யாதவிக்கு ஒருநாள் அதிகாலை வலி எடுக்க… அடுத்த மூன்று மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தைக்குத் தாயானாள். லக்ஷ்மி வந்து ஒருமாதம் மகளுடன் மாடியில் தங்கி அவளைப் பார்த்துகொள்ள… சிவகாமி மகனையும் பேரனையும் பார்த்துக் கொண்டார். அவர்தான் பேரனைக் மாடிக்கு வந்து வெளிமெத்தில் வைத்து குளிப்பாட்டி விட்டு செல்வார். சந்தோஷையும் அவர்தான் பார்த்துக்கொள்வார்.

கீழே இருந்து சமைத்து எடுத்து வர சிரமமாக இருக்கும் என்று லக்ஷ்மி மேலேயே தனக்கும் மகளுக்கும் சமைத்துக் கொண்டார். ஒரு மாதத்தில் யாதவி அவளே அவள் வேலைகளைப் பார்த்துகொள்ள ஆரம்பித்ததும், லக்ஷ்மி சென்னைக்குச் சென்றவிட்டார். சந்தோஷ் அடுத்த வருடம் பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று வர ஆரம்பித்தான். நாட்கள் வேகமாகச் சென்றது. மூன்றாம் மாதத்தில் உறவினர்களை அழைத்துக் குழந்தைக்குச் சித்தார்த் எனப் பேர் சூட்டினர்.

சந்தோஷ் தம்பி தம்பி என்றுதான் இப்போது இருக்கிறான். வளர்ந்த பிறகு இருவரும் ஆண் பிள்ளைகள் என்பதால் சண்டைக்கும் பஞ்சம் இருக்காது.

யாதவி குழந்தை பிறந்து மாடியில் இருக்க… சந்தோஷும் லிங்காவும் கீழே தான் உறங்கினர். பிறகும் சந்தோஷ் சிவகாமியுடன் கீழேயே உறங்க ஆரம்பித்திருந்தான்.

யாதவி சின்ன மகனை தூக்கிக் கொண்டு மாடிக்கு வந்தவள், அவனைக் கட்டிலில் படுக்க வைக்க….

“இவனையும் சீக்கிரம் கீழ துரத்திட்டு, நாம ப்ரீயா இருக்கணும்.” என்ற கணவனைப் பார்த்து யாதவி சிரித்தாள்.

அப்போது பரத் அழைக்க… லிங்கா தனியே சென்று பேசிவிட்டு வந்தவன் அதன் பிறகு அமைதியாகப் படுத்துக் கொண்டான்.

சந்தோஷ் கேஸ் விஷயமாகப் பரத் அவர்களைச் சென்னைக்கு வர சொல்லி இருந்தான். இப்போதே சொன்னால்… பயத்தில் மனைவி இரவெல்லாம் தூங்க மாட்டாள் என்று தெரியும்.

மறுநாள் சிவகாமியிடம் சென்னைக்கு ஒரு வேலையாகச் செல்ல இருப்பதால்… அப்படியே மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துச் சென்று வருகிறேன் என்று லிங்கா சொல்ல… சிவகாமிக்கு திவாகர் பற்றி எல்லாம் தெரியாது. யாதவியும் பெற்றோர் வீட்டிற்குப் போக வேண்டுமே என்று நினைத்தவர், அவர்களைச் சென்று வர சொன்னார்.

யாதவியும் கணவன் சொல்வது உண்மை என்றே நினைத்து இருந்தாள். சென்னைக்கு அவள் அம்மா வீட்டில் சென்று இறங்கிய பிறகே… லிங்கா சந்தோஷ் கேஸ் கோர்ட்டுக்கு வந்திருப்பதாகச் சொன்னான்.

அப்போதே யாதவி முகம் மாறிவிட்டது. கோர்ட்டில் என்ன தீர்ப்பு வருமோ என்று கவலையாக இருந்தது.

