“ம்ம்… நம்ம வடக்கு தெரு பாலனோட பொண்ணு நர்ஸ் தான். இப்படின்னு, விஷயத்தை சொல்லி கூப்பிட்டா மகளை பாலன் அனுப்பி வைப்பான்” என்றார் பரந்தாமன்.

“ஓ… அப்பிடியா! ரொம்ப சந்தோஷம். அப்போ நான் நாளைக்கு காலைல சென்னைக்கு கிளம்பலாம்னு நினைக்கிறேன் மாமா” என்றவன், சுபாஷிணியிடம் திரும்பி, “நீயும் வர்றதா இருந்தா, காலையில ரெடியாகி நில்லு” என்றான் தகவல் சொல்லும் விதமாக.

“என்னது? நாளைக்கே கிளம்பணுமா? நான் விருந்தெல்லாம் முடிச்சி, அடுத்த வாரத்துல சீர் பொருட்களோட நாமளே சென்னைல கொண்டு விட்டுட்டு வரணும்னு நினைச்சேனே” என்று வாய்விட்டு அரற்றிய விசாலி, “என்னங்க… அடுத்த வாரம் போலாம்னு சொல்லக் கூடாதா உங்க தங்கச்சி பையன்கிட்ட” என்று கணவனை உதவிக்கு அழைத்தார்.

“உங்க பொண்ணை எப்போ வேணும்னாலும் அனுப்புங்க மாமா. ஆனா, என்னால இதுக்கு மேல லீவ் எடுக்க முடியாது.” மனைவியின் வார்த்தைகளில் தன் முகம் பார்த்த மாமனிடம் பளிச்சென்று சொல்லிய சேனாதிபதி,

“ஹாங்… இன்னொரு முக்கியமான விஷயம் மாமா. இந்த சீர், அது இதுன்னு ஒத்தபொருள் கூட இங்க நம்ம வீட்டுக்கோ, இல்ல சென்னைக்கோ வரக்கூடாது. மீறி வந்தா, அப்படியே தூக்கி நான் வெளிய வச்சிடுவேன். அப்புறம் நீங்க வருத்தப்படக்கூடாது” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டு கைகழுவ எழும்பினான்.

கணவனோடு உடன் எழும்பிய சுபாஷிணி, “எனக்கும் முக்கியமா முடிக்க வேண்டிய அக்கவுண்ட்ஸ் இருக்கு ப்பா. அதனால நானுமே அத்தான் கூட நாளைக்கு கிளம்புறேன்” என்றாள்.

சொல்லியபடி, மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் மாமனின் வீட்டில், காரில் வந்து இறங்கினான் சேனாதிபதி.

முந்தைய நாள் இரவில் தானே காரில் சென்று பாட்டி பூரணியை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்திருந்தான் சேனாதிபதி. ட்ரைவர் ராஜையும் காலையில் ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு கிளம்பி வரும்படி பணித்திருந்தவன், இதோ திட்டமிட்டபடி மனைவியை அழைத்து செல்வதற்காக மாமன் வீட்டில் வந்து இறங்கியாயிற்று.

உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாட்டிக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி, அவர் கையால் நெற்றியில் திருநீறும் வாங்கிக் கொண்ட சேனாதிபதி, தன் சொந்தங்கள் சூழ்ந்து வழியனுப்ப மனைவியோடு காரில் ஏறினான்.

நடந்த திருமணம் உள்ளத்தில் புதிய பொறுப்பை ஏற்படுத்தியிருந்ததே தவிர, மனதளவில் பெரிய மாற்றத்தை எதுவும் அவனில் ஏற்படுத்திவிடவில்லை.

ஒரே மாற்றமாக, ஊருக்கு வரும்போது போல் அல்லாமல், திரும்பி போகும்போது காரின் பின்னிருக்கையில் மனைவியோடு அமர்ந்தான் சேனாதிபதி.

அதுவே, பெண்ணவளின் மனதில் நம்பிக்கை விதையைத் தூவ, உற்சாகமுடனே கணவனோடு தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினாள் சுபாஷிணி.

