அத்தியாயம் 15

அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவிற்கு இயல்பிற்கு வந்திருந்தாள் சுபாஷிணி. தன் தவறை உணர்ந்து கொண்டது போல சேனாதிபதியின் நடவடிக்கைகளும் இருக்க, அதற்கு மேலும் சுபாஷிணியால் முறுக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

ஆனால் உன்னை அப்படியெல்லாம் நிம்மதியாக இருக்க விட்டுவிட மாட்டேன் என்பது போல ரம்யாவிடமிருந்து அன்று சுபாஷிணிக்கு போன் வந்தது.

அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து உடைமாற்றி, காஃபியை கையிலெடுத்துக் கொண்டு அமர்ந்திருந்த சுபாஷிணிக்கு, ரம்யாவிடமிருந்து அழைப்பு என்றதுமே ஏனோ உள்ளுக்குள் அபாயமணி அடித்தது.

ஒருவிதமான அச்சத்தோடே சுபாஷிணி அழைப்பை ஏற்க, “எம்புருஷனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. சந்தோஷமா? இப்போ உனக்கு சந்தோஷமா?” என்று கத்தினாள் ரம்யா.

அப்போதும், ‘ஐயோ… இப்பிடி டென்ஷன் ஆனா, வயித்துல இருக்குற பாப்பாவுக்கு ஆகாதே’ என்ற எண்ணம் தான் இந்த மண்ணாந்தையிடம்.

“ச்சை… உன்னைப் போய் நம்புனேன் பாரு… என்னச் சொல்லணும்.‌.. வேறொன்னுமில்ல டி.. நானெல்லாம் உங்கிட்ட ஹெல்ப் கேக்குற நிலமைக்கு வந்துட்டேன்ல, அந்த திமிர் உனக்கு… உங்காலடியிலேயே நான் விழுந்து கிடக்கணுங்குற எண்ணம் உனக்கு. அதான் எந்த ஹெல்ப்பும் பண்ணாம கல்லுமாதிரி உக்காந்துட்டு இருக்கிற. நான் வயிறெரிஞ்சு சொல்லுறேன் சுபா… நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.”

தாட்பூட் தஞ்சாவூர் என்று தன் வாயில் வந்ததை எல்லாம் பேசி முடித்துவிட்டு ரம்யா அழைப்பைத் துண்டிக்க, என் வாயெல்லாம் என் கணவனிடம் மட்டுமே என்பது போல, பதிலெதுவும் பேசாமல் அந்த ரம்யா சொன்னது போல கல்லெனத் தான் உட்கார்ந்திருந்தாள் சுபாஷிணி.

சுபாஷிணி பதில் பேசவில்லை என்பதை விட, ரம்யா பேச விடவில்லை என்பது தான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு மூச்சு விடாமல், தானே பேசி முடித்துவிட்டு போனை வைத்திருந்தாள் ரம்யா.

 ‘காரியம் ஆகவில்லை என்றதும் இப்படி கூட தரம் தாழ்ந்து பேசமுடியுமா?’ அதிர்ச்சியாகத் தான் இருந்தது சுபாஷிணிக்கு. ‘நல்லவேளை, இவளுக்காக அத்தானிடம் உதவி கேட்டு, என்னுடைய மதிப்பை நான் தாழ்த்திக் கொள்ளவில்லை’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டாள்.

‘தண்டனை கிடைத்து விடும் என்று இப்போது வரும், பயமும் பதட்டமும், அடுத்தவர்களிடமிருந்து வாங்கிய பணத்தை, முறையாக முதலீடு செய்யும் போது இருந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் அடுத்தவர் பணத்தை, தன் பணம் போல உபயோகப்படுத்தினால் இப்படித்தான் ஆகிப்போகும்.” தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளுக்கு,

 கணவன் செய்தது தவறு என்பதை புரிந்து கொள்ள மறுத்து, சுபாஷிணி உதவி செய்யாதது தான் குற்றம் என்பது போல பேசிய ரம்யாவின் வார்த்தைகளே திரும்பத் திரும்ப காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘ரம்யா சொன்னது போல எப்போதுமே நான் நினைத்ததில்லையே… ஒருவேளை அவளுடைய எண்ணம் அதுவாக இருக்குமோ… தன்னைப் போல் பிறரை நினை என்று சொல்லி வைத்திருக்கிறார்களே.’

