அந்த வார இறுதியில் லிங்கா சந்தோஷை கூட வெளியில் பார்க்கவில்லை. மறுவாரத்தில் ஒருநாள் மதிய உணவு நேரம் யாதவியின் அலுவலகத்திற்கு வந்தான். அவன் ஊகித்தது போல அப்போது அலுவலர்கள் யாரும் இல்லை. மதிய உணவுக்குச் சென்றிருந்தனர்.
இவனைப் பார்த்ததும் யாதவி சுமதியிடம், “எனக்குச் சந்தோஷ் ஸ்கூல்ல ஒரு வேலை இருக்கு போயிட்டு வந்திடுறேன்.” என்று கிளம்ப… லிங்காவுக்குப் பயங்கிற கோபம் வந்துவிட்டது.
யாதவி வெளியில் வர… அவள் அருகில் சென்றவன், “இப்போ எதுக்கு என்னைப் பார்த்திட்டு ஓடுறீங்க? சந்தோஷை வெளியில விளையாட கூட விடாம வச்சிக்கிற அளவுக்கு நான் என்ன பண்ணேன்? உங்களுக்கு நான் எதுவும் பிரச்சனை கொடுப்பேன்னு பயப்படுறீங்களா?”
“உங்ககிட்ட இருந்து இதை நான் நிச்சயமா எதிர்பார்கலை யாதவி.” என்றவன் திரும்பி செல்ல…
அவன் தவறாகப் புரிந்து கொண்டு சென்றதும், அதை விளக்கி விடும் வேகத்தில், “லிங்கா… லிங்கா ப்ளீஸ் ஒரு நிமிஷம் நில்லுங்க.” என யாதவி சொல்ல… அவன் நின்று, சொல்லுங்க என்பது போலப் பார்க்க.
“சத்தியமா நான் உங்களைத் தப்பா நினைக்கலை. நினைக்கவும் மாட்டேன்.” என்றாள்.
“நீங்க என்கிட்டே எப்பவும் ஒரே மாதிரி தான் இருந்திருக்கீங்க. உங்க பார்வையில கூடக் கண்ணியமோ மரியாதையோ குறைஞ்சு நான் பார்த்தது இல்லை.”
“எப்பவுமே நான் கவனிச்சிருக்கேன். நீங்க உங்களுக்காக இங்க வந்ததை விட… மத்தவங்களோட வேலைக்குத் தான் அதிகம் வந்திருக்கீங்க. அப்படி வரும் போதும், இங்க இருக்கிறவங்களுக்குக் கூட அவங்க சொல்லாமலே புரிஞ்சிட்டு உதவி பண்ணி இருக்கீங்க. உங்க குணம் அப்படி. யாரு இந்தக் காலத்தில இப்படி இருக்கா? அதனாலதான் நான் எனக்கு உதவி தேவைப்பட்ட போது கூட உங்ககிட்டதான் கேட்டு இருக்கேன்.”
இவர்கள் இருவரும் அலுவலகத்தில் நுழைவாயிலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். மதிய நேரம் எனபதால் ஆட்கள் இல்லை. ஆனால் இனி யாராவது வரலாம். அதை உணர்ந்தவன், “உள்ளே போய்ப் பேசலாமா…” என, இருவரும் சென்று யாதவியின் இடத்திலேயே எதிர் எதிரே உட்கார்ந்து பேசினர்.
