அடுத்த பத்தாவது நிமிடம் கன்னியாகுமரியில் உள்ள பிரபலமான ஒரு மருத்துவமனையின் முன் நின்றது அந்த கார்..
வீட்டின் பெரியவர்கள் அந்த காரிலேயே தொற்றிக் கொண்டு சேனாதிபதியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள்.
காரிலிருந்து இறங்கும் போதும் பாட்டியைத் தன் கைகளில் அள்ளிக் கொண்ட சேனாதிபதி, மருத்துவமனைக்குள் நுழைந்து பூரணி அம்மாவின் உடல்நிலையைப் பற்றிச் சொல்ல, உடனடியாக உள்நோயாளியாக சேர்த்துக் கொண்டு அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவப் பணியாளர்கள் தயாரானார்கள்.
ஆனால், பேரனின் கைகளில், அலட்டிக்கொள்ளாமல் ஒய்யாரமாக மருத்துவமனைக்கு வந்த பூரணி, தனக்கு சிகிச்சையளிக்க விடாமல் மருத்துவரிடம் பயங்கரமாக முரண்டு பிடித்தார்.
அவருக்கு இருக்கும் மூச்சு திணறலுக்கு, உடனடியாக நரம்பு வழியாக மருந்தை உடம்பில் செலுத்தியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், பூரணி அம்மாவின் ஒத்துழைப்பில்லாமல் எங்கனம் அவர் உடம்பில் ஊசியைக் குத்தமுடியும்?
கடும் பிரயத்தனம் செய்தும், பூரணி அம்மாவை சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ள வைக்கமுடியாமல் போகவே, சோர்ந்து போன முகத்தோடு அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர், தன்னோடு வந்த சேனாதிபதியிடம்,
“நோயாளியை, அவங்க இஷ்டம் இல்லாமல் ஹாஸ்பிடலுக்கு வேணும்னா கொண்டு வந்திடலாம். ஆனா, ட்ரீட்மெண்ட் கொடுக்க நோயாளியோட முழு ஒத்துழைப்பு ரொம்ப ரொம்ப அவசியம். அதனால உங்க பாட்டியை சமாதானப்படுத்தப் பாருங்க யங்மேன்” என்று சொல்லிவிட்டு தனதறைக்குள் நுழைந்து கொண்டார்.
சேனாதிபதி பின்னோடு வெளியே வந்த மற்றவர்களும் டாக்டர் கூறியதை கேட்க, என்ன செய்யப் போகிறாய் என்பது போல சேனாதிபதியையே பார்த்தார்கள்.
அறைக்குள் வந்த சேனாதிபதி கட்டிலில் படுத்திருந்த தனது பாட்டியை ஆழ்ந்து பார்த்தபடியே அவருக்கருகே கட்டிலில் அமர்ந்தான். பூரணியும் பேரனுக்கு குறையாத பார்வையையே அவன் மீது வீசினார். ஆனால், அந்த கண்களில், நான் சொன்னதை செய்துவிடேன் என்ற கெஞ்சல் இருந்தது.
சேனாதிபதி சொன்னது போல, சுபாஷிணியைத் திருமணம் செய்யச் சொல்லி பேரனிடம் பூரணி கேட்பது இது முதல் முறையில்லை. சென்னை ஏசிபியாக பதவியேற்று கிட்டத்தட்ட ஓராண்டு முடியும் தருவாயில் ஒருமுறை ஊருக்கு வந்திருந்த பேரனிடம்,
“பொண்ணுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல உம்மாமன் சினிமா சினிமான்னு சம்பாதிச்சது எல்லாத்தையும் தொலைச்சிட்டு வந்து நிக்குறதைப் பாக்கும் போது, என் வயிறெல்லாம் எரியுது. சுபாஷிணிக்கு மாப்பிள்ளை நீயாப் போனதால பரவாயில்லை. இதே வெளியில மாப்பிள்ளை பார்த்து கட்டிக்குடுக்கணும்னா அவன் நிலமை என்ன ஆகியிருக்கும் சொல்லு?” என்று புலம்பியவர், “உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் எப்போ மக்கா வச்சிக்கலாம்?” என்று கேட்டிருந்தார்.