 கையிலிருந்த காஃபியை குடிக்கவும் மறந்து யோசித்து கொண்டிருந்தவளின் மனம், அந்த ரம்யா கடைசியாக சொன்ன வார்த்தைகளில் கலங்கிப் போனது. கணவன் வருவதற்கு சற்று நேரத்திற்கு முன் எழும்பி, குளிர்ந்து ஆடையோடிப் போயிருந்த காஃபியை சிங்கில் ஊற்றி, கப்பை கழுவி வைத்து விட்டு மறுபடியும் வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.

அன்றும், இரவு வழக்கமான நேரத்திற்கு வீடு திரும்பியிருந்த சேனாதிபதி, “என்னாச்சு சுபா?” என்றான் மனைவியின் கலங்கிய முகம் கண்டு.

“ப்ச்ச்… ஒன்னுமில்ல த்தான்” என்றபடி அங்கிருந்து எழும்பி சென்ற சுபாஷிணியின் விரல்கள், தன் பார்வையை மறைத்த கண்ணீரை நாசூக்காக சுண்டிவிட,

அவள் கையைப் பிடித்திழுத்து தன்முன்னே நிறுத்திய சேனாதிபதி, “அப்போ எதுக்கு இந்த கண்ணீர்?” என்றான் மனைவியை உற்று நோக்கியபடி.

“அது… கண்ணுல ஏதோ தூசி விழுந்திடிச்சி.” பதிலேதும் சொல்லாமல் விடமாட்டான் என்பதால் வாய்க்கு வந்ததை சுபாஷிணி சொல்ல,

 “அந்த தூசுக்குப் பெயர் ரம்யாவா?” என்று கேட்டு மனைவியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சேனாதிபதி, “சொல்லு… அன்னைக்கு உங்க மாமா ஃபேமிலி எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க?” என்று கேட்டான்.

“நம்ம வீட்டுக்கு இல்ல… உங்க வீட்டுக்கு” என்று அப்போதும் கணவனை திருத்தினாள் சுபாஷிணி.

“ப்ச்ச்… சுபா.. எல்லாத்துக்கும் சேர்த்து தான், அன்னைக்கே சாரி கேட்டுட்டனே. அப்புறமும் நடந்ததையேச் சொல்லிச் சொல்லிக் காட்டக்கூடாது” என்றான் அதட்டலாக.

‘சரிதான், சாமி மலையேறிடிச்சி…’ என்று மனதிற்குள் அலுத்துக் கொண்ட சுபாஷிணி பதிலேதும் சொல்லாமல் மௌனவிரதத்தை கடைபிடிக்க,

“அந்த ரம்யா ஹஸ்பெண்ட் விஷயத்துல உங்கிட்ட ஹெல்ப் எதுவும் கேட்டு வந்தாங்களா என்ன?” என்று கேட்ட சேனாதிபதி, மனைவியின் அதிர்ந்த பார்வையில், “அவங்களுக்கு ஹோப் குடுக்குற மாதிரி நீ எதுவும் சொல்லி அனுப்புனியா?” என்றான் சற்றே கோபமாக.

“உங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சும், அனாவசியமா அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்க எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்றாள் சுபாஷிணி.

“அப்போ எந்த தைரியத்துல அந்த ரம்யாவோட ஹஸ்பென்ட் எம்பெயரை மாதவன் கிட்ட யூஸ் பண்ணுனான்?” என்றான் அடங்காத கோபத்தில் சேனாதிபதி.

“என்ன த்தான் சொல்லுறீங்க?”

