விடாமல் ஒலித்த அலைபேசியின் சத்தத்தில் விழிப்பு தட்டியது சுபாஷிணிக்கு. கண்களைத் திறக்காமலேயே படுக்கையில் தன்னருகே கைபேசியை தேடியவளின் கை பொத்தென்று கீழேவிழ, தான் படுத்திருப்பது சேனாதிபதியின் வீட்டு ஹாலில் கிடக்கும் சோஃபாவில் என்ற ஞாபகம் அப்போது தான் வந்தது அவளுக்கு.
நெருப்பாக காந்திய கண்களை பிரயத்தனப்பட்டு திறந்தவள், பக்கத்தில் இருந்த மோடாவில் நேற்றிரவு தான் வைத்த போனை எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தாள்.
திரையில் தாயின் எண்களைக் காணவும் அவசரமாக எழும்பி அமர்ந்து, அலைபேசியை காதுக்கு கொடுத்தவள், “சொல்லுங்க ம்மா” என்றபடியே சோம்பலாக கொட்டாவி ஒன்றையும் வெளியேற்ற,
“போனைக்கூட அட்டண் பண்ணாம, அப்பிடி என்ன தான் தூக்கம் சுபா உனக்கு?” என்று அதிருப்தி நிறைந்த குரலில் கேட்டார் விசாலி.
“நேத்து ராத்திரி தூங்க நேரமாகிடிச்சி ம்மா, அதான்…” யதார்த்தமாக சொல்லியபடியே ஹால் சுவரில் கிடந்த எலக்ட்ரானிக் கடிகாரத்தை சுபாஷிணி பார்க்க, காலை மணி ஆறு முப்பது என்று சொல்லி, தனது கடமையை அது செவ்வனே செய்தது.
“சேனாதிபதியும் தூக்கமா?” விசாலியின் குரலில் இப்போது சட்டென்று ஒரு மென்மை வந்து ஒட்டிக் கொண்டது.
“அவங்க நேத்து…” தன்னை மறந்து பேசத் தொடங்கிய சுபாஷிணிக்கு, நேற்றிரவு அந்த பெண் அனு வந்ததும், சேனாதிபதி மேல் விழுந்தபடி பிதற்றியதும், அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற தன் கணவன், இதோ இப்போது வரை வீடு திரும்பவில்லை என்பதுவும் ஞாபகத்திற்கு வர, அதை தாயிடம் சொன்னால் இப்போதே பூகம்பம் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இருந்ததால், “அத்தான், காலைலயே எழும்பி வெளியே போய்ட்டாங்க. நான் தான் அசந்து தூங்கிட்டேன் ம்மா…” என்றாள் உண்மையை மறைத்து.
“ஓஹ்…” என்று இழுத்த விசாலி, “ஒன்னும் பிரச்சினை இல்லைல்ல… சேனாதிபதி உங்கிட்ட நல்லபடியா நடந்துகிட்டாப்ல தானே” என்று மெதுவாக கேட்கும் போதே,
“எவடி இவ, பொண்ணு கிட்ட என்ன, யாதுன்னு தெளிவா கேப்பான்னு பாத்தா, இவல்ல புதுப்பொண்ணு மாதிரி நெளியிறா!” என்று நொடிக்கும் அப்பாம்மையின் குரலும், அதைத்தொடர்ந்து,
“எனக்கு தான் கேக்கத்தெரியலைல்ல, என்னை கொறை சொல்லுறதுக்கு பதிலா உங்கம்மாவே சுபாகிட்ட கேக்கலாம்ல அண்ணி” என்ற தாயின் குரலும் சுபாஷிணியின் காதில் விழுந்து, அங்கே மூன்றாவது நபராக சேனாதிபதியின் தாயும் தனது அத்தையுமான தமிழரசியும் இருக்கிறார் என்பதை அவளுக்கு சொல்லியது.
