அத்தியாயம் 06
சேனாதிபதியோடு வீட்டுக்குள் நுழைந்த ராகுலின் ஆர்ப்பாட்டமான குரலில், ஹாலில் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்த சுபாஷிணிக்கு மூச்சடைத்துப் போனது.
‘ஐயோ… அத்தானை பக்கத்துல வச்சிட்டே இந்த தம்பிப்பயல் என்ன காரியம் செய்யுறான்? இதனால நான் அவங்களை கூப்பிட மாட்டேன்னு சொன்னது அவங்களுக்கு புரிஞ்சிடாதா?’ என்று தவித்துப் போனவள், “எதுவும் சொல்லாதடா?” என்பது போல ராகுலிடம் கண்ணைக் காட்டினாள்.
ஆனால், அவனோ அதைக் கண்டுகொள்ளாமல், “நம்ம அத்தான்கிட்ட உனக்கு என்ன பயம் க்கா? ஹ்ம்ம்…” என்றான் பெரிய மனித தோரணையில்.
‘ஐயையோ… தம்பிப்பையன் தரமான சம்பவம் செய்துட்டானே.’ மனதிற்குள் அலறிய சுபாஷிணி, சுதாரித்துக் கொண்டவளாக தம்பிக்கு ஜாடை காட்டுவதை விட்டுவிட்டு “வாங்க த்தான்…” என்று வரவேற்பில் இறங்கினாள்.
ராகுலின் பேச்சிலும், சுபாஷிணியின் தடுமாற்றத்திலுமே, அவள் தன்னை அழைக்க மறுத்திருக்கிறாள் என்ற விஷயம் சேனாதிபதிக்கு புரிந்து போக, லேசாக தோள்களைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கியபடி ஏதோ முதன்முதலாக அந்த வீட்டுக்கு வந்தது போல, நின்றபடியே கண்களால் வீட்டை அளந்தான்.
மக்கள் இருவரின் சத்தத்தில் சமையலறையில் நின்றிருந்த விசாலியும் ஹாலுக்கு விரைந்து வந்து, “வா… வாங்க தம்பி, உட்காரு…ங்க” என்று ஒருமையும், பன்மையுமாக சேனாதிபதியை வரவேற்று தடுமாறினார்.
மகளின் திருமணத்திற்கு முன்னர், சட்டமாக சேனாதிபதியை பெயர் சொல்லியும், அவன், இவன் என்று ஒருமையிலும் அழைத்து வந்த விசாலிக்கு, சேனாதிபதி மகளின் கணவனான பின்பு அவ்வாறு அழைக்க முடியாமல் தயக்கம் ஒன்று நாவை கட்டிப்போட்டது. அது புரிந்தும், அந்த தளையை அகற்ற எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் அங்கே கிடந்த சோஃபாவில் அமர்ந்தான் சேனாதிபதி. உடன் அமர்ந்தான் ராகுல்.
“சும்மா பாத்துகிட்டே நின்னா எப்படி சுபா? தம்பிக்கு குடிக்க தண்ணீ கொண்டு வந்து குடு.” தனது தடுமாற்றத்தை மறைக்க மகளிடம் வேலை வாங்கினார் விசாலி.
ஏதோ தெரியாத வீட்டுக்கு முதன்முதலாக வந்திருக்கும் பாவனையை கணவனிடம் கண்ட சுபாஷிணிக்குமே மனம் வாடிப்போக, வேகமாக தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து சேனாதிபதியிடம் கொடுத்து, “தண்ணி குடிங்க த்தான்” என்றாள் மெல்லிய குரலில்.
அவனோ, தண்ணீர் பாட்டிலை வாங்கி தன்னருகே கீழே வைத்துவிட்டு, “மாமா எங்கடா, காணோம்?” என்று அருகே இருந்த ராகுலிடம் விசாரணையில் இறங்கினான்.
“அது… ஹாஸ்பிடல்ல இருக்கிற அத்தைக்கும், உங்க அம்மாவுக்கும் இட்லி ரெடி பண்ணி கொடுத்து விட்டேன். அதைக் கொண்டு போய் கொடுக்க போயிருக்காங்க.” கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தானே பதில் சொன்னார் விசாலி.