“ம்ம்… என்னை அவனோட நெருங்கிய சொந்தம்னு சொல்லியிருக்கான். எப்போன்னாலும் எனக்காக உங்க ஃப்ரெண்ட் உங்ககூட பேசி கேஸை எனக்கு ஃபேவரா முடிச்சிவிடச் சொல்லலாம்னு தெனாவெட்டா சொல்லியிருக்கான். மாதவன் எங்கிட்ட போன் பண்ணி கேக்குறான். எனக்கு அசிங்கமாப் போச்சு. இப்பிடி சொல்ல எவ்வளவு தைரியம் இருக்கும் அந்த பொறம்போக்குக்கு? இதெல்லாம் யார் குடுத்த தைரியம்?” என்று பற்களைக் கடித்தான் சேனாதிபதி.

ஒரு, ‘நோ பார்க்கிங்’ ஏரியாவில் வண்டியை நிறுத்தி, அதை போலீஸ் கைபற்றக்கூடிய சூழ்நிலை வந்தால் கூட, ஏதோ ஒரு முறையில், எங்கேயோ ஒரு உறவினன் போலீஸாக இருக்கும் பட்சத்தில், அதைச் சொல்லி தப்பிக்க பார்க்கும் உலகம் தானே இது. அப்படித்தான் ரம்யாவின் கணவனும் முயன்றிருக்கிறான் என்று புரிந்தது சுபாஷிணிக்கு.

ஆனால், என்பெயரை எப்படி அவன் உபயோகப்படுத்தலாம் என்று கோபத்தின் உச்சியில் நின்ற கணவனை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் நின்றிருந்த சுபாஷிணி, அன்று, மாமன் குடும்பத்தார் வந்து தன்னிடம் உதவி கேட்டதையும், அதற்கு தன்னுடைய பதிலையும் மறைக்காமல் கணவனிடம் சொன்னாள்.

கூடவே, ரம்யாவின் வயிற்றுக் குழந்தைக்காக தான் உதவி செய்ய நினைத்ததையும் கூட தயங்கித் தயங்கிச் சொல்ல, “அப்போ அவங்கிட்ட பணத்தை முதலீடு செய்தவன் பொண்டாட்டி பிள்ளை எல்லாம் நாசமா போனா பரவாயில்லையா உனக்கு?” என்று காட்டமாக கேட்ட சேனாதிபதி,

“சட்டத்துக்கு முன்னாடி எல்லாருமே சமம் தான் சுபா. என் வேலை ‌விஷயத்துல நீ என்னைக்குமே தலையிட நினைக்கக் கூடாது” என்று கட்டளையாகச் சொல்ல, தலையாட்டிக் கொண்டாள்.

அந்த சம்பவத்தைப் பற்றி பேசும் போதுதான் சேனாதிபதியிடம் முறைப்பு, கோபம் எல்லாம். அதன்பிறகு எப்போதும் போல சாதாரணமாக அவன் பேச ஆரம்பிக்க, தானும் கணவனின் வாழ்க்கை முறைக்கு பழகிக்கொள்ள வேண்டும் என்று தான் தோன்றியது சுபாஷிணிக்கு.

 இரவு உணவோடு இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்த நேரம், சுபாஷிணியின் போன் அடிக்க, ‘இப்போது யாரோ?’ என்ற பயத்தோடு தான் கைபேசியை பார்த்தாள் சுபாஷிணி.

அழைத்தது சேனாதிபதியின் அம்மா தமிழரசி. முகத்தில் தானாக ஒரு நிம்மதி பரவ, “அத்தை தான்” என்றபடியே அழைப்பை ஏற்று பேசத் தொடங்கினாள் சுபாஷிணி.

அத்தையும் மருமகளும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்ள, “சுபா ம்மா… இன்னும் பத்து நாள்ல நம்ம அம்மங்கோவில் கொடை வருதே… அதோட, உங்களுக்கு ஒரு ரிசப்ஷன் வைக்கணும்னு மாமா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க ஒரு நாலஞ்சு நாள் லீவ்ல வந்தா நல்லாயிருக்கும்னு தோனிச்சு. அதான் போன் பண்ணுனேன்” என்று தான் அழைத்த காரணத்தைச் சொன்னார் தமிழரசி.

“லீவ் விஷயம் உங்க பிள்ளைகிட்ட தான் அத்த நீங்க கேட்கணும்” என்றாள் சுபாஷிணி.

