அண்ணா..ஒன்..டூ..த்ரீ என்று திருமணப்பாடல் ஒன்றை பாடிக் கொண்டே அவள் அண்ணாவுடன் சேர்ந்து சுவாதி ஆட, “மிருளா வா “என்று தமிழினியன் மிருளாலினி கையை பிடித்து மேலே அழைத்து அமர வைத்து அவளருகே அமர்ந்து கொண்டான்.
“எந்த படத்துல இந்த பாடல் வருது?” ஒருவன் கேட்க, “உனக்கு சுவாதி பற்றி தெரியாதா?” என்று திரும்பி பின்னிருந்தவனை பார்த்து, அவளுக்கு பாட்டு, டான்ஸ் ரொம்ப பிடிக்கும். அவள் அப்பாவுக்காக தான் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிருக்கா என்று ரசிகா கூறினாள்.
ஆமாப்பா..சுவா நல்லா பாட்டு பாடுவா. இது கூட அவளாக அவன் அண்ணன் அண்ணியை வைத்து அவளாக எழுதிய பாடல் என்று வனஜா சொல்ல, அவர் அமைதியாக அதுவும் சுவாதியை பற்றி பெருமையாக பேசியதை நம்ப முடியாமல் விக்ரம் பார்த்தான்.
பின் சுவாதியை பார்க்க, அவன் மனம் இடம் மாறிப் போனது. அவளை ரசிக்க ஆரம்பித்து அவளுள் மூழ்கினான் விக்ரம். அப்பொழுது அவனருகே வந்து அமர்ந்த ஒருவர், “அந்த பொண்ணு அழகா இருக்கால்ல?” என்று கேட்டார்.
ம்ம் என்றான் விக்ரம்.
“அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுல்ல?” அவர் கேட்க, ஆமா “ரொம்ப நல்லப் பொண்ணு” என்றான்.
அப்படின்னா, “அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?” அவர் கேட்க, ம்…என்று “என்னது?” என்று அருகே விக்ரம் பார்க்க, சதாசிவம் புன்னகையுடன் தன் மகனை பார்த்தாள்.
அய்யோ போச்சுடா, “இதை வச்சே ஓட்டுவாறே! இப்படியா சிக்குவேன்?” அவன் மனதினுள் புலம்பிக் கொண்டே தலையை அழுந்த கோதிக் கொண்டான்.
“என்னப்பா பேசிறலாமா?” அவர் கேட்க, சும்மா ரசித்தேன். அவ்வளவு தான். “ரொம்ப கற்பனைக்குள் போகாதீங்க” என்று விக்ரம் எழுந்தான். அவனை பார்த்த ரகசியன் அவனை அழைக்க, “என்னை எதுக்குடா இழுக்குறீங்க?” என்று நோ..என்றான். சுவாதியோ ரசிகாவை இழுத்து சென்று மகிழ்ச்சியுடன் எஞ்சாய் செய்தாள்.
விக்ரமும் வழியில்லாமல் ரகசியனுடன் செல்ல, சிம்மா நட்சத்திரா மற்றும் பெரியவர்கள் என அங்கு அமர்ந்திருந்த அனைவரையும் அவர்களது வைபில் ஆட வைத்தனர். மிருளாலினி முதல் முறையாக பாட்டி, தாத்தா எல்லாரும் ஆடுவதை பார்த்து சிரித்தாள். தமிழினியன் கண்கள் அவளை முழுதாக ஆக்ரமித்து இருந்தது.
மாமா, அத்தை வாங்க என்று அவர்களை சுஜியின் மகள் தீபுவும் இழுக்க, போகலாமா மிரு? உனக்கு தெரிந்தவரை ஆடு என்றான் தமிழினியன். அவள் அவனை பார்த்து புன்னகைக்க, அவனது இதயமோ “வா..என் உயிரே..என்னோடு கலந்து விடு” என பாட ஆரம்பித்தது. அவளது கையை பிடித்து மகிழ்வுடன் அவனும் ஆடினான். அவளும் அவனோடு இணைந்து கொண்டாள். அவள் மனம் லேசானது போல் இருந்தது. ‘
இதை பார்த்த மிருளாலினி பெற்றோர் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆடும் சுவாதி யார் என்று பாராது எல்லாருடனும் ஆட, விக்ரமின் கைகளில் வந்து சேர்ந்தாள்.
ஹாய் சார், “எஞ்சாய் “என்று விக்ரமை சுவாதி பிடித்துக் கொண்டு ஆடினாள். அவன் உடலுருகி மனம் திளைத்து அவள் கண் நோக்கி அவளையும் பார்க்க வைத்து ஆட ஆரம்பித்தான். சட்டென வலிய ஓர் ஆணின் கரம் சுவாதியின் கழுத்தை வளைத்து கட்டிக் கொண்டது. விக்ரம் அவனை அடிக்க கையை ஓங்க, அவனின் பார்வை சுவாதியை வருடியது.
டேய், “இப்ப எதுக்குடா வந்த?” என்று ஓர் சுழல் சுழன்று அவனது கையை இறுக பிடித்து முறுக்கினாள் சுவாதி. அவன் கத்த அனைவரும் ஆட்டத்தை நிறுத்தி அவளையும் அவனையும் பார்த்தனர்.
அடியேய், “பிள்ளையை விடுடி” என்று சுவாதி அம்மா சத்தமிட்டார். “லேட் கம்மர் எதுக்கு இங்க வந்த? அண்ணா மேரேஜ் முடிஞ்சு வந்திருக்கலாம்ல்ல?” என்று அவள் மீண்டும் அவன் கையை இறுக்க, “சாரி..சாரி..எல்லாரும் சாப்பிட போங்க” என்று அவளது அண்ணன்கள் எல்லாரையும் விலக்கி விட்டு, “என்ன மச்சான் பங்சனுக்கு நேரத்திற்கு வர வேண்டாமா?” ரகசியன் அவனிடம் சென்று அவனை அணைத்தான்.
