“நாம போறோமா இல்லையா?” என லிங்கா மகனிடம் கேட்பது போலக் கேட்க…
“நாம போயிட்டு வரலாம். அவங்க வீட்ல தான் இருக்கப் போறோம். எனக்கு ஒன்னும் இல்லை.” என்றாள் யாதவி. அவளுக்கு வாந்தி மயக்கம் என்று பெரிதாக மசக்கை இல்லை.
எல்லோரும் காலை பத்து மணிக்கே வந்து சேர்ந்து சமைப்பதாக இருந்தது. ஆனால் லிங்கா மனைவி இந்த நிலையில் வேலை செய்ய வேண்டாம் என நினைத்து, தாமதமாகத்தான் அழைத்துச் சென்றான். காரில் தான் சென்றனர். வழியில் பரிசும் வாங்கிக் கொண்டனர். சந்தோஷ் அவனுக்கும் குட்டி குடியாக நிறையக் கார்கள் மொத்தமாக இருப்பதைப் போல வாங்கிக் கொண்டான்.
இறங்கும் போது அவனுடையதை காரில் வைத்துவிட்டு வா என்று சொன்னால்… அவன் கேட்கவில்லை.
“அங்க மத்தவங்களும் இருப்பாங்க. எல்லோருக்கும் ஒன்னு கொடுக்கிற.” என லிங்கா மகனிடம் சொல்லித்தான் அழைத்துச் சென்றான். அதே போல அங்கே சென்றதும், வினோத்தின் மகனிடம் பரிசை கொடுத்தவர்கள், மற்ற பிள்ளைகளுக்கும் சந்தோஷ் வைத்திருந்த காரில் ஒவ்வொன்று கொடுக்கச் சொல்ல… சந்தோஷும் கொடுத்து விட்டான்.
பெண்கள் எல்லாம் சமையலில் மும்முரமாக இருக்க… அங்கே சென்ற லிங்கா, வினோத்தின் மனைவி காவியாவிடம், “சாரி சிஸ்டர், முதல்ல வருவோம்னே நினைக்கலை…. இப்போ இருக்கிற நிலையில யாதவிக்கு வேலை செய்யவும் முடியாது. அதுதான் லேட்டா வந்தோம்.” என்றதும்,
“யாதவிக்கு என்ன?” என்று சங்கீதா பதற…
“அவளுக்கு இப்போ ரெண்டு மாசம் ஆகப் போடுது.” என்றதும், என்னவோ என நினைத்தவர்கள் யாதவி உண்டாகி இருக்கிறாள் என்று தெரிந்ததும், மிகவும் மகிழ்ந்தவர்கள், “இந்த நேரத்துல வந்ததே பெரிசு… தெரிஞ்சா முதல்ல நாங்களே அவங்களை வேலை செய்ய விடுவோமா?” என்றவர்கள், அப்போதே சென்று தங்கள் கணவர்மார்களிடம் சொல்லி விட்டனர்.
“அப்போ இன்னைக்கு ரெண்டு பார்டி.” என்று வினோத்தும்,
“இல்லை லிங்கா நமக்குத் தனியா ஒருநாள் கொடுப்பான்.” எனப் பிரபுவும் சொல்ல…
“அதுதான் இவன் முகத்துல ஒரு தனிக் கலை தெரியுதா… இவன் பொண்டாட்டி வீட்டை விட்டு இறங்கினா கால் வைக்கிறதே கார்ல தான் மச்சி… நாமெல்லாம் இப்படியா இருந்தோம்.” என்று சரவணன் ஆரம்பித்து வைக்க… அதன் பிறகு லிங்காவை கேலி செய்தே ஓட்டினர்.
இங்கே யாதவியிடமும் பெண்கள் எல்லோரும் மகிழ்ச்சியை வெளிபடுத்த… அதன் பிறகுதான் கணவன் சொன்னதே அவளுக்குத் தெரியும்.
