அத்தியாயம் 01

சென்னை திருவல்லிக்கேணியின் பிரதான பகுதியில், தான் தங்கியிருந்த வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலுக்கு முன்னால், ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டு நின்றிருந்தாள் சுபாஷிணி. கூடவே, அவள் அறைத்தோழியும், அலுவலகத் தோழியுமான திவ்யா நின்று கொண்டிருந்தாள். நேரம் மாலை ஆறு மணி.

“நீ திடீர்னு லீவ் கேக்கவும், நம்ம ஆடிட்டர் முகம் அப்செட் ஆகிப்போச்சு, கவனிச்சியா சுபா?” தன் பயணப்பையைத் தோள்களில் மாட்டிக்கொண்டு, நின்றிருந்த இடத்திலிருந்தே இடதுபக்க சாலையைப் பார்த்துக் கொண்டிருந்த சுபாஷிணியிடம் கேட்டாள் திவ்யா.

“ம்ப்ச்… அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல, நீயா கற்பனை பண்ணி பேசாத திவ்யா.”

 அலுத்துக்கொண்டே சொன்ன சுபாஷிணி, ‘சந்தனத்தில் கடைந்தெடுத்த சிலையோ இவள்!’ என்று காண்பவர்கள் வியந்து போகும் தோற்றப் பொலிவோடு இருந்தாள். அணிந்திருந்த கறுப்புநிறச் சுடிதார் அவள் நிறத்தை இன்னும் அதிகப்படுத்தி காட்டியது.

“உன் மனசுல வேணும்னா ஒண்ணுமில்லாமல் இருக்கலாம் சுபா. ஆனா, நம்ம ஆடிட்டர் மனசுல ஆயிரம் இருக்கு. அதை எப்போ வேணும்னாலும் உங்கிட்ட அவர் கொட்டலாம், தயாராயிரு” கண்களை உருட்டியபடி அருள்வாக்கு சொன்னது போல அறுதியிட்டு சொன்னாள் திவ்யா.

சுபாஷிணி, திவ்யா இருவருமே காஸ்ட் ஆடிட்டிங்(CMA) முடித்து, இளம் ஆடிட்டர் ஒருவரிடம் கடந்த ஒரு வருடமாக பணியில் இருக்கிறார்கள். இங்கிருந்து ஒரு இருபத்தைந்து நிமிட பயணத்தில் அவர்களின் அலுவலகம் வந்துவிடும். ‘ஆனந்த்’ என்பது அவர்கள் ஆடிட்டரின் நாமகரணம். திருமணம் ஆகாத முப்பது வயது இளைஞன் தான் ஆனந்த்.

பெண்களில் சற்றே உயரமாகவும், உயரத்திற்கு ஏற்ப லேசாக பூசினாற் போன்ற உடல்வாகோடும் இருந்த சுபாஷிணி, தன் கயல்விழிகளை லேசாக சுருக்கி, செர்ரிபழ உதடுகளை சுழித்து, “ஓஹ்… நோ… திவி. இந்த மாதிரி பேசாத, எனக்கு பிடிக்கலை” என்றாள் தோழியிடம் கண்டிப்பாக.

 இடப்பக்க சாலையிலிருந்த தன் பார்வையை விலக்கி திவ்யாவின் முகத்தைப் பார்த்து சுபாஷிணி பேசும் போது, செதுக்கி வைத்தது போன்ற அவளின் அழகான மூக்கில், மூக்குத்தி என்ற பெயரில் வீற்றிருந்த துளி வைரம், இந்த அழகியின் பேரழகுக்கு நான் தான் காரணம் என்று கர்வமாக டாலடித்தது.

“இல்லை, இல்லை… நீ நேற்று வந்தவள். சுபாஷிணியின் அழகுக்கு காரணம் அவளோடு ஒட்டிக் கொண்டு பிறந்த நான்தான்” என்று சொல்வது போல, அவள் செர்ரீபழ மேலுதடுக்கு மேல், மிளகு அளவில் மச்சம் ஒன்று அழுத்தமாக வீற்றிருந்தது.

ஆம்… சுபாஷிணி இப்போது இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் மூக்குத்தி அணிந்து கொண்டாள். மூக்கு குத்திய பிறகு, ஊரில் இருக்கும் தாயிடம் வீடியோ காலில் பேசி, விபரத்தை சொன்னபோது, அவள் வாங்கிக் கட்டிக்கொண்ட வசவுகள் ஏராளம்.