அவன் நேகன். தமிழினியனுக்கு மூன்று அத்தைகள். இவன் முதலாவது அத்தை மகன். அத்தையும் மாமாவும் விபத்தில் இறந்து விட்டார்கள். இவன் வெளியூரில் வக்கீலாக இருக்கிறான். தமிழினியன் திருமணத்திற்காக வந்திருக்கிறான். மூத்தவனாக இருந்தாலும் எல்லாருக்கும் செல்லப்பிள்ளை நேகன்.
அத்தை, என்னோட டெடி குட்டி மாறவேயில்லை என்று அவளது கையை திருப்ப அவள் சுற்றி வந்து அவன் மார்பில் கை வைத்தாள்.
“என்ன மேடம்? கனவுக்குள்ள போயிட்டியா?” நேகன் கேட்க, “என்னது கனவா? நானா?” லூசுப்பயலே..என்னோட அத்தை மட்டும் இருந்தாங்க. நீ செத்தடா என்று அவள் கூற, “அப்படியா? அப்படி என்ன செய்வீங்க? என் அத்தை பெத்த ரத்தினமே?” என்று கேட்டான்.
உன்னை..கண்ணா..கொஞ்சம் குனியேன் என்று சொல்ல, ஆரம்பிக்காதடி. நேகா, நீ வா. அவ கிடக்கா என்று அவள் அம்மா அவனை அழைக்க, மாமா இங்க வாங்க என்று சுவாதி அம்மா, அப்பாவை நிற்க வைத்து காலில் விழுந்தான்.
கண்ணா..பாட்டி அழைக்க, “ஹாய் மை ப்யூட்டி” என்று ஓடிச் சென்று பாட்டி, தாத்தா காலிலும் மற்ற அனைவர் காலிலும் விழுந்து ஆசி வாங்கினான்.
கடைசியாக தமிழினியனிடம் வந்து, வாவ்..மச்சான், அக்கா சூப்பர் என்றான்.
“எவனாவது அக்காவை சூப்பர்ன்னு சொல்வானுகளா?” சுவாதி கேட்க, ஏய்..என்ன? “உன்னை சொல்வேன்னு நினைச்சியா?” நீ சுமார் தான்டி என்றான் நேகன்.
“நான் சுமாரா? டேய் அண்ணனுகளா? அவன் என்ன சொல்றான்? எல்லாரும் வேடிக்கை பாக்குறீங்க?” அவள் கேட்க, தோளை குலுக்கிக் கொண்டு அனைவரும் நகர்ந்தனர்.
“டேய், நீங்களெல்லாம் அண்ணாக்காளா? உங்களை நம்பி பேசுனா இப்படி கவுத்து விடுறீங்க?” அவள் சிணுங்க, அவளது கூந்தலில் கையை வைத்து அவளை இழுத்தான் நேகம்.
அடிங்கோ..என்னோட முடியில கைய வச்ச..உன்னை இரு வாரேன் என்று விக்ரமிடம் வந்து அவன் அசந்த நேரத்தில் அவனிடமிருந்து துப்பாக்கியை எடுத்தாள்.
ஏற்கனவே நேகன் – சுவாதி நெருக்கத்தை பார்த்து நொருங்கிய மனதுடன் இருந்தவன் மேலும் அதிர்ந்தான். ஆனால் சிறிதும் தாமதிக்காமல் சுவாதியை நெருங்கி அவள் கையிலிருந்து துப்பாக்கியை வாங்க, அவள் அவனை தள்ளி விட்டு, “மிரட்டிட்டு தாரேன் சார்” என்றாள்.
“இது விளையாட்டில்லை சுவா” ரகசியன் சத்தமிட, “ஆமா” என்று தாத்தாவும் துப்பாக்கியை கொடுக்க சொன்னார்.
“முடியாது” என்று சுவாதி அடம்பிடிக்க, வனஜாவும் பேசினார். பொறுமை காக்க முடியாமல் அவள் முன் வந்த விக்ரம் “துப்பாக்கியை கொடு” என்று அவள் கையில் பிடுங்க வந்தான்.
“நான் தர மாட்டேன்” என்று அவள் விளையாட்டு காட்ட, இருந்த கோபத்தை மொத்தமாக அவளிடம் இறக்கினான். விக்ரம் சுவாதியை கன்னத்தில் பளாரென அறைந்து துப்பாக்கியை பிடுங்கினான். அவள் கன்னத்தில் கை வைத்து கண்ணீரோடு நின்றாள்.
நேகா..என்று சத்தமிட்ட தாத்தா, எஸ். பி தம்பி துப்பாக்கிற்கு லைசன்ஸ் வைத்திருந்தாலும் அவருடையதை அவரே அதிகம் எடுக்க மாட்டார். அவருடைய போதாத நேரத்தில் தான் எடுப்பார். அது ஒன்றும் பொம்மை துப்பாக்கி இல்லை. சுவாதி மேல தப்பை வச்சிக்கிட்டு அவரை அடிக்க போற என்று சத்தமிட்டார்.
“சாரி தாத்தா” என்று நேகன் சுவாதியிடம் வந்து அவளது கன்னத்தை விலக்க, அவள் கன்னம் சிவந்து இருந்தது.
விக்ரம், “அந்த பொண்ணுகிட்ட சாரி சொல்லு” சதாசிவம் சொல்ல, முடியாதுப்பா. “அவளால் யார் உயிராவது போயிருந்தா என்ன செஞ்சிருப்பா?” விளையாட்டு உயிரை கொல்லும் வரை போகக்கூடாது. அதை அவங்க குறைச்சுக்கிட்டா அவங்களுக்கும் அவங்கள சுற்றி இருப்பவர்களுக்கும் தான் நல்லது என்று கோபத்தில் அங்கிருந்த ஓர் சேரில் சீற்றமுடன் அமர்ந்தான்.
