மனைவி விஷயத்தில் இராஜபூபதியின் பார்வையை, அலட்சியமாக ஒதுக்க முடியாமல், யோசனையோடு உள்ளே வந்தவனிடம், “என்ன த்தான் இது? அந்த ஆளு என்னென்னவோ சொல்லுறாரு?” என்று பயத்தோடு சுபாஷிணி கேட்க,
“குலைக்கிற நாய் கடிக்காது சுபா” என்றான் மனைவியின் பயத்தை போக்கிவிடும் முயற்சியில்.
வீட்டுக்கு வந்து வில்லன் மிரட்டிவிட்டு போகும் காட்சியை வாழ்வில் முதன்முறையாக நேரிடையாக கண்டவள், மேலும் ஏதோ கேட்க முயல, அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து, பயத்தால் அலைப்புறும் அவள் கருவிழிகளை கூர்ந்து பார்த்தபடி,
“சுபா… என்னோட வேலைல இப்பிடி பலதை நாம கடந்து தான் வரவேண்டி இருக்கும். அப்படி சூழ்நிலையில் நான் மட்டுமில்ல, நீயும் தைரியமாவும், புத்திசாலித்தனமாவும், சமயத்துக்கு சமயோஜிதமாவும் நடந்துக்க வேண்டியிருக்கும். புரிஞ்சுதா?” சிறுபிள்ளைக்கு சொல்வது போலச் சொன்னான்.
கணவன் என்று வந்துவிட்டால் எல்லா அறிவுரைகளும் காற்றோடு காற்றாக பறந்து போய்விடும் நேரமும் வரும் என்று அறியாமல், மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல சேனாதிபதியின் காந்தக் குரலுக்கு தலையை அசைத்தபடி நின்றிருந்தாள் திருமதி. சேனாதிபதி.
*****
சட்டப்படி தாஸை கைது செய்வதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டபடி அலுவலகத்தில் இருந்த சேனாதிபதியிடம், “சார்… உங்களைப் பாக்கணும்னு ரெண்டு பொண்ணுங்க வந்துருக்காங்க. பாக்குறதுக்கு காலேஜ் பொண்ணுங்க மாதிரி இருக்காங்க” என்று காவலர் ஒருவர் வந்து சொல்ல, “உள்ள அனுப்புங்க” என்று அனுமதி கொடுத்தான்.
சற்றுநேரத்தில் தயங்கித் தயங்கி இரண்டு இளம்பெண்கள் சேனாதிபதியின் அறைக்குள் நுழைய, “உக்காருங்க ம்மா” என்று தன் முன்னே இருந்த இருக்கைகளைக் காட்டினான்.
உட்கார்ந்தவர்கள், தங்களை நிலைப்படுத்திக் கொள்ள சில வினாடிகளைக் கொடுத்த சேனாதிபதி, “ம்ம்… சொல்லுங்க. என்ன விஷயமா என்னைப் பாக்க வந்தீங்க?” என்று கேட்க,
“நாங்க கமலியோட ஃப்ரெண்ட்ஸ். என்னோட பெயர் ரோஜா, இவ சாந்தி” என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டாள் ரோஜா என்ற பெண்.
கமலி என்ற பெயர் சேனாதிபதியை நிமிர்ந்து அமர வைக்க, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, “ஆக்ஸிடென்ட் ஆகி ஹாஸ்பிடல்ல இருக்குற கமலியைத் தானே சொல்லுறீங்க?” என்று தெளிவுபடுத்திக் கொண்டவன், “ஃப்ரெண்ட் ன்னா க்ளாஸ் மெட்டா” என்று கேட்க,
“இல்ல சார்… வேற வேற டிப்பார்ட்மெண்ட். ஆனா ஒரே ஊர்ல இருந்து வர்றோம்” என்று ஒரு குப்பத்தின் பெயரைச் சொன்னவர்கள், ஒருவரையொருவர் பார்த்தபடி அமைதியாக,
“சரி… என்னை பாக்க வந்த விஷயத்தை சொல்லலாமே” என்று அவர்களை பேசும்படி ஊக்கப்படுத்தினான் சேனாதிபதி.
ஒருமுறை ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக்கொண்ட ரோஜா, “கமலியோட விபத்து தற்செயலா நடந்திருக்காதோன்னு, எங்களுக்கு தோணுது சார்” என்று தயங்கியபடியே சொன்னாள்.
