எனக்கென வந்த தேவதையே

இறுதி அத்தியாயம்  

சிவகாமி ஏழாம் மாதம் யாதவிக்கு உறவினர்களுக்கு எல்லாம் சொல்லி வளைகாப்பு விமர்சையாகச் செய்ய வேண்டும் என்றார். லிங்கா வீட்டு அளவில் செய்யலாம் என்று சொன்னால்… அவர் கேட்கவில்லை. யாதவிக்கு எப்படி என்றாலும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட… அம்மாவின் ஆசைக்கே லிங்கா விட்டுக் கொடுத்தான்.

அவனும் சிவகாமியும் சேர்ந்து சென்றே உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தனர். லிங்கா அவன் மாமா வீட்டிற்கும் நேரே சென்று அழைக்க… அவனே நேரில் வந்து அழைத்ததும், அவன் மாமாவும் சமாதானம் ஆகிவிட்டார். அதுவும் மற்ற உறவினர்களும், அவனுக்கும் ரெண்டாம் கல்யாணம் தான… அவனுக்குப் பிடிச்ச பெண்ணைப் பண்ணிகிட்டான். நீங்களும் எதுக்கு இவ்வளவு பெரிசு பண்றீங்க? என இவர்களைக் குற்றம் சொல்ல ஆரம்பிக்க…அதனாலேயே இதோடு விட்டுவிடும் முடிவுக்கு வந்திருந்தனர்.

லிங்கா சென்று முறையாக அழைத்து விட்டுத்தான் வந்தான். அதற்கு மேல் வருவதும் வராததும் அவர்கள் விருப்பம் என்று இருந்தான். மற்ற உறவினர்கள் எல்லாம் வருவதாகச் சொன்னார்கள்.

ஜனனியும் சிங்கப்பூரில் இருந்து வந்திருக்க… அவள் மட்டும் பெற்றோருடன் வளைகாப்புக்கு முன்தினமே வந்திருந்தாள். தீபிகாவும் குடும்பத்துடன் முன் தினமே வந்து விட வீடு களைகட்டியது.

வீட்டு வாசலில் பந்தல் அமைத்து, அதில் தோரணங்கள் தொங்கவிட்டு அலங்காரம் செய்திருந்தனர். கீழே ஹாலில் வளைகாப்பு நடக்க… பக்கத்து காலி மனையைச் சுத்தம் செய்து, அதில் பந்தல் அமைத்து, சுற்றிலும் தடுப்பு வைத்து மறைத்து. மேஜை நாற்காலி எல்லாம் போட்டு அங்கேயே மதிய விருந்து பரிமாறினர்.

லிங்காவுக்கு உதவியாகப் பரத்தும் மற்ற நண்பர்களும் இருக்க… சொன்ன நேரத்திற்கு உறவினர்கள் வந்துவிட… லிங்காவின் தாய்மாமா நரசிம்மனும் குடும்பத்துடன் வந்துவிட்டார். அதே போல லிங்காவின் தந்தை வழி உறவுகளும் வந்திருக்க… நல்ல நேரத்தில் யாதவிக்கு வளையல் அடுக்கி முடித்தனர்.

வீட்டில் இவ்வளவு விருந்தினர்களைப் பார்த்ததும் சந்தோஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் சிவகாமியின் பின்னே சுற்றிக் கொண்டிருக்க… அவரும் அவனை இடுப்பில் இடுக்கியபடியே வளைய வந்தார். எல்லோருமே அதைச் சற்று ஆச்சரியாமாகப் பார்த்தாலும், பிறகு அவர்களுக்கும் பழகிவிட்டது.

சிவகாமிக்கே முன்பு அந்தச் சந்தேகம் இருந்தது தானே… தன்னால் சந்தோஷை பேரனாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்று… ஆனால் மகனோடு சேர்த்து பார்க்கும் போது, சந்தோஷை வெளி ஆள் என்று அவரால் நினைக்க முடியவில்லை. அதுவும் சந்தோஷும் அவரிடம் ஒட்டிக்கொள்ள… அவருக்கு அவனை விலக்கி நிறுத்தவும் மனம் வரவில்லை.

வளைகாப்பு நன்றாக நடத்து முடிந்திருக்க.. லிங்கா யாதவியைப் பிரசவத்திற்கு அவள் பெற்றோரோடு அனுப்பவில்லை. இங்கேயே பார்த்துக்கொள்ளலாம் என அவன் முன்பே சொல்லி விட…. யாதவியின் பெற்றோர் அங்கே என்றால்… தங்களுக்கு வசதி என்று நினைத்தனர்.

