அங்கே பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்த சுபத்ரா தன் தாய்மாமனிடம் நலம் விசாரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

ஒருவினாடிக்கும் குறைவான நேரம் அவளை உறுத்துப் பார்த்தவன், தன் பார்வையை மாற்றிக்கொண்டு தன் வேலையில் மீண்டும் ஈடுபட,

அவளோ,”ப்ரபா வந்திருக்காளா மாமா?” என்று விசாரித்துக் கொண்டிருந்தாள் மாமனிடம்.

“ம்ம்… வந்திருக்கா ம்மா. உள்ள இருக்கா போய் பாரு” என்று சண்முகம் சொல்லவும், தலையாட்டியபடியே வேகமாக உள்ளே நகர்ந்தவளை, “ஹலோ டீச்சரம்மா! என்ன கண்டுக்காம போறீங்க?” என்று நிறுத்தியிருந்தான் முரளி.

“நீங்க கண்டுகிட்டா தான் சார், நாங்களும் கண்டுக்க முடியும்.” சிரிப்போடு சொல்லியவள், இயல்பாக இருப்பது போல தன்னைக் காட்டிக் கொண்டபடி முரளியிடம் பேசிக்கொண்டு நிற்க,

“டேய்! தேவையில்லாமல் வம்பளக்குறதை நிறுத்துடா. எதுக்காக வந்தோமோ, அந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா இந்த இடத்தை விட்டு போய்ட்டே இருக்கலாம்” என்றான் சத்யா, முரளியிடம் சற்றே எரிச்சலான முரட்டுக் குரலில்.

அண்ணனின் பேச்சில் லேசாக அதிர்ந்து போய் முரளி சுபத்ராவைப் பார்த்தான். அவளோ எதையுமே கண்டு கொள்ளாதவளாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போயிருந்தாள்.

சட்டென்று சூழ்நிலையில் ஒரு அசாதாரண தன்மை வந்து ஒட்டிக்கொண்டது போலத் தோன்றியது முரளிக்கு.

“அப்பா கூட நாமளும் போய்ட்டு வந்துடலாம் முரளி” என்று அண்ணன் ஃபோன் செய்து சொல்லும் போதே, ‘அங்கே தாங்கள் போவதா? எப்படி?’ என்ற எண்ணத்தில் ஒரு தயக்கம் முரளியின் நெஞ்சில் வந்ததென்னவோ உண்மைதான்.

ஆனால் சத்யாவே கிளம்பும் போது அதை தடை சொல்ல மனமின்றி அவனும் வந்திருந்தான்.

ஆனால், இப்போது அண்ணனின் பேச்சைக் கேட்கும் போது ‘தாங்கள் இருவரும் வராமலேயே இருந்திருக்கலாமோ?’ என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு.

அதிலும் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்காத ராஜசேகரன் மற்றும் அவருடைய தாயாருடைய அலட்சியப் போக்கையும் கண்டவனுக்கு, அவனுடைய அத்தையின் மீது கூட கோபம் வந்தது .

ஆமாம்… ‘அவருக்கு தங்களின் தகுதிக்கு மீறின இடத்தில் காதல் வந்து, கல்யாணமும் செய்து கொண்டதால் தானே இன்று தன் அப்பா இவர்களிடமெல்லாம் அடிமையைப் போல நிற்க வேண்டியிருக்கிறது’ என்று இரத்தம் சூடானது அந்த இளையவனுக்கு.

ஆனால் தன் எண்ணவோட்டம் அத்தனையையும் வெளிக்காட்டாமல் பத்திரமாக மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டான்.

‘எத்தனை சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி செல்லமுடியுமோ அத்தனை சீக்கிரம் ஏதும் ரசாபாசங்கள் ஆகிவிடாமல் கிளம்பி போய்விட வேண்டும்’ என்பதே இப்போது முரளியின் எண்ணமாக இருந்தது.

சுபத்ரா உள்ளறைக்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், தனலட்சுமி உர்ரென்ற முகத்தோடு வெளியே வந்து ஹாலில் உட்கார்ந்து கொண்டார்.

அதற்கான காரணம் புரிந்த முரளி தந்தையைப் பார்க்க, அவரோ ஏதோ சுவர்க்கபுரியில் நின்றிருப்பது போன்ற பாவனையில் இருந்தார்.

அவருடைய கண்களோ விருந்தினரை வரவேற்றபடி அங்குமிங்கும் பரபரப்பாக அலைந்து கொண்டிருந்த தங்கையையே பாசத்தோடும், ஒருவித இயலாமையோடும் தொடர்ந்து கொண்டிருந்தது.

