எனக்கென வந்த தேவதையே

அத்தியாயம் 10

அன்று பார்த்து பேருந்து தாமதமாக வர… யாதவியையும் சந்தோஷையும் ஒரு இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, லிங்கா சற்று தள்ளி நின்று கொண்டிருந்தான். அப்போது பரத் அழைத்தான்.

டேய், உங்க அம்மா சம்மதம் வாங்கிட்டு எல்லாம் கல்யாணம் பண்ணும்னு நினைச்சா, அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது போல… இவங்க உன்னைக் கார்னர் பண்ண வேற எதோ திட்டம் போடுற மாதிரி இருக்கு.”

உங்க அம்மாவும் உங்க அத்தையும் இன்னைக்குக் காலையில இருந்து எதோ போன்ல பேசுறாங்க டா… என்னைப் பார்த்தா, உடனே உங்க அம்மா போன்ல பேசுறதை நிறுத்திடுறாங்க. ஒன்னும் இல்லைனா பேச வேண்டியது தான? என்னைப் பார்த்ததும் எதுக்கு நிறுத்துறாங்க? அதோட நீ எப்போ வருவன்னு என்கிட்டே அத்தனை தடவை கேட்டாச்சு. நான் ரெண்டு நாள் ஆகும்னு சொல்லி இருக்கேன் மச்சான்.”

நீ சென்னைக்குப் போனது யாதவியைப் பார்த்து பேசன்னு இப்போத்தான் சந்தேகம் வந்திருக்கும் போல… இவங்க எதுவும் பண்றதுக்குள்ள… நாம முந்திக்கணும்.” என்றதும்,

நான் யாதவி என்னைக்கு வருவான்னு தெரியாம இருந்தேன். ஆனா அவ இன்னைக்கே என்னோட கிளம்பிட்டா. அப்போ நாம முன்னாடி போட்ட பிளான் படி நாளைக்கே பண்ணிடலாமா?” என லிங்கா கேட்க…

அவனோடு பேசியபடி கேலண்டரை ஆராய்ந்த பரத், “நாளைக்கு நாள் நல்லா தான் டா இருக்கு.” என்றதும்,

சரி நான் அப்போ ஏற்பாடு பண்ணிடுறேன்.”

நீ இங்க வர்றது தெரிய வேண்டாம். நீ இன்னும் ரெண்டு நாள் சென்னையில இருக்க மாதிரியே நான் சொல்றேன். உனக்கு யார் போன் பண்ணாலும், நீயும் அப்படியே சொல்லு.”

சரி நான் வினோத்தை விட்டு என்ன பண்ணணுமோ பண்ணி வைக்கிறேன். நீ காலையில ஒரு பத்து மணிகுள்ள வந்திடு.”

சரி வந்திடுறேன்.”

லிங்கா அதன் பிறகும் இரண்டு மூன்று பேருக்கு அழைத்துப் பேசினான். அப்போது பேருந்தும் வந்துவிட்டது.

கடைசி நேரத்தில் முன்பதிவு செய்ததால், பேருந்தில் கடைசி இருக்கையில் தான் இடம் இருந்தது. உறங்கிய சந்தோஷை லிங்கா தூக்கி வந்தவன், அவனை இருக்கையில் படுக்க வைக்க… அவனுக்கு அருகில் யாதவியும் உட்கார்ந்து கொண்டாள்.

உன்கிட்ட ஐடி ப்ரூப் என்ன இருக்கோ அதை எனக்கு அனுப்பி வை.” என்றான்.

காரணம் இல்லாமல் கேட்கமாட்டான் என்பதால், அவள் கைபேசியில் இருந்து அவனுக்கு அனுப்பிவிட்டு உறங்கி விட்டாள்.

