“என்னது? உனக்கு கல்யாணம் ஆகிடிச்சா? அதுவும் நம்ம ஏசிபி கூடவா?! ஹஹ… நம்பிட்டோம்.”
அலுவலகத்திற்கு செல்லுவதற்கு முன், தோழி திவ்யாவை தங்களுடைய விடுதி அறையிலேயே சந்தித்து தனக்கு திருமணமான விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று சீக்கிரமாகவே கிளம்பி விடுதிக்கு வந்திருந்த சுபாஷிணி, தன் திருமணம் சேனாதிபதியோடு நடந்து முடிந்து விட்டது என்று சொன்னதற்கு திவ்யாவின் பதில் தான் இது.
“யாராவது கல்யாண விஷயத்துல விளையாடுவாங்களா? உண்மையிலேயே எனக்கு அத்தான் கூட கல்யாணம் ஆகிடிச்சி, திவ்யா. நானும் அத்தானும் நேற்று ராத்திரியே சென்னைக்கு வந்தாச்சு. நான் இப்போ அத்தான் ப்ளாட்டுல இருந்து தான் இங்க வரேன்.”
“அடிப்போடி இவளே… என்னை வெறுப்பேத்துறதுக்காக, இத்துணூண்டு குங்குமத்தை நெத்தியில வச்சிட்டு வந்து ரீல் சுத்துனா, நாங்க நம்பிடுவமா?” சுபாஷிணியை ஏற, இறங்க பார்த்தபடி சொல்லிய திவ்யா, கையில் வெறும் பர்ஸ்ஸோடு நின்றிருந்த சுபாஷிணியைப் பார்த்து, “ஆமா… உன் லக்கேஜை எங்க? ரூமுக்கு வெளியே வச்சிருக்கியா?” என்றாள்.
இத்தனை சொல்லியும் தன்னை நம்ப மறுக்கும் தோழியை அமைதியாக பார்த்த சுபாஷிணி, தன் காலர்நெக் சுடிதாருக்குள் மறைந்து கிடந்த புதுமை மங்காத தங்கத்தாலிக் கொடியை இரண்டு கைகளாலும் பிடித்து, திவ்யாவின் முகத்துக்கு நேராக காட்டியவள், “இப்பவாது நம்புறீங்களா மேடம்?” என்றாள் கிண்டலாக.
“ஹேய் சுபா… உண்மையிலேயே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடிச்சா ப்பா?!” சட்டென்று உடலில் தொற்றிக்கொண்ட ஒரு பரபரப்போடு ஆச்சர்யமாக கேட்ட திவ்யா, “ஏசிபி சாரை நீ அத்தான்னு சொன்னப்பவே நான் இதை எதிர்பார்த்திருக்கணும்.” தலையை ஆட்டியபடியே முணுமுணுப்பாக சொல்லியவள் தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள்.
“என்னடி ஃபீலிங்ஸ்ஸா?” கண்களைச் சிமிட்டியபடி தோழியைப் பார்த்து சுபாஷிணி சிரிக்க,
“இது ஒன்னும் திடீர் கல்யாணம் இல்ல திவ்யா. ஏற்கனவே முடிவானது தான். என்ன… இன்னும் ஆறு மாசம் கழிச்சு பண்ணலாம்னு வீட்ல டிசைட் பண்ணியிருந்தாங்க. இப்போ அப்பாம்மைக்கு உடம்பு சரியில்லைங்குறதுனால, அவங்க ஆசைக்கு உடனே பண்ணியாச்சு.” பொய் பாதி, மெய் மீதியாக அடித்து விட்டாள் சுபாஷிணி.
“ம்ஹூம்… அப்போ ஏற்கனவே நீ என்கேஜ்ட். ஆனா, ஒருவருஷமா கூட இருக்கிற எங்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை. அவ்ளோதான் நம்ம ஃப்ரெண்ட்ஸ்ஸிப், இல்ல சுபா?” அடுத்தகட்ட போர்க்கொடியை திவ்யா உயர்த்த ஆரம்பிக்க,
ஊமைகண்ட கனவாக, தன்காதலை உடையவனிடமே சொல்ல முடியாமல் போய்விடும் என்றே இத்தனை நாளும் நினைத்திருந்த சுபாஷிணிக்கே தெரியாதே, இப்படி அத்தானோடு எதிர்பாராமல் தன் திருமணம் நடந்து விடும் என்று, பிறகு எப்படி தோழியிடம் சொல்வது.