ஆமாம்… திரைத்துறை மூலம், தான் சம்பாதித்திருந்த சொத்துபத்து, பணம் அத்தனையும், சொந்தமாக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று இழந்து விட்டுதான் ஊரோடு வந்து இருக்கிறார் பரந்தாமன்.
ஆரம்பத்தில் தொடர்வெற்றிகளை பரந்தாமனின் படங்கள் குவிக்கவும், அவர் காட்டில் பணமழையாகத் தான் கொட்டியது. சென்னையில் சொந்தவீடு, கார், எப்போதும் அவரைத் துதிபாட ஒரு கூட்டம் என்று, பரந்தாமனின் வாழ்க்கையில் சிலவருடங்கள் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது.
ஆனால் பரந்தாமனின் இரண்டு படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்து போகவே, அவரைத் தூக்கித் தலையில் வைத்து கொண்டாடிய மனிதர்கள் எல்லாம், காக்கைக் கூட்டத்தில் கல் எறிந்தது போல அவரை விட்டு கலைந்து போயிருந்தார்கள்.
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வது போல, தொடர் வெற்றிகளுக்கிடையே பரபரப்பாக இருந்து கொண்டிருந்த மனிதருக்கு சும்மா இருப்பது பைத்தியம் பிடித்தது போலிருந்தது.
போதாததற்கு, விசாலியின் அண்ணன் பாண்டியன், “மாப்ள… உங்களை மாதிரி கதை சொல்ல இந்த உலகத்துல இனி ஒருத்தன் பொறந்துதான் வரணும் மாப்ள… அதனால தைரியமா படத்தை நீங்களே உங்க சொந்த செலவுல எடுங்க. கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்” என்று சொல்லி, உசுப்பேற்றி உசுப்பேற்றியே தயாரிப்பு பக்கம் பரந்தாமனை தள்ளியிருந்தார்.
இந்த மனிதரும் விட்டதைப் பிடிக்க முயற்சிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிச் சொல்லியே, தான் சம்பாதித்து வைத்திருந்த பணம், சொத்து என்று எல்லாவற்றையும் விட்டாரேயொழிய, கடைசிவரை அவரால் எதையும் பிடிக்கவே முடியவில்லை.
பரந்தாமனின் மனைவி விசாலிக்கும், பிரபல இயக்குனரின் மனைவி என்ற அடைமொழியோடு சிங்கார சென்னையில் வசிப்பதே பிடித்தமானதாக இருக்க, சொந்தமாக சினிமா தயாரிக்க கணவரை ஊக்குவித்தாரே தவிர, நிசர்சனத்தை புரிந்து கொண்டு இருப்பதை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கவில்லை.
கடைசியில் எல்லாம் கைமீறிப் போனபிறகு, “எப்படியிருந்தாலும் ஊரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாம் நமக்கு தானே. அதனால் அந்த சொத்துக்களை விற்று பணத்தை வாங்கி வாருங்கள், ஒரு கை பார்த்து விடலாம்” என்ற யோசனையைச் சொல்லி விசாலியும், அவர் அண்ணன் பாண்டியனும் பரந்தாமனை ஊருக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தென்னை தான் முக்கிய விவசாயம். பூரணி அம்மாவிடமும் ஓரளவுக்கு பெரிய தென்னந்தோப்புகள் இருக்கத்தான் செய்தது.
எப்போதுமே நிலங்கள் அதிக விலைக்கு போகும் அந்த ஊரில், கூடங்குளம் அணுமின் நிலையமும், காற்றாலைகளும் தங்கள் மாவட்டத்தை ஒட்டியிருந்த திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் வந்தபிறகு, இங்கே நிலங்களின் விலைகளும் எக்கச்சக்கமாக எகிறிக் தான் கிடந்தது.
எனவே பூரணி அம்மாவின் நிலங்களும் நல்ல விலைக்கே போகும் என்று எண்ணியே அண்ணனும் தங்கையும் அவரைத் தூண்டிவிட்டார்கள்.
