Advertisement

காலையில் ஏழு மணிக்கெல்லாம் ராகவன், மாலினி, சகுந்தலாவுடன் வந்துவிட்டனர். அஸ்வின் அன்று இரவு தந்தைக்குத் துணையாக தங்கியிருந்தான்.
ஏழரை போல ஆண் செவிலியர் ஸ்டெர்ச்சருடன் வரவும், இளங்கோவனுக்கு டென்ஷன் கூடியது.
மாலினி அவள் அம்மாவை சமாதானப்படுத்த, அஸ்வின் வெளியே கதவை திறந்து பிடித்து இருந்தான். இளங்கோவன் கண்கள் தேடுவதை அறிந்த ராகவன், அவர் அருகே சென்று, “தைரியமா இருங்க. எல்லாரும் அங்க வாசல்லயேதான் இருப்போம். “, என்று கைப்பிடித்து ஆறுதல் சொல்ல, கண்ணில் நீர் வழிந்தது இளங்கோவனுக்கு. தேவையில்லாமல் பிடித்து வைத்திருந்த கர்வமும் , அகந்தையும், ஆணவமும் கரைந்து போனது. தன் மகள் தனக்கேற்ற சிறந்த துணையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்பது முகத்தில் அறைந்தார் போலப் புரிந்தது.
“மாப்பிள்ளை…. மன்னிச்சிடுங்க.”, கை கூப்ப முயல, ராகவன் அவர் கைகளை பிடித்துக்கொண்டான்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க எதுபத்தியும் கவலைப்படாம போயிட்டு வாங்க. “, ராகவன் சொல்ல, அப்போதுதான் மாலினி, சகுந்தலாவின் கவனம் அவர்கள்புறம் திரும்பியது.
செவிலியர்கள், ட்ரிப் பாட்டிலை சரிபார்ப்பதும், ரிப்போர்ட்களைப் எடுத்துக்கொள்வதிலும் மும்மரமாய் இருந்தனர். அவர்களுக்கு இந்த கண்ணீர் எல்லாம் வாடிக்கை. எல்லாம் சரி பார்த்து, ஸ்டெச்சரை தள்ளவும், ராகவனின் கையை அழுத்தியவர், “பார்த்துக்கோங்க மாப்பிள்ளை.”, என்று மீண்டும் கோரிக்கை விடுத்து கையை விடுவித்தார்.
“எல்லாம் நல்லபடியா நடக்கும் மாமா.  நீங்க வரதுக்கு முன்னாடி நாங்க அங்க வாசல்ல இருப்போம்.”, மீண்டும் தைரியமூட்டி அனுப்ப, மாலினி தன் காதுகளை நம்ப முடியாமல் பார்த்திருந்தாள்.
‘இவங்க எப்படா மாப்ள… மாமான்னு உருக ஆரம்பிச்சாங்க?’, என்று ஓடியது அவள் மைன்ட் வாய்ஸ்.
இளங்கோவன் ஆஞ்சியோ நடக்கும் அறை வாசலில்  அனைவவரும் தவமிருந்தனர். மெல்ல ராகவனின் காதைக் கடித்தாள் மாலினி.
“எப்ப மாப்பிள்ளை, மாமாவோட ராசியானீங்க ?”
லேசாய் சிரித்தவன், “அவருக்கு இப்பத்தான் என்னை மாப்பிள்ளைன்னு கூப்பிட தோணியிருக்கு.  கண்ல தண்ணியோட மன்னிச்சிருங்க மாப்பிள்ளைன்னா நான் என்ன செய்ய ? ஒன்னுமில்லை கவலைப்படாதீங்க மாமான்னு சொல்லவும், ஒரு நிம்மதி அவருக்கு. இந்த நேரத்துல கெத்து காட்டினா நல்லாவா இருக்கும்.
“ம்ம்… அம்மா கூட ஒரே அழுகை. நீங்க எங்கப்பாவை விட நல்லவராம். அவங்க உங்களை ரொம்ப பேசிட்டாங்களாம். ஒரே குற்ற உணர்ச்சி.”
