Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 9 


அருளின் தாத்தா பாட்டி மற்றும் சித்தப்பா செல்வத்துடன் அவர்கள் தங்கி இருந்த ரெசார்டிற்கு அருளோடு ஜோசப்பும் சென்று இருந்தான். அங்கே அவர்கள் அனைவரும் உணவு அருந்தியதும், மறுநாள் அருளை தங்களோடு ஊருக்கு அழைத்தனர். 

அருள் அவர்களோடு செல்ல மிகவும் யோசித்தான். “நீ அங்க வந்து பாரு, உனக்காக யாரு காத்திருக்கான்னு.” எனக் கலை மர்மமாகச் சொல்ல… அருளுக்கு ஒன்றும் புரியவில்லை. 

“இங்கேயே தங்கேன் பா…” என்ற தாத்தாவின் பேச்சுக்கு மறுப்பாகத் தலையசைத்துவிட்டு அவன் வெளியே செல்ல… 

“எல்லாத்தையும் ஏத்துக்க அவனுக்குக் கொஞ்சம் நேரம் ஆகும். அவன் யோசிக்கட்டும். நாளைக்குப் பார்க்கலாம்.” எனச் சொல்லிவிட்டு ஜோசப் அருளோடு சென்றான். 

அருள் வீடு திரும்பும் போது நள்ளிரவுக்கும் மேல்… இனிமேல் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என நிறைய யோசித்து, உறங்கியும் உறங்காமலும் பொழுதை கழித்தவன், விடிந்ததும் ரோஜாவை தேடி சென்றான். 

அவன் சென்றபோது மரிதயதாஸ் வீட்டில் தான் இருந்தார். அருள் வருவதைப் பார்த்ததும் காலில் செருப்பைப் போட்டுக் கொண்டு அவர் வெளியே சென்றுவிட… நல்லவேளை சண்டை எதுவும் வரவில்லை என ரோஜா நினைக்க… அருளும் ஆச்சர்யபட்டவன், அங்கேயே திண்ணையில் அமர்ந்தான். 

“எங்க அவங்க எல்லாம்?” 

“பக்கத்தில ஹோட்டல்ல தங்கி இருக்காங்க.” 

“அவங்க உங்க தாத்தா, பாட்டி, சித்தப்பாவா?” 

“ம்ம்… ஆமாம். என்னோட பழைய போட்டோ எல்லாம் காட்டினாங்க.” 

“சரி இப்ப சந்தோஷமா இருக்காம, ஏன் இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கீங்க?” 

“அவங்க என்னை அங்க கூப்பிடுறாங்க ரோஜா, அதுதான் யோசனையா இருக்கு.” 

“இதுல யோசிக்க என்ன இருக்கு? உங்க வீட்டுக்குத்தானே கூப்பிடுறாங்க.” 

“எங்க அப்பா அம்மா இருந்தா நான் போறதுல ஒரு அர்த்தம் இருக்கு. எனக்கு அங்க யாரு இருக்கா ரோஜா?” 

“அப்படிச் சொல்லாதீங்க, உங்க தாத்தா பாட்டி மனசு கஷ்ட்டப்படும். அவங்களுக்காகப் போயிட்டு வாங்க.” 

“நேத்து நீங்க எவ்வளவு மனசு கஷ்ட்டபட்டீங்க. அது கடவுளோட காதுல விழுந்து தான் இவங்களை அனுப்பி இருக்காரோ என்னவோ… இனி உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் பாருங்க.” 

“நீ ரொம்பக் கற்பனை பண்ணிக்காத… என்னால அங்க போய் இருக்க முடியும்ன்னு தோணலை…” 

“இப்பவே இப்படி நினைக்காதீங்க. அங்க போய்ப் பாருங்க. ஒருவேளை உங்களுக்கு அங்க பிடிக்கலாம்.” 

“நான் தாத்தா பாட்டிக்காக வேணா போறேன். பத்து நாள் இருப்பேன் வந்திடுவேன். அதுக்கு மேல எல்லாம் முடியாது.” 