விசாலினியின் பதிலில், ‘இதெல்லாம் எப்போயிருந்து?’ என்ற பாவனையே சேனாதிபதியின் மனதில். அத்தகைய வரலாறுக்கு சொந்தக்காரர் தானே விசாலியும். அதனால் சேனாதிபதியின் மனதில் அப்படி எண்ணம் தோன்றுவதும் தவறில்லை தானே.
மேலும் சிறிதுநேரம் அப்படியே அமர்ந்து ராகுலிடம் அவன் படிப்பை பற்றி கல்லூரியைப் பற்றி என்று சேனாதிபதி பேச ஆரம்பிக்க, மடைதிறந்த வெள்ளமாக தன் கல்லூரி பிரதாபங்களை எடுத்துவிட ஆரம்பித்தான் ராகுல். பேச்சு இப்போதெல்லாம் முடிவது போலில்லாமல் தொடர்ந்து கொண்டே போகவே, தாயின் கண்ணசைவில், “அத்தானை மொதல்ல சாப்பிட கூப்பிடு ராகுல். அப்புறமா நீ பேசிக்கலாம்” என்று மெதுவாக சொன்னாள் சுபாஷிணி.
“ஹைய்யோ… ப்ரேக்ஃபாஸ்ட் க்குன்னு அத்தானை கூட்டிட்டு வந்துட்டு, நானே பேசிட்டு இருக்குறேன்ல…” என்று லேசாக வெட்கப்பட்ட ராகுல், “வாங்க த்தான் சாப்பிட்டுடலாம்” என்று அழைத்தபடி முன்னோக்கி செல்ல, அவன் பின்னோடு வந்த சேனாதிபதியும் சாப்பாட்டு மேஜை முன் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“நீயும் அத்தான் கூட உட்கார்ந்து, அவருக்கு கம்பெனி குடு டா” என்று அமராமல் நின்றிருந்த மகனிடம் சொல்லிய விசாலி, ஏற்கனவே சாப்பாட்டு மேஜையில் பரிமாறுவதற்கு ஏதுவாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவு பதார்த்தங்கள் அடங்கிய பாத்திரங்களை திறந்து பார்த்துக்கொண்டிருந்த மகளிடம், “நீயும் உட்கார்ந்து சாப்பிடு சுபா” என்றார்.
“இல்ல ம்மா… நான் அத்தானுக்கு பரிமாறிட்டே சாப்பிட்டுக்கிறேன்.” வந்த நேரத்திலிருந்து பெயருக்கு கூட தன்னிடம் புன்னகைமுகம் காட்டாத கணவனின் செயலில் மெலிதாக பதட்டம் சூழ பதில் சொன்னாள் சுபாஷிணி.
“ம்ப்ச்… கல்யாணம் முடிஞ்சு மொதமொதலா நம்ம வீட்டுல சாப்பிடுறீங்க. இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடுங்க டி.” சொன்னதோடல்லாமல் மகளின் தோள்களைப் பற்றி சேனாதிபதிக்கு அருகே கிடந்த நாற்காலியில் அமரவைத்த விசாலி, ஆளுக்கொரு தட்டு வைத்து பரிமாறவும் தயாரானார்.
முதலில், நெய் வழிய வழிய ஒரு கரண்டி பொங்கலை எடுத்து மருமகனின் தட்டில் விசாலி வைக்கவுமே, “இவ்வளவு ஆயிலியா நான் ஃபூட் எடுத்துக்கவே மாட்டேன், இட்லி இருந்தா குடுங்க” என்றான் சேனாதிபதி.