கார் மாதவபுரத்தை விட்டு வெளியே வந்து பிரதான சாலையில் ஏறவும், வேகமெடுத்தது. அஞ்சுகிராமத்துக்கு சற்று முன்னே தனது நண்பர்கள் மூவரும் சாலையோரம் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டு நிற்பதைக் கண்டான் சேனாதிபதி. ட்ரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கியவன், மாதவனின் தோளில் ஓங்கி அடித்தபடி, “டேய்… நீ இன்னும் ஊருக்கு போகாமல் இங்க என்னடா பண்ணுற?” என்றான் கேலியாக.

“அது… சிஸ்டரைப் பாத்துட்டு போகலாம்னு தோணிச்சு.. அதான் கிளம்பலை” என்ற மாதவனின் குரலில், ‘கணவன் காரிலிருந்து இறங்கவும், தானும் இறங்குவதா? வேண்டாமா?’ என்று குழம்பி போய் உட்கார்ந்திருந்த சுபாஷிணி சட்டென்று காரின் கதவை திறந்து கொண்டு இறங்கினாள்.

சுபாஷிணி காரிலிருந்து இறங்கவும், லேசாக அவளருகே நகர்ந்த கைலாஷ், “ஹாய் சிஸ்டர், நான் கைலாஷ். என்னை உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். அது கார்த்திக், மாதவன். நாங்க மூனு பேரும் சேனாதிபதியோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்” என்று சேனாதிபதியை எதிர்பாராமல் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள, “உங்களை நல்லாவே ஞாபகம் இருக்கு ண்ணா” என்றவள், மற்ற இருவரையும் பார்த்து, “ஹாய் அண்ணா” என்றாள் புன்னகையோடு.

“ஹாய் மா…” என்று பதிலுக்கு இருவரும் சிரிக்க, தன் கையிலிருந்த கவரை சுபாஷிணியை நோக்கி நீட்டி, “வாங்கிக்கோ மா” என்றான் கார்த்திக். தயங்கினாள் சுபாஷிணி.

“வேறொன்னுமில்ல ம்மா… நம்ம ஊரு ஸ்பெஷல் நேந்திரங்காய் சிப்ஸ்ஸூம், கொஞ்சம் பாக்கரி ஐட்டமும் தான். பயப்படாம வாங்கிக்கோ” என்றான் கார்த்திக் உரிமையாக.

கார்த்திக்கின் செயலில் என்ன செய்வது என்று புரியாமல் கணவனின் முகத்தை சுபா பார்க்க, “வாங்கிக்கோ” என்பது போல கண்களாலேயே பதில் சொன்னான் சேனாதிபதி. நன்றி சொல்லி வாங்கி கொண்டாள் சுபாஷிணி.

தங்கள் நண்பனுக்கும், அவன் மனைவிக்குமிடையே மிக இயல்பாக கண்களாலேயே நடந்த பரிபாஷையில், எல்லாமே கூடிய சீக்கிரம் சரியாகும் என்ற நம்பிக்கை பிறந்தது அந்த நண்பர்களுக்கு.

“ஓகே டா. நெக்ஸ்ட் டைம் நம்ம ஃபேமிலியோட மீட் பண்ணுறோம். இப்போ கிளம்புங்க” என்று சந்தோஷத்தோடு நண்பர்கள் விடை கொடுக்க, சென்னையை நோக்கிய அவர்கள் பயணம் மீண்டும் ‌தொடங்கியது.

பயணம் முழுக்க சுபாஷிணியிடம், தேவை தவிர ஒரு பேச்சில்லை சேனாதிபதிக்கு. மதிய உணவிற்கு, காஃபி குடிக்க, கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ள, சாலையோரம் கிடைத்த தரமான பழங்களை வாங்க என்று எடுத்துக் கொண்ட நேரம் போக, சரியாக ஒன்பது மணியளவில், அந்த கார் சேனாதிபதியின் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்தது.

சேனாதிபதியும், சுபாஷிணியும் தங்கள் பயணப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு இறங்கினார்கள். அவர்களோடு இறங்கிய ட்ரைவர் ராஜ், “குடுங்க சார், நான் கொண்டு தரேன்” என்று சேனாதிபதியிடம் கூடுதலாக முளைத்திருந்த பழம் நிறைந்த பைகளுக்காக கையை நீட்டினார்.