என்றாலும், தங்களுக்குள் நடந்தது எதையும் அடுத்தவருக்கு, பேசுபொருளாக மாற்ற விரும்பாத சுபாஷிணி, “இன்னும் கொஞ்ச நாள்ல சொல்லணும்னு தான் நினைச்சிருந்தேன் திவ்யா. ஆனா, அதுக்கு முன்னாடி கல்யாணமே முடிஞ்சிடிச்சி, நான் என்ன செய்ய?” என்றாள் அழகாக உதட்டைச் சுழித்து.
“ஆமா… இப்பிடி சொல்லுறவளுக்கு தான், கல்யாணம் ஆன உடனே, ஒரு போன் பண்ணி எங்கிட்ட சொல்லணும்னு தெரியாமப் போச்சு.” அடங்க மறுத்து நக்கலடித்தாள் திவ்யா.
“மொதல்ல நீ நம்பியிருப்பியா திவ்யா? சொல்லு… நேர்லவந்து சொல்லி உன்னை நம்ப வைக்கவே எனக்கு போதும் போதும்னு ஆகிப்போச்சு” சுபாஷிணி அலுத்துக் கொள்ள,
“அதுவும் சரிதான்” என்று ஒத்துக் கொண்ட திவ்யா, “கல்யாண ஃபோட்டோஸ் வச்சிருந்தா காட்டேன்” என்று ஆர்வமாக கேட்க, தம்பியிடமிருந்து வாங்கி தன் அலைபேசியில் சேமித்து வைத்திருந்த புகைப்படங்களைக் காட்டினாள் சுபாஷிணி.
“ம்ம்… சூப்பரா இருக்கு. ஆனா தாலி கட்டும் போது ஏசிபி உங்காதுல என்னமோ சொல்லுறாரே?” ஆராய்சியாக திவ்யா கேட்க,
“இவ்வளவு சீரியஸா முகத்தை வச்சிட்டா அதைக் கேப்பாங்க.” மறுபடியும் அந்த பேச்சிலேயே திவ்யா போய் நிற்க, அந்நேரம் அத்தான் என்ன சொன்னார் என்று ஞாபகம் வந்து, மனம் சுணங்கினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“அடேய்… விடுடா, என் வாயைப்பிடுங்காத” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றபடி, தனது கபோர்ட்டை திறந்து, அலுவலக பையை எடுத்து தயார் செய்ய ஆரம்பித்தாள் சுபாஷிணி.
“ஆஹா, கல்யாணம்னு ஒன்னு முடிஞ்சு, தாலின்னு ஒன்னு கழுத்துல ஏறின உடனே புள்ளபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிடுதே” என்று கிண்டலடித்தபடி தானும் அலுவலகத்திற்கு தயாராகத் தொடங்கிய திவ்யாவை சுபாஷிணி யோசனையாகப் பார்க்க,
“இல்ல… வாய் பேசத் தெரியாத நீயெல்லாம் கூட பேச ஆரம்பிச்சிட்டியே, அதைத்தான் சொல்லுறேன்” என்றாள் திவ்யா.
“ஹஹ… எப்பவும் ஒரே மாதிரி இருந்தா போரடிச்சிடாதா திவ்யா?” விளையாட்டாக சொன்னாலும், ‘இன்னைக்கு நீ கொஞ்சம் அதிகமாத்தான் பேசுற சுபா” என்றது சுபாஷிணியின் மனது.
அதைத்தொடர்ந்து, தான் கணவனிடம் தைரியமாக கேள்வி கேட்டது, அவனும் நின்று பதில் சொன்னது என்று எல்லாம் சுபாஷிணிக்கு ஞாபகத்துக்கு வர, பேச்சுவாக்கில் “உன்னால் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம்” என்று சொல்லி, நடந்தவை அனைத்தும் என் நினைவடுக்கில் பத்திரமாகத்தான் இருக்கிறது என்று சேனாதிபதி சொல்லாமல் சொன்ன விதம் சுபாஷிணியின் மனதில் சிறு கலவரத்தை உண்டாக்கியது.
ஆனால், எல்லாவற்றையும் தாண்டி, நேரடியாக தான் சம்மந்தப்படவில்லை என்றாலும் தன்னால் ஒரு பெண் திசைமாறிப் போய் விடக்கூடாது, குறிப்பாக போதையின் பிடியில் அந்த பெண் சிக்கி விடக்கூடாது என்ற கணவனின் தவிப்பு, சுபாஷிணிக்கு அவன் மீது ஒரு மரியாதையோடு, அதிகபட்ச காதலையும் உண்டாக்கி இருந்தது. அதற்காக… அந்த பெண் என்ன சொன்னாலும், செய்தாலும் பொறுமையாக போகவேண்டுமென்றால்…
நினைவலைகள் அறுபட, “அடங்கவே மாட்டியா நீ?” என்று கேட்டு, அருகிலிருந்த தலையணையைத் தூக்கி திவ்யா மீது எறிந்தாள் சுபாஷிணி.
