எனக்கென வந்த தேவதையே 


அத்தியாயம் 2

கிளம்பும் முன் வீட்டில் உண்டது தான். பேருந்தில் ஏறும் போதே… உணவு வாங்கிக் கொண்டு ஏறியதால்… வழியில் எங்கும் இறங்கவில்லை. அதிகாலையே சென்னையில் வந்து இறங்கியவள், நேராக இதற்கு முன் தான் தங்கி இருந்த வீட்டிற்கே சென்றாள்.

வீட்டை திரும்ப உரிமையாளரிடம் ஒப்படைக்கும் போது பெயிண்ட் அடித்துக் கொடுப்பது என்பது ஒப்பந்தம். இன்று அதற்கு ஆள் வர சொல்லி இருந்தாள். அவர்கள் வருவதற்குள் குளித்து வீட்டிற்கே உணவு வரவழைத்து உண்டு முடித்தாள்.

இவள் வந்தது தெரிந்தது போல அவளது முன்னால் கணவன் திவாகர் வந்து நின்றான். இங்கே இருக்கும் யாரோ தான் அவள் வந்தது பற்றிச் சொல்லி இருக்க வேண்டும்.

கதவை திறந்த யாதவி, அந்தக் கதவிலேயே சாய்ந்து நின்று, என்ன என்பது போலப் பார்த்தாள்.

“இங்க இருந்து போனா மட்டும் நிம்மதியா இருந்திடுவியா நீ?” எனத் திவாகர் திமிராகக் கேட்க…

“அதைப் பற்றி உங்களுக்கு என்ன?” என யாதவியும் அவனை விடத் திமிராகக் கேட்டாள்.
“படிப்பு வேலை இருக்குன்னு திமிர்ல தானே ஆடுற? படப் போற டி நீ.” என்றான் ஆத்திரமாக.

“அப்படிப் பட்டா உங்களுக்குச் சந்தோஷமா தானே இருக்கும். அப்புறம் என்ன?”

“ஆமாம் எனக்குச் சந்தோஷாமா தான் இருக்கும். ஆனா…” என மேலும் எதோ சொல்ல வந்தவன், பெயிண்ட் அடிக்கும் ஆட்கள் வந்துவிட… அவர்களைப் பார்த்து தயங்கி நின்றான்.

“எனக்கு வேலை இருக்கு, நீங்க கிளம்புங்க.”

“நீ எப்போ போற?”

“இன்னைக்கு நைட்.”

“சரி சாயங்காலமா உங்க வீட்டுக்கு வரேன்.” என்றவன் சென்று விட… யாதவிக்கு விட்டால் போதும் என்றிருந்தது.

ஒற்றைப் படுக்கை அறைக் கொண்ட சின்ன வீடு தான். “வேலை முடிச்சிட்டுச் சுத்தமா கிளீன் பண்ணிடுங்க. நான் ஒரு ரெண்டு மணி நேரத்தில வரேன்.” என்றவள், அவளது சென்னை அலுவலகத்திற்குக் கிளம்பி சென்றாள்.

அலுவலகத்திற்குள் சென்றவள், “என்ன மஞ்சு, நான்தான் எல்லா வேலையும் முடிச்சு கொடுத்திட்டு தானே போனேன். அப்புறம் என்ன பெண்டிங் வொர்க் இருக்குன்னு சொல்லி இருக்காங்க.” என்று கேட்க… 


“ம்ம்… இங்க ஒரு குரங்கு மேனேஜரா உட்கார்ந்திட்டு இருக்கு இல்ல… அந்தக் குரங்கு பண்ற வேலை. அதுக்கு நீ இங்க இருந்து போயிட்டேன்னு காண்டு. அதுதான் வேற ஒன்னும் இல்லை.” என்றால் மஞ்சு கடுப்பாக.