என்றாலும், அவள் மூக்குத்தி போடுவதற்கான காரணம், அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம்.

“ஒருவேளை நம்ம ஆடிட்டர் உங்கிட்ட லவ் ப்ரொப்போஸ் செய்து, உனக்கு அவர் மேல அப்பவும் ஐடியா எதுவும் இல்லைன்னா, அப்படியே என் பக்கமா கையைக் காட்டி விட்டுடு சுபா. உனக்கு புண்ணியமா போகும். சிட்டியில இவ்வளவு அழகோடும், நல்ல தொழிலோடும் இருக்கிற மாப்பிள்ளை கிடைக்குறது ரொம்ப கஷ்டம் ப்பா. பிளீஸ்…”

கண்களைச் சுருக்கி, கெஞ்சல் தொனியில் சொன்ன திவ்யாவின் பாவனையில் வாய்விட்டு சிரித்த சுபாஷிணி, “காதல் ங்குறது அழகைப் பார்த்தும், வசதி வாய்ப்பை பார்த்தும் வரக்கூடாது திவி. அது மனசைப் பார்த்து வரணும்” வார்த்தைகள் மென்மையாக, மனதின் ஆழத்திலிருந்து வந்தது சுபாஷிணிக்கு.

“ஹேய்… சுபா, என்ன தத்துவ மழையா கொட்டுற? அனுபவமா?” கிண்டலாக திவ்யா கேட்க, “ஆமாம்..” என்று முணுமுணுத்தது சுபாஷிணியின் மனது. ஆனால் உதடுகளோ அதற்கு நேர்மாறாக, எதுவும் சொல்லாமல் மௌனத்தையே கடைபிடித்தது.

“பாட்டிக்கு உடம்புக்கு முடியல, உடனே கிளம்பி வா ன்னு உங்க அப்பா சொன்ன உடனே கிளம்பிட்டியே. உங்க பாட்டின்னா உனக்கு அவ்வளவு இஷ்டமா சுபா?” ஆடிட்டர் பேச்சிலிருந்து அடுத்த பேச்சுக்கு தாவியிருந்தாள் திவ்யா.

“அப்பாவோட அம்மாவை, எங்க கன்னியாகுமரி மாவட்டத்தில அப்பாம்மை ன்னு தான் சொல்லுவாங்க திவி” என்று திவ்யாவின் வார்த்தையைத் திருத்திய சுபாஷிணி,

 “இப்போ மூனு வருஷத்துக்கு முன்னாடி தான், நாங்க குடும்பத்தோடு எங்க சொந்த ஊரான கன்னியாகுமரி பக்கத்துல இருக்கிற மாதவபுரத்துல போய் செட்டில் ஆனோம் திவ்யா. அதுக்கு முன்னாடி இங்க சென்னையில் தான் இருந்தோம்னு உங்கிட்ட சொல்லியிருக்கேன் தானே. அப்படியும், அப்பா, அம்மா, தம்பின்னு எல்லாரும் தான் ஊர்ல இருக்காங்க. நான் படிப்பை காரணம் காட்டி இங்கயே இருந்தாச்சு.”

 “சென்னைக்கு எங்ககூட வர விரும்பாம அப்பாம்மை எப்பவுமே ஊர்ல தான் இருந்தாங்க. அவங்க கூட நான் நிறைய நாள் இருந்ததில்லைனாலும் எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கும் என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போ அவங்களுக்கு முடியாத ஸ்டேஜ்ல என்னை பாக்கணும்னு ஆசைப்படும் போது, நான் போய்தானே ஆகணும். அதுதானே நான் அவங்க அன்புக்கு குடுக்கிற மரியாதை” என்று சொன்னவளின் கண்கள் இடப்பக்க சாலையை மறுபடியும் தூழாவியது.

அப்பா பரந்தாமன் விஷயத்தை சொல்லி, இன்னாரோடு சேர்ந்து வீட்டுக்கு வந்துவிடு என்று சொன்ன நேரத்தில் இருந்து, தனக்கு தானே சமாதானமாக சொல்லிக் கொண்ட வார்த்தைகளையே, திவ்யாவுக்கு பதிலாக்கினாள் சுபாஷிணி.