“எப்பிடி சொல்லுறீங்க?”
“தாஸ் ன்னு ஒருத்தன் இப்போ கொஞ்ச நாளா அவனை லவ் பண்ணச் சொல்லி கமலியை தொந்தரவு செய்துட்டே இருந்தான். இவ முடியாதுன்னு சொன்னதும், அவளோட ஃபோட்டோவை அவனோட போட்டோ கூட அசிங்கமா ரெடி செய்து அவளுக்கே அனுப்பி வச்சி, இதை நெட்ல லீக் செய்துடுவேன், நான் கூப்பிடுற இடத்துக்கு வான்னு மிரட்டியிருக்கான்.” மிகவும் தயக்கத்தோடு அந்த பெண் சொல்ல,
இப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று யூகித்திருந்தாலும், அந்த பெண் சொல்லும் போது தாறுமாறாக அந்த தாஸ் மீது கோபம் பொங்கியது சேனாதிபதிக்கு. அதை கட்டுப்படுத்தி, “அதெப்படி உங்களுக்கு தெரியும்?” என்றான் தன்னை அமைதியாக காட்டிக்கொண்டு.
“கமலி எங்கிட்ட சொல்லியிருக்கா” என்ற ரோஜா சில வினாடிகள் மௌனத்திற்கு பிறகு, “அவ சொன்னது எல்லாம் உண்மை தான்னு, இந்த ஒருவாரமா நானும் என் சொந்த அனுபவத்துல புரிஞ்சிக்கிட்டேன்” என்றாள் லேசான தழுதழுத்த குரலில்.
“என்னம்மா சொல்லுற?” அதிர்ச்சியில் நாற்காலியில் இருந்து எழும்பவே செய்து விட்டான் சேனாதிபதி.
“ம்ம்… அந்த தாஸ், எங்க குப்பத்துலயே எங்களைப் போல சில பொண்ணுங்களை மிரட்டி தான் நினைச்சதை நடத்தியிருக்கான்” என்றாள் ரோஜா.
அந்த பெண் ரோஜாவின் வார்த்தைகளில் சேனாதிபதி எப்படி உணர்ந்தான் என்றே சொல்ல முடியவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து எல்லாத் துறைகளிலும் அபரிதமான வளர்ச்சியை பெற்றிருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் எந்நேரமும் பெண்களுக்கான வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கும் போதே மனது வலித்தது சேனாதிபதிக்கு.
“அந்த தாஸ் எங்க குப்பத்து ஆட்களை எம்எல்ஏ இராஜபூபதி பண்ணைக்கு வேலைக்கு கூப்பிட வருவான். அப்பிடி வரும்போது அவன் கண்ணுல படுற அழகான பொண்ணுங்க எல்லாம் அவனுக்கு வேணும். காதல்னு வலை விரிச்சு பார்ப்பான். நடக்கலையா, மோசமான ஃபோட்டோஸ் ரெடி செய்து அந்த பொண்ணுங்களை கார்னர் செய்வான். இப்பிடி எத்தனையோ பொண்ணுங்களோட வாழ்க்கையை அழிச்சிருக்கான். அவமானம் தாங்காமல் ஒருசில பொண்ணுங்க தற்கொலை கூட பண்ணியிருக்காங்க…” அந்த ரோஜா சொல்லிக் கொண்டே போக,
“ஏம்மா… இவ்வளவு நடந்திருக்கு, பெத்தவங்ககிட்டயோ, போலீஸுக்கோ சொல்லணும்னு கூட உங்களுக்கெல்லாம் தோணாதா?” கோபமாக கேட்டான் சேனாதிபதி.
“பயம்… பெத்தவங்க நம்மளை தப்பா நினைச்சிருவாங்களோ ங்குற பயம்… இந்த சமுதாயம் நம்மை தப்பா பாக்குமோ ங்குற பயம்.. போலீஸ் என்னமாதிரி எல்லாம் கேள்வி கேக்குமோங்குற பயம்... அது எல்லாத்தையும் விட ஏழைகளோட சொல் அம்பலம் ஏறுமாங்குற பயம்… மறைச்சு மறைச்சு, முடியாத பட்சத்தில இந்த உலகத்திலேயே இருக்க பிடிக்காமப் போயிடுது.” விரக்தியான குரலில் சொன்னவள்,
“அப்பிடித்தான், விபத்து நடந்த அன்னைக்கு, மத்தியானம் எங்கூட வரணும். இல்லைன்னா ஃபோட்டோஸ் லீக் பண்ணிடுவேன்னு அந்த ராஸ்கல் கமலியை மிரட்டியிருக்கான்.”