ஏற்கனவே திவாகரின் மது பழக்கம் மற்றும் அவனின் இரண்டாவது மனைவி தற்கொலைக்கு முயன்ற போது, திவாகரின் மீது பதிவான வழக்கு… இப்போது குடி பழக்கத்தில் இருந்து விடுபடச் சேர்த்திருந்த இடத்தில் இருந்து அவன் தப்பி ஓடியது என்று எல்லவற்றையும் சான்றோடு பரத் கோர்ட்டில் ஒப்படைத்து இருக்க… குழந்தை சம்பத்தப்பட்ட வழக்கு என்பதால்… தனியான விசாரணை தான்.

முதலில் யாதவியைக் கூப்பிட்டு விசாரிக்க…“திவாகருக்கு இருந்த குடிபழக்கம் தெரியாம எங்க வீட்ல கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. நானும் என்னால முடிஞ்ச வரை சேர்ந்து இருந்து பார்த்திட்டேன். இவரோட வாழுறதும் சாகிறதும் ரெண்டும் ஒன்னு தான். எனக்கு அவ்வளவு நரகத்தைக் காட்டி இருக்கார். அதையெல்லாம் நான் இப்போ நினைச்சு பார்க்க கூட விரும்பலை. அதனால தான் சாகிற முடிவை எடுக்காம… அவரை விட்டு பிரிஞ்சு வாழுற முடிவை எடுத்தேன்.”

“உங்க பையனோட செலவுக்குத் திவாகர் எதுவும் பணம் கொடுத்திருக்காரா?”

“அவன் பிறந்ததுல இருந்தே நான்தான் பார்த்துகிட்டேன். நான் இன்னொரு திருமணம் செஞ்சுகிட்டதுல இருந்து, இப்போ என் கணவர் பார்க்கிறார்.” என்றாள்.

“நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டீங்க?”

“பண்ணிக்கவே கூடாதுன்னு தான் நினைச்சேன். வெளியவும் சரி, வேலை பார்க்கிற இடத்திலேயும் சரி, தனியா தான் இருக்கான்னு நிறையப் பேர் பார்வையாள… பேச்சால தொந்தரவு கொடுத்தாங்க. நல்ல ஆண்களும் இருந்தாங்க தான். ஆனா அவங்ககிட்ட என்னால சாதாரணமா கூடப் பேச முடியலை… மத்தவங்க எதுவும் தப்பா சொல்லிடுவாங்களோன்னு யோசிக்கக் வேண்டியதா இருந்தது.”

“அப்போ லிங்கா கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டார். அவர் மேல எனக்கு நிறைய மரியாதை இருந்தது. கண்ட பேச்சையும் கேட்கிறதுக்கு, கல்யாணம் பண்ணிட்டு வாழலாமேன்னு தோணுச்சு.”

“சரி, நீங்க போயிட்டு உங்க கணவரையும் மகனையும் வர சொல்லுங்க.” என நீதிபதி அனுப்பி வைக்க…

பெண் நீதிபதி தான். அவர் சந்தோஷிடம், உன் பேர் என்ன என்று கேட்க… சந்தோஷ் என்றான். “உன் அப்பா பேரு என்ன?” என்று கேட்க, லிங்கேஸ்வரன் என முழுப் பேரையும் அவன் அழுத்தி உச்சரிக்க… “அப்பா உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா?” என்று அடுத்தக் கேள்வி கேட்க…

“தப்பா கேட்கிறீங்க மேடம். அப்பாவை நீ நல்லா பார்த்துக்கிறியான்னு தான் நீங்க இவன்கிட்ட கேட்கணும். அவன்தான் எங்களை எல்லாம் பார்த்துக்கிறான்.” என லிங்கா புன்னகைக்க…

நீதிபதி அப்படியா எனச் சந்தோஷிடம் கேட்க… அவன் ஆமாம் என்றான்.

“எதுக்காக வேணா விவாகரத்து ஆகி இருக்கலாம். திவாகருக்கு உண்மையிலேயே மகன் மீது பாசமும் அக்கறையும் இருந்தா… அவர் சந்தோஷை பார்க்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல… ஆனா திவாகர் நிலை ரொம்ப மோசம். அவர் சந்தோஷை பார்க்கிறதும், பேசுறதும், சந்தோஷின் மன நிலையைப் பாதிக்கும். நாங்க ஒரு குடும்பமா சந்தோஷமா இருக்கோம். திவாகரோட இடையூறு இருந்தா… சந்தோஷால முழுசா எங்களோட ஒன்றி இருக்க முடியாது.” என்றான் லிங்கா தெளிவாக.