“ஆத்தாடியோ… நான் உன்னை வீட்டுக்கு கிளம்பி போக வேண்டாம்னு எல்லாம் சொல்லலை சுபா. நீ எனக்கு இவ்வளவு பெரிய விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டாம்.”

இயல்பிலேயே ஜாலி பேர்வழியான திவ்யா, தோழியை கிண்டலடித்தபடியே, “உன் ரிலேட்டிவ் கூட கார்ல போகப்போறேன். அவங்க இங்க வந்தே உன்னை பிக்கப் பண்ணிப்பாங்கன்னு சொன்னியே சுபா. ஆனா, இன்னும் யாரையும் காணலையே?” என்றவள், தோழியோடு சேர்ந்துகொண்டு இடதுபக்க சாலையைப் பார்த்தாள்.

அந்நேரம் அவர்கள் இருவருக்கும் முன்னால் சர்ரென்று கிரீச்சிட்டபடி வெள்ளைநிற ஸ்கார்பியோ ஒன்று வந்து நின்றது.

 தங்கள் முன் கார் வந்து ஒதுங்கி நிற்கவும், பெண்கள் இருவரும் இயல்பாக இருஅடிகள் பின்னோக்கி நகர்ந்திருக்க, காரின் முன் கதவை திறந்து கொண்டு இறங்கினான் இளைஞன் ஒருவன்.

நல்ல நெடுநெடுவென்ற வளத்தியோடும், கட்டுக்கோப்பான உடம்போடும், திராவிட நிறத்தோடும் இருந்தவனின் பார்வை சுபாஷிணியின் மீதுவிழ, “பை திவ்யா.. நான் கிளம்புறேன்” என்றபடியே அந்த காரில் ஏறிக்கொண்டாள் சுபாஷிணி.

 காரிலிருந்து இறங்கிய இளைஞன் மீது திவ்யாவின் மொத்த கவனமும் இருக்க, சுபாஷிணி சொல்லியது எங்கே திவ்யாவின் காதுகளில் விழுந்தது.

“ஹேய்… இது நம்ம ஏசிபி சேனாதிபதி ல்ல? இவங்க தான் நீ சொன்ன ரிலேட்டிவ்வா?” இந்த கேள்விகளோடு திவ்யா, சுபாஷிணியைப் பார்க்க, காரோ அங்கேயிருந்து நகர்ந்திருந்நது‌.

காருக்குள் ஏறி அமர்ந்த சுபாஷிணி, தன் ஷோல்டரில் கிடந்த பையை மெதுவாக கழற்றி பக்கத்தில் சீட்டில் வைக்க, பொறுமையின்றி சத்தமிட்டது அவளது கைப்பேசி.

அழைப்பது கண்டிப்பாக திவ்யாவாகத் தான் இருக்கும் என்று தெரிந்ததால், அதுவும் இப்போது அவள் பேச்சு யாரைப் பற்றியதாய் இருக்கும் என்ற யூகமும் இருந்தபடியால் போனை எடுக்க தயக்கமாக இருந்தது சுபாஷிணிக்கு. எனவே, ஒருமுறை முழுமையாக அடித்து ஓய்ந்தது கைபேசி.

ஆனால், விட்டேனா பார் என்று மறுபடியும் போன் சிணுங்க, இப்போது முன் சீட்டில் அமர்ந்திருந்த சேனாபதி திரும்பி சுபாஷிணியைப் பார்த்தான். அந்த பார்வையில் இருந்த கண்டிப்பில் போனை எடுத்து காதுக்கு கொடுத்தாள் சுபாஷிணி.

“இவரத்தான் உன்னோட ரிலேட்டீவ்னு சொன்னியா சுபா?” எந்தவிதமான சுற்றி வளைப்பும் இன்றி நேரடியாக கேள்வி வந்தது திவ்யாவிடமிருந்து.

“ம்ம்…” ஒற்றை எழுதிலேயே பதில் சொல்ல முயன்றாள் சுபாஷிணி.

“இவர் தான், இன்னைக்கு தேதிக்கு சென்னை யங்ஸ்டர்ஸ் மத்தியில, யூத் ஐக்கானா உலாவர்ற சேனாபதி ஐபிஎஸ், நம்ம சென்னையோட ஏசிபி ங்குறதாவது தெரியுமா உனக்கு?” இப்போது கொஞ்சம் கோபமாக கேள்வி வந்தது திவ்யாவிடமிருந்து.