“அதை நான் மொதல்லயே செய்துருக்கணும். போனை இப்பிடி கொண்டா.” அடாவடியாக மருமகளிடம் பேசிய பூரணிஅம்மாவின் கைகளுக்கு இப்போது போன் சென்றிருக்க, “மக்கா சுபா… நல்லாயிருக்கியா கண்ணு… எம்பேரன்… அதான் உன் அத்தான், உன்னை நல்லா பாத்துகிட்டானா செல்லம்” என்று பூரணி கேட்க,
“ஹைய்யோ… என்னா விவரமா உங்கம்மா கேட்டுட்டாங்க அண்ணி” என்று விசாலி நக்கலடித்து சிரித்தார். அவரோடு இணைந்து கொண்டார் தமிழரசி.
இத்தனை நேரம் அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்த சுபாஷிணிக்கு, மூன்று பெண்களும் சேர்ந்து தன்னிடம் எதைப் பற்றி அறிந்து கொள்ள முயல்கிறார்கள் என்பது ஒருவழியாக புரிந்து போனது.
‘அந்த அழைப்புமணி மட்டும் அந்நேரத்திற்கு அடிக்கவில்லை என்றால், இவர்கள் எதிர்பார்ப்பது நேற்று நடந்திருக்கும் தானே’ என்ற எண்ணத்தில், சுபாஷிணியின் பேச்சு தடுமாற, அடுத்த பத்தாவது மாதமே பேத்தி, தன் பேரனின் மகவை பெற்றுத்தரப்போவது போல, எதிர்புறத்திலிருந்து கற்பனைக் கோட்டையை கட்ட ஆரம்பித்து விட்டார் பூரணி.
“சரி மக்கா. மொதல்ல தலைக்கு குளிச்சிக்கோ. அப்புறம் சோர்வாயிருந்தா இன்னைக்கு வேலைக்கு போகவேண்டாம்” என்று என்னவெல்லாமோ பூரணி சொல்ல, அவருக்கு பின் பேசிய தமிழரசியும், அவர் பங்குக்கு மருமகளுக்கு அறிவுரைகளை அள்ளி தெளித்துவிட்டே போனை வைத்தார்.
தன்வாழ்க்கை எந்த திக்கில் பயணிக்கிறது என்று நேற்றிரவில் இருந்து கணக்கிட முடியாமல் குழம்பி போய் அமர்ந்திருக்கும் சுபாஷிணிக்கு, தன் வீட்டு பெண்கள் மூவரின் பேச்சையும் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.
நேற்றிரவு கணவனின் எதிர்பாராத இதழணைப்பில், புயலில் சிக்கிய கொடியாக தடுமாறிய சுபாஷிணி, கணவனையே கொழுகொம்பாக பற்றிக் கொண்ட நேரத்தில்தான், அழைப்பு மணி அடித்தது. அதைத் தொடர்ந்து, ஏதோ தவறு செய்தவன் போல மனைவியிடமே மன்னிப்பு கேட்டபடி சேனாதிபதி அங்கிருந்து நகர, உடைந்தே போனாள் சுபாஷிணி.
ஆமாம்… “சாரி…” என்ற சேனாதிபதியின் ஒற்றை வார்த்தை சுபாஷிணியை சுக்கல் சுக்கலாக உடைத்தே போட்டிருந்தது. ‘என் செயல்தான் கட்டுப்பாடோடு இருந்தவனை தன்வசம் இழக்கச் செய்ததா? அப்படியானால் நான் தவறா?’ என்ற எண்ணம் பெண்ணவளின் மனதை கரையானாக அரிக்க ஆரம்பிக்க, ஏதோ திக்குத்தெரியாத பாலைவனத்தில் மாட்டிக்கொண்டது போல, நா வறண்டு தாகம் எடுக்க ஆரம்பித்தது.
அதற்கு மேலும் அங்கேயே இருந்தால் தாகத்தால் செத்து போய்விடுவது போலிருக்கவே, தண்ணீர் குடிக்க கிச்சனுக்கு செல்வதற்காக அறையை விட்டு வெளியே வந்தாள் சுபாஷிணி.
ஆனால், செத்திருந்தாலும் பரவாயில்லை, அறைக்குள்ளேயே இருந்திருக்கலாம் என்று தோன்ற வைத்தது ஹாலில் அவள் கண்ட காட்சியும், கேட்ட வார்த்தைகளும்.
