“நாம அதைத் தொந்தரவு செய்யலைனா… அது நம்மைத் தொந்தரவு செய்யாது.” என்றவன் காரை உள்ளே கொண்டு சென்றான்.
அறுவடை நேரம் என்பதால் நெற்கதிர்கள் செழித்து வளர்ந்திருக்க… இன்னொரு பக்கம் தென்னை மரங்கள் வரிசையாக நிற்க… பெரிய தோட்டம் தான்.
“இந்த நேரத்தில் தண்ணி இருக்கும். அதனால நெல்லு போட்டிருக்கோம். தண்ணி இல்லாத நேரத்தில் வேற போடுவோம்.” என்றவன், காரை நிறுத்திவிட்டு அவர்களை இறங்க சொன்னான்.
பாம்புக்கு பயந்து யாதவி கீழே பார்த்து பார்த்துத்தான் நடந்தாள். சந்தோஷையும் கீழே விடவில்லை. அவளே தூக்கி வைத்திருந்தாள்.
உள்ளே சிறிது தூரம் நடந்து சென்றதும், முதலில் மாட்டுக் கொட்டகை இருக்க… சில ஆடுகளும் நின்றது. அங்கே தான் தோட்டத்தைப் பார்துக்கொள்ளும் வேலனும், அவர் மகனும் இருந்தனர்.
சந்தோஷிற்கு ஆடு மாடுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டது. அவன் யாதவியிடம் இருந்து இறங்கி செல்ல… லிங்கா அவனைத் தூக்கிகொண்டான்.
“இவர் தான் சின்ன முதலாளியா?” என்று சந்தோஷைப் பார்த்து வேலன் கேட்க… லிங்கா புன்னகையுடன் ஆமாம் என்றான்.
சந்தோஷ் நகரத்தில் வளர்ந்தவன், இதுவரை ஆடு மாடுகளைத் துரத்தில் தான் பார்த்து இருக்கிறான். இன்று இவ்வளவு கிட்டத்தில் பார்ப்பது கூட ஆச்சர்யமாக இருக்க… அவை இலை தழைகளை உண்ணுவதைக் கூட அவன் மிகவும் ரசித்துப் பார்த்தான். அதைப் பார்த்துக் குஷியாகக் கையையும் தட்டிக் கொண்டான்.
சிறிது நேரம் வேலனிடம் பேசிவிட்டு, “சரி நாங்க தோட்டத்தைச் சுத்தி நடந்திட்டு வரோம்.” என லிங்கா கிளம்ப… சந்தோஷிற்கு அங்கிருந்து செல்ல மனமில்லை.
வேலனின் மகன் சந்தோஷை வாங்கி வைத்துகொள்ள… இவர்கள் இருவரும் மட்டும் நடந்தனர்.
“தண்ணி ஓடிட்டு தான் இருக்கு. குளிக்கிறதுன்னா குளிங்க.” என்று சொல்லி வேலன் அவர்களை அனுப்பினார்.
அங்கே வயலில் களையெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லாம் தூரத்தில் தான் இருந்தனர். தோட்டத்தைச் சுற்றி காட்டி கடைசியில் அங்கே இருக்கும் பம்புசெட்டின் அருகே அழைத்துச் சென்றான். அதன் அருகே ஒரு ஓட்டு வீடும் இருந்தது. வீட்டிற்கு முன்பு நிறைய இடமும் இருந்தது.
பம்புசெட்டில் நீர் விழுந்து கொண்டிருக்க… அதைப் பார்த்துக் கொண்டு யாதவி நிற்க… அவளை இங்கே வா என்று சுற்றி அழைத்துச் சென்றவன், எட்டிப் பாரு என அவளிடம் சொல்ல… யாதவி என்னவோ என்று நினைத்து எட்டிப் பார்க்க… அவ்வளவு பெரிய கிணறு இருந்தது. அவ்வளவு ஆழத்தில், அவ்வளவு பெரிய கிணற்றை அவள் இப்போதுதான் பார்க்கிறாள்.
அம்மாடி இதுல விழுந்தா என்ன ஆகும் என்று அவள் யோசிக்கும் போது, சரியாகப் பக்கத்தில் நின்ற லிங்கா அவளைப் பிடித்துத் தள்ளுவது போலச் செய்ய… ஒரு நொடி உள்ளே விழுந்துவிட்டோம் என்று நினைத்து, சத்தமாகக் கத்திதான் விட்டாள். பிறகுதான் லிங்கா பிடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவன் தோளில் சாய்ந்து பயத்தில் கண் மூடியவள், கண்ணைத் திறக்காமல் நிற்க… அவளை அப்படியே நடத்தி வீட்டிற்குள் அழைத்து வந்தவன்,
“சும்மா விளையாட்டுக்கு யாதவி இங்கே பாரு.” என்று சொல்ல…. அவள் இன்னும் அச்சத்தில் தலைநிமிராமல் இருக்க… அவளை அனைத்துக் கொண்டான்.
