அத்தியாயம் 05
வீட்டு மொட்டைமாடியின் கைப்பிடிச்சுவரில் சாய்ந்துகொண்டு, கைகளைக் கட்டியபடி நின்றிருந்தாள் சுபாஷிணி. முகமோ சிந்தனை வசப்பட்டிருந்தது.
காலையிலேயே குளித்து முடித்து தன் அரையடி கூந்தலை விரித்து காயவிட்டிருந்தவளின் நெற்றி வகிட்டில் துலங்கிய துளியூண்டு தாழம்பூ குங்குமமும், மணிக்கழுத்தில் பளிச்சென்று தொங்கிய தாலிக்கொடியும், அவளைப் பேரழகியாக்கி காட்டியது.
எத்தனை எளிதாகவும் சந்தோஷமாகவும் நடைபெற்றிருக்க வேண்டிய தன் திருமணம், இன்று தகப்பனின் தாயாரின் வற்புறுத்தலால் மருத்துவமனையில் நடந்ததை எண்ணி சொல்லொண்ணா வேதனையே அவள் மனதில்.
மனதிற்கு பிடித்தவனோடு திருமணம் நடந்தபிறகும், அந்த நிகழ்வை எண்ணி மகிழ்ந்து கொள்ள முடியாத அளவிற்கு அவள் செய்து வைத்திருந்த காரியம் கண்முன்னே விஸ்வரூபம் எடுத்து அவளை மிரட்டியது.
‘எல்லாம் அந்த ரம்யாவால வந்தது. அவ மட்டும் அன்னைக்கு என்னைப் பேசிப்பேசி குழப்பலைன்னா, நான் அத்தான்கிட்ட அப்படி பேசியிருக்கவே மாட்டேன்’ அன்றைய நாளின் ஞாபகத்தில் சுபாஷிணியின் மனது முணுமுணுத்தது.
‘சும்மா அவமேல பழிபோட்டு தப்பிச்சுக்கலாம்னு பாக்காத சுபா. அவ கிணத்துக்குள்ள குதின்னு சொன்னா, கண்ணை மூடிட்டு நீயும் குதிச்சிடுவியா என்ன? உனக்கு சொந்தமா யோசிக்கிற புத்தி கிடையாதா?’ என்று சுபாஷிணியின் நியாயமனம் அவளைக் கேள்விகேட்க, அதிலுள்ள உண்மையில் ஊமையானது அவள் நெஞ்சம்.
என்றாலும், மாமன்மகள் ரம்யாவோடு ஊருக்கு வந்திருந்த போது அவள் பேசிய பேச்சுக்கள் இப்போதும் அப்படியே ஞாபகம் வரத்தான் செய்தது சுபாஷிணிக்கு.
சுபாஷிணியைக் கவர்ந்தது போல ரம்யாவை அந்த கிராமம் கவரவில்லை. “அப்படி என்ன இருக்குதுன்னு இந்த ஊருக்கு வருஷாவருஷம் ஓடி வர்றீங்க டி” என்று சுபாஷிணியை கிண்டலடிக்கத்தான் செய்தாள் ரம்யா.
“அதென்ன அப்படி சொல்லிட்ட ரம்யா? இங்க உள்ள சுத்தமான பீச் ஒன்னு போதாதாதா எங்க ஊருக்கு அழகு சேர்க்க?” தன்னை விட இரண்டு வயது பெரியவளான மாமன் மகளிடம் தன் ஊரை விட்டுக் கொடுக்காமல் சுபாஷிணி பேசினாலும்,
“அங்க போனதும் எப்பவும் போல அந்த சேனாதிபதி பின்னாடி இறங்கி ஊர்சுத்தப் போகக்கூடாது. பேசாம வீட்டுக்குள்ள இருக்கணும்” என்று சொல்லியே ஊருக்கு அழைத்து வந்திருந்த தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்த சுபாஷிணிக்கு எப்போதும் போல் இல்லாமல் இம்முறை மாதவபுரம் போரடிக்க ஆரம்பித்திருந்தது.
“அதென்னடி சுபா, உங்க அப்பாம்ம உன் அத்த பையன் சேனாதிபதிக்கு நீதான் வருங்கால வைஃப் ங்குற மாதிரியே பேசுறாங்க. நீயும் அதை கண்டுக்காம இருக்குற?” என்று ரம்யா பேச்சைத் தொடங்க,
“மாமன் பொண்ணு, அத்தைப் பையன்னு இருந்தாலே இப்பிடித்தான் ஊர்ல பேசுவாங்க ரம்யா. அதெல்லாம் நீ பெரிசா எடுத்துக்காத” என்றாள் சுபா இயல்பாக.
