விசாலியோ, ஒரு அழகான ஹாரம், அதற்கு இணையான கழுத்தணி, அரைடஜன் வளையல்கள் என்று இருபது பவுனுக்கும் குறையாத தங்கநகை இருந்த பெட்டியைத் திறந்து மகளுக்கு முன்னால் நீட்டி, “இதைப் போட்டுக்கோ சுபா” என்றார்.

அன்னையின் இந்த செயலை எதிர்பாராத சுபாஷிணியின் பார்வை கணவனை தொட்டு மீள, “நான் தந்தா வாங்கி போடுறதை விட்டுட்டு, அங்க என்னடி பார்வை?” மகளை அதட்டினார் விசாலி.

“இப்போ எதுக்கு ம்மா இதெல்லாம்?” வேண்டாம் என்பதை வேறுவிதமாக சுபாஷிணி சொல்ல,

 “எங்க காலம் வரைக்கும், உனக்கும், பிறக்கப் போற உம்பிள்ளைகளுக்கும் செய்யுறதுக்கு எங்களுக்கு முழு உரிமை இருக்கு சுபா, அதை வேண்டாம்னு யாரும் சொல்ல முடியாது” ஓரக்கண்ணால் மருமகனை பார்த்தபடியே சொன்ன விசாலி, மகள் தயங்கவும்,

“அத்த… சீர்வரிசை பொருள் வேண்டாம்னு உங்க பேரன் சொன்னதை அப்போ கேட்டாச்சு. அதுக்காக எப்பவுமே எங்கபிள்ளைக்கு எதுவும் செய்யாம எங்களால இருக்க முடியாது. உங்க பேரன்கிட்ட சொல்லுங்க” என்றார் தன் மாமியாரிடம்.

இத்தனைக்குப் பிறகும், தன் பிடித்தமின்மையை முகத்தில் காட்டியபடியே தான் நின்று கொண்டிருந்தான் சேனாதிபதி.

 ஒரு இறுக்கமான சூழ்நிலை அங்கே உருவாகும் நிலமை உண்டாக, சுதாரித்துக் கொண்ட பூரணி அம்மா, “இப்போ என்ன? உனக்கு சுபா இந்த நகையை போட்டுக்கணும் அவ்வளவு தான? கொண்டா இங்க” என்று மருமகளிடமிருந்து நகையை வாங்கி,

“மக்கா… இப்போ கோவிலுக்கும், நாளைக்கு விருந்துலயும் இதை போட்டுட்டு, ஊருக்கு போகையில உங்கம்மாகிட்ட கழத்தி குடுத்துட்டு போ… என்ன…” என்று சுபாவின் கையில் கொடுக்க, வாங்கிக் கொள்ளாமல் சுபாஷிணியின் பார்வை இப்போதும் கணவனிடம் தான்.

“அட… உம்புருஷன் ஒன்னும் சொல்லமாட்டான். நான் சொல்லுறேன்ல… நீ போட்டுக்கோ” என்றார் பூரணி.

அப்பாம்மாவின் வார்த்தைகளை மறுக்க முடியாமல் நகைகளை சுபாஷிணி அணிந்து கொள்ள, “என்ன த்த? நகையைத் திருப்பி தந்துட்டு போகச் சொல்லுறீங்க?” என்றார் விசாலி சண்டைக்கு வரும் தோரணையில்.

“கொண்டு போனா மட்டும் அந்த ஊர்ல போடவா முடியும்? அதுக்கு நீயே வச்சிகிட்டு, உம்மவ வரும்போது போட்டு அழகுபாரு” என்று முடித்து விட்டார் பூரணி.

ஒருவழியாக, பூஜை தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் குடும்பமாக கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

புதுமணத் தம்பதியரான சேனாதிபதிக்கும், சுபாஷிணிக்கும் முன்னுரிமை கொடுத்து பூஜை நடந்தது.

பூஜை முடிந்து, கற்பூர ஆரத்தி எடுத்துக் கொண்ட மக்கள் கலைந்து செல்ல, ஒருசில நெருங்கிய சொந்தங்கள் சுபாஷிணியிடமும், சேனாதிபதியிடமும் ஆர்வமாக வந்து பேசினார்கள். சேனாதிபதியும் எல்லோரிடமும் சகஜமாக பேசினான், மனைவியையும் பேசவைத்தான்.

