ முடிஞ்சது”
“ஏன்டா எனக்கு சொல்லலை”
“உனக்கு தெரியும்”
“நீ சொல்லவே இல்லையாம் அப்புறம் எப்படி தெரியும் எனக்கு” என்று அவன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டிருந்த சைலேஷ் எதுவோ புரிந்தது போல சட்டென்று பேச்சை நிறுத்தி நண்பனை பார்த்தான்.
“என்னடா சொல்றே?? நீ சொல்றதை பார்த்தா…”
“ஹ்ம்ம் அவ தான்…”
“எப்போ நடந்துச்சு இதெல்லாம்??”
“எனக்கு தெரியலை… நேத்து அவளை போய் கூப்பிடுறதுக்கு முன்னாடி எங்கம்மா எனக்கு போன் பண்ணியிருந்தாங்க…”
“நானும் உன்கூட தானேடா இருந்தேன் அப்போ…”
“நீ குளிக்க போயிருந்தே…”
“என்னன்னு சொல்லுடா எனக்கு மண்டை காயுது” என்று சைலேஷ் கேட்க விதுரன் சொல்லவாரம்பித்தான்.
————
இதழினியிடம் பேசிவிட்டு விதுரன் போனை வைக்க அவன் அன்னையிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
“ஹ்ம்ம் ஆமாம்மா மழையினால நெறைய இடத்துல மண்ணு சரிஞ்சு போச்சு. எப்பவும் பாதையில தான் மண் சரியும். பாவம் இந்த முறை பல பேரு வீட்டிலவே மண்ணு சரிஞ்சு போச்சு”
கற்பகம் வெகுவாய் வருத்தப்பட்டார் அதற்காய். “அப்புறம் விதுரா இன்னைக்கு அந்த பொண்ணு வீட்டுல இருந்து கூப்பிட்டு இருந்தாங்கப்பா”
“யாரு வீட்டில இருந்தும்மா”
“உனக்கு போய் பார்த்திட்டு வந்தோமே பத்து பதினைஞ்சு நாள் முன்னாடி. அந்த பொண்ணு பேரு கூட…”
“என்ன விதுரா இப்படி என்னவோ போல பேசுற… எனக்கும் முதல்ல அவங்க உன் வேலையை காரணம் காட்டி உன்னை வேணாம்ன்னு சொன்னது கஷ்டமா தான் இருந்துச்சு”
“ஆனா பாரு இதுக்கு முன்னாடி நாம எவ்வளவு இடத்துல உனக்கு பார்த்தோம். எல்லாமே இந்த வேலையால தானே வேணாம்ன்னு சொன்னாங்க. ஒண்ணு பொண்ணு பார்க்க முன்னாடியே சொல்லிருவாங்க இல்லை அங்க போயிட்டு வந்த பிறகு சொல்லுவாங்க”
“இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க”
“அவங்க எல்லாரையும் போலத்தானே இவங்களும் செஞ்சாங்க. அதுக்காக நாம கோபப்பட முடியுமா சொல்லு. பாரு இப்போ அவங்களுக்கே உன்னை புரிஞ்சு அவங்களாவே தேடி வந்து பேசுறாங்க…”
“அதனால…”
“இந்த சம்மந்தமே முடிச்சிடலாம்ன்னு என் மனசுக்கு படுதுப்பா”
“அம்மா!!”
“என்ன விதுரா உனக்கு பிடிக்கலையா??”
“நான் எதுவும் சொல்லலைம்மா”
“அப்போ நான் என்ன செய்யட்டும் அவங்ககிட்ட சரின்னு சொல்லிரட்டுமா…” என்று அவர் கேட்க “நாளைக்கு சொல்றேன்ம்மா” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.
