“அத்தான்… என்னத்தான்… அவர் என்னைத் தான்…

எப்படி சொல்வேனடி?”

மதிய உணவு இடைவேளையில் வகுப்பறை டெஸ்கில் கவிழ்ந்து படுத்திருந்த ப்ரபாவின் காதுகளில் ராகத்தோடும், அதிகப்படியான குழைவோடும் பாடினாள் கமலி, பிரபாவின் ஆருயிர் தோழி கமலி.

காதருகே கேட்ட சத்தத்தில் சட்டென்று கலைந்து, காதை விரலால் தேய்த்து விட்டுக் கொண்டே எழுந்த ப்ரபா, “அடியேய்! எங்காது என்ன சூப்பர் சிங்கர் மேடையா? நீ உருகி உருகி பாடுறதுக்கு!” என்று தோழியை முறைத்தவள்,

“ம்ப்ச்… எல்லா வானரங்களும் கேண்டீனுக்கு போயிடிச்சு, கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கி எழும்பலாம்னு நினைச்சா, காதுக்குள்ள வந்து கழுதை மாதிரி கத்திக்கிட்டு…” சலித்துக் கொண்டபடியே மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

“ஹேய்… இந்த பட்டப்பகல்ல, காலேஜ்ல வச்சு தூக்கம் வருதா உனக்கு? ஏன்? ஏன்? ஏன்?” ஒவ்வொரு ஏன்களையும் ஏற்றியும், இறக்கியும் சொல்லிய கமலி,

“ஒருவேளை, ராத்திரி முழுக்க கனவுல மாம்ஸ்ஸோட ஜோடி போட்டுக்கிட்டு, நம்ம ஊரு கடல்ல எரிஞ்ச தீயை அணைக்க போனியோ? அதான் அம்மணிக்கு இப்போ தூக்கம் தூக்கமா வருதோ?”

படு கிண்டலாகக் கேட்ட தோழியை விளையாட்டாக முறைத்தாலும், நேற்று அத்தானின் செயல்களால், தான் தூக்கம் இழந்தது உண்மை தானே என்று எண்ணும் போதே ப்ரபாவின் முகம் சிவந்து போனது.

“ஹைய்… மாம்ஸ்ஸப் பத்தி சொன்னதுமே அம்மணிக்கு முகம் சிவந்து போச்சு! அப்போ நேற்று சேதாரம் கொஞ்சம் அதிகம் தானோ?”

குறும்புச் சிரிப்போடு, ஆர்வமாகக் கேட்ட தோழியிடம், ‘ஆமாம்… நேற்று என் அத்தை மகன் என்னை முத்தமிட்டு விட்டான். அதுவும் என் இதழ்களிலேயே… என்று சொல்லவா முடியும்?’

எண்ணமிட்டவளின் இதழ்கள் வெட்கப்புன்னகையில் விரிய, மனதிலோ, முந்தைய நாளின் நினைவுகள் படமாக விரிந்தது.

“அப்படி தெரியலையே… பாக்குறதுக்கு சும்மா கும்முன்னு பட்டர்பன்னு போலல்லத் தெரியுற!” சொல்லிக்கொண்டு, உல்லாசமான சிரிப்போடு தன் அருகில் நெருங்கி நின்றிருந்த ரஞ்சித்தைப் பார்த்து முறைத்தாள் ப்ரபா.

“ம்ஹூம்… கூட்டத்தோடு நிக்கும்போது யாரோ மாதிரி என்னை பாத்துட்டு, இப்போ யாரும் இல்லாத இடத்துல இந்த டயலாக்குக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை.” படபடவென்று பொரிந்த மாமன் மகளின் கைகளை சட்டென்று பிடித்தவன்,

“இன்னைக்கு ஃபங்ஷனுக்காக, வீட்ல முக்கியமான சொந்தக்காரங்க எல்லாம் கூடியிருக்காங்க, அவங்க முன்னாடி உன்னத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு இன்ட்ரோ குடுத்திடுறேன் பேபி. வா…” என்று இழுத்தான்.

“ஹையோ… இப்பவேயா? வேணாம்… வேணாம்… அம்மாவுக்கு, அண்ணாக்கெல்லாம் தெரிஞ்சா என்னை கொன்னே போடுவாங்க. கையை விடுங்கத்தான்…” பதறியபடி சிணுங்கியவளின், கண்களை உற்றுப்பார்த்த ரஞ்சித்,

“வீட்லயிருந்து மறைக்கணும்னு நினைக்கிறது யாரு? நீயா? இல்லை நானா? சொல்லு பேபி. உனக்காகத்தான் நான் அங்க அமைதியா நின்னேன்னு இப்போ உனக்கு புரியுதா?”

