எனக்கென வந்த தேவதையே

அத்தியாயம் 18

யாதவி அவள் வீட்டினருக்குத் தெரியபடுத்த அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. லக்ஷ்மி கைபேசி வழியாக இளைய மகளிடம் மூத்த மகளைப் பற்றி மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்ள… ஜனனிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

அம்மா, நான் அங்க வந்ததும், அக்காவை பார்க்க போகலாம்.” என்றாள். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது அக்காவும் தங்கையும் பேசத்தான் செய்வார்கள்.

அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை பரத்தின் அம்மா மட்டும் வந்துவிட… சிவகாமி அன்று இரவே கிளம்பி பஸ்சில் தென்காசி வந்துவிட்டார். லிங்கா சென்று அவரைப் பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து வந்தான்.

பேருந்து வர மிகவும் தாமதமாகி விட… யாதவியை வேறு அலுவலகத்தில் விட வேண்டும் என்று லிங்கா அவரை வேகமாக அழைத்து வந்தான்.

யாதவி அலுவலகத்திற்குச் செல்லக் கிளம்பியவள், மாமியார் அன்றுதான் ஊரில் இருந்து வந்ததால்… அவருக்கு டிபன் எடுத்து வந்து வாசலில் இருந்தே கொடுக்க… சிவகாமியும் அவளை நலம் விசாரித்தார். லிங்கா சொல்லி அவள் கொண்டு வரவில்லை அவளாகத்தான் கொண்டு வந்தாள்.

சிவகாமிக்குச் சந்தோஷிடம் போல யாதவியிடம் உடனே ஒட்ட முடியவில்லை. அதே போலதான் யாதவிக்கும். ஆனால் இருவருமே ஒத்து போக முயன்றனர்.

காலை நேரம் நிதானமாக நின்று பேசவும் நேரம் இல்லை. மாலையில் வந்த போது, சந்தோஷ் நேராகக் கீழே சென்று விட்டான். சிவகாமியிடம் பாத்தி பாத்தி எனக் கதை பேசிக்கொண்டு, அவர் கொடுத்த நொறுக்கு தீனிகளை உண்டவன், பாப்பா காணோம் எனத் தீபிகாவின் மகளைக் கேட்க…

அவ அவ வீட்ல இருக்கா… அப்புறம் வருவா.” என்றார் சிவகாமி.

லிங்கா அவன் அலுவலக அறையில் இருந்து வந்தவன், மகனை அழைத்துக் கொண்டு கிளம்ப…

நீ எப்பவும் போலக் காலையில மதியம் இங்கேயே சாப்பிடு.” எனச் சிவகாமி சொல்ல…

வேண்டாம், சும்மாவே யாதவி ஒழுங்கா சாப்பிட மாட்டா… இதுல எனக்கும் சமைக்க வேண்டாம்னா, அவளுக்கு மட்டும் எல்லாம் நல்லா செஞ்சு சாப்பிட மாட்டா… அதனால நான் அங்கேயே பார்த்துக்கிறேன்.” என்றதும்,

அவளுக்கு வேலையா இருக்கும்னு தான் பார்த்தேன்.”

பரவாயில்லை இருக்கட்டும் மா…நீங்க இந்தக் குட்டியை பார்த்துக்கோங்க போதும்.” என்றவன், மகனை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

யாதவிக்குக் காலை எழுந்து டிபன் செய்து, மதியம் சாப்பாடும் செய்யச் சிரமாக இருக்க… அவள் காலைக்கும் சாதமே சேர்த்து வைக்க… லிங்கா மட்டும் அவனே தோசை ஊற்றிச் சாப்பிடுவான்.

இரவுக்கு யாதவி வந்து டிபன் செய்வாள். வார இறுதியில் வீட்டில் இருப்பதால்… நன்றாகவே சமைப்பாள். எதோ அவர்கள் வரையில் சமாளித்துக் கொண்டு வேலைக்கும் சென்று வந்தாள்.

யாதவி அலுவலகம் சென்ற அன்று மகனிடம் சிவகாமி, “எதுக்கு இவ இப்படிக் கஷ்ட்டப்பட்டு வேலைக்குப் போகணும்? வீட்ல இருக்கலாம் இல்ல…” என்றதும்,

என்ன மருமகள் மேல திடீர் அக்கறை. அவ வயித்துக்குள்ள இருக்கிறது உங்க வாரிசுங்கிறதுனால தான….” என்றதும்,

ஆமாம் டா… இவ வேலைக்குப் போயிட்டு ஒழுங்கா சாப்பிடுறாளான்னு கூடத் தெரியலை… ஆளும் அப்படியே தான் இருக்கா.” என்றார்.