தங்கைக்கு, பழைய வசதி வாய்ப்புகளோடு சென்னையிலேயே தொடர்ந்து இருந்து விட வேண்டும் என்ற சுயநலமென்றால், அண்ணன்காரனுக்கோ, படப்பிடிப்பில் உதவி செய்கிறேன் பேர்வழி என்று தங்கையின் கணவனிடம் ஏற்கனவே சுருட்டியது போல, இப்போதும் கிடைத்தவரை சுருட்டி விட வேண்டும் என்ற பேராசை.
மூழ்கிவிடும் கப்பலில் இருந்து தப்பிவிடத் துடிக்கும் எலியின் மனநிலையில் இருந்த பரந்தாமனும் சொத்தையும் வீட்டையும் விற்று பணத்தை தரும்படி கேட்டுக் கொண்டு தாயிடம் வந்து நின்றார்.
அவ்வளவு தான்… மகனிடம் ஒரு ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார் பூரணி. “நீ சம்பாதிச்சதைத் தான் உனக்கு அழிக்கிறதுக்கு உரிமை உண்டேயொழிய, நானும் எம்புருஷனும் பாடுபட்டு சேர்த்த சொத்தை அழிக்க உனக்கு எந்த உரிமையும் கிடையாது டா” என்று மகனிடம் பொங்கிவிட்டார்.
“எப்படின்னாலும் உங்க காலத்துக்கு பிறகு இந்த சொத்தெல்லாம் எனக்கு தானே ம்மா. எப்பவோ இதை எல்லாம் எனக்கு தர்றதுக்கு பதில், இப்போ எனக்கு தேவைப்படும் போது தந்தா உதவியா இருக்கும்ல” என்றார் பரந்தாமன் தாயிடம் நைச்சியமாக.
“அடடே… பெத்தவங்க கிட்டயிருந்து சொத்து வாங்குறது மட்டும் தான் பிள்ளைங்களோட கடமையா? இந்த பெத்தவங்களோட ஆசையை, கனவை எல்லாம் நிறைவேற்றுறது எல்லாம் பிள்ளைங்களோட கடமைல சேர்த்தி இல்லையா என்ன?”
இத்தனை வருடங்களாக மனதில் பூட்டி வைத்திருந்த கோபத்தை எல்லாம் மடைதிறந்த வெள்ளம் போல கொட்டித் தீர்த்திருந்த பூரணி அம்மா, “இல்லைன்னு சொல்லாமல், நீயும் உன் குடும்பமும் இந்த வீட்டுல வந்து தங்கிக்கலாம். நம்ம நிலத்துல பாடுபட்டு நீ, உன் குடும்பத்தை காப்பாத்திக்கலாம். சொத்தை இப்போ எல்லாம் உங்க பெயருக்கு மாற்றியோ இல்லை விற்றோ தரவே முடியாது” என்று உறுதியாக சொல்லிவிடவும், வேறுவழியில்லாமல் சென்னையிலிருந்து தன் குடும்பத்தோடு இங்கே வந்துவிட்டார் பரந்தாமன்.
பெற்றோரோடு ஊருக்கு வந்த சுபாஷிணி தன் ஆடிட்டிங் படிப்பைக் காரணம் காட்டி, சென்னையிலேயே பெண்கள் விடுதியில் தங்கி கொண்டாள். சுபாஷிணியின் தம்பி ராகுல் அந்த சமயம் பத்தாம் வகுப்பு போர்ட் எக்சாம் எழுதியிருந்தபடியால், தேர்வு முடிவுக்குப் பிறகு கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் தன்னுடைய பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து கொண்டான்.
முதல்தடவை சுபாஷிணியை மணக்க சொல்லி பாட்டி சேனாதிபதிமிடம் கேட்க்கும் போது, “நீங்க, உங்க மகனோட நிலைமையைப் பற்றி மட்டும் தான் யோசிக்கிறீங்க பாட்டி. உங்க பேத்தியை கல்யாணம் கட்டிகிட்டா என்நிலமை என்ன ஆகும்னு யோசித்து பாத்தீங்களா?” என்று கேட்டிருந்தான் சேனாதிபதி.