“எங்க ம்மா அவனை பிடிக்க முடியுது? எப்ப பாத்தாலும் வேலை… வேலைன்னு ஓடுறான். அவன் வேலைல இருக்கும் போது நாமளும் தொந்தரவு செய்யக்கூடாதுன்னு நாங்களும் போன் பண்ணுறதே இல்ல. அவனா போன் பண்ணுனாத் தான் உண்டு. அதான் உன்னை அவன்கிட்ட கேக்கச் சொல்லலாம்னு போன் பண்ணினேன்” என்றார் தமிழரசி.

“உங்க பிள்ளை இப்போ வீட்ல தான் இருக்காங்க. நீங்க அவங்க கிட்ட நேரடியாவே பேசிடுங்க த்த” என்றபடி போனை கணவனிடம் நீட்டினாள் சுபாஷிணி.

 சாப்பிட்டபடியே போனை வாங்கி ஸ்பீக்கர் மோடுக்கு மாற்றிக் கொண்டு, டேபிளில் இருந்த வாட்டர் பாட்டிலின் மீது அதை சாய்த்து நிற்கவைத்த சேனாதிபதி, “சொல்லுங்க ம்மா” என்றான்.

மருமகளிடம் சொல்லியவற்றை அப்படியே மகனிடமும் சொல்லிய தமிழரசி, “எப்போ சேனா ஊருக்கு வர்றீங்க?” என்றார் ஆவலாக.

“ம்மா… மொதல்ல என்னால நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் லீவ் எடுக்க முடியாது. அப்புறம் கல்யாணம் ஆகி இரண்டு மாசம் முடியப் போகுது. இப்போ எதுக்கு இந்த வேண்டாத வேலை” என்றான் பிடிகொடுக்காத குரலில்.

“ஐயையோ… நீ சொன்னதை உங்க பெரியப்பா கிட்ட சொல்லணும்.. அவ்வளவு தான் எங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார். அதுவுமில்லாம இது கிராமம் டா. உங்க கல்யாணத்தை காதும் காதும் வச்சமாதிரி முடிச்சிட்டோம்னு எல்லாரும் சொல்லுறாங்க. அதுக்காகவாவது இந்த பங்ஷனை வச்சே ஆகணும், வேண்டாம்னு சொல்லாத.” இறைஞ்சல் குரலில் தமிழரசி கேட்க,

“உங்க இஷ்டம் போல பண்ணுங்க ம்மா. ஆனா நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் என்னால லீவ் எடுக்க முடியாது. புதன்கிழமை காலைல வருவோம். கொடை முடிஞ்சதும் மறுநாள் காலைல ஃபங்ஷன்… அன்னைக்கு சாயங்காலமே கிளம்பிடுவோம்” என்று இறங்கி வந்தான் மகன்.

“அதெப்பிடி ப்பா.. உங்க கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற மொத அம்மன் கொடை. செவ்வாய்க்கிழமை பூஜைக்கு நீங்க நிக்க வேண்டாமா?” அங்கலாய்த்தார் தமிழரசி.

இது பூரணி அம்மா குடும்ப கோவில் திருவிழா அல்ல. சேனாதிபதியின் தகப்பன் வாசுவின் குடும்பகோவில். மூன்றுநாள் கொடை விழா, திங்கள்கிழமை ஆரம்பித்து புதன்கிழமை வரை நடக்கும். அதில் செவ்வாய்கிழமை மத்தியான பூஜையும், இரவு பூஜையும் விசேசம்‌.

புதன்கிழமை காலை, அம்மனின் சப்பரபவனி நடைபெறும். அதன் பிறகு கோவிலில் பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம், அம்மன் மஞ்சப்பானை குளித்தல், கிடா வெட்டு என்று கொடை விழா முடிவுக்கு வரும். கடைசியில் அத்தனை நாட்கள் விரதத்தை கறி விருந்தோடு மக்கள் முடித்துக் கொள்வார்கள்.

இத்தனையிலும், மகன் குடும்பத்தோடு நிற்க வேண்டும் என்ற ஆசை அந்த அன்னைக்கு. ஆனால், மகனின் பணிச்சூழல் அதற்கு அனுமதிக்குமா என்ற தயக்கமும் அவருக்கு இருக்கத்தான் செய்தது.

