“சரிப்பா… சரிப்பா… நீ சொல்லுற மாதிரியே வாங்கிட்டு வந்துடலாம்” என்றவாறே இளையமகனோடு அவர் நகர, ரஞ்சித்திடம், “எங்கப்பா வர்றவரைக்கும் உன் தங்கச்சி காத்திருப்பால்ல” என்று கேட்டான் ஒரு மாதிரியான குரலில்.
“அதெல்லாம் நீ கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னா, இந்த ஜென்மம் மட்டும்ல, இன்னும் எத்தனை ஜென்மம் வேணும்னாலும் என் தங்கச்சி காத்திருப்பா மச்சான்!”
கொஞ்சம் கர்வமாகச் சொன்னவனின் வார்த்தைகளைக் கேட்ட சத்யாவின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.
மனமோ தன் கல்லூரி காலத்தோடு, தங்கள் காதல் காலத்தையும் தேடி பறந்தது. பக்கத்தில் இருந்த பாவையின் மனமும் அவள் அனுமதியின்றியே அவர்களின் காதல் காலத்துக்குள் நுழைந்திருந்தது.
**********
“கண்ணத்தான்… நீங்களும் இந்த காலேஜ்ல தான் படிக்கிறீங்களா?”
மாணவர்களுக்கான பார்க்கிங் ஏரியாவில் தன் பைக்கை பார்க் செய்து விட்டு வெளியே வந்த சத்யநாதனை, பின்னால் இருந்து கேட்ட குரல் நிறுத்தியிருக்க, திரும்பாமலேயே அவனால் அந்த அழைப்புக்கு சொந்தக்காரி யாரென்று கண்டுபிடிக்க முடிந்திருந்தது.
“ஹேய்… சுபா… வாட் அ ப்ளசண்ட் சர்ப்பிரைஸ் யா? நீயும் இங்க தான் படிக்கிறியா என்ன?” உண்மையான ஆச்சர்யத்தோடு சத்யா கேட்டான்.
பொதுவாக மாமா வீட்டுக்கு அம்மாவோடு செல்லும் போதாகட்டும், இல்லை அவர்கள் எப்போதாவது தங்கள் வீட்டுக்கு வரும்போதாகட்டும், ப்ரபாவதியோடும், முரளியோடும் சகஜமாக பேசிப் பழகும் சுபத்ராவால், ஏனோ சத்யாவுடன் அப்படி பழக முடிவதில்லை.
அதற்கு காரணம் பிடித்தமின்மையோ, பயமோ கிடையாது.
தன்னைவிட இரண்டு வயது பெரியவனான மாமன் மகனுடன் பேச ஒரு சின்ன தயக்கம் அவ்வளவு தான். இப்போது கல்லூரியில் வைத்து அவனை எதிர்பாராமல் காணவும், தயக்கத்தை உதறி சரளமாக பேசிவிட்டாள் சுபத்ரா.
“நான் இந்த காலேஜ்க்கு உன்னை விட ஜுனியர் தான் ம்மா. எம் காம் ஃபர்ஸ்ட் இயர். யூ ஜி முடிச்சதெல்லாம் வேற காலேஜ்.” புன்னகை முகமாக பதில் சொல்லியவன், தன்னருகே நின்றவளைக் கொஞ்சம் அளவிடுவது போலப் பார்த்தான்.
‘ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஓரு விஷயமாக, அப்பா சொல்லி அத்தை வீட்டுக்கு சென்றிருந்தபோது, யூனிஃபார்மோடு இரட்டை ஜடையில் நின்றிருந்த பெண்ணா இது!’
அதிசயித்துப் போன சத்யா, “அதுசரி, தி ஃபேமஸ் கற்பகம் சில்ஸ்க்ஸ் ஓனரோட பொண்ணு இங்க எப்டி? நம்ப முடியலையே!” வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
“ஏன்? நாங்கல்லாம் இங்க வந்து படிக்க கூடாதா, என்ன?”