“விடுமா.. அவங்க மன்னிப்பு கேட்கணும்னு நான் செய்யலை. நம்ம கடமை. செய்யறோம். அவளதான். நீ சும்மா இதான் சாக்குன்னு அவங்களை பேசாத. “, அவளை அறிந்தவனாக சொல்லவும்,
“ம்ம்.. பார்க்கலாம். எல்லாம் இனி எப்படி நடக்கறாங்கன்றதைப் பொறுத்துதான்.”, என்று வாய்தா வாங்கினாள்.
அந்த வார இறுதியில் ராகவன் மாமனாரைக் காண வந்தான். அவர் வீட்டிற்கு வந்ததும் ஒரு முறை பர்வதம்மாவுடன் வந்தவன், இந்த முறை தனியாக வந்தான். மாலினி இந்த வாரம் முழுதும் அம்மா வீட்டிலேயே இருந்து அவள் பெற்றோரைப் பார்த்துக்கொண்டாள். நேற்றுதான் ஆபீஸ் சென்று வந்தாள். ராகவன் வரவும், படுத்திருந்தவர், எழுந்து வரவேற்பறைக்கு வந்தார்.
“வாங்க மாப்பிள்ளை. “, என்று வரவேற்க, “ ஏன் எழுந்து வந்தீங்க? நானே வந்து பார்த்திருப்பேனே மாமா.” என்றான் ராகவன்.
அவன் அருகில் அமர்ந்தவர், “ மாப்பிள்ளை, என் பொண்ணு எந்த ஒரு முடிவையும் லேசுல எடுக்க மாட்டா. அப்படி எடுத்தா அது ரொம்ப சரியா இருக்கும். அவ உங்களை கைகாட்டினப்பவும், நான் அவளை நம்பியிருக்கணும். என் மகளை நானே நம்பலை. அவளை உங்க… ஆதாயத்துக்காக நீங்க கல்யாணம் செய்துக்கறீங்கன்னு நினைச்சேன். உங்க குணம் அப்படியில்லைன்னு விசாரிச்சதுல தெரிஞ்சாலும், மனசு ஒத்துக்கவேயில்லை. “
“இப்ப எதுக்கு இதெல்லாம்? வீணா மனசை அலட்டிக்காதீங்க.”, என்று ராகவன் இடைமறித்தான்.
தலையசைத்து மறுத்தவர், “இல்லை. நான் சொல்லணும். அன்னிக்கு நீங்க சொன்ன ஒரு வார்த்தை என்னை ரொம்ப யோசிக்க வெச்சுது. நானும் சகுந்தலாவும் உங்களை மாப்பிள்ளைக்கான இடத்துல நடத்தல. ஆனா அதை செய்யற தைரியம் எப்படி வந்தது ? எதுவானாலும் நீங்க மாலினியை விட்டுக்குடுக்க மாட்டீங்கன்ற நம்பிக்கை எப்படியோ என் மனசுல இருந்திருக்கு. அதைக்கூட நான் புரிஞ்சிக்கலை, அப்பவும் என் கர்வம் என் கண்ணை மறைச்சுது.  பாங்க்ல கடன், வட்டின்னு லாப நஷ்டக் கணக்கு பார்த்து பார்த்து, சொந்த பொண்ணு மாப்பிள்ளை கிட்டயும் ….”, குரல் கமற தலையைக் குனிந்தவரைப் பார்க்க ராகவனுக்குப் பரிதாபமாகிப்போனது. மாலினியைப் பார்க்க, அவள் முகம் சோகமாக இருந்தாலும், அவர் பேசட்டும் என்றே இருந்தாள்.