“அது.. அன்னைக்கு நீ சுபாவோட மாமன் பையனை கைநீட்டி அடிச்சதாலத்தான் அவ உங்கிட்ட சண்டைக்கு வந்தது. இல்லைன்னா சுபா அப்படி எல்லாம் செய்யுறவ கிடையாது. நீ அதை மனசுல வச்சிக்கிட்டு கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லாத மக்கா.”
தனது படஷூட்டிங்கை முன்னிட்டு மகன் குடும்பமாக இங்கு வந்திருந்த போது, அவனின் மைத்துனனின் மகன் ரஞ்சனை, பேரன் சேனாதிபதி கைநீட்டி அடித்ததும், அதற்காக சுபாஷிணியும் அவளது அம்மாவும் வரிந்து கட்டிக்கொண்டு பேரனிடம் சண்டைக்கு சென்றதும் மட்டுமே தெரிந்திருந்த பூரணிக்கு, சமீபகாலமாக பேரன் சுபாஷிணியிடமிருந்து ஒதுங்கி செல்வதற்கு கூட அதுதான் காரணமோ என்ற எண்ணம் வந்திருந்தது.
ஆனால், அந்த பிரச்சினை நடப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பே அவருடைய பேத்தி சுபாஷிணி, சேனாதிபதியின் மனதை சுக்கல் சுக்கலாக உடைத்துவிட்டது, பாவம் அவருக்கு தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல, வீட்டிலுள்ள யாருக்குமே அது தெரியாது.
“நீங்க என்ன சொன்னாலும், உங்க பேத்தியை என்னால கல்யாணம் பண்ண முடியாது. அவளுக்கு என்னைவிட நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க பாட்டி மா” என்று பிடிவாதமாக திருமண பேச்சிலிருந்து அப்போது நழுவியிருந்தான் சேனாதிபதி.
அதனால் தான் இப்போது, பேரனுக்கு தன்மீதுள்ள பாசத்தை கேடயமாக்கி, அவனை மறுப்பு சொல்லமுடியாத சூழ்நிலையில் நிறுத்தியிருக்கிறார் பூரணி.
பூரணி அம்மாவுக்கு அருகே கட்டிலில் அமர்ந்திருந்த சேனாபதி, மெதுவாக அந்த வயதானவரின் வலதுகையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்தவாரே, “பாட்டி ம்மா, எனக்கு உங்க பயம் புரியுது. பயப்படாதீங்க, நாமளே நல்ல பையனாப் பாத்து உங்க பேத்திக்கு கல்யாணம் பண்ணிவச்சிடலாம். கல்யாண செலவைக் கூட நானும் அப்பாவுமே ஏத்துக்குறோம். அதனால நீங்க கவலைப்படாம ட்ரீட்மெண்ட் எடுத்துக்க ஒத்துக்கோங்க” என்று மென்மையாக சொல்லியவன், “நீங்களும் பாட்டிகிட்ட சொல்லுங்க ப்பா” என்று தந்தையையும், தன் பேச்சில் இழுக்க முயற்சி செய்தான்.
சேனாதிபதியின் தந்தை வாசு இப்போது ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னர் தான், இராணுவத்தில் தன் சேவையை நிறைவு செய்துவிட்டு ஊருக்கு வந்து, தன் மனைவி பார்த்து வந்த விவசாயத்தை கையிலெடுத்து இருக்கிறார்.
தான் கையிலெடுத்த நாள் முதலாக அந்த விவசாயத்தை இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்த்தி, இன்று அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டிருக்கிறார் வாசு.
அவருக்குமே மகன் எதற்காகவோ சுபாஷிணியைத் திருமணம் செய்ய தயங்குகிறான் என்று புரிந்தது. ஆனால் எதற்காக என்று காரணம் தான் தெரியவில்லை.
எனவே மகன் பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவர் திணற, அவரை முந்திக்கொண்டு சுபாஷிணியின் அம்மா விசாலி பேசியிருந்தார்.
“அதெப்பிடி? இத்தனை வருஷமா இதுதான் பொண்ணு, இதுதான் மாப்பிள்ளைன்னு ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிகிட்டு, திடீர்னு வந்து உங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னா, யார் அவளைக் கல்யாணம் பண்ணிப்பாங்க?”