சிலிர்த்துக்கொண்டு அவன் கேள்விக்கு, தன் கேள்வியையே பதிலாக்கியவளின் தகப்பனுக்கு, உண்மையிலேயே தன் மகளை இந்த கல்லூரிக்கு அனுப்ப விருப்பம் இல்லை தான்.
“நம்மளைப்போல உள்ள வீட்டு பிள்ளைங்க எல்லாம் அமெரிக்கா, லண்டன்னு ஹையர் ஸ்டடீஸ் படிக்க போகும் போது, எம்மானத்தை வாங்குறதுக்குன்னே நீ லோக்கல்ல படிக்கப் போறேன்னு சொல்லுற” என்று அவளுடன் சண்டைக்கு வந்திருந்தார் தான்.
ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் பிடிவாதமாக தான் விரும்பிய கல்லூரியிலேயே கணிதத்தில் இளங்கலைப் பயில வந்து விட்டாள் சுபத்ரா.
கூடவே, தினமும் கல்லூரிக்கு காரில் வந்து போக மறுத்து, ஒரு ஸ்கூட்டியையும் அடம் பிடித்து வாங்கிக்கொண்டாள். அதற்கும், “உனக்கு ஸ்டேட்டஸ் மெயின்டெய்ன் பண்ணத் தெரியல, அப்படி… இப்படி என்று சுபத்ரா ஒரு மூச்சு பாட்டு கேட்க வேண்டியதாக இருந்தது.
அதன் பிறகு வந்த நாட்களில் காலை அதே நேரத்திற்கு சத்தியநாதன் கல்லூரிக்கு வர, அந்த நேரத்தையொட்டியே சுபத்ராவும் வர ஆரம்பித்தாள்.
இருவரும் வண்டியை பார்க் செய்து விட்டு பேசிக்கொண்டே தங்கள் வகுப்பிற்கு செல்வார்கள்.
சில நாட்கள், “அம்மா உங்களுக்காக ஸ்பெஷலா தந்து விட்டாங்க த்தான்” என்று சொல்லி கையோடு பால் கொழுக்கட்டை, கருப்பட்டி பணியாரம் என்று தனியாக டப்பாவில் அடைத்து கொண்டு வருவாள் சுபத்ரா.
அப்படியான நாட்களில், பார்க்கிங் ஏரியா தாண்டி மரங்கள் அடர்ந்து நிற்குமிடத்திற்கு சென்று மரத்தின் வேரில் அமர்ந்து கொண்டு, இருவருமே சேர்ந்து சுபத்ரா கொண்டுவந்ததை சாப்பிட்டு முடித்து எழுந்து செல்வார்கள்.
விரைவில், காலையில் வந்ததும் முதல் வேலையாக தங்கள் லஞ்ச் பாக்ஸை மாற்றிக் கொண்ட இளையவர்கள், நாளடைவில் தங்கள் காதலையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு முன்னேறியிருந்தார்கள்.
மறு வருட பொங்கல் விடுமுறை வரும் வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் தான் சண்முகத்தின் பெரியப்பா மகனிடம் இவர்கள் வீட்டை இழந்து நின்றது. வாலிப வயதில் நின்ற முரளியும், சத்யாவும் தங்கள் வீட்டை மீட்க எவ்வளவோ முயற்சி செய்ய, அந்த பாலனின் கையிலிருந்த பொய் டாக்குமெண்ட் பேசியதேயொழிய, இவர்கள் பேசிய உண்மைக்கு மதிப்பில்லாமல் போனது.
நடந்த உண்மைத் திருட்டில் பேதலித்துப் போன தகப்பனையும் பார்த்து, வேறு வீடு வாடகைக்கு பிடித்து தன் குடும்பத்தை குடிவைத்து என்று தன் குடும்ப சூழ்நிலையே மனதை ஆக்ரமித்து நிற்க, சுபத்ராவின் நினைவு பின்னுக்கு போனது சத்யாவுக்கு.