“மாமா… போனது போகட்டும் விடுங்க. ஆனா, ஒரு  விஷயம் மட்டும் சொல்லணும். எங்களை இல்லாட்டாலும், வீட்ல இருக்கவங்களை நம்புங்க. தீடீர்னு நீங்க நெஞ்சை பிடிச்சிகிட்டீங்க. வீட்ல காசில்லை. உங்க பின் நம்பர் அத்தைக்கும் அஸ்வினுக்கும் தெரியலை. அவங்க கிட்ட சொல்லி வெக்கறதுல என்ன நஷ்டம் ? பணத்துக்கு அல்லாடற எங்க வீட்லையே பத்தாயிரம் அவசரத்துக்குன்னு வெச்சிருக்கோம். எல்லாருக்கும் தெரியும் இருக்கற இடம். ஆனா வீட்ல துடைச்சி எடுத்தாலும், இரண்டாயிரம் தேறலைங்கறான் அஸ்வின். நாங்க ஊர்ல இல்லைன்னா, என்னவாகியிருக்கும் ?
FD போட்டீங்க சரி. அதைக்கூட எல்லாம் உங்க பேர்லயே போடணுமா? அந்த ரசீதைக் கூட ஆபிஸ்லயே வெக்கணுமா சொல்லுங்க? ஒரு அவசரத்துக்கு உங்ககிட்ட பணமிருந்தும் எடுக்க முடியலை.  இதெல்லாம் சரி செய்யுங்க. உங்களுக்கு ஒன்னுன்னா எப்படி சமாளிக்கணும்னு வீட்ல சொல்லி வைங்க. “, ராகவன் அவர் மன்னிப்பை திசை திருப்பி, அஸ்வினைக் கூட நம்பாத அவர் மேலிருந்த ஆதங்கத்தையும் கூறினான்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டவர், “நீங்க சொல்றது அத்தனையும் நியாயம்தான் மாப்பிள்ளை. அது மாதிரியே செய்யறேன். “, எனவும் ராகவனுக்குத்தான் அய்யோடா என்றானது. ‘என்னாச்சு இந்த மனுஷன் ஒரேடியா இப்படி ஆகிட்டாரே’, என்று யோசித்தான்.
“மாப்பிள்ளை… நீங்க நிஜமா எங்களை மன்னிச்சிட்டீங்கன்னா, மாலினிக்காக நாங்க செஞ்சு வெச்சிருக்க நகை வாங்கிக்கணும். மாலினிகிட்ட கேட்டதுக்கு உங்களை கேட்க சொன்னா. “, ராகவன் கைபிடித்துக் கேட்க, ‘இதென்னடா ‘, என்று மாலினியைப் பார்த்தான். அவள் முகத்திலிருந்து எதுவுமே அனுமானிக்க முடியவில்லை அவனால்.
“இது உங்களுக்கும் மாலினிக்குமானது. நான் சொல்ல எதுவுமில்லை.”, என்று ராகவன் சொல்ல, சகுந்தலா கண்ணில் நீர் வழிய,
“அப்ப ரெண்டு பேரும் எங்களை மன்னிக்க மாட்டீங்களா? அவளும் எதுவும் சொல்ல மாட்டேங்கறா. நீங்களும் இப்படி சொல்றீங்க. நாங்க கல்யாணத்தப்ப கம்மியா போட்டது தப்புதான் தம்பி. ஒரு இக்கட்டு வரும்போதுதான் மனுஷாள் அருமை தெரியுது. அதுவும் உங்களை நான் ரொம்ப பேசிட்டேன்.”, என்று தழுதழுக்க,
ராகவனுக்கு தர்ம சங்கடமாகிப்போனது. மாலினி ஒன்றுமே சொல்லாமல் முடிவு உன்னுடையது என்பது போல நின்றிருந்தாள்.