மதிய உணவு முடித்து, ஆண்கள் மட்டும் மேலே அறைக்குப் போவதும் வருவதுமாக இருந்தவர்கள், மறைத்து மறைத்து எதோ எடுத்து செல்ல… யாதவி என்ன என்று சங்கீதாவிடம் கேட்க…
யாதவிக்கு அப்போதே முகம் மாறி விட்டது. அதைக் கவனித்த சங்கீதா, “நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. எல்லாம் மோந்து பார்த்தாலே… மட்டை ஆகிற கேசுங்க. சும்மா நாங்களும் குடிப்போம்னு காட்டிக்கப் பண்றாங்க.” என்றாள். ஆனாலும் யாதவிக்கு மனம் கேட்கவில்லை. அவள் லிங்காவை தனியே அழைத்துச் சென்றவள், “நீங்களும் குடிக்கவா போறீங்க?” என்று கேட்க…
“ஆமாம்.” என்றான்.
“இங்க பாருங்க நீங்க மட்டும் குடிச்சீங்க அவ்வளவுதான்.” என்றதும்,
“இப்ப நான் குடிக்கலைனா மட்டும் உனக்கு என் மேல நம்பிக்கை வந்திடுமா… நான் குடிப்பேன். போடி.” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
எதற்கும் எதைச் சம்பந்தம் படுத்துகிறான் என்று நினைத்தவள் உள்ளே சென்று விட்டாள்.
பேருக்கு நாங்களும் குடிப்போம் என்ற அளவுக்குத்தான் குடித்தனர். ஆனால் நண்பர்கள் எல்லாம் சேர்ந்ததால் மாலை வரை பேச்சும் கும்மாளமுமாக இருந்தது. இதில் பரத்தை வேறு போன் செய்து வெறுப்பேற்றினர்.
“டேய் மச்சான், உங்க அம்மா அங்க வர துடிச்சிட்டு இருக்காங்க. அனேகமா அடுத்த வாரம் வருவோம். அப்ப ஒரு பார்ட்டி வைங்க டா…” என்றான் பரத்.
மாலை கிளம்பும் சமயம், குழந்தை பிறந்த பிறகு பார்ட்டி கொடுப்பதாகச் சொல்லிவிட்டு லிங்கா மனைவி மகனை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
சந்தோஷ் எல்லோரிடமும் சென்று அவன் கொடுத்த காரை திருப்பிக் கேட்க…
“தப்பு அப்படிப் பண்ணக் கூடாது.” என்ற லிங்கா, போகும் போது உனக்கு வாங்கித் தரேன் என்று சொல்லி மகனை அழைத்து வந்தான். வரும் வழியிலேயே வீட்டிற்குத் தேவையானது எல்லாம் வாங்க…
லிங்கா மகனுக்குக் கார் வாங்க செல்ல… “இப்போ எதுக்கு அவனுக்குக் கார்.” என்றவள், “உன்கிட்ட இப்போ எவ்வளவு இருக்கு.” என மகனிடம் கேட்க…
“டூ…கார்தான் இருக்கு.” என்ற மகனிடம், “இது போதும், ஒழுங்கா அடி வாங்காம வீட்டுக்கு வா…” என்றவள், கணவனையும் முறைத்துக்கொண்டே தான் இருந்தாள்.
மிச்சம் மீதியான குழம்பு வகைகளை ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொண்டிருந்தனர். மட்டன் குழம்பு இருந்ததால் யாதவி இரவுக்குச் சப்பாத்தி செய்ய… மூவரும் உண்டனர்.
யாதவி இன்னும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தவள், சமையல் அறையில் சென்று உடைமாற்ற… அப்போது லிங்கா அங்கே வர… எதோ எடுக்க வந்திருக்கிறான் என்று நினைத்து யாதவி பார்க்க… அவள் எதிரில் நின்றவன், அவள் முகத்தை அருகில் இழுத்து இதழோடு இதழ் பதித்து, அழுந்த முத்தமிட்டவன், சிறிது நேரத்தில் அவனே விலகி நின்று, “நான் குடிக்கவே இல்லை. சொன்னா நம்புற ஆளா நீ.” என்றதும்,
“குடிக்கவே இல்லையா? நாம்தான் தேவையில்லாம பண்ணிட்டோமா..” என யாதவி நினைக்க… அவளை முறைத்து விட்டுச் சென்றான்.
