வினோத் எல்லா ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்திருக்க… இவர்கள் எல்லாம் வக்கீல் தானே… அங்கே பதிவாளரோடு நல்ல பழக்கம் உண்டு. அதனால் முதலில் இவர்களை அழைத்து, உள்ளே சென்ற பத்தாவது நிமிடம், இருவரின் பதிவு திருமணமும் நடத்து முடிந்திருந்தது.
இருவரும் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வர… நண்பர்கள் வாழ்த்து சொல்ல… அடுத்து கோவிலுக்குச் சென்றனர். வாயிலில் அர்ச்சனைக் கூடை வாங்கிக் கொண்டு, லிங்காவும் யாதவியும் உள்ளே சென்றனர்.
அன்று வாரநாள் என்பதால், கோவிலில் வெகு சிலரே இருந்தனர். அதுவும் சந்நிதானத்தில் அப்போது ஆட்களே இல்லை. முன்பே இரண்டாம் திருமணம் என்பதால்… எளிமையாகச் செய்து வைத்தால் போதும் என்று அர்ச்சகரை சரிகட்டிதான் வைத்திருந்தனர்.
அர்ச்சனை தட்டில் பேப்பரில் மடித்து வைத்திருந்த தாலியையும் வைத்து லிங்கா கொடுக்க… தாலியில் மஞ்சள் குங்குமம் வைத்து மற்றும் அதில் பூவை சுற்றி சாமி பாதத்தில் வைத்து அர்ச்சகர் அர்ச்சனை செய்து எடுத்து வந்தவர், அதைத் தட்டில் மங்கள பொருட்களுடன் வைத்து லிங்காவிடம் நீட்ட… லிங்கா அதை எடுத்து யாதவியின் கழுத்தில் அணிவித்தான். பிறகு அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை எடுத்து, அவள் நெற்றியிலும் வகுட்டிலும் வைத்து விட்டான்.
நண்பர்கள் அங்கிருந்து நகர்ந்து செல்ல… யாதவி திகைத்து நிற்பதை பார்த்து, “எல்லாம் வேகமா நடக்கிற மாதிரி இருக்கா? சாரி யாதவி வேற வழி இல்லை.” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு பிரகாரத்தைச் சுற்றி வந்து சாமி முன்பு விழுந்து வணங்கினான்.
இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்து காரில் ஏறி மீண்டும் பிரபுவின் வீட்டிற்கு வந்தனர். நண்பர்கள் எல்லோரும் உடன் வந்தனர்.
சங்கீதா அவர்கள் வருவது தெரிந்து தயாராக வைத்திருந்த ஆரத்தியை, இருவரையும் நிற்க வைத்து எடுத்த பிறகே உள்ளே செல்ல விட்டாள்.
வீட்டிற்குள் சென்றதும் மகனை தேடிய யாதவி, மகனோடு காலையில் அவள் தயாரான அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டாள்.
எல்லாம் அவரசரமாக நடந்து முடிந்திருக்க… அப்போது எதையும் யோசிக்க நேரம் இல்லை. இப்போது யோசிக்கும் போது ஒரே குழப்பம். சிறிது பயமாகவும் இருந்தது.
அவள் மனநிலை அறிந்து அவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை. சிறிது நேரம் சென்று அங்கே வந்த லிங்கா, “யாதவி, நாம கல்யாணம் பண்ணிகிட்டோம். இனிமே ஏது வந்தாலும் பார்த்துக்கலாம்.” என்றவன், “எல்லாருக்கும் மதியம் இங்கதான் சாப்பாடு. வெளிய வாங்கலாம்ன்னு சொன்னா, சங்கீதா கேட்காம அவங்களே பண்றாங்க. நீயும் அவங்களுக்கு உதவி பண்ணு.” என்றவன், அவளிடம் இருந்து சந்தோஷை வாங்கிக் கொண்டான். அவளின் மனதை மாற்றவே அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
சிறிது நேரத்தில் இன்னும் மற்ற இரு நண்பர்களின் மனைவிகள் வர… எல்லோரும் சேர்ந்து சமைத்தனர். பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து விளையாட… முன்பக்கம் இருந்த வெட்டவெளியில் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரே அரட்டை.
