என் அலாதிநேசம் நீ!..

ஊரின் மத்தியில்.. அடர்ந்த ஜனத்திரள் கொண்ட மார்கெட் பகுதி. இரவு மணி எட்டு. பெருமாள் கோவில்.. சாரை சாரையாய் மக்கள்.. கோவில் நடை சாற்றுவதற்கு முன் பகவானை கண்டிட வேண்டும் என ஓடும் பக்தர்கள் ஒரு கூட்டம் என்றால்.. மறுபுறம் நிறைவாய் அந்த பரம்பொருளை கண்ணாற கண்டுவிட்டு.. அவனிடம் தன் குறைகளை சொல்லிய நிறைவில்.. அங்கிருந்த கடைகளில் வேடிக்கை பார்த்து பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர், மக்கள்.

அந்த கடைகளில் வாசுதேவன் கடையும் ஒன்று. பூஜை பொருட்கள்.. சுவாமி சிலைகள்.. அழகான வேலைபாடுகள் கொண்ட செம்பு பித்தளை அலங்கார பொருட்கள்.. மர சட்டமிட்ட முகம் பார்க்கும் கண்ணாடி.. துளசி மாலை.. கருங்காலிமாலை.. ஸ்படிக மாலைகள்.. வாயிற் தோரணங்கள்.. அழகான பித்தளை விளக்குகள்.. ஸ்படிக சிற்பங்கள்.. என பூஜை மற்றும் அலங்கார பொருட்கள் கொண்ட கடை.  வாசு, கல்லாவில் அமர்ந்து இருந்தார்.. நெற்றியில் சந்தனம்.. வெள்ளை வேட்டி.. அரைகை வெள்ளை சட்டை.. கழுத்தில் கருங்காலி மாலை.. என தோதாக அமர்ந்துக் கொண்டு.. கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்.

வேலை செய்பவர்கள் என நான்கு ஆட்கள் இருந்தனர். எல்லோரும் பொருட்களை எடுத்து காட்டிக் கொண்டும்.. கஸ்டமர்ஸ்சிடம் விலையை சொல்லிக் கொண்டும் இருந்தனர். கடை அடைக்கும் நேரம் என்பதால் வியாபாரம் மும்முரமாக நடந்தது.

இவருக்கு இங்கே ஒரு கடை.. சமயபுரத்தில் ஒருகடை. எனவே, காலையில் அங்கே சென்றுவிட்டு.. மதியம் வருவார். மதியம் உண்டு முடித்து.. மீண்டும் அங்கே சென்று பார்த்துவிட்டு, ஏழு மணிக்கு மேல்தான் இங்கே இந்த கடைக்கு வருவார். பின் இருகடை கணக்குகளையும் இங்கே அமர்ந்து பார்ப்பார் வரதராஜன். கடையடைத்து.. வருவதற்கு 10:30க்கு மேல் ஆகும்.

கீழே, பெரிய கடை.. மேலே வீடு. இப்போதுதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்படி கடையை பெரிது செய்து.. வீட்டை மேலே எடுத்து கட்டி இருந்தார். அதுவரையில்.. முன்புறம் கடை.. பின்புறம் வீடு என இருக்கும். 

இப்போது அவரின் மகள் கீழிறங்கி வந்தாள்.. மிர்த்திகா. தன் தந்தையின் அருகே சின்ன டம்பளர் அளவிலான பிளாஸ்க்..  ஒரு சின்ன சில்வர் கிண்ணத்தில் சுண்டல்.. என கொண்டு வந்து வைத்தாள். 

வாசுதேவன்.. கணக்குகளை நிறுத்திவிட்டு.. மகளை நிமிர்ந்து பார்த்தார்.. “ஏன் தலை வாரிக் கொள்ளவில்லையா.. களைந்து இருக்கு..” என்றார்.

மிர்த்திகா கைகட்டவில்லை, ஆனால் முகத்தில் கலவரம் அப்பட்டமாக தெரிய உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டே  “ஐந்து மணிக்கே வாரிக்கிட்டேன் ப்பா. இப்போ தலைவலி, அதான்.. கொஞ்ச நேரம் படுத்திருந்தேன்” என்றாள்.