ஆளை மயக்கும் குரலில் கேட்டவன், தன் பிடியிலிருந்த பெண்ணவளின் சங்குக்கரங்களின் நீளமான விரல்கள் ஒவ்வொன்றையும் தடவி சொடுக்கெடுக்க ஆரம்பித்தான்.

“ஹ்ம்ம்… வலிக்குது த்தான், கையை விடுங்க…” சிணுங்கியவளின் வார்த்தைகளை காற்றில் பறக்கவிட்டவன் கர்மமே கண்ணாகிப்போனான்.

“நானும் மறைக்கணும்னு நினைக்கல த்தான்… நாம இரண்டு பேரும் லவ் பண்ணுறோம்னு தெரிஞ்சா, நிச்சயமா வீட்ல பூகம்பம் வெடிக்கும்.”

“இன்னும் ஏழெட்டு மாசத்துல என்னோட பி ஜி கோர்ஸ் கம்ப்ளீட் ஆகும். வெடிக்கிற பூகம்பம் அதுக்கு பிறகு வெடிக்கட்டுமேன்னு தான் சொல்லாம இருக்குறேன்.”

“ஆனா, எம்மேல அவ்வளவு பாசமும், நம்பிக்கையும் வச்சிருக்குறவங்ககிட்ட இருந்து இந்த விஷயத்தை மறைக்குறது எனக்கு கில்டியா ஃபீலாகுது தெரியுமா?” கம்மியக்குரலில் சொல்லிய ப்ரபாவின் வார்த்தைகளில் குற்ற உணர்ச்சி பொங்கி வழிந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்னால் நண்பர்களோடு வேளச்சேரி கற்பகம் சில்க்ஸ்ஸில் நின்று கொண்டிருந்த போது, “நான் யார்னு தெரியுதா? என்ற கேள்வியோடு ப்ரபாவதி முன் வந்து நின்றான் ரஞ்சித்.

தான் பதின்மவயதுகளில் ரசித்த இளைஞன் தற்போது முழு ஆண்மகனாக மாறி தன்முன் வந்து நிற்க, சட்டென்று முகம் மலர்ந்தவள், “தெரியும்” என்னும் விதமாக லேசாக தலையசைத்தாள்.

“தலையசைச்சா நான் என்னன்னு எடுத்துக்குறது? தெரியுமா? தெரியாதான்னு வாயத்தொறந்து சொல்லு.”

யாரோ ஒரு இளைஞன் வந்து நின்று தன் தோழியிடம் வார்த்தையாடுவதை, அங்கங்கே நின்ற அவளுடைய தோழமைகள் காணவும், அவளருகில் ஓடிவந்து, “என்னாச்சு ப்ரபா? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்க,

 “இல்ல ப்பா… இது எங்க அத்தான் தான்.” சொல்வதற்குள் இரத்தமென சிவந்து போயிருந்தது பெண்ணவளின் முகம்.

“பரவாயில்லையே… இன்னும் நல்லாவே ஞாபகம் வச்சிருக்கியே!” பாராட்டு பத்திரம் வாசித்தவன், அதன் பிறகு அடிக்கடி ப்ரபா போகுமிடங்களில் தென்பட ஆரம்பித்தான்.

அதன்பின் திடீரென்று ஒருநாள் தன் காதலையும் அவன் சொல்ல, முதலில் கொஞ்சம் அதிர்ந்து போனாலும், இன்று சிங்காரச் சென்னையை வலம் வந்து கொண்டிருக்கும் காதலர்களில் இவர்களும் ஒருவர்.

தன் படிப்பு முடிந்த பிறகே நம்முடைய காதல் வீட்டுக்கு தெரிந்தால் போதும் என்ற ரீதியில் பேசிய ப்ரபாவின் வார்த்தைகளில்,

“என்ன? இன்னும் ஏழெட்டு மாசம் வெயிட் பண்ணனுமா? என்னால முடியாது பேபி!” என்றபடியே, தலை முதல் பாதம் வரை மாமன் மகளை தன் கண்களால் அளந்தவன்,

“சில்க் சாரி கட்டி, தலைநிறைய பூ வச்சி, சும்மா கல்யாணப் பொண்ணு மாதிரி ஜம்முன்னு தான் புறப்ட்டு வந்திருக்க. வா… இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்.”