 எல்லோரும் கோவிலை விட்டு வெளியே வர, அந்த இரவிலும் சுடச்சுட தேன்குழல் மிட்டாய் போட்டு விற்பனை செய்து கொண்டிருந்த கடையில் போய் நின்று கொண்டனர் வீட்டுப் பெண்கள்.

மங்கை, “அண்ணா… வளையல், ஹேர்பேண்ட் எல்லாம் வாங்கி குடு” என்று ராகுலோடு வளையல் கடைக்குள் நுழைந்து கொண்டாள். தங்கையின் பின்னோடு சென்ற சேனாதிபதி, தன்னோடு ஜோடியாக நடந்து கொண்டிருந்த மனைவியிடம், “உனக்கும் ஏதாவது வேணும்னா வாங்கிக்கோ சுபா” என்று சொல்ல, அங்கிருந்த பூக்கடையை கைகாட்டி, “பூ வாங்கி தாங்க த்தான்…” என்று ஆசையாக கேட்டாள் சுபாஷிணி.

“உன்னோட ஒரு ஜாண் கூந்தலுக்கு நீ வச்சிருக்குறதே அதிகம் ம்மா… இதுல இன்னுமா?” என்று கிண்டலடித்தாலும், மனைவி கேட்டதை வாங்கிக் குடுக்க தவறவில்லை சேனாதிபதி.

திருமணமான இந்த இரண்டு மாதங்களில், ஒரே மாதிரி இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து பழகிய சுபாஷிணிக்கு, இப்படி ஏகாந்தமாக கணவனோடு நேரத்தை செலவழிப்பது பேரானந்தமாக இருந்தது. தேவைப்படும் நேரத்தில் திறந்து பார்ப்பதற்காக மனம் என்னும் பெட்டகத்துக்குள் எல்லா நிகழ்வுகளையும் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

எல்லாம் முடிந்து, கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது கிட்டத்தட்ட ஒருமணி ஆகியிருந்தது.

“எம்பேரன், பேத்தி மேல தான் எல்லாரோட கண்ணும், கண்டிப்பா இன்னைக்கு அவங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும்” என்று சொல்லியபடியே இருந்தார் பூரணி.

“இந்த வருஷம் அம்மன் சப்பரத்துக்கு அர்ச்சனை நீதான் குடுக்கணும் சுபா ம்மா. காலைல ஐந்து மணிக்கெல்லாம் எழுப்புவேன். எழும்பி, தலைக்கு குளிச்சு ரெடியாகிடணும். இப்போ போய் தூங்குங்க” என்று தமிழரசி சுபாஷிணியிடம் சொல்ல, மனைவியோடு தன் அறைக்கு செல்ல பயமாக இருந்தது சேனாதிபதிக்கு.

ஆமாம்… பயம் தான். அதுவும் தங்கள் துணைமீதான தேடல் ஒருவருக்கு குறையாமல் மற்றவருக்கும் இருக்க, ‘இருவரும் ஒரே அறையில் தங்கினால் தங்களால் கட்டுப்பாடாக இருக்க முடியுமா?’ என்ற பயமே வந்துவிட்டது சேனாதிபதிக்கு.

அதுவும் கொடைவிழா இன்னமும் முற்றுப்பெறாத சூழ்நிலையில், பெரியவர்களின் நம்பிக்கையை பாழடிக்க அவன் விரும்பவில்லை.

என்ன செய்து இந்த சூழ்நிலையை தவிர்ப்பது என்ற தீவிர சிந்தனையில் இருந்தவனுக்கு, “தூக்கமா?” என்று ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் மாதவனிடமிருந்து அந்நேரத்திற்கு வந்தது.

அடுத்த வினாடியே நண்பனுக்கு சேனாதிபதி அழைக்க,

“டேய் மச்சான்… நானும், கார்த்திக்கும் உங்க கோவில்ல தான் டா இருக்குறோம்” என்றான் மாதவன்.

 நாளை நடைபெறவிருக்கும் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, தன் நண்பர்கள் மூவருக்குமே அழைப்பு விடுத்திருந்தான் சேனாதிபதி. எனவே திருச்சியில் இருக்கும் மாதவன், குடும்பத்தோடு இன்றிரவே வந்து இறங்கிவிட்டான். இராணுவத்தில் இருக்கும் கைலாஷுக்கு விடுமுறை கிடைக்கவில்லையாதலால் அவனால் வர இயலவில்லை.