“அப்புறம் என்னதாங்க பிரச்சனை?” என்றதும், வெகுவாகத் தயங்கியவள், “நாம ரெண்டு பேரும் பேசுறதை வச்சு, இங்க ஆபீஸ்ளையும் சரி, எனக்கு வேண்டியவங்களும் சரி, நம்மைச் சேர்த்து வச்சு பார்க்கிறாங்க. எதுக்கு அதுக்கு இடம் தரணும்னு நினைச்சேன். நான் வேற என்ன பண்றது, நீங்களே சொல்லுங்க?” என்றாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த லிங்கா, “ஒருவேளை நாம அவங்க கண்ணுக்கு பொருத்தமான ஜோடியா தெரியிறோமோ… சில நேரம் நாம மத்தவங்க சொல்றதையும் எடுத்துக்கலாம்.” எனப் புன்னகைக்க… இவன் என்ன சொல்கிறான் என்பது போல யாதவி பார்க்க…
“யாதவி நான் ஒன்னு சொல்லட்டுமா…. நான் டீன் ஏஜ் பையன் இல்லை… நீங்க விவரம் தெரியாத பொண்ணு இல்லை… நாம எதுனாலும் மனசு விட்டு பேசலாம்.”
“கல்யணம் பண்ணிகிட்டோம் அதுக்காக வாழனும் அப்படின்னு, இல்லாம… நமக்கு ஒத்துவராத திருமணத்துல இருந்து நாம வெளிய வந்துட்டோம்.”
“இன்னும் ரொம்ப நாள் இருக்கு வாழ்க்கை. எதுக்கு முடிஞ்சு போனதையே நினைக்கணும். புதுசா ஆரம்பிக்கலாமே…”
“நீங்க எதுவும் உங்களுக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம், அந்த மாதிரி யோசிக்கிறீங்களா?”
“நான் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு, சந்தோஷை யாரும் வேற மாதிரி நடத்தினா, எனக்குத் தாங்க முடியாது. அதனால நான் அதைப் பத்தி யோசிக்கவே இல்லை.”
“நான் அந்த மாதிரி இல்லைன்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? உண்மையா சொல்றேன், நான் ரெண்டு வாரமா நான் நானா இல்லை. எதோ குறையாவே இருந்தது. அன்னைக்குச் சந்தோஷையும் உங்களையும் பார்த்த பிறகுதான் மனசுல ஒரு அமைதி.
யாதவி எதோ சொல்ல வர… “இருங்க நான் முடிச்சிடுறேன்.” என்றவன்,
“நான் அவசரப்பட்டு முடிவு பண்ணலைங்க. நான் நல்லா யோசிச்சிட்டு தான் உன்கிட்ட பேச வந்தேன். ஆனா இன்னைக்கு நீங்க என்னைப் பார்த்திட்டு, தவிர்க்க பார்த்ததும் கோபம் வந்திடுச்சு.”
“எனக்கும் உங்களைப் பார்த்ததும் காதல் எல்லாம் இல்லைங்க. ஆனா நான் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டா, அந்தப் பெண்ணுக்கு என் மேலையும், எனக்கு அந்தப் பெண் மேலையும் நம்பிக்கையும், மரியாதையும் இருக்கணும் நினைக்கிறேன்.”
“இந்த நாலு மாசமா தான் உங்களைத் தெரியும். ஆனாலும் உங்களோட என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது.”
“நீங்க உடனே சொல்லனும்னு இல்லை. நல்லா யோசிச்சு சொல்லுங்க.” என்றதும்,
“உங்க வீட்ல ஒத்துப்பாங்களா?” என யாதவி கேட்க…
“தெரியலை… ஆனா இந்தமுறை நான்தான் என் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போறேன், அப்படிங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். அதனால் எனக்கு மத்தவங்க முடிவு பத்தி அக்கறை இல்லை.”
“என் முடிவு நல்ல முடிவுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று லிங்கா புன்னகைக்க… யாதவி யோசனையில் இருந்தாள்.
கண்டிப்பாக லிங்கா தவிர வேறு யாரும் இப்படிப் பேசி இருந்தால், முதலில் இப்படி உட்கார்ந்து கேட்டே இருக்க மாட்டாள். எதோ ஒன்று சொல்லியது, லிங்கா போல ஒருவனை எல்லாம் வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வராது. அதனால் எதுவும் அவசரப்பட்டுப் பேசி விடாதே என்று.