“நான் கண்டிப்பா அவனுக்கு வளைஞ்சு குடுக்க மாட்டேன், என் ஃபோன்ல இருக்கிற எவிடென்ஸ்ஸோட போலீஸுக்கு போயிடுவேன்னு கமலி எங்கிட்ட சொல்லிட்டு இருந்தா. ஆனா… ஆனா… கடைசியில… ரோட்டுல…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் கைகளால் முகத்தை மூடி அழுத ரோஜா, சில நிமிட இடைவெளியில் கண்களை அழுந்த துடைத்தபடியே,
“இன்னும் எத்தனை காலம் தான் எங்களை மாதிரி பொண்ணுங்க இந்த மாதிரி அநியாயத்தை எல்லாம் சகிச்சிக்கணும் சார்? ஸ்கூல், காலேஜ், வேலைக்கு போற இடம், இப்பிடி எங்கயுமே பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லாமப் போச்சே, இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா? படிப்பு மட்டுமே வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு எங்களைக் கொண்டு போகும்னு நினைச்சு ஆர்வமா படிக்கிற, என்னைப் போல, கமலியைப் போல பொண்ணுங்களை முடக்கிப் போடுற தாஸ் மாதிரி ஆண்களுக்கு தண்டனையே கிடையாதா?”
ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதி போல கண்களில் நெருப்போடு சேனாதிபதியிடம் அந்த பெண் கேட்ட வினாடி, அந்த தாஸ் களையெடுக்கப்பட வேண்டியவன் என்ற எண்ணம் சேனாதிபதியின் மனதில் ஆழப்பதிந்தது.
தன் எண்ணம் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “பொண்ணுங்களோட பயம் தான் இந்த மாதிரி ஆட்களோட பலம். அதையும் தாண்டி போலீஸ்கிட்ட வந்த உங்க தைரியத்தை பாராட்டுறேன். எப்பவும் இதே தைரியத்தோட இருங்க” என்றவன்,
“உங்க ஃபோன்ல எவிடென்ஸ் எதுவும் இருந்தா, அதை எங்கிட்ட தந்துட்டு போங்க. தாஸை அரெஸ்ட் செய்ய எனக்கு உதவியா இருக்கும்” என்று கேட்க தயக்கமின்றி கொடுத்தது அந்த பெண்.
அந்த பெண்கள் சென்றதும் கண்மூடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான் சேனாதிபதி. கமலி அந்த தாஸை மறுத்து போலீஸுக்கு செல்வதாக சொல்லியிருக்க கூடும், அதனாலேயே அவளுக்கு அந்த நிலமை என்று தெளிவாக அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
கூடவே அந்த பெண் ரோஜாவின் கேள்விகளும் மாறிமாறி அவன் காதுகளில் வந்து மோத, பற்களை கடித்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், தான் செய்ய வேண்டியதை நிதானமாக திட்டமிட ஆரம்பித்தான்.
அடுத்த இரண்டு நாட்களில் தாஸை கோர்ட்டில் கொண்டு நிறுத்திய போலீஸார், “குற்றவாளி ஜாமீனில் வெளியே வந்தால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் அதிகம்” என்று சொல்ல, போலீஸின் கூற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தாஸின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பதினைந்து நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கும் உத்தரவிட்டது.
ஆனால், நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்பது போல, நீதிமன்ற வளாகத்திலேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்து விட்டான் தாஸ்.
அடுத்த ஒருமணி நேரத்தில் போலீஸ் காவலோடு அரசாங்க மருத்துவமனையில் இருந்தவன், அடுத்த இரண்டு நாட்களில், “கூடுதல் மருத்துவ வசதி வேண்டும்” என்ற விண்ணப்பத்தின் பெயரில், இராஜபூபதியின் உறவினரின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
போலீஸ் கஸ்டடியில் இருக்க வேண்டிய குற்றவாளி என்பதால், தாஸ் இருந்த அறைக்கு வெளியே இரண்டு போலீஸார் அவன் காவலுக்கு இருந்தார்கள், அவ்வளவு தான். மற்றபடி சொகுசு காட்டேஜ் தோற்றுப் போகும் வசதிகள் அங்கே அவனுக்கு.