“ம்ம்..”

“அடிப்பாவி… வரப்போறது இவர் தான்னு ஒருவார்த்தை சொல்லியிருந்தா, நான் கொஞ்சம் நீட்டாவாவது ட்ரெஸ் பண்ணிட்டு நின்னுருப்பேனேடி. இப்பிடி பக்கி மாதிரி நின்னுருக்கமாட்டேனே” என்று அங்கலாய்த்த திவ்யா,

“ஆமா… ஏசிபி உனக்கு என்ன வேணும்?” என்றாள் வேகமாக. பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் சுபாஷிணி.

“அண்ணனா?” தோழியிடமிருந்து பதிலேதும் இல்லாமல் போகவே, தானே தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினாள் திவ்யா.

“ஐயையோ இல்ல…” பதட்டமாக பதில் வந்தது சுபாஷிணியிடமிருந்து.

“இதுக்கு மட்டும் வாய்முத்து நல்லாவே உதுறுமே” கிண்டலடித்த திவ்யா, “அப்போ… அத்தானா?” ஒரு பரபரப்போடு கேட்டாள்.

“ம்ம்…” தன் கழுத்தில் கிடந்த தங்கத்தால் ஆன மெல்லிய செயினை கைவிரல்களில் பற்றி லேசாக உருட்டியபடியே பதில் சொன்ன சுபாஷிணியின் விழிகள், தான் பேசுவதை சேனாதிபதி கவனிக்கிறானா என்று லேசான பதட்டத்தோடு பார்த்து வைத்தது.

“ஹைய்…யோ… ஏசிபி உன் அத்தானா? சொல்லு… சொல்லு… எப்படி உனக்கு அவர் அத்தான்னு சொல்லு” உற்சாகமாக கதை கேட்கும் ஆர்வத்தில் திவ்யா இறங்க, அதை வாய்விட்டு சொல்லமுடியாத சூழ்நிலையில் அமர்ந்திருந்த சுபாஷிணி, “நான் ஊருக்கு போய்ட்டு அப்புறமா உனக்கு கூப்பிடுறேன் திவ்யா” என்று தோழியின் ஆர்வத்திற்கு தடை போட்டாள்.

“அதானே… இனிமே உன் அத்தான் கூட கடலைப் போடவே உனக்கு டைம் சரியா இருக்கும். இதுல எங்கூட எல்லாம் பேச நேரமிருக்குமா உனக்கு?”

 திவ்யா புலம்பிக் கொண்டிருக்கும் போதே, சிலையென இறுகிப்போய் முன்னால் அமர்ந்திருந்தவனை அரைக்கண்ணால் பார்த்த சுபாஷிணி, ‘கடலையா?… யாரு இவங்க கூடவா? கோபத்துல இவங்க என்னை கடிச்சி வைக்காமல் ஊருக்கு கூட்டிட்டு போனா போதாதா?’ என்று நினைத்துக் கொண்டவள், தோழிக்கு பதிலேதும் சொல்லாமல் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

போனையும் தன் பக்கத்தில் வைத்துக் கொண்ட சுபாஷிணி, முன்னால் சாலையை பார்ப்பது போல, காருக்குள் நிலவிய சூழ்நிலையை கணிக்க முயன்றாள்.

காரை ட்ரைவ் செய்து கொண்டிருந்த ட்ரைவருக்கு, எப்படியும் நாற்பது வயது இருக்கும் போல தோன்றியது. கர்மசிரத்தையாக காரை செலுத்திக் கொண்டிருந்தார்.

சேனாதிபதியோ தன் போனுக்கு வந்து கொண்டிருந்த அழைப்புகளை ஏற்று பேசிக்கொண்டிருந்தான். பேசிக்கொண்டிருந்தான் என்று சொல்லுவதை விட ஏதேதோ கட்டளைகளை இட்டு, அவற்றை நிறைவேற்றி விடுமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்தான். குரலில் கம்பீரம் நிரம்பி வழிந்தது.

மற்றபடி அவன் முகத்தில் இருந்து துளி அளவு கூட எந்தவிதமான உணர்வுகளையும் படித்து விடமுடியவில்லை சுபாஷிணியால். ஆனால் தன்னை உடன் அழைத்துக் கொண்டு செல்வதில் அவனுக்கு பெரிதாக உடன்பாடு இல்லை என்பதை அவன் உடல்மொழி சொல்லாமல் சொல்லியது சுபாஷிணிக்கு.