“வெறும் ஃப்ரூட்ஸ் மட்டும் தான் ராஜ். நானே கொண்டு போய்டுவேன். நீங்க ட்ராவல்ஸ்ல கொண்டு போய் வண்டியை விட்டுட்டு, பில்லை வாட்ஸ்அப்ல அனுப்புங்க. நான் கூகுள்பே பண்ணிடுறேன். அங்கயிருந்து வீட்டுக்கு ஆட்டோல போயிடுங்க” என்றவன் ஒரு தொகையை கொடுத்து, “இது இந்த ட்ரிப்புக்கான சேலரி” என்றான்.

“சார், நான் உங்க ட்ரைவர்… எனக்கெதுக்கு…”

“இது ப்யூர்லி பெர்ஸ்ஸனல் ட்ரிப் ராஜ். அதனால சேலரி நான் தர்றது தான் முறை.” ராஜை முடிக்கவிடாமல், அவர் கைகளில் பணத்தை வைத்து அனுப்பிய சேனாதிபதி, மனைவியிடம் திரும்பி, “வா….” என்றழைத்துவிட்டு நடந்தான். சுற்றும் முற்றும் பார்வையால் தூழாவியபடியே உடன் நடந்தாள் சுபாஷிணி.

மனைவியோடு லிப்டில் நுழைந்து, இரண்டாவது தளத்தில் இறங்கிய சேனாதிபதி, தன் வீட்டுக்கு முன் வந்து நின்று கதவைத் திறந்து, வா… என்பது போல தலையசைத்து மனைவியை உள்ளே அழைத்தான். முகமோ கொஞ்சம் இறுகிப் போய் தான் இருந்தது.

வீட்டுக்குள் வந்த சுபாஷிணிக்குமே அந்த சூழ்நிலையை கையாளத் தெரியாமல் ஒரு பதட்டம் வந்ததென்னவோ நிஜம். ஏதோ முதல்நாள் பள்ளிக்கு சென்ற குழந்தை திருதிருவென்று முழித்தது போல, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்ற சுபாஷிணி விழிகளால் வீட்டை அளந்தாள்.

அது, சமீபத்தில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடம் போல, அவள் கண்ணில் பட்டவரை, வீட்டின் உள்கட்டமைப்பு நவீனமாகவே இருந்தது.

மனைவியை உள்ளே அழைத்ததோடு தன் கடமை முடிந்தது என்பது போல, கையிலிருந்த பைகளை அங்கேயிருந்த இருக்கை மீது வைத்த சேனாதிபதி, தன் அறையை நோக்கி செல்ல, அங்கேயும் அவனை பின்தொடர்ந்தாள் அவன் மனைவி.

கட்டிலில் தன் பயணப்பையை இறக்கி வைத்து விட்டு நிமிர்ந்தவனின் கண்களில் தன் பின்னோடு தயக்கத்தோடு வந்து நின்ற மனைவி விழ, “என்ன?” என்பது போல கண்களைச் சுருக்கி பார்த்தான்.

“இல்ல… குளிக்கணும் த்தான்.” மெதுவாக பதில் வந்தது சுபாஷிணியிடமிருந்து.

“ஓ… ஆமால்ல…” என்று ஆள்காட்டி விரலால் நெற்றியை நீவிவிட்டவன், “பக்கத்து பெட்ரூம்ல பாத்ரூம் இருக்கு. நீ அதையே யூஸ் பண்ணிக்கோ” என்றுவிட்டு, அவ்வளவு தான் என்பது போல டவலோடு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

 ‘இப்படி அளந்து பேசுபவனிடம், என்காதலை தெரியப்படுத்தி, அவனோடு ஒரு காதல் வாழ்க்கையை எப்போது வாழப்போகிறேனோ தெரியவில்லையே?’ நினைக்கும் போதே மலைப்பாக இருந்தது சுபாஷிணிக்கு.

“இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு என்று தெரிந்து, இந்த கல்யாண வாழ்க்கைக்குள் நுழைந்த நீயே, ஒரேநாளில் இப்படி சோர்ந்து போகலாமா சுபா?’ என்று சுபாஷிணியின் மனது கேள்வி எழுப்ப, மனதை தேற்றிக்கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தாள் சுபாஷிணி.