“ம்மா… இன்னும் பத்துநாள் இருக்கு. அதைப்பத்தி பிறகு பேசிக்கலாம்” என்று மகன் முடிக்க, “வச்சிடாத சேனா… சுபாகிட்ட போனைக் குடு, அம்மா அவகிட்ட பேசணும்” என்றார் அவசரமாக தமிழரசி.

எல்லாவற்றையும் கேட்டபடியே அமர்ந்திருந்த சுபாஷிணி, “சொல்லுங்க த்த” என்க, “சுபா… உனக்கு பங்ஷனுக்கு பட்டுசாரி எடுக்கணும். அங்கயே உனக்கு பிடிச்சமாதிரி எடுத்துக்குறியா?” என்றார் தமிழரசி.

“அத்த… எனக்கு பட்டுசாரி பத்தி என்ன தெரியும்? நீங்களே எடுத்துடுறீங்களா? ப்ளீஸ்…” என்றாள் சுபாஷிணி கொஞ்சலாக.

“ம்மா… அதெல்லாம் நாங்க இங்கயே எடுத்துக்குறோம்.. நானே நல்ல கலர்ல அழகா செலக்ட் பண்ணி குடுக்குறேன் உங்க மருமகளுக்கு.” சம்மன் இல்லாமலேயே சேனாதிபதி ஆஜராக, எதிர்முனையில் இருந்த தமிழரசிக்கு வாயெல்லாம் பல். அருகில் இருந்த மனைவியின் மனமோ, “அப்போ, சாரி எடுத்தது போலத்தான்” என்று முணுமுணுத்துக் கொண்டது.

“சரி ப்பா… சரி ப்பா..” என்று சொல்லிக் கொண்ட தமிழரசி, தன் தொண்டையை லேசாக செருமிக்கொண்டு, “அப்புறம் சுபா.. இன்னும் இரண்டு மூனு நாள்ல, கோவில்ல நோன்பு போட்டுருவாங்க. எல்லா நாளும் இல்லாட்டாலும் ஒரு ஐந்து நாளாவது நீங்க விரதமா இருக்கணும் ம்மா” என்றார் மெல்லியக் குரலில்.

அவருக்கு போன் ஸ்பீக்கர் மோடில் இருப்பது தெரியவில்லை. மருமகளின் கையில்தான் போன் இருக்கிறது, அவள் பேசியதை வைத்து, அருகில் இருந்து கொண்டு மகன் பதில் சொல்கிறான் என்ற எண்ணம்.

“நான் வேலைக்கு போறதால நான்வெஜ் சமைக்க நேரமே கிடைக்குறதில்ல அத்த… எப்பவாவது தான், நானே சமைப்பேன். நீங்க சொல்லிட்டீங்க இல்ல, இனி கொடை முடியுறது வரைக்கும், அதுவும் கிடையாது” என்றாள் சுபாஷிணி ஊருக்கு போகும் உற்சாகத்தில்.

“அது இல்ல டா?” எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தமிழரசி வார்த்தைகளை மென்று விழுங்க,

“வேற எதுவும் செய்யணுமா? தயங்காம சொல்லுங்க த்த செய்திடலாம்.” வரப்போகும் வில்லங்கம் தெரியாமல் வாக்குறுதியை அள்ளித்தெளித்தாள் சுபாஷிணி.

“இல்ல… கோவில் விஷயம்… நீங்க சின்னஞ்சிறுசுக… கல்யாணமாகி வேற கொஞ்சநாள் தான் ஆகுது… அதான்… சாமி விஷயமா இல்லன்னா, நான் சொல்லவே மாட்டேன்…” என்று தமிழரசி வார்த்தைகளை பிய்த்து பிய்த்து சொல்ல, தன் அத்தை என்ன சொல்ல வருகிறார் என்று அப்போது தான் பல்ப் எரிந்தது சுபாஷிணிக்கு.

புரிந்தவளுக்கு குப்பென்று முகமெங்கும் செம்மை பூக்க, சட்டென்று போனின் ஸ்பீக்கர் மோடை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டவளின் கண்கள் அவசரமாக கணவனின் பக்கம் திரும்பிப் பார்த்தது.

