‘அப்பிடி தூங்காம என்ன வேலை தான் செய்தாங்களாம்? அந்த பொண்ணு அனு என்ன ஆனா?’ என்ற கேள்விகளும் சேர்ந்து கொண்டு இப்போது சுபாஷிணியின் மூளையை பிராண்ட, தனக்கு தேவையான பதத்தில் காஃபியை கலந்து எடுத்து கொண்டு, கணவனின் அறையை பார்த்தவாறு அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.

சற்றுநேரத்தில் குளித்து முடித்து, வெள்ளை டீசர்ட், காக்கி பேண்ட் சகிதம் வெளியே வந்த சேனாதிபதி, கிச்சனுக்கு சென்று தனக்கு தேவையான பாலை ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றிக் கொண்டு சுபாஷிணிக்கு எதிரே கிடந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான்.

இடதுகை, ஈரகேசத்தை கோதிவிட, பாலை குடிக்க ஆரம்பித்தவன், “முளைகட்டிய பயிறு, பால், ஃப்ரூட்சாலட், பாயில்ட் எக், இப்பிடித்தான் என்னோட ப்ரேக்ஃபாஸ்ட் இருக்கும். லஞ்ச் எப்பவுமே வெளியில தான். எப்பவாவது டிபன் ஐட்டம் சாப்பிடணும்னு தோனிச்சின்னா, நம்ம அப்பார்ட்மெண்ட் க்கு ஆப்போசிட்ல இருக்குற கேரளா மெஸ்ல சாப்பிடுவேன்.”

“அங்க நம்ம ஊரு ஐட்டம்ஸ் எல்லாம் கிடைக்கும். சுத்தமாவும் இருக்கும். உனக்கு இன்னைக்கு காலைல சாப்பாட்டுக்கு என்ன வேணும்னு போன் செய்து சொன்னா வீட்டுக்கே கொண்டு வந்து குடுப்பாங்க. மத்தியானம் லஞ்ச் ஆர்டர் குடுத்து, உன் ஆஃபீஸ் அட்ரஸும் குடுத்தா, லஞ்ச் ஆஃபீஸுக்கே வந்துடும்” என்றவன், “மெஸ் நம்பரை சொல்லுறேன், குறிச்சிக்கோ” என்று சொல்ல, அமைதியாக அந்த எண்ணை தன் மொபைலில் சேமித்து கொண்டாள் சுபாஷிணி.

“இல்ல… நீயே சமைச்சி சாப்பிட்டா தான் நல்லாயிருக்கும்னு உனக்கு தோனிச்சின்னா, இரண்டு நாள் பொறுத்துக்கோ, நான் கொஞ்சம் ஃப்ரீ ஆகிட்டு, சமைக்கிறதுக்கு தேவையான பாத்திரம் எல்லாம் வாங்கித்தரேன்” என்று மறுபடியும் தானே பேசத் தொடங்கியவன், எழும்பி சென்று கீஸ்டாண்டில் தொங்கிக்கொண்டிருந்த வீட்டின் சாவியை எடுத்து சுபாஷிணியிடம் நீட்டி, “இது வீட்டோட இன்னொரு சாவி, உங்கிட்ட வச்சிக்கோ” என்றான்.

 சாவியை வாங்கி, தான் அணிந்திருந்த சுடிதார் டாப் பாக்கெட்டில் பத்திரப்படுத்திய சுபாஷிணியிடம், “ஸ்கூட்டி இல்லையே, இன்னைக்கு எப்பிடி ஆஃபீஸ் போவ?” என்று சேனாதிபதி கேட்க,

“கேப் புக் பண்ணி போய்டுவேன்” தாமதமின்றி பதில் வந்தது சுபாஷிணியிடமிருந்து.

“ஓஹ்… அம்மிணி, பிறந்து வளர்ந்ததே இந்த சிங்கார சென்னையில தான. அதனால சிட்டியோட இண்டு, இடுக்கு, எல்லாம் தெரிஞ்சிருக்கும் ங்குறது அப்பப்போ இந்த பட்டிக்காட்டானுக்கு மறந்து போயிடுது.” தன் பின்னந்தலையில் லேசாக தட்டியபடியே நக்கலாக சொல்லியவன், அங்கிருந்து எழும்பி செல்ல முயல,

“உக்காருங்க அத்தான்… சொல்ல வேண்டிய விஷயம் எதையுமே சொல்லாமல், எழும்பி போனா எப்பிடி?” என்றாள் சுபாஷிணி. வார்த்தைகளோ கொஞ்சம் அழுத்தமாகத் தான் வந்தது.