சதாசிவம்..சுவாதியிடம் வந்து, “சாரிம்மா” என்று சொல்ல, “அப்பா” என்று விக்ரம் அவரை முறைத்து பார்த்தான்.
நீ சொன்னது சரி தான். அதை பேசியே நீ சொல்லி இருக்கலாம். “உரிமை இல்லாதவங்க மேல கையை வைக்கிறது தப்பில்லையா?” அவரும் விக்ரமிடம் கேட்க, “சாரி சார் என் மீது தான் தவறு” என்று சுவாதி நேகன் கையை தட்டி விட்டு நகர்ந்தாள்.
சுவா, “நில்லு” என்று அவள் அண்ணன்கள் பின்னே சென்றனர். ரகசியன் மட்டும் விக்ரமை ஒருவாறு பார்த்துக் கொண்டே சென்றான்.
“என்ன அண்ணா? இப்படி அடிச்சிட்ட?” அவள் தப்பே செய்திருந்தாலும் நீ அடிச்சிருக்கக்கூடாது. அவள் வீட்டில் யாரும் அவளை அடித்ததேயில்லை ரசிகா விக்ரமிடம் சொல்லி விட்டு நகர, அவன் வெளியே சென்று அவன் காரிலிருந்து மருந்து ஒன்றை எடுத்து வந்து பொண்ணுங்க இருக்கும் அறைக்கதவை தட்டினான்.
“ஏன் சார்? இன்னும் அடிக்கணுமா?” அவளது அத்தை பொண்ணு ஹரிணி கேட்க, ரசிகா அவளிடம் வந்தாள். விக்ரம் கையிலிருந்ததை பார்த்து சுவா, “இங்க வா” என்று ரசிகா அழைக்க, சுவாதி அமைதியாக வந்து நின்றாள்.
அடிச்சிருக்கக் கூடாது. சாரி. இதை போட்டுக்கோ. சீக்கிரம் சரியாகிடும் என்றான்.
“நாளைக்கு மேரேஜ் பங்சன்ல்ல இப்படியே தான் வரப் போறியாடி?” என்று அந்த பொண்ணு கிண்டலாக கேட்க, அவளை முறைத்த விக்ரம், அவன் பாக்கெட்டிலிருந்து க்ரீம் ஒன்றை எடுத்து, இரவு இதை போட்டுக்கோ. காலையில இதை போட்டுக்கோ. காயத்தையும் மறைக்கும் வலியும் இல்லாமல் போகும் என்று நீட்டினான்.
சுவாதி அவனை பார்த்துக் கொண்டே அதனை வாங்கிக் கொண்டாள். ரசி, நீ சாப்பிட வா..விக்ரம் அழைக்க, இவங்களோட சாப்பிட வாரேன் அண்ணா. நீ போய் சாப்பிடு என்றாள் அவள்.
வெளிய தமிழ் சாருக்கு பக்கத்தில் யாருமில்லை என்று மேடையை பார்த்தான். “இவனுக எங்க போனானுக?” சுவாதி வெளியே வந்தாள். அவள் அண்ணன்கள் வெளியேயிருந்து வந்தனர்.
ஹலோ, “நீங்க தாமதமாக வாங்கி வந்திருக்கீங்க?” ஏற்கனவே அடித்த சாரே மருந்து வாங்கி கொடுத்துட்டார். “மாமாக்களா? உங்கள் தங்கை காயத்துக்கு மருந்து வாங்கி வந்திருக்கீங்க? நாளை மேரேஜ் பங்சனுக்கு அவள் காயத்தை மறைக்க வாங்க தோன்றியதா?” சார் அதையும் வாங்கி கொடுத்திட்டார் என்று அவள் சொல்ல, எல்லாரும் சுவாதி கையிலிருந்த மருந்தை பார்த்து விட்டு விக்ரமை பார்த்தனர்.
சீக்கிரம் சாப்பிட வா. அம்மா ரொம்ப நேரம் காத்திருக்க மாட்டாங்க என்று ரசிகாவிடம் கூறி விட்டு அலைபேசியை பார்த்தான் விக்ரம்.
சதாசிவம் அவனை பார்த்து விக்ரமிடம் வந்து, “விக்ரம்” என்று அழைத்து கண்ணை காட்டினார். போலீஸ் இருவர் வந்திருந்தனர்.
“விசாரிச்சீங்களா?” விக்ரம் கேட்க, சார் அவங்க பயந்து ஓடியவங்க தான். வீட்டுக்கே வரலை என்று சுபிதனின் அம்மாவை பற்றி கூறினார்கள்.
“அவங்க தெருவின் வலது ஓரத்தில் இருந்த புட்டேஜை பின் தொடர்ந்தீங்களா?” விக்ரம் கேட்க, சார் பாதி வரை தான் அவங்க தெரிஞ்சாங்க என்றார்கள்.
ஓ.கே நீங்க கிளம்புங்க என்று ஒருவரை மட்டும் அனுப்பி மற்றவரிடம் ஓரிடத்தை காட்டி செல்ல சொன்னான் விக்ரம். ரகசியனும் நேகனும் அவனை கவனிக்க, அப்பா..”நீங்களாவது அம்மாவை சாப்பிட அழைச்சிட்டு போங்க” என்று விக்ரம் நகர, “தம்பி..”என்று அன்னம் அவரை அழைத்தார்.
அவன் அவரை பார்க்க, உள்ளே நின்று கொண்டிருந்த ரசிகா வேகமாக வெளியே வந்து, அண்ணா வா..சாப்பிடலாம் என்று அவன் கையை இறுக பற்றினாள்.
ரசிம்மா..சதாசிவம் அழைக்க, “வா அண்ணா..”என்று அவன் கையை பிடித்து ரசிகா இழுக்க, ரகசியன் அவளை முறைத்தான்.