நாள்முழுவதும் பயணம் செய்ததில் கசகசவென்று இருக்கவே, தலைக்கே குளித்தாள் சுபாஷிணி. குளித்து முடித்து சுபாஷிணி, உடைமாற்றி வெளியே வரும்போது, கிட்சனில் நின்றுகொண்டு வாங்கி வந்திருந்த பழங்களை லாவகமாக நறுக்கி சாலட் போடுவதில் மும்முரமாக இறங்கியிருந்தான் சேனாதிபதி.

தயங்கித் தயங்கி அவனருகே சென்றவள், “நான் ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா த்தான்?’ என்று கேட்க, “அவ்வளவு தான் முடிஞ்சது” என்று முணுமுணுத்தவன் ஒரு பௌலில் சாலட்டை எடுத்து, சுபாஷிணியின் கையில் கொடுத்து, “சாப்பிடு” என்றுவிட்டு தனக்கானதை எடுத்துக் கொண்டு ஹாலில் கிடந்த சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான். சற்று நேரத்திலேயே, தன்னைமட்டுமே நம்பி, தன் வாழ்க்கையில் நுழைந்திருக்கும் பெண்ணொருத்தியும் அங்கே இருக்கிறாள் என்ற எண்ணமின்றி, அலைபேசி அழைப்புகளில் பிசியாகிப்போனான் சேனாதிபதி.

அலைபேசி அழைப்பையும், கையிலிருந்த சாலட்டையும் ஒருசேர முடித்தவன் எழும்பி வரும்போது, சுபாஷிணியும் தாங்கள் வந்து சேர்ந்ததை தங்கள் பெற்றோருக்கு அழைத்து தெரியப்படுத்தியிருந்தாள். ஆனால், அவள் கையிலோ பழத்துண்டுகளில் பாதிக்கு மேல் அப்படியே இருந்தது.

அதை உறுத்து பார்த்தவன், தனது பௌலை கிட்சனில் சென்று கழுவி வைத்துவிட்டு வந்து, சுபாஷிணி குளிப்பதற்கு உபயோகப்படுத்திய அறையை சுட்டிக்காட்டி, “அந்த ரூமையே உன்னோட ரூமா நீ யூஸ் பண்ணிக்கோ” என்றான்.

  சொல்லிவிட்டு, ஹால் ஷெல்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகத்திலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு, தனதறைக்குள் நுழைந்தும் கொண்டான்.

சேனாதிபதியின் செயலில் அதிருப்தியே சுபாஷிணியின் மனதில். ‘இத்தனை வருடங்களுக்கு பிறகும் என் வார்த்தைகளின் தாக்கம் இன்னும் மனதில் இருக்குமென்றால், திருமணத்திற்கு கேட்கும் போது, முடியாது என்று ஒரேயடியாக மறுத்திருக்க வேண்டியது தானே’ என்று அவள் மனது முரண்டியது.

மறுகணமே, ஹேய் சுபா… சொல்லு… சொல்லு, அந்த சூழ்நிலையை பயன்படுத்தி, நீ உன் அத்தான் கையால தாலி வாங்கிக்க நினைக்கல?’ என்றும் அவளைக் கேள்வி கேட்டது.

“சரிப்பா… நான் ஆசைப்பட்டேன் தான். ஆனா, தனி ரூமை யூஸ் பண்ணிக்கோன்னு சொல்லி, அத்தான் என் ஆசைக்கு ஒரு பெரிய ஆப்பா வச்சிட்டு போய்ட்டாங்களே. ஏற்கனவே எங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினையை எப்படி தீர்க்குறதுன்னு தெரியாமத் தான், நான் முழிச்சிட்டு இருக்கிறேன். இதுல இந்த ஏற்பாடு, இன்னும் எங்களுக்குள்ள இடைவெளியை ஏற்படுத்தாதா?” தன் மனதோடு சுபாஷிணி பேச,

“இந்த விஷயத்துல உன் அத்தான் சொல்லை நீ கேக்கணும்னு நான் சொல்லமாட்டேன்” என்று கண்சிமிட்டியது அவள் மனது.