பொங்கல் விடுமுறையோடு சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து கொள்ள கிட்டத்தட்ட ஒருவார விடுமுறைக்குப் பிறகு தங்களது வழக்கமான நேரத்தில் கல்லூரிக்கு வந்த சுபத்ரா பரபரப்பாக சத்யாவைத் தேட, அவன் வரவேயில்லை.
பதறிப்போனவள் தயக்கத்தோடே அவன் நண்பர்களிடம் கேட்டாள். அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை. அவன் நம்பருக்கு ஃபோன் செய்து பார்த்தாலும் வாடிக்கையாளர் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பாலே இருந்தார்.
ம்ம்… பிரச்சினையின் போது நடந்த கைகலப்பில் சத்யாவின் கைப்பேசி கீழே விழுந்து தன் உயிரை விட்டிருந்தது.
மறுநாளும் கல்லூரிக்கு சத்யா வராததால் அவனை நேரடியாக வீட்டிற்கு சென்றே பார்த்து விடுவது என்ற எண்ணத்தில், ஒரு பதினோரு மணிக்கு போல கல்லூரியிலிருந்து கிளம்பினாள் சுபத்ரா.
வேளச்சேரியில் மாமனின் கடையை கடக்க முற்படும் போது சத்யா கடையினுள் நுழைவதைக் காணவும், கடைக்கு முன்னால் வண்டியை நிறுத்தினாள். எப்போதையும் விட பெரியதாக இருந்த தன் கல்லூரி பேக்கை ஷோல்டரில் மாட்டிக்கொண்டு, “கண்ணத்தான்…” என்று அழைத்தவாரே சுபத்ரா கடையினுள் நுழைய, கடையில் வேலை செய்யும் ஒரே நபரான ராசப்பன், வேறோரு வேலையாக கடைவிட்டு வெளியே சென்றார்.
சுபத்ராவின் அழைப்பில் கடையினுள் பாதி தூரம் சென்றிருந்தவன் திரும்பிப் பார்த்தான்.
“அத்தான்… நாலு நாளா நான் உங்களை ஃபோன்ல கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணுறேன் தெரியுமா?” என்றவாறே அவன் அருகில் வந்தவள், கொஞ்சம் தாழ்ந்த குரலில் ஒரு நபரின் பெயரைச் சொல்லி, “அந்த எம் எல் ஏ இருக்காருல்ல… அவரோட மகன் அந்த கடங்காரன் எங்கையோ வச்சி என்னை பாத்து, கட்டினா என்னைத் தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நிக்குறானாம்.”
“அவனைப் பெத்தவங்களும் அவன் சொன்னதைக் கேட்டு எங்கப்பாட்ட பேசி, என்னை பொண்ணு பாத்துட்டு போய்ட்டாங்க த்தான். இன்னும் நாலு நாள்ல நிச்சயதார்த்தமாம். அதுலயிருந்து பதினைந்தாவது நாள் கல்யாணமாம்.”
பதட்டம் நிறைந்த குரலில் படபடவென்று சொல்லியவள் தான் நிற்கும் இடம் மறந்தவளாய், “அத்தான்… என்னை இப்பவே கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்கத்தான். இங்க பாருங்க… ட்ரெஸ்ஸெல்லாம் கூட எடுத்துட்டு வந்துட்டேன்.” சிறுபிள்ளையாய் பேகை தட்டிக் காட்டியவள்,
சத்யாவின் அமைதியைப் பார்த்து, “ஏதாவது சொல்லுங்க த்தான். எனக்கு பயமா இருக்கு” என்று விசும்பியடியே அவன் மார்பில் லேசாக சாய்ந்தாள்.
சுபத்ரா சொன்ன தகவலிலும், அவளின் செய்கையிலும் தவித்துப் போனான் சத்யா. ‘கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா? அதுவும் உடனேயா? இல்லையென்றால் என் சுபா எனக்கில்லையா?’ அலமலந்து போனவனுக்கு, நிசர்சனம் முகத்திலறைந்தது.