ரசி, நீ போ. நான் பேசிட்டு வாரேன் விக்ரம் சொல்ல, அவள் நேராகவே அவனை மறைத்து நின்று, என் அண்ணா உங்களிடம் பேச மாட்டான் என்று ரசிகா கண்கள் கலங்கியது.
ரசி, “என்ன பண்ற?” சுவாதி கேட்க, “சுவா நீ பேசாத” என்று ரசிகா சொல்ல, “சுயநலவாதி” என்று ரகசியன் சத்தமாகவே சொல்ல, “அண்ணா…”சுவாதி அழைத்தாள்.
“என்ன நடக்குது?” சுவாதி அண்ணன் கேட்க, அன்னமோ..ஒரே நிமிசம்மா, இதை மட்டும் விக்ரம் தம்பிகிட்ட கொடு. “நானே செய்தேன்” என்று அவர் டிபன் ஒன்றை கொடுக்க, என் அண்ணாவுக்கு அடுத்தவங்க செய்வது பிடிக்காது என்றாள் பட்டென. அதில் அன்னம் கண்கள் கலங்கியது. விக்ரம் அன்னத்தை உற்றுநோக்க, ரசி..”இங்க வா” என்று சதாசிவம் அவளை பிடித்து இழுத்தார்.
“விடுங்கப்பா” என்று ரசிகா அழுதாள். “இப்ப எதுக்கு ரசி அழுற?” விக்ரம் கேட்க, நான்..என்று தயங்கிய அன்னம் கண்கலங்க டிபனை அங்கேயே வைத்து விட்டு கண்ணீருடன் நகர்ந்தார்.
அப்பா, “அவங்க யாரு?” அவங்கள பார்த்தால் எனக்கு ஏதோ ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு என்று விக்ரம் கேட்க, அண்ணா..அவங்கள எப்படி உனக்கு தெரியும்? அதெல்லாம் ஒன்றுமில்லை என்று ரசிகா பதறினாள்.
கையிலிருந்த மருந்தை ரகசியன் ரசிகாவிடம் தூக்கி போட்டு விட்டு, நீ திருந்தவே மாட்டேல்ல என்று நகர்ந்தான்.
அண்ணா..என்று சுவாதி அவன் பின் சென்றாள். அங்கிருந்தவர்களுக்கு ஏதும் புரியவில்லை. கண்ணீருடன் செல்லும் அன்னத்தை பார்த்துக் கொண்டே நின்றான் விக்ரம்.
அப்பா, “இவளை அழைச்சிட்டு போங்க” என்ற விக்ரம் அந்த டிபனை எடுத்து ஓபன் செய்தான். அதில் பால்கொழுக்கட்டை இருந்தது. எல்லாரும் அவனிடம் வந்து எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர். சுவாதியும் வந்து ஆர்வமுடன் பார்க்க விக்ரம் புன்னகையுடன் அதை எடுத்து வாயில் போட்டு சுவைத்தான்.
வாவ்..இது சாப்பிட்டு வருடங்களாகுது. ஹலோ ப்ரோ, “எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்” என்று நேகன் கேட்டான். விக்ரம் அவனை பார்த்து, என்னுடையதை எப்பொழுதும் எல்லாருடனும் பங்கிட்டு சாப்பிடுவது எனக்கு பிடிக்கும். ஆனால் உனக்கு கொடுக்க பிடிக்கவில்லை என்று சுவாதியிடம் வந்து நீட்டினான் விக்ரம்.
“என்னடா பண்றீங்க?” என்று எல்லாரும் பார்க்க, சுவாதி எடுத்துக் கொண்டாள். அங்கிருந்தவர்களுக்கு கொடுத்த விக்ரம்..நேகன் எடுக்க வர அதை வேகமாக மூடி விட்டு, “உனக்கு கிடையாது” என்று நகர்ந்தான்.
சுவாதி, இதை எனக்காக சிம்மா அம்மாவிடம் கொடு. நான் ஒருவரை மீட் பண்ண போகணும் என்றான் விக்ரம்.
“நானா?” அவள் கேட்க, எனக்கு உன்னையும் ரகசியனையும் தான் நல்லா தெரியும். அதான் கேட்டேன். “முடியாதா?” விக்ரம் கேட்க, “கொடுக்கிறேன் சார்” என்று வாங்கிக் கொண்டாள்.
அலைபேசியை எடுத்து, “எங்க இருக்க ரவி?” என்று வேகமாக விக்ரம் வெளியேறினான்.
“அந்த ராட்சத உருவத்தை பற்றி ஏதாவது தெரிந்ததா ரவி?” அதை பார்த்து மயங்கியவர் இதே ரவி தான்.
இல்ல சார், “நாம சிம்மா சார்கிட்டயே கேட்கலாமே!” ஏன்னா, அது சாமியாராக இருக்கும் போது சிம்மா சாரிடம் தான் நன்றாக பேசியது.
சரி ரவி, “இதை நான் பார்த்துக்கிறேன்” என்று விக்ரம் அவரை கிளம்ப சொல்லி விட்டு மறுபடியும் மண்டபத்திற்கு வந்தான்.
சிம்மாவிற்கு அழைப்பு வர, அலைபேசியை பார்த்து புன்னகையுடன் “என்னை பிஸியா இருக்கவே விட மாட்டீங்களாடா மகிழ்?” என்று கேட்டது. அவனுக்கு மகிழின் அழுகை மட்டுமே பதிலாக வந்தது.
மகிழ், “அழுறியா? என்னாச்சு?” பதறியவாறு வந்த விக்ரமை இடித்ததை கூட அறியாமல் சிம்மா பதட்டமாக வெளியே சென்றான். விக்ரம் அவனை பின் தொடர்ந்தான்.