மனைவியின் பேச்சில், “என்ன?” என்பது போல சேனாதிபதி பார்க்க,

“அதான்… அந்த பொண்ணு அனு யாரு? எதுக்கு அவ ராத்திரி இங்க வந்து அப்பிடி பிஹேவ் பண்ணினா? நீங்க அவளை எங்க கூட்டிட்டு போனீங்க? இதையெல்லாம் சொல்லவேயில்லையே நீங்க?” என்றவளின் குரலில், இப்போது நீ எல்லாம் சொல்லியே ஆகவேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது.

 கணவன் வந்த நேரத்திலிருந்து, தான் அறிந்து கொள்ள விரும்பிய விஷயத்தை தவிர்த்து மற்ற விஷயங்களைப் பேச, பொறுமையாக கேட்டுக் கொண்டவளுக்கு, அவன் எதையுமே சொல்லாமல் கிளம்பி செல்ல முயலவும், பொறுமை கரை உடைத்து விட்டது.

மனைவியின் வார்த்தைகளில், அவளை வியப்பாக பார்த்த சேனாதிபதி, “நான் வந்து இவ்வளவு நேரமும் நீ கேக்காததால, உனக்கு அது தேவையில்லாத விஷயமோன்னு நினைச்சிட்டேன். அதான் சொல்லலை” என்று தோள்களைக் குலுக்க,

“ஏன்? கேக்காமலேயே நீங்க சொல்லுவீங்கன்னு நான் நினைச்சிருக்கலாம்ல” என்றாள் சுபாஷிணி பளிச்சென்று.

இப்போது மெச்சுதல் பார்வையொன்றை மனைவி மீது வீசிய சேனாதிபதி, “எங்க ஐஜி பொண்ணு தான் அனு. பிஏ பைனல் இயர் பண்ணுறா” என்றான், மறுபடியும் நாற்காலியில் வாகாக அமர்ந்தபடி.

“இதே அப்பார்ட்மெண்ட்ல க்ரௌண்ட் ஃப்ளோர்ல தான் இருக்கு அவங்க வீடு. தூத்துக்குடி தான் எங்க ஐஜி க்கு சொந்த ஊர். பெர்ஸ்னலா அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ரொம்ப நேர்மையான மனுஷன் ங்குறதால எனக்கும் அவரைப் பிடிக்கும். அதனால, நான் ஃபீரியா இருக்கும் போது, சார் கூப்பிட்டா அவங்க வீட்டுக்கு போவேன். அப்பிடித்தான் எனக்கு அனு அறிமுகம். அவளும் என்னைப்போல சோஷியாலஜி தான் படிக்கிறா. அதனால சப்ஜெக்ட் பத்தி பேசிக்குவோம். அவ்வளவு தான் எங்களுக்குள்ள பழக்கம்.”

“ஆனா…” சரளமாக சொல்லிக்கொண்டே வந்த சேனாதிபதியிடம், இப்போது லேசான தயக்கம் வந்து ஒட்டிக்கொள்ள, சிலநொடிகள் மௌனமாக இருந்துவிட்டு மறுபடியும் பேச ஆரம்பித்தான்.

“ஆனா, எங்க சாருக்கும் அவரோட மிஸர்ஸ்ஸுக்கும் என்னை மருமகனா ஆக்கிக்கணும்னு ஆசை இருந்திருக்கும் போல. அவங்களோட ஆசையை, அனுவை வச்சிகிட்டே அடிக்கடி பேசியிருக்காங்க. அந்த பொண்ணும் அதைக் கேட்டு கேட்டு மனசுக்குள்ளே வீணான ஆசையை வளத்திருக்கா. அது நடக்காதுன்னு தெரிஞ்சதும், இங்க வந்து அப்படி பிஹேவ் பண்ணியிருக்கா” என்றவன், மனைவியின் கண்களை நேருக்கு நேராக சந்தித்து,