சந்தோஷ் கட்டிலில் உட்கார்ந்து காரை வைத்து விளையாடிக் கொண்டிருக்க…
“இங்க பாரு உன்னோட விளையாட ஒரு ஆள் வருது. இனிமே கார் எல்லாம் கேட்காத.” என்ற லிங்கா, “உனக்கு விளையாட தம்பி பாப்பா வேணுமா? இல்ல தங்கச்சி பாப்பா வேணுமா?” என்று கேட்க…
சந்தோஷ் சொன்ன பதிலைக் கேட்டு இருவரும் அடிப் போய் விட்டனர். அவன் எனக்கு நாய் குட்டி வேண்டும் என்றான்.
அவன் சொன்ன பதிலைக் கேட்டு இருவரும் திகைத்து விழிக்க…
“ஏன் டா…” என லிங்கா அவனிடமே கேட்க….
“பாப்பா விளையாடாது. படுத்திட்டு தான் இருக்கும்.” என்றான் தீபிகாவின் மகளின் நினைவில்.
பாப்பா உடனே அவனுடன் விளையாடுமா? நாய்க்குட்டி என்றால் விளையாடுமே… விளையாடத்தானே ஆள் வேண்டும் என்று நினைத்து சொல்லி இருக்கிறான் என்று புரிந்தது.
மகன் சொன்னதைக் கற்பனை செய்து பார்த்த லிங்காவுக்கு அப்படியொரு சிரிப்பு. அவன் என்ன நினைத்துச் சிரிக்கிறான் என்று யாதவிக்கும் புரிய… அவள் கணவனைப் பார்த்து முறைக்க…
அவன் வேண்டுமென்றே அவளைப் பார்த்து பௌ பௌ என, சந்தோஷும் அதைப் பிடித்துக்கொள்ள… யாதவி போர்வையைத் தலை வரை இழுத்து மூடி படுத்துக் கொண்டாள்.
லிங்கா அதைப் பார்த்து சிரித்தவன், மகனை படுக்க வைத்து அவனும் படுத்துக் கொண்டான். காலையில் இருந்து ஆடிய களைப்பில் சந்தோஷ் உடனே உறங்கி விட்டான்.
கணவனைத் தான் சரியாகப் புரிந்து கொளல்வில்லையோ என்ற குழப்பத்தில், யாதவி வெகு நேரம் உறங்காமல் புரண்டு புரண்டு படுக்க… லிங்கா என்ன என்று கேட்க…
“எனக்குத் தூங்கவே முடியலை.” என்றாள்.
சந்தோஷை தன் இடத்திற்கு மாற்றிய லிங்கா, நடுவில் படுத்து, மனைவியைத் தன்புறம் திருப்பியவன், அவளை அனைத்துக் கொண்டு, “எதையும் யோசிக்காம தூங்கு.” என்றான்.
கணவனின் கைக்குள் அடங்கியவள், “சாரி, எனக்கு உங்களுக்குப் புரிய வைக்கக் தெரியலை… உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல…” என்றதும்,
“எனக்குப் புரியுது யாதவி. இதோட இதை விட்டுடலாம். எனக்கு எந்தக் கோபமும் இப்போ இல்லை.” என்றான். பிறகே யாதவி சமாதானம் ஆகி உறங்க ஆரம்பித்தாள்.
அவள் எப்படித் தன்னை அப்படி நினைக்கலாம் என்ற வருத்தம் இப்போதும் லிங்காவுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் அவள் இடத்தில் இருந்து யோசிக்கும் போது, அவள் நினைப்பது தவறு இல்லை என்றும் தோன்றியது.
பெண்கள் முதலில் அம்மாவாகத்தான் இருப்பார்கள், சிந்திப்பார்கள். பிறகுதான் கணவனுக்கு மனைவியாக இருப்பது. அவள் இந்த மகனுக்காக யோசித்தாலும், அதே நினைவில் வயிற்றில் இருக்கும் பிள்ளையையும் விட்டுவிட வில்லையே… அந்தக் குழந்தைக்கு என்ன தேவையோ அதையும் பார்த்துப் பார்த்துதான் செய்கிறாள்.
அவளுக்கு இருப்பது ஒரு அம்மாவுக்கே உண்டான அச்சம் என்று அவனுக்குப் புரிந்தது.