மகிழ், அனைத்தையும் கூற, “என்ன சொல்ற? இப்ப சொல்ற? அறிவிருக்கா இல்லையா? மச்சான் அங்க தான இருந்தார்?” என்று சிம்மா கேள்விகளை அடுக்க, அக்காவை அவன் என்று பிரணவ்வை பற்றி முழுதாக மகிழ் சொல்ல, சிம்மா கண்ணீர் அவன் கன்னத்தை தொட, அலைபேசியை தவறவிட்டான். விக்ரம் அதை பிடித்து காதில் வைத்து, “யாரு? என்னாச்சு?” என்று கேட்டான்.
நீங்க யாரு? என்று அழுது கொண்டே அண்ணாவிடம் கொடுங்க, இங்க அம்மா, அப்பா பாடியை கூட கொடுக்க மாட்டேங்கிறாங்க. எனக்கு என்ன செய்வதென்று தெரியலை என்று அவன் கதறினான்.
தம்பி, “அழாம பேசு” என்று விக்ரம் சிம்மாவை பார்த்தான். சிம்மா அவன் அம்மா, அப்பாவை தேடினான். பின் விக்ரமிடமிருந்து அலைபேசியை வாங்கி, மகிழ்..நீ ஹாஸ்பிட்டல்லயே இரு. அம்மா,அப்பாவை அனுப்புகிறேன். அவங்க பார்த்துப்பாங்க. ரித்து அலைபேசியை டிராக் செய்து அவளை கண்டுபிடித்துவிடலாம்.
அண்ணா, உதி மாமாகிட்ட தான் அக்கா அலைபேசி இருக்கு. எங்களுக்கு என்ன செய்யன்னு தெரியல. மாமாவும் அவங்க தோழர்களுடன் அக்காவை தேட கிளம்பிட்டாங்க என்றான்.
சரி, ”நான் அவரிடம் பேசிக்கிறேன்” என்று அலைபேசியில் ரித்தியை அழைக்க, உதிரன் சிம்மா எண்ணை பார்த்து அலைபேசியை எடுத்தான்.
நிஷா உதிரனிடமிருந்து அலைபேசியை பிடுங்கி, சிம்மா..ரித்தியை அவன் எங்கோ அழைச்சிட்டு போறான். சென்னை தான் வருவான்னு நினைக்கிறேன். நாங்களும் சென்னைக்கு பக்கத்துல வந்துட்டோம்.
பாலா, பிரணவ் நம்பர் உன்னிடம் இருக்கும்ல்ல. அலைபேசியை கொடு நிஷா கேட்க, காரை ஓட்டிக் கொண்டே அவளை பார்த்தான்.
“சீக்கிரம் கொடு” நிஷா சொல்ல, அவனும் அலைபேசியை கொடுத்தான். பிரணவ்வின் எண்ணை பார்த்து சரியாக சிம்மாவிடம் கொடுக்க, நீங்க லயன்லயே இருங்க. நாம கான்பரன்ஸ்ல்ல பேசிக்கலாம் என்றான்.
நானும் வாரேன். முதல்ல நீ போ. நான் அப்பாவை அழைச்சிட்டு வாரேன் விக்ரம் சொல்ல, பரவாயில்லை விக்ரம் “நான் பார்த்துக்கிறேன்”.
“தனியா எப்படி முடியும்?” நீ சீக்கிரம் கிளம்பு. நானும் உங்களுடன் கான்பரன்ஸ்ல்ல இருக்கேன். போ..என்றான்.
“என்னோட அம்மா” என்று சிம்மா நகர, நீ காரை எடு. நான் அவங்கள வெளிய வர சொல்றேன் என்று விக்ரம் பதட்டமாக உள்ளே சென்று அன்னம் பரிதியை பார்த்தான். சுவாதியும் ரகசியனும் அவர்களிடம் டிபன் பாக்ஸை கொடுத்து விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.
“அம்மா” சிம்மா உங்களை கூப்பிடுறான் என்று விக்ரம் அவர்களிடம் வந்து கூறிக் கொண்டே சதாசிவத்தை தேடினான்.
அவரு..அவரு..என்று விக்ரம் இழுக்க, “அவனுக்கு என்ன?” இருவரும் பதற, மகிழன் பெற்றோர் இருவரும் இறந்துட்டாங்க. அவனுக்கு உங்க உதவி வேணும். அதுமட்டுமல்ல அவளோட அக்காவை அவங்க பாஸ் ஏமாத்தி எங்கேயோ கூட்டிட்டு போறானாம். அந்த பொண்ணை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க அவனுக்கு உதவுங்க என்று அவன் சொல்லி முடிக்க, அன்னம் மயங்கி சரிந்தார். கண்ணீருடன் பரிதி விதிர்விதிர்க்க நின்றார்.
ஓ..செட் என்று விக்ரம் அன்னத்தை தூக்கினான். ரகசியா எனக்கு ஒரே ஒரு உதவி. இருவரையும் வெளியே அழைச்சிட்டு போ. சிம்மாவுடன் காரில் அனுப்பி வை என்றான்.
சார், “கடத்தல் விசயமா?” ரகசியன் கேட்க, ஆமா..இவரோட தம்பி பொண்ணை தான். சிம்மா தங்கை..போ..சீக்கிரம் என்று அவன் சொல்ல, “அத்தை” என்று அர்சுவுடன் நட்சத்திரா அன்னத்திடம் வந்தார்.
மாமா, ஒன்றுமில்லை. நாம போகலாம் என்று நட்சத்திரா அழுது கொண்டே கூற, இல்லம்மா..அவன் எப்படி விட்டு போகலாம்? என்று புலம்பினார்.