“அட… ஆமால்ல…” என்று உற்சாகமாக, கையிருந்ததை விறுவிறு என்று அள்ளி உண்ண ஆரம்பித்தவள்,

சாப்பிட்டு முடித்து, கணவனை போலவே பௌலை கழுவி வைத்துவிட்டு, லேசாக சாத்தி வைக்கப்பட்டிருந்த கணவனின் அறைக்கதவை திறந்துகொண்டு அவன் அறைக்குள் நுழைந்தாள். என்னதான் தைரியமாக முடிவெடுத்து விட்டாலும் சேனாதிபதியின் அறைக்குள் செல்ல சுபாஷிணியின் கால்களுக்கு கொஞ்சம் தைரியம் குறைவாகத் தான் இருந்தது.

 பெட்சைட் லாம்ப் வெளிச்சத்தில், படுத்தபடி புத்தகத்தில் மூழ்கியிருந்த சேனாதிபதி, கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வை வளையத்துக்குள் விழுந்தாள் சுபாஷிணி. அவளை யோசனையோடு பார்த்தவன், “இப்போ என்ன?” என்றான் கேள்வியாக.

“தூங்கணும்…” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் சுபாஷிணி.

“அதான் பக்கத்து ரூமை யூஸ் பண்ணிக்க சொன்னேனே?!” புரியாத மாணவிக்கு புரிய வைத்துவிடும் தொனியில் இருந்தது சேனாதிபதியின் குரல்.

“எனக்கு அங்க தூங்க வேண்டாம்.” மனதை மறைக்காமல் பதில் சொன்னாள் சுபாஷிணி.

“ஏன்?”

“இரண்டு பேரும் தனித்தனி ரூம்ல தான் இருக்கணும்னா, நாம எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்?” நேற்றுகாலை கணவனை சாப்பிடக் கூட அழைக்க பயந்த தானா, இப்படி தைரியமாக பேசுவது என்று, தன்னைக் குறித்தே ஆச்சரியமாக இருந்தது சுபாஷிணியிக்கு.

“ஓஹ்… அப்போ, பெட்டை கூட என்னோட ஷேர் பண்ணிப்பேன்னு சொல்லுறியா?” சிலநொடிகள் மௌனமாக அவளையே பார்வையால் துளைத்தவனிடமிருந்து கேள்வி, வில்லங்கமாகவே வந்தது.

“ஹ்ம்ம்… ஆமா.” சற்றும் யோசிக்காமல் பதில் சொல்லியவளின் பார்வையோ, நன்றாக படுக்கையின் மீது விழ, அளவில் பெரிதுமில்லாமல், சிறிதுமில்லாமல் இருந்த அந்த கட்டைபிரம்மச்சாரியின் கட்டில் கொஞ்சம் மிரட்டத்தான் செய்தது அவளை.

இருந்தாலும் முன்வைத்த காலை பின் வைக்க மனமின்றி, கட்டிலுக்கருகில் சென்று, “கொஞ்சம் தள்ளி படுங்க த்தான்” என்றாள் சுபாஷிணி.

அவனோ, சற்றும் அசைந்து கொடுக்காமல் அப்படியே படுத்திருக்க, மீதம் இருந்த இடத்தில் தன்னுடலை சாய்த்துக் கொண்டாள் சுபாஷிணி.

இப்போது, இருவருக்குமிடையே மெல்லிய நூலளவே இடைவெளி இருக்க, யார் புரண்டு படுத்தாலும் ஒருவரையொருவர் இடித்தும் கொள்ளும் அபாயமே அங்கு மேலோங்கி இருந்தது.

ஏதோ குருட்டு தைரியத்தில் கணவன் அருகில் படுத்த சுபாஷிணி கொண்ட தைரியம், எட்டுகாலில் தலைதெறிக்க அவளிடமிருந்து ஓட, இதயம் மத்தளம் வாசிக்கும் சத்தம் அருகில் படுத்திருப்பவனுக்கு கேட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் கண்களை இறுக மூடியபடி படுத்திருந்தாள் சுபாஷிணி.

ஆனால், அவள் கொண்ட அச்சம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல இருந்தது சேனாதிபதியின் செயல்.

ஆமாம்… சுபாஷிணியின் ஈரமான கூந்தல் முடிக்குள், தன் கை விரல்களை நுழைத்து, தன்புறமாக அவளைத் திருப்பிய சேனாதிபதி, “கல்யாணத்துக்கு பிறகு பெட்டை ஷேர் பண்ணிக்குறதுன்னா, என்ன அர்த்தம்னு தெரியுமா?” என்றான் சுபாஷிணியின் கண்களை கூர்ந்து பார்த்தபடி.