அதை வாகாக பிடித்துக்கொண்ட திவ்யா, “நம்ம ஆடிட்டரை நினைச்சா தான் எனக்கு பாவமா இருக்கு சுபா. உனக்கு கல்யாணம் முடிஞ்சிடிச்சின்னு தெரிஞ்சா, மனுஷன் கண்டிப்பா மனசுடைஞ்சு போவாரு” என்று தங்கள் ஆடிட்டருக்காக பரிதாபப்பட,
“உடைஞ்ச மனசை ஒட்டவைக்கத்தான் நீ ரெடியா இருக்குறியே… அப்புறம் என்ன?” கேலி போல சொன்னாலும், ஆனந்தை நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் திக்கென்று தான் இருந்தது சுபாஷிணிக்கு.
“நம்ம ஆடிட்டருக்கு உன்மீது ஒரு ஈடுபாடு இருத்திறது” என்று திவ்யா சொல்லும் போதெல்லாம், சுபாஷிணி மறுத்து வந்திருந்தாலும், ‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ’ என்ற எண்ணத்தை, சமீபத்திய அவனது நடவடிக்கைகள் சுபாஷிணிக்கு வரவழைத்திருந்தது என்னவோ நிஜம்.
அதனால் தான், தாலிச்சரடு பெரியதாக இருப்பதால், கழற்றி வைத்து விட்டு அலுவலகம் செல்லச் சொன்ன கணவனிடம், இன்று ஒருநாளாவது ஆஃபீஸுக்கு இதோடு போய்விட்டு வந்து கழற்றி வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள் சுபாஷிணி.
ம்ம்… ஆமாம்… காலையில், விடுதிவரை கேப்பில் சென்றுவிட்டு, அங்கிருந்து தோழியோடு தன்னுடைய ஸ்கூட்டியில் அலுவலகத்திற்கு போவதாக கூறி சுபாஷிணி கிளம்பவும், அவளுக்கு முன்னால் தன் கையை நீட்டினான் சேனாதிபதி.
“என்ன த்தான்?” எதற்காக என்று தெரியாமல், சுபாஷிணி தடுமாற,
“என்ன த்தான்… விளையாடுறீங்களா? தாலியைப் போய் யாராவது கழட்டுவாங்களா?” வலதுகை தாலிச்செயினை சட்டென்று பற்றிக் கொள்ள, படபடப்பாக கேட்டாள் சுபாஷிணி.
“ஏன்? இவ்வளவு நாளும் அது உங்கழுத்துல இல்ல, நான் உயிரோட இல்லையா என்ன?” சேனாதிபதி சொல்லி முடிக்கும் முன்னர், தன் விரல்களால் அவன் வாயை அழுத்தமாக மூடியிருந்த சுபாஷிணி, “முட்டாள் மாதிரி, பேசாதீங்க த்தான்” என்று அவனை அதட்ட வேறு செய்தாள்.
அவள் அதட்டலில், அலட்சியமாக உதடு சுழித்த சேனாதிபதி, “சிட்டியில, இவ்வளவு பெருசா தங்கத்துல போட்டுட்டு, ட்டூ வீலர் ட்ரைவ் பண்ணுறது ஹைலி ரிஸ்க். அதுவுமில்லாம செயின் ஸ்நாச்சிங்கைத் தடுக்க, அடுத்தவங்க கண்ணை உறுத்துற மாதிரி தங்கத்துல நகை அணியாதீங்கன்னு, சிட்டி முழுசும் பொண்ணுங்களுக்கு நாங்க சொல்லிட்டு இருக்கிறோம்.”
“அப்பிடி இருக்கும் போது என் வைஃபே போட்டுகிட்டா, அடுத்தவங்களுக்கு மட்டும் தான் அறிவுரை, நமக்கில்லைன்னு ஆகிடாதா? அதனால அதை கழட்டி வச்சிட்டு, கல்யாணத்துக்கு முன்னாடி எப்பிடி ஆஃபீஸ் போவியோ, அப்பிடியே இப்பவும் போ.” முடிவாகச் சொன்னான்.