அதிலும் “அனு” என்று அந்த பெண்ணை, கணவன் பெயர் சொல்லி அழைக்கவும், உலகமே தட்டாமாலையாக சுழல ஆரம்பித்தது சுபாஷிணிக்கு. பின்னே, திருமணம் முடிந்து முற்றுமுழுதாக மூன்று நாட்கள் முடிந்த பின்னரும் கூட, சுபா என்று தன்னைப் பெயர் சொல்லி அழைக்காத கணவன், தன்முன்னே மற்றொரு பெண்ணை பெயர் சொல்லி அழைக்கும் போது, யாருக்காக என்றாலும் வலிக்கத் தானே செய்யும்.
கூடவே, “என்னை ஏமாத்திட்டியே கமாண்டர்” என்ற அந்த பெண்ணின் வார்த்தைகளில், கமாண்டரா? என்று ஒருகணம் யோசித்த சுபாஷிணியின் மனது, “செல்லப் பெயர் போல” என்று கண்டுகொண்டதோடு,
‘இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தார்களோ? அப்பாம்மையின் பிடிவாதத்தால், வேறுவழியில்லாமல் அத்தான் என்னை திருமணம் செய்துகொண்டாரோ? அதனால் தான் இந்நேரத்திற்கு தைரியமாக வந்து, என்னை ஏமாற்றிவிட்டாய் என்று இந்த பெண் சொல்கிறாளோ?’ என்றும் சிந்தித்தது.
“என்ன பேசுற அனு? மொதல்ல நீ ஸ்டெடியா நில்லு.” லேசாக அதட்டியபடி அனுவை தன்மேலிருந்து பிரித்தெடுத்து, நேராக நிற்கவைக்க முயன்றான் சேனாதிபதி.
“நானும் ட்ரை தான் பண்ணுறேன், ஆனா, முடியலையே கமாண்டர்” என்று உதடு சுழித்த அனு, “ஆனா, இதுகூட நல்லாதான் இருக்கு” என்று கண்சிமிட்ட,
“ம்ம்… லைட்ட்டா… பியர் சாப்டேன் கமாண்டர்.” வலதுகை பெருவிரலையும் சுட்டுவிரலையும் ஒன்றாக இணைத்து அசடாக சிரித்தபடி அபிநயம் பிடித்தவள், சேனாதிபதியின் அதிருப்தி நிறைந்த முகத்தைக் கண்டு, “நானும் என்னோட லவ் ஃபெயிலியரை டைஜிஸ்ட் பண்ணணும்ல கமாண்டர்” என்று கொஞ்சம் குரலை உயர்த்தினாள்.
அதேநேரம், அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற சுபாஷிணியும் அவள் கண்களில் விழ, சேனாதிபதியின் தோளை உரிமையாக தட்டிய அனு, “அந்த பொண்ணை தான் நீ… நீ.. கல்யாணம் பண்ணிகிட்டயா கமாண்டர்?” என்று சுபாஷிணியை நோக்கி விரல் நீட்டி நடுங்கிய குரலில் கேட்டவள், அவளை முறைத்து பார்த்தபடி, “என்னைவிட அப்படி என்ன பெரிய அழகின்னு அவளை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க கமாண்டர்?” என்றாள் குழறிய வார்த்தைகளில்.
‘அனுவின் வார்த்தைகளில் அத்தான் திடுக்கிட்டு போனாரோ?’ என்று இப்போது எண்ணத் தோன்றியது சுபாஷிணிக்கு. ஆனால், அப்போதோ, பொத்தென்று அருகில் இருந்த நாற்காலியில் தடுமாறி அமர்ந்தாள் சுபாஷிணி.
“எல்லாருக்கும் எக்ஸ்ஸாம்பிளா இருக்க வேண்டிய பொண்ணு, நீயே இப்பிடி செய்யலாமா? வா… நாம உன் வீட்டுக்கு போலாம்.” அனுவின் கேள்விக்கு எதுவும் பதிலோ, விளக்கமோ கொடுக்க முயற்சி செய்யாமல், அவளை அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றான் சேனாதிபதி.
“மாட்டேன்… அங்க வரமாட்டேன்… அங்க என்னை ஏமாத்துன அம்மாவும் அப்பாவும் இருக்காங்க.. நான் அங்க வரமாட்டேன்” என்று பிடிவாதமாகச் சொல்லியவள், “வேணும்னா நாம ரெண்டு பேரும் எங்கயாவது போய்டலாமா கமாண்டர்?” தன் கண்களை பெரிதாக விரிக்க முயற்சி செய்தபடி சேனாதிபதியிடம் கேட்டாள் அந்த அனு.