மாதவன் சொன்னது தான் தாமதம். தெய்வங்களே… என்னை காப்பாத்த வந்துட்டீங்களா தெய்வங்களே’ என்ற பாவனை தான் சேனாதிபதியிடம். நண்பர்கள் வந்திருப்பதை வீட்டினருக்கு சொல்லியவன், அவர்களை சந்தித்து விட்டு வருவதாக சொல்லி மறுபடியும் கோவிலுக்கு சென்றே விட்டான்.

கிளம்பும் போது மனைவியிடம் தலையசைத்து விடைபெற்று கொள்ள, கணவனின் இந்த ஓட்டம் எதற்காக என்று புரிந்து கொண்டவளின் இதழ்களில் இளநகை.

மனைவியின் கேலி புரிந்து, கண்களாலேயே அவளை மிரட்டிவிட்டு சென்றவன், திரும்ப வீட்டுக்கு வந்தது அதிகாலை ஐந்தரை மணிக்கு தான். அவன் வரும்போது எல்லோரும் குளித்து முடித்து, அம்மனின் சப்பரபவனியை காண்பதற்கு தயாராக இருந்தனர்.

“அங்க தான், நாள் முழுசும் தூங்காம அலையிறேன்னா, வந்த இடத்திலாவது கொஞ்சம் தூங்கி எழும்பலாமே ப்பா.” அன்னையாக தமிழரசி மகனிடம் வருத்தப்பட,

“பௌர்ணமி வெளிச்சமா இருந்ததால, மூணு பேரும் கடற்கரையில போய் உக்கார்ந்து பேசிட்டு இருந்தோம்மா. அப்படியே அங்கயே தூங்கவும் செய்துட்டோம். மாதவனும், கார்த்திக்கும் இப்போ தான் எழும்பி போறாங்க” என்றவன், குளித்து முடித்து அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

காலை ஆறுமணி போல, அம்மனின் சப்பரபவனி சேனாதிபதியின் வீட்டுக்கு அருகில் வர, அர்ச்சனை செய்து நிறைவாக அம்மனை வழிபட்டார்கள்.

அதன்பிறகு வாங்கி வந்திருந்த புதுத்துணிகளை எடுத்து எல்லோருக்கும் கொடுத்த சேனாதிபதி, பெரியப்பா வீட்டினருக்கு எடுத்து வந்திருந்ததை தானே கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்திருந்தான்.

அடுத்த சில மணி நேரங்களுக்கு, வீட்டிலுள்ள பெண்களின் பேசும்பொருள், சேனாதிபதி அவர்களுக்கு எடுத்து வந்திருந்த புடவைகளாகிப்போகின. அதுவும் யாரும் சொல்லாமலேயே மனைவிக்கும் தங்கைக்கும் ஒரேமாதிரியான புடவை எடுத்து வந்திருந்த சேனாதிபதியின் செயலை வீட்டிலுள்ளவர்கள் மெச்சிக்கொள்ள தவறவில்லை.

காலை உணவு முடியவும், சேனாதிபதி, “சுபா.. நான் தோட்டத்துக்கு போறேன், நீ வறியா?” என்று கேட்க, ஆளுக்கு முன்னர் “வருகிறோம்” என்று குதித்தார்கள் மங்கையும், ராகுலும்.

ஆனால், அவன் மனைவியோ, இப்போது அத்தையின் முகம் பார்த்து நின்றாள். “போய்ட்டு வா சுபா ம்மா…ஆனா, கொஞ்சம் சீக்கிரமா வந்துடுங்க” என்று அனுப்பி வைத்தார் தமிழரசி.

 மங்கையின் ஸ்கூட்டியில், ராகுலும், மங்கையும் முதலில் கிளம்ப, அவர்களுக்கு பின்னால், மனைவியோடு தகப்பனின் பைக்கில் கிளம்பினான் சேனாதிபதி. இதுவரைக்கும் கணவனோடு பைக்கில் பயணம் செய்யாத சுபாஷிணியின் உள்ளம் இந்த புது அனுபவத்தில் திளைத்திருக்க…

“வர்றியான்னு கேட்டா… வர்றேன்னு சொல்லாம, அங்க என்னடி பார்வை?” தனக்கு பின்னால் இரண்டு பக்கமும் கால்களை போட்டு அமர்ந்து கொண்டு தன் தோள்களை பற்றியிருந்த மனைவியிடம் கடுகடுத்தான் சேனாதிபதி.