வாசுதேவன் “ஏன் என்ன ஆச்சு.. எங்க சுசிலா அம்மா.. கூப்பிடு” என்றார்.

மிர்த்திகா “அப்பா, ஒன்னுமில்லா அப்பா.. தலைவலிதான்..” என்றாள்.

வாசுதேவன் “கண்ணு என்ன சிவப்பா இருக்கு.. அழுதியா” என்றார்.

மகளோ இன்னும் நடுங்கிய குரலில் “இல்ல பா.. கொஞ்ச நேரம் தூங்கிட்டேன், அதான்” என்றாள்.

மகளை நம்பா பார்வை பார்த்த வாசு.. “எங்க ஜெகதீஷ்” என்றார்.

மகள் “அவன் இன்னும் வரலைப்பா” என்றாள்.

வாசு நெற்றி சுருங்க.. ஏறிட்டார் மகளை “இல்ல பா.. அவன் ட்ரைன் லேட்.. வந்திடுவான்.” என்றாள்.

வாசு “ஓ.. சென்னை போயிருக்கானில்ல.. சரி நீ சாப்பிட்டு படு.. டிவி போன் பார்க்க கூடாது. போனை டிவி டேபிளி எப்போதும் போல வைச்சிட்டு போய் தூங்கு” என்றார், இயல்பான குரலில்.

மிர்த்திக்கா தலையை மட்டும் எல்லா பக்கமும் உருட்டிவிட்டு.. மேலே சென்றாள்.

வாசுதேவன் கணக்குளை பார்க்க தொடங்கினார்.

மிர்த்திக்கா மேலே வந்தாள்.. படி ஏறியதும் சின்ன இடம் அதில் ஷூ ஷெல்ப்.. சின்ன சுவர் அலங்கார முகம் பார்க்கும் கண்ணாடி. அடுத்து, அழகான வரவேற்பறை.. ம் அழகானதுதான்.. அதற்கு காரணம் அந்த ஊஞ்சல். யானையும் அன்ன பட்சியும்.. ஆங்காங்கே அந்த பித்தளை சங்கிலியில் பிணைந்திருக்க.. அதன் முடிவில் தேக்குமர ஊஞ்சல். இந்த சோர்ந்து வரும் வண்ண மயிலை தாங்க காத்திருக்கிறது எப்போதும் போல. ஆனால், அவள் அதிகம் அங்கே அமரமாட்டாள். அந்த ஊஞ்சலின்  எதிரில்.. பெரிய உருளியில் மஞ்சள் வண்ண பூக்கள். அருகில் மாலையில் ஏற்றி வைத்திருந்த அகர்பத்தியின் மணம்.. அந்த இடத்தை ரம்யமாக்கியது. ஆனால், இதெல்லாம் மனதில் இப்போதும் பதியவில்லை மிர்த்திக்காவிற்க்கு.

மிர்த்திக்கா, தரை அதிராமல் நடந்து வந்தவள்.. நேராக கிட்சென் சென்றாள். அங்கே தோசை ஊற்றிக் கொண்டிருந்த சுசிலா அம்மா.. “என்ன மிர்த்தி ம்மா.. அப்பா சாப்பிட சொன்னாரா” என்றார் புன்னகை முகமாக.

மிர்த்திகா “ம்.. இரண்டு தோசை போதும் பாட்டி” என்றாள். அவரும் ஏதும் சொல்லவில்லை. தந்தை சொன்னது போல.. உண்டுவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள் பெண். டிவியின் அருகே இருந்த தனது போனை எடுத்து பார்த்தாள்.. எப்போதும் போல.. அவளின் அத்தை.. மாமா பிள்ளைகள் எதோ பார்வோர்ட் செய்தியை அனுப்பி இருந்தனர். மற்றபடி சுவாரசியமாக ஏதும் இல்லை. இன்ஸ்டாகிராம் சென்றாள்.. ரீல்ஸ் பார்த்தாள். நேரம் தொலைந்தது.

சற்று நேரத்தில் சுசீலா “மிர்த்தி ம்மா.. அப்பா கேட்ப்பார்.. போனை வைச்சிட்டு தூங்கு” என்றார்.