“அனுப்புறதை பத்தில் ஒன்னும் இல்லை. கேஸ் இன்னும் கோர்ட்ல இருக்கு. சந்தோஷுக்கு அஞ்சு வயசு ஆனாத்தான் கோர்ட்ல யார்கிட்ட கஸ்ட்டின்னு முடிவு பண்ணுவாங்க. இவங்க அங்க இருக்கிறது தெரிஞ்சா… திவாகர் வந்து தொந்தரவு கொடுப்பார்.” என லிங்கா சொல்ல… அதற்கு மேல் யாதவியின் பெற்றோருக்கும் அங்கே மகளை அழைக்க விருப்பம் இல்லை. திவாகரை எல்லாம் அவர்களால் சமாளிக்க முடியாது.

வளைகாப்பு முடிந்த அன்று சாஸ்த்திரத்துக்கு, யாதவியை அம்மா வீட்டு கணக்குக்கு, யார் வீட்டுக்காவது சென்று ஒருநாள் இரவு மட்டும் தங்கிவிட்டு வர சொல்லி சிவகாமி சொல்ல… லிங்கா அவனின் நண்பர்கள் வீட்டை யோசிக்க… பாக்கியம், “அது எப்படி நாங்க இருக்கும் போது வேற வீட்டுக்கு அனுப்புவீங்க. எங்க வீட்டுக்குத்தான் வரணும்.” என்று சொல்லிவிட… சிவகாமியும் லிங்காவும் யாதவியைப் பார்க்க…

அவளையிட்டுத் தான் அவர்களுக்குள் பிரச்சனை வந்தது. அதுவும் இப்போது அவர்களே அழைக்கும்போது… செல்லவில்லை என்றால்… அது வேறு மேலும் பிரச்சனையை வளர்க்கும் என்று நினைத்தவள், அங்கே போவதாக ஒத்துக் கொண்டாள்.

அவள் வருகிறேன் என்றதும், பாக்கியம் அவர் மகனையும் மருமகளையும் இருந்து யாதவியை அழைத்துக் கொண்டு வர சொல்லிவிட்டு, அவர் கணவருடன் முன்னே சென்றுவிட்டார்.

யாதவியின் பெற்றோரும் ஜனனியும் அன்றே சென்னைக்குக் கிளம்புவதாக இருந்தது.

விளக்கு வைக்கும் நேரத்திற்கு முன் யாதவியை அவர்கள் அழைத்துக் கொண்டு கிளம்ப… தீபிகாதான் நாத்தனார் என்பதால்… யாதவியின் சேலை முந்தானையைப் பிடித்துகொள்ளச் சொல்லி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்து மடி நிரப்பி அனுப்பினாள். சந்தோஷ் அம்மாவுடன் செல்ல… யாதவியின் வீட்டினரும் மகளை அங்கே அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, அப்படியே சென்னை செல்வதற்காக உடன் சென்றனர்.

மகளை அவர்கள் வீட்டில் விட்டு அடுத்த அரை மணி நேரத்தில் யாதவியின் வீட்டினர் கிளம்பி விட்டனர். லிங்கா உடன் வரக் கூடாது என்று அவன் செல்லவில்லை.

இங்கே எப்படி ஒருநாள் பொழுது போகப்போகிறது என்று யாதவி நினைக்க… ஆனால் அதற்கு மாறாகப் பாக்கியத்தின் மகன்கள், மருமகள் எல்லாம் அவளுடன் உட்கார்ந்து நன்றாகப் பேசிக் கொண்டு இருந்தனர். சந்தோஷுக்கும் அங்கே விளையாட ஆள் இருக்க… பொழுது நன்றாகவே சென்றது.

சிவகாமியும் பாக்கியமும் ஆர்வக்கோளாரில் எதோ செய்யப் போய்தான் பிரச்சனை. லிங்காவும் வளைகாப்புக்கு நேரே வந்து அழைத்ததால்… பிரச்சனையை மேலும் வளர்க்காமல் முடித்துக் கொண்டனர்.

மனைவியை அங்கே அனுப்பிவிட்டு லிங்காவுக்குத்தான் மனம் ஒரு நிலையில் இல்லை. அவன் அவளைக் கைப்பேசியில் அழைக்க….

“சொல்லுங்க லிங்கா.”

“சாரி என்னால தான நீ அங்க இருக்க… நான் உன் வீட்டுக்கு உன்னை அனுப்பாத்துனால தான…”

“நீங்க எனக்காகத்தான் என்னை அங்க அனுப்பலை. எனக்கும் அங்க போய் நிம்மதியா இருக்க முடியாது.” என்றவள்,

“இங்க எல்லோரும் நல்லாத்தான் பேசிட்டு இருக்காங்க. நவீன் கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கிறாங்க. அதனால அதைப் பத்திதான் பேசிட்டு இருக்கோம். ஒன்னும் பிரச்சனை இல்லை.”

“நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க என்னை நினைக்காம நிம்மதியா இருங்க.” என்று சொல்லிவிட்டு யாதவி வைத்தாள். இரவு உணவு உண்டு படுத்தவளுக்கு, புது இடம் என்பதால் உறக்கமே இல்லை.

காலை சீக்கிரமே எழுந்து குளித்து யாதவி தயாராக இருக்க… லிங்கா அவளை அழைத்துச் செல்ல வந்துவிட்டான். அவன் வந்ததும், சேர்ந்தே காலை உணவை அருந்தினர். மாமன் மகன்களோடு அவனும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தான். இதற்கு முன் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள்.

லிங்காவும் யாதவியும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப… “பிரசவத்துக்கு இங்கதான ஆஸ்பத்திரிக்கு வருவீங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்றார் பாக்கியம்.

பிரதீப்பின் மனைவி, “அக்கா, நவீன் கல்யாணத்துக்குத் தேதி குறிச்சதும், நாம ரெண்டு பேரும் தான் கல்யாணத்துக்கு ஷாப்பிங் போறோம்.” என்று யாதவியிடம் சொல்லி அனுப்ப… யாதவியும் சரி என்றுவிட்டு வந்தாள்.

உறவுகளுக்குள் நிரந்த பகை என்று எப்போதும் இருக்க முடியாது. சண்டையும் சமாதானமுமாகதான் செல்லும்.

தன் அண்ணன் வீட்டோடு மீண்டும் சேர்ந்து விட்டதில்… அதுவும் மருமகள் முகம் சுணக்கம் காட்டாமல், அங்கே சென்று ஒருநாள் தங்கிவிட்டு வேறு வந்ததும், சிவகாமி மருமகள் பக்கம் மொத்தமாகச் சாய்ந்து விட்டார்.

இனிமே தனித்தனியா எல்லாம் சமைக்க வேண்டாம் என்று அவர் சொல்லிவிட… யாதவியும் பிரசவ விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தவள், காலையில் எழுந்து பால் மட்டும் மாடியில் காய்ச்சிக் குடித்துவிட்டு, அவள் வேலைகளை முடித்துக் கொண்டு கீழே இறங்கினால்… திரும்ப இரவு படுக்கதான் மேலே செல்வாள்.

காலை டிபன் யாதவி செய்துவிட்டு, மதியத்திற்குக் காய் எல்லாம் அவளே நறுக்கி வைத்துவிடுவாள். சிவகாமி மதிய சமையல் செய்வார். இரவுக்குத் தோசையோ சப்பாத்தியோ தான் என்பதால் அதிகம் வேலையும் இருக்காது.

இதற்கு முன் வீட்டை சுத்தபடுத்த மட்டுமே ஆள் இருந்தது. இன்னொரு குழந்தை வந்துவிட்டால்… நிறை வேலையும் இருக்கும் என்று இப்போது பாத்திரம் தேய்க்கவும் ஆள் வைத்திருந்தனர்.

இப்போதும் சிவகாமியும் யாதவியும் சரளமாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள் தான். ஆனால் மாமியார் மருமகளுக்கு என்று இருக்கும் அறத்தை பின்பற்ற இருவருமே தவறுவதில்லை. அது போதும். மாமியார் மருமகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பது இல்லை.

யாதவி அவளின் முதல் திருமணதிற்குப் பிறகில் இருந்தே… எல்லாவற்றையும் தனியாகவே சந்தித்துப் பழகியவள், அவளுக்கு மாமியாரிடம் கேட்டு கேட்டு ஓவ்வொன்றும் செய்ய வராது. ஆனால் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்து விடுவாள்.

சிவகாமியையும் இதைச் செய்யுங்க அதைச் செய்யுங்க என்று அவள் சொல்ல மாட்டாள். அவரின் விருப்பதிற்கே விட்டு விடுவாள். சில நேரம் இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ளவே செய்யும். அப்போது இருவரும் நேரடியாக எதுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள். லிங்காவிடம் தான் குமுறுவார்கள்.

இருவரும் நேரே கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தில்… அம்மா சொல்லும் போது, அவரின் பக்கமும், மனைவி சொல்லும் போது அவளின் பக்கமும் பேசி சரிகட்டி விடுவான். பிறகு வக்கீலாக இருப்பதற்கு இவ்வளவு கூடச் சமாளிக்கத் தெரியாதா என்ன?