“அப்படியா இரு பார்த்துக்கிறேன்.” என மேனேஜரின் அறைக்குச் செல்ல… அவர் வேண்டுமென்றே அவளை அவர் அறையில் காக்க வைக்க…

“சார்… எனக்கு இங்க உட்கார்ந்திட்டு இருக்க நேரம் இல்லை. எதோ வேலை பெண்டிங் இருக்குன்னு சொன்னீங்களே… என்னன்னு சொல்றீங்களா?” என யாதவி நேரடியாகக் கேட்க…

“உன் அவசரத்துக்கு எல்லாம் ஆட முடியாது யாதவி. கொஞ்ச வெயிட் பண்ணு.” என்று அந்த மேனேஜர் குருமூர்த்தி அதிகாரமாகச் சொல்ல…

“மரியாதையா பேசுங்க சார். நீ வா போன்னு பேசாதீங்க.” என்றால் யாதவியும் கோபமாக.

“என்ன யாதவி இனி இங்க வேலை பார்க்க போறது இல்லைன்னு தைரியத்துல பேசுறியா… தென்காசியில மட்டும் ஆம்பிளைங்க இல்லையா?” என்று குருமூர்த்தி நக்கலாகப் பார்க்க…

“உங்க அளவுக்கு யாரும் கேவலமா இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.” என யாதவி திருப்பிக் கொடுக்க, மேனேஜரின் முகம் காற்று போலப் பலூனாகச் சுருங்கிப் போனது.

“சார், இப்போ எல்லாம் பொண்ணுங்களைத் தொட்டா தான் பாலியல் குற்றவாளின்னு இல்லை… பார்வையாள, பேச்சினாலே பொண்ணுங்களைச் வக்கிரமா சீண்டினாலும், அவங்களும் பாலியல் குற்றவாளிதான். போலீஸ் ஸ்டேஷன் போய் எல்லாம் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டாம், இருந்த இடத்தில இருந்து போன் செஞ்சா போதும், இல்லைனா மெயில் அனுப்பினா கூடப் போதும்.”

“நீங்க நாம பேச தான செய்றோம். பார்க்க தானே செய்றோம்னு அலட்சியமா இருந்துடாதீங்க. அப்புறம் பேஸ்புக் இன்ஸ்டாகிராம்னு நாரி போயிடுவீங்க. உங்களுக்குப் பொண்ணு வேற இருக்கிறதா கேள்விபோட்டேன். எதுக்கும் பார்த்து இருந்துக்கோங்க.”

“முன்னாடி காலம் போல இல்லை இப்போ… உங்களை மாதிரி ஆம்பிளைங்க ஒண்ணுல தப்பிச்சாலும் இன்னொண்ணுல மாட்டிப்பீங்க.”

“என்னைக் கேட்டீங்களே… உங்க வீட்ல இருக்கப் பொண்ணுங்க கிட்ட எல்லாம் கேட்டுடீங்களா…. உங்களைப் போல ஆம்பிளைங்க அவங்க போற இடத்திலேயும் இருக்காங்களான்னு, எதுக்கும் கேட்டுடுங்க சார்.”

தங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றிப் பேசியதும் மேனேஜருக்கு சுருக்கென்று மனதில் தைக்க…

“நீங்க கிளம்புங்க யாதவி.” என்றார்.

“எதோ வேலை இருக்குன்னு சொன்னீங்களே…”

“இல்லை… நான்தான் தெரியாம சொல்லிட்டேன். நீங்க போகலாம்.” என்றதும், நக்கலாக அவரைப் பார்த்து சிரித்த யாதவி அறையில் இருந்து வெளியே வந்தாள். 


யாதவி மஞ்சுவிடம் வந்து “எதுவும் பெண்டிங் இல்லைன்னு சொல்லிட்டார்.” என்றதும்,

“அப்போ எதுக்கு உன்னை வீணா அலைய வைக்கணும். திமிர் தானே…”

“நல்லா கேட்டுத்தான் வந்தேன்.”

“உனக்கு விவாகரத்து ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதுல இருந்து தான் இப்படி.”

