அப்போது சந்தோஷ் வந்தவன், அவன் விளையாட்டுச் சாமான்களை எல்லாம் ஒரு பெரிய பையில் எடுத்து வைக்க… அவன் செய்வதை இருவரும் பார்த்துக் கொண்டிருக்க… பையைத் தூக்க முடியாமல் அவன் இழுத்துக் கொண்டு செல்ல…

இருடா, படியில உருண்டு வைக்கப் போற…” என்றபடி சென்ற லிங்கா, மகனை கீழே விட்டுவிட்டு வந்தான்.

சந்தோஷ் கீழே அவனுக்கு என்று ஒரு அறையை அவனே எடுத்துக் கொண்டு, அவன் பொருட்களை எல்லாம் அங்கே சென்று வைத்துகொள்ள… அவன் செய்வது எல்லாம் பார்த்து சிவகாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பயபுள்ள விட்டா வீட்டை எழுதி கேட்கும் போல என நினைத்துச் சிரித்துக் கொண்டார்.

கீழே இருந்தாலும் அடிக்கடி அவன் அம்மாவையும் எட்டிப் பார்த்துக்கொள்வான்.

சும்மா மாடி ஏறக் கூடாது என யாதவி சொல்லி இருக்க… கீழே நின்றே அம்மா என்று குரல் கொடுப்பான். யாதவி எட்டிப் பார்த்தால்… பாய் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவான்.

மாலை லிங்காவும் யாதவியும் கடைக்குக் கிளம்ப…. சந்தோஷும் அவர்களுடன் தொற்றிக் கொண்டான்.

நகைக்கடையில் யாதவி ஆண்கள் அணியும் மாடலில் செயின் கேட்க….

நான் என் செயினை உனக்குக் கொடுத்ததுக்காகப் பதிலுக்கு நீ வாங்கிறேனா… எனக்குச் செயின் வேண்டாம்.” என லிங்கா சொல்ல…

அதுக்காக ஒன்னும் வாங்கலை… எனக்கு எதாவது உங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்னு ஆசையா இருக்கு.” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

அப்படி என்றால் சரி என்றான். யாதவி லிங்காவிடம் எந்த மாடல் எடுக்கலாம் என்று கேட்க… “உனக்குப் பிடிச்சதே வாங்கு.” என்றுவிட்டான்.

திருமணமாகி இத்தனை நாட்களில் யாதவியின் சம்பளத்தில் செலவு செய்யும்படி பெரிதாக எதுவும் இல்லை. காய்கறி அரிசி எல்லாம் அவர்கள் தோட்டத்தில் இருந்து வந்துவிட… மளிகை சாமான்கள் மற்ற சாமான்கள் எல்லாம் இருவரும் சேர்ந்தே சென்று வாங்குவதால்… லிங்காவே பணம் கொடுத்து விடுவான். அதனால் அவளிடம் பெரிய தொகை சேமிப்பாக இருந்தது.

மூன்று சவரனில் ஆண்கள் அணிவது போலத் திடமாக அவள் தேர்ந்தெடுக்க… லிங்காவும் நல்லா இருக்கு என்று சொல்ல… அதையே வாங்கினாள்.

பிறகு லிங்கா அவளுக்கு மோதிரம் பார்க்க… “நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி வாங்கிக்கலாமா?” என்றவள், இருவருக்கும் ஒரே மாதிரி மாடலில் மோதிரம் எடுக்க… சந்தோஷ் அவனுக்கும் கேட்டான்.

உனக்கு வாங்கின செயின் மோதிரம் எல்லாம் இருக்கு.” என யாதவி சொல்ல…அப்போதும் சந்தோஷ் வேண்டும் என்று கேட்க…

உனக்கு மோதிரம் வேணுமா? இல்ல கார் வேணுமா?” என லிங்கா கேட்க…

கார்.” என்றான்.

வீட்டுக்கு போகும் போது வாங்கலாம் என்றதும் சந்தோஷ் குஷியாகி விட… லிங்காவும் யாதவியும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

நகைக்கடையில் இருந்து அப்படியே கோவிலுக்குச் சென்றுவிட்டு, சந்தோஷ் கேட்ட காரையும் வாங்கிக் கொண்டு வீடு வந்தனர். சந்தோஷ் கீழேயே இருந்து கொண்டான்.

வீட்டில் சாமி படத்தின் முன்பு வாங்கி வந்த நகைகளை வைத்து கும்பிட்டு, யாதவி கணவனுக்குச் செயின் எடுத்து போட்டுவிட்டாள். பிறகு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

மறுநாள் வீட்டில் இருந்ததால்… லிங்கா காலர் இல்லாத பனியன் தான் அணிந்திருந்தான். மகனைப் பார்த்த சிவகாமி அவன் கழுத்தில் இருந்த புதிய செயினைப் பார்த்துவிட்டு, “என்ன டா பளபளன்னு இருக்க.” என்றதும்,

என் பொண்டாட்டி வாங்கிக் கொடுத்தா.” என்றான் பெருமையாக.