ஏற்கனவே பாம்பை பார்த்தது, இப்போது கிணறை பார்த்தது என யாதவி மிரண்டு போயிருந்தாள்.
அவள் இதயம் பயத்தில் வேகமாகத் துடிப்பதை அவனால் உணர முடிய… அவளை இன்னும் தன்னோடு இறுக அனைத்து, அவளது அச்சத்தைப் போக்க முயன்றான்.
“சாரி நீ இப்படிப் பயப்படுவேன்னு நினைக்கலை.” என்றான்.
வெளியே கேட்ட பேச்சுச் சத்தத்தில், தான் இருக்கும் நிலை அறிந்து யாதவி அவனிடமிருந்து விலக… “இப்ப ஓகே வா…” என, யாதவி தலையை மட்டும் அசைத்தாள்.
சந்தோஷை தூக்கிக் கொண்டு வேலனின் மகன் இங்கே வந்திருந்தான். இங்கே நீரைப் பார்த்ததும் சந்தோஷிற்கு இன்னும் குஷி.
லிங்காவும் சந்தோஷும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து நீரில் இறங்க… யாதவி காலை நீருக்குள் விட்டு ஆட்டியபடி, சுற்றுசுவரில் உட்கார்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளை ஒருகையிலும் சந்தோஷை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு லிங்கா நீருக்கு அடியில் நிற்க… குடும்பமாகக் குளித்தனர்.
அவனிடம் இருந்து சற்று தள்ளி சென்ற யாதவி, அவனிடம் எதுக்கு இப்படி பண்றீங்க?” என கோபித்துக்கொள்ள…
“தொட்டிக்குள்ள இறக்கி விட்டதுக்கு இந்தப் பேச்சா… உன்னைக் கிணத்துக்குள்ள தள்ளி இருக்கணும்.” என்றான்.
முதலில் நீரில் இறங்க யோசித்த யாதவி, பிறகு நீரில் நல்ல ஆட்டம் போட… சந்தோஷிற்குக் குளிறேடுக்கவும் தான் மேலே வந்தனர்.
உடைமாற்றி மூவரும் கொண்டு வந்து உணவை அருந்தி முடிக்க… வயலில் களை எடுத்தவர்களும் இங்கே வந்து இவர்களோடு பேசிக் கொண்டிருக்க.. லிங்கா அவர்களுக்கு வாங்கி வந்த நொறுக்கு தீனிகளை, யாதவியை விட்டுக் கொடுக்கச் சொன்னான்.
இவர்களும் அவர்களோடு பேசியபடி அங்கேயே உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் எல்லாம் மீண்டும் வேலையைப் பார்க்க கிளம்பிய பின்னர், இவர்களும் அங்கருந்து கிளம்பினர்.
சந்தோஷிற்குத் தான் அங்கிருந்து கிளம்ப மனமில்லை. திரும்ப ஆடு மாடுகள் இருக்கும் இடம் வந்து, அவனே அவன் கையால் அங்கிருந்த இலை தழைகளைக் கொடுத்து மகிழ்ந்தவன், பிறகே அங்கிருந்து கிளம்பினான்.
“அடிக்கடி வரலாம்.” என்று சொல்லி லிங்கா அவனை அழைத்து வந்தான்.
திரும்பக் காரில் வரும் வழியில், “நீங்க தோட்டத்துக்குன்னு சொல்லிட்டு வருவீங்க. நான் வேற மாதிரி நினைச்சிருந்தேன். இங்க பாம்பெல்லாம் இருக்கு. நீங்க பார்த்து வாங்க லிங்கா… நீங்க பாட்டுக்கு கீழ கூடப் பார்க்காம நடக்குறீங்க.” என்றாள் கணவனின் மீது இருக்கும் கரிசனையில்.
லிங்காவுக்கும் அது புரிய. “சின்ன வயசுல இருந்து வந்து போய் இருக்கிற இடம், எனக்குத் தெரியாதா… அதோட நாம நடக்கிற பாதையில எதுவும் இருக்காது பயப்படாத… நீ புதுசா வராதுனால உனக்கு அப்படி இருக்கு. அடிக்கடி வந்தா பழகிடும்.”
“அந்தக் கிணறு என்ன அவ்வளவு பெரிசா இருக்கு. நீங்க அது பக்கத்தில எல்லாம் போகாதீங்க.” என்றதற்கு, அவளைப் பார்த்து சிரித்தவன், “நான் நீச்சலே அதுல தான் கத்துக்கிட்டேன். சந்தோஷ்க்கு அதுல தான் சொல்லித்தரப் போறேன்.” என்றான்.