அவனின் படிப்பு, வேலை, குடும்பம் பற்றி எல்லாம் நீதிபதி விசாரிக்க… லிங்காவும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

லிங்காவோடு பேசிக் கொண்டிருந்தாலும், நீதிபதியின் பார்வை எல்லாம் சந்தோஷின் மீதுதான். அவன் லிங்காவோடு எப்படி இருக்கிறான் என்று கவனித்துக் கொண்டிருந்தார்.

சந்தோஷ் விளையாட எதாவது கிடைக்கிறதா என்று மேஜையில் இருந்தவற்றை ஆராய… அவனைச் சும்மா இரு என்று அடக்காமல்…. அதே நேரம் அவனுக்குத் தன்னிடம் இருந்த பேப்பர் பேனாவைக் லிங்கா கொடுக்க… சந்தோஷ் அதை வைத்துப் படம் வரைய ஆரம்பித்தான்.

அவர்கள் இருவரின் நெருக்கத்தையும் குறித்துக் கொண்டார். லிங்காவிடம் சந்தோஷ் நன்றாக வளர்வான் என்ற நம்பிக்கை நீதிபதிக்கு வந்திருந்தது.

அடுத்து திவாகரையும் அழைத்துப் பேசி பார்த்தனர். திவாகருக்கு இருந்த வேலையும் போயிருக்க… இப்போது கிடைத்த வேலையைச் செய்து கொண்டிருந்தான். இன்னும் குடி பழக்கத்தை விடவில்லை. அதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, சந்தோஷின் முழுப் பொறுப்பையும் யாதவியிடமே ஒப்படைத்து விட்டனர். சந்தோஷை சந்தித்துப் பேச கூடத் திவாகருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

தீர்ப்பு வந்ததும், யாதவி எப்படி உணர்ந்தாள் என்று சொல்வதற்கு வார்த்தையே இல்லை. சந்தோஷை கட்டிக் கொண்டு அவள் அழுதே விட… லிங்கா அவர்கள் இருவரையும் அனைத்துக் கொண்டான்.

“போதும் யாதவி அழாத. சந்தோஷ் இனி நமக்கு மட்டும் தான். யாரும் அவனைச் சொந்தம் கொண்டாடிட்டு வர முடியாது.” என்றான் லிங்கா.

மேலும் இரண்டு நாட்கள் யாதவியின் வீட்டிலும், அடுத்த இரண்டு நாட்கள் பரத்தின் வீட்டிலும் இருந்துவிட்டு, ஊருக்கு கிளம்பி விட்டனர்.

அந்த வருட பொங்கலுக்கு, தீபிகாவும் குடும்பத்துடன் பிறந்து வீட்டிற்கு வந்திருக்க… லிங்கா அவன் நண்பர்களுக்கு மற்றும் அவர்கள் சொந்தபந்தகளுக்கு எல்லாம் அவர்கள் தோட்டத்தில் வைத்து, காணும் பொங்கல் அன்று கிடா வெட்டி விருந்து கொடுத்தான்.

விருந்து தயாராகிக் கொண்டிருக்க… உறவினர்கள் எல்லாம் ஒரு பக்கம் உட்கார்ந்து அரட்டை அடிக்க… லிங்காவும் அவன் நண்பர்களும் பம்புசெட்டு அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“மகன் பொறந்ததுக்கு விருந்தா?” என வினோத் கேட்க…

“அதுக்கும் தான். சந்தோஷும் இப்போ எங்க மகன் மட்டும் தான். அதுக்கும் சேர்த்து தான்.” என்றான் லிங்கா மகிழ்ச்சியாக. அப்போது வந்த யாதவியின் காதிலும் அவன் சொன்னது விழ… அவளுக்கு முன்பு மனதில் இருந்த சிறு கலக்கமும் இப்போது இல்லை.