“இந்த விஷயம் எல்லாம் எனக்கு எப்பிடி தெரியும்னு உனக்கு தோணலாம். நேத்து, வெளியே போகலாம்னு அனுகிட்ட சொல்லிட்டு, அவங்க வீட்டுக்கு தான் அவளைக் கூட்டிட்டு போனேன். அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேருக்குமே நடந்ததை நான் சொன்னதும் ரொம்ப ஷாக்கிங்கா இருந்தது. அப்போதான் இவ்வளவு விஷயத்தையும் அவங்க சொன்னாங்க.” என்றவன், “இப்போ அனு யாரு? அவளை நான் எங்க கூட்டிட்டு போனேன் ங்குறது மிஸர்ஸ் சேனாதிபதிக்கு தெளிவாகிடிச்சா?” என்றான் கிண்டலாக.

 பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊருக்கு செல்கிறேன் என்று ஐஜியிடம் சொல்லிவிட்டே சேனாதிபதி ஊருக்கு கிளம்பியிருந்ததால், பெரியவரின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்க மனிதர் சேனாதிபதிக்கு அழைக்க, அவனும் தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை அவரிடம் சொல்லிவிட்டான்.

அதிர்ந்து போன மனிதர், வீட்டில் விஷயத்தை சொல்லிவிட, ஏமாற்றம் தாளாத அனு, சேனாதிபதி வந்தது தெரிந்ததும் வாழ்க்கையில் முதன்முறையாக பியர் அடித்து விட்டு சேனாதிபதியின் வீட்டுக்கே வந்து விட்டாள்.

“எல்லாம் சரிதான் சார்… இதோ இருக்கிற அந்த பொண்ணோட வீட்டுல அவளைக் கொண்டுபோய் விட்டுட்டு வரவா, உங்களுக்கு இவ்வளவு நேரம்?” கணவனின் கிண்டல் தொனியிலேயே சுபாஷிணியும் கேட்க, அவளின் குரலும், கேள்வியும் உசுப்பி விட்டது சேனாதிபதியை.

“உனக்கு என்னைப் பற்றி, என் வேலையைப் பற்றி என்ன தெரியும்? எல்லாரையும் போல இராத்திரி முழுக்க கமந்தடிச்சு படுத்து தூங்கிட்டு, ஹாயா காலைல எழும்பி வேலைக்கு போற ஆள் நான்னு நினைச்சிகிட்டியா? ஹாங்… நாங்கல்லாம் நேரங்காலம் பாக்காம வேலை பாக்குறதால தான், நீங்க எல்லாம் நிம்மதியா வீட்டுல தூங்குறீங்க, தெரிஞ்சிக்கோ.” சத்தத்தை சற்றும் உயர்த்தாமல், கர்ஜிக்கும் குரலில் சேனாதிபதி சொல்ல, ஆடிப்போனாள் சுபாஷிணி.

  இரவிலும் கணவனுக்கு பணிநேரம் இருக்கும் என்ற எண்ணமே அவளுக்கு இல்லை. அவள் மனதில் பதிந்திருந்தது எல்லாம், ஏதேதோ குழப்பங்களும், அதை தீர்த்து வைக்க கணவனும் அருகில் இல்லாமல் தவித்திருந்த நேற்றைய இரவு பொழுதுகளுமே. அந்த ஆதங்கத்தில் கேட்டவளுக்கு இப்போது உண்மை புரிய,

“சாரி த்தான்… சாரி… சாரி… எனக்கு இப்பிடி தோனலை. அதான் யோசிக்காம கேட்டுட்டேன்” என்று மன்னிப்பை வேண்டினாள்.

“ம்ப்ச்ச்… உங்க ஜெனரேஷன் பசங்க எல்லாம் எதைத்தான் யோசிச்சு பேசுறீங்க. எல்லாருக்கும் அவங்க அவங்க சுகம் தான் முக்கியம். வேற யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் யோசிக்கிறதே இல்லை. இல்லைன்னா அற்ப சுகத்துக்காக ட்ரக் யூஸ் பண்ணிட்டு நட்டநடு ரோட்டுல கூண்டோடு கைலாசம் போவாங்களா முட்டாப்பசங்க” என்றான் கோபமாக.

“என்ன த்தான் சொல்லுறீங்க?!”