“தாலியைப் போடாமப் போய், எனக்கு கல்யாணம் முடிஞ்சிடிச்சின்னு ஆஃபீஸ்ல நான் சொன்னா எல்லாரும் எப்படி நம்புவாங்க த்தான்?” என்று முகம் சுருக்கிய சுபாஷிணி, சேனாதிபதியின் கண்களில் இருந்த அதிருப்தியில்,
“இன்னைக்கு ஒருநாள் மட்டும் போட்டுக்கிறேனே அத்தான். காலர்நெக் சுடிதார் போட்டு, அதுக்கு மேல துப்பட்டாவால செயினை நல்லா மறைச்சிக்கிறேன். பிளீஸ்…” என்றாள் கெஞ்சலாக.
அப்போதும், “நான் சொல்லுறதைச் சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்” என்று தான் சேனாதிபதி சொல்லியிருந்தானே தவிர, “சரி” என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து வரவேயில்லை.
எப்போதும் போல, விடுதியிலேயே காலை உணவை முடித்து, லஞ்சையும் எடுத்துக்கொண்டு, வேகவேகமாக கிளம்பிய தோழிகள் இருவரும், வழியில் கொஞ்சம் ஸ்வீட்டும் வாங்கிக் கொண்டு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தபோது, வழக்கமான நேரத்தைவிட அரைமணிநேரம் தாமதமாகிப் போனது.
வண்டியை பார்க் செய்துவிட்டு, கணவனுக்கு, “ரீச்டு ஆஃபீஸ்” என்றொரு மெசேஜை வாட்ஸ்ஸப்பில் தட்டிவிட்டு நிமிர்ந்த சுபாஷிணியின் கண்களில், ஆடிட்டர் ஆனந்தின் இருசக்கரவாகனம் விழ, “போச்சு… ஆடிட்டரும் வந்தாச்சு” என்று சொல்லியபடியே தாலிச்செயினை வெளியே எடுத்து போட, சத்தமாக சிரித்தாள் திவ்யா.
“ம்ப்ச்ச்… என்னோட அவஸ்தை உனக்கு கேலியா தெரியுதா திவ்யா?” பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்து துப்பிய சுபாஷிணிக்கு, வழக்கத்துக்கு மாறாக செயின் வெளியே கிடப்பது என்னவோ போலிருக்க, மறுபடியும் தூக்கி சுடிதாருக்குள் போட்டுக் கொண்டு தோழியோடு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
தங்கள் இருக்கைக்கு வந்து, கையிலிருந்த பைகளை வைத்தவர்கள், தாமதமான காரணத்தால் ஆனந்தை சந்திக்க, அவனுடைய கேபினுக்கு கிளம்பினார்கள். சுபாஷிணி, கொண்டு வந்திருந்த இனிப்பையும் கையிலெடுத்துக் கொண்டாள்.
ஆனந்தின் கேபினின் கண்ணாடிக் கதவை விரலால் தட்டி, அனுமதி வாங்கிக்கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தார்கள். சுபாஷிணியைக் கண்டதும், கண்கள் பளிச்சிட “ஊருக்கு போய்ட்டு வந்துட்டீங்களா சுபா?” என்று புன்னகை முகமாக கேட்டான் ஆனந்த்.
“ம்ம்… ஆமா சார். ஸ்வீட் எடுத்துக்கோங்க.” பதில் சொல்லியபடியே சுபாஷிணி இனிப்பை நீட்டினாள்.
“இன்னைக்கு உங்க பெர்த்டே கூட இல்லியே?” சுபாஷிணியின் முகத்தை ஆர்வமாக பார்த்தபடியே ஆனந்தன் இனிப்பை எடுக்க கைநீட்ட,
“எனக்கு மேரேஜ் முடிஞ்சிடிச்சி சார். அதான்…” என்றாள் சுபாஷிணி மெல்லிய குரலில்.
“வ்வாட்… என்ன சொன்னீங்க?!” ஸ்வீட் எடுக்க நீட்டிய கையை, சட்டென்று பின்நோக்கி இழுத்துக் கொண்ட ஆனந்திடமிருந்து வார்த்தைகள் கொஞ்சம் அதிர்ச்சியாக வந்து விழுந்தது
சுபாஷிணி தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்ன தகவலிலேயே ஏமாற்றத்தை முழுதாக உள்வாங்கியிருந்த ஆனந்த், அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று திவ்யாவின் முகத்தைப் பார்க்க,
“நம்ம ஏசிபி, சுபாவோட அத்தை பையனாம் சார். ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணனும்னு ஏற்கனவே பிக்ஸ் பண்ணிருப்பாங்க போல. இப்போ, பாட்டிக்கு உடம்பு சரியில்லாமப் போனதும், உடனே கல்யாணத்தை பண்ணிட்டாங்களாம்” என்று தகவல் சொன்னாள் திவ்யா.
