இரவு பதினோரு மணிக்குத்தான் தீபிகாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. விமானம், கார் என மாறி மாறி பயணம் செய்து, குழந்தை பிறந்த சற்று நேரத்திற்கு முன்புதான் பரத் வந்திருந்தான். குழந்தை பிறந்ததை லிங்கா யாதவிக்குக் கைப்பேசியில் தகவல் அனுப்பி வைத்தான்.

அவர்கள் உறவினர்களே நிறையப்பேர் இருப்பதால்.. அதன் பிறகு யாதவியின் உதவியும் தேவைப்படவில்லை.

லிங்காவும் பரத்தும் இரவு வீட்டிற்குச் சென்று உறங்கிவிட்டு மறுநாள் காலை மருத்துவமனை வந்திருந்தனர். அவர்களை வைத்துவிட்டு சிவகாமியும் அருகில் இருந்த நாத்தனார் வீட்டுக்கு குளித்து விட்டு வர சென்றிருந்தார்.

காலை உணவுக்குப் பிறகு யாதவி ஜனனி இருவரும் சந்தோஷை அழைத்துக் கொண்டு குழந்தையைப் பார்க்க வந்திருந்தனர்.

லிங்கா சந்தோஷை தூக்கி வைத்திருக்க… சந்தோஷ் தொட்டிலில் இருந்த குழந்தையை ஆர்வமாகப் பார்த்திருந்தான்.

பாப்பா… பாப்பா…” என்று அவன் சொல்ல…

நீயே இன்னும் பாப்பா தான் டா…” என்றான் லிங்கா.

பரத், நேத்து யாதவி மட்டும் இல்லைனா… அவ்வளவு சீக்கிரம் ஹாஸ்பிடல் வந்திருக்க முடியாது.” லிங்கா சொல்ல… பரத் அவளுக்கு நன்றி சொன்னான்.

இதைப் போய்ப் பெரிதாகச் சொல்ல வேண்டுமா என்பது போல யாதவி லிங்காவைப் பார்க்க… “சரி இனிமே சொல்லலை.” என்றான் அவளைப் பார்த்து. 

பரத், ஜனனி, தீபிகா மூவரும் அவர்கள் இருவரையும் குறுகுறுவெனப் பார்த்தனர்.

உண்மையில் லிங்கா யாதவி இருவருக்கும் இதுவரை மற்றவர் மீது அதுபோல ஒரு எண்ணமே இல்லை. சில சந்தர்ப்பங்களில் அவன் உதவினான், அதே போல இவளும் உதவினாள். அவர்கள் இருவருக்குமே முதலில் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.

நாம போகலாமா?” என யாதவி ஜனனியைப் பார்த்துக் கேட்க… அவள் சரி என்றாள்.

சுகப்பிரசவம் என்பதால் மறுநாள் காலை தீபிகாவை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அடுத்த இரண்டு நாட்கள் உறவினர்கள் நண்பர்கள் எனப் படை எடுத்து வந்து அம்மாவையும் குழந்தையையும் பார்த்துவிட்டு சென்றனர்.

யாதவி அன்று அவர்கள் வீட்டிற்கு உதவிக்கு என்று வந்தது தான். மீண்டும் அவளுண்டு, அவள் வேலையுண்டு என்று இருக்க ஆரம்பித்தாள். புதன் மாலை ஜனனியும் சந்தோஷும் தீபிகா குழந்தையைப் பார்க்க சென்றனர். சிறிது நேரம் இருந்துவிட்டு வந்து விட்டனர்.

அன்னைக்கு ஒரு பையனை பத்தி விசாரிக்கக் சொன்னியே, இந்தப் பெண்ணுக்கு தானா?” எனப் பரத் கேட்க… லிங்கா ஆமாம் என்றான்.

தீபிகா என்னவென்று கேட்க பரத் விவரம் சொன்னான்.

நீயும் யாதவியும் பேசி கூட நாங்க பார்த்தது இல்லை. எப்போ இதெல்லாம் பேசினீங்க.” என்று தீபிகா கேட்க…

யாதவியை எனக்கு இங்க வந்த முதல் நாள்ல இருந்தே தெரியும். அவங்க ஆபீஸ்க்கு வேலை விஷயமா போகும் போது பேசி இருக்கேன். தேவைக்குத்தான் பேசி இருக்கோம். யாதவி யார்கிட்டையாவது அதிகம் பேசி பார்த்த்திருக்கியா? ஜெயந்தி அத்தைகிட்ட, நம்ம அம்மாகிட்டயே அளவாத்தான் பேசி இருக்காங்க. அப்புறம் என்கிட்டே மட்டும் எப்படிப் பேசுவாங்க.” என்றதற்குத் தீபிகா புரிந்ததாகத் தலையசைத்தாள்.