அவருடைய தங்கையோ, அண்ணனிடம் ஒரு கண்ணும் அந்த குடும்பத்தின் தலைவி என்ற முறையில் தன்னை சூழ்ந்து நின்ற பொறுப்புகளில் ஒரு கண்ணுமாக அலைந்து கொண்டிருந்தார்.

இதையெல்லாம் காணும்போது யாருக்காக பார்ப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் மண்டையை பிய்க்கும் நிலைமைக்கு வந்திருந்தான் முரளி.

இது போதாதென்று, அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி சௌந்தர்யாவிடம் சத்தியாவைக் காட்டி, “அது உங்க அண்ணனோட பெரிய பையன் தான ப்பா? இன்னும் கல்யாணம் கூட ஆகலையாமே!” என்று கேட்டவர், அத்தோடு முடிக்காமல்,

“ரொம்ப பொறுப்பான பையனா தெரியிறான். ஆளும் வேற நல்ல ஜம்முனு இருக்குறான். பணம் என்ன பெரிய பணம்? நம்மகிட்ட இல்லாததா? தேவைப்பட்டா பையனை நாம கைதூக்கி விட்டாப் போச்சு.”

 “பணம் தான் பெரிசுன்னு நினைச்சா இப்படி ஒரு பொறுப்பான பையன் கிடைக்குமா சொல்லுங்க?” அவர் பாட்டுக்கு நீட்டி முழங்கிக் கொண்டே போனவர், சௌந்தர்யாவின் குழப்ப முகம் கண்டு,

“இல்ல… என்னோட அக்கா பொண்ணுக்கு அலையன்ஸ் பாத்துட்டு இருக்காங்க. நான் உங்க அண்ணன் பையனுக்கே குடுக்க சொல்லலாம்னு முடிவெடுத்திருக்குறேன்” என்று முடித்தார்.

அவர் பேசியது அத்தனையும் அட்சரம் பிசகாமல் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த தனலட்சுமி,

“அது என் பையன் தாங்க. எம்பையனை நம்பி உங்க பொண்ணைக் கொடுக்கலாம்னு தைரியமாச் சொன்னீங்களே, அதுக்கு முதல்ல என்னோட நன்றிங்க.”

“ஆனா, விரலுக்கு தகுந்த வீக்கம்ன்னு சொல்லுற மாதிரி, எங்களைப்போல ஒரு குடும்பத்துலயிருந்து தான், எம்பையனுக்கு பொண்ணெடுக்கணும்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது.” அமர்த்தலாக சொல்லியபடி சவாலாக சௌந்தர்யாவைப் பார்த்தார்.

தனலட்சுமியின் நேரடியான பதிலில் அசந்து போனாலும், அவரோடு பேச்சைத் தொடர முயன்றபடியே அவர் அருகில் அந்த பெண்மணி அமர, கண்களில் வலியோடு அங்கிருந்து நகர்ந்தார் சௌந்தர்யா.

சுற்றுப்புறத்தில் கவனம் வைத்துக் கொண்டே வேலைகளை செய்து கொண்டிருந்த முரளியின் கண்களில் இந்த காட்சியும், அதோடு சேர்ந்த உரையாடலும் கூட விழத்தவறவில்லை.

அதேபோல நடந்தவை அத்தனையையும் இன்னும் ஒரு ஜோடி கேமராக் கண்களும் தனக்குள் உள்வாங்கிக் கொள்ளத் தவறவில்லை.

ஆனால் இவை எதிலுமே கவனத்தை வைக்காமல், ஏதோ அத்தை மகளுக்கு குடிசையொன்றை கட்டவே பிறப்பெடுத்தவன் போல வேலை செய்து கொண்டிருந்த சத்யாவின் மனது அந்த நிமிடம் அவனிடமிருந்ததா என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

சிறிது நேரத்தில் அன்றைய விழாவின் தேவதையை, தாங்கள் சீராகக் கொண்டுவந்திருந்த பட்டுப்புடவையை உடுத்தி, தலை நிறைய பூ வைத்து, மாலை அணிவித்து ஹாலுக்கு அழைத்து வந்திருந்தாள் ப்ரபாவதி.

நடக்கும் தங்கப் பதுமையாக வந்து நின்ற அந்த சிறுபெண் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமலேயே முதலில் தாய்மாமனின் காலில் ஆசிர்வாதம் வேண்டி விழ, நெகிழ்ந்து போனார் சண்முகம்.

தன் முன்னே தங்கையின் பிரதியாக நிற்கும் சிறுபெண்ணின் தலையில் தன் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தவர், தன் சட்டை பாக்கட்டிலிருந்து பணம் எடுத்து கொடுக்க முயன்றார்.