 கைகளுக்கு விடுதலை கொடுத்து பாவையவள் கன்னங்களைப் பற்றியவனின் முரட்டு வேகத்தில் பயந்து போன ப்ரபாவதி, “இல்ல… இப்ப இல்ல…” ஏதோ வாய்க்கு வந்ததை உளறியவளின் இதயம் இனம்புரியாத பயத்தில் எக்ஸ்பிரஸ் வேகம் கொள்ள,

“அம்மா தேடுவாங்க நான் போறேன் த்தான்” என்று சொல்லிக்கொண்டு அறையிலிருந்து வேகமாக வெளியே செல்ல முயன்றாள்.

“ஹேய்…ப்ரபா! நில்லு… நில்லு… முக்கியமா உன்னை இந்த ரூமுக்கு வரவச்ச மேட்டரே இன்னும் முடியல. அதுக்கிடையில நீ ஓடுற.” சட்டென்று அவளுக்கு முன்னால் வந்து வழியை மறைத்தபடி நின்றவனின் பார்வை, பெண்ணவளை துளைத்தது.

அந்த காந்தப் பார்வை உள்ளுக்குள் குளிரைப் பரப்ப, “அம்மா தேடுவாங்க, நான்…” என்று திரும்பவும் ராகம் இழுக்க ஆரம்பித்தவளைப் பார்த்து, “நான் உன்னை கடிச்சு ஒண்ணும் தின்னுற மாட்டேன். மெதுவா போலாம்” என்று அதட்டியவன்,

 கிஃப்ட் பேப்பரால் சுற்றப்பட்ட பார்சலை எடுத்து பிரபாவிடம் நீட்ட, அதை உடனே கைகளில் வாங்காமல், “என்னது த்தான்?” என்றாள் தயக்கத்தோடு.

“இந்த தடவை பெங்களூர் போயிருக்கும் போது ஷோரூம்ல, ட்ரெண்டியா ஒரு ட்ரெஸ் பாத்தேன். உனக்கு நல்லாயிருக்கும்னு தோணிச்சு, உடனே வாங்கிட்டேன். விளக்கம் போதுமா? இப்பவாவது வாங்கிக்குவியா?”

“இல்ல… எங்கிட்ட ட்ரெஸ்ஸெல்லாம் நிறைய இருக்கு த்தான்.”

“இப்போ உங்கிட்ட ட்ரெஸ் இல்லைன்னு யாரு சொன்னா?ஆனா, எப்ப பாரு சுடிதார், தாவணி, சாரின்னு கட்டி, அத்தானை போரடிக்குற டார்லிங். அதான் என்னோட டேஸ்ட்டுக்கு வாங்கிட்டு வந்தேன். எடுத்துட்டு போ பேபி” என்றவன், இதழ்களில் குறும்பு கூத்தாட,

“அஃப்கோர்ஸ்… சாரி எனக்கு பிடிக்காத ட்ரெஸ்ஸா இருந்தாலும், இன்னைக்கு அது தான் எனக்கு ரொம்பவே கருணை காட்டியிருக்கு.” மெல்லிய குரலில் முணுமுணுத்தவனின் கண்கள் மெல்லிடையாளின் வெற்றிடையில் வெட்கமே இல்லாமல் ஊர்வலம் சென்றது.

 அத்தைமகனின் பேச்சிலும், செயலிலும் கூச்சம் வந்து பெண்ணவளை வேரோடு சாய்க்க, வேகமாக சாரியை சரி செய்து கொண்டு, கிஃப்ட்டை வாங்கியவள்,

“சாரி த்தான்… இதை இப்போ நான் வீட்டுக்கு எடுத்துட்டு போகமுடியாது” என்று சொல்லி, ரஞ்சித் எடுத்த இடத்திலேயே அதை திருப்பி வைக்கும்போது, ஏதோ பொறிதட்ட முகத்தை சுருக்கியபடியே,

“இந்த கிஃப்ட் பார்சல் ஏற்கனவே இங்க வந்து உக்காந்திருக்குறதைப் பார்த்தா, என்னோட தாம்பாளங்களும் உங்க ப்ளான்படித் தான் இங்க வந்துதோன்னு, எனக்கு இப்ப சந்தேகம் வருது?”