இந்த எண்ணம் தோன்றவும் சுபாஷிணியின் மனது சோர்ந்து போனது. கூடவே, ‘எல்லாம் நீ இழுத்து விட்டது தானே சுபா. இப்போது அனுபவி’ என்று மனது வேறு அவளை இடித்துரைக்க, தன் முட்டாள்தனத்தை எண்ணி தன்மீதே வெறுப்பு வந்தது சுபாஷிணிக்கு.

இப்போது காரின் டேஸ்போர்டில் இருந்த சேனாதிபதியின் பெர்ஸ்ஸனல் போன் அழைக்கவே, அழைப்பை ஏற்று காதுக்கு போனைக் கொடுத்தவன், “பாட்டி ம்மா எப்படி இருக்காங்க ப்பா?” என்றான் மென்மையாக.

சற்றுமுன் பேசிய குரலுக்கும் இப்போது பேசும் குரலுக்கும் ஆறு என்ன, ஆயிரம் வேறுபாடு கண்டுகொள்ளலாம் போலிருந்தது சுபாஷிணிக்கு.

“ஹ்ம்ம்… என்னத்த சொல்ல சேனா. நேரம் போகப்போக, உங்க பாட்டியோட வீசிங் அதிகமாயிட்டே தான் போகுது. ஹாஸ்பிடலுக்கு வாங்க போயிடலாம்னு சொன்னா, என்னோட பேரனும் பேத்தியும் வந்தபிறகு போகலாம்னு அடம்பிடிக்குறாங்க ப்பா. ஆனாலும் இந்த வயசுல அவங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுப்பா” அலுத்துக் கொண்டார் சேனாதிபதியின் அப்பா வாசு. நோயுற்ற பெண்மணிக்கு உரிய சிகிச்சை வழங்க முடியவில்லையே என்ற ஆதங்கமே மேலோங்கி நின்றது அவரின் குரலில்.

சேனாதிபதி ‘பாட்டி’ என்று தகப்பனிடம் விசாரித்தது, சுபாஷிணி ‘அப்பாம்மை என்று சொன்ன பூரணி அம்மாவைத்தான்.

 ஆமாம், பூரணி அம்மாவின் மகன்வழி பேத்தி தான் சுபாஷிணி. மகள்வழிப் பேரன் சேனாதிபதி. சுருங்கச்சொன்னால், சுபாஷிணியின் அப்பா பரந்தாமனும், சேனாதிபதியின் அம்மா தமிழரசியும் உடன்பிறந்த அண்ணன், தங்கை.

தந்தை சொன்னது போல பாட்டிக்கு பிடிவாதம் எவ்வளவு அதிகமோ, அதேபோல மன உறுதியும் ரொம்பவே அதிகம் என்று எப்போதும் சேனாதிபதி நினைத்தது உண்டு.

இல்லையென்றால், தன்னிரு பிள்ளைகளின் பதின்மவயதின் போது இராணுவத்தில் இருந்த கணவர் இறந்த பிறகும் கூட, உரிய வயது வந்த உடனே மகனை இராணுவத்தில் சேரச் சொல்லமுடியுமா என்ன?

ஆனால், பூரணி அம்மாவின் மகனான பரந்தாமனின் கனவு, லட்சியம் எல்லாம் வேறாக இருக்க, தாயின் சொல்லை கேட்க மறுத்து தன் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள சென்னைக்கு பறந்து விட்டார்.

மகனின் செயலில் அந்த அன்னைக்கு வருத்தம் தான். அந்த வருத்தத்தை இராணுவத்தில் பணியாற்றிய தங்கள் ஊரைச் சேர்ந்த வாசுவுக்கு தன் மகள் தமிழரசியை திருமணம் செய்து கொடுத்து தீர்த்துக் கொண்டார் பூரணி.

கணவர் இராணுவத்தில் இருக்கும் போது, தனிமையில் இருந்த தாயோடு தான், தமிழரசியின் பொழுதுகள் பெரும்பாலும் கழிந்தன. கணவர் விடுமுறைக்கு வரும்போது தங்கள் வீட்டில் சென்று தங்கிகொள்வார்கள்.