லிங்காவே கேட்டதால் இப்போது அவளும் மறுமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
அவளின் தீவிர யோசனையைப் பார்த்து லிங்காவுக்கு, அவள் சம்மதிப்பாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது.
அப்போது மற்ற அலுவலர்கள் வர தொடங்கினர். லிங்காவை பார்த்துச் சதீஸ், “என்ன வக்கீல் சார் இன்னைக்கு என்ன வேலையா வந்தீங்க?” எனக் கிண்டலாகக் கேட்க… மற்றவர்களின் பார்வையும் அதையே உணர்த்த…
“நான் யாதவியைப் பார்த்து பேசிட்டு போக வந்தேன். இப்போ வந்தா தான் அவங்க ப்ரீயா இருப்பாங்க.” என்றதும், எல்லோரின் முகமும் மாற… எப்படிச் சொல்றான் பாரு என்று நினைத்தாலும், யாதவி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“வரேன் யாதவி.” என்றவன் அங்கிருந்து கிளம்பியும் விட்டான்.
அதன் பிறகு வந்த நாட்கள், அவர்களால் வெளியே சந்தித்துப் பேச முடியவில்லை என்றாலும், லிங்கா இரவு கைபேசியில் அழைப்பான். அப்போது இருவரும் நிறையவே பேசினார்கள். யாதவி அவள் மனதில் இருந்த கேள்விகளை, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டாள். ஆனாலும் அவள் முழுசாகச் சம்மதம் என்று வாயை திறந்து சொல்லவில்லை.
“இன்னும் என்ன?” என லிங்கா கேட்க…
“ம்ம்… சந்தோஷை நினைச்சு தான் யோசனையா இருக்கு.” என்றாள்.
“நான் சந்தோஷுக்கு நல்ல அப்பாவா இருப்பேன், அப்படி இப்படின்னு எல்லாம் சொல்லலை…. நான் எப்பவும் நல்ல ப்ரண்டா, அவனுக்கு ஒரு நல்ல வழிகாட்டியா இருக்கேன். ஏன்னா நல்லவரோ கெட்டவரோ, அவனுக்கு அப்பா இருக்கார். அதுக்கும் மேல என்னை அப்பாவா ஏத்துக்கிறது சந்தோஷோட விருப்பம்தான்.”
அதன் பிறகும் அலசி ஆராய்ந்து, துவைத்துக் காயப் போட்டு என்று நாட்களை இழுத்து தான் ஒருவழியாக யாதவி சரி என்றாள். சம்மதம் சொல்லிவிட்டு அதற்குப் பிறகு லிங்காவின் கண்களில் படவே இல்லை.
முதலில் கல்யாணத்தைப் பண்ணிக்கணும். இவளோட நம்மால போராட முடியாது என்ற முடிவுக்கு லிங்கா வந்திருந்தான்.
இவர்கள் காதலர்களும் அல்ல ஊர் சுற்றித் திரிய… மற்றவர்கள் இருவவரையும் மரியாதையாகப் பார்க்க… முதலில் முறையான திருமணம் செய்ய வேண்டும்.
“ஏன் டா, என் மாமியார்கிட்ட என்னை மாட்டி விடப் பார்க்கிற? அவங்க எதோ நான் வந்தா எனக்கு வாயுக்கு ருசியா சமைச்சு போட்டுட்டு இருக்காங்க. உனக்கு அது பொறுக்கலையா?”
“டேய், வா டா…”
“எப்படியும் இந்த வாரம் குழந்தைக்குப் பேர் வைக்க வருவேன் டா அப்போ பேசலாம்.” என்றவன், போன்னை வைத்து விட்டான்.
அங்கே யாதவி ஜனனியிடம் தயங்கி தயங்கி சொல்ல…
“நிஜமாவா… அவரே கேட்டாரா…” என்றவள், “எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. நீதான் ரொம்பப் பண்ண. பாரு அவரே கேட்டுட்டார். அப்பா அம்மாவைப் பத்தி நீ கவலைப்படாதே…. நானே அப்பா அம்மாகிட்ட சொல்லிக்கிறேன். எப்போ கல்யாணம்?”