அவன் வைப்பதற்கு முன் கற்பகம் அவனிடம் “விதுரா இதுக்கு மேல உனக்கு கல்யாணம் தள்ளிப்போச்சுன்னா அடுத்து அஞ்சு வருஷம் கழிச்சு தான் நடக்கும்ன்னு ஜோசியர் சொல்றாருப்பா”
“எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. உனக்கு ஒரு கல்யாணம் முடிச்சா தானே அடுத்து உன் தம்பிக்கு செய்ய முடியும். யோசிச்சு நல்ல முடிவா எடுப்பா… அந்த பொண்ணும் கூட நல்ல பொண்ணா தான் இருக்கு”
————-
விதுரன் சொல்லி முடித்திருக்க “அப்போ உங்கம்மாகிட்ட நீ ஓகே சொல்லிட்ட அப்படித்தானே…”
“ஆமா”
“ஏன் சொன்னே?? உனக்கு தான் பிடிக்கலைல்ல அப்புறம் ஏன் ஓகே சொன்னே??”
“இங்க பாரு அவங்க மாத்தி மாத்தி பேசினது எனக்கு பிடிக்கலை தான். நான் ஓகே சொன்னது எங்க பேமிலியை மனசுல வைச்சு தான்”
‘அவ்வளவு நல்லவனாடா நீ’ என்ற லுக்கை கொடுத்தான் சைலேஷ்.
“எதுக்கு அப்படி பார்க்கறே??”
“இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லவே இருந்திருக்கலாம்”
“அதை உன் ஆசை தங்கச்சிகிட்ட சொல்லு, என்னை பார்த்து ஏன் சொல்றே” என்று திருப்பினான் விதுரன்.
“என்னது தங்கச்சியா”
“அப்படித்தானே கொஞ்சிக்கிட்டீங்க ரெண்டு பேரும்”
“நாங்க கொஞ்சினதை நீ பார்த்தே??”
“அவ தான் அண்ணா அண்ணான்னு உருகறா. அவ போன் நம்பர் எல்லாம் உனக்கு தர்றா வேற எப்படி சொல்றதாம்…”
‘பார்க்கப்போனா நான் தானே இவனை கலாய்க்கணும். இங்க இவன்ல என்னைய கலாய்க்கறான், என்னடா நடக்குது இங்க’
“போதும் போதும் எங்க பெருமை பேசினது எல்லாம். நீ எதுக்கு ஓகே சொன்னே?? எனக்கு அதுக்கு காரணம் தெரிஞ்சாகணும்”
“அதான் சொன்னேன்ல எங்க அம்மாவுக்காக தான் ஓகே சொன்னேன்ன்னு”
“எங்கப்பாவால தலை குனிஞ்ச எங்க குடும்பம் தலை நிமிர்ந்தது என்னாலன்னு எங்கம்மா சொல்லிட்டு இருப்பாங்க… அவங்களோட சந்தோசத்தை எந்த விதத்துலயும் என்னால குலைக்க முடியாது சைலேஷ்”
நண்பன் சொல்வது அவனுக்கு புரிந்தது. இருந்தாலும் அவனுக்கு பெரிய சந்தேகம் இருந்ததென்னவோ உண்மை. வித விதமாய் நண்பனிடம் கேட்டு பார்த்தான் அவன் எதிர்பார்த்த பதிலை வாங்குவதற்காய்.
“அன்னைக்கு ஏன் அந்த பொண்ணுக்கு தேங்க்ஸ் கூட சொல்லலை. அதுக்கு முதல்ல பதில் சொல்லு”
“பின்னே ஒரு நாள்ல அவ என்ன வேலையெல்லாம் பார்த்திருக்கான்னு பாரு. அவ்வளவு சீக்கிரம் அவங்க வீட்டில பேசி அவங்க எங்க வீட்டில பேசின்னு என்னென்னவோ செஞ்சிருக்கா. எனக்கு அவ மேல இருக்க கோபம் போகலை அதான் அப்படி நடந்துக்கிட்டேன்”
‘இவன் சொல்றதை நம்பலாமா’ என்ற எண்ணம் தான் சைலேஷுக்கு.
“இருந்தாலும் நீ பண்ணுறது ரொம்பவே அதிகப்படி. நம்புற மாதிரியும் இல்லை. அன்னைக்கு நைட் என்னவோ…” என்று சைலேஷ் பேசும் போதே இடைமறித்தான் விதுரன். “நான் இப்போ என்ன சொல்லணும் நீ எதிர்பார்க்கறே??”