அவனோ, வாயைத் தன் கைகொண்டு மூடி, சிரிப்பை அடக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ‘அப்படியென்றால் அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லாம் புரிந்திருக்கிறது. நான் தான் ஜோக்கராகிப் போனேன்’ என்ற எண்ணத்தில் சுபாஷிணி கணவனை முறைத்துப் பார்க்க, தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவினான் சேனாதிபதி. என்றாலும் அவன் முகத்தில் மட்டும் அந்த சிரிப்பு அடங்குவேனா என்றது.

அதன் பிறகு தமிழரசி சொல்லியதெற்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டி, பேசி முடித்து வந்த சுபாஷிணி, இன்னும் சிரிப்பு மாறாத முகத்தோடு நின்றிருந்த கணவனின் முன்னால் வந்து நின்று, தன் இடுப்பின் இருபுறமும் கைகளை வைத்துக் கொண்டு, “என்ன சிரிப்பு? ஹாங்…” என்றாள் அதட்டலாக.

“இல்ல… உங்க அத்த சொன்னதுக்கு, நாங்க ரொம்ப நாளா விரதமாத்தான் இருக்குறோம்னு சொல்ல வேண்டியது தான சுபா.” இன்னமும் அதிகமாக விரிந்த சிரிப்போடு சொன்னான் சேனாதிபதி.

“எல்லாம் உங்களாலத் தான்… செய்யுறதையும் செய்துட்டு, இப்போ சிரிப்பு வேறயா உங்களுக்கு?” பற்களைக் கடித்துக்கொண்டு தன் கைகளை கணவனின் கழுத்தை நெறிப்பது போல கொண்டு சென்றாள் சுபாஷிணி. அந்த கைகளை லாவகமாக பற்றி தன்னை நோக்கி சேனாதிபதி இழுக்க, அவன் மார்போடு மோதி நின்றாள்.

அவள் இதயமோ நடந்த நிகழ்வில் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. அதை உணர்ந்து கொண்டது போல சிரித்த சேனாதிபதி, “என்ன?விரதத்தை முடிச்சிடலாமா?” என்று கண்களைச் சிமிட்டியபடி கேட்டான்.

  கணவன் கேட்ட பாவனையில் இரத்தமெனச் சிவந்து போன முகத்தோடு, அவன் கைகளிலிருந்து நழுவி சிட்டென அறைக்குள் நுழைந்து கொண்டாள் சுபாஷிணி.

அன்றிரவு பணி முடிந்து, எப்போதும் போல படுக்கைக்கு வந்த சேனாதிபதியின் கண்களில், தலைமுதல் கால் வரை என்றுமில்லாமல் போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் மனைவி விழ, அந்த நள்ளிரவிலும் கூட வாய்விட்டு சிரித்தான் சேனாதிபதி.

மறுநாள் சாயங்காலம் ஆறுமணிக்கு வீட்டுக்கு வந்து நின்ற சேனாதிபதி, “கிளம்பு சுபா, ட்ரெஸ் எடுத்துட்டு வந்துடலாம்” என்று சொல்ல, ஆச்சர்யமே சுபாஷிணியிடம்.

“நான் பாத்திரம் வாங்கித் தந்த கதையாத்தான் இதுவும் முடியப் போகுதுன்னு நேற்று நினைச்ச தானே நீ” என்று கேட்டு மனைவியை இன்னும் ஆச்சர்யப்படுத்திய சேனாதிபதி, “உன் நினைப்புக்குள் எல்லாம் அடங்காதவன் ம்மா இந்த சேனாதிபதி” என்று சட்டைக் காலரை உயர்த்தி விட்டுக்கொண்டான்.

கணவனை கணிக்க முடியாமல் திணறிய சுபாஷிணிக்கு, அவன் வார்த்தைகள் என்னவோ உண்மை என்று தான் தோன்றியது.

பெரும்பாலும் தான் அணியும் வெள்ளை டீ சர்ட், காக்கி பேண்ட் தவிர்த்து, கறுப்பு பேண்ட், ஸ்கைப்ளூ ஃபுல் ஸ்லீவ் சர்ட் என்று கிளம்பி வந்து மனைவியின் கண்களை நிறைக்கவே செய்தான் சேனாதிபதி.