உண்மையில் பெரியவர் பூரணியின் வார்த்தைகள் சுபாஷிணியின் மனதில் எந்த ஒரு எதிர்வினையையும் எப்போதுமே தோற்றுவித்தது இல்லை. எனவே அவளால் அந்த வார்த்தைகளை எளிதாக எடுத்துக் கொள்ள முடிந்தது.
“எனக்கென்னவோ அப்படி தோணலை சுபா. விட்டா அந்த பெருசு நாளைக்கே அந்த சேனாதிபதிக்கு உன்னை பிடிச்சு, கல்யாணம் பண்ணி வைக்கிற ஐடியால இருக்குற மாதிரி தான் தோனுது” என்ற ரம்யா,
“இந்த கருவாப்பயலை தான் நீ கல்யாணம் பண்ணனும்னு இருந்தா, இவ்வளவு அழகா நீ பொறந்ததே வேஸ்ட்ன்னு தான், நான் சொல்லுவேன்” என்றாள் முகத்தைச் சுழித்து.
சுபாஷிணியுமே கல்லூரியில் காலடி வைக்கும் போது கொஞ்சம் புஷ்டியாக இருந்த சேனாதிபதியைத் தானே கடைசியாக பார்த்தது.
பதின்மவயதிலிருந்து வாலிப வயதுக்கு சென்றிருந்த சேனாதிபதியின் உருவ மாற்றத்தை அவளும் இப்படி எதிர்பார்க்கவில்லை தானே. அதுவும் அதிகப்படியான வளத்தியோடும், அதிகப்படியான கருமையான நிறத்தோடும், மெலிந்து, உருவிவிட்டாற் போன்ற உடலமைப்போடும், சேனாதிபதியை அவள் எதிர்பார்க்கவேயில்லை.
அப்படி ஒரு உருவமாற்றத்தில் இருந்த அத்தை மகனைக் கண்டபோது, ‘என்ன இப்படி இருக்காங்க?’ என்ற எண்ணம் தான் சுபாஷிணியிடமும்.
ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத ரம்யா” என்றாள் யாரையும் விட்டுக் கொடுக்காமல்.
“ம்ம்… நீ இப்பிடியே அசால்டா இரு, என்னோட கெஸ்ஸிங் மட்டும் சரியா இருந்திச்சின்னா, அவன்… அது தான் அந்த சேனா…திபதி உங்கிட்ட வந்து லவ் ப்ரொப்போஸ் பண்ணப்போறான் பாரு. நீயும் என் அத்தை மகன் கேட்டுட்டாங்க. வேற என்ன சொல்லன்னு மண்டையை மண்டைய ஆட்டிட்டு வந்து நிக்கப்போற. இதுதான் நடக்கப்போகுது” என்றாள் ரம்யா, மட்டம் தட்டும் குரலில்.
ரம்யாவின் வார்த்தைகளில், ‘ஐயோ… அப்படி எதுவும் நடந்துவிடுமோ?’ என்ற சின்ன பயம் வந்து போனது சுபாஷிணியின் முகத்தில். அதை சரியாக படித்த ரம்யா,
“வேற ஒன்னும் வேண்டாம் சுபா. நம்ம ரஞ்சன் கூட, உன் அத்தைப் பையன் சேனாதிபதியைக் கம்பேர் செய்து பாரு. உனக்கே புரியும்” என்று தன் தமையனோடு சேனாதிபதியை ஒப்பீடு செய்தாள்.
ரம்யா சொல்லியது போல சென்னையில் பிறந்து வளர்ந்து, நாகரீகத்தில் திளைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன் மாமன் மகனோடு, அக்மார்க் கிராமத்து இளைஞனான சேனாதிபதியை தன் மனத்தராசில் நிறுத்தி சுபாஷிணி ஒப்பீடு செய்து பார்த்த போது, சேனாதிபதியின் பக்கம் வெகுவாக தள்ளாட, ரம்யாவை பரிதாபமாக பார்த்தாள் சுபாஷிணி.