“ஓகே… வா போலாம்…” கீ ஸ்டாண்டில் தொங்கிக் கொண்டிருந்த தன்னுடைய அலுவலக கார் சாவியை எடுத்தபடியே உடனே சம்மதம் சொல்லிய சேனாதிபதி, “கதவை நான் வெளிய இருந்து பூட்டிக்கிறேன். நீ படுத்துக்கோ சுபா” என்றபடியே அந்த அனுவோடு வெளியே செல்ல முயல, சட்டென்று நின்ற அந்த பெண்,
“இவ… இவ… உனக்கு வேண்டாம் கமாண்டர். திருப்பி அனுப்பி வச்சிடு, ஓகேயா?” என்றவள், சுபாஷிணியைப் பார்த்து, “இந்தா பொண்ணு… நாங்க திரும்பி வரும்போது நீ இங்க இருக்கக்கூடாது. புரிஞ்சுதா?” என்றாள் அதட்டலாக. அந்தோ பரிதாபம்… அவள் வார்த்தைகள் கூட அவள் சொல்பேச்சு கேக்காமல் அவளோடு சேர்ந்து நர்த்தனம் ஆடியது.
நடந்தவை அத்தனையையும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்த சுபாஷிணிக்கு, அனுவைப்பற்றி எந்தவிதமான விளக்கமும் தராமல், போகும் இடத்தைப் பற்றியும் சொல்லாமல், அனுவோடு வெளியே சென்ற கணவனின் செயல் பேரதிர்ச்சியாகவே இருந்தது.
சரி… வெளியே சென்றவன், திரும்பி இந்த வீட்டுக்கு வந்து தானே ஆகவேண்டும், அப்போது கேட்டுக் கொள்ளலாம், இல்லையென்றால் அத்தானே வந்து சொல்வாராக இருக்கும்’ என்று சுபாஷிணி காத்திருந்தது தான் மிச்சம். நள்ளிரவு கடந்தும் சேனாதிபதி வரவேயில்லை.
இப்போது பதட்டத்தோடு பயமும் சேர்ந்து கொள்ள, தகப்பனின் ஃபோனிலிருந்து எப்போதோ எடுத்து சேமித்து வைத்திருந்த கணவனின் எண்ணிற்கு அழைத்தே விட்டாள்.
அவனோ, போனை எடுத்து, “சொல்லுங்க… யார் பேசுறீங்க?” என்று கேட்கவும், ‘சிறுவயதிலிருந்தே என்னை நேசிப்பதாக சொல்லியவனுக்கு, என் அலைபேசி எண்ணை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் கூடவா இல்லை?’ என்ற எண்ணம் எழ, ஏமாற்ற உணர்வு மனம் முழுவதும் வியாபித்து நின்றது சுபாஷிணிக்கு.
என்றாலும், தன் ஏமாற்றத்தை மறைத்து, “எங்க இருக்கீங்க அத்தான்? எப்போ வருவீங்க?” என்றாள் அமைதியாக.
மனைவியின் கேள்வியில் சில வினாடிகள் மௌனமாக இருந்த சேனாதிபதி, “நான் வர லேட்டாகும் சுபா. எனக்கு வெயிட் பண்ணாம நீ தூங்கு” என்றவன், அவளிடமிருந்து பதில்மொழி வருவதற்கு முன்பே அழைப்பைத் துண்டித்திருந்தான்.
புதிய சூழல், யாருமில்லா தனிமை, தன் கணவனின் நடவடிக்கைகள் என்று எல்லாம் சேர்ந்து சுபாஷிணியை மிரட்ட, தூக்கம் அவளிடமிருந்து விலகியே நின்றது.
அதுவும், “நாங்க வரும்போது நீ இங்க இருக்க கூடாது” என்று அதட்டலாக அந்த பெண் அனு சொல்லியும், அவளைக் கண்டிக்காமல், அவளோடு வெளியே சென்ற கணவனின் செயலும், இப்போது தனக்கு அடுத்து பேச வாய்ப்பு தராமல் அழைப்பை துண்டித்த கணவனின் அவசரமும், சுபாஷிணியிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க, தூங்கும் மனநிலையில் சுத்தமாக அவள் இல்லை.
