செல்லும் வழியாவும் அவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே தான் சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து திவாகர் வீட்டுக்கு வந்து நின்றால்… இன்னும் தொல்லையாகி விடும். ஆனால் அப்படி யாரும் வருவது போலத் தெரியவில்லை.
சந்தோஷ் பள்ளியிலேயே உண்டு விட்டான். அதனால் வீட்டிற்கு வந்ததும், அவனைப் பாத்ரூம் செல்ல வைத்து, கை கால் கழுவி அழைத்து வந்த லிங்கா… அவனைக் கட்டிலில் விட்டுவிட்டு உணவை எடுத்து வந்து உட்கார்ந்து உண்ண… சிறிது நேரம் விளையாடிய சந்தோஷ் பிறகு அப்படியே உறங்கி விட்டான்.
லிங்கா உண்டு முடித்து சிறிது நேரத்தில், யாதவி வந்து நின்றாள்.
“என்ன ஆச்சு யாதவி? உடம்பு எதுவும் சரி இல்லையா?” லிங்கா விசாரிக்க… திவாகர் அழைத்தது பற்றிச் சொன்னவள், நானே சாயங்காலம் கூப்பிடுறேன்னு சொல்லி இருக்கேன் என்றாள்.
“வரட்டும், நானே பார்க்கனும்னு தான் நினைச்சிருந்தேன்.” என்றவன், “நீ சாப்பிட்டியா?” என்று கேட்க…
“நீங்க வந்த போதுதான் சாப்பிட்டு முடிச்சிருந்தேன்.”
“சரி நீ ரெஸ்ட் எடு. திவாகர் போன் பண்ணா… பிரபுவோட ஆபீஸ் தெரியும் இல்ல… அங்க ஆறு மணிக்கு வர சொல்லு. நான் உன்னோட வர்றதா சொல்லாத.” என்றவன், கீழே அலுவலக அறைக்குச் சென்றுவிட்டான்.
யாதவிக்கும் களைப்பாக இருக்க… முகம் கை கால் கழுவி கொண்டு வந்தவள், சந்தோஷுடன் படுத்துக் கொண்டாள்.
திவாகரின் தொல்லை தொடர்ந்து கொண்டே இருந்தால்… தன்னால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்தபடி படுத்திருந்தவள், அவளையும் அறியாமல் உறங்கிப் போனாள்.
சரியாக ஐந்து மணிக்கு எல்லாம் திவாகர் அழைத்து விட்டான்.
“என் பிரண்ட் அட்ரஸ் உங்களுக்கு அனுப்புறேன். அங்க ஆறு மணிக்கு வந்திடுங்க.” என்றதும்,
“அங்க எல்லாம் வேண்டாம். வேற எங்கையாவது பார்க்கலாம்.” என்றான்.
“உங்களோட நான் தெரியாத இடத்துக்கு எல்லாம் வர்றதா இல்லை. இங்க வர்றதுன்னா வாங்க… இல்லைனா கிளம்பி சென்னைக்குப் போங்க. அதுக்கு மேல நீங்க தொல்லைக் கொடுத்தா என்ன பண்ணும்னு எனக்குத் தெரியும்.” என யாதவி கண்டிப்பான குரலில் பேச….
“நான் வரேன்.” என்று திவாகர் ஒத்துக் கொண்டான்.
மாலை மூவரும் கிளம்ப… யாதவி காரில் போகலாமா என்றாள். சரி என்று லிங்கா காரை எடுத்தான்.
பிரபுவின் அலுவலகதிற்குச் சற்று தொலைவிலேயே நிறுத்தியவன், “முதல்ல நீ போ… நான் அப்புறம் வரேன்.” என்றான்.
“யாதவி, அவரைப் பேச விடு… முதல்ல அவர் என்ன எண்ணத்தில இருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம்.” என்றதும், சரி என்று சொல்லிவிட்டு சென்றாள்.
திவாகர் சற்று முன்பே வந்து வேவு பார்த்துக் கொண்டிருந்தான். அது வக்கீல் அலுவலகம் என்பதற்கு எந்தப் பலகையும் இல்லை. அதனால் அவனுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. கடையின் எண் மற்றும் முகவரி தான் இருந்தது.