சத்யாவோ தன் பாக்கட்டிலிருந்து ஒரு அழகான பதக்கம் வைத்த தங்கச்சங்கிலியை எடுத்து தகப்பனின் கையில் கொடுத்து,”போட்டு விடுங்கப்பா” என்று சொன்னான்.

மகனின் செயலில் பெருமையில் பூரித்துப் போன சண்முகம், அதை மருமகளின் கழுத்தில் போட்டுவிட, எள்ளும் கொள்ளும் வெடித்தது தனலட்சுமியின் முகத்தில்.

அதன் பிறகு ஒவ்வொருவராக அந்த சிறுபெண்ணை ஆசீர்வாதம் செய்ய ஆரம்பிக்க, சத்யா ஃபோனை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

சிறிது நேரத்தில் அவர்கள் கடையிலிருந்து வந்திருந்த பணியாளர்கள் இருவர், ஒரு சிறிய மரக்கட்டிலையும் அதற்கு தோதான மெத்தையையும் கொண்டு வந்தனர்.

 அதை தம்பியின் உதவியோடு தாங்கள் கட்டிய குடிசைக்குள் போட்டவன், மயூராவின் அருகில் வந்து, “யாரும் சொன்னாங்கன்னு தரையில எல்லாம் படுக்க வேண்டாம் மா. இதிலயே படுத்துக்கோ” என்று அவளுக்கு மட்டுமே கேட்கும்படிச் சொன்னான்.

ஆனால் அங்கே நின்ற கற்பகம் அம்மாவிற்கும் அவனின் வார்த்தைகள் தெளிவாகக் கேட்க, “ம்ஹூம்… யாருக்கோ வாழ்வு வந்தா, அர்த்த இராத்திரியில் குடைபிடிப்பான் ங்குறது உண்மையாத்தான இருக்கு!”

முணுமுணுப்பாக என்றாலும், அவ்வளவு அலட்சியமாக வந்து விழுந்த கற்பகம் அம்மாவின் வார்த்தைகளுக்கு, எந்தவித எதிர்வினையும் காட்டாமலும், கூட்டத்தினருடைய கவனத்தை கவராமலும் மெதுவாக வெளியே வந்திருந்தான் சத்யா.

 இவ்வளவு நேரமும் ‘எது நடந்துவிடக் கூடாது என்று முரளி நினைத்திருந்தானோ’, அது கற்பகம் அம்மாவின் தயவால் அங்கே அழகாகவே நடந்து முடிந்திருந்தது.

சத்யாவைத் தொடர்ந்து தனமும் மகளை இழுத்துக் கொண்டு வெளியே வர, முரளியும் தன் மகளோடும் மனைவியோடும் வந்துவிட்டான்.

பெரிய அளவில் சத்தமோ சச்சரவோயின்றி இவை நடந்து முடிந்திருக்க, சண்முகம் உடன் வந்திருந்த உறவினர்களை விருந்துண்ண அழைத்து சென்றுவிட்டார்.

வெளியே வந்தவர்கள் அனைவரும் தாங்கள் வந்த காருக்கு அருகில் நின்றிருக்க, சத்யாவோ காருக்குள் சீட்டில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடியபடி உட்கார்ந்திருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் பரபரப்பாக அங்கே வந்த சௌந்தர்யா, “அண்ணி, சாப்பிட வாங்கண்ணி” என்றழைத்தார்.

“நடந்ததை மறந்து, நாங்க உன்வீட்டு விசேஷத்துக்கு வந்ததே பெரிசு, இதுல நாங்க இங்க சாப்பிடணும்ங்குற பேராசை வேற உனக்கு இருக்கோ?”

தன் ஒட்டுமொத்த கோபத்தையும் ஒன்றாகத் திரட்டி சௌந்தர்யாவை தன் வார்த்தைகளால் பதம் பார்க்க தயாரானார் தனலட்சுமி.

“தாய்மாமனாம்… தாய்மாமன், இந்த தாய்மாமன் இல்லாமலேயே கல்யாணம் ஒன்னு நடத்திக்க தெரிஞ்சிதுல்ல உனக்கு? அதே போல இந்த சடங்கையும் நடத்தியிருக்க வேண்டியது தான? எதுக்கு எம்புருஷனுக்கு சொல்லிவிட்ட?” அடிக்குரலில் சீறினார் தனம்.

தன் அன்னையை எதிர்த்து பேசக்கூட முயற்சிக்காமல், கண்கள் கண்ணீரால் நிரம்ப, மரத்துப்போன முகத்தோடு நின்ற அத்தையைப் பார்க்கவே முரளிக்கு பரிதாபமாக இருந்தது.