விருப்பம் என்பது ஒரு நபர் மீது எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், காதல் என்பது அப்படியில்லையே.
அப்படி பார்க்கும் போது, சுபாஷிணியின் வாழ்வில் காதலனுக்கான இடம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க, அந்த இடத்திற்காக ஆனந்த் போட்டி போடுவதை கைவிட்டுவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், எல்லாம் தெளிவாக சொன்னாள் திவ்யா.
“ஓ… கங்க்ராட்ஸ் சுபாஷிணி.” முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையோடு ஆனந்த் சொல்ல, “ஸ்வீட் எடுத்துக்கோங்க சார்” என்று மறுபடியும் சொன்னாள் சுபாஷிணி.
மறுக்காமல் எடுத்துக்கொண்டவன், அதை டேபிளில் வைத்து விட்டு, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்தான். தண்ணீரோடு தன் ஏமாற்றத்தையும் ஆனந்த் விழுங்க முயற்சி செய்வது அங்கிருந்த இரண்டு பெண்களுக்குமே நன்றாக புரிந்தது.
என்றாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல், “ஆஃபீஸ்ல எல்லோருக்கும் ஸ்வீட் குடுக்கட்டுமா சார்?” என்று அவன் அனுமதி வேண்டி நின்றாள் சுபாஷிணி.
“அஃப்கோர்ஸ்… கோ அஹெட்…” சுபாஷிணியின் முகத்தைப் பார்க்காமல் உடனே சம்மதம் சொன்னான் ஆனந்த்.
அவனுக்கு நன்றி சொல்லி வெளியே வந்தவர்கள், தங்களோடு அந்த அலுவலகத்தில் பணிபுரியும் இன்னும் ஐவருக்கும் விஷயத்தை சொல்லி இனிப்பு வழங்க, அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அங்கே சந்தோஷ கூச்சலே.
அதுவும் மாப்பிள்ளை ஏசிபி சேனாதிபதி எனத்தெரியவும், ஐவரில் இருந்த மூன்று பெண்களிடம், அதிகப்படியான ஆச்சர்யம் ஒட்டிக்கொள்ள, சுபாஷிணியை கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டார்கள்.
“இப்போ வேலையைப் பார்ப்போம், லஞ்ச் அவரில் எல்லாம் சொல்றேன்” என்று சுபாஷிணியின் வார்த்தைகளே அவர்களை கலைந்து செல்ல வைத்திருந்தது.
‘ஆனாலும் இந்த கருத்த மச்சானுக்கு கேர்ள்ஸ் ஃபேன்ஸ் அதிகம் தான் ப்பா.’ உள்ளுக்குள் புசுபுசுவென்று கோபம் வர, சுபாஷிணியின் மனம் தன்னை மீறி மெல்லியதாக முணுமுணுத்தது.
தன் யோசனை சென்ற திக்கில் தன்னை மீறி சுபாஷிணிக்கு சிரிப்பு வர, புன்னகையோடு வேலை செய்யத் தொடங்கியவள், சற்று நேரத்தில் அதில் மூழ்கியும் போனாள்.
கிட்டத்தட்ட ஒருமணிநேரம் வேலையில் கரைந்து போனவள், யதேட்ச்சையாக ஆனந்தின் கேபின் பக்கம் பார்வையை வீச, இவ்வளவு நேரமும் இங்கேயே தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தானோ என்னவோ, ஒரு தடுமாற்றத்தோடு தன் பார்வையை சட்டென்று விலக்கிக் கொண்டான் ஆனந்த்.
அதன்பிறகு இயல்பாக வேலை செய்ய முடியவில்லை சுபாஷிணிக்கு. ஆனாலும் ‘அவள் அறிந்த ஆனந்த், நல்லவன், நேர்மையானவன். இந்த ஆரம்பகால தடுமாற்றத்திலிருந்து மிக விரைவாகவே மீண்டுவிடுவான்.’
‘இல்லையென்றால், அவனிடம் வேலைபார்த்ததற்கான தகுதிச் சான்றிதழை வாங்கிக் கொண்டு, தான் வேறிடம் பார்த்து கிளம்பிவிட வேண்டியது தான்’ என்று தீர்மானமாக முடிவெடுத்துக்கொண்டு, மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வேலையில் தொலைக்கத் தொடங்கினாள் சுபாஷிணி.