“எல்லோரும் சாப்பிட வாங்க.” என அவள் அழைக்க…

“இப்பவே வா… முதல்ல அங்க இருக்கவங்களை எல்லாம் சாப்பிட சொல்லு. நாங்க கிணத்துல இறங்கி குளிக்கப் போறோம்.” என்றான். நண்பர்களும் ஒவ்வொருவராகக் கிணற்றில் குதிக்க…

“நாங்களும் குளிக்கப் போறோம்.” எனச் சந்தோஷை தூக்கிக் கொண்டு லிங்கா படி வழியாக இறங்கி சென்றான்.

சின்ன வயதிலேயே பழக்கினால் தான் பயம் இருக்காது என லிங்கா வெகு நாட்களுக்கு முன்பாகவே, சந்தோஷுக்கு நீச்சல் பழக்கி இருந்தான்.

சந்தோஷ் பயமில்லாமல் நீச்சல் அடிப்பதை, யாதவி இங்கிருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையில இருந்த இளைய மகனை காட்டி, “அவனையும் தூக்கி போடு. அவனுக்கும் நீச்சல் சொல்லித் தரோம்.” என லிங்கா சொல்ல… யாதவி கீழே இருந்து கல்லை எடுத்து தூக்கிப் போட்டாள்.

ஆறு மாதம் தான் ஆகிறது, நீச்சல் சொல்லித் தருகிறானாம், அதுவும் தூக்கி போட வேண்டுமாம். இது என்ன புளி மூட்டையா தூக்கி போட.. என நினைத்தவளுக்குச் சிரிப்புதான் வந்தது. தன் சின்ன மகனை அனைத்து கொஞ்சினாள்.

யாதவி சென்று உறவினர்களைக் கவனிக்க… குளித்துவிட்டு நண்பர்கள் படை வந்தது. அவர்களே பரிமாறிக் கொண்டு உண்டனர்.

சந்தோஷை ஆரம்பத்தில் வித்தியாசமாகப் பார்த்தவர்களே… இப்போது சந்தோஷை லிங்காவின் மூத்த மகனாகப் பார்க்க தொடக்கி இருந்தனர். யாருக்குமே அவர்கள் இருவரையும் பிரித்துப் பார்க்க தோன்றவில்லை.

மதிய உணவு முடித்து உறவினர்கள் எல்லாம் கிளம்பி விட… அவர்களோடு சிவகாமியும் சென்றுவிட்டார். நண்பர்கள் மட்டும் இருந்தனர்.

“பார்ட்டி ஆரம்பிக்கலாமா?” என லிங்கா வேண்டுமென்றே யாதவியின் காதில் விழும்படி சொல்ல…

“பசங்க எல்லாம் இருக்காங்க லிங்கா… நாளைக்கு அவங்களும் இப்படித்தான் பண்ணுவாங்க.” என்றதும்,

“சும்மா சொன்னேன் டி….” என்றான்.

அன்று இரவு இவர்கள் உறங்க தயாராக… சந்தோஷும் அவர்கள் அறைக்குப் படுக்க வந்துவிட்டான்.

“சின்னதையே துரத்துனும்னு பார்த்திட்டு இருந்தா… இப்ப இவனும் வேற வந்திட்டான்.” என்றவன் சந்தோஷிடம், “உன் தம்பியை கூடிட்டு கிளம்பு.” என்று சொல்ல…

“அவனை வர சொல்லுங்க கூட்டிடு போறேன்.” என்ற சந்தோஷ், தான் அவனுக்கும் கில்லாடி என்று நிரூபிக்க…

“அவன் இன்னும் நடக்க ஆரம்பிக்கலை… அந்தத் தைரியத்துல பேசுற நீ.” என்றான் லிங்கா. அவர்கள் இருவரும் அடிக்கும் கூத்தை பார்த்து சிரித்த யாதவி, “உங்க பசங்களோட நீங்க கட்டில்ல படுங்க.” என்றவள், தரையில் மெத்தை விரித்துப் படுத்துக்கொள்ள…

“நீ ரொம்ப விவரம். இப்போதைக்கு ரெண்டும் தூங்காதுன்ன தெரிஞ்சு, என் தலையில கட்டிட்டு போற. ஆனா நான் இவங்களை உடனே தூங்க வைக்கிறேன்.” எனச் சவால் விட்டவன், விளக்கணைத்து மகன்கள் இருவருக்கும் நடுவில் படுக்க…

விளக்கணைத்ததும் சின்னது சத்தமாகக் குரல் கொடுக்க.. பெரிசும் எழுந்து உட்கார்ந்து கொள்ள… லிங்காவின் நிலையோ சொல்ல முடியவில்லை.