இவன்கிட்ட சொல்றதுக்குச் சும்மாவே இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள். அதனால் அதன்பிறகு அவள் பேசவே இல்லை. அதைக் கவனித்தவன், முதலில் கேலி செய்யத்தான் நினைத்தான். ஆனால் முன்பு ஒரு காலத்தில் மனைவி இருந்தும் தன்னிடம் அக்கறை இல்லாமல் இருக்கிறாளே என்று நினைத்து தவித்த நாட்கள் நினைவுக்கு வர… யாதவியின் அன்பை அக்கறையை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.
“நான் இனி கவனமா இருக்கேன் யாதவி. எனக்காக இல்லைனாலும் உனக்காக இருப்பேன். டென்ஷன் ஆகாத.” என்றான். அதன் பிறகே யாதவியும் சமாதானம் அடைந்தாள்.
சந்தோஷிடம், “உனக்குப் பயமா இருந்துச்சா…” என்று லிங்கா கேட்க… அவனுக்கு ஓடும் பாம்பை கையில் பிடிக்கும் வயது. அவனுக்கு என்ன தெரியும்? அவன் இல்லை என்று சொல்ல… ”அடுத்தத் தடவை நாம ரெண்டு பேரும் கிணத்துல இறங்கி குளிக்கலாம்.” என்றான்.
தண்ணீரில் ஆடிவிட்டு வந்தது, மூவருக்கும் நல்ல உறக்கம் வர… மாலை ஆறு மணி வரை நன்றாக உறங்கி எழுந்தனர்.
சந்தோஷ் வீட்டிற்குள் விளையாட… லிங்கா வேலை இருந்ததால் அவனது அலுவலக அறைக்குச் சென்று வேலைப் பார்த்தான். இரவு உணவு நேரத்திற்கு வந்தவன், உண்டு முடித்து மீண்டும் வேலை பார்க்க சென்று விட… சந்தோஷை உறங்க வைத்து விட்டு, யாதவியும் கட்டிலில் படுத்திருந்தாள்.
லிங்கா பத்து மணி போல வந்தவன், முகம் கை கால் கழுவி உடைமாற்றியவன், மெத்தையை எடுத்து வேறு பக்கம் சென்று தரையில் விரிக்க…
எதுக்கு என்பது போல யாதவி பார்க்க… கட்டிலின் அருகே வந்தவன், சந்தோஷை குறுக்காகப் படுக்க வைத்து, அவன் இரண்டு பக்கமும் தலையணை வைத்து விட்டு, யாதவியைக் கைகளில் தூக்கிக் கொண்டான்.
யாதவிக்கு என்ன நடக்கிறது என்று புரியவே ஒரு நிமிடம் ஆகி இருக்க… “பொண்டாட்டி ஸ்லிமா இருக்கிறது, எவ்வளவு வசதியா இருக்கு.” என்றவன், அவளைக் கீழே இருந்த மெத்தையில் விட்டு, விளக்கணைத்து அவள் அருகில் படுத்துக் கொண்டான்.
“எல்லாத்துக்கும் உன்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு இருப்பேன்னு நினைச்சியா?” என்றவன், அவளை நெருங்கி படுத்து அனைத்துக் கொண்டான்.
அவளுக்கும் அவன் வேண்டும் என்ற நிலைக்குதான் அவளை கொண்டு வந்திருந்தானே… அதனால் எல்லாம் அவர்களுக்குள் மவுனமாக அரங்கேற…. லிங்கா தன்னவளின் இதழில் முத்தமிட… மென்மையான அவளின் இதழ் அவனை மேலும் மேலும் முன்னேற வைக்க… அவளின் மென்மையில் முழுமையாகத் தொலைந்து போனான்.
மென்மையாக ஆரம்பித்த உறவு, சிறிது நேரத்தில் இருவருக்குள்ளும் தீயாகப் பரவ… அவர்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் தவிர வேறு ஒன்றும் நினைவு இல்லை.
காலை யாதவி கண்விழித்த போது, லிங்கா கட்டிலில் சந்தோஷுடன் உறங்கிக் கொண்டு இருந்தான். இவள் அப்படியே இங்கேயே உறங்கி இருக்க வேண்டும்.
இருவரும் நேற்றைய தினம் முழுமையான கணவன் மனைவி ஆகி இருந்தனர். யாதவி எழுந்து குளித்துவிட்டு வந்து அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க… லிங்காவும் சந்தோஷ் இருந்ததினால் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அதன் பிறகு வந்த நாட்களில், உறங்கும் நேரம் கணவனுடனும், விழிக்கும் நேரம் தனியாகவும் எழுந்தாள்.