கணவனிடமிருந்து கண்களை எடுக்க முடியாமல் அவ்வப்போது சுபாஷிணி அவனை பார்வையால் வருட, “என்னாச்சு?” என்று கேட்டவனிடம், “இந்த அவுட்ஃபிட்ல ரொம்ப நல்லாயிருக்கீங்க த்தான்” என்று தன் மனதை மறைக்காமல் சுபாஷிணி சொல்ல, சேனாதிபதியின் இதழ்கள் புன்முறுவல் பூத்தது. கையோ மீசையை நீவிவிட்டுக் கொண்டது.

சந்தோஷமான மனநிலையிலே பட்டுக்கு புகழ்பெற்ற ஷோரூமுக்கு மனைவியை அழைத்து வந்த சேனாதிபதி , சொன்னது போல தானே மனைவிக்கு பட்டுப்புடவை தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டான்.

 ‘தாயிடம் ஜம்பமாக ஏதோ சொல்கிறான், நாம்தான் புடவை தேர்வு செய்ய வேண்டியிருக்கும்’ என்று நினைத்து வந்திருந்த சுபாஷிணிக்கு, அலட்டிக்கொள்ளாமல் கணவன் தேர்வு செய்த அழகைக் காணும்போதே, அவன் சும்மா ஒன்றும் சொல்லவில்லை என்பது புரிந்துவிட்டது.

 அதுவும் பத்தே நிமிடத்தில், ஒரு அடர்குங்கும நிறத்தில் புடவையைத் தேர்வு செய்து, அதற்கு எதிர்பதமாக கரும்பச்சையில் டிசைனர் ப்ளௌவ்ஸ்ஸும் சேனாதிபதி தேர்வு செய்ய, சுபாஷிணிக்கு மயக்கம் வராத குறை தான்.

“எப்பிடி த்தான்? இவ்வளவு ஃபாஸ்டா, லேட்டஸ்ட் ட்ரெண்ட்ல ட்ரெஸ் செலக்ட் பண்ணி அசத்துறீங்க?” என்று கணவனின் காதில் கேட்டே விட்டாள்.

பதிலுக்கு ஒரு மயக்கும் புன்னகையை மட்டுமே பதிலாக்கியவன், மனைவிக்கு எடுத்தது போலவே தங்கைக்கும் எடுத்துக் கொண்டான்.

தென்மாவட்டங்களில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில், மணப்பெண்ணுக்கு முகூர்த்த புடவை எடுப்பது போலவே, மணமகனின் உடன்பிறந்த சகோதரிகளுக்கும் புடவை எடுப்பது இப்போதும் வழக்கத்தில் இருக்கிறது. எனவே தங்கைக்கும் மனைவியைப் போலவே எடுத்துக் கொண்டான் சேனாதிபதி.

அடுத்ததாக தனக்கு என்ன எடுக்கலாம் என்று யோசிக்கும் போது, “வேஷ்டி சட்டை எடுங்க த்தான்” என்றாள் சுபாஷிணி ஆசையாக. மறுக்காமல் அதையே எடுத்துக் கொண்டான்.

அதன் பிறகு, தனது பெற்றோருக்கு, பாட்டிக்கு, சுபாஷிணியை பெற்றவர்களுக்கு, ராகுலுக்கு, இவ்வளவு ஏன்? அவன் பெரியப்பா குடும்பத்துக்கு வரை படபடவென துணிகள் எடுத்து முடித்து விட்டான்.

  கூடுதலாக மனைவிக்கென்று சில புடவைகளை எடுத்து, மனைவியின் எல்லா புடவைகளுக்கும் ஜாக்கெட்டும் அங்கேயே கடையோடு சேர்ந்தாற்போல இருந்த டெய்லர் ஷாப்பில் தைக்கவும் ஏற்பாடு செய்துவிட்டான்.

வரும் வழியில் இரவு உணவையும் முடித்து, மனைவியை வீட்டில் கொண்டு விட்ட சேனாதிபதி, மறுபடியும் சீருடை அணிந்து இரவுநேர ரோந்துப் பணிக்கு கிளம்பி விட்டான்.

