“விவாகரத்து பண்ண பிறகு, உனக்கும் அந்த ஆளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரோட தொந்தரவை பொருத்து போகணும்னு, உனக்கு எந்த அவசியமும் இல்லை. சொல்லு யாதவி, எதையும் மறைக்காத. என்ன நடந்தது சொல்லு?” கணவன் கேட்டதும்,
திவாகருக்கு மறுமணம் ஆனது. அவன் புது மனைவி தற்கொலைக்கு முயன்றது. திவாகர் அவளைச் சென்னையில் வந்து பார்த்து பேசியது, இப்போதும் கைபேசியில் அழைப்பது என்று எல்லாவற்றையும் சொல்ல…
“இது போதும், சந்தோஷோட நிழலை கூட அந்த ஆளு இனி தொட முடியாம பார்த்துக்கலாம். இனி சந்தோஷுக்கு நான் மட்டும் தான் அப்பா. திவாகர் இல்லை.” லிங்கா ஆணித்தரமாகச் சொல்ல… யாதவி அவனை நம்பியும் நம்பாமலும் பார்க்க…
“நான் கோர்ட்ல பார்த்துக்கிறேன்.” என்றான்.
“இனி அந்த ஆளு பேசினா… எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. எதுனாலும் என் புருஷன்கிட்டே பேசுன்னு சொல்லு.” என்றதும் யாதவியும் சரி என்றாள்.
“சரி நீ ரெஸ்ட் எடு. நான் கீழ பரத்தோட இருக்கேன்.” என்றவன், கீழே செல்ல… யாதவியும் மகனின் அருகே படுத்துக் கொண்டாள்.
லிங்காவை பார்த்ததும் பரத், “டேய், நான் ரொம்ப நாளா தனியாதான் இருக்கேன் டா. இனிமே முடியாது. நான் போகும்போது தீபிகாவையும் குழந்தையையும் அழைச்சிட்டு போகலாம்னு இருக்கேன்.” என்றான்.
அவனும் எத்தனை நாள் தனியே இருப்பான். அதுவும் இந்த ஆறு மாதமாக இங்கே அங்கே என்று அலைந்து கொண்டுதான் இருக்கிறான் என்று நினைத்த லிங்கா, “அனுப்புறதை பத்தி ஒன்னும் இல்லை டா… ஆனா தீபிகா குழந்தையை வச்சிட்டு அங்க தனியா சமாளிப்பாளா? அதுதான் யோச்க்கிறேன்.” என்றவன், “அம்மா, நீங்க கொஞ்ச நாள் தீபிகாவோட போய் இருந்திட்டு வாங்க.” என்றான் சிவகாமியிடம்.
“ஆமாம் அத்தை, நீங்க கொஞ்ச நாள் வந்து இருங்க. நான் என் அப்பா அம்மாவை கொஞ்ச நாள் வர சொல்றேன்.” என்றான் பரத்.
“நான் போயிட்டா நீ சாப்பாடுக்கு என்ன பண்ணுவ?” எனச் சிவகாமி யோசிக்க…
“நானும் எவ்வளவு நாள் மா இங்கேயே இருப்பேன்.” எனத் தீபிகா சொல்ல… அவளுக்காகச் சரி என்றார்.
இன்னும் மூன்று நாட்களில் கிளம்புவதாக முடிவாக. பரத்தை அழைத்துக் கொண்டு லிங்கா தனது அலுவலக அறைக்குச் சென்று பேசினான்.
இருவரும் திவாகர் விஷயத்தில் அடுத்து என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர். திவாகர் பற்றிய உண்மை நிலவரத்தை கோர்ட்டில் தெரியபடுத்தி, அவனால் சந்தோஷின் மனநலம் பாதிக்கப்படலாம் என்பதை நிருபித்தால்… திவாகர் சந்தோஷை சந்திப்பதை கோர்ட் தடை செய்யும். பரத் அந்த வழக்கை தான் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான். அவன் குடும்பநல வழக்கறிஞர் தான்.
ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு எழுந்த யாதவி மதிய சமையலை முடிக்க… லிங்கா வந்தான். அப்போதுதான் சந்தோஷும் எழுந்தான்.
அவன் அப்பா என்று அழைக்கும் அந்த நொடிக்காக லிங்கா காதை தீட்டிக் கொண்டு காத்திருக்க… சந்தோஷ் வெகு நேரம் அழைக்கவே இல்லை. அவன் அவனுடைய விளையாட்டுச் சாமான்களை உருட்டிக் கொண்டிருந்தான்.