“எங்கம்மா, எங்கிட்ட நகையை வாங்கிக்க சொன்னப்போ, நான் உங்க முகத்தை பாத்தேனே.. அப்போ மட்டும் ஐயாவுக்கு குளுகுளுன்னு இருந்திச்சில்ல.. இப்ப மட்டும் என்னவாம்?” கணவனின் தோளில் தன்முகவாயை வைத்து, நொடித்துக் கொண்டாள் சுபாஷிணி.

“ஓ… அப்போ நகையை வாங்கிக்க சொல்லலைன்னு அம்மணிக்கு ரொம்ப வருத்தம் போல.” விடாமல் சேனாதிபதி வழக்கடிக்க,

“உங்களுக்கெல்லாம் சொன்னா புரியாது த்தான்… எல்லாம் கேர்ள் பேபியா பெத்துகிட்டு, இதே சூழ்நிலையில உங்களை கொண்டு போய் நான் நிறுத்துறேன். அப்போ தான் உங்களுக்கு புரியும்” என்றாள் கோபமாக.

மனைவியின் வார்த்தைகளில் வாய்விட்டு சிரித்தவன், “எங்கிட்ட வரதட்சிணை கேக்குற எவனுக்கும் எம்பொண்ணுங்க கிடையாது, எழுதி வச்சிக்கோ” என்றான் வீராவேசமாக.

“ம்ப்ச்… இப்பவும் நீங்க தப்பா தான் புரிஞ்சிருக்கீங்க த்தான். டிமாண்ட் பண்ணி கேட்டா தான் வரதட்சணை. பெத்தவங்களா கொடுக்கிறது, பிறந்த வீட்டுல இருக்கிற பொண்ணுங்களுக்கான உரிமையை. அதை வேண்டாம்னு சொல்ல யாருக்கும் ரைட்ஸ் கிடையாது” என்றாள் தைரியமாக.

“நீ என்ன சொன்னாலும் சரிதான் சுபா… எம்பொண்டாட்டிக்கு தேவையானதை நானே பண்ணிப்பேன். அதுல தலையிடுறது உன்னைப் பெத்தவங்களா இருந்தாலும் எனக்கு பிடிக்காது” என்றான் தன் நிலையிலிருந்து இறங்காமல்.

இதற்கு மேலும் பேசினால், பேச்சு நீண்டுகொண்டே போகுமேயன்றி, ஒரு முடிவுக்கு வராது என்பது புரிந்து போக, சுபாஷிணி அமைதியாகிப் போனாள்.

ஒரு பத்து நிமிட பயணத்தில் தோட்டம் வந்து விட்டது. சுற்றிலும் கம்பி வேலி போட்டு தென்னை மரங்களோடு செழிப்பாக இருந்தது தோட்டம்.

தோட்டத்தின் முகப்பில் வண்டியை நிறுத்தி காலணிகளையும் அங்கேயே விட்டுவிட்டு, வெறும் காலில் வரப்பு வழியே சேனாதிபதி நடக்க, அவ்வாறே செய்த சுபாஷிணியும் கொஞ்சம் தடுமாறியபடியே கணவனை பின்தொடர்ந்தாள்.

“வரப்புல நடக்க தெரியலைன்னா சொல்லிடு சுபா, தூக்கிட்டு வேணும்னாலும் போறேன். கீழவிழுந்து கையைக் காலை முறிச்சு, அத்தானோட ஆசையில…” அதற்கு மேலும் சேனாதிபதி என்ன பேசியிருப்பானோ தெரியாது..

“மூச்…” என்று தன் உதட்டில் விரலை வைத்து அதட்டியவள், கண்களை உருட்டி தங்களுக்கு சற்று முன்னால் உற்சாகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த தங்களுடைய இளையவர்களை காட்ட,

“நேரம் டி..” என்றாலும், அதற்குப்பின் அமைதியின் சொரூபமாகிப் போனான் சேனாதிபதி. தோட்டம் முழுவதும் சுற்றியடித்து விட்டு, வேண்டிய மட்டும் இளநீர் குடித்துவிட்டு மத்தியானம் போல வீடுவந்து சேர்ந்திருந்தார்கள் நால்வரும்.

கோவிலில், சப்பரபவனிக்கு பிறகு நடைபெற வேண்டிய அனைத்து நிகழ்வுகளும் முடிந்து, கொடைவிழா இனிதே நிறைவு பெற்றிருந்ததையொட்டி, சேனாதிபதி வீட்டில் இரவு உணவு ஏழு மணிக்கே முடிவடைந்திருந்தது.