எல்லாவற்றையும் சரியாக திட்டமிட்டு பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருந்தது இராஜபூபதியே. அன்று சேனாதிபதியின் பேச்சு தன்னை குறிவைத்தது போலிருக்கவே, தாஸை வைத்து தன்னிடம் போலீஸ் நெருங்கிவிடக் கூடாது என்ற எண்ணம் இராஜபூபதிக்கு.
இதுவே தாஸ் இடத்தில் இன்னொரு நபர் இருந்திருந்தால், இராஜபூபதி, எப்போதோ அவன் உயிரை பறித்திருக்க கூடும். ஆனால் தாஸ் மீதிருந்த பாசம், சிறிது நாட்கள் சேனாதிபதியின் கண்காணாத இடத்திற்கு அவனை அனுப்பி வைக்க வேண்டும் என்று திட்டமிட வைத்தது.
இருப்பது அவர்கள் மருத்துவமனை. எனவே இராஜபூபதி எடுத்த முடிவும் தங்குதடையின்றி தாஸை வந்து சேர, அங்கிருந்து தப்பித்து செல்லும் நாளுக்காக உற்சாகமாகவே காத்திருக்க ஆரம்பித்தான் தாஸ்.
சரியாக அந்த மருத்துவமனையில் வந்து சேர்ந்த மூன்றாவது நாள், நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல், அந்த மருத்துவமனையே நிசப்தமாக, தனக்கு வந்த தகவலின்படி தப்பித்து செல்ல தயாரானான் தாஸ்.
கிளம்பும் போது போலீஸார் கண்டுகொண்டால் அவர்களைப் போட்டுத்தள்ள அவன் கையில் நவீனரக கைத்துப்பாக்கி கூட இருந்தது. இராஜபூபதியின் தகவல்கள் தங்குதடையின்றி அவன் அறைக்குள் வரும்போது, இந்த ஆயுதம் வராதா என்ன?
ஆனால் அந்த துப்பாக்கிக்கு வேலை வைக்காமல் அந்த காவலர்கள் இருவரும் என்னவோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள்.
தாஸின் உதடுகள் தன் முதல் வெற்றியில் புன்னகைக்க, சத்தம் எழுப்பாமல் மெதுவாக வெளியேறி, அவனுக்கு வந்த தகவலின்படி மருத்துவமனையின் பின்பக்கமாக சென்றான்.
‘வந்தாயிற்று… அதோ நிற்கிறது என் தலைவன் அனுப்பி வைத்திருக்கும் வாகனம். அதில் போய் ஏறிக்கொண்டால் போதும், தப்பித்து விடலாம்.’ விட்டு விடுதலை ஆகும் உற்சாகத்தில் நடைபோட்ட தாஸுக்கு, அங்கிருந்த பெரிய மரத்துக்கு பின்னிருந்து வெளியே வந்த சேனாதிபதியைக் கண்டு ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கியது.
இருந்தாலும் கையிலிருந்த ஆயுதம் தைரியத்தை கொடுக்க, முன்னேறியபடியே சேனாதிபதியை நோக்கி சுட்டான் தாஸ். அந்த புல்லட்டை லேசாக சரிந்து தன் இடது தோள்பட்டையை உரசிச்செல்ல அனுமதித்த சேனாதிபதி, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தன் அரசாங்க துப்பாக்கியிலிருந்த தோட்டாவை தாஸின் நெற்றியை முத்தமிடச் செய்திருந்தான். சத்தம் கேட்டு தாஸின் உதவிக்காக காரிலிருந்து இறங்கி ஆயுதத்தோடு ஓடிவந்த இருவரின் கால்களையும் பதம் பார்த்தான்.
அவ்வளவு தான்… இத்தனை நாளும் ஆடுடா ராஜா… ஆடு… என்பது போல தன் பிடியை தளர்த்தியிருந்த சேனாதிபதி, சமயம் பார்த்து இழுத்து பிடித்ததில், ‘போலீஸாரை தாக்கிவிட்டு மருத்துவமனையிலிருந்து தப்பியோடப் பார்த்த குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டான்’ என்ற செய்தி அதிகாலையிலேயே பரபரப்பாக தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தது.
இது எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த சுபாஷிணி, வழக்கம் போல கண்விழித்ததும் தன் அருகே பார்க்க, கணவன் அங்கே இல்லை.