“பரவாயில்லை… இன்னைக்கு ஒருநாள் சாப்பிட்டா ஒண்ணுமில்ல.” சாதாரணமாக சொல்லிய விசாலி, இன்னொரு கரண்டி பொங்கலையும் எடுத்து சேனாதிபதியின் தட்டில் வைக்க,
“இட்லி இருந்தா குடுங்க. இல்லைன்னா, நான் எங்க வீட்ல போயே சாப்பிட்டுகிறேன்.” தன் முன்னால் இருந்த தட்டை லேசாக தள்ளியபடியே எழும்ப முயன்றான் சேனாதிபதி.
சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவன் முழங்கையை லேசாக பற்றி அமர வைத்த சுபாஷிணி, “அத்தான் தான் வேண்டாம்னு சொல்லுறாங்கல்ல ம்மா” என்று அதிருப்தி குரலில் முணுமுணுத்தபடியே, வேகமாக எழும்பி கணவன் முன் இருந்த தட்டை தன் முன்னே இழுத்து, தனக்காக வைத்திருந்த தட்டை அவனுக்கு முன்பாக நகர்த்தி, இட்லி இருந்த பாத்திரத்திலிருந்து இட்லியை எடுத்து பரிமாறியவள், “சாப்பிடுங்க அத்தான்” என்றாள்.
“ம்ஹூம்… கல்லத் தின்னாலும் டைஜிஸ்ட் ஆகுற வயசுல அது வேண்டாம் இது வேண்டாம்னு, எதுக்கு ஒதுக்கணும்?” முணுமுணுத்தபடியே சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் விசாலி. அவருக்கென்னவோ, தான் பரிமாறி, மருமகன் சாப்பிட மாட்டேன் என்று சொன்னது தன்னை அவமதித்தது போலவே இருந்தது.
“இன்னொரு இட்லி வைக்கட்டுமா அத்தான்? சாம்பார் இன்னும் கொஞ்சம் விடட்டுமா?” எதுவுமே நடவாதது போல சூழ்நிலையை இலகுவாக்க முயன்றபடி சுபாஷிணி கணவனுக்கு பரிமாற ஆரம்பிக்க, சாப்பிட ஆரம்பித்தான் சேனாதிபதி.
“அம்மாவுக்கு அவங்க செய்ததை எல்லாரும் சாப்பிட்டுட்டு நல்லா இருக்குன்னு சொல்லணும் அத்தான். அதான் இப்படி…” என்று சொல்லி சிரித்த ராகுல், “நீயும் உட்கார்ந்து சாப்பிடு க்கா” என்றான் சகோதரியிடம்.
“அத்தான் சாப்பிட்டு முடிக்கட்டும் டா. நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்.”
“இந்த மாதிரி நெய் சொட்டச் சொட்ட பொங்கல் இனிமேல் நீ எப்போ சாப்பிடப் போறியோ தெரியாது? அதனால கிடைக்கிற சான்ஸ்ஸை மிஸ் பண்ணாம சாப்பிட்டுரு.”
பொங்கலை ரசித்து உண்டபடி கேலி பேசிய தம்பியிடம், “ஏன்டா? நான் ஏன் சாப்பிட முடியாது?” என்று புரியாமல் கேட்டாள் சுபாஷிணி.
“இல்ல… அத்தான் ஆயில் ஃபூட் சாப்பிட மாட்டேன்னு சொல்லுறாங்களே. அப்புறம் நீ எப்படி சாப்பிட?” என்றான் ராகுல்.
இவ்வளவு நேரமும் அக்கா தம்பி வார்த்தையாடலுக்குள் தலையிடாமல் இருந்த சேனாதிபதி, “கல்யாணம் முடிஞ்சுது ங்குறதுக்காக தன்னோட ஆசையை, விருப்பத்தை எல்லாம், யாரும் யாருக்காகவும் விடணும்னு கட்டாயம் கிடையாது ராகுல்” என்றவன், சுபாஷிணியைப் பார்த்து, “உங்களால தான் என் அக்கா பொங்கல் சாப்பிட முடியாமல் போச்சுன்னு உன் தம்பி என்னைப் பார்த்து சொல்லுறதுக்கு முன்னாடி உக்காந்து சாப்பிட்டுரு” என்றான் ஒருமாதிரியான குரலில்.