“புரிஞ்சிகிட்டியா? இந்த மாதிரி ஆளைக் கல்யாணம் செய்தா ப்யூச்சர்ல நம்ம சொசைட்டில நடக்குற ஒரு சின்ன பார்டிக்கு கூட உன்னால அவனை கூட்டிட்டு போக முடியாது. அப்படியே போனாலும், ஏதோ அதிசயப் பிறவியைப் பார்த்தது போலவே உன்னைப் பார்த்து வைப்பாங்க. அந்த அவமானம் உனக்கு தேவையா? நான் சொல்லுறதை சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம் ப்பா” என்று நேரம் பார்த்து ரம்யா வேறு பயத்தைக் கிளம்பி விட்டாள்.
ஏற்கனவே மாதவபுரம் போரடித்துப்போய் கிடந்த சுபாஷிணிக்கு, ரம்யாவின் வார்த்தைகளில் ஒருவிதமான கிலி பிடித்து ஆட்ட, “நான் இப்போ என்ன செய்யுறது ரம்யா?” என்று நைந்து போனக் குரலில் அந்த ரம்யாவிடமே யோசனை கேட்டாள்.
“அப்படி மட்டும் அவன் உங்கிட்ட ப்ரப்போஸ் செய்தா, தயவு தாட்சண்யம் பாக்காம, முகத்துல அடிச்சா மாதிரி உன்னை எனக்கு பிடிக்கலைன்னு சொல்லிடு” என்று சொல்லிக் கொடுத்த ரம்யா,
“ஆளும், அவனும்… பெயராவது ஸ்டைலா இருக்கா? சேனாதிபதி, அமைச்சர்னு வச்சிகிட்டு. அதைவிட அவன் பேச்சு… சுத்தம்… சரியான பட்டிக்காடு, ஒரு இங்க்லீஷ் வார்த்தை கூட தெரியாது போல” என்று சத்தமாக முணுமுணுக்க வேறு செய்தாள்.
உண்மையில் சேனாதிபதியின் முகத்துக்கு நேரே, அவனைத் தான் மறுக்கும் ஒரு சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்று எண்ணியே சுபாஷிணி சேனாதிபதியிடமிருந்து ஓடி ஓடி ஒளிந்தது.
ஆனாலும் மாமரத்துக்கு அடியில் சுபாஷிணியை வளைத்து பிடித்ததும் அல்லாமல் தன் காதலையும் சேனாதிபதி சொல்லிவிட, படபடத்துப் போன சுபாஷிணி, எதைப் பற்றியும் யோசிக்காது தங்கள் இருவரின் நிறவேறுபாடைச் சுட்டிக்காட்டி அவனை மறுக்க, சேனாதிபதியின் முகம் ஏமாற்றத்தால் சுருங்கிப்போனது.
ஒருவர் காதல் சொல்லும் போது, மனதிற்கு பிடிக்கவில்லை என்றால் மறுப்பதற்கு ஆண், பெண் இருவருக்குமே சமஉரிமை இருக்கிறது தான். ஆனால் அவரின் உருவத்தை கேலி செய்து மறுப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது.
அந்த உண்மை சுபாஷிணிக்கு புரியும் முன்பே, சேனாதிபதி ரஞ்சனை அவள் கண்முன்னே அடித்து துவைக்க, எதற்காக என்று ஆராய முற்படாமல் அந்த ரஞ்சன் சொல்லியவற்றை மட்டுமே சிரமேற்கொண்டு சேனாதிபதியோடு கோபம் வளர்த்தாள் சுபாஷிணி.
எல்லாவற்றுக்கும் மேலாக சுபாஷிணியின் அம்மா வானுக்கும் பூமிக்குமாக குதித்து, அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மாதவபுரத்திலிருந்து அவர்கள் எல்லோரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்ப, சேனாதிபதி தன் மாமன் மகனை அடித்ததற்கு வேறு காரணம் எதுவும் இருக்குமோ என்று சிந்திக்க முடியாமலேயே போயிருந்தது சுபாஷிணிக்கு.
அதன்பிறகு சுபாஷிணியின் வாழ்க்கையில் என்னென்னவெல்லாமோ நடந்து, மாதவபுரத்தில் நடந்தவற்றை எல்லாம் யோசிக்க விடாமல் பின்னுக்கு தள்ளியிருந்தது.
