யோகி அப்படியே பழைய நினைவில் சற்று நேரம் கழித்தான்.. துரை வந்தான் உணவு வாங்கிக் கொண்டு. இருவருக்குள்ளும் பேச்சு சென்றது. ஆனால், எதோ யோகி சரியாக இல்லை என்பதாக பேச்சில் தெரிந்தது துரைக்கு. அவனை தனியாக விட்டு.. தன் வேலையை பார்த்தான் நண்பன்.
இரண்டுமணி நேரம் சென்று வந்து பார்க்க.. அப்போதும் உணவு உண்ணாமல்.. அப்படியே அமர்ந்திருந்தான் யோகி. நண்பனும் பார்த்துவிட்டு, “டேய்.. யோகி, சாப்பிடலையா.. மணி 3” என்றான்.
யோகி அவளின் நினைவை தள்ளி வைக்க நினைத்து.. எழுந்து குளித்து.. உணவு உண்டான். மனது இன்னும் அவளிடமே இருந்தது.
துரை “கிளம்பு.. ஆபீஸ் போலாம்.. இதை கொஞ்சம் டைப் செய்யணும். நம்ம தாஸ் சர் லீவ்வாம். போலாம் சரியா இருக்கும்.” என கிளப்பினான்.
யோகி ஏதும் சொல்லாமல் தன்னுடைய நோட்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பினான். காரில் வந்தது போல அல்லாமல்.. இருவரும் பைக்கில் கிளம்பினர்.
யோகி, பாதியில் தன் நண்பனிடம் வண்டியை நிறுத்த சொன்னான். நேற்றைய சிக்னலில் அவள் சாயல் தெரிந்ததால்.. அந்த சிக்கனலில் இறங்கிக் கொண்டான்.
துரை “ஏன்.. இங்க என்ன வேலை..” என நான்குமுறை கேட்டும் பதில் சொல்லவில்லை யோகி. துரை இறக்கிவிட்டு கிளம்பினான்.
யோகிக்கு, மனம் அந்த இடம் தாண்ட அவனை அனுமதிக்கவில்லை. ‘கல்யாணமே ஆகியிருகட்டும்.. ஏன் டி, என்னை கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்.. என்ன என கேட்டுவிட்டு சென்றுவிடுகிறேன்’ என எண்ணிக் கொண்டு.. அமைதியாக அந்த சாலையை கடந்து எதிர்புறம்.. நேற்று அவளை பார்த்த இடத்தில் நின்றுக் கொண்டான்.
என்னமோ இயற்கை.. உள்மனம்.. விதி.. காதல்.. இப்படி எதுவோ ஒன்று அவனை செலுத்துகிறது.. அதை மீற முடியவில்லை. அத்தோடு அல்ப்பாசையும் கூட.. ‘அவளாக இருந்தால் ஒரு நொடியேனும் பார்த்திட மாட்டேனா..’ என்ற அல்பாசை.
மாலை 5 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது நேரம். ஏனோதானோவென்ற டி-ஷர்ட், கண்களை மறைக்கும் கூலர்.. கையில் செம்பு காப்பு.. அமைதியாக நிற்பது போல இருந்தாலும்.. அத்தனை பரபரப்பு அவனிடம். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு.. என்ன செய்வதென்றே தெரியாமல் அந்த வீதியில் இருந்த எல்லா கடைக்கும் சென்றான்.
முதலில் ஒரு செருப்பு கடை.. அங்கே சென்று அளவு பார்த்தான்.. இந்த மாடல் இருக்கு என்றான்.. பின் யோசித்து நின்றான், வெளியே வந்துவிட்டான். பின் ஒரு சிற்றுண்டி கடை.. அங்கே சென்று.. கொறித்தான். பின், துணி கடை சென்றான். மீண்டும் வெளியே வந்து நின்றுக் கொண்டான். அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே இருந்தான். நேரம் என்னமோ கடக்கவேயில்லை.
யோகி நேற்றைய நேரத்தை கணக்கெடுத்து.. இப்போது அவள் சென்று திரும்பிய இடத்திலிருந்து பார்வையால் தேட தொடங்கினான். நேரம் சென்றது.
அவனே ஓய்ந்து திரும்பும் வேளையில் பஸ்சிலிருந்து கீழே இறங்கினாள் மிர்த்திக்கா. ம்.. அவன் தேடிக் கொண்டிருந்த மிர்த்திக்கா.
யோகியின் சுவாசம் தப்பித்தான் போனது. அவசர அவசரமாக அவளை ஆராய்கிறான். ம்.. அவளை கண்ணால் பார்த்தவனின் காதல் மனது.. அடித்துக் கொண்டது ‘கல்யாணம் ஆகியிருக்க கூடாது’ என அவளின் கழுத்து.. கால்.. நெற்றி.. என ஆராய்ந்தான் தூரமாக நின்று. அஹ.. எதோ அவனின் கண்ணில் ஒரு மினுமினுப்பு. அந்த ஆணின் கண்ணில் கண்ணீர்தான் அது.. மினுமினுக்கிறது. இமைக்கவில்லை அவன், அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தான்.. என் மிர்த்திதானா இது.. எவ்வளோ வருஷம் ஆச்சு.. ஏன் இப்படி இருக்கா..’ என அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அந்த மினுமினுப்பு போய் கண்ணில் சிவப்பு ஏறிவிட்டிருந்தது.
இன்று, மிர்த்திக்கா தாமதமாகத்தான் வந்து சேர்ந்தாள். அதனால், ஒன்றும் வாங்கவில்லை கடையில். நேராக வீட்டு நோக்கி நடைபோட்டாள்.