“அதெல்லாம் எதுவும் பேசிக்கலை.”
“ஓகே கா இனிமே நல்லதே நடக்கும்.” எனப் போன்னை வைத்தாள்.
அந்த வார இறுதியில், தீபிகாவின் குழந்தைக்குப் பெயர் வைக்கும் விழா இருக்க… பரத் முன்னதாகவே வந்துவிட்டான். சிவகாமி அவராகவே திருமணப் பேச்சை எடுக்க…
“நான் சொல்ற பொண்ணு தான், அதுக்கு ஓகேன்னா சொல்லுங்க.” என்றான் லிங்கா.
பாக்கியம் பேசியதில் சிவகாமி கொஞ்சம் சுதாரித்து இருந்தார். “முதல்ல நீ யாருன்னு சொல்லு, பார்க்கலாம்.” என்றார். “அந்தக் கதையே இல்லை, நான் சொல்றது தான்.” என லிங்காவும் பிடிவாதமாக இருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை வீட்டில் வைத்தே உறவினர்களை அழைத்து பெயர் சூட்டினர். பரத்தின் சொந்தபந்தங்கள் என வீடு நிறைய ஆட்கள். எதிர் வீட்டில் இருந்து கொண்டு யாதவியை அழைக்காமல் இருக்க முடியுமா? ஆனால் விழா நேரத்திற்கு வராமல்… மாலை நேரம் யாதவி மகனுடன் குழந்தையைப் பார்க்க வந்திருந்தாள். உறவினர்கள் எல்லோரும் சென்றிருக்க, பாக்கியம் மட்டும் அண்ணிக்கு உதவியாக இருந்தார்.
யாதவி குழந்தையைப் பார்த்து விட்டு, குழந்தைக்கு வாங்கி வந்த பரிசை கொடுக்க… சிவகாமி அவளுக்கு உண்ண, குடிக்கக் கொண்டு வந்து வைத்தார். லிங்காவும் பரத்தும் அங்கே தான் இருந்தனர்.
யாதவி புடவையில் அழகாக இருந்தாள். எப்போதும் அலுவலகத்திற்குச் சுடிதார் தான் அணிந்து செல்வாள். அவளையே குறுகுறுவெனப் பார்த்த பாக்கியம், “இப்படித் தனியா வந்து இருக்கிறது எல்லாம் தப்பு மா… அப்பா அம்மாவோடவாவது இருக்கலாம் இல்ல…” என்றார்.
இதே வேறு யாராவது பேசி இருந்தால், அதைச் சொல்ல நீங்க யாரு என்று கேட்டிருப்பாள். ஆனால் அதற்காக நீங்கள் பேசுவதைப் பேசுங்கள் என்று அமைதியாகவும் இல்லை.
குழந்தையைத் தீபிகாவிடம் கொடுத்து விட்டு எழுந்து கொண்டவள், லிங்காவிடம் இருந்த சந்தோஷை அழைத்துக் கொண்டு, எல்லோரிடமும் பொதுவாக விடைபெற்று சென்று விட்டாள்.
“இப்போ எதுக்கு அவங்ககிட்ட அப்படிப் பேசினீங்க?” என லிங்கா கேட்க…
“தனியா இருக்கா, அழகா வேற இருக்கா, அதுதான் சொன்னேன்.” என்றார்.
“இனி அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க அத்தை.” என்றவன், “அம்மா, நான் யாதவியைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.” என லிங்கா அப்போதே போட்டு உடைத்து விட்டான்.
“அதெல்லாம் கல்யாணம் ஆனப் பெண்ணை நீ எப்படிக் கல்யாணம் பண்ணுவ? உனக்குக் கல்யாணம் பண்ணிக்க வேற பெண்ணா கிடைக்கலை?” எனப் பாக்கியம் வெளியே சொல்ல… சிவகாமி அதையே பார்வையால் உணர்த்தினார்.