நல்ல காரசாரமான மட்டன் சாப்பாட்டை உண்டு முடித்து, மறுநாள் நடைபெற இருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியைப் பற்றி ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்கள் எல்லோரும்.

“அண்ணி, உங்க வீட்டுலயிருந்து எப்போ வர்றாங்க?” பேச்சுவாக்கில் தமிழரசி, தன் அண்ணன் மனைவியிடம் கேட்டார்.

சுபாஷிணி மீதும், சேனாதிபதி மீதும் காழ்ப்புணர்ச்சியில் இருக்கும் தன் அண்ணன் குடும்பத்தினரை, வரவேற்புக்கு அழைத்து வாங்கிக்கட்டிக் கொண்ட கதையை சொல்ல மனமின்றி, “கல்யாணத்துக்கு கூப்பிடலைன்னு அவங்களுக்கு கோபம், அதனால வர்றது கஷ்டம்னு தான் எனக்கு தோணுது” என்று சமாளித்தார் விசாலி.

எதையும் தூண்டித்துருவி கேட்கும் பழக்கம் தமிழரசிக்கு கிடையாது என்பதால் அதைப்பற்றிய பேச்சும் அத்தோடு முடிந்தது. கூடவே, மறுநாள் சமையலுக்கான அரிசி, மசாலா பொருட்கள், காய்கறிகள் எல்லாம் வந்து இறங்க, விழாவிற்கான பரபரப்பு, வீட்டில் அப்போதே தொற்றிக் கொண்டது.

சற்று நேரம் அங்கேயிருந்து விட்டு காலையில் வருவதாக சொல்லி, ராகுலோடு கிளம்பினார்கள் சுபாஷிணியின் பெற்றோர்கள்.

முந்தைய நாள் இரவு கோவிலுக்கு சென்று விட்டு தாமதமாகவே தூங்கியதால் ஒன்பது மணிக்கே எல்லோருக்கும் கண்களைச் சுழற்ற, தூங்குவதற்காக அவரவர் அறையை நாடிச் சென்றார்கள்.

சேனாதிபதியும் மாடியில் இருக்கும் தன் அறைக்கு செல்ல, அவன் பின்னோடு சென்ற சுபாஷிணியை அழைத்து, சுண்டக் காய்ச்சிய பசும்பாலை இரண்டு தம்ளர்களில் கொடுத்த தமிழரசி, “குடிச்சிட்டு தூங்குங்க சுபா” என்று சொல்ல, ‘உங்க பிள்ளை இன்னைக்கு தூங்குற ஐடியால எல்லாம் இல்ல த்த’ உள்ளுக்குள் முணுமுணுத்து கொண்ட சுபாஷிணிக்கு, பதட்டத்தையும் மீறி சிரிப்பு வந்தது.

இந்த இரண்டு நாட்களாக கணவனின் பேச்சும், பார்வையும், செயல்களும்… அவன் எதை நாடுகிறான் என்று அவளுக்கு தெரியாதா என்ன?

ஒரு புன்முறுவலோடு அறைக்கு வந்தவளுக்கு, கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி தனக்காக காத்திருந்த கணவனின் இந்த செயலும் புதிதுதான். இத்தனை நாட்களில் இப்படி ஒரு சூழ்நிலை அவர்கள் வாழ்க்கையில் அமையவே இல்லையே. எப்போதுமே மனைவி தூங்கிய பிறகு தானே சேனாதிபதியின் வருகை இருக்கும்.

தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்த கணவனிடம், “என்ன? பார்வையெல்லாம் பலமா இருக்கு த்தான்? ஹாங்…” புருவத்தை உயர்த்தியபடி கேட்ட சுபாஷிணி, கையிலிருந்த தம்ளரில் ஒன்றை கணவனுக்கு கொடுத்தாள். மற்றொன்றை அங்கிருந்த டேபிளில் வைத்தவள், கதவை தாழ் போட்டுவிட்டு கட்டிலில் கணவனுக்கருகே வந்து அமர்ந்தாள்.

“எதுக்குன்னு தெரியாதா?” மையலாக கேட்டபடி மனைவியின் வலதுகரத்தை சேனாதிபதி தன் கையால் பற்றிக் கொண்டான். அவள் பேச்சுக்கும், முகபாவத்திற்கும் எதிர்பதமாக, உடல் மெலிதாக நடுங்கியது அப்பட்டமாக அந்த கையில் தெரியவும், “இதைத்தான் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்குன்னு சொல்லுவாங்களா சுபா?” என்று சத்தமாக சிரித்தான்.