இன்று மண்டபத்தில் ஜனனியின் புண்ணியத்தில் நிறையப் படங்கள் எடுத்திருந்தனர். ஜனனியிடம் கைபேசி இல்லாததால்… லிங்காவின் கைபேசியில் தான் எடுத்திருந்தனர். அதில் அவனும் யாதவியும் இருந்ததை மற்றும் தேவையான ஆவணங்ககளை வினோத்திற்கு அனுப்பிய லிங்கா, அவனை அழைத்துப் பேசினான். “நீ முன்னாடி போய் எல்லாம் ரெடி பண்ணிடு. ரவி நம்ம ஆளுதான். ஒரு பிரச்சனையும் இல்லை. நாங்க டைம்க்கு அங்க வந்திடுறோம்.” எனப் போன்னை வைத்தான்.

அந்த நேரம் சரியாகச் சிவகாமி அழைத்தார். அவன் எடுத்ததும், “என்னோட தான் பேச மாட்டீங்களே… பிறகு எதுக்குப் போன் பண்ணி இருக்கீங்க?” என்று அவன் கேட்க…

நான் தான உனக்கும் சமைக்கணும். அதுதான் எப்போ வருவன்னு கேட்க பண்ணேன். வந்தா நாளைக்குச் சேர்த்து டிபன் செய்யணுமே…” என அவர் சொன்ன மொக்கை காரணத்தைக் கேட்டு வாயிக்குள் சிரித்தவன்,

இங்க கொஞ்சம் வேலை இருக்கு மா. நான் வர ரெண்டு நாள் ஆகும்.” என்றதும், சரி என்று சிவகாமி போன்னை வைத்து விட்டார். எதிரே இருந்த தனி இருக்கையில் படுத்துக் கொண்டவன், வெகு நேரம் யோசனையில் இருந்தபடி உறங்கிப் போனான்.

காலை ஏழு மணிக்கு அலாரம் அடிக்க… லிங்கா எழுந்து உட்கார்ந்தவன், பக்கத்தில் பார்க்க.. சந்தோஷ் உறங்கிக் கொண்டிருக்க, யாதவி இருக்கையில் சாய்த்து உட்கார்ந்திருந்தாள்.

முகத்தை அழுந்த துடைத்து, தலையைத் தன்னிடம் இருந்த சீப்பால் வாரியவன், எழுந்து அவளது இருக்கைக்குச் சென்று, அவள் எதிரே உட்கார்ந்தான்.

யாதவி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றதும், அவள் என்ன என்பது போலப் பார்க்க…

அவள் சென்ற மறுதினம் வீட்டில் நடந்த சண்டையைப் பற்றியும், அவன் மாமாவை அவன் பேசியது பற்றியும் சொன்னவன், “எங்க அப்பாவுக்கு அப்புறம் அவர்தான் எங்களுக்கு எதுக்குனாலும் முன்னாடி நிற்பார். நான் அவரை அப்படிப் பேசி இருக்கக் கூடாது. எனக்கே தெரியுது நான் பண்ணது தப்புன்னு. ஆனா நான் அதை விருப்பபட்டு செய்யலை. என்னைச் செய்ய வச்சாங்க.”

நாம ரெண்டு பேரும் தனித்தனியா இருக்க வரை, அவங்க இதைச் செஞ்சிட்டே இருப்பாங்க. எனக்கு அவங்க எல்லோரோடும் பிரச்சனை வந்திட்டே இருக்கும்.”

அவளுக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது. அன்று அவளையும் அவர்கள் தான் பேச வைத்தது. இப்போது பேசி விட்டு, அப்படிப் பேசி இருக்க வேண்டாம் என்று அவளும்தான் வருந்துகிறாள்.

அவங்க பண்றாங்கன்னு நாமும் ஒன்னு செஞ்சு, குடும்பத்துக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் பார்க்க முடியாம போயிடும் போல… எனக்கு அதுல விருப்பம் இல்லை.”

நாம உடனே கல்யாணம் பண்ணிகிட்டோம்னு வை, அவங்கவங்க அவங்க வேலையைப் பார்த்திட்டு இருப்பாங்க. எங்க அம்மா கொஞ்ச நாள் கோபமா இருப்பாங்க. அப்புறம் சரி ஆகிடுவாங்க.”