“ம்ம் ஆமாம்.”

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத யாதவி. நீ வேற யாரையாவது பார்த்து இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. அப்போதான் இந்த மாதிரி ஆளுங்க டார்ச்சர் இருக்காது.”

“அது அதை விடப் பெரிய டார்ச்சர். சில நேரம் கல்யாணம் பண்ணாம தனியா இருந்தாக் கூட நிம்மதியா இருக்கலாம். எனக்கு என் பையனை நல்லபடியா வளர்த்தா போதும்.” 


“உனக்கு இருபத்தஞ்சு வயசுதான். எல்லோரும் திவாகர் மாதிரி இல்லை. யாராவது நல்லவர் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கோ… நீ ஏன் டி உன் வாழ்க்கையை வீணாக்கணும்.” என்றதும், யாதவி எதோ சொல்ல வர…

“ப்ளீஸ் உடனே எதுவும் சொல்லாத…இப்பவே உன்னைப் பண்ணிக்கச் சொல்லலை. ஆனா அந்த மாதிரி யாரரையாவது பார்த்தா கண்டிப்பா பண்ணிக்கோ.” 


“ஓகே மஞ்சு… யோசிக்கிறேன்.” என யாதவி நல்லவிதமாகவே விடைபெற்றுக் கொண்டாள்.

திரும்ப வீட்டிற்கு வர… சின்ன வீடு தானே வேலை முடிந்திருந்தது. அவர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பியவள், வீட்டு உரிமையாளரை வர சொல்லி வீட்டின் சாவியைக் கொடுத்து விட்டு, அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

மதியம் இரண்டரை மணி போல அவள் பெற்றோரின் வீட்டிற்குள் நுழைய… அவளைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டான், அவளின் செல்ல மகன் சந்தோஷ்.

“அம்மா… அம்மா…” என்றவன் “ஜானு, அம்மா வந்திருக்கா…” என அவன் சித்தியை அழைத்தான். அறையில் இருந்து ஜானு வெளியே வர… சமையலறையில் இருந்து அவள் அம்மா லக்ஷ்மியும் வெளியே வந்தார். அவள் அப்பா அங்கே ஹாலில் தான் இருந்தார்.

சந்தோஷிற்கு இப்போது மூன்று வயதாகப் போகிறது. சின்னக் குழந்தையில் இருந்து அவனை விட்டு யாதவி வேலைக்குச் சென்று வருவதால்… தாய் இல்லாமல் இருந்து கொள்வான். ஆனால் தாயை பார்த்து விட்டால் வேறு யாரிடமும் போக மாட்டான். அதனால் தான் அவள் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு யாதவி இங்கே வந்தாள். இப்போதும் தாயின் இடுப்பில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டான்.

“வாக்கா உன் வேலை எல்லாம் முடிஞ்சுதா?” ஜனனி கேட்க…

“முடிஞ்சுது, இன்னைக்கு நைட் பஸ்க்கு கிளம்புறேன்.” தங்கைக்குச் சொல்வது போலப் பெற்றோருக்கும் தகவல் சொன்னாள்.

லக்ஷ்மி எதோ சொல்ல வர…. “அம்மா பசிக்குது மா… அக்காவுக்கும் பசிக்கும், முதல்ல சாப்பிடலாம்.” என ஜனனி சொல்ல… லஷ்மியும் சமையல் அறைக்குச் சென்றார்.

ஜானு சமைத்த உணவுகளை எடுத்து வந்து மேஜையில் வைத்தவள், தனக்கும் யாதவிக்கும் அவளே பரிமாறினாள்.

சந்தோஷ் ஏற்கனவே உண்டுவிட்டான் என்றதும் யாதவி உண்ண தொடங்கினாள்.

அவர்கள் எல்லாம் உண்டுதான் முடித்திருப்பார்கள், சற்று நேரத்தில் திவாகர் வந்துவிட… அவனிடம் மகனை விட்டுவிட்டு யாதவி உள்ளே அறைக்குச் சென்றுவிட்டாள்.