“எனக்கு மட்டும் என்ன முதல் கல்யாணமா?” என லிங்கா கேட்க…
“என்ன இருந்தாலும் நீ ஆம்பிளை, எத்தனை கல்யாணம் வேணாலும் பண்ணலாம். ஆனா பொம்பளை அப்படி இருக்க முடியுமா?”
“இன்னும் அந்தக் காலத்திலேயே இருங்க. ஆம்பிளைங்க நிறையக் கல்யாணம் பண்ணலாமா… பண்ண ஒன்னே உருப்படியா இல்லாம தான் சீரழிஞ்சு போனேன். இனிமே பண்றதாவது ஒழுங்கா பண்ணனும். எனக்கு யாதவி போதும்.” என்றான்.
“நான் ஒத்துக்கமாட்டேன்.” என்றார் சிவகாமி.
“உங்களுக்கு யாதவியைத் தெரியாதா மா? என்ன மா பிரச்சனை உங்களுக்கு?”
“ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தாலும் பரவாயில்லை… ஆனா குழந்தையும் இருக்கே… இன்னொருத்தன் குழந்தைக்கு நீ அப்பாவா இருப்பியா? எனக்கு அதெல்லாம் ஏத்துக்க முடியாது.” என்றார் சிவகாமி கோபமாக.
“எனக்கு அப்பா ஆகவே தகுதி இல்லைன்னு சிலர் சொல்லிட்டு திரியுறாங்க. அது தெரியுமா உங்களுக்கு?”
“உங்களுக்கு ஏத்துக்க முடியாதுன்னா எத்துக்காதீங்க. ஆனா நான் யாதவியைத் தான் கல்யாணம் பண்ணுவேன்.”
“நான் உங்ககிட்ட பெர்மிஷன் கேட்கலை. தகவல் தான் சொன்னேன்.” என லிங்கா பிடிவாதமாக இருக்க,
“யாரோ எதோ பேசுறாங்க. அதுக்காக நீ இப்படிக் கல்யாணம் பண்ணனுமா?”
“அப்படி உன் இஷ்ட்டத்துக்குப் பண்ணிக்கிறதுன்னா பண்ணிக்கோ. ஆனா நான் எதுக்கும் வர மாட்டேன்.” என்று சிவகாமியும் தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்.
பரத்தும் எடுத்து சொல்ல, சிவகாமி புரிந்து கொள்ளவே தயாராக இல்லை.
“எனக்கு அவ்வளவு பெரிய மனசு எல்லாம் இல்லை மாப்பிள்ளை. வசதி குறைவா இருந்தாலும், நாம வேற பொண்ணு பார்க்கலாம்.” என்றார் பிடிவாதமாக.
சிவகாமி ஜெயந்தியிடம் சென்று புலம்பினார்.
“பாரு நீ உன் வீட்ல குடி வைக்க… இப்போ அவன் என் வீட்டுக்கு குடி வர பார்க்கிறா?” எனக் குறை சொல்ல…
“அவ என்ன பண்ணா? அவளா உங்க பையன் முன்னாடி முன்னாடி வந்து போயிட்டு இருந்தா… அவ இருக்கிற இடம் கூடத் தெரியாது. நீங்க சொல்றதுன்னா உங்க பையனைத் தான் சொல்லணும், அவளை எல்லாம் சொல்லக் கூடாது.” என ஜெயந்தியும் யாதவிக்குப் பரிந்து பேச…. சிவகாமி அதிலிருந்து ஜெயந்தியோடும் முகம் கொடுத்து பேசுவது இல்லை.