‘இந்த அத்தான் என்னதான் நினைச்சிட்டு இருக்காங்க? இன்னையோட இராத்திரி வீட்டுக்கு வந்து மூனுநாள் ஆச்சு, வரட்டும்… அவங்களுக்கு இருக்கு…’ என்று கோபத்தில் கறுவிக் கொண்டிருந்த நேரம், அவள் அலைபேசி அழைத்தது.
‘யாராக இருக்கும்?’ என்று யோசித்தபடியே போனை எடுத்து பார்த்தால், மாமன் மகன் ரஞ்சன். அவன் பெயரைக் கண்டதும் முகத்தை சுருக்கியவள், ‘இந்நேரத்திற்கு எதற்காக அழைக்கிறான்?’ என்ற எண்ணத்தோடே அழைப்பை ஏற்று, “சொல்லுங்க” என்றாள்.
அவனோ, “நல்லாயிருக்கியா சுபா?” என்று குசலம் விசாரித்தான்.
‘இது இப்போ ரொம்ப அவசியம்.’ மனது முணுமுணுத்துக் கொண்டாலும், “ம்ம்…” என்றாள் பதிலாக.
“சேனாதிபதி?”
“ஏன்? அவங்களும் நல்லா தான் இருக்காங்க.” பொறுமை விடைபெற்று சென்றுவிடும் தூரத்தில் இருக்க, பதில் சொன்னாள் சுபாஷிணி.
“ஏன் நல்லா இருக்கமாட்டான்? ஒரு கொலை செய்த பிறகும், கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல அவனுக்கு இராஜ உபச்சாரம் நடக்குதே… அப்புறம் ஏன், நல்லாயிருக்க மாட்டான்?” என்று நக்கலடித்தான்.
“என்ன சொல்லுறீங்க நீங்க?” சுபாஷிணியின் குரல் தன்னையும் மீறி அதட்டல் தொனியில் வந்திருந்தது.
“அடடே… ஏசிபி பொண்டாட்டிக்கு கோபம் எல்லாம் வருதே… மொதல்ல டிவியைப் போட்டு பாரு ம்மா. அப்புறமா யார்கிட்ட கோபப்படணும்னு நீயே முடிவு பண்ணிக்க” என்றபடி அவன் அழைப்பை துண்டிக்க,
நெஞ்சம் தடதடக்க ஓடிப்போய் டிவியை உயிர்பித்தவளின் முகம், அங்கே ஒலிபரப்பப்பட்ட காட்சிகளில் இரத்தப்பசையை இழந்து போனது.
காட்சிகளுக்கு பின்னணியில் செய்தியாளர்கள் நடந்தவற்றை செய்தி என்ற பெயரில் விலாவாரியாகச் சொல்ல, என்கவுண்டர் என்னும் சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவளா சுபா?
செய்திக்கு நடுநடுவே, இடது தோளில் கட்டு போடப்பட்ட சேனாதிபதியையும், முறையே தோளிலும், கையிலுமாக கட்டுப்போடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த இன்னும் இரண்டு காவலர்களையும் காட்டினார்கள்.
அவர்கள் இருவரும் வேறு யாரும் அல்ல. தாஸின் அறைக்கு காவல் இருந்த காவலர்கள் தான்.
ஹஹ… கிரிமினல்களே இவ்வளவு திட்டம் தீட்டும் போது, முறையான பயிற்சிக்கு பிறகு காவல்துறையில் இருக்கும் காவலர்கள் எந்த அளவிற்கு திட்டம் தீட்டுவார்கள் என்பதை, சேனாதிபதியோடு இணைந்திருந்த அந்த காவலர்கள் குழு நிரூபித்திருந்தது.
அத்தனையையும் பார்க்கப் பார்க்க, ‘ஒரு உயிரை எடுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?’ என்ற கோபம் வந்தது சுபாஷிணிக்கு. கூடவே ரஞ்சனின் கொலை என்ற வார்த்தையும் அவளை வதைக்க, டிவியில் பார்த்த மருத்துவமனைக்கு நேரில் வந்தே விட்டாள் சுபாஷிணி.
மனைவியை அங்கே எதிர்பார்க்காத சேனாதிபதி, தன்நிலையைக் கண்டு மனைவி பயந்து போவாளே என்று பதற, அவன் எண்ணத்திற்கு மாறாக கண்களில் கோபத்தோடு நின்றிருந்தாள் சுபாஷிணி…