ப்ளீஸ் யாதவி, நீதான் என்னை இவங்ககிட்ட இருந்து காப்பாத்தணும்.” என்றவனைப் பார்த்தவள், “சரி உங்க இஷ்ட்டப்படி பண்ணுங்க.” என்று விட்டாள்.

என்னை நம்புறதுக்குத் தேங்க்ஸ். இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்றவன், உடனே அங்கிருந்து எழுந்து கொண்டான். 

அவனிடம் சரி என்று சொல்லிவிட்டு, அவளுக்குமே நிறைய யோசனை தான். இனி வாழ்க்கை எப்படி இருக்கும் என எங்கெங்கோ சிந்தனை செல்ல… மனதை அடக்கி வெளியே வேடிக்கை பார்ப்பதில் கவனம் செலுத்தினாள். சுற்றிலும் இருந்த இயற்க்கை சூழல் மனதை அதில் லயிக்க வைக்க உதவி செய்தது.

காலை எட்டு மணி போல… தென்காசிக்கு முன்பே ஒரு இடத்தில் லிங்கா பேருந்தை நிறுத்த சொல்லி, யாதவி சந்தோஷோடு இறங்கிக் கொண்டான்.

அவனின் நண்பன் பிரபு காரோடு வந்துவிட… அதில் சென்று ஏறினர். வழியெங்கும் கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் பசுமையான சூழல் தான். அங்கிருந்து அவன் நண்பனின் வீட்டிற்குச் சென்றனர்.

முதலில் மகனை தயார் செய்துவிட்டு, பிறகு குளித்து முடித்து, இப்போது ஜனனி திருமணத்திற்காகக் கடைக்குச் செல்லும் போது, சில சேலைகள் யாதவி தனக்கும் எடுத்திருந்தாள். அதில் ஒன்றை எடுத்து அவள் அணிந்து தயாராக… லிங்கா அவனும் தயாராகி வந்தான்.

அதற்குள் பிரபுவின் மனைவி காலை உணவை தயார் செய்திருக்க… எல்லோரும் சேர்ந்து உண்டனர். பிரபுவின் பிள்ளைகளோடு சந்தோஷ் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஒரு மணி நேரம் சென்று, அவன் நண்பன் வினோத் கைபேசியில் அழைத்து, வரலாம் என்று சொல்ல… “சந்தோஷ் இங்க இருக்கட்டும், நான் பார்த்துக்கிறேன். ரெஜிஸ்டர் ஆபீஸ்ல முன்ன பின்ன ஆகும். அவன் எதுக்கு?” எனப் பிரபுவின் மனைவி சங்கீதா சொல்ல… லிங்கா யாதவியைப் பார்க்க… அவளும் இருக்கட்டும் என்றாள்.

பிரபுவுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று இரண்டு பிள்ளைகள், சந்தோஷ் வந்ததில் இருந்து அவர்களுடன் தான் இருக்கிறான். இன்று பள்ளி விடுமுறைதான்.

அம்மா ஆபீஸ் போயிட்டு வரேன். நீ இங்க அண்ணனோட அக்காவோடு விளையாடு.” என்று சொல்ல… சந்தோஷ் சரி என்றான்.

பிரபுவின் காரில் மூவரும் சென்றனர். வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்த சொல்லி, லிங்கா மட்டும் இறங்கி சென்றான்.

நகைக்கடைக்குச் சென்று தாலி மட்டும் வாங்கியவன், அவன் கழுத்தில் இருந்த செயினைக் கழட்டிக் கொடுத்து, அதில் அந்தத் தாலியை கோர்த்து தர சொன்னான். இப்போது செயின் தேர்ந்தெடுத்து வாங்க எல்லாம் நேரம் இல்லை.

இவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கே பரத் வினோத்துடன், மேலும் சில நண்பர்கள் காத்திருந்தனர்.