சந்தோஷை மடியில் வைத்தபடி அவன் ஒரு இருக்கையில் உட்கார… யாதவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் நிற்பதா போவதா என்று புரியாமல் இருக்க… அவளிடம் உட்காரு எனப் பக்கத்தில் இருந்த இருக்கையைக் காட்டினான். யாதவி அந்த இருக்கையைச் சற்று தள்ளி போட்டு இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டாள்.
அதன் பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. மணமேடையைப் பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.
திருமணதிற்கு வந்தவர்கள் நிறையப் பேர் உண்ண சென்றிருக்க… கூட்டம் குறைவாக இருக்க… அப்போது தான் ஜனனி லிங்காவை கவனித்தவள், தன் பெற்றோரை அழைத்துக் காட்ட… அவர்கள் இருவரும் வேகமாக வந்து லிங்காவை வரவேற்றனர்.
“அவர் வந்ததை எங்ககிட்ட சொல்றது இல்லையா?” என லக்ஷ்மி மகளைக் கோபிக்க…
“நீங்க பிஸியா இருக்கீங்ன்னு நினைச்சேன் மா…” என்றால் யாதவி பாவமாக.
லிங்காவை விசாரித்து விட்டு, அவனை அவர்கள் உணவருந்த அழைக்க…
“இருக்கட்டும் நான் பிறகு சாப்பிடுறேன்.” என்றான்.
ஜனனி சிபியிடம் சொல்ல… அவன் அவன் பெற்றோரிடம் சொல்ல… அவர்கள் இருவரும் வந்து லிங்காவிடம் மரியாதைக்காகப் பேசி விட்டு சென்றனர். இப்படி அங்கிருந்த உறவினர்கள் காதுக்கும் விஷயம் செல்ல… சிலர் இங்கே வந்து அவர்களிடம் வாழ்த்து சொல்லிவிட்டு செல்ல…யாதவியோ ஜனனியின் மீது கொலைவெறியில் இருந்தாள்.
இவள் பாட்டுக்கு எல்லோரிடமும் சொல்கிறாளே என்றிருந்தது. லிங்காவுக்கு அருகில் இருந்தவளின் தவிப்பு நன்றாகவே புரிய… அவன் வாய்க்குள் சிரிப்பை அடக்கியபடி இருந்தான்.
கூட்டம் குறைந்ததும் மணமேடையில் இருந்தே ஜனனி அவர்களை அழைக்க…. சந்தோஷை தூக்கியபடி லிங்கா எழுந்துகொள்ள… யாதவியும் அவனுடன் சென்றாள்.
ஜனனி லிங்காவை சிபிக்கும், சிபியை லிங்காவுக்கும் அறிமுகம் செய்ய… இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.
“மாம்ஸ் சொன்னபடி வந்துட்டீங்க.” ஜனனி சொல்ல…
“நாங்க சொன்னா செய்வோம்.” என்றான் லிங்கா.
தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சின்ன நகைபெட்டியை எடுத்து லிங்கா யாதவியிடம் கொடுத்துக் கொடுக்கச் சொன்னான்.
“நீங்களே கொடுங்க.” என்று அவள் சொன்னதை அவன் கேட்கவில்லை. அவளைத்தான் கொடுக்கச் சொன்னான்.
“நீ அவரைச் சாப்பிட கூட்டிட்டு போ…” என்ற லக்ஷ்மி சொல்ல… சந்தோஷும் விழித்திருந்தான். மூவரும் மதிய உணவு உண்ண சென்றனர்.
நிறைய விருந்தினர்கள் முன்பே உண்டு முடித்திருக்க… வெகு சிலர்தான் உணவருந்திக் கொண்டிருந்தனர். லிங்கா மடியில் சந்தோஷ் இருக்க… இருவரும் அவர்கள் இலையில் இருந்ததை முதலில் அவனுக்கு மாறி மாறி ஊட்டிவிட்டுப் பிறகுதான் அவர்கள் இருவரும் உண்டனர். வேலையாக அங்கே இங்கே நடந்தாலும், இங்கேயும் ஒரு கண்ணை வைத்திருந்த யாதவியின் பெற்றோருக்கு, சந்தோஷ் லிங்காவிடம் பொருந்திப் போய் இருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சிதான். திவாகர் ஒருநாளும் மகனை இப்படி வைத்திருந்து அவர்கள் பார்த்ததே இல்லை.