அழுறத நிறுத்துங்க. இப்ப அவங்க பசங்க இருவரும் கஷ்டத்துல இருக்காங்க. “அவங்கள காப்பாத்தணுமா? வேண்டாமா?” விக்ரம் சத்தமிட்டான். எல்லாரும் அவர்களை பார்க்க, ரகசியன் அன்னத்தை தூக்க, சுவாதி மாமாவை கூட்டிட்டு போ. நான் மிருவை பார்த்துட்டு வாரேன் என்று நட்சத்திரா திரும்ப சித்ராவும் மாறனும் முன் வந்தனர்.
“என்னாச்சு?” அவர்கள் பதற
மாறா, நீ மாமாவுக்கு துணைக்கு போவேன். ப்ளீஸ் என்று நட்சத்திரா அழுதாள்.
நானும் வாரேன்.
ஆமா சித்து, நீயும் போ. அத்தை மாமாவோட ஹாஸ்பிட்டல்ல கூடவே இரு என்று அவர்களிடம் கூறி விட்டு திகைத்து பார்த்துக் கொண்டிருந்த மிருளாலினியிடம் ஓடினாள்.
விக்ரம் சதாசிவத்தை தேடி சென்றான். சார் உங்க அப்பா சாப்பிட போயிருக்கார் தமிழினியன் தம்பி கூற, அவன் சென்றான்.
மேடையில் ஏறிய நட்சத்திரா, மிரு..நீயும் சுஜி அக்காவும் அர்சுவை பார்த்துக்கோங்க. நான் வந்துடுறேன்.
“அம்மாவுக்கு என்னாச்சுடி?” மிருளாலினி கேட்க, ஒன்றுமில்லை. நான் போகணும்.
“அவள் பாதுகாப்பாகிட்டா கால் பண்ணுடி” என்று மிருளாலினி கண்கள் கலங்கியது.
நட்சத்திரா கீழிறங்கவும் விக்ரம் சதாசிவமும் வந்தனர். அண்ணா, அப்பா போகாதீங்க ரசிகா தடுக்க, கோபமான நட்சத்திரா, உன்னோட அண்ணனை யாரும் பிடுங்கிட மாட்டாங்க. இத்தனை நாள் உறவை உடனே தூக்கிப் போட்டு உன் அண்ணா எங்கும் செல்லமாட்டார் என்று ரசிகாவை தள்ளி விட்டு, “டேய் என்ன வேடிக்கை வாடா” என்று விக்ரம் கையை பிடித்து நட்சத்திரா வெளியேறினாள்.
“டாவா?” விக்ரம் கேட்க, ஆமா என்னோட சின்ன பையன்னு தான மாமா சொன்னாங்க. சார் சீக்கிரம் வாங்க என்றாள்.
ரகசியன் ரசிகாவை முறைத்துக் கொண்டு, “சார் நானும் வாரேன்” என்று அவன் சொல்ல, உங்க அண்ணா பங்சன்.
இல்ல, நாங்க பார்த்துக்கிறோம் தாத்தா. விழா நடக்கும் வீடு வேற. சிம்மாவோட சித்தி, சித்தப்பா தவறி இருக்காங்க விக்ரம் தயங்கி கூற, எல்லாம் மனது தான்ப்பா. “உயிரோட அந்த பொண்ணை மீட்டு வாங்க” என்று சொல்ல, ம்ம்..என்று அனைவரும் காரை எடுத்து கிளம்பினார்கள்.
சிம்மா, அவன் பெற்றோர்கள், மாறன் குடும்பம் ஓர் காரிலும், விக்ரம் நட்சத்திரா, சதாசிவம் தமிழினியனின் இரு தம்பிகள் ஓர் காரிலும், ரகசியனுடன் மற்ற தம்பிகளும், நேகனும் கிளம்பினார்கள்.
ரசி, “உனக்கு என்னாச்சுடி? நீ காலையிலிருந்தே சரியில்லை” என்றாள் சுவாதி. ரசிகா கண்ணீருடன் அவள் அம்மாவை அணைத்துக் கொண்டாள். சுவாதி யோசனையுடன் அவளை பார்த்தாள்.
உதிரனுக்கும் இவர்கள் பேசியது கேட்டுக் கொண்டிருந்தது. சிம்மா அவன் பெற்றோரையும் சித்ராவையும் ஹாஸ்பிட்டலில் இறக்கி விட, அண்ணா…அக்காவை பார்க்கணும் என்று பிடிவாதமாக சிம்மாவுடன் காரில் ஏறினான் மகிழன்.
சிம்மா, “அந்த கார் பக்கத்துல தான் நீ இருக்க” விக்ரம் சொல்ல, “எந்த பக்கம் தெளிவா சொல்லு?” என்று சிம்மா கேட்டான்.
அவன் ஓரிடத்தை சொல்ல, “நாங்களும் பக்கத்துல வந்துட்டோம்” என்று பாலா சொல்ல, “சிம்மா..”உதிரன் மெதுவாக பேச்சை தொடங்க, “அமைதியா வர மாட்டீங்களா?” சிம்மா சத்தமிட்டான்.
மாமா, “அண்ணா மேல எதுக்கு கோபப்படுற?” நட்சத்திரா வார்த்தைகள் கோபமாக விழ, அமைதியா இரு. சிம்மா கோபம் தெரிந்தும் தேவையில்லாமல் பேசாத..
மாறா, அண்ணா..
“என் மேல தப்பு தான்” என்று உதிரன் கதறி அழுதான் ரித்திகாவின் அலைபேசியை கையில் வைத்தவாறு.
பாலா, அலைபேசியில் இருப்பதை பார்க்க சொல்ல, உதிரனுக்கு தன் தவறு..தன் தவறு…என்று அழுதிருப்பான். ரித்தியின் அலைபேசியிலிருந்த உதிரன் ஸ்பீச், புகைப்படத்தை பார்த்து.