இது ஒரு சாதாரணமான திருமணமாக இருந்திருந்தால் சேனாதிபதியின் வார்த்தைகளை நகைச்சுவையாக எண்ணி சிரித்திருக்கலாம். ஆனால் இப்போது அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாமல், சுபாஷிணி சாப்பிட அமர, கையில் வடைத்தட்டோடு சமையலறையிலிருந்து வெளியே வந்தார் விசாலி.
தாயின் கைகளிலிருந்த வடைகளைக் கண்டதும், ஏற்கனவே செய்துவைத்திருந்த கேசரியைப் பரிமாறவில்லை என்பது நினைவுக்கு வந்தது சுபாஷிணிக்கு. இருந்தாலும் இந்த பொங்கலையே சாப்பிட மறுத்தவன், நெய்யில் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் கேசரியை கண்டிப்பாக சாப்பிடப் போவதில்லை. ஆகவே, எதற்கு வம்பு?” என்று அமைதியாக இருந்தாள்.
ஆனால், ராகுலால் அவ்வாறு இருக்க முடியவில்லை. “ஹாங்… கேசரி எல்லாம் செய்யப் போறதா பேசிகிட்டீங்களே ம்மா, செய்யலயா?” என்று ஆர்வமாக தாயிடம் கேட்டான்.
“டேபிள்ல வச்சிருக்கனே… போட்டுக்கலையா நீங்க?!” என்று ஆச்சர்யமாக கேட்ட விசாலி, என்ன நினைத்தாரோ, அதற்கு மேல் அதைப்பற்றி எதையும் பேசாமல் கையிலிருந்த வடைத்தட்டை மகளருகே வைத்து, “வடை எண்ணெய் குடிக்காமல் நல்லா வந்திருக்கு சுபா. உன்மாப்பிள்ளைக்கு வேணுமான்னு கேட்டு, குடு” என்று சொல்லி விட்டு மகனுக்கு கேசரி பரிமாற தயாராகிவிட்டார்.
அம்மா சொல்லியது போல சுபாஷிணியும் சேனாதிபதியிடம் கேட்க, அவனும் என்ன நினைத்தானோ தெரியவில்லை ஒரேஒரு வடையை மட்டும் அனுமதித்தான்.
மகனுக்கு கேசரியை வைத்த விசாலி, அடுத்து மகள் பாத்திரத்திலும் பரிமாற, “இல்லல்ல… வேண்டாம் ம்மா” என்று அவசரமாக சொன்னாள் சுபாஷிணி.
“அதான் யாரும், யாருக்காகவும் தன்னோட ஆசையை தியாகம் பண்ண வேண்டாம்னு சொல்லியாச்சே… அப்புறம் என்ன?”
கேசரியை அடுப்பிலிருந்து இறக்கவுமே ஆவிபறக்க சாப்பிடத் துடிக்கும் மகள், வேண்டாம் என்று சொல்லவும், ஒரு ஆதங்கத்தில் தன்னை மறந்து சேனாதிபதி சொல்லிய வார்த்தைகளை சொல்லிவிட்டார் விசாலி.
உண்மையில், பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போன்று பளபளவென்று நாயக தோற்றத்தோடு திரைப்படக்கல்லூரியில் ஒரு பட்டமும் பெற்று நடிகனாவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த அண்ணன் மகனுக்கே, தன் மகளை திருமணம் செய்து கொடுக்க விசாலிக்கு ஆசை.
இவர்களின் பொருளாதார நிலை இறங்கவும், ஒருதாயாக மகளின் வாழ்க்கை மிரட்ட, தன் அண்ணன் பாண்டியனிடம் தன் ஆசையை சொல்லவும் செய்துவிட்டார் விசாலி.
அவரோ, “இல்ல விசாலி, ரஞ்சன் சினிமால ஹீரோ ஆன பின்னாடி தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கண்டிப்பா சொல்லிட்டான்” என்று நாசூக்காக தன் மறுப்பை சொல்லிவிட்டார்.