தன்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனை கடந்துதான் சென்றாள் பெண். ம்.. கண்களை மறைத்திருந்தான்.. அவளுக்கு தெரியாது.. தன்னையே பார்த்தது. யோகி அவளை தொடர்ந்து சென்றான். ஐந்துநிமிட பயணம்தான். ஆனால், மிர்த்திக்காவிற்கு என்னமோ உறுத்தியது.. திரும்பி திரும்பி பார்த்து, தன்னை யாரோ தொடர்வதை உணர்ந்துக் கொண்டாள். நடையை எட்டி போட்டு.. தன்னுடைய அப்பார்மெண்ட் வாசலில் நின்றாள்.
இனி பயமில்லை. தான் சொன்னால் அன்றி யாரையும் உள்ளே விடமாட்டார்கள் செக்யூரிட்டிஸ், அதனால் கடகடவென மேலே சென்றுவிட்டாள். மனது கொஞ்சம் சமன்பட்டது. தன் வீட்டின் கதவை திறந்துக் கொண்டு அப்படியே அமர்ந்தாள். யாரென மனதில் நினைக்க தோன்றவில்லை. ஒரு பயம் மீண்டும் பிரச்சனை வந்து அப்பா இன்னும் தன்னை வெறுத்துவிடுவாரோ என ஒரு பதட்டம். அப்படியே அமர்ந்தாள்.
ஆனால், விடவில்லை அவளின் விதி.. இதோ.. அழைப்பு வந்துவிட்டது கீழே செக்யூரிட்டியிடமிருந்து.. “மேம் யோகி’ன்னு ஒருத்தர் உங்களை பார்க்க வந்திருக்காங்க.. அட்வகேட்’டாம். நீங்க வர சொல்லியிருந்தீங்களாம்.” என்றார்.
காதல் மட்டுமே அவளுள்.. இவன் போல.. கோவம் அவளிடமும் உண்டுதான். ஆனால், அவனை முழுவதுமாக நேசித்து.. அதனால் வந்த வலி வேதனை அனைத்தையும் தனியாக அனுபவித்தவளின்.. பெருமைமிகு நேசத்தால் உண்டான கோவம். அவனோடு ஒப்பிடும் போது, இவளின் காதல் பெரிதுதான்.. ம்.. தன்னை அவனிடமிருந்து மீட்டுக் கொள்ள அனைத்து வாய்ப்புகள் இருந்தும்.. வேணடாம் என தனிமை காத்தவளின் நேசம்.. இப்போதும் அவன் பெயர் கேட்டதும்.. இதயம் நின்று விட்டதாகவே உணர்ந்தாள்.. தொண்டையடைத்தது.. பேசமுடியவில்லை.. ம்.. பதில் சொல்ல முடியவில்லை பெண்ணவளால்.
மீண்டும் செக்யூரிட்டி “மேம்..” என அழைத்து விஷயத்தை சொன்னார்.. அப்போதுதான் மிர்த்திக்கா “ம்.. வர சொல்லுங்க” என்றாள்.
அப்படியே சோபாவில் அமர்ந்துக் கொண்டாள். ‘எப்படி தவிர்க்க முடியும்.. அவனை. அந்த பெயர் எங்காவது கேட்க்காதா என ஏங்காத நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ம்.. இங்கதான் இருக்காங்களா.. அஹ.. இந்த விதி பொல்லாதது..’ என எண்ணிக் கொண்டே தன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
ரெஸ்ட்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள்.. பிரிட்ஜ் சென்று பால் பாக்கெட் எடுத்து வெளியே வைத்தாள். கண்கள் கண்ணீரை சிந்தவே ஆயுத்தமாக இருந்தது. ‘வேண்டாம்.. அதே நேசம் அப்படியே இருக்கா என்ன.. எதுக்கு அழற.. அமைதியா இரு’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.
இப்போது அவளின் வீட்டு கதவு தட்டும் ஓசை கேட்டது பெண்ணுக்கு. ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுக் கொண்டு.. கதவை திறந்தாள் பெண்.
யோகியும் அமைதியாக நின்றிருந்தான்.. கண்கள் அவளின் முகத்தை தாண்டவில்லை. கோடி கோடியாய் எதிர்பார்ப்பு.. ஒரு பார்வை பார்க்கமாட்டளா.. என. ஆனால், பெண்ணவள் நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை அனிச்சையாக கூட. திரும்பி உள்ளே சென்றாள்.
அந்த சோபாவில் அமர்ந்தாள். யோகியும் உள்ளே வந்தான்.. இருவரும் இந்த நேரத்தில் சந்திப்போம்.. என எதிபார்க்கவில்லை. ஆனால், சுதாரிக்க நேரம் இருந்தது.. சமாகினர்.
யோகி அமர்ந்தான். அத்தனை புதியவளாக அவளை உணர்ந்தான். என்னமோ சட்டென ‘எப்படி இருக்க’ என கேட்க வரவில்லை. இன்னமும் என் வானத்தில் நிலவு வரும் என இப்போதுதான் உணர்ந்தான்.
மிர்த்திக்கா அமைதியாகவே இருந்தாள். யோகியும் அப்படியே, ஆனால் இரண்டு நிமிடங்கள் கடந்ததும்.. யோகி நிமிர்ந்து வீட்டை சுற்றி பார்த்தான். அவனின் மூளையில் ‘அவங்க ப்பா என்ன ஆனார்.. விடமாட்டாரே..’ என ஓட.. பொறுமையாக எழுந்து.. வீட்டை சுற்றி பார்த்தான் உரிமையாக.
மிர்த்திக்குதான் ஒன்றும் புரியவில்லை.. எழ முடியாமல் எழுந்து கிட்சென் சென்றாள்.