“உண்மையை சொல்லணும்”
“நீ என்ன கேட்டாலும் என் மனசுல என்ன தோணிச்சோ அதை தான் நான் செஞ்சேன், செய்வேன். நீ எதிர்பார்க்கிற பதிலை எல்லாம் என்னால சொல்ல முடியாது. ஏன்னா என் மனசுல எந்த எதிர்பார்ப்பும் இல்லை போதுமா” என்று முடித்துவிட்டான் விதுரன்.
————
“இதழ் என்ன யோசிக்கறே?? மாம்ஸ் பத்தியா??”
“ஹ்ம்ம் ஆமா மகிழ். என் மேல செம கடுப்புல இருப்பாரு அவரு…”
“என்ன சொல்றே இதழ்??”
“பின்னே நான் உங்களுக்கு போன் பண்ணி கட்டினா அவரை தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சு கலாட்டா பண்ணியிருக்கேன். அம்மாவும் அப்பாவும் பாவம்டி என்னால ரொம்ப சங்கடம் அவங்களுக்கு”
“அவரோட வீட்டில பேசியிருக்காங்க மன்னிப்புலாம் கேட்டிருக்காங்க… முதல்லயே நான் கம்முனு இருந்திருக்கணும்… அவங்களுக்கும் இது தேவையில்லாத மன உளைச்சலை தானே கொடுத்திருக்கும்”
“அதுக்கு என்ன பண்ணுறது இதழ்… இதெல்லாம் தெரிஞ்சு தானே நீ பண்ணே”
“என்னடி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டே”
“காரணமில்லாம காரியமில்லை தானே. அவரை நீ புரிஞ்சுக்க கிடைச்ச சந்தர்ப்பமா இதை நினைச்சுக்கோ. அதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவுமில்லை. சும்மா நீ பீல் பண்ணுறது எல்லாம் வேஸ்ட் இப்போ”
“இனி உன்னோட கல்யாணத்தை பத்தி கனவு காணு… மாம்ஸ் கூட வாழப்போற வாழ்க்கையை பத்தி யோசி… முடிஞ்சதை விட்டுத்தள்ளு நான் அவ்வளவு தான் சொல்லுவேன் உனக்கு…” என்றாள் தங்கை நீளமாய். மகிழ் சொல்வது அவளுக்கு புரிய அதற்கு மேல் அதைப்பற்றி அவள் யோசித்திருக்கவில்லை.
இரு வீட்டினரும் முதலில் பேசி வைத்திருந்தது போல நிச்சயம் பின் திருமணம் என்று தனித்தனியாய் வைப்பதை விட முதலில் திருமணத்திற்கு குறித்திருந்த நாளிலேயே அதை நடத்துவது எனவும் அதற்கு முதல் நாள் நிச்சயத்தை வைத்துக் கொள்வது எனவும் ஒரு மனதாக முடிவெடுத்திருந்தனர்.
ஒரு நல்ல நாளில் விதுரனையும் அழைத்துக்கொண்டு அவன் வீட்டினர் அவள் வீட்டிற்கு வந்து ஒப்பு தாம்பூலம் செய்து கிளம்பியிருந்தனர்.
இதோ இரு வீட்டினரும் மண்டபத்திற்கு வந்து இறங்கியிருந்தனர். சிறிது நேரத்திலேயே திருமண நிச்சய வேலைகள் தொடங்க இரு வீட்டு பெரியவர்களும் உறுதி செய்து மணப்பெண்ணுக்கு நிச்சயப்புடவையை கொடுக்க இதழினி புடவை மாற்றி வந்து அமர்ந்திருந்தாள்.
அனைவரும் அவளுக்கு நலங்கு வைத்துக்கொண்டிருக்க அவளெதிரில் அமர்ந்திருந்தான் விதுரன் எதையும் கண்டுக்கொள்ளாமல். ‘போடா’ என்று அவனை மனதோடு திட்டிக்கொண்டு மறுநாள் விடியலை எதிர்நோக்கியிருந்தாள் விதுரனின் இல்லத்தரசியாகப் போகும் நம் நாயகி.