கடைசியில், போரடித்துப் போன அந்த கிராமம் தான், தோல்வியில் துவண்டு வந்தவர்களுக்கு ஆறுதலாக சாய்ந்து கொள்ள தோள்களையும், இருக்க வீடும், உண்ண உணவும் கொடுத்தது.
எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, தன் குடும்பத்தோடு பரந்தாமன் ஊருக்கு வரும் போது சேனாதிபதி பணியின் நிமித்தம் வேறு இடத்தில் இருந்ததால், சுபாஷிணியோடு ஒரு சந்திப்பு அப்போது அவனுக்கு ஏற்படவில்லை. அதன்பிறகு ஓரிரு முறை ஊருக்கு வரும் போது சேனாதிபதி, சுபாஷிணி இருவருமே நேருக்கு நேராக சந்தித்திருக்கிறார்கள் தான். ஆனால் பேசுவதற்கு எந்தவிதமான முயற்சியையும் இருவருமே எடுத்தது இல்லை.
எல்லாம் சென்னை ஏசிபி யாக சேனாதிபதி பதவியேற்கும் வரையில் தான். அதன் பிறகு வந்த நாட்களில் சென்னையில் ரௌடிகளிடம் சேனாதிபதி காட்டிய அதிரடியிலும், பொதுமக்களிடம் அவனின் நேர்மையான அணுகுமுறையையும் கண்டு, காதல் கொண்டு அவனிடம் சறுக்கி விழுந்த சுபாஷிணியின் மனது, இதோ இந்த நிமிடம் வரை அவன் மீதான காதல் போதையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி எடுக்கவே இல்லை.
அதுவும் சென்னையில் ஒரே பகுதியில் இருப்பதால் காண நேரும் போது கூட, யாரோ போல தன்னை கடந்து செல்லும் சேனாதிபதியின் செயலே அவனுக்கு தன்மீது இருக்கும் கோபத்தின் அளவை சுபாஷிணிக்கு சொல்லாமல் சொல்லும்.
இருந்தாலும் அவன் மீது இருந்த காதல் பித்தம் மட்டும் பெண்ணவளுக்கு குறையவே இல்லை.
“ஓய்… எல்லார் முன்னாடியும் அத்தான் கையால ஜம்பமா தாலி வாங்கியாச்சு. இனி அவரைத் தனியா சந்திக்கணுமே… அப்போ என்ன செய்யப்போற?” சுபாஷிணியின் மனம் கேள்வி கேட்டு அவளைப் பயமுறுத்தியது.
தாலி அணிவிக்கும் போது தன் காதருகே சேனாதிபதி முணுமுணுத்த வார்த்தைகளும், அவன் முகபாவமும் வேறு சுபாஷிணியின் வயிற்றில் புளியைக் கரைத்து, புளியோதரையை திவ்யமாக கிண்ட முயற்சி செய்தது.
இருந்தாலும் அசராமல், “எவ்வளவோ பாத்தாச்சு. இது முடியாதா, என்ன?” என்று கழுத்தில் கிடந்த தாலிக்கொடியை முன்னும் பின்னுமாக இழுத்தபடியே வாய்விட்டு முணுமுணுத்தவளை, “சுபா… எங்க டி இருக்குற?” என்ற தாயின் அழைப்பு மாடியிலிருந்து கீழே இறங்க வைத்தது.
“கூப்பிட்டீங்களா ம்மா?” என்ற கேள்வியோடு தாயிடம் வந்து நின்றவளின் கைகளில் காஃபி கோப்பையைக் கொடுத்த விசாலி, “மொதல்ல இந்த காஃபியைக் குடிச்சிட்டு சேனாதிபதியை ப்ரேக்ஃபாஸ்ட்க்கு நம்ம வீட்டுக்கு கூப்பிடு” என்றார்.
“என்னது? அத்தானை சாப்பிட கூப்பிடணுமா? அதுவும் நானா?” சற்றும் யோசிக்காமல் சுபாஷிணியின் வாயிலிருந்து அதிர்ச்சியாக வார்த்தைகள் வந்து விழ,
“உம் புருஷனை நீ கூப்பிடாம, வேற யார் டி கூப்பிடுவா?” என்றார் விசாலி கேலி இழையோடிய குரலில்.
“அதெல்லாம் என்னால முடியாது ம்மா.” இத்தனை நேரம், மனதிற்குள் வீரவேசமாக பேசிய சுபாஷிணி வெற்றிகரமாக பின்வாங்க, மகளை யோசனையோடு பார்த்தார் விசாலி.