உண்டு முடித்து இருவரும் மீண்டும் ஹாலில் வந்து உட்கார.. சந்தோஷ் அங்கிருந்த பிள்ளைகளுடன் விளையாட சென்றுவிட்டான்.
“எப்போ கிளம்பலாம் யாதவி?” என லிங்கா கேட்க… எதற்கு? எங்கே? என்று எதுவும் கேட்காமல், “இன்னைக்கே கிளம்பினா கூடப் பரவாயில்லை. நாளைக்கு நான் ஆபீஸ் போகணும். அதோட இங்கே எங்க வீடும் சின்னது. ஜனனியும் சிபியும் இன்னைக்கு நைட் இங்கதான் வருவாங்க. அதுதான் கிளம்பிடலாம்னு பார்க்கிறேன்.” என்றாள்.
“உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே… நீ சாயங்காலம் போன் பண்ணு.”
“ம்ம்…”
அவளுக்காக அவன் வரவேண்டும் அவ்வளவு தான். மற்றபடி அவன் மீது அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது.
இருவரும் தேவைக்குப் பேசினார்களே தவிர… அதிகம் கூடப் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் நாகரிகமான இடைவெளியில், காலையில் இருந்து மதியம் வரை அருகருகே தான் இருந்தனர்.
மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பி விட… லிங்காவை யாதவியின் பெற்றோர் வீட்டிற்கு அழைக்க…அவன் இப்போது வேலை இருக்கிறது கிளம்ப வேண்டும் என்றவன், பிறகு வருவதாகச் சொன்னான்.
அவன் யாதவியிடம் பிறகு அழைப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்ப… சந்தோஷ் தானும் வருவதாக அவனின் கால்களைக் கட்டிக்கொள்ள… அவனைத் தூக்கிய லிங்கா… “நாம இன்னைக்கு ஊருக்கு போறோம். அதுவரை அம்மாகிட்ட இருங்க.” என்று சொல்லி முத்தமிட்டு யாதவியிடம் கொடுத்து விட்டுச் சென்றான்.
அவர்களுடையது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சின்ன வீடுதான். முன்பே கிளம்பி விடலாம் என்றுதான் இருந்தாள். இப்போது லிங்கா கேட்டதும், இன்றே கிளம்பலாம் என நினைத்தாள். அவளும் வந்து இரண்டு வாரங்கள் ஆகிறதே…
வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் சொல்ல… “நாளைக்காவது கிளம்பலாம் தான…” என்றனர்.
“நான் இருந்து என்ன மா பண்ணப் போறேன்? எனக்கு அங்க ஆபீஸ்ல வேலையும் இருக்கு.” என்றதும், சரி என்றனர். லிங்காவுக்கு அழைத்து இன்றே செல்லலாம் என்றதும், சரி நான் பார்த்து டிக்கெட் போட்டுக்கிறேன் என்றான். இரவு உணவு இங்கே வீட்டில் வந்து அருந்தும்படி சொல்லிவிட்டு வைத்தாள்.
மாலை ஜனனியும் சிபியும் வந்தனர். யாதவிதான் ஆரத்தி எடுத்தாள். அவர்கள் வந்ததும் வீட்டில் எஞ்சி இருந்த உறவினர்களும் கிளம்பி விட்டனர்.
சிபி அறையில் ஓய்வெடுக்க… யாதவியைத் தேடி வந்த ஜனனி, “நீ இன்னைக்கே ஊருக்கு போறியா?” என்று கேட்க…
“ரெண்டு வாரம் உன்னோட தான இருந்தேன். உனக்குப் பத்தலையா? அதுதான் இனி சிபி இருக்காரே… நானும் இங்க உட்கார்ந்திட்டு என்ன பண்ண?” என்றவள், “ஆமாம் மண்டபத்துல எதுக்கு எல்லார்கிட்டயும் லிங்காவை பத்தியும் என்னைப் பத்தியும் சொன்ன?” என்றதற்கு,
“எவ்வளவு பேசி இருப்பாங்க. அதுதான் பார்த்துக்கோங்க, எங்க அக்கா நல்லா தான் இருக்கான்னு காமிக்கத் தான் சொன்னேன்.” என்ற தங்கையைப் பார்த்து யாதவி முறைத்தாள்.