யாதவி மட்டும் தனியாக உள்ளே செல்வதைப் பார்த்தவன், அவள் அலுவலகத்தில் இருந்து நேரே வந்திருக்கிறாள் என்றே நினைத்திருந்தான்.
அவன் சிறிது நேரம் சென்று உள்ளே செல்ல… முதலில் ஒரு வரவேற்பு அறை இருக்க… அதில் யாரும் இல்லை. அடுத்து இருந்த அலுவலக் அறைக்குள் அவன் நுழைய… அங்கே யாதவியும் பிரபுவும் இருந்தனர்.
அவனைப் பார்த்ததும் பிரபு, “நீங்க பேசுங்க.” என்றவன் எழுந்து வெளியே சென்றான்.
திவாகர் உட்கார்ந்ததும் அவனை நேராகப் பார்த்த யாதவி, “சொல்லுங்க திவாகர், இப்படி விவாகரத்து ஆன பிறகும் நீங்க என்னைத் தொந்தரவு பண்றது சரியே இல்லை.” என்றாள்.
“நான் உனக்காக வரலை சந்தோஷுக்காக வந்தேன்.” எனத் திவாகர் சொல்லும் போதே…. லிங்கா அவனுடன் பிரபு மற்றும் வினோத் என எல்லோரும் உள்ளே வந்து அவர்களைச் சுற்றி உட்கார…
“என் பொண்டாட்டிகிட்ட உங்களுக்கு என்ன தனியா பேசணும்? எதுனாலும் என் முன்னாடி சொல்லுங்க. அதோட அவளோட வக்கீலும் நான்தான்.” என்றான் லிங்கா தெளிவாக. அப்போதுதான் அவன் வக்கீல் என்பது திவாகருக்கு தெரியும்.
“நீதான் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்ட இல்ல… என்கிட்டே சந்தோஷை கொடுத்திடு.” என்றான் திவாகர். லிங்காவுக்கு அப்படியொரு கோபம் வந்தது.
“அவனுக்காகத்தான் உங்ககிட்ட இருந்து விவாகரத்தே வாங்கினேன். அவனை உங்ககிட்ட கொடுக்கச் சொல்றீங்களா…” என யாதவியும்,
“திவாகர், சந்தோஷ் விஷயம் கோர்ட்ல பார்த்துக்கலாம். எதுனாலும் இனி கோர்ட் மூலம் தான். எனக்குத் தெரியாம என் பொண்டாட்டியை பார்க்கிறது, பேசுறது, போன் பண்றது எல்லாம் வேண்டாம். இந்தமுறை வாயில பேசி இருக்கேன். அடுத்து என் கைதான் பேசும்.” என லிங்கா சொல்லிக் கொண்டிருக்கும் போதே… காக்கி உடையில் அவர்களின் நண்பன் சரவணன் வர…
“இவர்தான் டா நாங்க சொன்னவரு… நீயே விசாரி.” எனப் பிரபு சொல்ல…
என்ன என்று சரவணன் பொறுமையாக் திவாகரிடம் விசாரிக்க… அவனும் பயந்து கொண்டே சொல்ல…
“யாதவியை வந்து தொந்தரவு பண்ண உங்களுக்கு எந்த ரைட்சும் இல்லை. அவங்க உங்க மேல புகார் கொடுத்தா… இப்பவே உங்களைக் கைது பண்ண முடியும். குழந்தை விஷயம் கோர்ட்ல பார்க்கலாம். எதுனாலும் கோர்ட் முடிவு பண்ணும். இன்னொருமுறை இப்படிப் பண்ணாதீங்க.இப்படி பொறுமையா எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டோம். வேற எதாவது கேஸ் போட்டு உள்ள வச்சிடுவோம்.” எனச் சரவணன் எச்சரிக்க… திவாகர் சரி என்று எழுந்து கொண்டான்.
“சரி டா நான் இவரைப் பஸ் எத்தி விட்டுட்டு கிளம்புறேன். அப்புறம் பார்க்கலாம்.” எனச் சொல்லி சரவணன் விடைபெற….
அப்போதுதான் திவாகருக்கு ஒரு விஷயம் புரிந்தது. முன்பு போல யாதவி தனி ஆள் இல்லை. அவளைச் சுற்றி இத்தனை பேர் இருக்க… தான் அவளிடம் இனி நெருங்க முடியாது என்ற உண்மை புரிந்தது.