‘தன் வீடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் தங்கள் திருமணம் சாத்தியமா? அதுவும் படிப்பு கூட முடியாத இருபத்திமூன்றே வயதான தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியுமா? என் வீட்டிலுள்ளவர்கள் என்னை மலை போல எண்ணிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், என் சந்தோஷம் ஒன்றையே பிரதானமாக நினைத்து என்னால் திருமணம் செய்து கொள்ள முடியுமா?’ என்ற கேள்வி முதன்முதலாக சிறுபுள்ளியாகத் தோன்றியது சத்யாவின் மனதில்.
‘இல்லை.. வேண்டாம்… என்னோடு சேர்த்து இந்த சிறு பெண்ணையும் எங்கள் வாழ்க்கைக்குள் இழுத்து கஷ்டப்படுத்த வேண்டாம். அவள் நன்றாக இருக்க வேண்டும், நிமிடத்தில் முடிவெடுத்தான்.
‘உண்மையைச் சொல்லி நாம் இருவரும் பிரிந்து விடலாமென்று சொன்னால் கண்டிப்பாக மாட்டேனென்று பிடிவாதம் பிடிப்பாள். அதைவிட என்னை வெறுக்கும்படி செய்துவிட்டால் தானே விலகிச் சென்றுவிடுவாள்.’
முட்டாள்தனமாக முடிவெடுத்தவன், “உனக்கும் எனக்கும் கல்யாணமா?” என்று கோணல் சிரிப்பு சிரித்தான். அவன் வார்த்தைகளை உச்சரித்த விதத்திலேயே அவன் மார்பிலிருந்து விலகி, நிமிர்ந்து பார்த்தாள் சுபத்ரா.
“அத்தான்… என்ன த்தான் பேசுறீங்க நீங்க?” இதுவரை தான் காணாத உடல்மொழியோடு தன் அத்தான் நிற்க, தடுமாறினாள் அந்த பேதை.
“ம்ம்... சொன்னாங்க சுரக்காய்க்கு உப்பில்லன்னு… நான்பாட்டுக்கு காலேஜ்க்கு வந்தா, நீ அத்தான்… பொத்தான்னுட்டு என்னை சுத்தி சுத்தி வந்த. சரி வலியவர்றதை வேண்டாம்னு ஏன் சொல்லுவானேன், நமக்கும் காலேஜ் முடியுற வரைக்கும் ஒரு என்டர்டெயின்மென்ட் வேணுமேன்னு நினைச்சு உங்கூட சுத்தினா, நீ இப்பிடி சட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கோன்னு வந்து நிக்குறியே ம்மா?”
அவளை மட்டம்தட்டிப் பேசி வார்த்தைகளை கேலியாக இழுத்தவன், “ஆனா ஒன்னு, எங்க வீட்ல பொறந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டு, எங்க அந்தஸ்து காணாதுன்னு ஸீனப்போடுறாரு பாரு உன் அப்பா, அவர்கிட்ட, நாலு நாள் சிரிச்சி பேசின உடனே உம் பொண்ணு, என்னை கல்யாணம் பண்ணிக்கோ மச்சான்னு பையை தூக்கிட்டு வந்துட்டாய்யா, இப்போ எங்க போச்சு உன் அந்தஸ்துன்னு கேக்குறதுக்கு அழகான சான்ஸ்ஸை உருவாக்கி தந்துருக்க.” சொல்லியபடி அட்டகாசமாக சிரித்தவன்,
“வாயால சொன்னா உங்கப்பா நம்புவாரோ என்னவோ? பக்கத்துல வா… இப்டியே ஒரு செல்ஃபி எடுத்து உங்க அப்பாவுக்கு அனுப்பலாம்” என்றபடியே ஒருகையால் அவள் தோள் மீது கைபோட முயன்றபடி, இன்னொரு கையால் இல்லாத ஃபோனுக்காக தனது பாக்கெட்டை தடவினான் சத்யா.