குண்டா இருந்தா தான் நல்லா சாப்பிடுறதா அர்த்தமா…. அதெல்லாம் அவ என்ன தேவையோ அது சாப்பிட தான் செய்யுறா. அவ பார்க்கிறது கவர்மெண்ட் வேலை… பிரசவத்துக்குன்னு அவளுக்கு நிறைய நாள் லீவ் இருக்கு. குழந்தை பிறந்த பிறகும் இப்போ அதிக மாசம் லீவ் தராங்க. இப்போ ஏழு மாசம் வரை வேலைக்குப் போயிட்டு, அப்புறம் போக மாட்டா…” என்றான்.

மகன் மருமகளை இங்கேயே வந்து இருந்து கொள்ளுங்கள் என்று சொல்ல இன்னும் சிவகாமிக்கு மனம் இல்லை. இவர் சொன்னாலும் அவர்கள் வருவார்களா என்றும் தெரியாது. மருமகள் கர்ப்பமாக இருந்து கொண்டு வேலைக்கும் சென்று வருகிறாளே… என்று அதுவும் குடைந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் சிவகாமி உழன்று கொண்டிருந்தார்.

சிவகாமி இங்கே வந்தது பாக்கியத்துக்கு இன்னும் தெரியாது. அவர் மகள் வீட்டில் இருக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தார். அவரோடு கைபேசியில் பேசினால்… மருமகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொல்லாமல் இருக்க முடியாது. மகன்தான் சொல்லக் கூடாது என்கிறானே… அதனால் சிவகாமியும் அழைக்காமல் இருந்தார்.

யாதவி வேலையில் இருந்து வந்து வீட்டில் இருக்க…. ஜெயந்தி அவளைப் பார்க்க சென்றார். அவர் எதோ எடுத்து செல்ல… சிவகாமி என்ன என்று கேட்க…. “புளியோதாரை தொக்கு பண்ணேன், அதுதான் யாதவிக்கு இந்த மாதிரி நேரத்துல சாப்பிட வாயுக்கு நல்லா இருக்குமேன்னு எடுத்திட்டு போறேன்.” எனச் சொல்லிவிட்டு செல்ல…

இவகிட்ட வாங்கிச் சாப்பிடுற நிலைமையிலா நம்ம மருமகள் இருக்கா… எனச் சிவகாமிக்கு அதுவும் பிடிக்கவில்லை.

மறுநாள் சனிக்கிழமை எல்லோருக்கும் சேர்த்தே கத்திரிக்காய் புளிக்குழம்பு மற்றும் கீரை பொரியல் செய்தவர், மகனை அழைத்து அவனிடம் கொடுத்து எடுத்துகொண்டு செல்ல சொல்ல…

இதை எடுத்திட்டுப் போய்க் கொடுத்தா கூட அவ சாப்பிடுவாளான்னு தெரியாது.” என்றான்.

ஏன் ஜெயந்தி கொடுத்தா வாங்கிக்கிறா… நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டாளா?” எனச் சிவகாமியும் கோபப்பபட…

அவ்வளவு உங்களுக்கு அக்கறை இருந்தா… நீங்க கொண்டு போய்க் கொடுக்கணும். அவங்க தான் இங்க கொண்டு வந்து கொடுத்தாங்க. அதோட அன்னைக்கு டிபன் நான் கொடுக்கச் சொல்லி சொல்லலை… யாதவியா தான் கொண்டு வந்தா…” என்றதும், சிவகாமி யோசிக்க…

அவ பையனோட தனியா இருக்கும் போதே… ரெண்டு ரூம் இருக்க வீட்ல இருந்தா… உங்களுக்காகத்தான் இங்க சின்ன வீட்ல வந்து இருக்கா… என் பொண்டாட்டியும் உங்களுக்காக விட்டுக் கொடுத்து தான் போறா… அவளுக்குச் செய்ய நீங்க ஒன்னும் இவ்வளவு யோசிக்கக் தேவை இல்லை.” என்றான் லிங்கா நறுக்கென்று.

அதன் பிறகே கதவை சாற்றிக் கொண்டு சிவகாமி மாடிக்கு ஏற… அவர் பின்னே சென்றவன், “யாதவி அம்மா வர்றாங்க.” என்று குரல் கொடுத்தான்.

பன்னிரண்டு மணி ஆகி இருக்க… அப்போது தான் என்ன சமைப்பது என்று சமையல் அறையில் நின்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

திடிரென்று மாமியார் வருகிறார் என்றதும், சட்டென்று ஒன்றும் புரியவில்லை.

சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள், மாமியாரைப் பார்த்து வாங்க என்றாள். அவரை உட்கார சொல்ல… கையில் வைத்திருந்த குழம்பு பொரியலை அவளிடம் கொடுத்தவர், “எல்லோருக்கும் சேர்த்துதான் புளிக்குழம்பு வச்சேன். அதுதான் கொண்டு வந்தேன்.” என்றார்.