“அத்தானை சாப்பிட நம்ம வீட்டுக்கு கூப்பிடணும்… அவ்வளவு தானே ம்மா. இதோ… நான் போய் கையோடு கூட்டிட்டு வரேன்” என்று உற்சாகமாக கிளம்பினான் அங்கு வந்த ராகுல்.
****
காலைநேரத்து உடற்பயிற்சியும் நண்பர்களின் சந்திப்பும் இலகுவான மனநிலையில் சேனாதிபதியை வீடு திரும்ப வைத்ததோடு,
“ஏசிபி சாருக்கு ஒருநாள் கூட உடற்பயிற்சியை ஸ்கிப் பண்ணிடக்கூடாது இல்ல” என்று கேலி போல பெருமைபட்டுக் கொண்ட தந்தைக்கு, புன்னகை முகத்தை காட்டவைத்தது.
“பாட்டிக்கு இப்போ எப்படி இருக்கு சேனா?” நேற்றே வீட்டுக்கு வந்துவிட்டபடியால், இன்றுகாலை மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்திருந்த மகனிடமிருந்து மாமியாரின் தற்போதைய உடல்நிலையைப் பற்றிய தகவலை அறிந்து கொள்ள முற்பட்டார் வாசு.
“ம்ம்… நேத்து நாம அட்மிட் பண்ணும் போது இருந்ததைவிட பெட்டரா இருக்குற மாதிரி தான் எனக்கு தோணுது ப்பா.”
தகப்பனும் மகனும் இந்த ரீதியில் பேசிக்கொண்டிருக்கும் போது, “நேத்து ஒருநாள் தான், நான் ஊர்ல இல்லை. அதுக்கிடையில நீ என்ன காரியம்டே பண்ணிவச்சிருக்க? நம்ம புள்ளையோட கல்யாணத்தை பாக்கணுங்குற ஆசை எங்களுக்கெல்லாம் இருக்காதா என்ன?” என்று சத்தமாக கேட்டபடியே வந்து கொண்டிருந்தார் தியாகு.
தியாகு, சேனாதிபதியின் அப்பா வாசுவின் உடன்பிறந்த அண்ணன். சேனாதிபதியின் பெரியப்பா.
“அது…. வந்து ண்ணே… அத்தைக்கு உடம்புக்கு சரியில்லாமல் போச்சு… அதான் யாருக்கும் சொல்லாமல் உடனே கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு…” தமயனிடம் வார்த்தைகளை கோர்வையாக பேசமுடியாமல் தடுமாறினார் வாசு.
“ம்ம்… எல்லாம் உன் மதனி சொன்னா. நீ நேத்து தேடி இருந்தாலும் கூட, என்னை பிடிச்சிருக்க முடியாது. ஒரு சோலியா திருவனந்தபுரம் வரைக்கும் போய்ட்டு, ராத்திரி பத்து மணிக்கு மேலத்தான் நான் வீட்டுக்கே வந்தேன். ஆனாலும் உன் மதனியையாவது நீ கல்யாணத்துக்கு கூப்பிட்டுருக்கணுமா இல்லையா?”
கொஞ்சம் சூடாக பேசியவரின் பார்வை அடுத்தாற்போல் இருந்த தன் வீட்டு காம்பௌண்ட் சுவருக்கருகே நின்றிருந்த மனைவியின் மீது விழுந்தது.
வாசுவின் தாய் தகப்பனின் மறைவிற்குப் பிறகு, அவர்கள் பிறந்த வீடு பெரிய மகனுக்கு என்று முடிவானதில், அதன் அருகே, தன்பங்காக கிடைத்த நிலத்தில் வாசு புதிதாக வீடு கட்டிக் கொண்டார். அதனால் உடன்பிறந்த இருவரின் வீடுகளும் அருகருகிலேயே அமைந்து விட்டது.
அண்ணனைத் தொடர்ந்து பார்வையை வீசிய வாசுவுக்கு அண்ணன் மனைவி முகத்திலிருந்த கோபம் அப்பட்டமாக புரிந்தது. இவ்வளவுக்கும், நேற்றே வாசு நேரில் சென்று எந்த சூழ்நிலையில் சேனாதிபதியின் திருமணம் நடைபெற்றிருந்தது என்பதை விளக்கமாக அவரிடம் சொல்லிவிட்டு தான் வந்திருந்தார்.