அதை அவனுக்குப் புரிய வைக்கவே… லிங்கா அவனை இங்கே வர சொல்லி இருந்தான்.
யாதவி சோர்ந்து போய்த் தெரிய…. “சரி டா நான் கிளம்புறேன். நாம நாளைக்குப் பேசலாம்.” என்றவன், யாதவியுடன் வெளியே வர…. சந்தோஷ் எங்கே என்று யாதவி கேட்க… அவனை இன்னொரு நண்பனிடம் கொடுத்து, கடைக்கு அழைத்துச் செல்ல சொல்லி இருப்பதாகச் சொன்னான்.
“அந்த ஆளு சந்தோஷை பார்க்கிறது கூட எனக்குப் பிடிக்கலை. இனி அவன் எப்படிப் பார்க்கிறான்னு நானும் பார்த்திடுறேன்.” என்றான்.
“திவாகருக்கும் உனக்கும் எதோ பிரச்சனை, அதனால நீங்க பிரிஞ்சு போனா… அது உங்களுக்குள்ள… விவாகரத்து ஆகி பிரிஞ்சவங்க கூடத் தன்னோட பிள்ளைங்களுக்காகச் சேர்ந்து சில விஷயங்கள் பண்றாங்க. ஆனா திவாகர் அப்படி இல்லை.”
“சந்தோஷ் மனசுல உன்னைப் பத்தி தவறா சொல்லி விஷத்தை விதைக்க மாட்டான்னு சொல்றதுக்கு இல்லை. இவன் எந்த எல்லைக்கும் போவான். இல்லைனா இப்படி உன்னை மிரட்டி பார்க்கிற மாதிரி வந்து நிற்க மாட்டான்.”
“இவனைச் சந்தோஷ் பார்க்காம இருக்கிறது அவனுக்கு நல்லது.” இப்போது லிங்கா சொல்வது ஏற்கனவே யாதவிக்குப் புரிந்த விஷயம் தான். அவள்தான் இத்தனை வருடங்களாகத் திவாகரை பார்க்கிறாளே… அவளுக்குத் தெரியாதா அவனைப் பற்றி.
செல்லும் வழியில் சந்தோஷையும் அழைத்துக் கொண்டு மூவரும் வீட்டிற்குக் கிளம்பினர்.
“இங்கேயே சாப்பிட்டு போகலாமா?” லிங்கா கேட்க…
“எனக்கு எங்கையும் போக இப்போ மூட் இல்லை.” என்றாள். அதனால் வீட்டிற்கே சென்றனர்.
யாதவி இட்லி ஊற்றி சட்னி செய்ய…. மூவரும் சேர்ந்து உண்டனர்.
சந்தோஷ் கட்டிலில் ஏறி குதித்து விளையாட…. யாதவி தரையில் மெத்தை விரித்து, அதில் சென்று உட்கார்ந்துகொள்ள… லிங்கா ஏன் என்பது போலப் பார்க்க… இவன் என் மேல விழுந்து வைப்பான் போல என்றாள்.
இத்தனை நாள் இல்லாதது, இப்போது மட்டும் என்ன என்று லிங்காவுக்குத் தோன்ற… அவன் யாதவியைப் பார்க்க… அவள் எதோ யோசனையில் இருந்தாள்.
“அதையே நினைக்காத யாதவி.” என்றான்.
“இல்லை அது இல்லை.”
“வேற எதையோ நினைச்சு குழப்பிட்டு இருக்க இல்ல… திவாகரை பார்க்கிறதுக்கு முன்னாடி இருந்தே அப்படித்தான் இருக்க… என்கிட்டே சொல்ல யோசிக்கிற அளவுக்கு என்னன்னு தான் புரியலை….” என்றவன் அவளை ஆழமாகப் பார்க்க…
அவனுக்குத் தெரிந்து விட்டது என்றதும், விழிகளில் நீர் நிறைய… யாதவி தலையைக் குனிந்து கொண்டாள்.
அவளுக்கு அவனிடம் சொல்லவும் முடியவில்லை… மறைக்கவும் தெரியவில்லை… மறைக்கக் கூடிய விஷயமும் அல்ல….