முற்றுமுழுதாக சுபாஷிணியை அச்சப்படுத்துவதற்காக மட்டுமே சேனாதிபதி அவ்வாறு செய்தது. கணவனின் எதிர்பாராத இந்த செயலில் சுபாஷிணியின் கெண்டை விழிகள் இரண்டும் பயத்தால் அங்குமிங்கும் துள்ள, செவ்விதழ்களோ மேலும் கீழுமாக பதில் சொல்ல முடியாமல் தந்தியடித்தது.

 அந்தோ பரிதாபம்… நங்கையின் நயனங்களையும், செவ்விதழ்களையும், அதில் ஒய்யாரமாக வீற்றிருந்த மச்சத்தையும், அவள் முகத்துக்கே ஒளிகூட்டுவதுபோல கண்சிமிட்டியபடி இருந்த மூக்குத்தியையும் மிக அருகில் கண்டவனுக்குள், பலவருடங்களாக ஒளிந்திருந்த காதலன் பலமாக விழித்துக்கொள்ள, செய்ய நினைத்த செயல் மறந்து மங்கையவள் பட்டிதழில் அழுத்தமாக தன் இதழ் பதித்தான் சேனாதிபதி.

முதலில் திமிறினாலும், கணவனின் இதழணைப்பில் கட்டுண்டு பெண்ணவள் இருக்க, கள்ளுண்ட வண்டாய், இதழமுதம் பருகியவன் மேலும் மேலும் அவளில் புதைய, அடுத்தகட்டத்திற்கு அவர்கள் நகரும் முன், கரடியாய் காலிங்பெல் கதறியது.

அழைப்புமணியோசையில் தன் சுயம் பெற்றவன், தன் கைகளுக்குள் அடங்கியிருந்த மனைவியின் முகம் விடுவித்து, துள்ளி விலகினான். தன் கேசத்தை இருகைகளாலும் அழுந்தக்கோதி தன்னை ஒருநிலைபடுத்திக் கொண்டவன், தன்னைப் பார்த்து பரிதாபமாக மலங்க மலங்க விழித்த மனைவியிடம், “சாரி…” என்று மொழிந்துவிட்டு வேகவேகமாக பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.

சுபாஷிணியின் நிலையோ சேனாதிபதியின் நிலையை விட படுமோசமாக இருந்தது. ‘தன்னை தூண்டிவிட்டு அதில் குளிர்காய நினைக்கிறாள் என்று தன்னைப்பற்றி தவறாக நினைப்பானோ?’ என்று எண்ணும் போதே அவளுக்கு தேகமெல்லாம் நடுங்கி, தொண்டை எல்லாம் வறண்டு போனது.

பாத்ரூமிலிருந்து வெளியே வந்த சேனாதிபதியின் முகமெங்கும், முத்துமுத்தாக தண்ணீர் துளிகள் இருக்க, டவலை எடுத்து துடைத்து விட்டு, அழைப்பது யார் என்று பார்ப்பதற்காக ஹாலுக்கு விரைந்து சென்றான். அதற்குமுன் பலதடவை அடித்து ஓய்ந்து விட்டது அழைப்பு மணி.

சேனாதிபதி கதவைத் திறந்த அடுத்த வினாடி, “என்னை ஏமாத்திட்டியே கமாண்டர்…” என்று உளறியபடி, இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த இளம் பெண்ணொருத்தி பொத்தென்று அவன் மார்பின் மீது பிடிப்பின்றி சாய்ந்தாள்.

“ஹேய் அனு… என்ன இது?” என்ற சேனாதிபதி, அந்தப் பெண் கீழே விழுந்துவிடாமல் சட்டென்று தன் கைகளால் பிடித்துக் கொள்ள,

 வறண்ட தொண்டைக்கு தண்ணீர் வார்த்துவிட்டு வரலாம் என்று, அறையை விட்டு வெளியே வந்த சுபாஷிணியின் கண்களில், அங்கு நடந்தது எல்லாம் தெளிவாக விழுந்தது…