ஆனால், அது புரியாத விசாலி, “அதுக்கென்ன ண்ணா… இப்போ சிம்பிளா நிச்சயம் மாதிரி பண்ணிப்போம். அப்புறம் ரஞ்சனோட ஆசை நிறைவேறுன பிறகு கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றார் அப்பாவியாக.
“உம்மனசை காயப்படுத்திரக் கூடாதுன்னு நாங்க நாசூக்கா வேண்டாம்னு சொல்லுறது உனக்கு புரியலையா? இல்ல, புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியா விசாலி?” என்று காட்டமாக கேட்டார் பாண்டியனோடு உடனிருந்த அவர் மனைவி.
இதுவரை தன்னிடம் பேசியிராத ஒரு த்வனியில் அண்ணன் மனைவி பேசவும் மலைத்துப் போன விசாலி, “என்ன ண்ணி சொல்லுறீங்க?” என்று காற்றாகிப் போன குரலில் கேட்க,
“பின்ன என்ன விசாலி? எம்பையன் ஹீரோ ஆனதும், அவன் ரேஞ்சே தனியாகும். அவன் உயரத்துக்கு உன்னால சீர்செய்து உன்மகளை கல்யாணம் செய்து தரமுடியுமா? அட, அவ்வளவு ஏன்? நாங்க எங்க பொண்ணு ரம்யாவுக்கு செய்த அளவுக்காவது நகைநட்டு செய்து போட்டு, உம்பொண்ணை உன்னால அனுப்பதான் முடியுமா? முடியாதுல்ல… அப்போ இந்த கல்யாண ஆசையை இந்த இடத்திலேயே மறந்துட்டு உன் தகுதிக்கு தகுந்தாப்போல ஒருத்தனை உம்மகளுக்கு மாப்பிள்ளையாக்கு” என்றார் ஏளனமாக.
விசாலியின் அண்ணன் பாண்டியன், தன் மகளை நிதி நிறுவனம் வைத்திருக்கும் திருச்சியைத் சேர்ந்த சேகருக்கு அப்போது சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொடுத்திருந்தார். மகளுக்கு சீராக, அவள் உடலெங்கும் தங்கத்தாலே இழைத்து அனுப்பியிருந்தார்கள். அதில் பாதிக்குமேல் தன் கணவனை ஏமாற்றி சம்பாதித்தது என்று, ஏமாளி விசாலிக்கு இப்போது வரைக்கும் தெரியவேயில்லை.
தனக்கு நேர்ந்த அவமானத்தையும் இதோ இப்போது வரை கணவன் உட்பட யாரிடமும் விசாலி பகிர்ந்து கொள்ளவும் இல்லை.
அந்த நிகழ்விற்குப் பிறகு தான் ஐபிஎஸ் சேனாதிபதி விசாலியின் கண்களுக்கே தெரிந்தது. அவனும் தன் மகளிடமிருந்து ஒதுங்குவது போல அவர் உள்ளுணர்வு சொல்லவும், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகளின் திருமணத்தை சேனாதிபதியோடு நடத்திக் கொண்டார் விசாலி.
அதேநேரம், இப்போது வரைக்கும் சினிமாவில் சரியான வாய்ப்பு அமையாமல், திருமணம் முடிக்காமல் தான் இருக்கிறான் விசாலியின் அண்ணன் மகன் ரஞ்சன். அவன், திருமணம் மட்டும் தான் முடிக்கவில்லை. மற்றபடி எல்லாம்… எல்லாம் உண்டு அந்த மன்மதராஜனுக்கு.
காற்றுவாக்கில் அண்ணன் மகனின் லீலைகள் எல்லாம் விசாலியின் காதை எட்டியபோது, ‘நல்லவேளை எம்பொண்ணு தப்பிச்சிட்டா’ என்ற ஆசுவாசமே அந்த தாயிடம்.