“சரி போயிட்டு வாங்க. நல்ல டிரஸ்ஸா எடுத்திட்டு போங்க. கையில கொஞ்ச பணம் வச்சுக்கோங்க.” 

“ம்ம்… சரி. நீ பத்திரமா இரு.” 

“எனக்கு ரொம்பச் சந்தோஷம் தெரியுமா? இனி உங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் பாருங்க.” 

“குறி சொல்றியா ஜக்கம்மா…” என்றவன் புன்னகைக்க… 

“எப்பப் பாரு கிண்டல் பண்றதே வேலை.” ரோஜா பொய்யாக முறைக்க… 

“எனக்குச் சாப்பிட எதாவது கொடு.” என அருள் கேட்க, விரைந்து உள்ளே சென்றவள், இருந்த பழையதில் தயிர் ஊற்றி, அருளுக்குக் கருவாடு பிடிக்காது என்பதால்… வத்தல் வறுத்துக் கொண்டு வந்து வைத்தாள். 

வயிறு நிறைய உண்டவன், மனம் நிறைய அவளிடம் விடைபெற்றுச் சென்றான். 

வீட்டிற்குச் சென்று குளித்து உடை மாற்றித் தன்னிடம் இருந்த நல்ல உடைகள் மற்றும் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு, அவன் நண்பர்களைப் பார்க்க சென்றான். 

“சீக்கிரம் வந்திடுவேன். நான் வந்ததும் தான் கடலுக்குப் போறோம்.” என அருள் சொல்ல… நண்பர்கள் புன்னகையுடன் விடைக் கொடுத்தனர். 

தாத்தா பாட்டிக்காக ஒரு பத்து நாட்கள் அவர்களுடன் இருந்துவிட்டு வருவோம் என்றுதான் சென்றான். ஆனால் அங்கே சென்றதும், அவன் மனநிலையே மாறிவிடும் என அப்போது அவனுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. 

பேரன் அவர்களுடன் வருவதில் பெரியவர்கள் இருவரும் மகிழ்ந்து போனார்கள். டிரைவர் வண்டியை ஓட்ட, பக்கத்தில் செல்வமும் மற்ற மூவரும் பின் இருக்கையிலும் அமர்ந்து சென்றனர். 

“உங்க அப்பா அம்மா எங்ககிட்ட பாண்டிச்சேரி போறோம்ன்னு தான் சொல்லிட்டு போனாங்க.” 

“சுனாமி வந்தது தெரிஞ்சதும், நாங்க ரொம்பப் பயந்து உங்களைத் தேட ஆரம்பிச்சோம். ஆனா எங்களுக்கு நீங்க வேளாங்கண்ணி போனது தெரியாது.” 

“அப்புறம் தெரிஞ்சு அங்க வந்து பார்த்தா… உன் அப்பா அம்மா உடல் ரொம்ப உருக்குலைஞ்சு போனதுனால அங்கயே அடக்கம் பண்ண வேண்டிய நிலை… உன்னை மாதிரியே ஒரு பையன் அங்க இறந்து கிடந்ததும், அது நீதான்னு நினைச்சிட்டோம்.” 

“எனக்கும் உங்க பாட்டிக்கும் இருந்த அதிர்ச்சியில எதுவும் பண்ண முடியாத நிலை. நாங்க ரொம்ப உடைஞ்சு போயிட்டோம். எல்லாமே உங்க சித்தப்பாவும் மாமாவும் தான் பார்த்தாங்க. எங்களுக்கு அப்ப இருந்த மனநிலையில உங்களை எல்லாம் அந்த மாதிரி பார்க்க முடியாம, நாங்க வரவே இல்லை. வர்றதுக்கான அவகாசமும் இல்லை.” எனத் தாத்தா சொல்ல… 

“நீ இவ்வளவு பக்கத்தில இருந்தும், இவ்வளவு நாள் தெரியாம இருந்திட்டோமே ராசா…உன்னை கஷ்ட்டப்பட விட்டுட்டோமே…” எனக் கலை வாஞ்சையாக அருளின் தலை கோத…. 