“அத்தை. ப்ளீஸ். பழசை விடுங்க. நீங்க உங்க பொண்ணுக்கு செய்யறீங்க. அது உங்க இஷ்டம். ஆனா,  நகை உங்க லாக்கர்லயே இருக்கட்டும். மாலினி வேணும்போது எடுத்து போட்டுட்டு வைக்கட்டும்.  மாலினிக்கு அவ பாட்டி வெச்சிட்டுப் போனது மாதிரி நீங்க உங்க பேத்திக்கோ, இல்லை பேரன் பொண்டாட்டிக்கோ எழுதி வைங்க. என் மனைவிக்கு நான் வாங்கி போடுவேன். “, ராகவன் அவருக்கு எடுத்துச் சொல்லிவிட்டு மாலினியைப் பார்க்க, இதழோரம் லேசாய் அவளிடம் ஒரு புன்னகை எட்டிப்பார்த்தது.
‘அதுதான் என் புருஷன்’, என்ற கர்வத்தோடு அவள் தந்தையைப் பார்க்க, மாலினியைப் பார்த்து ஆமோதிப்பது போல தலையாட்டியவர், ராகவன் தோளை மெச்சுதலாய் தட்டினார்.
அன்றிரவு, மாலினியைத் தன்னுடன் அழைத்து வந்தான் ராகவன். இரவு படுக்கையில் அவளை அணைத்தபடியே, “என்ன மயிலு, இன்னிக்கு எனக்கும் டெஸ்ட் வெச்சியா ? இப்படி என்னை கேட்கப்போறாங்கன்னு சொல்லவேயில்லை ?”, என்று அவள் காதைக் கடிக்க,
“ம்ஹூம். இது எங்கப்பாக்கு. எதோ இப்படி ஒரு இக்கட்டு வரவும் கண்ணு திறந்துச்சு. அம்மா, ‘ நகை எடுத்துட்டு போடி. மாப்பிள்ளை மேல இப்ப நம்பிக்கை இருக்கு. உங்க மாமியாரே எதுவும் கேட்டாலும், அவர் உன்னை விட்டுக் குடுக்கமாட்டார்னு புரிஞ்சுதுன்னு.’ சொல்றாங்க. ஆனாலும் அவங்களுக்குத் தெரியணும்னுதான் எதுவும் சொல்லாம நீங்களே சொல்லுங்கன்னு விட்டேன்.  “
“நான் சரின்னு சொல்லியிருந்தா?”, ராகவன் கேட்க, அவன் நெஞ்சில் முட்டியவள்,
“நீங்க சொல்ல மாட்டீங்கன்னு தெரியும். என்னதான் இப்ப அவங்க உங்களை ஏத்துக்கிட்டாலும், நகையை வாங்கிக்கற மனசு எனக்கு இருக்காதுன்னு கண்டிப்பா உங்களுக்குத் தெரியும். அதே சமயம் அவங்களுக்கும் மனசு கோணாம பேசுனீங்க பாருங்க. எங்க அப்பாக்கு நல்லா உரைக்கட்டும், அவர் மாப்பிள்ளை எத்தனை நல்லவர், உத்தமர்னு.”
அவளை அள்ளி மேலே போட்டுக்கொண்டவன், “எற்கனவே இரண்டு பேரும் சரண்டராகிட்டாங்க. அவங்களை விடு பாவம். ஒரு வாரமாச்சு, நாம நம்மைப் பார்ப்போம். பாப்பா ப்ராஜெக்ட் அப்படியே நிக்குது. அதைப் பார்க்கலாம் வா.”, என்று காரியத்தில் கண்ணானான் மாலினியின் கண்ணாளன்.
ஒரு வழியாக இருவர் வீட்டிலும் மாப்பிள்ளை, மருமகள் என்ற அந்தஸ்த்தைப் போராடி வென்றுவிட்டார்கள் இருவரும். அடுத்து அப்பா, அம்மா என்ற தகுதியையும் பெற்று வாழ்க்கையில் முன்னேறட்டும். இடர்பாடுகள் இல்லாமல் இருக்காது வாழ்க்கை. ஆனாலும் வாழ்க்கைத் துணையின் அன்பும் நம்பிக்கையும் நிறைவாக இருந்தால், எல்லா இடர்களும் கடந்து போகும்.
–நிறைவுற்றது

Advertisement