“சரி நான் கிளம்புறேன்.” என லிங்கா சந்தோஷை பார்த்துக் கொண்டே சொல்ல… அவன் கிளம்புகிறேன் என்றதும், எங்கே என்பது போலப் பார்த்த சந்தோஷ், “அங்கி நானு.” என்றதும்,
“ஹோய்… என்னது அங்கியா? அங்கியா? அப்பாவா?” என லிங்கா கேட்க…
“அப்பா…” என்ற சந்தோஷ், தானும் வருவதாகக் கைதூக்கினான்.
அவனைத் தூக்கிக் கொண்ட லிங்கா, “கீழ போய்ப் பாட்டிகிட்ட நல்ல சாப்பாடு சாப்பிடலாமா?” என மனைவியைச் சீண்ட… யாதவி அவனைப் பார்த்து முறைத்தவள், “அப்பா, பையன், பாட்டி எல்லாம் சேர்ந்தாச்சு இல்ல… இனிமே நான் வேண்டாம்.” என்றவள், “உங்களுக்காக அலையா விருந்தாளியா வந்தேன் இல்ல.. நீங்க எல்லாம் சொல்வீங்க.” என்று அவள் முறுக்கிக்கொள்ள…
காலையில் அவன் அம்மா அவளை வா என்று அழைக்காததைச் சொல்கிறாள் என்று அவனுக்கும் புரிந்து தான் இருந்தது. “அது உன் வீடும் தான் யாதவி. உன் வீட்டுக்கு உன்னை யாரும் கூப்பிட வேண்டாம்.” என்றவன், “இனிமே நீதான் எனக்கும் சமைக்கணும். அம்மா தீபிகாவோட சென்னை போறாங்க.” என்றவன், “சாப்பாடு எடுத்து வை.” என்றான்.
பரத் வேறு இருக்கிறான். அதனால் அங்கே தான் உண்பான் என நினைத்திருந்தாள். அவன் உண்கிறேன் என்றதும், “ஒரு பத்து நிமிஷம் இருங்க.” என்றவள், கணவனுக்காக வேகமாக இன்னொரு பொரியல் வைக்கச் சென்றாள்.
அதைப் பார்த்தவன், “காலையில சாப்பிட்டதே வயிறு நிறைய இருக்கு. கொஞ்சமா தான் சாப்பிட முடியும். என்ன இருக்கோ வை.” என்றான்.
அவர்கள் இருவருக்கும் என்று சாம்பார் பொரியல் மட்டும் தான் வைத்திருந்தாள். அதோடு வடையும் பாயசமும் வைத்து பரிமாற… இரண்டு பேருக்கு சமைத்த உணவை மூன்று பேருக்கும் சரியாக வந்தது.
மறுநாள் தோட்டத்திற்குச் சென்று பொங்கல் வைத்து மாடுகளுக்குப் படைத்து சாமி கும்பிட காலையிலேயே கிளம்பினர்
முன்பே அவர்கள் தோட்டத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் புதுத் துணிகள் எடுத்துக் கொடுத்திருந்தனர். இன்று போனஸ் போல எல்லோருக்கும் கூடுதலாக ஒரு தொகை கொடுப்பார்கள்.
எப்போதும் சிவகாமியின் அண்ணன் குடும்பமும் வருவார்கள். நேற்று அவர் அண்ணியே வந்ததில் மகிழ்ந்து போய்ச் சிவகாமி அழைக்கத்தான் செய்தார். ஆனால் வரவில்லை என்று விட்டனர். லிங்காவை அழைக்கச் சொல்ல… அவன் முடியாது என்று விட்டான். அதில் கொஞ்சம் சிவகாமி சடவாகத்தான் இருந்தார். கோபத்தை மருமகளிடமும் காட்டினார்.
காலையில் இருந்து வீட்டில் எதற்கெடுத்தாலும் கத்திக்கொண்டு தான் இருந்தார். காலை உணவு முடித்து யாதவி மகனோடு கீழே வந்து வரவேற்பு அறையில் இருக்க… அவளிடம் முகத்தைத் திருப்பினார். அதனால் அவள் உள்ளே செல்லாமல் வெளியே சென்று நின்று கொண்டாள்.
எல்லோரும் கிளம்பி வெளியே வர… “இன்னும் ரெண்டு நாள்ல சென்னைக்கு வேற போகணும். இன்னும் ஒன்னும் எடுத்து வைக்கலை… இங்க வீடும் அப்படி அப்படியே கிடக்கு. நான் எப்படிக் கிளம்பப் போறேன்னு தெரியலை.” என்று அவர் புலம்ப….