யாதவியின் பெற்றோர் முன்பு பாசமான தந்தையாக, மகனை விட்டு பிரியப்போகும் வருத்தத்தில் இருப்பது போலத் திவாகர் நடித்துக் கொண்டிருந்தான். சந்தோஷை அவனால் ஐந்து நிமிடங்கள் கூட வைத்திருக்க முடியவில்லை. சந்தோஷ் தாயை தேடி வந்திருந்தான்.

“அக்கா, நீ தனியா அங்க இருந்துப்பியா?” என்றதும்,

இங்க இருந்தா சும்மா திவாகர் வந்து தொந்தரவு கொடுத்திட்டே இருப்பார். அதோட அப்பாவும் அம்மாவும் என்னைப் பேசியே கொல்வாங்க. அதுக்கு அங்க தனியா இருந்தாக் கூடப் பரவாயில்லை. நிம்மதியா இருப்பேன்.” 


“உனக்கு அப்பா அம்மா மேல கோபம். அதுதான் நீ போற?”

“ஆமாம், நான் உன்னோட கல்யாணத்துக்குத் தடையா இருக்கிறதா அவங்க நினைக்கிறாங்க. என்னால தான் உனக்கு வர்ற வரன் எல்லாம் தட்டிப் போகுதுன்னு சொல்றாங்க. எதுக்கு நான் நந்தியா உன் வாழ்க்கைக்குக் குறுக்கே இருக்கணும்.”

“வெளியூருக்கு மாற்ற சொல்லி நான்தான் கேட்டேன். தென்காசியில தான் கிடைச்சது. நல்லவேளை அங்க உதவிக்கு என்னோட ப்ரண்ட் ரேகா இருக்கா…”

“நீ போயிருக்கக் கூடாது கா…”

“ஒரு ரெண்டு வருஷம் நான் வெளியூர்ல இருந்தா, திவாகரோட தொல்லை இல்லாம போகலாம். இங்க இருந்தா அடிக்கடி வந்து உயிரை எடுக்கிறார். அதே போல உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுனா… அப்பா அம்மா மனசு மாறவும் வாய்ப்பு இருக்கு. ரெண்டு வருஷம் தானே நான் சமாளிச்சுப்பேன்.”

“நீ பாவம் கா… உனக்குப் புருஷனும் சரி இல்லை. அப்பா அம்மாவும் புரிஞ்சிக்கலை.”

“இந்தக் காலத்தில எல்லோரும் குடிக்கிறாங்கலாம். உனக்கு மட்டும் என்ன அட்ஜஸ்ட் பண்ணி வாழறதுக்குன்னு கேட்கிறாங்க.”

“குடிச்சிட்டு வந்தா, திவாகர் எப்படிப் பேசுவாருன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அதோட எல்லோரோடவும் என்னைச் சேர்த்து வச்சுச் சந்தேகப்படுறது. தினமும் சண்டை தான். கல்யாணம் ரெண்டு மாசம் நிம்மதியா இருந்திருப்பேனா… அதுக்குப் பிறகு ஒருநாள் கூட நிம்மதியா தூங்க முடியலை. இவர் பணத்தைக் குடிச்சு காலி பண்ணிட்டு, என் சம்பள பணத்துல தான் குடும்பம் நடத்துறது.”

“நானும் அவரை எவ்வளவோ மாத்த தான் பார்த்தேன். ஆனா ரெண்டு நாள் நல்லவர் மாதிரி நடிப்பார், மூணாவது நாள் திரும்ப அதே தான் பண்ணுவார். இது போல ஆளுங்க எல்லாம் திருந்த மாட்டாங்க.”