மிர்த்திகா “ம்.. பால் வேண்டாம், அத்தை ப்ளீஸ்” என்றாள்.

சுசீலா “சரி டா..” என்றுவிட்டார்.

மிர்த்திக்கா “அப்பாகிட்ட சொல்லாதீங்க” என்றாள்.

சுசீலா “ம்.. நீ போய் படு” என்றார்.

மிர்த்திக்கா, திரண்டு வரும் மஞ்சள் வண்ண வெண்ணையின் நிறம்.. கண்கள் அழகான மானின் ஜாடை.. எதோ எழுதி வைத்தது போல கூர்மையாக இருக்கும்.. அடர் கூந்தல்.. சரியாக ஐந்தடி ஐந்து அங்குலம். ஆனால், இதெல்லாம் சட்டென அவளிடம் தெரியாது. கண்களில் ஒளிஇல்லை.. நிறத்தில் பொலிவில்லை.. முகத்தில் மிரட்ச்சி மட்டுமே.. கலையில்லை. மங்கி போயிருக்கிறாள் பெண். இப்படி கலையிழந்த ஓவியமாக இப்போது மிர்த்திக்கா. எதற்கும் ஒரு நடுக்கம்.. எங்கும் ஒரு கலக்கம்.. எப்போதும் அப்பாவின் சொல் அவளின் காதுகளில் விழுந்துக் கொண்டே இருக்கும். எத்தனை இட்லி சாப்பிட வேண்டும்.. என்ன உடை எடுக்க வேண்டும்.. போனை எப்போது பார்க்கலாம்.. எந்த சேனல்.. டிவியில் பார்க்கலாம் என எல்லாம் அவளுக்கு சொல்லிக் கொண்டே இருக்கப்படும். அப்படிதான் அவள் நடக்க வேண்டும். ம்.. இவள் இந்த ஐந்தாறு வருடங்களாக செக்கு அறைக்க பழக்கப்பட்ட மாடு போல.. ம்.. பழக்கிவிட்டனர். இந்த வீட்டையும் இப்போது அவள் முதுகலை.. இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கும் கல்லூரி தவிர வேறு எங்கும் அவள் சென்றதில்லை. தோழிகளின் திருமணம் பிறந்தநாள்.. ஒரு சினிமா ஹோட்டல் என எங்கும் அவள் சென்றதில்லை.

உறவினர் வீடு எப்போதாவது.. மூன்று மாதம் முன் தன் அத்தையின் பெண் திருமணத்திற்கு சென்று வந்தாள். அம்மாவின் வீட்டு சொந்தங்களோடு அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லை. எனவே, அங்கே செல்லும் வாய்ப்பும் இல்லை. அதனால், இவள் செல்லும் ஒரே இடம் இந்த அத்தை வீடு மட்டுமே, அதுவும் ஒரே நேரம்தான். காலை சென்றால்.. மதியம் வந்துவிடுவாள். மாலை சென்றால்.. இரவில் வீடு வந்துவிடுவாள். ஒரு சின்ன உலகம் மட்டுமே அவளுடையது. அதுவும், அவளோடு எப்போதும் அவளின் தந்தை இருப்பார்.. இல்லை, அவளின் அத்தை காமாட்சி இருப்பார். இவர்கள் இருவரும் இல்லாமல் அவள் வெளியே சென்றதில்லை. அப்படி செல்ல அவளுக்கு அனுமதி இல்லை. இன்னமும் கல்லூரிக்கு அவளின் தந்தைதான் விட்டுவிட்டு கூட்டி வருவார்.. அவளின் தம்பி.. தன் மகனை கூட நம்பி அனுப்பமாட்டார் வாசு. அப்படி ஒரு தங்கத்தால் செய்த கூண்டு இவளுக்கு. எல்லாம் காரணமாகத்தான்.