“அம்மா, நீங்க எடுத்து வச்சு கிளம்புறதை மட்டும் பாருங்க. வீட்டை நாங்க பார்த்துக்கிறோம்.” என்று லிங்கா சொல்ல…
“என்னை அந்தப் பக்கம் விரட்டி விட்டுட்டு, நீ இந்தப் பக்கம் உன் பொண்டாட்டியோட இங்க வீட்ல வந்து இருக்கலாம்னு பார்த்திட்டியா? அதுக்குத்தான் என்னை ஊருக்கு போன்னு சொல்றியா?” என்று அவர் குதர்க்கமாகக் கேட்டு வைக்க… லிங்கா யாதவியைப் பார்க்க… அவள் வேறுபக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
“உங்க வீட்டை நீங்களே வச்சுக்கோங்க.” என்றவனுக்கும் கோபம் தான். ஆனால் அப்போது ஒன்றும் சொல்ல முடியாமல், “பரத், நீங்க எல்லாம் கார்ல வாங்க.” என்றவன், தன் மனைவி மகனை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்றுவிட்டான்.
“அம்மா பாருங்க உங்களால தான் அண்ணன் தனியா போயிடுச்சு.” என்றாள் தீபிகா.
“ஆமாம் அவன் மட்டும் இப்ப வந்த அவன் பொண்டாட்டிக்காகப் பார்ப்பான். நான் இவனுக்காக என் அண்ணனை விட்டுக் கொடுக்கணுமா? அவரை ஒரு வார்த்தை போன் செஞ்சு கூப்பிட்டா என்ன?”
“இவன்தான் பார்க்கிற இடத்தில பேசத் தானே செஞ்சிருக்கான். உங்க அண்ணன் தானே முகத்தைத் திருப்பிட்டு போய் இருக்கார். அப்புறம் அவனும் என்ன செய்வான்?” என்ற பரத், “சரி வாங்க நேரம் ஆகிடுச்சு.” என அவர்களைக் காரில் அழைத்துக் கொண்டு சென்றான்.
ஏற்கனவே தோட்டத்தில் வேலன் எல்லாம் தயார் செய்து வைத்திருக்க… அவர் மனைவியும் உதவ… சிவகாமி மடமடவென்று பொங்கல் வைத்து முடித்தார். அவரின் மனநிலை அறிந்து யாதவி விலகி தான் நின்றாள்.
மாடுகளை எல்லாம் குளிப்பாட்டுவதைச் சந்தோஷ் வேடிக்கை பார்க்க… அவனோடு லிங்காவும் யாதவியும் இருந்தனர். இப்போது சிறிது நாட்களுக்கு முன்னே பிறந்த கன்னுக்குட்டியை பார்த்த சந்தோஷ், குட்டி மாடு என்று அதை அழைக்க…
“டேய்…. அது கண்ணுக் குட்டி டா…” என்றான் லிங்கா சிரித்தபடி…
சின்னது தானே என்று அதன் அருகில் சென்றவன், அது துள்ளுவதைப் பார்த்து பயந்து போய் வந்துவிட்டான்.
தீபிகா மகளோடு ஒரு இடத்தில் உட்கார்ந்துகொள்ள.. உடன் பரத்தும் இருந்தான்.
“நமக்கு அவங்களைப் பத்தி தெரியும். யாதவிக்குத் தெரியுமா? உங்க அம்மா இப்படிப் பேச பேச… உங்க அண்ணன் விலகித்தான் போவான்.” என்றான் பரத் கவலையாக.
பொங்கல் வைத்து முடிக்க… மாடுகளும் குளித்துத் தயாராக வந்திருக்க… அவைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைக்க லிங்கா யாதவியை அழைக்க… அவள் பயந்து கொண்டு மாட்டேன் என்று சொல்லி விட… லிங்கா அவனே வைத்தான். உடன் சந்தோஷும் நடு நடுவே கையை விட்டு மஞ்சள் குங்குமத்தை எடுத்து மாடுகளின் நெற்றியில் பயமில்லாமல் வைத்தான்.
“டேய், இவன் நல்லா மாடு மேய்ப்பான் போல மச்சான். இவனையே தோட்டத்தைப் பார்க்க விட்டுடலாம்.” எனப் பரத் கேலி செய்ய….
“எங்க அப்பா பார்த்தாரு… இனி பேரன் பார்க்கட்டும்னு விட்டுட வேண்டியது தான்.” என்ற லிங்கா, “நீ ஸ்கூலுக்குப் போறியா? இல்லை… இங்க வந்து தோட்டத்தில இருக்கியா?” என மகனைப் பார்த்து கேட்க…
“நான் இங்க இருக்கேன்.” என்றான் சந்தோஷ் வேகமாக….
“இதை அப்படியே உங்க அம்மாவை பார்த்து சொல்லு…” என லிங்கா சந்தோஷிடம் சொல்ல… அவன் திரும்பி யாதவியைப் பார்க்க…
“மாடு மேய்க்கிறதா இருந்தாலும் படிச்சிட்டு மேய்க்கணும்.” என்றால் அவள் கண்டிப்புடன்.