“அப்படி எல்லாம் இல்லை பாட்டி. நான் நல்லத்தான் இருந்தேன்.” என்றான் அருள். 

சென்னை சென்று சேரும் போது மாலையாகி விட்டது. அவனை வெளியவே நிற்க வைத்து ஆலம் சுற்றித்தான் அவனை உள்ளே அழைத்துச் சென்றனர். 

அவர்களின் வீடு பெரிதாக இருந்தது. அருள் சென்று அங்கிருந்து சோபாவில் அமர்ந்தவன், அங்கிருந்த வீட்டினரை ஆவலாகப் பார்த்தான். சித்தப்பாவின் மொத்த குடும்பமும் அங்கே இருந்தது. 

செல்வத்தின் மகன் அசோக் அவனிடம் சென்று, “நான்தான் உங்களைக் கண்டு பிடிச்சேன் தெரியுமா?” என்றதும், அருள் அவனை வியந்து பார்க்க… எப்படி என அவன் விளக்க ஆரம்பித்து விட்டான். 

“டேய் நீ ரொம்ப நல்லவன் தான்டா…” என்ற கலை… “அங்க நிற்கிறது உனக்கு யாருன்னு தெரியுதா அருள்.” எனக் கேட்க, 

“யாரை சொல்கிறார் எனப் பாட்டியின் பார்வை சென்ற திசையைப் பார்த்தவன், அங்கே இள வயது பெண் ஒருத்தி நிற்பது கண்டு புரியாமல் பார்க்க… 

“உன் தங்கச்சி பவித்ரா.” என்றதும் அதிர்ச்சியில் அருள் எழுந்தே நின்றுவிட்டான். 

“இவ பஸ்ல போனா ரொம்ப வாந்தி எடுப்பா… அதனால இவளை எங்ககிட்ட விட்டுட்டு உன் அப்பாவும் அம்மாவும் உன்னை மட்டும் கூடிட்டு போனாங்க.” எனக் கலை சொல்லச் சொல்ல, அருளுண் விழிகள் கண்ணீரை பொழிய… பவித்ராவும் கண்ணீரோடு அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

பவித்ரா பவி என அருள் வாயால் மட்டும் அல்ல மனதாலும் சொல்லிப் பார்த்தவன், தன் எண்ண அலைகளின் தவிப்பு தாளாது அப்படியே தலையைப் பற்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டான். 

தன் தங்கை உயிரோடு இருக்கிறாள் என்பதே, அவனுக்குள் புதைந்து போய் இருந்த நினைவலைகளைத் தட்டி எழுப்ப போதுமானதாக இருந்தது. 

தந்தை திவாக்கர், தாய் அமுதா, சிறு வயது தங்கை பவித்ரா மற்றும் உறவினர்கள் அனைவரின் முகமும் மனக்கண்ணில் மின்னி மறைந்தது.
வேளாங்கன்னியில் குடும்பத்தோடு கடல் அலையில் நின்ற போது, திடிரென்று எல்லோரும் சிதறி ஓட… இவர்கள் என்ன என்று உணர்வதற்குள் ராட்சஸ அலை வந்து அடித்துச் சென்றிருந்தது. 

கடைசியாகப் பரத் என்று கதறிய தாயின் குரல் இப்போதும் கேட்பது போல இருக்க…. அருளின் பதட்டம் அதிகரிக்க… அருகில் இருந்த செல்வம், அவனை அப்படியே சோபாவில் படுக்க வைக்க, தண்ணீர் எடுத்து வர தேவி ஓடினார். 

அண்ணனின் நிலை கண்டு பவித்ரா பதறிப் போனாள். “இப்பத்தான் நீ திரும்பக் கிடைச்சிட்டேன்னு சந்தோஷமா இருந்தேன். ஆனா நீ இப்படி இருக்கியே… எனக்குப் பயமா இருக்கே…” எனப் பவித்ரா சத்தமாகக் குரல் எழுப்பிக் கதறி அழுதாள். 