அன்று இரவு மாடியில் லிங்காவும் பரத்தும் மட்டும் இருக்கும் போது…

நிஜமாவே உனக்கும் யாதவிக்கும் நடுவுல ஏதுவும் இல்லையா?” எனக் கேட்க…

அடப்பாவி, நிஜமா எதுவும் இல்ல டா… ஏன் டா இப்படிக் கேட்கிற?”

நீங்க ரெண்டு பேரும் பார்க்க செம ஜோடி. எதுக்கும் இதையும் யோசி.” என்ற நண்பனை லிங்கா முறைக்க…

கல்யாணம் பண்ணிக்கோ மச்சான். எத்தனை நாள் இப்படியே இருப்ப. அதோட உன் அம்மா எப்படியும் உன்னைக் கல்யாணம் பண்ணாம விட மாட்டங்க. அவங்க பார்க்கிறதுக்கு நீயே பார்க்கலாம் டா…” என்றதற்கு, யோசிக்கிறேன் என்றான் லிங்கா.

அதையே தான் ஜனனி மறுநாள் பள்ளியில் இருந்து வந்த பிறகு, அக்காவும் தங்கையும் காபி அருந்தியபடி பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னாள்.

அக்கா, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ… சந்தோஷ் ஆம்பிளை பையன். படிக்க, வேலைக்குன்னு வெளியே போயிடுவான், உனக்குன்னு யார் இருப்பா?”

லிங்காவும் விவாகரத்து ஆனவராமே… தீபிகா சொன்னா… நீ அவரையே கல்யாணம் பண்ணிகிட்டா ரொம்ப நல்லா இருக்கும். ஒருவேளை அதனால தான் எங்கையோ இருந்த நீ, இங்க வந்தியோ. எதுவுமே காரணம் இல்லாம நடக்காதுக்கா.” என ஜனனி தத்துவம் பேச… யாதவிக்கு அப்படியொரு கோபம் வந்தது.

லூசு மாதிரி உளறாத. நாங்க ரெண்டு பேரும் விவாகரத்து ஆனவங்க தான். ஆனா ரெண்டு பேர் நிலைமையும் ஒன்னு இல்லை… திவாகருக்கே பொண்ணு கொடுக்க ரெடியா இருந்தாங்க. லிங்கா கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம்னு சொன்னா போதும், அவருக்குப் பொண்ணு கொடுக்கப் போட்டி போட்டுட்டு வருவாங்க.”

விவாகரத்து ஆன ஆணும் பெண்ணும் இங்க ஒன்னு இல்லை… அதோட எனக்குப் பையன் வேற இருக்கான்.”

நீயா எந்த முடிவுக்கும் வராதக்கா.”

இங்க பாரு. ஒரு ஆத்திர அவசரத்துக்கு எனக்கு உதவ லிங்கா தான் இங்க இருக்கார். நீ இந்த மாதிரி பேசி… எங்களுக்குள்ள இருக்கக் கொஞ்ச நஞ்ச நட்பும் போயிடும் போல…. என்னோட மரியாதையை நான் கெடுத்துக்க விரும்பலை. நீ இங்க இருந்தா இப்படித்தான் உளறிட்டு இருப்ப… நீ இந்த வாரம் சென்னைக்குப் போ.” என்றதும், ஜனனிக்குக் கோபம் வந்துவிட்டது.

நான் இணைக்கே போறேன்.” என்றவள், அப்போதே அன்று இருந்த பேருந்தில் டிக்கெட் போட்டு விட்டாள்.

தன்னிடம் உளறியது போல, லிங்காவிடமோ, தீபிகாவிடமோ  உளறி விடப் போகிறாள் என்று நினைத்த யாதவியும், அவளைத் தடுக்கவில்லை. அப்போதே ஜனனி எல்லாம் எடுத்து வைத்து கிளம்ப ஆரம்பித்தாள்.

லிங்கா வெளியே சென்று விட்டு ஏழு மணி போலப் பைக்கில் வீடு திரும்ப, அக்காவும் தங்கையும் வாசலில் நின்று வழக்காடிக் கொண்டிருந்தனர்.