இவனுடையதை யாதவி அணிந்திருப்பதை அவரும் பார்த்துதான் இருக்கிறார். சிவகாமி ஒன்றும் சொல்லாமல் இருக்க, “என்ன?” என்றான்.

நல்லாத்தான் இருக்கு.” என்றார்.

சந்தோஷ் என்ன செய்கிறான் என்று பார்க்க, அவன் இருந்த அறைக்குள் லிங்கா செல்ல…

ஒருபக்கம் அவனது கார்களைச் சின்னதில் இருந்து பெரிசு வரை வரிசையாக அடுக்கி வைத்திருந்தவன், இன்னொரு பக்கம் அவனது சைக்கிள், ஸ்கூட்டர் எல்லாம் வைத்திருந்தான். அன்று யாதவி கொடுத்த உடைகளையும் எடுத்து வந்து அந்த அறை அலமாரியில் வைத்திருந்தான்.

லிங்காவே பார்த்து அசந்து விட்டான். “என்ன டா இது?” என்று மகனைப் பார்த்துக் கேட்க… சந்தோஷ் “என்னோட வீடு.” என்றான்.

சிவகாமி உள்ளே வந்தவர், “பார்த்தியா எப்படி வச்சிருக்கான்னு. சும்மா ஒரு இடத்தில் உட்கார மாட்டான் டா…” என்றார்.

சின்னப் பசங்க அப்படித்தான் மா இருப்பாங்க. ஆனா எடுத்து கலைக்காம அழகா அடுக்கி வச்சிருக்கான் பாருங்க.” என்றவன் மகனை தூக்கி முத்தமிட…

உன் அடுத்தப் பிள்ளைக்கு நீ புதுசா எதுவும் வாங்க வேண்டாம். இதை வச்சு விளையாடினாலே போதும்.” என்றார் சிவகாமி.

சந்தோஷுக்கு இரவு உறங்கும் போது அம்மா வேண்டும். அதனால் இரவு உண்டதும் மாடிக்கு வந்து விடுவான். பள்ளி இருக்கும் நாட்களில் மாலை வந்ததும் சிவகாமியிடம் சென்று விடுவான். விடுமுறை நாட்களில் யாதவி அவனைக் குளிக்க வைத்து, சிறிது நேரம் அந்த வாரம் நடத்தியது எல்லாம் படிக்க வைத்தே கீழே அனுப்புவாள். சிறிது நேரம் விளையாடுவான், அல்லது அவர்கள் வராண்டாவில் சைக்கிள் ஓட்டுவான். சிவகாமி வீட்டு வேலைப் பார்த்துக் கொண்டே இவன் மீது ஒரு கண்ணும் வைத்திருப்பார்.

சிவகாமிக்குக் கை தாராள கைதான். அவருக்கு எதுவுமே கொஞ்சமாகச் செய்ய வராது. குழம்பி காய் என்று எது செய்தாலும் தாரளமாகச் செய்வார். தினமுமே எதாவது மகனுக்கும் மருமகளுக்கும் தருவார். அதனால் யாதவிக்கும் பெரிதாகச் சமைக்க வேண்டியது இல்லை. அவர் கொடுக்கும் குழம்பை வைத்தே தோசையோ சப்பாத்தியோ இரவுக்குச் செய்வாள்.

காலை அலுவலகத்துக்குச் செல்லும் போது மட்டும் எதாவது செய்து அவளுக்கும் மகனுக்கும் எடுத்து செல்வாள். சிவகாமியின் கைமணத்தில் அம்மாவும் மகனும் பார்க்க தளதளவென்று இருந்தனர்.

சிவகாமியின் உறவில் ஒரு திருமணம் வர… அவர்கள் வீட்டுக்கே வந்து பத்திரிகை வைத்தவர்கள், மாடியில் சென்று யாதவியையும் அழைத்து விட்டு, கல்யாணம் தென்காசியில தான். அதனால் குடும்பத்தோட வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டு சென்றனர்.

டேய் இப்படி ஒதுங்கியே இருக்காத டா… உன்னை மதிச்சு கூப்பிடுறவங்க வீட்டு விஷேத்துக்காவது போயிட்டு வா… நீ உன் குடும்பத்தோட போனாதானே… நீ எப்படி இருக்கன்னு மத்தவங்களுக்கும் தெரியும்.” எனச் சிவகாமியும் சொல்ல… சரி எல்லோரும் சேர்ந்து போகலாம்.” என்றான் லிங்கா.