இருந்தாலும், அவர்களின் எதிர்பார்ப்பிலும், கோபத்திலும் தவறு இல்லை என்பதனால் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார் வாசு.
“சரி… நடந்தது நடந்து போச்சு. இனி அதப்பத்தியே பேசி என்னவாகப்போகுது?” என்று அலுத்துக் கொண்ட தியாகு, “வர்ற புதன்கிழமை நல்ல நாளா இருக்கு. அன்னைக்கு ஒரு வரவேற்பு போல வச்சி நம்ம சொந்தகாரங்களுக்கெல்லாம் நம்ம புள்ளையோட கல்யாணத்தை முறையா சொல்லிடுவோம்.” குடும்பத்தின் மூத்தவராக அடுத்து என்ன என்று திட்டமிட்டார்.
அதுவரையில் அண்ணன் தம்பிக்கிடையேயான பேச்சில் மரியாதை நிமித்தம் தலையிடாத சேனாதிபதி, “என்னது? அடுத்த புதன்கிழமையா? அன்னைக்கு எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு பெரியப்பா. என்னால முடியாது.” என்று கிட்டத்தட்ட அலறவே செய்தான்.
சேனாதிபதியின் மறுப்பில் தியாகு அதிருப்தியாக தம்பியைப் பார்க்க, “அவன் வேலை அப்படி ண்ணே… உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்ல” என்றார் வாசு பவ்யமாக.
“ம்ம்.. எனக்கும் அது புரியுது…” என்று மீசையை நீவி விட்டபடியே யோசித்த தியாகு, “அப்போ நம்ம கோவில் திருவிழா முடிஞ்ச மறுநாள் வரவேற்பை வச்சிக்கலாம்” என்றார் முடிவாக.
பெரிய தகப்பனின் முடிவில் சேனாதிபதி தகப்பனைப் பார்க்க, ‘அதுக்கு தான் இன்னும் இரண்டு மாசம் இருக்கே. பாத்துக்கலாம்… இப்பவே எதுவும் சொல்லிடாத’ என்பது போல மகனைப் பார்த்த வாசு,
“கண்டிப்பா நீங்க சொல்லுற மாதிரியே செய்துடலாம் ண்ணே” என்றார் வேகமாக.
தன் முடிவை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்ட தம்பியின் செயலில் சமாதானமான பெரியதகப்பனை, அருமையான காஃபி ஒன்று கொடுத்து தன் பங்குக்கு குளிர்வித்தே அனுப்பினாள் மங்கையர்கரசி.
தியாகு சென்ற அடுத்த நிமிடம் பைக்கில் அங்கு வந்து இறங்கிய ராகுலிடம், “என்னடா?” என்று கேட்டான் சேனாதிபதி. ஏனோ அவனையும் மீறி குரல் சற்று அதட்டலாகத் தான் வந்து விழுந்தது.
ஆனால், அது எதையும் கண்டு கொள்ளாத ராகுல், “ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு, அம்மா உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க அத்தான்” என்று வந்த விஷயத்தை கூறினான்.
“அதெல்லாம் அண்ணா சாப்பிட அங்கெல்லாம் வராது. நான் எங்கண்ணனுக்கு சாப்பாடு ஆக்கி குடுப்பேன்.” அண்ணன் பதில் சொல்லுவதற்கு முன் அவசர அவசரமாக ராகுலுக்கு பதில் சொல்லியிருந்தாள் மங்கை.
“அத்தானை மட்டும் அம்மா கூட்டிட்டு வரச்சொல்லலை அண்ணி. உன்னையும் மாமாவையும் சேர்த்து தான் கூட்டிட்டு வரச்சொன்னாங்க. அதனால நீயும் சமைக்க வேண்டாம், வா… எங்க வீட்டுக்கு போலாம்.” அன்னை அழைக்கவில்லை என்றாலும் தன் வயதுக்கு மீறிய பக்குவத்தோடு மாமனையும், அவர் மகளையும் சேர்த்தே விருந்தாட அழைத்தான் ராகுல்.