அண்ணா, நீ அழாத. ரித்துவுக்கு ஏதும் ஆகாது நட்சத்திரா முழுவிவரமும் அறியாமல் பேச, என்னால தான் செல்லம்மா..இன்னும் சின்ன பிள்ளை போல் என்னுடைய புகைப்படத்தையும் என்னையுமே நினைச்சுக்கிட்டு இருந்திருக்கா. நான் தான் புரிஞ்சுக்கல. அவன் வந்த போதே தெரிந்திருந்தால் அவனை ஒருவழி செய்திருப்பேன். “இப்ப என்னோட ரித்து என்ன நிலையில இருக்கான்னு தெரியல” என்று தலையை பிடித்துக் கொண்டு அழுதான்.
“இப்ப சிந்தித்து என்ன பிரயோஜனம்?” பாலா கோபமாக கேட்க,” உனக்கு உன்னோட பாஸ் பத்தி தெரியாதாடா” உதிரன் சினமாக பாலாவிடன் கேட்க, சார் அவன் வந்தே ஒரு மாதம் தான் ஆகுது. படிக்க அங்கே சென்றவன். அவனே வெகு வருடத்தின் பின் தான் வந்திருக்கான்.
“என்னது? ஒரு மாதமாக தான் இங்கே இருக்கானா?” விக்ரம் கேட்க, ஆமா விக்ரம் சார், எனக்கு உங்களை நன்றாக தெரியும் என்ற பாலா, “சார்..நாம போறது சரியான இடம் தானா?” அவன் இந்த பக்கம் எந்த காரணத்திற்காகவும் வந்ததேயில்லை என்றான்.
“ஒருவேலை அவர்களை நாம தேடுகிறோம்ன்னு அவனுக்கு தெரிந்து அலைபேசியை இங்கே போட்டு சென்றிருப்பானோ?” நேகன் கேட்க, விக்ரம் காரை நிறுத்தினான்.
சிம்மா..காரை நிறுத்து. அவன் நம்மை டைவர்ட் பண்றான்னு தோணுது. அவன் அலைபேசி இருக்கும் இடத்திற்கு போனால் நமக்கு நேரம் தான் விரயம். அவன் ஆட்களை வைத்திருந்தால் நம்மால் உன் தங்கையை காப்பாற்ற முடியாமல் கூட போகலாம்.
சார்..”அவன் வெளியூருக்கு போகலாமோ? ஏர்போர்ட் சென்று கொண்டிருப்பானோ?” பாலா கேட்க, அலைபேசியை எடுத்த நிஷா அவன் ஸ்விச்சில் தான இருந்தான். “அங்கே போவானோ?” என்று அவள் செக் செய்ய, கண்டிப்பா இருக்காது பாலா. காலையில ஆறு மணிக்கு தான் விமானம் இருக்கு என்றாள்.
பாலா, “அவன் இந்த ஒரு மாதமாக சென்ற இடத்தை பார்க்கலாமா?” சிம்மா கேட்க, சார் மறந்தே போனேன். நான் கொடுத்த ரெக்கார்டரை கண்டிப்பாக அவள் எடுத்து போயிருப்பா. அதை என் அலைபேசி லொக்கேசனுடன் இணைத்து இருந்தேன்.
“ஏர்ப்போர்ட்டிலிருந்து மூன்று கிலோமீட்டரில் இருக்கும் யுனிவர்சிட்டியை காட்டுது” என்று உதிரன் சொல்ல, மை காட்..நாம அங்க போக ஹாப்னவர் ஆகும் என்றான் பாலா.
“நாங்க முன்னாடியே போயிருவோம்” என்று சதாசிவம் சொல்ல, “சார்..ரித்து..”என்று சிம்மா பதட்டமானான்.
சிம்மா, உன்னோட தங்கைக்கு ஒன்றுமாகாது. நாங்க இருக்கோம்ல்ல. சிம்மா சார் நோ வொரி..என்ற பாலா நாம சீக்கிரம் அவ்விடம் அடைய ஏற்பாடு செய்கிறேன் என்று அவன் அண்ணாவை அழைத்தான்.
சார் வெளியூர் போயிருக்கார். “உங்களுக்கு தெரியுமே?” அவன் சொல்ல, ஷ்..என்று அவன் அப்பாவை அழைக்க, “என்னப்பா அதிசயமா கால் பண்ணி இருக்க? அதுவும் இந்த நேரத்துல?”
டாட், எனக்கு இப்பவே நான் சொல்லும் இடத்துக்கு ஹெலிய அனுப்புங்க. சீக்கிரம் எமர்ஜென்சி என்றான்.
“என்னது ஹெலிகாப்டரா?” நட்சத்திரா கேட்க, உதிரனும் நிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பாலாவை பார்த்தனர். மூன்று ஹெலி ஐந்தே நிமிடத்தில் அவரவர் இருக்கும் இடத்திற்கு வந்தது. அனைவரும் அதில் ஏற, அடுத்த பத்தாவது நிமிடத்தில் யூனியவர்சிட்டியில் தரை இறங்கியது ஹெலி.
உதிரனை பார்த்த சிம்மா முகம் சினத்தில் சிவப்பேறியது. “இதுல அக்காவை எங்க போய் தேடுறது?” மகிழன் கேட்க, “நேரா போகணும்” உதிரன் சொல்ல, சிம்மா அவனிடமிருந்த அலைபேசியை பிடுங்கி கீழே போட வந்தான்.
“சிம்மா” என அரட்டிய சதாசிவம், உங்க மாமன் மச்சான் பிரச்சனையை அப்புறம் வச்சுக்கோங்க. அந்த பொண்ணை இந்த அலைபேசியை வைத்து தான் கண்டுபிடிக்கணும் என்று அலைபேசியை வாங்கி “நேரா போய் இடது பக்கம் கீழுள்ள அரங்கத்தை தான் காட்டுது” என்றார் சதாசிவம்.