“ஒரு வருஷம் போராடி பார்த்திட்டு தான் விட்டுட்டேன். காலமெல்லாம் போரடிட்டே இருக்கணும்னு அம்மாவும் அப்பாவும் நினைக்கிறாங்க போல…”

 
“இவரோட குடி பழக்கத்தால காலம் எல்லாம் நான் தண்டனை அனுபவிக்கனுமா என்ன? என்னால முடியாது. அதோட இவரைப் பார்த்து வளர்ந்தா சந்தோஷ் எப்படி இருப்பான்?”

“விடுக்கா, நீ பண்ணது கரெக்ட் தான்.”

“உனக்கு மட்டும் தான் வீட்டு அட்ரஸ் தெரியும். தயவு செஞ்சு யார்கிட்டயும் கொடுத்திடாத.”

“எனக்குத் தெரியாதா கா…அதெல்லாம் நான் கொடுக்க மாட்டேன். நீ கவலைப்படாம இரு.”

அவர் கிளம்புறார் என லக்ஷ்மி வந்து சொல்ல… யாதவி வெளியே வந்தாள். அவள் வந்ததும் அவர்கள் தனியாகப் பேசிக்கொள்ளட்டும் என்று அவள் பெற்றோர் உள்ளே சென்று விட்டனர்.

“நீ பாட்டுக்கு வெளியூர் போய் உட்கார்ந்திட்டா… நான் எப்படிச் சந்தோஷைப் பார்க்கிறது?”

“பையன் மேல ரொம்பப் பாசம்? இதை என்னை நம்பச் சொல்றீங்க? நான் அவனுக்காகத்தான் உங்ககிட்ட இருந்து விவாகரத்தே வாங்கினேன். நான் அனுபவிச்ச வேதனை அவனுக்கும் வேண்டாம்னு தான். நீங்க இருக்கிற இடத்தில வளர்ந்தா… அவன் மனநிலை பாதிக்கப்படும்னு தான். அதெல்லாம் உங்களுக்கும் தெரியும்.” யாதவி சொல்ல சொல்ல… திவாகரின் முகம் மாறிக் கொண்டே வர…

“நான் சென்னைக்கு வரும் போது தகவல் சொல்றேன். நீங்க வந்து உங்க பையனை பார்த்துக்கோங்க. இனி இது மாதிரி வீட்டுக்கு எல்லாம் வராதீங்க. எதாவது பொது இடத்தில பார்த்துக்கச் சொல்லித்தான் கோர்ட் சொல்லி இருக்கு.” என்றதும், அவளை முறைத்தபடி எழுந்து சென்றான்.

அவன் சென்றதும் கதவை சாற்றிக் கொண்டு வந்த யாதவி, தங்கையின் அறையில் சென்று படுத்து உறங்கி விட்டாள். மாலை எழுந்தவள், அவளும் கிளம்பி மகனையும் கிளப்ப ஆரம்பித்தாள்.

ஏழு மணிக்கே மகனுக்கும் உணவு கொடுத்து அவளும் உண்டு முடிக்க…

“உன் தலையில நீயே மண்ணை அள்ளி போட்டுகிட்ட… எங்க யார் பேச்சையும் கேட்கலை… உனக்கு இதெல்லாம் இப்ப புரியாது. ஆனால் ஒருநாள் அப்பா அம்மா பேச்சைக் கேட்டிருக்கலாம்னு, நீ கண்டிப்பா வருத்தபடுவ.” என அவள் அம்மா சொல்ல…

“நீ இதெல்லாம் இவகிட்ட ஏன் சொல்ற? மாப்பிள்ளைக்கு வேற கல்யாணம் ஆகப் போகுது. அவருக்கு ஒன்னும் நஷ்ட்டம் இல்லை. இவதான் வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிற்கிறா?” என்றார் அவளின் அப்பா.