“உவ்வ்வே… உங்கம்மா செய்யுற சாப்பாடை சாப்பிடுறதுக்கு பதிலா, நான் மூனுநாள் பட்டினியே கிடக்கலாம் டா. அதையெல்லாம் ஒரு சாப்பாடுன்னு எப்படித்தான் நீங்கெல்லாம் சாப்பிடுறீங்களோ?” வேண்டுமென்றே வாந்தி வருவதுபோல முகம் சுளித்தாள் மங்கை.
“அதெல்லாம் நீ செய்யுற சாப்பாட்டை விட, அம்மா செய்யுற சாப்பாடு நல்லா தான் இருக்கும் ண்ணி.” ராகுலும் வேண்டுமென்றே மங்கையிடம் வம்பு வளர்த்தான்.
“ஓ… அப்படியா ப்பா… இன்னைக்கு மத்தியானத்துக்கு சாளை மீனு கொழம்பு வச்சி பொரிக்கலாம்னு மீன் வாங்கி வச்சிருக்கேன். நீ வைக்கிற மீன்குழம்பை அடிச்சிக்க இந்த உலகத்துல ஒரு டிஸ்ஸே கிடையாதுன்னு வெக்கம்கெட்டு போய் வந்து நின்ன? மவனே கொலவிழும்…” கண்களை உருட்டி, ஆட்காட்டி விரலை நீட்டி, ராகுலை மிரட்டினாள் மங்கை.
“என் செல்ல அண்ணியில்ல… அறியாப்பையன் ஏதோ தெரியாம பேசிட்டேன்னு நினைச்சு மன்னிச்சு விட்டிடணும். அதவிட்டுட்டு சோத்துல எல்லாம் கைவைக்கப்படாது.” தன் இரண்டு காதுமடல்களையும் கைகளால் பற்றி மன்னிப்பை யாசித்தபடியே மங்கையோடு நடந்தான் ராகுல்.
தன் மகளின் துடுக்குத்தனமான பேச்சில், “அப்படி எல்லாம் பேசக்கூடாது டா பாப்பா” என்று சொல்லிக் கொண்டிருந்த வாசுவுக்கு இளையவர்கள் இருவரின் பேச்சிலும் செயலில் சிரிப்புதான் வந்தது. அதை மறைக்காமல் வாய்விட்டு சிரித்தவர், மகனின் முகத்தை பார்க்க, அங்கேயும் கூட சிரிப்பே.
“ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி போல எப்பவும் அடிச்சிகிட்டாலும், பாசக்காரங்க தான்” என்ற வாசு, “நீ குளிச்சிட்டு மாமன் வீட்டுக்கு போய்ட்டு வந்துடு ப்பா” என்றார் பொறுப்பான தந்தையாக.
வெளியே கொடியில் கிடந்த டவலை எடுத்து தோளில் போட்டபடியே, சரி என்று தலையாட்டினான் சேனாதிபதி.
அடுத்த பதினைந்தாவது நிமிடம் குளித்து முடித்து, காட்டன் பேண்ட், சர்ட் அணிந்து வந்த சேனாதிபதி, வண்டிச்சாவிக்காக ராகுலிடம் கையை நீட்ட, அவனிடம் சாவியை ஒப்படைத்த ராகுல், அத்தானின் பின்னால் பைக்கில் ஏறி அமர்ந்து, அவன் தோள்களை உரிமையாக பற்றியபடி, “மீன் குழம்பு முக்கியம் பிகிலு” என்று சொல்லி மங்கையைப் பார்த்து கண்சிமிட்டினான்.
மாமன் வீட்டுக்கும் தன் வீட்டுக்கும் இடைப்பட்ட இரண்டு தெரு தூரத்தை கண்சிமிட்டும் நேரத்துக்குள் கடந்திருந்த சேனாதிபதி, வண்டியை மாமன் வீட்டுக்கு முன் கொண்டு வந்து நிறுத்த, ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் வரை நிதானமாக அவன் உடன் நின்று, “வாங்க த்தான்…” என்று வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு சென்ற ராகுல், அங்கே ஹாலில் குட்டி போட்ட பூனையாக நடைபயின்று கொண்டிருந்த சுபாஷிணியிடம்,
“க்கா… அத்தானை கூப்பிடச் சொன்னதுக்கு ஏதோ பூச்சாண்டியை கூப்பிடச் சொன்னது போல அலறுன… என்னைப் பாரு, எப்பிடி அத்தானை கூட்டிட்டு வந்துருக்கேன்னு” என்றான் ஆர்ப்பாட்டமாக…