ம்ம்… சுரக்காய்க்கு உப்பில்லைன்னு” என்றவன், அதிர்ந்து போன சுபாஷிணியின் முகத்தைப் பார்த்து, நேற்றிரவு நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான்.

அனுவை அவள் பெற்றோர் வசம் ஒப்படைத்து விட்டு, அரைமணி நேரத்தில் எல்லாம் அவள் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தான் சேனாதிபதி.

அனுவின் பெற்றோர் சொல்லிய விஷயங்கள் அவனுக்கு அதிர்ச்சியளித்தாலும், அதில், தான் செய்வதற்கு ஏதும் இல்லை என்பதால், மௌனமாக அங்கிருந்து வெளியேறியிருந்தவனுக்கு வீட்டுக்கு செல்லவும் ஒரு தயக்கம்.

அதுவும், யாரை மறந்துவிட்டேன் என்று இத்தனை நாளும் இறுமாந்திருந்தானோ, அவளின் நொடிநேர அருகாமையில், தன் சுயம் தொலைக்கப் பார்த்த செயலை அவனாலேயே மன்னிக்க முடியாமல் போகவே, அப்போதைக்கு வீட்டுக்கு செல்வதை தள்ளிவைத்தவன், இரவுநேர ரோந்துப் பணிக்கு சென்று விட்டான்.

பொதுவாக, மாநகரங்களில் குற்றம் அதிகமாக நடைபெறும் நேரம் என்று போலீஸாரால் கருதப்படும் மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு நேரம் வரை போலீஸ் ரோந்து பலமாகவே இருக்கும். எனவே தனது வாகனத்தில் எப்போதும் போல சேனாதிபதி சாலையில் உலா வர ஆரம்பித்து விட்டான்.

ஏற்கனவே மூன்று நாட்கள் அவன் விடுமுறை என்பதால், ஆங்காங்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களைப் பார்த்து பேசி, நிலவரங்களை அறிந்து என்று தனது பணியில் மூழ்கிப் போனவன், ஒரு மேம்பாலத்தில் சீரான வேகத்தில் தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டதால் சாலைகளும் பரபரப்பின்றி அமைதியாகவே இருந்தது. அப்போது அந்த அமைதியை கிழிப்பது போல, சேனாதிபதிக்கு எதிர்புறத்திலிருந்து அதிவேகமாக சாலையில் பறந்து வந்த வாகனம் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில், பாலத்தின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு செங்குத்தாக கீழே விழ, அதிர்ந்து போனான் சேனாதிபதி.

ஏனென்றால் அவன் சென்று கொண்டிருந்தது ஒருவழிச்சாலையில். அப்படியிருக்கும் போது எதிரே வாகனம் வருவதே விதியை மீறித்தானே. இதில் கட்டுப்பாடில்லா வேகம் வேறு.

நல்லவேளை, கீழே இருந்த சாலையில் அப்போது வேறு வாகனங்கள் ஏதும் செல்லவில்லை. இல்லையென்றால் விபத்து பெரியதாக இருந்திருக்ககூடும்.

அந்த இடத்திலேயே தனது வாகனத்தை ஒதுக்கி நிறுத்தி, ஆம்புலன்ஸுக்கு அழைத்துச் சொல்லிய சேனாதிபதி, விபத்து நடந்த காருக்கருகே வரும் போதே காரிலிருந்த நான்கு இளைஞர்களில் இரண்டு பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருந்தார்கள்.

மீதமிருந்த இருவரின் நிலையோ சொல்லும்படியாக இல்லை. காரின் இடிபாடுக்குள் மாட்டிக் கொண்ட அந்த இருவரையும், ஆம்புலன்ஸில் வந்தவர்களின் உதவியோடு கடும்பிரயத்தனம் செய்து மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், “அளவுக்கதிகமா ட்ரக்ஸ் யூஸ் பண்ணியிருக்காங்க சார்” என்றார் மருத்துவர்.

அணையப் போகும் நேரத்தில் பிரகாசமாக எரியும் தீபம் போல, அந்த இளைஞர்களும், பப் க்கு சென்றதாகவும், போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாகவும் இறுதி வாக்குமூலத்தை கொடுத்து விட்டு, தங்கள் நண்பர்கள் சென்ற இடத்திற்கே சென்று விட்டார்கள்.