எல்லாரும் வேகமாக ஓட, அரங்கத்தை பார்த்த உதிரன் உள்ளம் நொருங்கியது. மணக்கோலத்தில் தன்னவள் மாற்றான் அருகே தாலியை பிரணவ் ரித்திகா கழுத்தில் கட்டும் போது, ஏய்..என்று உதிரன் சத்தமிட்டான்.
ஏன்டி, “நீ அடி வாங்கியது போதாதோ?” உன் மாமாவும் வந்திருக்கான் என்ற பிரணவ் வரும் அனைவரையும் பார்த்து, டேய்..வெளிய வாங்கடா. உங்களுக்கு வேலை வந்திருச்சு என்று கத்தினான்.
அழுது வீங்கி சிவப்பேறிய வதனம், உதட்டில் இரத்தக்காயம். பட்டுப்புடவை. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்ச்செண்டு போன்ற கூந்தல் என அழகியாக அமர்ந்திருந்தாள் ரித்திகா.
ரித்திகா இவர்கள் அனைவரையும் பார்த்து, கையிலிருந்த பாட்டிலை திறந்து வாயில் போட வந்த சமயம் அதை தள்ளி விட்டான் மகிழன். ஆனால் அவள் வாயினுள் ஓரிரு மாத்திரைகள் தொண்டையுனுள் வழுக்கிக் கொண்டு சென்றது.
அக்கா, “துப்பு..என்ன மாத்திரை இது?” மகிழ் பதற, விக்ரம் சிம்மாவை தாண்டி சீற்றமுடன் வந்த உதிரன் பிரணவ்வை எட்டி உதைத்தான்.
அவன் மேடையிலிருந்து கீழே விழுந்தான். “உன்னோட அலைபேசியை கொடு” உதிரன் அவனை அடித்துக் கொண்டே கத்தினான். மற்ற அனைவரும் அவன் ஆட்களுடன் சண்டையிட, நட்சத்திரா எதையும் கிரகிக்க முடியாமல் அப்படியே நின்றாள்.
பிரணவ் எழுந்து அதிக அழுத்தமாக உதிரனை தள்ள, சுவற்றில் முட்டி உதிரன் தலையில் இரத்தமுடன் கீழே விழுந்தான்.
“மாமா” என்று இதழ்கள் நடுங்க ரித்திகா எழுந்து உதிரனிடம் செல்ல இருந்தவள் கையை பற்றினாள் நிஷா. சினமுடன் வந்த நட்சத்திரா, ரித்திகாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
“செல்லம்மா” என்று உதிரனும், “ஸ்டார்” என்று சிம்மாவும், “அண்ணி” என்று மகிழனும் சத்தமிட்டனர். பிரணவ் வேகமாக ரித்திகாவிடம் வந்தான்.
அவன் அவளை நெருங்க நிஷா அவனை தள்ளி விட்டு, “ச்சீ மனுசனாடா நீ?” உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. நல்ல வேலை ரித்து என்று அவள் பிரணவ்வை இழிவாக வாய்க்கு வந்த படி பேசினாள்.
“உனக்கு என்னை பற்றி பேசும் தைரியம் யாருடி கொடுத்தா?” என்று நிஷாவை பிரணவ் அடிக்க, பாலாவும் ரகசியனும் அவனை தள்ளி விட்டு அடித்தனர். சண்டை சென்று கொண்டிருக்க, “என்ன நடந்ததுன்னு தெரியாம எதுக்கு அவளை அடிச்சீங்க?” நிஷா நட்சத்திராவிடம் கோபமாக பேசினாள்.
மகிழ், “சாரி” என்று வாய் குலற மகிழ் மீது மயங்கினாள் ரித்திகா.
அண்ணா, மாமா..”அக்கா மயங்கிட்டா” என்று மகிழ் மேலும் அழ, பிரணவ் மகிழின் கழுத்தில் கத்தியை வைத்து விட்டு, “நிறுத்துங்க” எனக் கத்தினான். எல்லாரும் அவர்களை பார்க்க, “எனக்கு ரித்து வேணும்” என்று பிரணவ் தாலியை கட்ட முனைய, அருகிலிருந்த சிம்மா துப்பாக்கியை எடுத்து உதிரன் பிரணவ்வின் கையில் சுட்டான். அவன் வலியில் அலறிக் கொண்டே கையை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான்.
அவன் கையிலிருந்த தாலிக்கயிற்றை சிம்மா விட்டெறிந்தான். அது நட்சத்திராவின் முகத்தில் பட்டு கீழே விழுந்தது. அவள் சிம்மாவை கோபமாக பார்த்தாள்.
அக்கா..அக்கா..மகிழ் பதறிக் கொண்டே, ”நீயும் என்னை விட்டு போயிறாத” என்று அழுதான். மயங்கிய ரித்திகா விழியினோரம் நீர்த்துளிகள்.
உதிரன் ரித்திகாவை தூக்க வர, சிம்மா அவனை தடுத்து அடித்தான்.
டேய், “வாங்கடா” பிரணவ் கத்த, மேலும் சண்டையை ஆரம்பித்தனர். இம்முறை யாருக்கும் பொறுமையில்லை. மகிழ் தன் அக்கா ரித்திகாவை துக்கி செல்ல, அவன் பின்னே பாலாவும் ரகசியனும் வந்தனர்.
ரகா..பாலா கண்ணை காட்ட, அவனும் அவன் சொன்ன திசை பக்கம் சென்றான். ரகசியனும் பாலாவும் பள்ளித் தோழர்கள்.
பாலா நினைத்தது போல் அனைவரையும் தள்ளி விட்டு மகிழை பிரணவ் விரட்ட, இடைபுகுந்து அவனை எதிர்த்திசையில் தள்ளினான் ரகசியன். அவன் எழுந்து ஓட சதாசிவம் அவன் காலிலே சுட்டார். அவன் எழ முடியாமல் விழுந்தான். சில போலீஸார் அங்கே வந்தனர்.