தங்கையின் கண்ணீரையும் பதட்டத்தையும் பார்த்த அருள், தனது எண்ணங்களை ஒதுக்கிவிட்டு எழுந்து அமர்ந்தவன், “எனக்கு ஒன்னும் இல்லை. நான் நல்லா இருக்கேன் பவி. இங்க வா…” எனத் தங்கையைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான். 

அவன் சித்தி கொடுத்த நீரை வாங்கியவன் கைகளில் இன்னமும் நடுக்கம் இருந்தது. அந்தத் தண்ணீர் முழுவதையும் குடித்ததும் தேவலையாக உணர்ந்தான். 

“ஏன் பாட்டி என்கிட்டே பவித்ரா பத்தி சொல்லலை?” 

“உனக்கு ஆச்சர்யமா இருக்கட்டுமேன்னு தான் சொல்லலை. நீதான்னு உறுதியா தெரியாம உன்னைப் பத்தி சொல்லி, பவித்ரா மனசுல ஆசையை வளர்க்க கூடாதுன்னு அவகிட்டையும் சொல்லலை.” 

“நீ எங்களோட வந்ததும் தான் அவளுக்கு உன்னைப் பத்தி சொன்னோம்.” என்றதும், அண்ணன் தங்கை இருவரின் முகமும் மலர்ந்தது. 

சித்தி கொண்டு வந்து கொடுத்த டீயை அருள் வாங்கித் தங்கைக்கும் பாதிக் கொடுத்தான். 

அவர்கள் இருவரும் பேசட்டும் என மற்றவர்கள் எழுந்து சென்றனர். 

“இப்ப பரவாயில்லையா அண்ணா?” 

“நான் எல்லாமே மறந்திட்டேன் தெரியுமா… எனக்குப் பதினோரு வயசு வரை என்ன நடந்துச்சுன்னே தெரியாது. இப்ப உன்னைப் பார்த்ததும் தான் நினைவு வந்தது, அது தான் ஒருமாதிரி ஆகிட்டேன். இப்ப நல்லா இருக்கேன்.” 

“என்னை மட்டும் ஏன் விட்டுட்டு போனீங்கன்னு நான் எத்தனை நாள் அழுதிருக்கேன் தெரியுமா?” பவித்ரா கண் கலங்க… 

மற்ற எத்தனை சொந்தங்கள் இருந்தாலும், பெற்றவர்களுக்கு ஈடு கிடையாது என்பதை அருளும் அறிவான். அவனும் அதே வேதனையை அனுபவித்து இருக்கிறான். அதைத் தங்கையிடம் சொல்லி, அவளை வருத்தப்பட வைக்காமல்… 

“எதோ நாம அனுபவிக்கனும்ன்னு இருந்து இருக்கு. அதுதான் இப்படி நடந்திருக்கு. இனி உனக்கு அண்ணன் நான் இருக்கேன். பழசை நினைக்காத பவி.” எனத் தங்கைக்குச் சொல்வது போல, தனக்குமே சொல்லிக் கொண்டான். 

“அண்ணா, என்னை விட்டு போயிட மாட்ட இல்ல….” தங்கை கேட்க, அருள் அதை உடனே அமோதித்தான். பிறகும் வெகு நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அருள் தான் இத்தனை நாள் எங்கே இருந்தேன் எனச் சொல்லிக்கொண்டு இருந்தான். 

“வாங்க சாப்பிடுவோம்.” எனப் பாட்டி வந்து அழைக்க….இருவரும் எழுந்து சென்றனர். 

உணவு மேஜையில் தாத்தா பாட்டியோடு வீட்டின் மற்ற பேரன் பேத்திகள் சுற்றி அமர்ந்து இருக்க… அருள் அவர்களோடு அமர…பவித்ரா அருளோடு உட்காரவில்லை. 