நீ தனியா போக வேண்டாம் நானும் வரேன்.” என்று யாதவியும், “நீ ஒன்னும் வர வேண்டாம், எனக்குப் போயிக்கத் தெரியும்.” என்று ஜனனியும் மல்லுகட்ட…. அப்போது லிங்காவை பார்த்ததும் யாதவி இன்னும் பதட்டமானாள்.

என்ன ரெண்டு பேரும் ரோட்ல நின்னுட்டு இருக்கீங்க.” என்று லிங்கா கேட்க…

ஒன்னும் இல்லை ஜனனி இன்னைக்கு ஊருக்கு கிளம்புறா.”என்றாள் யாதவி. ஆனால் அவன் ஜனனியை பார்க்க… அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

எதுல போற?” லிங்கா ஜனனியிடம் கேட்க…

பஸ்ல.” என்றாள்.

சரி நான் போய் விடுறேன்.” என லிங்கா சொல்ல…

வேண்டாம் வேண்டாம்…” எனப் பதறிய யாதவி, “நானே போறேன்.” என்றாள்.

நீங்க போனா, நீங்களும் நைட் தனியாத்தானே திரும்பி வரணும். எனக்கு ஒன்னும் கஷ்ட்டம் இல்லை.” என்றவன், “என்னோட பைக்கில வருவா தான.” என்று ஜனனியை கேட்க…. அவள் பதில் சொல்லாமல் பைக்கில் ஏறி உட்கார… யாதவி தங்கையை முறைக்க…. ஜனனி சந்தோஷைப் பார்த்து பாய் என்றாள்.

சந்தோஷ் தானும் வருவதாகச் சொல்ல… அதற்குள் லிங்கா வண்டியை திருப்பிக் கொண்டு கிளம்பி இருந்தான்.

இருவரும் தென்காசி வரும்வரை எதுவும் பேசவில்லை. பேருந்துக்கு இன்னும் நிறைய நேரம் இருக்க… அருகில் இருந்த உணவகத்திற்கு லிங்கா அவளை அழைத்துச் சென்றான்.

இருவருக்கும் சிற்றுண்டி சொன்னவன், “ரொம்ப நாள் இருக்கப் போறேன்னு சொன்ன… ஆனா இப்போ உடனே கிளம்புற. அப்படி என்ன சண்டை உங்க ரெண்டு பேருக்கும்?” என்று கேட்க.. ஜனனிக்கு விழிகளில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

அதுவரையில் அக்காவும் தங்கையும் எதோ சின்ன விஷயத்திற்குத் தான் சண்டை என்று நினைத்திருந்தான்.

சொன்னா தான நான் எதாவது செய்ய முடியுமான்னு யோசிக்க முடியும்.” என்றான்.

சந்தோஷ் சின்னதா இருக்கும் போதே இன்னொரு கல்யாணம் செஞ்சாத்தான். அவன் பெரிசான பிறகு எல்லாம் யாரையும் பண்ணிக்க மாட்டா… அதுதான் சொன்னேன், ரெண்டு பேருக்கும்  சண்டை வந்திடுச்சு. என்னைச் சென்னைக்குப் போன்னு சொல்லிட்டா.” என்றாள்.

ஓ… என்றவன், “சரி சாப்பிடு.” என்றான். உண்டு முடித்து இருவரும் பேருந்து நிலையத்திற்கு வர….

இதுக்காகவெல்லாம் உன்னைப் போன்னு சொல்லி இருக்க மாட்டாங்க. நீ யாரையோ குறிப்பா சொல்லி கல்யாணம் பண்ண சொல்லி இருக்கணும். அதுதான் யாதவிக்குக் கோபம் வந்திருக்கும்.” என்றதும்,

அடப்பாவி வக்கீல்ன்னு நிருபிக்கிறானே…” என நினைத்தவள், “நீங்க பேசாம வக்கீல் வேலையை மூட்டை கட்டிட்டு துப்பறியும் வேலை பண்ணுங்க. நல்லா பண்ணுவீங்க போல… நான் போயிட்டு வரேன். பாய்.” என்றவள், ஓடி சென்று பேருந்தில் ஏறிக் கொண்டாள்.

ஜனனி நேரடியாகப் பதில் சொல்லவில்லை தான். ஆனால் மறைமுகமாக அதுதான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றாள். லிங்காவுக்கும் அது புரிந்தது. 

யாரை கல்யாணம் பண்ண சொல்லி இருப்பா என்று யோசித்தவனுக்கு, அடுத்த வந்த நாட்களில், அதுவும் யார் என்று யாரும் சொல்லாமலே… புரிந்து விட்டது. யாதவியே தான் காட்டிக் கொடுத்தாள்.