அப்போதும் கூட சில நேரங்களில், “நான் வர்றதே ஒருவாரம், பத்துநாள் லீவுல, அதுக்கு போட்டு நீ ஏன் மா, அங்கயும் இங்கயுமா அல்லாடுற? நான் இங்கயே தங்கிட்டு போறேன்” என்று வாசு மனைவியிடம் சொல்லிவிடுவார்.

வாசுவின் பெற்றோர்களும் மருமகளின் சூழ்நிலையையும் மகனின் சூழ்நிலையையும் புரிந்து கொள்ள கூடியவர்களாக இருந்ததால், அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் வந்ததே இல்லை.

ஆக, தகப்பன் ஸ்தானத்தில் நின்று தன்னையும் தன் தங்கையும் வளர்த்த பாட்டி மீது அளவுகடந்த பாசம் உண்டு சேனாதிபதிக்கு.

அதுவே, “பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு வர மறுக்கிறார்கள். உன்னையையும் சுபாவையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால், நீ வரும்போது சுபாஷிணியையும் உன்னோடே அழைத்து வந்து விடு” என்று தகப்பன் சொல்லவும், மாமன் மகளை தன்னோடு அழைத்துச் செல்வதில் விருப்பம் இல்லையென்றாலும், தகப்பனின் விண்ணப்பத்தை மறுக்காமல், சேனாதிபதியை செய்ய வைத்தது.

சென்னை மாவட்ட சட்டம் ஒழுங்கு ஏசிபி யாக கடந்த இரண்டு வருடங்களாக பணியாற்றி வருபவனுக்கு அலுவலக உபயோகத்திற்கென்று தனி வாகனம் உண்டு.

அதைத் தவிர்த்து வாடகைக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்ட சேனாதிபதி, தன் ட்ரைவரையே இந்த வண்டியை ஓட்டுவதற்கும் பயன்படுத்தி கொண்டான்.

ஏனோ மற்றவர்களை விட தனது ட்ரைவரே அவனுக்கு சௌகர்யமாக இருக்க, இதோ வாடகை வாகனத்தில் தனது ட்ரைவரோடும், மாமன் பெத்த மயிலோடும் கன்னியாகுமரிக்கு அருகே இருக்கும் தனது சொந்த ஊரான மாதவபுரத்தை நோக்கி பயணத்தை தொடங்கிவிட்டான் சேனாதிபதி. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகான பயணம். அதுவும் பாட்டியை முன்னிறுத்தி.

“சேனா‌‌… தம்பி சேனா…” பாட்டியின் நினைவில் மூழ்கியிருந்தவனை தகப்பனின் குரல் தட்டியெழுப்ப, “ஹ்ம்ம்… சொல்லுங்க ப்பா” என்றான் சேனாதிபதி.

“சுபாவை பிக்கப் பண்ணியாச்சா ப்பா?”

“ம்ம்… ஆமா ப்பா” சுரத்தில்லாமல் பதில் வந்தது அந்த ஏசிபி யிடமிருந்து.

“கொஞ்சம் பிள்ளைகிட்ட போனைக் கொடு. நான் அவகிட்ட ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்.”

தந்தையின் வார்த்தைக்கு பதில் சொல்லாமல், தனது விருப்பமின்மையை மௌனத்தில் காட்டினான் அந்த காவலன்.

“உன்னை நம்பாம இல்ல டா. நானும் இரண்டு வார்த்தை பேசலாம்னு தான்” குரலில் மௌனச்சிரிப்பு இழையோட மகனிடம் சொன்னார் வாசு.

அதற்கு மேலும் தந்தையிடம் மறுப்பது சரியில்லை என்று தோன்றவே, லேசாக தன் உடலை திருப்பி, போனை சுபாஷிணியை நோக்கி நீட்டினான் சேனாதிபதி.

 அப்பா என்று சேனாதிபதி பேசத் தொடங்கவுமே, பேசுவது யார் என்று புரிந்து தான் போயிருந்தது சுபாஷிணிக்கு. எனவே அவன் நீட்டிய போனை வாங்கி, “சொல்லுங்க மாமா” என்றாள் தயக்கமின்றி.

அதன்பிறகு வந்த ஒரு ஐந்து நிமிடங்கள் மாமனும் மருமகளும் பேச்சில் பிஸியாகிப் போக, சேனாதிபதி தனது அலுவலக அழைப்பில் தன்னை தொலைத்து கொள்ள ஆரம்பித்திருந்தான்.