யாதவி காய் நறுக்கி கொடுத்தாள். நண்பர்களின் சிரிப்புச் சத்தம் உள்ளே வரை கேட்க…
“எல்லாம் ஒன்னு சேர்ந்திட்டாங்களா, இனி கையில பிடிக்க முடியாது.” என்ற சங்கீதா, “யாதவி ஒன்னு தெரிஞ்சிக்கோ இவங்களுக்கு எல்லாம் அவங்க பிரண்ட்ஸ் தான் முதல்ல… யாருக்கு ஒன்னுனாலும் மத்தவங்க முன்ன நிற்பாங்க. அதுவும் லிங்கா அண்ணா, அவர் ப்ரண்ட்ஸ்ல இருந்து ஒருத்தரைத்தான் தங்கச்சிக்கு மாப்பிள்ளை ஆக்கி இருக்கார். அவங்களுக்குள்ள அவ்வளவு நம்பிக்கை.” என்றாள்.
நண்பர்கள் இருக்கப் போய்த் தானே திருமணத்தைக் கூட இவ்வளவு விரைவாக நடத்தி முடித்திருக்கிறான்.
யாதவி எதோ யோசனையில் காய் நறுக்க.. கைவிரலை லேசாக வெட்டிக் கொண்டாள். ஈர துணியைக் கொண்டு வந்து சங்கீதா கொடுக்க… யாதவி விரலில் சுற்றிக் கொண்டாள்.
மதிய உணவை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அருந்த வர… லிங்காவோடு யாதவியை உட்கார சொல்ல… அவள் மறுக்க… காய் நறுக்கும் போது, அவங்க கையை வேற வெட்டிகிட்டாங்க என்றதும்,
“அப்போ லிங்கா அவங்களுக்கு ஊட்டி விடுவான்.” என நண்பர்கள் கேலி செய்ய…
லிங்கா யாதவியைப் பார்க்க… அவள் அதை ரசிக்கும் மனநிலையில் அப்போது இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது. அவள் சந்தோஷுக்கு ஊட்டுவது போல உள்ளே சென்று விட்டாள்.
அவள் உள்ளே சென்றதும், லிங்கா நண்பர்களைப் பார்த்து, “ரொம்பக் கஷ்ட்டப்பட்டு இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கேன். இன்னைக்கே எனக்கு ஆப்பு வச்சிடாதீங்க டா…” எனக் கையெடுத்து கும்பிட… சரி பொழச்சு போ என்றனர்.
முதலில் ஆண்கள் உண்டு, பிறகு பெண்கள் உண்டு முடிக்க… எல்லோரும் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
நண்பர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் கேலி செய்து காலை வார… இவர்களுக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை.
“நீங்க என்ன சுப்ரீம்கோர்ட் வக்கீலா சொன்னதும் தெரியறதுக்குன்னு நக்கல் வேற பண்றார். எனக்கு வந்தது பாரு கோபம். இவனோட போயிட்டு எனக்கும் தான் அவமானம். என்னைக் கேட்டார், நீங்க என்ன பண்றீங்கன்னு? நான் சொல்லவே இல்லையே வக்கீல்ன்னு.” என லிங்கா பிரபுவை காட்டி சொல்ல… கேட்ட எல்லோருக்கும் ஒரே சிரிப்பு.
“நான் தனியா போயிருந்தா கூட அவரு பொண்ணு கொடுத்திருப்பாரு டா… இவனோட போனதுனால தான் இல்லைன்னு சொல்லிட்டார்.” என்றான் பிரபு.
“மச்சான் நான் மட்டும் இல்லைனா… உனக்குக் கல்யாணமே ஆகி இருக்காது டா. அதை மனசுல வச்சிட்டு பேசு. நான்தான் சங்கீதாவை அன்னைக்கு டைமுக்குக் கொண்டு வந்து ரெஜிஸ்டர் ஆபீஸ்ல விட்டேன்.”
“ஆமாம் டா, நீ அவனுக்கு அன்னைக்குப் பண்ண… பதிலுக்கு அவன் இன்னைக்கு உனக்குப் பண்ணிட்டான்.” எனப் பரத் சொன்னதும் எல்லோரும் சிரித்தனர்.