ஜெயந்தி அதை யாதவியிடம் சொல்ல… அவள் லிங்காவிடம் அதைப் பற்றி ஆரம்பிக்கும் போதே… “யாதவி, நான் உனக்கு முன்னாடியே சொல்லிட்டேன். எனக்கு மத்தவங்க விருப்பம் பத்தி எல்லாம் ஒன்னும் இல்லைன்னு. நீ அவங்க சொல்றாங்க, இவங்க சொல்றாங்கன்னு பின்வாங்கினாலும், நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். இல்லைனா யாரையும் பண்ணிக்க மாட்டேன்.” என்றான் முடிவாக.
யாதவியுமே முடிவெடுக்கும் முன் யோசிப்பாளே தவிர, முடிவெடுத்தப் பின்னால் யோசிக்க மாட்டாள். அதனால் அவளும் லிங்காவை திருமணம் செய்வதில் இருந்து பின்வாங்கவில்லை.
நெருங்கிய உறவினர் திருமணதிற்கு லிங்காவை இரண்டு நாட்கள் மதுரைக்குச் செல்ல சொல்லி சிவகாமி சொல்ல… அவர் அலைய முடியாது என்றதால்… முன்தினம் சென்று விட்டு, மறுதினம் திருமணம் முடிந்து வர லிங்கா ஒத்துக் கொண்டான்.
யாதவியிடம் பேசும் போது, நாளை திருமணத்திற்குச் செல்வது பற்றிச் சொல்ல, அவன் ஒருநாள் இருக்க மாட்டான் என்றதே யாதவிக்கு ஒருமாதிரி இருக்க… “நைட் தனியா இருக்கணுமா?” என்றாள்.
“என்னவோ நாம சேர்ந்து இருக்க மாதிரி சொல்ற? என்னைப் பார்த்தாலே நிக்காம ஓடுற…” என அவன் கேலி செய்ய…
“எதிர் வீட்ல தான இருக்கீங்க. ஒரு குரல் கொடுத்தா வரப் போறீங்க. அந்தத் தைரியம் தான்.” என்றால் யாதவி.
“உங்ககிட்ட தான் சொன்னது இல்லை. ஜனனிகிட்ட சொல்லி இருக்கேன்.”
“இப்படியே நான் எதிர்வீட்ல இருந்தாலே போதும்னு இருக்க வச்சிடாத.” லிங்கா சொன்னதற்கு யாதவி சிரித்தாள்.
“ஒரு நாள் தான் ஓகேவா… சீக்கிரம் வந்திடுறேன்.”
மறுநாள் மாலை யாதவி மகனை அழைத்துக் கொண்டு பள்ளியில் இருந்து வெளியே வர… அங்கே லிங்கா நின்றிருந்தான். அவனை எதிர்பாராமல் பார்த்ததும், யாதவியின் முகம் அச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் வெளிபடுத்த, அதற்கு மேல் இருந்தான் சந்தோஷ்.
லிங்கா அவனை வாங்கி முத்தமிட்டவன், அவர்கள் இருவரையும் அருகில் இருந்த பெரிய பேக்கரிக்கு அழைத்துச் சென்றான்.சந்தோஷிடம் என்ன வேண்டும் என்று கேட்க, அவன் கார் என்றான். அவன் சரியான கார் பைத்தியம்.
இருவருக்கும் பிடித்தது கேட்டு வாங்கி உண்ண வைத்து, சந்தோஷ் கேட்ட காரையும் வாங்கிக் கொடுத்து, “நான் இங்க இருந்தே கிளம்புறேன். பார்த்து பத்திரமா போங்க.” என்று சொல்லி இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அவன் அங்கிருந்தே உறவினர்களுடன் காரில் மதுரைக்கு செல்வதாக இருந்தது.
திடிரென்று இப்படி வந்து நிற்பான் என்று யாதவி நினைக்கவில்லை. செல்லும் வழியாவும் அவள் லிங்காவை நினைத்துக் கொண்டு செல்ல… அதே போல லிங்காவின் கண்களுக்குள் தன்னைப் பார்த்தும் மலர்ந்த யாதவின் முகமே நின்றது.