தாயிடம் அமைதியாக இருக்கச் சொன்னால், இன்னும் கூடுதலாக கத்துவாரோ என்ற பயத்தில், “வீணா ஸீன் கிரியேட் ஆகவேண்டாம். நீங்க இப்போ கிளம்புங்க அத்த பிளீஸ்…” கெஞ்சிய அண்ணன் மகனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தார் சௌந்தர்யா.

தங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மாவுக்கு அத்தையைக் கண்டால் எட்டிக்காயாய் கசக்கும் என்பது அண்ணன், தங்கை மூன்று பேருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இந்த விஷயத்தில் பிள்ளைகள் மூவருமே தன் அன்னையோடு ஒத்துப் போவதில்லை. அதற்கென்று தனலட்சுமி தன்னை மாற்றிக் கொள்ளவுமில்லை.

சற்றுநேரம் அந்த இடம் அமைதியை தத்தெடுத்துக் கொள்ள, திடீரென்று ஞாபகம் வந்தது போல, “ம்மா… நாம கொண்டு வந்த தாம்பாளம் எல்லாம் வீட்டுக்குள்ளேயே வச்சிட்டு வந்துட்டேன். போய் எடுத்துட்டு வந்துடுறேன்” என்று ப்ரபா நகர முற்பட்டாள்.

 “அதெல்லாம் போக வேணாம். நம்ம வீட்டாளுங்க நம்மகிட்ட கேக்காம தங்கத்தையே அள்ளி அள்ளி கொட்டுறாங்க இந்த வீட்டுல. இதுல இந்த சில்வர் பாத்திரம் போனா போட்டுமே.”

தன்னிடம் ஒருவார்த்தை கூட சொல்லாமல் மகன் தங்கத்தில் செயின் வாங்கிப் போட்ட கோபத்தில் சிடுசிடுத்தார் தனம்.

“ஹாங்… நம்மோடதுன்னா விட்டுட்டு போலாம். அதுல பக்கத்து வீட்டு அக்காவோடதும் இருக்கு. அவங்களுக்கு திருப்பி கொண்டு குடுக்கலைன்னா, என்னை உதைப்பாங்க” என்றவள், அன்னையின் பதிலுக்கு காத்திராமல் கட்டறுந்த கன்றாய் வீட்டை நோக்கி ஓடினாள்.

 வீட்டுக்குள் வந்தவள் தான் பொருட்களை கொண்டு வைத்த அறைக்குள் போய் பார்க்க, அங்கே வீட்டு ஆட்களும் இல்லை, அவள் வைத்த இடத்தில் பொருட்களும் இல்லை.

‘என்ன செய்யலாம்?’ யோசித்துக் கொண்டே அறையைவிட்டு வெளியே வரும் போது அத்தையை கண்டவள் விஷயத்தை சொன்னாள்.

“எல்லாத்தையும் ஸ்டோர் ரூம்ல எடுத்து வச்சிருப்பாங்களா இருக்கும் டா. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இடப்பக்கமா இருக்குறதுல மூணாவது ரூம் தான் ஸ்டோர் ரூம். எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. நீயேப் போய் எடுத்துக்குறியா செல்லம்?”

அத்தையின் வார்த்தைக்கு, “சரி…” என்று தலையாட்டியவள் மாடிப்படியேறி, அங்கிருந்த அறைகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணியபடியே, மூன்றாவது அறையைத் திறந்து, வாசலிலிருந்தே அறை முழுவதும் கண்களைச் சுழற்றிப் பார்த்தாள்.

அங்கிருந்த ஒரு டேபிளில் இவள் தேடிவந்த தாம்பாளங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, “யுரேக்கா… கண்டுபிடிச்சிட்டேன்…” கத்தியவாறே, அறைக்குள் சென்று அவற்றை கொண்டு செல்வதற்கு ஏதுவாக ஒரு கட்டைப்பையில் அடுக்கியவளின் வாய்,

“மாமனே உன்னக் காங்காம

வட்டியில் சோறும் உங்காம

பாவி நான் பருத்திமாரா போனேனே…” என்று முணுமுணுத்தது.

“இல்லையே…அப்படி தெரியலையே… பாக்குறதுக்கு சும்மா கும்முன்னு பட்டர்பன்னு போலல்லத் தெரியுற!” என்று சொல்லியபடியே, உல்லாசமாகச் சிரித்துக் கொண்டு அவள் அருகில் நின்றிருந்தான் ரஞ்சித். ரஞ்சித் திருவேங்கடம்…