யாதவி சங்கீதாவை பார்க்க… “எங்க கல்யாணமும் உங்க கல்யாணம் மாதிரி தான் நடந்தது. இத்தனைக்கும் நானும் அவரும் சொந்தம் தான். ஆனாலும் வீட்ல ஒத்துக்கலை. நாங்க ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணதும், அப்புறம் ரெண்டு வீட்லயும் பேசி… எங்களுக்குத் திரும்பக் கல்யாணம் பண்ணி வச்சாங்க.” என்றால் சங்கீதா.
அப்போது பரத், “நான் முன்னாடி போறேன் மச்சான். போய் உங்க அம்மாவை ரெடி பண்ணி வைக்கிறேன். நீங்க பிறகு வாங்க.” எனச் சொல்லி அவன் கிளம்ப…
“அவ்வளவு நல்லவனா டா நீ?” என வினோத் கேட்க…
“இவனுக்காகப் பார்க்க போனா… என்னை இன்னைக்கு எங்க மாமியார் டைவர்ஸ் பண்ணிடுவாங்க டா… நானும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வச்சேன்னு சொல்ல மாட்டேனே… நீயே பண்ணிகிட்டேன்னு தான் சொல்ல போறேன். நீயும் அப்படியே காட்டிக்கோ… இல்லைனா உன்னோட சேர்த்து என்னையும் வெளிய துரத்திடுவாங்க.” பரத் சொல்ல…
லிங்கா யாதவியை இன்னைக்குக் கல்யாணம் பண்ணிகிட்டான் போல என மனைவியிடம் சொல்வது போலப் பரத் சொன்னதும், முதலில் அழுது புலம்பிய சிவகாமி. பிறகு அவன் வரட்டும் என்று கோபமாகக் காத்திருந்தார். ஆனால் அதையும் உடனே தன் அண்ணிக்கு அழைத்துச் சொல்லி விட்டார். அவரும் உடனே கிளம்பி வந்துவிட்டார்.
இனி தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, மற்ற எல்லோரையும் அங்கிருந்தே லிங்கா கிளம்பச் சொல்ல, பிரபு மட்டும் அவர்களை விடுவதற்காக வந்தான்.
இவர்கள் காரில் இருந்து இறங்கும்போது, அப்போது தான் ஜெயந்தியும் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். யாதவியைப் பார்க்கும் போதே, திருமணம் ஆனது தெரிய… அவர் திகைத்து நிற்க… உள்ளே பெரிய பிரச்சனை நடக்கும் என்று எதிர்பார்த்த யாதவி, அதை எல்லாம் மகன் பார்க்க வேண்டாம் என்று நினைத்து, சந்தோஷை அவரிடம் கொடுத்து விட்டு லிங்காவுடன் உள்ளே சென்றாள்.
ஹாலில் இவர்களை உட்கார கூடச் சொல்லாமல் நிற்க வைத்தே சிவகாமி அவ்வளவு பேச்சு பேசினார். மகனை மயக்கி திருமணம் செய்து கொண்டதாக யாதவி மீது குற்றம் சாட்டினார்.
லிங்கா எதோ சொல்ல வர… யாதவி பேசாதே என்பது போலப் பார்க்க… திட்டி திட்டி களைப்படைந்த சிவகாமி, “நான் இவளை வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டேன்.” என்றார்.
அவர் பேசி முடிக்கட்டும் எனக் காத்திருந்த லிங்கா, “பேசிடீங்களா மா… என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது நீங்கதான். நீங்க ஒன்னு பண்ணி, பதிலுக்கு நான் ஒன்னு பண்ணி… என்னால முடியலை. இனி இதை இதோட விட்டுடுங்க. உங்களுக்கு யாதவி இங்க இருக்க வேண்டாம்னா, அவ இங்க இருக்க மாட்டா… போதுமா? நிம்மதியா இருங்க.” என்றவன், யாதவியை அழைத்துக் கொண்டு அவள் இருந்த வீட்டிற்குச் சென்றுவிட்டான்.