அவ்வளவு தான்… அவனைப் பிடித்து தள்ளியவள், “ச்சீசீ… உன் தம்பி, தங்கச்சி கிட்ட பாசமா நீ இருக்குறதப் பாத்து, நல்லவன்னு உன்னை நம்பிட்டேன். ஆனா நீ இத்தனை கேவலமானவன்னு இப்போத்தானே தெரியுது.”
மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, கண்களிரண்டும் குளமாக உணர்ச்சிப்பிளம்பாக மாறி நின்ற சுபத்ரா, “உன் பாசத்தைக் காட்டி என்னை நீ ஏமாத்துன மாதிரி, உங்கூட பிறந்தவங்களையும் ஏமாத்திடாத பிளீஸ்…”
அவனை கையெடுத்து கும்பிட்டபடியே, தளர்ந்த நடையோடு வண்டியில் ஏறிச் சென்றுவிட்டாள்.
தொப்பென்று அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்தவனின் கண்களோ அவனையும் மீறி கசிந்து கொண்டிருந்தது.
கைகளால் அதை துடைத்தவனுக்கு இருக்குமிடம் உறைக்க, தன் கண்களால் கடையை அலசினான்.
நடந்த நிகழ்வுகள் அத்தனைக்கும் சாட்சியாக, உயரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் செயர்களின் மறைவில் நின்று கொண்டிருந்த அந்த மனிதர், அவன் கண்களுக்கு தென்படவேயில்லை.
சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த ராசப்பன் திரும்பி வர அவரிடம் கடையை ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு திரும்பியிருந்தான் சத்யா.
ரேவதியின் அப்பா தான் ராசப்பன். ஆரம்ப காலத்திலிருந்தே அவர்கள் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த பிரச்சினையின் போதும் அவர்கள் கூடவே நிற்கும் நல்ல மனிதர்.
மகனின் அசாதாரண தோற்றம் கண்டு பயந்து போன தனலட்சுமி, “என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?” என்று மகனை துளைத்தெடுக்க, பள்ளம் கண்டதும் பாயும் வெள்ளம் போல, நடந்தது அத்தனையையும் சொல்லிமுடித்தான் சத்யா.
உண்மையில் மகனிடமிருந்து இப்படி ஒரு கதையை எதிர்பார்த்திராத தனலட்சுமி அதிர்ந்து போனாரென்று சொன்னால் அது மிகையாகாது.
குடும்பத்துக்காக மகன் தனது ஆசையையே உதறிவிட்டு வந்துவிட்டான் என்று தெரிந்த போது பெருமிதமாக இருந்த போதும், வாழ்வையே தொலைத்தது போலிருந்த மகனை கண்கொண்டு அவரால் காணமுடியவில்லை.
சற்று நேரம் எதையோ ஆழ்ந்து சிந்தித்ததை போலிருந்த தனலட்சுமி, “அந்த பொண்ணுன்னா உனக்கு ரொம்ப இஷ்டமாப்பா?” மகனிடம் கேட்டார்.
“ம்ப்ச்ச்… விடுங்கம்மா… ஆமாம்ன்னு சொல்லி தான் இப்போ என்ன ஆகப்போகுது?” விட்டேற்றியாக பதில் வந்தது மகனிடமிருந்து.
“ஏன்? உன் அத்தை வீட்டுக்கு நாம பொண்ணு கேட்டு போவோம். உனக்கு தான் அந்த பொண்ண கட்டிக்க முதல் உரிமை, அது தெரியுமா உனக்கு?”
சொன்னதோடல்லாமல் மகனோடு நாத்தனாரின் வீட்டுக்கு பெண் கேட்டும் வந்தவர், இருவரும் விரும்பும் விஷயத்தையும் சொல்ல, இல்லவே இல்லை என்று சாதித்தாள் சுபத்ரா…