வேறுவழியில்லாமல் ஹாலை தன் காலால் அளந்தவளின் கண்களில் அங்கே ஷெல்பில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் விழ, அதனருகே சென்று நோட்டம் விட்டாள்.
அங்கே இருந்தவை எல்லாம் ஆங்கிலத்தில் இருந்த துப்பறியும் வகையைச் சார்ந்த நாவல்கள். ஆங்கிலம் பேசக்கூட தெரியாது என்று சில வருடங்களுக்கு முன்னால் ரம்யாவால் கேலி செய்யப்பட்டவன், இன்று ஆங்கில நாவல்களை படிக்கிறான் என்றால், அதற்கு பின்னால் இருந்த சேனாதிபதியின் முயற்சியை, அந்நேரத்தில் கூட சுபாஷிணியால் மெச்சிக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.
‘நல்லகாலம்… அன்னைக்கு ரம்யா சொன்னது எல்லாத்தையும் நான் அத்தான்கிட்ட வந்து, லூஸு மாதிரி கொட்டலை’ என்ற எண்ணம் தன்னையறியாமலேயே சுபாஷிணியிடம் வந்து சென்றது.
ஒருகட்டத்தில் நடந்து, நடந்து கால்கள் சோர்ந்து விட, ஹாலில் கிடந்த சோஃபாவின் கை வைக்கும் திண்டில் தலையை வைத்து காலைநீட்டி படுத்தவள், தன்னை மறந்து எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.
நேற்று நடந்தவற்றை மனக்கண்ணில் ஓட்டி முடித்தவள், ‘ஒருவேளை நான் தூங்கி கொண்டிருந்த போது கணவன் வந்திருப்பானோ’ என்ற நப்பாசையில் அறைக்குள் எட்டிப் பார்க்க, அங்கே அவன் இல்லை.
என்ன செய்வது என்று தெரியாமல், சோர்ந்து போய் மறுபடியும் சோஃபாவில் வந்து சுபாஷிணி படுத்த நேரம், வெளியே இருந்து கதவு திறக்கும் சத்தம் கேட்கவும், தலையைத் திருப்பி வாசலைப் பார்த்தாள்.
சேனாதிபதி தான் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான். உள்ளே வந்தவனின் கால்கள் மனைவியை ஹாலில் எதிர்பார்க்காததால் லேசாக தயங்கி, பின் கிச்சனை நோக்கி நகர்ந்தது. சுபாஷிணியின் பார்வையோ அவனுக்கு பின்னால் யாரும் வருகிறார்களா? என்று தேடியது.
“ப்ரஷ் பண்ணலைன்னா பண்ணிட்டு வா சுபா, காஃபி குடிக்கலாம்.” வாங்கி வந்திருந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பை பற்ற வைத்தபடியே கிச்சனிலிருந்து குரல் கொடுத்தான் சேனாதிபதி.
சுபாஷிணிக்கும் காலைநேர அந்த காஃபி மிகவும் தேவைபட்டதாக இருக்கவும், தன் பேக்கிலிருந்த டூத்ப்ரஷ், பேஸ்ட் எடுத்து பல்துலக்கி கொண்டவள் வேகவேகமாக சமையலறைக்குள் வந்தாள். மனம் முழுவதும் கணவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் குவிந்து கிடந்தது.
அதற்குள் பாலை காய்ச்சி முடித்திருந்த சேனாதிபதி, “எனக்கு பால் போதும். இதுல காபி பௌடரும், டீத்தூளும் இருக்கு. உனக்கு எது தேவையோ போட்டு குடிச்சுக்கோ, நான் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்று கிச்சன் செல்ஃபில் இருந்தவற்றை மனைவிக்கு கைகாட்டிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
கணவன் தன்னிடம் பேசும் போது அவன் முகத்தையே பார்த்திருந்தவளுக்கு, அவன் கண்கள் சிவந்து கலங்கியிருந்த விதமே, இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை என்பதைச் சொல்லியது.