போகும் போது, “இன்னைக்கு நான் எப்போ வருவேன்னு தெரியாது சுபா. நீ படுத்துக்கோ” என்று சொல்ல, இந்த மூன்றுமணி நேரங்களையே கணவன் தன்னோடு செலவழிப்பதற்காக கடும்பிரயத்தனம் செய்துள்ளான் என்பது புரிந்தது சுபாஷிணிக்கு. வழிநெடுகிலும் அத்தனை அலைபேசி அழைப்புகள்.

இந்த சூழ்நிலையில் எப்படித்தான் விடுமுறை எடுத்துக் கொண்டு கணவன் ஊருக்கு வருவானோ என்ற கவலை அவளுக்கு அப்போதே உண்டாயிற்று.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவே ஊருக்கு செல்வதற்கு தயாராகி விட்டான் சேனாதிபதி. என்ன? விடாது கருப்பு என்பது போல போன் அழைப்புகள் மட்டும் அவனைத் தொடர்ந்தபடியே தான் இருந்தன…

இம்முறை விமானத்தில் செல்வதாக ஏற்பாடு. போய், திரும்பி வருவதற்கான டிக்கெட்டுகள் இருவருக்கும் முன்கூட்டியே பதிவு செய்தாயிற்று.

அவர்கள் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. மாலை ஆறு மணிக்கு தான் விமானம் என்பதால் மத்தியானம் வரை சுபாஷிணி வேலைக்கு கூட சென்று வந்திருந்தாள்.

அலுவலகத்திலிருந்து வந்து, கணவன் கேட்டுக் கொண்டபடி அவன் எடுத்து வைத்திருந்த உடைகளையும், தன்னுடைய உடைகளையும் பேக் செய்து முடித்து, தானும் தயாராகி கணவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தவளுக்கு அவன் வந்து சேரும் வரைக்கும் திக்திக் நிமிடங்களே.

மனைவியை ரொம்பவும்‌ கலங்கடிக்காமல் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்த சேனாதிபதி, அவள் கழுத்தைப் பார்த்து, “தங்கங்கொடியை எடுத்து வச்சிருக்கியா சுபா?” என்று கேட்டான்.

“இல்லத் த்தான். எனக்கு இதே போதும்” என்றாள் சுபாஷிணி.

“உனக்கு போதும்… ஆனா, நம்ம ஊர்க்காரங்களுக்கு போதாது சுபா, எடுத்து வச்சிக்கோ” என்று சேனாதிபதி சொல்ல, யோசித்தபடி நின்றாள் சுபாஷிணி.

“ரோமில் ரோமானியனாய் இருன்னு கேள்வி பட்டதில்லையா சுபா? அதுவும் கொடை, ரிசப்ஷன் எல்லாம் இருக்குது. கேக்குறவங்களுக்கு பதில் சொல்லி மாளாது. அந்த ரிஸ்க்ல இருந்து நீ தப்பிக்கணும்னா எடுத்து வச்சிக்கோ” என்று சேனாதிபதி சொல்ல, புரிந்து கொண்டவளாக சுபாஷிணியும் செயினை எடுத்து தன் கைப்பைக்குள் வைக்க முயன்றாள்.

 அதைத் தன் கைகளில் வாங்கி, “எங்கூடத்தானே வர்ற, அதனால கழுத்திலயே போட்டுக்கோ” என்று மனைவியின் கழுத்தில் அணிவித்தவன், அவள் முகத்தை தன்னிரு கைகளால் பற்றி, இதழ் முத்தம் ஒன்றும் வைத்து, “ஹ்ம்ம்… இரண்டு தடவை தாலி கட்டிருக்கேன். ஆனா, ஒருதடவை கூட ஒன்னுமே நடக்கல” என்று பெருமூச்சு விட்டான்.

கணவனின் இந்த காதல் மன்னன் அவதாரத்தில் விதிர்விதிர்த்து போன சுபாஷிணிக்கு, உள்ளுக்குள் உதறல் எடுக்கத்தான் செய்தது…