“அப்படியே கல்யாணம் நடந்தாலும், எம்புள்ளையை நிம்மதியா வாழ விட்டுடுமா இந்த உலகம்? எதுக்காக உங்க அத்தான் உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னார்னு கேட்டு கேட்டு எம்பொண்ணை சாகடிச்சிட மாட்டாங்களா? அதனால எங்க மகளுக்கு வேற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். சேனாதிபதி தான் எம்பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும். அத்த… இது எல்லாத்தையும் தொடங்கி வச்சது நீங்க தான். இப்போ இதை நல்லபடியா முடிச்சு தர்றதும் உங்க கைலதான் இருக்கு.”
என்மகள் திருமணம் உன் பொறுப்பு என்று, தன் மாமியாருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்து தன் பேச்சை முடித்துக் கொண்டார் விசாலி.
தன் மாமன் மனைவியின் பேச்சில் அவரை நிமிர்ந்து பார்த்தான் சேனாதிபதி. இன்று தன்னை, தன் மகளுக்கு அத்தான் என்று சொல்லி பேசும் அவர், சிறுவயதில் தன்னோடு சுபாஷிணி விளையாடுவதற்கே எப்படியெல்லாம் முகத்தை சுழிப்பார் என்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.
போதாததற்கு, சுபாஷிணி வயதுக்கு வந்து மூன்று மாதங்கள் வரை தங்களிடம் விஷயத்தை சொல்லாமல், அவர் மறைத்து வைத்தது எல்லாம் சேனாதிபதிக்கு ஞாபகத்திற்கு வர, இன்றைக்கு மட்டும் இந்த அத்தான் எப்படி இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவனாக மாறிப்போனான் என்ற கேள்வி அவனுள் எழுந்தது. அதற்கான பதிலையும் அவன் மனமே சொல்லிவிட, ஒரு கேலிப்புன்னகை அவன் இதழ்களில் தவழ்ந்தது.
ஆமாம்… சுபாஷிணி வயதுக்கு வந்த விஷயத்தை கணவரின் தாயிடமும், அவரின் உடன்பிறந்தவளிடமிருந்துமே மறைத்திருந்தார் விசாலி. கணவரிடமும், “இந்த விஷயத்தை எல்லாம் நாமளே முடிச்சிக்கணும். யார் கிட்டயும் சொல்லக்கூடாது” என்று விசாலி சொல்லியிருக்க, அந்த நல்லவரும் தாயிடம் விஷயத்தை சொல்லவில்லை.
ஆனால், எத்தனை நாட்களுக்கு தான் ஒரு விஷயத்தை மறைக்க முடியும்? ஒருநாள் தாயிடம் போனில் பேசும் போது எதேச்சையாக அவர் விஷயத்தை விட்டுவிட, மகள் தமிழரசி, பேரன் சேனாதிபதி அவன் தங்கை மங்கையர்கரசி சகிதம் சென்னையிலிருந்த மகனின் வீட்டில் வந்து இறங்கி விட்டார் பூரணி. அப்போது பரந்தாமன் வீட்டில் இல்லை. தன் படஷூட்டிங் ஒன்றிற்காக பக்கத்து மாநிலத்துக்கு சென்றிருந்தார்.
பூரணியும் வசதி வாய்ப்புகளில் ஒன்றும் குறைந்தவர் இல்லையே. எனவே இம்முறை ஊரிலிருந்தே வாடகைக்கார் ஒன்றை ஏற்பாடு செய்து வந்திருந்தார்.
வீட்டிலிருந்தே கார் மூலம் புறப்படவும், வாழைத்தார், தேங்காய், தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் என்று, என்னவெல்லாம் மகன் வீட்டுக்கு கொண்டுவர முடியுமோ அத்தனையையும் கொண்டு வந்திருந்தார் பூரணி.
ட்ரைவரின் உதவியோடு கொண்டுவந்ததை எல்லாம் மாமனின் வீட்டு ஹாலில் கடை பரப்பியிருந்தான் சேனாதிபதி.