இப்போது மிர்த்திக்கா, தனது அறைக்கு வந்தாள். பெரிய அறை.. சின்னதாக படிக்கும் இடம் முதலில்.. அங்கே ஒரு பெரிய ‘ஷெல்ப்’ அதன் பின்பக்கம் படுக்கை..  அதற்கு அடுத்து பாத்ரூம்.. என நீளமான அறை. பெண்ணவள் வந்து தனது கட்டிலில் அமர்ந்தாள்.. என்னமோ நீண்டநாள் சென்று.. மனது பாரமானது போல ஒரு உணர்வு. கண்ணில் நீர் நிறைந்து நின்றது. அதை அவள் ஒருபெருட்டாக எடுக்காமல்.. கண்ணில் அந்த நீர் வழிந்து கன்னம் தாண்டுகிறது.. உதட்டில்.. விழுகிறது.. அவளோ இயல்பு போல.. தனது படுக்கையின் தூசியை தட்டிக் கொண்டிருந்தாள் ஒரு பெட்ஷீட்டின் உதவியோடு.

அவளின் வாழ்க்கையில் எப்போதோ விழுந்துவிட்டிருந்த தூசியை இன்னமும் என்னால் தட்ட முடியவில்லை.. அதன் சுவடை இன்னமும் என்னால் கடக்க முடியவில்லை.. என மனதில் ஒரு கோவம்.. அதன் அதிர்வு.. அவளின் கைகளில் தெரிந்தது.. “ஷாட்.. டும்..” என ஒரு ஐந்து நிமிடம் விடாமல் அந்த மெத்தையை தூசி தட்டினாள். கைகள் ஓய்ந்து தோள்பட்டை வலி எடுக்கவும்.. தளர்ந்து அமர்ந்தாள் அந்த மெத்தையில், மிர்த்தி. இன்னும் கண்ணீர் பொல பொலவென கொட்டியது கண்ணிலிருந்து. ஏதும் செய்யாமல் அமர்ந்துக் கொண்டாள்.

அப்படியே படுத்துக் கொண்டாள். கண்கள் மூடவில்லை.. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.. ம்.. சரிதான். ஒன்னே ஆயிரமாக நிக்கிறதே.. என கண்களை விரித்து வைத்துக் கொண்டாள்.. நிழலாக தன் அன்னையின் முகம் தெரிந்தது.. “ஏன் ம்மா.. என்னை இப்படி விட்டுட்டு போயிட்ட.. நீ இருந்திருந்தால் நான் தப்பு செய்திருக்கமாட்டேனில்ல.. போ ம்மா.. அப்பா.. அப்பா என்னை பார்த்து சிரித்தே ஆறு வருஷம் ஆச்சு.. ம்மா.. நான் என்ன செய்தால் சிரிப்பார்.. ம்.. “ என்றாள் மேலே பார்த்துக் கொண்டு.

கண்ணின் இருபக்கமும் கண்ணீர் வழிந்தது.. “ம்.. அவர் எப்போதும் என்னை மன்னிக்கவே மாட்டார்.. தெரியும்.” என்றாள் மீண்டும் மேலே பார்த்து தன் அன்னையிடம் “என்னை என்னாலேயே மன்னிக்க முடியலையே.. ஏன் ம்மா.. நீ என்னை விட்டுட்டு போன.. அம்மா” என்றவள் ஒரு தலையணையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

இப்போது அவளின் தம்பி ஜெகதீஷ் “அக்கா.. மிர்த்தி” என சின்னதாக அழைத்துக் கொண்டே அறைக்கு வந்தான்.

மிர்த்திக்கா எழுந்து அமர்ந்தாள். காய்ந்த கண்ணீர் தடம் அவளின் கண்ணீன் ஓர தோல்பகுதியை இறுக்கியது. பெண்ணவள்.. மென்மையாக அதனை விரல்களால் துடைத்துக் கொண்டே எழுந்து படிக்கும் இடம் வந்தாள்.

ஜெகதீஷ் உள்ளே வந்தவன் “சாப்பிட்டியா அக்கா” என கேட்டுக் கொண்டே அமர்ந்தான்.

மிர்த்திக்கா “ம்.. நீ எப்போ வந்த” என்றாள்.

தம்பி “அப்போவே வந்து.. குளிச்சி, சாப்பிட்டுதான் இங்க வரேன்.. அப்பா இப்போதான் மேலே வந்தார். சுசீலா பாட்டி சொன்னாங்க.. நீ தூங்கி இருப்பேன்னு.. எனக்குதான் தெரியுமே, நீ தூங்கியிருக்க மாட்டேன்னு, அதான் வந்தேன். என்ன பழைய யோசனையா” என்றான், அக்காவின் முகத்தை ஆராய்ந்துக் கொண்டு.