கணவனின் சிரிப்பில் பதறிப்போனவள், “ஐயோ… மெதுவா சிரிங்க த்தான். வெளிய கேட்கப்போகுது” என்று வேகமாக கணவனின் வாயை தன் விரல்களால் மூட,

அந்த விரல்களில் அழுத்தமாக முத்தமிட்டவன், “எங்கிட்ட உனக்கென்ன பயம்? சொல்லு சுபா” என்று மென்மையாக மனைவியை அணைத்தான்.

“எனக்கென்ன பயம்?” அலட்சியமாக தோள்களைக் குலுக்கியபடி வாகாக கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் சுபாஷிணி.

 “அப்போ… அன்னைக்கு ஏன் பெட்ஷீட்டால ஃபுல்லா கவர் பண்ணிட்டு படுத்திருந்தியாம்?” மனைவியின் மூக்கை பிடித்து ஆட்டியபடி சேனாதிபதி கேட்க,

“அது… விரதம்… அதான்.” பிடிபட்டுக்கொண்ட பாவனையில் வார்த்தைகளை இழுத்தாள்.

“ஹ்ம்ம்… நம்பிட்டேன்.” கேலியாக சிரித்தவன், “இப்போ… இங்க… நாம விரதத்தை முடிச்சிடலாமா? உனக்கு சம்மதமா சுபா?” மனைவியின் காதுமடலில் தன் உதடுகள் உரச மென்மையாக சேனாதிபதி கேட்க, பதில் சொல்லாமல் கணவனின் மார்போடு புதைந்து கொண்டாள் சுபாஷிணி.

“பதில் சொல்லு சுபா.” மனைவியின் முகத்தைப் பற்றி தன்முகம் பார்க்க வைக்க சேனாதிபதி முயல, பார்க்க மறுத்து கண்மலர்களைப் பூட்டிவைத்துக் கொண்டாள்.

மனைவியின் மூடிய கண்மலர்களில் முத்தமிட்டவனின் பார்வை எப்போதும் போல, அவள் உதட்டு மச்சத்திலும், மூக்குத்தியிலும் மையல் கொள்ள, ஒற்றை விரலால் அவற்றிற்கு ஒத்தடம் கொடுத்தவன், “மூக்குத்தி எப்போ போட்டுகிட்ட சுபா?” என்றான் கிசுகிசுப்பான குரலில்.

“நம்ம கல்யாணத்துக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி த்தான்.” மெல்லிய குரலில் என்றாலும் தயக்கமின்றி வந்தது பதில்.

மனைவியின் பதிலில் சிலவினாடிகள் மௌனமாக இருந்த சேனாதிபதி, “என்ன? எம்மேல லவ்வா?” நிறுத்தி, நிதானமாக கேட்க, சட்டென்று விழிமலர்களைத் திறந்த சுபாஷிணி, கணவனின் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டபடியே, “ஆமா” என்றாள் கிறக்கமாக.

அந்த ஒற்றை வார்த்தை சேனாதிபதியின் ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த காயத்திற்கு புனுகு பூசி, உலகத்தில் இருக்கும் அத்தனை சந்தோஷங்களையும் அவனுக்கு அள்ளி அள்ளித் தர, மாயம் செய்த மனைவியின் இதழ்களுக்கு பரிசுகளை வஞ்சமின்றி வாரி, வாரி வழங்கினான்.

கிடைத்த பரிசுகளை திருப்பி கொடுக்க அந்த பெண்மையும் முயல, இதழ் முத்தம், இதழ் யுத்தமாக நீண்டுபோனதில், அந்த ஒற்றை படுக்கை, காதல் போர்க்களமாக மாறிப்போனது.

 அந்த காதல் போர்க்களத்தில் இருவருக்கிடையே நடந்த காதல் போரில், ஒருவரை ஒருவர் வெற்றிகொள்ள முயல, முதல்முறையாக களம் கண்ட அந்த காதல் போராளிகள், காதலில் வெற்றியோ தோல்வியோ இருவருக்குமே சமம் என்ற சமாதான உடன்படிக்கைக்கு வராமல் போனதில்…

அங்கே, மீன்கொடி தேரில் மன்மதராஜன், தன் காதல் ரதியோடு உற்சாகமாகவே ஊர்வலம் செல்லத் தொடங்கியிருந்தான்…