“உங்க ரெண்டு பேருக்கும், நான் நிறையப் புரிய வைக்க முயற்சி செய்திட்டேன். நீங்க ஒரு முடிவு செய்திட்டு பேசும் போது என்னால ஒன்னும் பண்ண முடியாது. ஆனா உங்களுக்கு ஒருநாள் நான் தப்பான முடிவு எடுக்கலைன்னு புரியும்.” என நம்பிக்கையாகச் சொன்ன யாதவி,

“ஜனனி, அப்பா பார்க்கிறாங்க அம்மா பார்க்கிறாங்கன்னு இல்லாம… அந்த மாப்பிள்ளையைப் பத்தி நல்லா தெரிஞ்சிட்டுக் கல்யாணம் பண்ணு. அவசரப்பட்டு எந்த முடிவும் பண்ணாத. அவரோட நல்லா பேசி பழகிட்டு முடிவு பண்ணு.” என்றால் தங்கையிடம்.

“கண்டிப்பா கா…” என ஜனனி சொல்ல… லக்ஷ்மி மகள்கள் இருவரையும் முறைத்தாள்.

யாதவி கிளம்பும் நேரத்தில், ஜனனி அவளை இறுக அணைத்து விடைகொடுத்தாள்.

பெற்றோருக்கு அவள் வெளியூர் செல்வது வருத்தம் தான். ஆனால் இந்த மகளையும் பார்க்க வேண்டுமே… அதோடு அவர்கள் யாதவியைப் போகச் சொல்லவில்லை. அவள் இதற்கு முன்பே தனியாகத்தான் இருந்தாள். மகனை மட்டும் வேலைக்குச் செல்லும் போது, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு செல்வாள்.

மகனை வைத்துக் கொண்டு ரயிலில் ஏறி இறங்க கஷ்ட்டமாக இருக்கும் என்று பஸ்ஸில் தான் முன்பதிவு செய்திருந்தாள். 


அன்றும் மழை தூறியதால்… பஸ்ஸில் இருந்து இறங்கும் போது, மகனை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவள், தனது ஷால் வைத்து அவன் மேல் தூறல் விழாமல் மூடிக் கொண்டாள்.

யாதவி பேருந்தில் இருந்து இறங்கி நடக்க… பின்னே லிங்கா பைக்கில் வந்து கொண்டிருந்தவன் கண்ணில், முன்னே சென்ற யாதவி பட… பின்னே இருந்து பார்த்தாலும், அவள்தான் என அவனுக்குத் தெரிந்தது. இடையைத் தாண்டி இருந்த கூந்தலே அவளைக் காட்டிக் கொடுக்க… தோளில் இரண்டு பைகளுடன் நடந்து கொண்டிருந்தாள்.

என்ன இப்பவும் தனியா தான் வர்றாங்க. அப்போ தனியா தான் இருக்காங்களா என நினைத்தவன், அவளுக்கு அருகே வந்திருக்க… அவளின் பக்கவாட்டில் தெரிந்த ஷூ அணிந்திருந்த குட்டிக்கால்களை அப்போதுதான் கவனித்தான். அம்மாவின் நடைக்கு ஏற்ப அந்தக் குட்டிக்கால்களும் அசைந்தது.

அந்தக் குட்டி கால்களுக்குச் சொந்தக்காரர் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சுவாரசியம் பிறந்தது.

அவளைத் தாண்டி முன்னே சென்றவன், பிள்ளையைப் பார்க்கும் ஆசையில் சற்று திரும்பிப் பார்க்க… எதோ புதையலை கொண்டு செல்வது போல… யாதவி மகனை கைகளில் ஏந்தி இருந்தவள், வெளியே தெரியாமல் துணிக் கொண்டும் மறைத்திருந்தாலே… அதனால் என்ன குழந்தை என்று கூட லிங்காவுக்குத் தெரியவில்லை. சற்று ஏமாற்றம் தான்.

“எங்கப் போயிடப் போறாங்க. நம்ம வீடு பக்கத்தில தானே… பார்த்துக்கலாம்.” என்ற எண்ணத்தில், வண்டியின் வேகத்தை அதிகபடுத்திச் சென்றான்.