எல்லோருக்கும் தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள். பிறகு அவள் சித்தி சுட்டுக் கொடுத்த தோசைகளை எடுத்து வந்து எல்லோருக்கும் பரிமாறினாள். அருள் தங்கையையே பார்த்துக் கொண்டு இருந்தான். 

சித்திக்கும் ஒரு மகள் இருக்கிறாள், அவள் இந்த வேலை எல்லாம் செய்யவில்லை. அவள் இவர்களோடு உட்கார்ந்து தான் சாப்பிட்டாள். 

“நீயும் சாப்பிடு…” என அருள் பலமுறை சொல்லிய பிறகே பவித்ரா இரண்டு தோசைகளோடு சாப்பிட அமர்ந்தாள். 

அவளுக்கு இன்னொரு தோசை வேண்டுமா என்று கூட அவள் சித்திக் கேட்கவில்லை. பவித்ரா சாப்பிட்டு கைகழுவ எழுந்துகொள்ள… அதுவரை அவளுக்காகக் காத்திருந்த அருளும் கைகழுவ எழுந்து சென்றான். 

சித்தியின் மக்கள் தட்டை அப்படியே போட்டுவிட்டு கைகழுவ… பவித்ரா மட்டும் தட்டை கழுவி வைத்துவிட்டு வந்தாள். 

“அண்ணா இங்க வாயேன்.” எனப் பவித்ரா அருளை தனது பெற்றோர் இருக்கும் போது இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றாள். 

ஒரே மதிலுக்குள் இருந்த இன்னொரு வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் பெற்றோர் இருந்த போது இந்த வீட்டில் தான் இருந்தனர்.
அருளுக்கும் அந்த வீட்டைப் பார்த்ததும் சில நினைவுகள் எழுந்தது. “இந்த வீட்ல யாரும் இல்லையா பவி.” அருள் கேட்க, 

“உன் தங்கச்சி வேற யாருக்கும் வாடகைக்கு விட ஒத்துக்கலை…. நாங்க தான் இங்கயும் அங்கேயுமாக இருப்போம்.” என அங்கே வந்த பாட்டி சொல்ல…
இந்த வீட்டில் பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வாழ்ந்த நினைவுகள் மட்டுமே இத்தனை நாள் அவள் மனதுக்குத் துணை. அதை எப்படி விட்டுக் கொடுப்பாள். தங்கையின் நிலை உணர்ந்த அருள் அமைதியாக இருந்தான். 

“பாட்டி நானும் அண்ணாவும் இங்கயே தூங்குறோம்.” எனப் பவித்ரா சொல்ல… 

“துவைச்ச போர்வையை எடுத்து வந்து விரிச்சு படுங்க. மாத்திரை போட்டது நிற்க முடியாம தள்ளுது.” எனக் கலை சொல்ல… பவித்ரா அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டுக் கையில் போர்வையுடன் வந்தாள். 

அண்ணனுக்குச் சில ஆல்பங்கள் எடுத்து வந்து காட்டியவள், அவன் விளையாடி பொம்மைகளில் தான் பத்திர படுத்தி வைத்திருந்தது எல்லாம் எடுத்து வந்து காட்ட… அருளின் மனதில் பாரம் ஏறியது போல இருந்தது. 

பவித்ரா அறைக்குள் சென்று படுத்து உறங்கி விட… அருள் ஹாலில் போர்வை விரித்து அதில் படுத்துக் கிடந்தான். 

பவித்ராவின் வேதனையைப் பார்க்கும்போது போது. இத்தனை நாள் தன்னுடைய நிலை பரவாயில்லை எனத் தோன்றியது. மனதில் வைத்து வருந்த அவனுக்கு எதுவும் நினைவிலேயே இல்லை. 

இப்போது இருக்கும் இந்த நிலையில் ரோஜாவை பற்றிய எண்ணம் அவனுக்கு இருந்தாலே ஆச்சர்யம்.


Advertisement