அதன் பிறகு செய்ய வேண்டிய நடைமுறைகள் எல்லாவற்றையும் செய்து முடித்து, வீட்டுக்கு வருவதற்குள் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது சேனாதிபதிக்கு.

கணவன் கூற கேட்டவளுக்கே, உடம்பெல்லாம் ஆடிப்போயிற்று. ‘அப்படியென்றால் நேரடியாக களத்தில் இருந்தவனுக்கு எப்படி இருக்கும்’ என்று எண்ணம் தோன்ற, கணவனின் முகத்தை ஆழ்ந்து நோக்கினாள் சுபாஷிணி.

அவன் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த போராடுவது நன்றாகவே தெரிய, “இப்பிடித்தான் போய்ச்சேரணும் ங்குறது அவங்க விதி போல. நீங்க வீணா டென்ஷன் ஆகாதீங்க அத்தான்” என்றாள் கணவனின் கைகளை ஆறுதலாக தட்டிக்கொடுத்தபடி.

“இது விதியில்ல சுபா.. சதி. ஒரு தனிப்பட்ட கூட்டம் தங்களோட பேராசைக்காக இப்பிடி யங்ஸ்டர்ஸை குறிவச்சி போதைப்பொருளை விக்குறாங்களே… அவங்க தான் இந்த மாதிரி அநியாயச் சாவுக்கெல்லாம் பதில் சொல்லணும். தப்பு செய்யுறவனைவிட தப்பு செய்ய தூண்டுறவன் தானே முதல் குற்றவாளி. ட்ரக்ஸ் சப்ளை பண்ணுறவங்களை எல்லாம் பாத்த இடத்துலயே விசாரணை இல்லாமல் சுட்டுக் கொல்லணும்னு சட்டம் வரணும், அப்போதான் இந்த மாதிரி அநியாய சாவும் குறையும்.”

தன் ஆறடிக்குமாக நிமிர்ந்து ரௌத்திரமாக சொல்லியவன், சட்டென்று தணிந்து, “சுபா… உன்கிட்ட எனக்கு ஒரு சின்ன ரிக்வெஸ்ட்” என்று அவள் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டு கேட்க, “சொல்லுங்க த்தான்” என்றாள் சுபாஷிணி.

“இல்ல… நேத்து நடந்ததுல அனுவோட தப்பு என்ன இருக்கு சொல்லு? என்னைக் கேட்டா, எதுவுமே முடிவாகாம, மகளை வச்சிகிட்டு கல்யாணத்தைப் பற்றி பேசுன அவ பேரெண்ட்ஸ்ஸோட செயல்தான் தப்புன்னு சொல்லுவேன். ஆனா, தண்டனை அனுவுக்கு. எனக்கும் இப்படியொரு சூழ்நிலை உன்னால வந்தப்போ, நான் என் ஏமாற்றம், கோபம் எல்லாத்தையும் படிப்புமேல காட்டினேன். இப்பிடி ஒருத்தனை வேண்டாம்னு சொன்னோமேன்னு, வாழ்க்கைல ஒருநொடியாவது நீ நினைச்சு வருத்தப்படணும்னு வெறித்தனமா படிச்சேன்.”

“ஆனா இந்த பொண்ணு தன்னோட ஏமாற்றத்தை போதை மூலமா கடக்க பாக்குறாளோன்னு எனக்கு தோனுது. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கையே தடம்புரண்டு போகுமோன்னு நினைக்கும் போதே எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”

“நேற்று அவ நடந்துகிட்டதை வச்சி பாக்கும்போது, உன்னை அவ தனியா சந்திக்கிறமாதிரி சிச்சுவேஷன் வந்தா, உங்கிட்ட கூட முரட்டுத்தனமா பிஹேவ் பண்ண சான்ஸ் இருக்கோன்னு தோனுது. அப்படி ஏதாவது நடந்தா, தயவு செய்து நீ ரீஆக்ட் பண்ணிடாத. எனக்காக கொஞ்சம் பொறுமையா போ. முடிஞ்சா அவகூட நல்ல ப்ரெண்ட்ஷிப்பை மெயின்டெயின் பண்ணி, நிசர்சனத்தை அவளுக்கு புரிய வை” என்றவன்,

“நான் என்ன சொல்லவர்றேன்னு உனக்கு புரியுதா சுபா?” என்றான்…