பகல் நேரம் என்பதால் யாதவி வெளிமெத்து கதவை திறந்துதான் வைத்திருந்தாள். சந்தோஷ் அங்கே உட்கார்ந்து தான் விளையாடிக் கொண்டிருந்தான். சிவகாமி உட்கார்ந்த இடத்தில் இருந்தே வீட்டை ஆராய்ச்சி செய்ய… அவளுக்காகப் போட்டு வைத்திருந்த பழசாரை, யாதவி கொண்டு வந்து சிவகாமியிடம் கொடுத்தாள்.

அதைக் குடித்து விட்டு அவர் கிளம்ப… சந்தோஷ் அவரைத் தொத்திக்கொண்டான்.

இவன் டிரஸ் ரெண்டு மூன்னு கொடு. எதுக்கும் கீழ வச்சுக்கிறேன்.” எனச் சிவகாமி கேட்க…

யாதவி ஒரு பையில் மகனின் உடைகள் சிலவற்றை எடுத்து வைக்க… அவள் பின்னே நின்ற சந்தோஷ் பைக்காகக் கைநீட்ட… அவனிடம் யாதவி கொடுக்க… பையை வாங்கிக் கொண்டு சிவகாமியுடன் சென்றுவிட்டான்.

நீ என்னவோ நினைச்சுக் கவலைப்பட்ட… இவன் நம்ம ரெண்டு போரையும் கழட்டி விட்டு போயிட்டான்.” என லிங்கா சிரிக்க…

நைட் தூங்க இங்கத்தான் வருவான்.” என்றாள் யாதவி.

நீ என்ன சமையல் பண்ண?”

இன்னும் பண்ணலை… இனிமே தான் பண்ணனும்.” என்றவள் யோசிக்க…

அம்மாதான் கொடுத்திருக்காங்க இல்ல… சோறு மட்டும் ஆக்கு போதும்.” என்றான்.

யாதவி இன்னும் யோசிக்க… “அன்னைக்கு நீ கொடுத்த டிபன், அவங்க வாங்கினாங்க தான… அதோட அவங்களுக்காகத்தான் நாம இங்க இருக்கோம். அவங்க யாரோ இல்லை யாதவி. இன்னைக்கு அவங்க தெம்பா சுத்திட்டு இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு முடியலைனா நீதான் பார்க்கணும்.” என்றவன்,

சரி நான் உன்னை ஒன்னு கேட்கிறேன், குழந்தை பிறந்து நீ வேலைக்குப் போகும்போது அந்தக் குழந்தையை யார்கிட்ட விட்டுட்டு போவ…” என்றதும்,

யாதவி வேகமாக, “உங்க அம்மாகிட்ட தான். அவங்களோட பேரனோ பேத்தியோ தான அப்போ அவங்க தான் பார்க்கணும்.” என்றாள்.

இப்போ நீ மட்டும் பிரிச்சுப் பேசலாம். அவங்க சந்தோஷையும் தான பார்த்துக்கிறாங்க.” என்றதும் யாதவி போதும் என்பதாகக் கையெடுத்து கும்பிட…

லிங்கா அதைப் பார்த்து சிரித்தவன், “ரொம்ப யோசிக்காம சாப்பிட்டு ரெஸ்ட் எடு.” என்றதும் சரி என்றாள்.

இன்னைக்குச் சாயங்காலம் நாம நகைக்கடைக்குப் போகலாமா?” யாதவி கேட்க…

உனக்கு எதுவும் வாங்கனுமா?” என, ஆமாம் என்றாள்.

சரி போகலாம் என்றான்.

யாதவி சாதம் மட்டும் வைக்க… சந்தோஷ் கீழேயே உண்டு விட்டதால்… கணவன் மனைவி இருவர் மட்டும் உண்ண… கத்திரிக்காய் புளிக் குழம்பில் முழு மிளகு, பூண்டு எல்லாம் சேர்த்து நல்ல எண்ணெய் மிதக்க கெட்டியாக வைத்திருந்தார்.

யாதவி அவ்வளவு சுவையாகப் புளிக்குழம்பு உண்டதே இல்லை. கீரை பொரியலை தொட்டுக் கொண்டு நன்றாக உண்டாள்.

உங்க அம்மா சமையல் சாப்டிட்டு, நீங்க எப்படி என்னோட சமையல் சாப்பிடுறீங்க?” என யாதவி கேட்டே விட…

உன் சமையலும் ஒன்னும் மோசமா இல்லை… நீயும் கொஞ்ச நாள் போனா இன்னும் நல்லாத்தான் சமைப்ப.” என்றான்.

சாப்பிட்டதும் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு வந்தவள், நிறையச் சாப்பிட்டேன் என்று வெளி மெத்தில் சிறிது நேரம் நடந்தாள்.