யாதவி எழுந்து கட்டிலுக்கு வர… தரையில் இருந்த மெத்தையில் சென்று லிங்கா படுத்துகொள்ள… முதலில் யாதவி சின்ன மகனுக்குப் பசியாற்ற… அவன் ஐந்து நிமிடத்தில் உறங்கி விட… அடுத்து பெரியவனை மடியில் போட்டு தட்டிக் கொடுக்க… அவனும் உறங்கி விட்டான்.

சின்னவனைத் தொட்டிலிலும், பெரியவனைக் கட்டிலிலும் படுக்க வைத்துவிட்டு, யாதவி கணவனைப் பார்க்க… அவன் இவர்களுக்கு முன்பு உறங்கி இருந்தான். இதுக்குதான் இவ்வளவு கலாட்டா என நினைத்தவள், கணவனின் அருகே படுத்துக்கொள்ள… அந்த உறக்கத்திலும் மனைவியின் அருகாமையை உணர்ந்தவன், அவள் பக்கம் திரும்பிப் படுத்து அவளை அனைத்துக் கொண்டான்.

“தூங்கிடீங்களா?” என யாதவி கேட்க… சொல்லு என்றான்.

“நீங்க மட்டும் இல்லைனா… எனக்கும் சந்தோஷுக்கும் இப்படி ஒரு அமைதியான வாழ்க்கை கிடைச்சிருக்காது.” என,

“நீயே கூட திவாகர்கிட்ட இருந்து சந்தோஷோட உரிமையைப் பறிச்சிருக்க முடியும்.” என்றான் லிங்கா.

“திவாகருக்கு எதிரா இவ்வளவு ஆதாரத்தை எல்லாம் என்னால தனியா திரட்டி இருக்க முடியுமா? நீங்க எத்தனை தடவை இதுக்காகச் சென்னை போனீங்கன்னு, எல்லாமே எனக்குத் தெரியும்.”

“நான் எனக்காகவும் தான் செஞ்சேன். சந்தோஷ் எனக்கு வேணும். அதுக்காகவும் தான்.”

“நான் உங்களைப் போய் அப்படி நினைச்சிருக்கக் கூடாது இல்ல…” என தான் முன்பு பேசியதை அவள் நினைவு படுத்த…

“யாருன்னே தெரியாத குழந்தையை எல்லாம் தத்து எடுத்து, தன் குழந்தையா வளர்க்கிறவங்க இருக்காங்க யாதவி. இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.” என்றவன், “ஆனா எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கு.” என்றதும், யாதவி என்ன என்றாள். 

“பொண்ணு பிறக்கும்னு நினைச்சேன். ரெண்டும் பையனா போயிடுச்சு….” எனக் கணவனின் கவலையைப் பார்த்து யாதவி சிரிக்க…

“நாம வேணா அதுக்கு முயற்சி செய்வோமா…” என லிங்கா இன்னும் மனைவியைத் தன்னோடு இறுக்க…

“நிஜமா உங்களுக்கு ஆசையா இருக்கா?” எனக் கேட்டாள். விட்டால் இன்னொன்று பெத்துக் கொள்வாள் போல… லிங்காவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“நீ வேற… நான் சும்மா சொன்னேன். இந்தக் காலத்தில ரெண்டே அதிகம். அவங்க ரெண்டு பேரையும் நல்லா வளர்த்தாலே போதும்.” என்றான்.

அதன் பிறகும் கணவனும் மனைவியும் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் காலமெல்லாம் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்… நாம் அவர்களிடம் இருந்து விடைபெறுவோம்.

“சங்கீத ஸ்வரங்கள்… ஏழே கணக்கா… இன்னும் இருக்கா…

என்னவோ மயக்கம்.

என் வீட்டில் இரவு… அங்க இரவா… இல்ல பகலா 

எனக்கும் மயக்கம்.”