லிங்கா கொடுத்திருந்த தங்க நாணயத்தை எடுத்து வந்து யாதவியிடம் கொடுத்த லக்ஷ்மி, “நீ ஏற்கனவே கல்யாணத்துக்கு வேற பணம் கொடுத்த… இதுல அவர் வேற பாரு ரெண்டு சவரன் கொடுத்திருக்கார். இதுல நீ எதாவது வாங்கிக்கோ…” என்றார்.
“அம்மா, இது அவர் ஜனனிக்கு ஆசையா கொடுத்திருக்கார். அவளுக்கு எதாவது வாங்கிக் கொடுங்க.” என யாதவி லக்ஷ்மியிடமே திருப்பிக் கொடுக்க…
“இங்கேயே இருக்கட்டும் மா… நான் அப்புறம் வாங்கிக்கிறேன்.” என்றால் ஜனனி.
“அம்மா, இப்போதான் எல்லாம் சரியாகிட்டு வருது இல்ல… அக்காவுக்கு லிங்காவோட கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும் விடுங்க.” என்றால் ஜனனியும்.
லிங்காவிடம் திருமணத்தைக் குறித்துப் பேசுவோமா என்று கேட்டதற்கு,
“அவங்க வீட்ல அவ்வளவா இஷ்ட்டம் இல்லை. அவரே பேசிட்டு சொல்லட்டும்.” என்றாள்.
குழந்தையோடு இருக்கும் பெண்ணை மணமுடிக்க யோசிப்பார்கள் என இவர்களுக்கும் புரிய…
“யாதவி, நாங்களே நீ விவாகரத்து பண்றேன்னு சொன்ன போது ஒத்துக்கலை தான… அது போல அவங்களும் போகப் போகப் புரிஞ்சிப்பாங்க.”
“அவங்களுக்கு உன்னைக் கண்டிப்பா பிடிக்கும். அவங்க எதாவது வருத்ததுல ரெண்டு வார்த்தை பேசினாலும், நீ பொறுத்து போ.” என்றார் அவளின் அப்பா. இனிமேலாவது மகள் நன்றாக வாழ வேண்டுமே என்ற கவலை. ஏற்கனவே மகள் பேசியது தெரியாது.
அப்போதுதான் யாதவிக்கு அவர்கள் புரியாமல் பேசியதற்கு, தானும் அப்படிப் பேசி இருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றியது. இனி பார்த்து பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
அதன்பிறகு நடந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது இல்லையா…. லிங்கா அவளுக்காகச் சண்டை போட்டு, அங்கே எல்லோரையும் பகைத்துக் கொண்டதும் அவளுக்குத் தெரியவில்லை.
இரவு ஏழு மணி போல லிங்கா வர… வீட்டினர் அவனை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தனர். இரவு உணவு இரண்டு மாப்பிள்ளைகளுக்கும் லக்ஷ்மி ஒன்றாகவே பரிமாற… ஜனனி மட்டும் அவர்களோடு சேர்ந்து உண்ண… யாதவி மகனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.
“எப்போ கல்யாணம்?” எனச் சிபி லிங்காவிடம் கேட்டே விட்டான்.
“ரொம்ப எல்லோரையும் கூப்பிட்டு எல்லாம் பண்றதா இல்லை. எங்க அளவுல தான் எளிமையா பண்ணனும்.” என லிங்கா யாரையும் அழைக்கும் எண்ணமில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டான்.
லிங்கா உணடுவிட்டு வந்து சந்தோஷை வைத்திருக்க, யாதவி சென்று உண்டுவிட்டு வந்தாள். ஒன்பது மணி பேருந்துக்கு இருவரும் வீட்டில் இருந்து எட்டு மணிக்கே கிளம்பினர்.
“சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லுங்க.” என்று வாழ்த்தி இருவரையும் ஜனனி அனுப்பி வைத்தாள்.