மாமனோடு பேசி முடித்திருந்த சுபாஷிணி, சேனாதிபதியின் கைபேசியை தன் துப்பட்டாவால் அழுந்த துடைத்துவிட்டு பேசிக்குரியவனிடம் அதை கொடுக்க முற்படும் போது, ஒரு அலைபேசி அழைப்பில் மூழ்கியிருந்தான் சேனாதிபதி.

பேசி முடிக்கட்டும் அதன் பிறகு கொடுத்து கொள்ளலாம் என்று நினைத்தவளின் கண்கள், அவள் அனுமதியின்றியே, அத்தை மகனின் பக்கவாட்டு தோற்றத்தை அளவிடத் தொடங்கியது.

கிள்ளிப் பிடிக்க அநாவசியமான சதையின்றி அமைந்திருந்த முக அமைப்பும், அந்த முகத்தில் வசீகரமாக அமைந்திருந்த மீசையும், அந்த அடர்ந்த மீசையை தன் பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் கொண்டு அவன் நீவி விடும் பாங்கும் என்று தன்னுடைய ஒவ்வொரு செயலாலும் மாமன் மகளை பித்தாக்கி கொண்டிருந்தான் சேனாதிபதி.

அதுவும் இருக்கையின் கைவைக்கும் பகுதியில் தனது வலது கையை ஊன்றியபடி மும்முரமாக சேனாதிபதி பேசிக்கொண்டிருக்க, அணிந்திருந்த அரைக்கை டீசர்டின் கைப்பகுதியைத் தாண்டி திரண்டு நின்றிருந்த கையின் தசைக்கோளம் அவனின் இடைவிடாத உடற்பயிற்சியை அவளுக்கு சொல்லியது.

 அதைத்தொடர்ந்து தங்களுக்குள் நடந்திருந்த உரையாடல்கள் அத்தனையையும் மனதுக்குள் உலாவர மனம் சோர்ந்து போனது சுபாஷிணிக்கு.

‘அத்தனை குளறுபடிகளை செய்து வைத்துவிட்டு வீணாக அவனை ரசிக்காதே மனமே’ என்று தனக்குத்தானே கடிவாளமிட்டு கொண்டவள், போனை சேனாதிபதியின் கைகளில் கொடுத்து விடும் நோக்கத்தில், “அத்தான்… உங்க போன்” என்று மெதுவாக அவனை அழைத்தாள். இன்னும் சொல்லப்போனால் தயங்கித் தயங்கி தான் அழைத்தாள்.

அவ்வளவு தான்… சரேலென்று இவள் பக்கம் திரும்பியவனின் கண்களில் நெருப்பு பறந்தது. பயந்தே போனாள் சுபாஷிணி. ஒருவேளை, ட்ரைவர் இருந்ததனால் அத்தோடு விட்டானோ என்னவோ?

நீண்ட காலங்களுக்கு பிறகு தனது அத்தை மகனை இத்தனை அருகில் கண்டதால் வந்திருந்த இதம் கூட துணிவைத்து துடைத்தது போலாகியது சுபாஷிணிக்கு. எதுவும் சொல்லாமல் கைபேசியை உடையவனிடம் ஒப்படைத்து விட்டு தனது இருக்கையில் சுருண்டு கொண்டவள், ஜன்னல் வழியே பார்வையை வெளியே வீசினாள்.

ஆதவன் விடைபெற்று சென்றிருந்ததால் சுற்றுப்புறம் இருள் சூழ ஆரம்பித்திருக்க, நகர் முழுவதும் மின்விளக்கின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருந்தது.

 எதிரே வரும் வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் முகத்தில் விழுவதால், இரவுநேர பயணங்களை விரும்புவதில்லை சுபாஷிணி.

இப்போது அத்தை மகனின் கோபப்பார்வையும் சேர்ந்து கொள்ள, தான் செய்து வைத்திருந்த குளறுபடிகள் ஒன்றன்பின் ஒன்றாக அவள் மனதில் வந்து போனது.

இத்தனையையும் செய்துவிட்டு மறுபடியும் அவனிடம் அனுசரணையை எதிர்பார்ப்பது தவறு என்பது அவளுக்கு புரிந்தது. இனி பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடு கண்களை மூடி தூங்குவதற்கு முயற்சி செய்தாள் சுபாஷிணி…