மிர்த்திக்கா கண்மூடி தலையசைத்தாள் ‘இல்லை’ என.

ஜெகதீஷ் தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து.. பெண் டிரைவ் எடுத்து கொடுத்தான்.. “இந்தா புது படம்.. ஹாருக் நைன் படம்.. பாரு.. நாளைக்கு லீவ்தானே.. பாரு.. யோசிக்காத..” என்றான்.

மிர்த்திக்கா சலிப்பாக புன்னகைத்துக் கொண்டே அந்த பென்டிரைவ் வாங்கிக் கொண்டாள். பின் “என்ன ஆச்சு இன்டெர்வ்வியூ” என்றாள்.

ஜெகதீஷ் “ம்.. ஒகேதான். ஒரு ஆறுமாசம் வொர்க் ப்ரோம் ஹோம், அப்புறம்தான் ஆபீஸ் கூப்பிடுவாங்க அக்கா.” என்றான்.

மிர்த்திக்கா “ஓ.. அப்பா என்ன சொன்னார்” என்றாள்.

ஜெகதீஷ் “இன்னும் அவர்கிட்ட பேசலை.. காலையில் சொல்லிக்கிறேன்.. ம்.. நீ படுக்கா” என்றவன் எழுந்து தனதறைக்கு சென்றான்.

ஜெகதீஷ் இஞ்சினியரிங் மாணவன். இல்லை வேலை பார்க்க தொடங்கி ஆறுமாதம் ஆகிற்று. கல்லூரி இறுதி வருடம் எக்ஸாம் எழுத காத்திருக்கிறான். முன்பே வேலை கிடைத்துவிட்டது. இப்போது நேரில் சென்று இன்டர்வியூ அட்டென் செய்து வந்திருந்தான் இன்று.

மிர்த்திக்கா அமைதியாக படுத்துக் கொண்டாள்.. விளக்கை அனைத்துவிட்டு. அவளுக்கு படம் பார்க்க தோன்றவில்லை.. தம்பி பேசி சென்ற இதத்தை உணர்ந்துக் கொண்டே உறங்கிவிட எண்ணினாள் பெண்.. அப்படியே கண்மூடிக் கொண்டாள்.

அந்த அமைதியில் அதன் ஆழத்தில் மெல்ல மெல்ல ஒரு உருவம் மேலே வந்தது.. அவனை.. அந்த முகத்தை அவளால் தடுக்க முடியாது.. அதே போல ஏற்கவும் முடியாது. கண்களை திறக்கவில்லை பெண்.. எதோ தியானம் செய்பவள் போல.. அவனின் கண்களை தனது மனக்கண்ணில் தேடினாள்.. 

ஹோ!.. இன்றும் ஏமாற்றம்.. அவனின் விழிகளை காணவில்லை.. எப்போதும் போல.. பெண்ணவளின் உதடுகள் எப்போதும் போல அலட்சிய சிரிப்பில் வளைந்தது.. ‘அது காதல் இல்லை.. கண்களில் அவன் காதலை காட்டியதே இல்லை..’ என மீண்டும் இன்றும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஆனாலும், அவனின் புன்னகை முகம் அவளிடம் பேசியது ‘என்னை நீ தேடி பலகாலம் ஆகுது.. எப்போ வருவ’ என்றது. கற்பனையோ அற்புதமோ.. எல்லாம் காதலில் மட்டுமே சாத்தியம். 

பெண்ணவளின் முகம் லேசாக சிவந்தது.. பின் புன்னகை.. மீண்டும் அவனின் குழையாத குரல் ‘என்ன பதில் சொல்லல..’ என்றது. பெண்ணவள் கண்விழித்துக் கொண்டாள். இப்போதுதான் கண்ணில் நீர்.

“நீந்தி வரும் நிலாவினிலே 

ஓராயிரம் ஞாபகங்கள்..

நீண்ட நெடும் கானாவினிலே 

நூறாயிரம் தீ அலைகள்..”