லேசாக முறைத்தபடி கேட்டவளின் தலையைப் பிடித்து ஆட்டி, “ஹைய்ய்…யோ! என் அறிவுக்கொழுந்து… எவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிடிச்சி?” குலுங்கிச் சிரித்தவனின் கைகளில் அழுத்திக் கிள்ளியவள், “ஃப்ராட் அத்தான்” என்று சொல்ல,

“வெறும் ஃப்ராட் இல்லை பேபி, ஒன்னாம் நம்பர் ஃப்ராட்.” கண்கள் மின்னச் சசொல்லியவன், “நீ சாப்டியா?”என்று கேட்டு பேச்சை மாற்றினான்.

 “இன்னும் இல்லை” என்னும் விதமாக தலையசைத்தவள், “அண்ணா யாரும் சாப்டல… அப்புறம் நான் எப்படி?” என்று தயங்கினாள்.

“ஏன்? அவங்கல்லாம் சாப்டாத்தான் நீங்க சாப்பிடுவீங்களோ?”

சற்றே கடுமையாக கேட்டவனின் குரலில் அரண்டு போனவளைப் பார்த்து, “அவங்களை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் பேபி, முதல்ல நீ போய் சாப்பிடு.”

ரஞ்சித் சமாதானமாகச் சொல்ல, தலையாட்டியபடியே நகர்ந்தவள், “நீங்க சாப்பிடலையா த்தான்” என்றாள் உடன் நடந்தவனிடம்.

“சாப்பிடணும் தான்…” வார்த்தையை ஒரு மார்க்கமாக இழுத்தவன், “சாப்பிடட்டுமா?” கண்களால் சிரித்து, அவளிடமே அனுமதி கேட்டு நின்றான்.

 “ஹையோ? பசிச்சா உடனே சாப்பிடணும் த்தான், இப்டி எங்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு நிக்கக்கூடாது.”

“அப்போ பெர்மிஷன் கேக்க வேணாங்குறியா?”

“ம்ம்…” காதுகளில் அணிந்திருந்த குடைஜிமிக்கி ஆட புன்னகையோடு தலையசைத்தவளின் பின்னந்தலையில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன், அதிரடியாக இதழ் முற்றுகையிட்டான்.

அவனின் எதிர்பாராத இந்த அதிரடியில், சுழன்றடிக்கும் காற்றில் சிக்கிய சிறுகொடியாய் துவண்டு போனது அந்த பெண்மை.

“ஃப்ராட் அத்தான்…”

“ஏய்! சொல்லுறதை எனக்கும் கேக்குற மாதிரி கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லேன்டி”

ப்ரபாவின் அருகே டெஸ்கில் கவிழ்ந்து படுத்திருந்த கமலி அவளை பிடித்து உலுக்கியபடிச் சொல்ல,

‘ஹாங்… நான் எங்க இருக்குறேன்?’ லேசாக குழம்பியவளுக்கு, தான் வகுப்பறையில் இருப்பது மெதுவாகத் தான் புரிந்தது.

“ஹிஹி…” அசட்டு சிரிப்பொன்றை தோழிக்கு கொடுத்தவள், “நான் எதுவும் சொன்னனா கமல்?” தோழியிடம் நூல் விட்டு பார்த்தாள்.

அவளோ, “அத்தான்… முத்தம்… இன்னும் என்னென்னவோ சொன்னியே செல்லம்.” லேசாக வெட்கப்பட்டது போல நடித்தவள், தோழி விட்ட நூலில் பட்டத்தையே பறக்கவிட்டாள்.

அவள் சொன்ன வார்த்தைகளை அழகாக நம்பிய ப்ரபா, “ஹையோ! அப்போ நான் அத்தான் முத்தம் தந்ததை எல்லாம் சொல்லிட்டனா?” என்று பதறினாள்.

“ஹேய்… உண்மையிலே உங்க அத்தான் உனக்கு முத்தம் குடுத்துட்டாரா?” இப்போது பட்டம் விட்டவளும் பதறிப்போனாள்.

தோழியின் பதட்டத்தில், தன்னிடம் விஷயத்தை போட்டு வாங்கி விட்டாள் என்ற உண்மை ப்ரபாவுக்கு புரிய, பல நல்ல நல்ல வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சித்தபடி தன் பக்கத்திலிருந்து விலாங்கு மீனாய் நழுவி ஓடிய கமலியை விரட்ட ஆரம்பித்தாள்…