தான் மறுத்தும், தாய் வைத்து விட்ட கேசரியை ஒதுக்க முடியாமல், ஆசையாக ஒருவிள்ளல் எடுத்து வாயில் வைத்த சுபாஷிணியின் ஓரவிழி பார்வை கணவனிடமே. அவனோ, வடை, கேசரி, பொங்கல் என்று கலந்து கட்டிக் கொண்டிருந்த ராகுலைப் பார்த்து, “இப்பிடி சாப்பிட்டா, இந்த வயசுலயே தொப்பைங்குற பெயர்ல வயிறு முன்னாடி வரத்தான் டா செய்யும்” என்றான் மைத்துனனின் புஷ்டியான உடம்பைப் பார்த்து.
கணவனின் வார்த்தைகளில், ‘அவன் தம்பியை மட்டும் தான் சொல்கிறானா? இல்லை தன்னையும் சேர்த்து தான் சொல்கிறானா?’ என்ற சந்தேகம் ஒன்று சுபாஷிணியிடம் எட்டிப் பார்த்தாலும், அதன் தலையில் தட்டி அடக்கியவள், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, கூச்ச நாச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பாட்டை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள். காரணம், அவளுக்குமே, ‘இதெல்லாம் இனி எப்போது கிடைக்குமோ?’ என்ற சந்தேகம் ஒன்று முளைவிட்டு அசுரவேகத்தில் வளர்ந்து நின்றது தான்.
“அடுத்த மூனு வருஷ ஹாஸ்டல் வாசத்துல, இன்னாப் போறேன்னு தொப்பை எல்லாம் கரைஞ்சே போயிடும் அத்தான். அப்புறம், நல்லா சாப்பிடு ராகுல்னு நீங்களே சொல்லுவீங்க பாருங்களேன்.” பதில் சொல்லியபடி இன்னும் ஒரு கரண்டி கேசரி கேட்டு வாங்கி உண்டான் ராகுல்.
“ம்க்கும்… இந்த ஒருவருஷ ஹாஸ்டல் வாசத்துல கரையாத தொப்பையா, இன்னும் மூனு வருஷத்துல கரைஞ்சிடப் போகுது” என்ற குரலில் அனைவரும் திரும்பி பார்க்க, அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார் அந்த வீட்டின் குடும்பத்தலைவர் பரந்தாமன். கைகளில் மருத்துவமனைக்கு உணவு கொண்டு போயிருந்த பை இருந்தது.
சாப்பாட்டு மேஜைக்கு அருகேவந்து, கையிலிருந்த பையை மனைவியிடம் கொடுத்தபடியே, “வா ப்பா சேனாதிபதி” என்று புன்னகையோடு வரவேற்றார் பரந்தாமன். எப்போதுமே அவர் மனதில் விகற்பமான எண்ணங்கள் இல்லாத காரணத்தால், வார்த்தைகளில் எந்தவிதமான தடுமாற்றமும் இன்றி மருமகனை வரவேற்க முடிந்தது.
“யூ ட்டூ அப்பா…” என்று தன்னிடம் சிணுங்கிய மகனுக்கு அருகே கிடந்த நாற்காலியில் அமர்ந்த பரந்தாமனிடம், புன்னகைமுகம் காட்டிய சேனாதிபதி, “காலைல டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தாங்களா மாமா? பாட்டிக்கு எப்பிடி இருக்குன்னு சொன்னாங்க?” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“ம்ம்… வந்தாங்க சேனா. நல்ல இம்ப்ரூவ்மெண்ட், அதனால, இனைக்கு நைட் எட்டு மணிக்கு போடவேண்டிய இன்ஜெக்ஷனை போட்டுட்டு டிஸ்ஜார்ஜ் பண்ணிக்கோங்க. அதுலயே ஒரு நாலு இன்ஜெக்ஷன் எழுதித்தரேன். அதை டெய்லி வீட்ல வச்சி போட்டுக்கோங்கன்னு சொல்லியிருக்கார்” என்று மருத்துவர் சொல்லியவற்றை ஒன்றுவிடாமல் மருமகனிடம் சொல்ல ஆரம்பித்தார்.
“வீட்ல வச்சா?! நம்ம ஊர்ல நர்ஸ் கிடைப்பாங்களா மாமா?”