யாதவிக்கு இப்போது ஐந்து மாதங்கள் ஆரம்பித்து இருக்க… குட்டி பந்து வடிவத்தில் அவளது வயிறு நன்றாகவே தெரிந்தது.

திருமணத்தன்று யாதவி அடர் ரோஜா நிற பட்டுப் புடவையில், தன்னிடம் இருந்த நகைகளை அணிந்து தயாராகி இருக்க… எளிமையான அலங்காரத்திலும் அழகாக… அதோடு தாய்மையின் பூரிப்பும் சேர்ந்துகொள்ள… கண்ணைக் கவர்வது போல இருந்தாள்.

காரில் கணவனின் அருகே யாதவி உட்கார்ந்துகொள்ள.. பின் இருக்கையில் சிவகாமியும் சந்தோஷும் இருந்தனர். மண்டபத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய லிங்கா சந்தோஷை தூக்கிக்கொள்ள… மண்டபத்திற்குள் சென்றனர்.

இவர்களைப் பார்த்ததும் சில உறவினர்கள் வந்து நலம் விசாரிக்க… எல்லோரின் பார்வையும் யாதவியின் மேடிட்ட வயிற்றில் தான் இருந்தது.

சிலர் சிவகாமியிடமே, “மருமகள் உண்டாகி இருக்கா போலா. நீங்க சொல்லவே இல்லை.” என்று குறைபட…

இது என்ன அதிசயமா? கல்யாணம் பண்ணிகிட்டா குழந்தை பிறக்காதா?” என்றார் சிவகாமி சாதாரணம் போல… பாக்கியமும் அதையே கேட்க…

நீங்கதான் முன்னாடி அவன் பேசினதையே வச்சிட்டு விலகியும் போறீங்க. அப்புறம் சொல்லவும் இல்லைன்னு சொல்றீங்க. என்னை என்னதான் பண்ண சொல்றீங்க?” எனச் சிவகாமி அவரிடமே கேட்க… பாக்கியம் வாயை மூடிக் கொண்டார்.

அவனிடம் விரும்பி வந்து பேசியவர்களை லிங்காவும் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான். சிலர் அவர்களை வீட்டிற்கும் அழைத்தனர். அன்று திருமண வீட்டில் யாதவி குழந்தை உண்டாகி இருப்பதே உறவினர்கள் மத்தியில் பேச்சாக இருந்தது.

லிங்கா மனைவி மகன் அம்மா சகிதம் மேடைக்குச் சென்று மணமக்களுக்குப் பரிசு கொடுத்து வாழ்த்தி விட்டு, அப்படியே நேராக உண்ண அழைத்துச் சென்றவன், வெகு நேரம் அங்கே தங்காமல் கிளம்பும்படியும் பார்த்துக் கொண்டான்.

எல்லார் கண்ணும் இன்னைக்கு நம்ம மேலதான் என்ற சிவகாமி வீட்டிற்கு வந்ததும் மூவருக்கும் சுற்றிப் போட்டார்.

யாதவிக்கு ஆறாம் மாதம் துவங்கி இருக்க… மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்கு மருத்துவமனை வந்திருந்தனர். மருத்துவரை பார்ப்பதற்கு முன் சில பரிசோதனைகள் செய்வார்கள், அதற்கு யாதவி சென்றிருக்க… அங்கே பெண்களாக இருந்ததால்… லிங்கா வேறுபக்கம் சென்று தனியே நின்று கொண்டிருந்தான்.

அப்போது அவனை நோக்கி ஒரு பெண் வர… தெரிந்த முகமாக இருக்கிறதே என்று உற்றுப் பார்க்க… அருகில் வந்ததும் தான் அவனின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா என்று தெரிந்தது.

அவன் முன்பு வந்து நின்றவள், “அன்னைக்கு மட்டும் உங்க வீட்டு ஆளுங்களை விட்டுட்டு எங்க வீட்டுக்கு வரமுடியாது சொன்னீங்க. ஆனா இப்போ மட்டும் யாரையோ கல்யாணம் பண்ண… உங்க வீட்டு ஆளுங்க எல்லோரையும் பகைச்சிக்கத் தான செஞ்சீங்க.”

அப்போ காரணம் அது இல்லை. உங்களுக்கு என்னைப் பிடிக்கலை அதுதான்.” என்று ஐஸ்வர்யா அவனைக் குற்றம் சொல்ல…

நான் பதில் சொல்லிடுவேன். உனக்குத்தான் ரொம்ப வலிக்கும் பரவாயில்லையா.” என்றான் லிங்கா.